என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, November 9, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 71ரு கணம் கண்ணுக்குத் தெரிந்த குகை மறுகணம் தெரியாமல் போனதால் திகைத்த அக்‌ஷய் மைத்ரேயனைக் கேள்விக்குறியுடன் பார்த்தான். மைத்ரேயன் முகம் வித்தியாசமாய் எதையும் பார்த்த பாவனையையே காட்டாமல் சாதாரணமாய் இருந்தது.

“உனக்கு அங்கே ஒரு குகை தெரிந்ததா?என்று அக்‌ஷய் கேட்டான்.

“எங்கே?

“அங்கேஎன்று அக்‌ஷய் கையை அந்தப் பக்கம் காட்டினான்.

அந்தப் பக்கம் மைத்ரேயன் பார்வை திரும்ப அக்‌ஷய் உடனே அவன் பார்வை போன கோணத்திலேயே தன் பார்வையையும் போக விட்டான். சென்ற முறை அவன் குகையைப் பார்த்தது மைத்ரேயனின் பார்வை அந்தப் பக்கத்தை ஊடுருவிய போது, அவனோடு சேர்ந்து பார்த்த வேளையில் தான். இந்த முறை அப்படிப் பார்த்தும் அந்தக் குகை தெரியவில்லை. கண நேரத்தில் தெரிந்தது காட்சிப்பிழையோ?


வாஷிங்டனில் ஒரு நட்சத்திர ஓட்டலில் உறங்கிக் கொண்டிருந்த மாரா உலுக்கியதைப் போல் உணர்ந்து விழித்தான். இரவு நேர விளக்கின் மெல்லிருட்டில் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி ஒன்று. மறுபடி கண்களை மூடிக்கொண்டு உலுக்கி எழுப்பிய காட்சியை திரும்பவும் மனத்திரைக்குக் கொண்டு வந்தான்.  முதலில் இரண்டு விழிகள் மட்டும் தெரிந்தன. அந்த விழிகளின் தீட்சண்யம் அவனை அசௌகரியப்படுத்தியது. காட்சியை மேலும் விரித்தான். மலைப்பகுதி தெரிந்தது. மலைப்பகுதியில் அந்த இடம் என்ன என்பதை உணர அவனுக்கு வினாடி நேரமும் தேவைப்படவில்லை. அந்த இரண்டு விழிகளும் குகைக்கோயிலின் வாசலைப் பார்த்தன. மைத்ரேயன்...!

உடனடியாக ஆழ்மனதின் சகல சக்திகளையும் சேர்த்துக் குவித்து மாரா அந்தக் காட்சிக்கு மானசீகமாகப் போனான். அந்தக் கண்களைக் காணவில்லை. அந்தக் குகைக் கோயில் மட்டும் தெரிந்தது. மைத்ரேயனை அந்த இடத்தில் உணர முயன்றான். லேசாக அவன் அலைகளை மாராவால் உணர முடிந்தது. அந்த அலைகள் சிறிது சிறிதாக மெலிந்து கொண்டே போய் கடைசியில் விடுபட்டன. மைத்ரேயன் அந்த இடத்திலிருந்து போய் விட்டான்....

முன்பு உணர்ந்த மைத்ரேயனின் அலைகளை வைத்து மைத்ரேயனைத் தன் கவனத்தில் மையப்படுத்த மாரா முயன்றான். ஆனால் அந்த அலைகள் சிக்கவில்லை....

மாராவுக்கு மைத்ரேயனும், அவன் பாதுகாவலனும் இருக்கிற இடம் என்ன என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து விட்டாலும் ஏன் அந்த இடத்தை மைத்ரேயனின் பாதுகாவலன் தேர்ந்தெடுத்து அந்த வழியில் பயணிக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நேபாள எல்லையில் இருக்கும் அந்த மலை மிக ஆபத்தானது. மலையில் மூன்றில் ஒரு பங்கு தூரம் மட்டுமே மனிதர்கள் செல்ல முடிந்த பகுதி. மீதிப் பகுதி நீலக்கரடிகளும், ஆடுகளும், மற்ற விலங்குகளும் மட்டுமே போய் வர முடிந்த பகுதி. மனிதர்களின் தொந்தரவில்லாமல் அந்த விலங்குகள் சுதந்திரமாக இருக்கும் அந்த எல்லைப் பகுதியில் சீன இராணுவ இருப்பு கூட இல்லை. காரணம் நேபாளத்தில் இருந்து அந்த எல்லை வழியாக எவரும் திபெத்துக்குள்ளே நுழைய முடியாது. மலையின் அமைப்பு அப்பகுதியில் அனுகூலமாக இல்லாதது மட்டுமல்ல அப்படி அசாதாரண முயற்சியோடும், துணிச்சலோடும் நுழைபவர்கள் கூட நீலக்கரடிகளுக்கு உணவாக வேண்டி இருக்கும்.

அப்படி இருக்கையில் அந்த மலைக்கு மைத்ரேயனை அவன் பாதுகாவலன் ஏன் அழைத்துக் கொண்டு போகிறான். நட்பு நெடுஞ்சாலையில் கடுமையான கண்காணிப்பு இருப்பதால் அந்த வழியில் அவர்கள் இப்போதைக்குத் தப்பிக்க வழியில்லை. அதனால் ஒரு வேளை தற்போதைக்கு ரகசியமாய் தங்க அந்த இடம் சிறந்தது என்று அந்த அமானுஷ்யன் முடிவு செய்திருக்கிறானா இல்லை வேறு எதாவது திட்டம் வைத்திருக்கிறானா?

மாராவின் எண்ண ஓட்டங்கள் மறுபடி மைத்ரேயனை மையம் கொண்டன. அந்தச் சிறுவனால் குகைக் கோயிலைக் காண முடிந்ததை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. குகைக் கோயிலைப் பார்த்தவனுக்கு உள்ளே சென்று பார்க்கும் ஆர்வம் கூட எழவில்லை, அலட்சியமாய் கடந்து போய் இருக்கிறான் என்பதோ சகிக்க முடியாததாய் இருந்தது. அவர்கள் இயக்கத்தின் திபெத்தியக் கிழவர் இதே ஆத்திரத்தை அன்று உணர்ந்தார் என்பது நினைவுக்கு வந்தது...

திபெத்திற்கும் வாஷிங்டனுக்கும் இடையே உள்ள கால அளவு சரியாக பன்னிரண்டு மணி நேரம். இப்போது இங்கே இரவு மணி 1.10... அப்படியானால் அங்கே பகல் மணி 1.10. பகல் பொழுதைக் கழித்து முடித்து விட்டு இரவுப் பொழுதை அவர்களால் நீலக்கரடிகளுக்கு இரையாகாமல் கழிக்க முடிகிறதா என்று முதலில் பார்ப்போம்!  பொதுவாக நீலக்கரடிகள் இரவு நேரங்களில் தங்கள் எல்லையைக் கடந்து கீழே வரக்கூடியவை. அப்படி வந்தால் அவர்கள் இருவரும் எப்படி எதிர் கொள்வார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அந்தப் பாதுகாவலனாவது ஏதாவது சாகசம் ஓரிரண்டு கரடிகளிடமாவது காட்டலாம். மைத்ரேயன் என்ன செய்வான்? ரகசிய குகைக்கோயிலை ஊடுருவிப் பார்க்க முடிந்தவன் தன் பார்வையால் அப்படியே நீலக்கரடியை நிறுத்தி பின் வாங்க வைக்கும் சக்தியோ, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தியோ பெற்றிருப்பானா?

அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதை மிக முக்கியமாய் உணர்ந்த மாரா ஒரு எண்ணிற்குப் போன் செய்து அந்த இடத்திற்கு உடனடியாகப் போகச் சொன்னான்.  


ந்தனா வீட்டில் இருந்து வேகமாக வெளியேறிய வருண் உடனடியாகத் தன் வீட்டுக்குப் போய் விடவில்லை. அவனுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும், யோசிக்கவும் சற்று நேரமும், தனிமையும் தேவைப்பட்டது. காலார ஆள் நடமாட்டம் அதிகமில்லாத வீதிகளில் நடந்தான். மனம் கொதிப்பது அடங்க நேரமாகியது. அந்தப் புகைப்படம் அவள் கையில் எப்படிக் கிடைத்திருக்க முடியும் என்று அவன் யோசித்தான். அம்மா கண்டிப்பாக அந்தப் புகைப்படத்தை வைத்திருக்க மாட்டாள். அந்த ஆளை மறக்க நினைப்பதில் அவளும் அவனைப் போலத் தான். பாட்டி மேல் தான் சந்தேகம் வந்தது. பெற்ற பாசம் அந்தப் புகைப்படத்தை வைத்திருக்கத் தூண்டி இருக்கலாம். அந்தப் புகைப்படம் வந்தனா வீட்டார் கண்களில் பட்டிருக்கலாம். யாரந்த ஆள் என்று அவர்கள் கேட்க அவள் உண்மையை உளறி இருக்கலாம். இது அத்தனையும் அம்மா இல்லாத நேரத்தில் நடந்திருக்க வேண்டும். அம்மாவும் இருந்திருந்தால் கண்டிப்பாக நேற்று இரவு இந்த விஷயம் வெடித்திருக்கும். அவனுக்குத் தெரிய வந்திருக்கும்.... இதைத் தவிர அவர்களுக்கு அந்தப் புகைப்படம் கிடைத்திருக்க வேறு வழியே இல்லை....

பாட்டியைத் தனியாக விசாரித்தால் எல்லா உண்மையும் தெரிய வரும் என்று நினைத்துக் கொண்ட அவன் வீடு திரும்பினான். நல்ல வேளையாக அவன் வீட்டுக்குள் நுழைந்த போது கௌதமுக்கு ஏதோ புத்தகம் வாங்க வேண்டும் என்று சஹானாவும், கௌதமும் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

அவனைப் பார்த்தவுடன் சஹானா கேட்டாள். “ஏன் என்னவோ மாதிரி இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?

“திடீர் என்று தலைவலிஎன்று சொல்லி வருண் சமாளித்தான். அவர்கள் வெளியே போகிற வரை காத்திருந்து விட்டு கடைசியில் சமையலறையில் வேலையாக இருந்த பாட்டியிடம் ஆத்திரத்தோடு கேட்டான். “உங்களுக்கு அறிவே இல்லையா?

மரகதத்திற்கு பேரனின் திடீர்க் கோபத்திற்குக் காரணம் புரியவில்லை. திருதிருவென விழித்தபடி கேட்டாள். “என்னடா திடீர்னு...

“அந்தப் புகைப்படம் வந்தனா கையில் எப்படிக் கிடைத்தது?...

“எந்தப் புகைப்படம்?புரியாமல் கேட்டாள்.

நான், அம்மா, உங்கள் அருமை மகன் இருக்கிற புகைப்படம்...

எப்போது எடுத்தது? எங்கிருந்தது?....

பாட்டியின் குழப்பம் அவனையும் குழப்பியது. ஆனால் கோபம் அடங்காமல் சொன்னான். “நானும், அம்மாவும் அந்த ஆளை ஞாபகப்படுத்துகிற எதையும் எங்களிடம் வைத்துக் கொள்ளவில்லை. உங்களிடமிருந்து தான் வந்தனாவிற்குக் கிடைத்திருக்க வேண்டும்.

“என்னடா உளறுகிறாய்? தலையில் அடி எதாவது பட்டு விட்டதா?என்று கேட்டதோடு பேரன் தலையில் காயம் எதாவது இருக்கிறதா என்று அவள் ஆராயப்போன போது அவன் கோபம் அதிகரித்தது. “நீங்கள் தான் அந்த ஆள் மேல் இருக்கும் பாசத்தில் எங்கேயாவது அந்தப் புகைப்படத்தை வைத்திருந்திருப்பீர்கள். அது அவள் கையில் கிடைத்திருக்கும்.... அது கூடப் பரவாயில்லை. அந்த ஆளை என் அப்பா என்று அவளிடம் யார் சொன்னது?

எனக்கு நீ பேசுவது எதுவுமே புரியலையேடா மரகதம் புலம்பினாள்.

பாட்டியை வருண் கூர்ந்து பார்த்தான். அவள் சொல்வது உண்மை என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. அப்படியானால் வந்தனா கையில் எப்படி அந்தப் புகைப்படம் கிடைத்தது?.... தளர்ந்து போய் ஹாலுக்கு வந்த வருண் இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

இப்போது தான் வருண் சேகரின் பைனாகுலரில் தெளிவாகத் தெரிந்தான். வருணைப் பின் தொடர்ந்து வந்து மரகதமும் அருகில் அமர்ந்து கொள்ள சேகருக்குப் பெற்றவளும் தெளிவாகத் தெரிந்தாள்.

சேகர் சுறுசுறுப்பாக அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்..


லீ க்யாங்குக்கு வாங் சாவொ போன் செய்தான். நான் விசாரித்த 58 மலையேற்ற வீர்ர்களில் இரண்டு பழைய மலை ஏற்ற வீரர்கள் அந்த ரகசியக் குகைக்கோயில் கற்பனை அல்ல என்று அந்த மலையடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் ஓரிரண்டு ஆட்கள் சொன்னதாகச் சொல்கிறார்கள்  சார். மற்ற 56 பேருக்கு அது பற்றி ஒன்றுமே தெரியவில்லை

லீ க்யாங் கேட்டான். “அந்த இரண்டு பேரும் சேர்ந்து போனவர்களா என்ன?

“இல்லை சார். அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. தனித்தனியாகப் போய் கேள்விப்பட்டவர்கள் தான்

“அவர்கள் சொன்ன இடம் ஒன்றே தானா?

“ஆமாம் சார்....

“வாங் சாவொ. நீ உடனடியாக அங்கே போ..........

(தொடரும்)
என்.கணேசன்வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


10 comments:

 1. இனிய தீபாவளி வாழ்த்துகள் அண்ணா...

  வாழ்க வளமுடன்..!!

  ReplyDelete
 2. Interesting sir. Happy Deepavali to u and your family sir. Thanks for the bonus.

  ReplyDelete
 3. Happy deepavali to u n ur sweet family!

  ReplyDelete
 4. காயத்ரிNovember 9, 2015 at 7:14 PM

  போனஸ் சூப்பர். நாலாபக்கமும் சூடுபிடிக்கிறது. வியாழனுக்கு இனி இடையே இரண்டே நாள் என்று சந்தோஷமாய் இருக்கிறது. எல்லாம் புத்தம் சரணம் கச்சாமியின் மகிமை தான்.

  ReplyDelete
 5. Great going sir. Plot is thickening interestingly.

  ReplyDelete
 6. Wow. No idea how to wait for the next week. Going in full speed

  ReplyDelete
 7. Happy deepavali to you and your family sir.

  ReplyDelete
 8. Great diwali gift for us sir...thank you and happy diwali

  ReplyDelete
 9. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete