சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, January 1, 2015

புத்தம் சரணம் கச்சாமி! – 27


வளை வணங்கிய மூத்தவர் நிமிர்ந்து பார்த்த போது அவள் பணிவாகச் சொன்னாள். “ஐயா உங்கள் கணிப்பில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்று நினைக்கிறேன். என் மகன் மைத்ரேயனாக இருக்க வாய்ப்பில்லை

அவர் அமைதியாகக் கேட்டார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

அவள் எதை என்று சொல்லுவாள். எதுவுமே அவன் மைத்ரேயன் என்று நம்புகிற மாதிரி இல்லையே! அவள் என்ன சொல்வது என்று குழம்பினாள். அவள் அறிவாளி அல்ல. அவளுக்கு சாதாரண விஷயங்களே சற்று தாமதமாகத் தான் புரியும். ஆனால் பெற்ற மகன் பற்றி பத்து வருடங்கள் கழிந்தும் புரியாதவளா அவள்?

ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பித்தாள். “ஐயா புத்தபிரானைக் கருவில் சுமந்து கொண்டிருந்த போது அவர் தாய் மாயா தேவிக்கு தெய்வீகக் கனவுகள் வந்தன என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவன் என் வயிற்றில் இருந்த போது அப்படி எந்தக் கனவும் எனக்கு வந்ததில்லை. சொல்லப் போனால் மோசமான கனவுகள் தான் சில நாட்களில் வந்திருக்கின்றன...

மூத்தவர் தன்னையும் மீறிப் புன்னகைத்தார்.

அவள் தொடர்ந்து சொன்னாள். “அது மட்டுமல்ல. அவன் பிறந்து இத்தனை வருடங்களில் அவன் ஒரு அற்புதத்தையும் நடத்திக் காட்டியதில்லை....

அப்படியானால் அவர் மற்ற சிறுவர்களைப் போல் உங்கள் மகன் சாதாரணமானவர் என்று சொல்கிறீர்களா தாயே?

அவள் ஒரு கணம் யோசித்தாள். அவளால் அப்படிச் சொல்லவும் முடியவில்லை. அவள் மகன் மற்றவர்களைப் போல் அல்ல. அல்லவே அல்ல. சொல்லப் போனால் அவளுக்கு அவன் மற்ற சிறுவர்களைப் போலவே இருந்து விட்டிருந்தால் தேவலை என்று எத்தனையோ முறை தோன்றியிருக்கிறது.  அவள் அதை அவரிடம் வாய் விட்டே சொன்னாள்.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

“அவன் வாய் திறந்து பேசுவதே அபூர்வம்... அவனுக்கு எதிலும் ஆர்வம் இல்லை. முன்னுக்கு வர வேண்டும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற லட்சியம் எல்லாம் இல்லை, அவன் மந்த புத்தி கொண்டவன் என்று என் மூத்த பிள்ளை தினமும் திட்டுகிறான்....

“அப்படி அவர் திட்டும் போது மைத்ரேயர் கோபம் கொள்வதுண்டா தாயே

அவள் முகம் மென்மையாகியது. “சேச்சே.... ஒரு போதும் அவன் கோபித்துக் கொண்டதில்லை. வாய் விட்டு எதுவும் பேசாமல் இருந்தது மட்டுமல்ல, அவன் முகத்தைக் கூட கோபமாக வைத்துக் கொண்டது கிடையாது....

“அது பெரிய விஷயமல்லவா தாயே. எத்தனை பேரால் அப்படி இருக்க முடியும்?

அவள் சொன்னாள். “ஆனால் அவனுக்கு ஏதாவது தலையில் ஏறினால் தானே கோபப்படுவதற்கு என்று என் மூத்த பிள்ளை சொல்கிறான்

அவர் மறுபடியும் புன்னகைத்தார். அவளால் அதைப் புன்னகைக்கும் விஷயமாக நினைக்க முடியவில்லை. மூத்த மகன் அப்படித் திட்டும் போதெல்லாம் அவளுக்கு கஷ்டமாக இருக்கும். அப்படித் திட்டும் போது இவன் திருப்பித் திட்டினால் கூட பரவாயில்லை என்று தோன்றும். குறைந்த பட்சம் அவன் திட்டும் போது இவன் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியே போனால் கூட பரவாயில்லை என்று தோன்றும். ஆனால் அவளுடைய மூன்றாவது மகன், அண்ணன் ஏதோ கதை சொல்வது போல கேட்டுக் கொண்டிருப்பானே ஒழிய தன்னை மாற்றிக் கொள்ளவும் மாட்டான், கோபம் கொள்ளவும் மாட்டான். அப்போது அவளுக்கே மூத்த மகன் சொல்வது சரி தானோ, இவன் தலையில் எதுவும் ஏறுவதில்லையோ என்று தோன்றியதுண்டு.

அவள் கேட்டாள். “கௌதம புத்தர் ராஜ வம்சத்தில் பிறந்தவர். இவன் என்னைப் போன்ற ஒரு தரித்திரவாசி வயிற்றில் பிறந்து வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்... புத்தரின் அவதாரமாக இருந்தால் இவன் இப்படி கஷ்டப்படுவானா?

“மைத்ரேயர் எப்போதாவது துக்கத்தில் இருந்திருக்கிறாரா தாயே?

அவள் யோசித்துப் பார்த்தாள். அவள் கடைசி மகன் என்றுமே துக்கத்தில் இருந்ததில்லை.  இத்தனை கஷ்டங்களிலும் அவன் கஷ்டப்பட்டதில்லை. அவளுக்கு ஒரு நிகழ்வு இப்போதும் மிகத் தெளிவாக நினைவிருக்கிறது. ஒரு நாள் அவள் மூத்த மகன் தங்கள் வறுமை நிலையை மிக விரிவாக அவளிடம் எடுத்துச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். மழை வந்தால் ஒழுகும் வீடு, தீரவே தீராத பழைய கடன், சமூகத்தில் அவர்களுக்கு இல்லாத கௌரவம், நன்றாக உண்ணவோ, உடுக்கவோ முடியாத கீழ் நிலைமை பற்றியெல்லாம் சொல்லி விட்டு, சமயங்களில் நாம் ஏன் பிறந்தோம் என்று பல முறை வருந்தி இருப்பதாகச் சொன்னான்.

அவளுக்கே அவன் சொல்வதை எல்லாம் கேட்டு மனம் பாரமாகி விட்டது. ஏன் என்றால் அவன் சொன்னதில் ஒன்று கூட மிகைப்படுத்தலாக இருக்கவில்லை. ஆனால் கஷ்டத்தையே விவரிப்பதால் கஷ்டம் குறையாமல் கூடுவதால், இனியும் அங்கிருந்தால் இன்னும் பட்டியலை நீட்டி ஒரு வழியாக்கி விடுவான் என்று பயந்தவள் வேலை இருப்பதாகச் சொல்லி வெளியே வந்தாள். வெளியே அவள் கடைசி மகன் தூரத்து மலைமுகடுகளுக்கிடையே கிளம்பி இருந்த வானவில்லைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த பேரமைதி வீட்டின் உள்ளே நிலவிய சோகத்திற்கு எதிர்மாறாக இருந்தது. தூரத்தில் தெரிந்த மலை முகடுகள், அந்த வானவில், அவன்- எல்லாம் ஒரு ரகமே என்று ஏனோ அவளுக்கு அந்தக் கணத்தில் தோன்றியது. எப்படியோ அந்த அமைதி அவளையும் எட்டி சிறிது மனபாரத்தைக் குறைத்தது போலத் தோன்றியது. அந்தக் காட்சி அப்படியே உறைந்து அவள் மனதில் ஒரு மூலையில் தங்கிக் கொண்டது. வாழ்க்கையில் சோகம் அதிகமாகும் போதெல்லாம் அவளையும் அறியாமல் அந்தக் காட்சியை எண்ணிப் பார்ப்பாள். மனம் ஓரளவு ஆறுதல் அடையும். ஆனால் அதற்குக் காரணமோ, அந்தக் காட்சியின் தத்துவமோ அவளுக்கு இன்று வரை புரிந்ததில்லை....

அவர் கேள்விக்கு தான் இன்னும் பதில் சொல்லவில்லை என்பது அவளுக்குத் திடீர் என்று நினைவுக்கு வந்தது. அவள் சொன்னாள். “இல்லை. அவன் எப்போதும் வருத்தமாக இருந்ததில்லை. அதற்கும், எதாவது புரிந்தால் தானே வருத்தம் கூட பட முடியும் என்று என் மூத்த மகன் சொல்கிறான்.

மூத்தவர் அமைதியாகச் சொன்னார். ”எதுவுமே புரியாதவன் வருத்தப்படுவதில்லை என்று உங்கள் மூத்த மகன் சொன்னது உண்மை தான் தாயே. ஆனால் அது போல எல்லாம் புரிந்தவனும் வருத்தப்படுவதில்லை...

அவளுக்கு அவர் சொன்னது பெரிதாய் புரியவில்லை. ஆனால் மூத்தவருக்கு இப்போதும் அவள் மகன் மைத்ரேயன் அல்ல என்று தோன்றவில்லை என்பது மட்டும் புரிந்தது. அவர் அவனை மைத்ரேயர் என்ற பெயரைத் தவிர்த்து வேறு பெயரை பயன்படுத்தவே இல்லை.

அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அவளது புரிந்து கொள்ள க்கூடிய சக்தியையும் மீறிய விஷயங்கள் அவள் மீது திணிக்கப்படுவது போல் இருந்தது. அவள் கேட்டாள். “அவன் மைத்ரேயன் என்றால் அவன் பிறந்தவுடனேயே ஏன் தெரிவிக்கவில்லை

“அவர் உயிருக்கு ஆபத்து இருந்தது. அதனால் தான் இது வரை நாங்கள் தெரிவிக்காமல் இருந்தோம். தினமும் புத்தரை வணங்கியதை அடுத்து நாங்கள் மைத்ரேயர் வாழும் உங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி வணங்கத் தவறியதில்லை

அவளுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.

“அப்படியானால் இப்போது ஏன் தெரிவிக்கிறீர்கள்?

“இப்போது மைத்ரேயர் உயிருக்கு பேராபத்து வந்திருக்கிறது. அவர் திபெத்தில் இருந்து போய் விடுவது தான் பாதுகாப்பு என்று மௌனலாமா சொல்லி இருக்கிறார்....

அவளுக்குத் தலைசுற்றுவது போல் இருந்தது. வயிற்றை என்னவோ செய்தது. மௌனலாமாவின் அபூர்வ சக்திகள் திபெத்தில் பிரபலமாகி இருந்ததால் அதை சந்தேகிக்க அவளால் முடியவில்லை.

“அவன் எங்கே போவான்?கலவரத்துடன் கேட்டாள்.

“அவரை இங்கேயிருந்து பாதுகாப்பாக அழைத்துப் போக இந்தியாவில் இருந்து ஒருவர் வருவார். அவருடன் நீங்கள் மைத்ரேயரை அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லத்தான் உங்களை அழைத்திருக்கிறோம் தாயே

அவள் அருகிலிருந்த சுவரில் சாய்ந்து கொண்டாள். மயங்கி விழுந்து விடுவோமோ என்று அவளுக்கு பயமாய் இருந்தது.

“அந்த இந்தியர் எப்போது வருவார்?

“எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவர் அதிக நேரம் உங்கள் வீட்டில் தங்கி இருப்பது ஆபத்து என்பதால் தாமதிக்காமல் மைத்ரேயரை அவருடன் அனுப்பி வைக்க வேண்டும் தாயே. அதனால் வீட்டுக்குப் போனவுடனேயே மைத்ரேயரைத் தயார்ப்படுத்தி விடுங்கள்....

அவளுக்கு என்ன நினைப்பது எப்படி உணர்வது என்று விளங்கவில்லை. இப்போது கேள்விப்பட்ட விஷயங்கள் உள்ளே போய் ஓரளவாவது புரிய ஆரம்பிக்கும் போது தான் நினைப்பதும், உணர்வதும் நிகழும். இப்போது பாழும் சூனியமே அவளுக்குள் விரிந்திருந்தது.

மெள்ள கேட்டாள். என் மகன் தான் மைத்ரேயன் என்கிற உங்கள் கணிப்பு தவறல்ல என்று எப்படி நம்புகிறீர்கள் ஐயா

“இந்தக் கணிப்பு நாங்கள் செய்தது அல்ல தாயே. திபெத்தியர்களின் முதல் குருவென நாம் நினைத்து வணங்கும் பத்மசாம்பவா 800 வருடங்களுக்கு முன்பே செய்து விட்டுப் போயிருக்கிற கணிப்பு இது.... உங்கள் மகன் தான் மைத்ரேயர் என்கிற உண்மை வெளியாட்களுக்குத் தெரிய வருவது அவர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதால் ரக்சியம் காக்க வேண்டும் தாயே....

முழுவதுமாக விளங்கா விட்டாலும் அவள் தலையசைத்தாள். அவளுக்கு இப்போது ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்கத் தோன்றியது. “இப்போது போனால் என் மகன் எப்போது திரும்பி வருவான்?

அந்தக் கேள்விக்கு அவரிடமும் பதில் இருக்கவில்லை.

லீ க்யாங்குக்கு காலத்தின் மீது அதிகாரம் இருந்திருக்குமேயானால் உடனடியாக அடுத்த நாள் காலை பத்து மணிக்கு காலத்தை நகர்த்தி இருப்பான். அவன் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆள் வழுக்கைத் தலையரான சந்திரகாந்த் முகர்ஜியை நாளை பத்து மணிக்குச் சந்தித்து தகவல்களைப் பெற்றால் தான் மைத்ரேயர் விவகாரத்தில் அடுத்த நடவடிக்கையை அவன் முடிவு செய்ய முடியும். அது வரை காத்திருப்பது தான் அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.

சந்திரகாந்த் முகர்ஜி தன் மூர்ஷிதாபாத் பூர்விக வீட்டில் தனியாக இருந்திருந்தால் அவன் உடனடியாக ஆளை அங்கு அனுப்பி இருப்பான். ஆனால் அங்கு அவர் பெரிய குடும்ப கும்பலுடன் இருந்ததால் அது சாத்தியப்படவில்லை.  

லீ க்யாங் சலிப்பே இல்லாமல் மைத்ரேயர் சம்பந்தமாக இது வரை சேகரித்து வைத்திருந்த தகவல்களை மறுபடியும் படித்தான். பிறகு கண்களை மூடிக் கொண்டு ஆசானை புத்தகயாவில் சந்தித்து விட்டுப் போயிருந்த மர்ம ஆசாமி பற்றி யோசித்தான்.   

பிறகு தலாய் லாமா மற்றும் ஆசான் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை வாங் சாவொ பதிவு செய்திருந்து தந்திருந்த்தை மறுபடியும் ஓட விட்டுக் கேட்டான். தலாய் லாமா குரலும், ஆசான் குரலும் இடைவெளிகளில் ஓரளவு தெளிவாக, விட்டு விட்டு கேட்டது.

ஆசான்: ..... பத்து நாளுக்குள்.... வெளியே….

தலாய் லாமா: .........தெரியாமல் ....... எப்படி….

ஆசான்: ......... எனக்குத் தெரியும்..... ஒரு ஆள்....

தலாய் லாமா: ...இது என்ன காகிதம்.....

ஆசான்: ....... மௌன லாமா சொன்னது.....

தலாய் லாமா:.... யாரிது?...

ஆசான்: ....கண்டம்.... உயிருக்கு.... இந்தியா

தலாய் லாமா: ... எப்படி

ஆசான்: .... ஒரே வழி...

இப்போது எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கையில் மைத்ரேயரின் உயிருக்கு ஆபத்து என்றும், அதிலிருந்து மைத்ரேயரைக் காப்பாற்ற ஒரே வழி இருக்கிறது என்றும் அவர்கள் பேசிக் கொண்டது போல தெரிகிறது. அந்த ஒரே வழி அந்த மர்ம ஆசாமியாக இருக்கலாம். அவனைத் தொடர்பு கொள்ளத் தான் அவர்கள் இந்தியப்பிரதமரைச் சந்தித்திருக்கிறார்கள். ஒரு ரகசிய ஃபைலே இருக்கும் அளவு சுவாரசியமான ஆள் அவன். அவன் மைத்ரேயரை காப்பாற்ற முடிந்த அளவு சக்தி வாய்ந்தவன் என்று அவர்கள் நம்புகிறார்கள். மைத்ரேயர் இருப்பது திபெத்தில். அவரை அந்த மர்ம ஆசாமி இந்தியாவில் இருந்து கொண்டு காப்பாற்ற முடியாது. திபெத் சென்று தான் காப்பாற்ற முடியும்..... ஆக மைத்ரேயர் பற்றிய தகவல்கள் அந்த வழுக்கைத் தலை முகர்ஜியிடம் இருந்து பெறுவதற்கு முன்பே இது மட்டும் நிச்சயம். அந்த ஆசாமி திபெத்திற்கு வரப் போகிறான்!

லீ க்யாங் தன் ரத்த ஓட்டத்தில் ஒரு புத்துணர்ச்சியை உணர்ந்தான். ஒரு நபருக்கு உடனடியாகப் போன் செய்து பேசினான். “திபெத்துக்கு தனியாக வரும் ஒவ்வொரு ஆளையும் இனி சில நாள்களுக்கு கண்காணியுங்கள். வருபவன் எந்த வயதானாலும் சரி, எந்த நாட்டில் இருந்து வந்தாலும் சரி, தோற்றத்தில் எப்படி இருந்தாலும் சரி... இந்தக் கணத்தில் இருந்து அப்படி தனியாக நுழையும் ஒவ்வொரு ஆளின் புகைப்படமும் எனக்கு அனுப்பப்பட வேண்டும்.... இதில் எந்த விதிவிலக்கும் இருக்கக்கூடாது.

லீ க்யாங் உத்தரவு பிறப்பித்த அதே நேரத்தில் அக்‌ஷய் திபெத் செல்ல புத்தபிக்கு வேடத்தில் நேபாளில் காத்மண்டு நகருக்கு வந்து சேர்ந்தான்.

(தொடரும்)

- என்.கணேசன்


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 

10 comments:

  1. மைத்ரேயரின் தாயின் எண்ண ஓட்டம் மிக அருமை. ஒரு வெள்ளந்தியான பெண்ணின் மனநிலையை யதார்த்தமாய் சித்தரித்து இருக்கிறீர்கள். வழக்கம் போல் லீக்யாங் முடிவுகளை எட்டும் விதமும் அருமை. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. Excellent characterization. You make the characters alive and real. Good reading. Thank you

    ReplyDelete
  3. LEE KWANG vs AKSHAY .... SUPER !!!!!

    ReplyDelete
  4. மைத்ரேயனை நாங்கள் சந்திக்கும் முன் அவர் தாய் மூலம் விவரிக்க வைத்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் சார். கதையோடு ஒட்டி வரும் தத்துவங்கள், குணச்சித்திரங்கள் நிஜமாகவே உங்கள் ப்ளஸ். அக்‌ஷய் லீ க்யாங் இருவரும் செம.

    ReplyDelete
  5. புதிய எதிர்பார்ப்பு!! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே!!

    ReplyDelete
  6. வணக்கம்
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  7. Sir Wish you happy new year.God bless you and your family.The story is very interesting.We are eagerly awaiting for every thursday.All characters are archestrated to the story.They are live and real.

    ReplyDelete
  8. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

    http://blogintamil.blogspot.in/2015/01/hawa-mahal.html

    முடிந்த போது பார்த்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete