சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 8, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 28


காத்மண்டு விமானநிலையத்தில் அமானுஷ்யனுக்காக காத்துக் கொண்டிருந்த இந்திய உளவுத்துறை ஆளுக்கு அவனை நேருக்கு நேர் சந்திக்கப் போவதே ஒரு பரபரப்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தது. இந்திய உளவுத்துறை அக்‌ஷயை அமானுஷ்யன் என்ற பெயரிலேயே தங்கள் ஆவணங்களில் குறிப்பிட்டு வந்ததால் அந்த உளவுத்துறை ஆளுக்கு அவனை நினைக்கையில் கூட அமானுஷ்யன் என்ற பெயரிலேயே நினைக்கத் தோன்றியது.

மைத்ரேயரின் விவகாரத்தில் அமானுஷ்யனுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய பணிக்கப்பட்ட பின் அந்த ஆள் போனில் சில முறை அமானுஷ்யனிடம் பேசி இருக்கிறான். நேரில் இது வரை பார்த்தது இல்லை என்ற போதிலும் வேண்டிய அளவு அவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான்.

விமானத்தில் இருந்து மிக நிதானமாகவும், அமைதியாகவும் இறங்கி வந்த அந்த புத்தபிக்குவின் புகைப்படம் முன்கூட்டியே அவனுக்கு வந்து சேர்ந்து, அந்த புத்தபிக்குவிற்கு ஒரு போலி பாஸ்போர்ட் அவன் தயார் செய்யாமல் இருந்திருந்தால் அவனால் அந்த புத்தபிக்கு அமானுஷ்யன் என்று கண்டுபிடித்தே இருக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை. பின்னாலும், முன்னாலும் அவசரமான ஆள்களும், பரபரப்பான ஆள்களும், களைப்பான ஆள்களும் வந்து கொண்டிருக்க அதற்கு எதிர்மாறான அமைதியுடன் நடந்து வந்த அந்த புத்தபிக்கு, ஒரு சமயத்தில் இமயமலை உச்சியில் பலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த போது மின்னல் வேகத்தில் இயங்கி பல துப்பாக்கி ரவைகளில் இருந்து தப்பியவன் என்று நம்புவது யாருக்கும் கஷ்டம் தான் என்று அந்த உளவுத்துறை ஆளுக்குத் தோன்றியது.

புத்தபிக்கு திடீரென்று குனிந்தார். விமானநிலையத் தரையில் ஊர்ந்து வந்த ஒரு பூச்சியை மற்றவர்கள் யாரும் மிதித்து விடாமல் தடுத்து, அதைத் தன் கைகளால் எடுத்து ஒதுக்குப் புறமாகச் சென்று அன்புடன் ஓரமாக விட்டு நிமிர்ந்த போது அங்கிருந்த சிலர் புன்னகையுடனும், மிகுந்த மரியாதையுடனும் அந்த புத்தபிக்குவைப் பார்த்தார்கள். ஆனால் புத்தபிக்கு பார்வை அவர்கள் மீது செல்லவில்லை. குனிந்த தலை நிமிராமல் மறுபடி அமைதியாக நடந்து பயணிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து ஒரு வரிசையின் முதல் இருக்கையில் அமர்ந்து தான் நிமிர்ந்தார். அவருடைய கருணை மிகுந்த கண்கள் சுற்றிலும் ஒரு முறை பார்க்கையில் இந்திய உளவுத்துறை ஆளைக் கடந்து பிறகு மீண்டும் திரும்ப வந்து அவன் மீது நிலைத்து பின் மறுபடியும் நகர்ந்தது. பின் கண்களை மூடிக் கொண்டு கைகளில் இருந்த ஜபமாலையை பிக்கு உருட்ட ஆரம்பித்தார்.

உடையால் மட்டுமல்லாமல் ஒரு உண்மையான புத்தபிக்குவாகவே மாறி விட்டிருந்தவனை உளவுத்துறை ஆள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பற்றி ஒரு ரிப்போர்ட்டில் ஒரு உயர் அதிகாரி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.  “எந்த வேடத்திற்கும் கனகச்சிதமாகப் பொருந்துவான். யாராகவும் மாற இவனுக்கு அதிக நேரம் தேவைப்படுவதில்லை.”  கூடவே தலிபான் தீவிரவாதிகள் இவனை சைத்தான் என்று அழைத்தார்கள் என்பதைப் படித்த நினைவும் வந்தது. அவனை அறியாமல் புன்னகைத்தான். சுற்றிலும் பார்த்தான். புத்தபிக்குவையோ அவனையோ சந்தேகத்தோடு பார்த்தவர்கள் யாருமில்லை. சந்தேகப்படும்படியான ஆள்களும் சுற்றுவட்டாரத்தில் அவன் கணகளில் படவில்லை. அவன் மெள்ள எழுந்து புத்தபிக்கு அருகே சென்று அமர்ந்தான். அவனுக்கு அடுத்த இரண்டு இருக்கைகள் காலியாகவே இருந்தது ஒரு விதத்தில் வசதியாகப் போயிற்று.

புத்தபிக்கு உடனடியாகக் கண்களைத் திறக்கவில்லை. உளவுத்துறை ஆளும் புத்தபிக்குவிடம் பேச்சுக் கொடுக்க முயற்சிக்கவில்லை. அவன் தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஐந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்த புத்தபிக்கு பார்வையும் அந்தக் குழந்தை மீது விழுந்தது. அந்தக் குழந்தையை ரசித்துக் கொண்டே உளவுத்துறை ஆளிடம் கேட்டார். “பையன் தயாரா?

அந்தக்குழந்தை மீது வைத்த கண்களை எடுக்காமல் அந்த ஆள் சொன்னான். “தயார். இன்னும் கால் மணி நேரத்தில் ஒரு புத்தபிக்கு அவனை உங்களிடம் கொண்டு வந்து விடுவார்

பையன் எப்படி?

ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்து பிடித்தோம்.  சோம்பேறி. அவனுக்கு பிடித்த வேலைகள் இரண்டு. சாப்பிட வேண்டும். தூங்க வேண்டும். சலிக்காமல் இந்த இரண்டையும் செய்வான்...

அதிகம் பேசுவானோ?

“இல்லை. எதாவது சாப்பிட வேண்டும் என்றால் மட்டும் தான் தானாகப் பேசுவான். மற்றபடி கேட்ட கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்வான்....

புத்தபிக்கு முறுவலித்தார். யாராவது அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் இருவரும் தூரத்தில் விளையாடும் அந்தக் குழந்தையை ரசித்து அதைப்பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றும்.

உளவுத்துறை ஆள் சொன்னான். நான் கிளம்புகிறேன்

“வேறெதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

“எச்சரிக்கையாய் இருங்கள். லீ க்யாங் எந்த விதத்திலும் உங்களுக்கு சளைத்தவன் அல்ல. அவன் ஆபத்தானவன்

இதே எச்சரிக்கையை வேறு வார்த்தைகளில் முன்பே ஆசான் அவனிடம் சொல்லி இருந்தது அக்‌ஷய்க்கு நினைவுக்கு வந்தது. அடக்கமாக அவனுக்கு நன்றி தெரிவித்தான். உளவுத்துறை ஆள் எழும் போது அக்‌ஷய் தன் கால் அருகே வைத்திருந்த பையைத் தட்டி விட, பை கவிழ்ந்து அந்தப் பையில் இருந்து சில புத்தகங்களும், பூஜைப் பொருள்களும் சிதற உளவுத்துறை ஆள் சத்தமாக மன்னிப்பு கேட்டு அவற்றை எல்லாம் பொறுக்கி மறுபடி அந்தப் பையில் போட்டுத் தந்தான். அப்படிப் போடும் போது அவன் அது வரை தன் கையில் வைத்திருந்த ஒரு உறையும் அக்‌ஷயின் பைக்குள் அடைக்கலம் புகுந்தது.

உளவுத்துறை ஆள் அக்‌ஷயை வணங்கி விட்டுப் போய் விட்டான். அக்‌ஷய் அமைதியாக அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் ஒரு புத்தபிக்கு ஒரு பையனுடன் வந்து சேர்ந்தார். அந்தப் பையனும் புத்தபிக்கு உடையிலேயே இருந்தான். அக்‌ஷய் அவனைக் கூர்ந்து கவனித்தான். ஆசான் தந்த புகைப்படத்தில் இருந்த மைத்ரேயனின் சாயல் கிட்டத்தட்ட அந்த சிறுவனிடம் இருந்தது. எந்த விதமான தனித்தன்மையும் பெரிதாகத் தெரியாமல் அந்தப் பையன் அக்‌ஷயை வெறித்துப் பார்த்தான். அவனை அழைத்து வந்திருந்த புத்தபிக்கு அக்‌ஷயிடம் பையனை விட்டு விட்டு குனிந்து வணங்கி விட்டு அங்கிருந்து போய் விட்டார்.

அக்‌ஷய் அந்தப் பையனைப் பார்த்து புன்னகைத்தான். அந்தப் பையனுக்கு பதிலுக்கு புன்னகை செய்ய வேண்டும் என தெரியவில்லையா, இல்லை புன்னகை செய்ய மனமில்லையா என்பதை அக்‌ஷயால் யூகிக்க முடியவில்லை. அந்தப் பையன் புன்னகை செய்யாமல் அவனை வெறித்துப் பார்த்தான்.

அக்‌ஷய் தன் பையில் இந்திய உளவுத்துறை ஆள் விட்டுப் போயிருந்த உறையை எடுத்துப் பார்த்தான். அதனுள் அந்தச் சிறுவனின் பாஸ்போர்ட் இருந்தது. அதைத்திறந்து பார்த்தான். அந்தச் சிறுவனின் போலிப்பெயர் விலாசம் ஆகியவற்றைக் கவனமாய் அக்‌ஷய் படித்தான்.

பின் மெல்ல அந்தச் சிறுவனிடம் பெயரைக் கேட்டான். சிறுவன் வேண்டாவெறுப்பாகத் அந்த போலிப் பெயரையே சொன்னான். அவன் தன் சொந்தப் பெயரை சொல்லி விடவில்லை. அந்த அளவுக்கு அவனைத் தயார்ப்படுத்தி இருக்கிறார்கள் என்பதே அக்‌ஷய்க்குத் திருப்தியாய் இருந்தது.

அந்த உறையில் அந்த பாஸ்போர்ட்டோடு லாஸாவுக்கு இரண்டு டிக்கெட்களும் இருந்தன.

லாஸாவுக்குப் போகும் விமானத்திற்காக அவர்கள் இருவரும் காத்திருக்கையில் அந்த சிறுவன் தூங்கிப் போனான். பார்க்க இவனைப் போலவே இருக்கும் மைத்ரேயன் குணாதிசயங்களிலும் இவனைப் போலவே இருந்து விடுவானோ என்கிற சந்தேகம் ஏனோ அக்‌ஷய்க்கு வந்தது. ஆரம்ப அபிப்பிராயத்தை இன்னமும் அவனால் முழுமையாய் இழந்து விட முடியவில்லை. 


சில மனிதர்கள் மிக மிக எளிமையானவர்கள். அவர்கள் வாழ்க்கையும் எளிமையானது. அந்த எளிமையை மட்டும் தான் அவர்களால் தாங்கவும் முடியும். அந்த எளிமையை மீறி சிக்கலான ஏதாவது ஒன்று வாழ்க்கையில் வந்து விட்டால் அது உயர்வாக இருந்தாலும் கூட அது அவர்கள் வாழ்க்கையின் லயத்தைக் கலைத்து விடும். அதை எப்படி சமாளிப்பது என்பதே அவர்களுக்குப் பெரிய பிரச்னையாகி விடும். விதி பழையபடியே தங்களை விட்டிருந்திருக்கலாம் என்று தோன்ற ஆரம்பித்து விடும். மைத்ரேயரின் தாய் அப்படித் தான் உணர்ந்தாள்.

திபெத்தில் கிட்டத்தட்ட ஒரு பூஜ்யம் போல இருந்த அவளை இது வரை எந்த பெரிய மனிதரும் கவனித்ததோ, மதித்து மரியாதையாக நான்கு வார்த்தைகள் பேசியதோ கிடையாது. அப்படிப்பட்ட அவள் மைத்ரேயர் என்ற அவதார புத்தனைப் பெற்றவள் என்ற புதிய செய்தியும், அதை வைத்து மூத்தவர் போன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு குரு தாழ்ந்து வணங்கியதும் அவளைப் பெருமைப்பட வைத்ததற்குப் பதிலாக ஒருவித சங்கடத்தையே உணர வைத்தது. இளைய மகனைப் பிரிய வேண்டி வருவதோ மெள்ள மெள்ள கவலையை வளர்க்க ஆரம்பித்தது. இப்போது போனால் மீண்டும் அவனை எப்போது சந்திக்க முடியும் என்ற அவளது கேள்விக்கு மூத்தவர் பதில் அளிக்க முடியாமல் இருந்தது பெற்ற வயிற்றைக் கலக்கியது.

அவள் வீடு வந்து சேர்ந்த போது அவளுடைய முதல் இரண்டு மகன்களும் மட்டும் இருந்தார்கள். கடைசி மகன் இருக்கவில்லை. ஒருவிதத்தில் அதுவும் நல்லதே என்று எண்ணிய அவள் மூத்தவர் சொன்ன செய்தியை மகன்களிடம் சொன்னாள். கேட்டு விட்டு இரண்டாவது மகன் திகைப்புடன் அவளைப் பார்த்தான். ஆனால் மூத்த மகன் வாய் விட்டுச் சிரிக்க ஆரம்பித்தவன் நீண்ட நேரம் சிரித்தான். கடைசியில் கண்களில் நீர் தளும்பவே ஆரம்பித்தது.

அவளுக்குக் கோபம் வந்தது. “உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா? ஏன் இப்படிச் சிரிக்கிறாய்?

பைத்தியம் எனக்கா அந்த புத்த பிக்குக்கா? நம் வீட்டு மந்த புத்திக்காரனை மைத்ரேயன் என்று அழைத்தால் சிரிக்காமல் என்ன செய்வது?

அவளது இரண்டாவது மகன் சொன்னான். “ஏதாவது காரணம் இல்லாமல் மூத்தவர் மாதிரியான ஞானி சொல்வாரா அண்ணா?

மூத்தவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். எப்போதும் சிலையாக இருக்கும் புத்தரைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு, வேலை வெட்டி இல்லாமல் அப்படியே சிலை போல் கண்ட இடங்களில் எல்லாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் நம் பையனைப் பார்க்கும் போது புத்தரின் மறு அவதாரமாகத் தோன்றி இருக்கலாம்.....

தம்பி முகத்தில் சின்னதாய் புன்முறுவல் வந்தது. ஆனால் பெற்றவள் மூத்த மகனின் நகைச்சுவை உணர்வை ரசிக்கவில்லை. மூத்த மகனை அவள் முறைத்தாள். என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது. அந்த மூத்தவரை விட நீ என்ன பெரிய அறிவாளியா?

மூத்தவன் கேட்டான். “அப்படியானால் நீயும் உன் கடைசி மகன் மைத்ரேயன் என்றா நினைக்கிறாய்?   

அந்தத் தாயிற்கு அப்படி ஒரு நம்பிக்கையும் இன்னும் வந்திருக்கவில்லை. இரண்டும் கெட்டான் நிலைமையில் இருந்த அவள் சொன்னாள். “எனக்கு என்ன நினைப்பதென்றே தெரியவில்லை

மூத்த மகன் சிரித்துக் கொண்டே கேட்டான். “நம் வீட்டு மைத்ரேயனுக்காவது அவன் தான் மைத்ரேயன் என்று தெரியுமா?

அந்தக் கேள்விக்குப் பதில் அவர்களுக்கு தெரியவில்லை. மைத்ரேயனோ இன்னும் வீடு வந்து சேரவில்லை....

(தொடரும்)


என்.கணேசன்


(அமானுஷ்யனின் விறுவிறுப்பான பூர்வீகக் கதையை முழுமையாகப் படிக்க, தற்போது வெளியாகியுள்ள 600க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட “அமானுஷ்யன்” நாவலைப் படித்து மகிழுங்கள். நூலை வாங்க  பதிப்பாளரை 9600123146 எண்ணில் அல்லது மின்னஞ்சல் blackholemedia@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.)

என்.கணேசன்

5 comments:

  1. Going interestingly. Characters are so real that you make us see them in front of us. We are also waiting for Maithreyan.

    ReplyDelete

  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  3. ஏர்போர்ட் காட்சி கண் முன்னே நடக்கிறது போல் உணர்ந்தேன். விறுவிறுப்பாய் போகிறது கதை.

    ReplyDelete
  4. சிறப்பாய் தொடர்கிறது...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete