சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, December 29, 2014

விஞ்ஞானியையே வியக்க வைத்த யோக சக்தி!


7.மகாசக்தி மனிதர்கள்

“உயிரையே எடுக்கக் கூடிய இத்தனை ஆபத்தான பொருள்களையும், விஷங்களையும் சாப்பிட்டும் நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதெப்படி?என்ற கேள்விக்கு நரசிங்க சுவாமி பதில் சொன்னார். “இதை ஹத யோகத்தால் சாதிக்கிறேன். இதில் எந்த ஏமாற்று வேலையும் இல்லை. யோக மூச்சுப் பயிற்சிகளை முழுமையாகக் கற்றிருக்கிறேன். அதனால் எந்த விஷமும் உடலில் இருக்கையில் என்னை பாதிக்காமல் இயல்பாக என் உடலில் இருந்து வெளியேற்றப் படுகிறது.

நரசிங்க சுவாமி பல நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவரை எடுத்த எக்ஸ்ரே படங்களையும் ரிஷிசிங் க்ரேவாலுக்குக் காட்டினார். அந்த எக்ஸ்ரே படங்களில் அவர் வயிற்றில் இருந்த ஆணிகளும், கண்ணாடித் துகள்களும் தெளிவாகவே தெரிந்தன.

ரிஷிசிங் க்ரேவால் கண்ட நிகழ்ச்சியைப் போலவே இன்னொரு நிகழ்ச்சி கல்கத்தாவில் பிரசிடென்ஸி கல்லூரியில் இயற்பியல் அரங்கில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மெத்தப் படித்த மருத்துவர்கள். அதற்கு மூலகாரணமாய் இருந்தவர் டாக்டர் நியோகி. இவர் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் வேதியியல் துறையில் பேராசிரியர். இவர் மதுப்பூர் என்ற நகரத்திற்குச் சென்றிருந்த போது நரசிங்க சுவாமி ஒரு நிகழ்ச்சியில் விஷ அமிலங்களை உட்கொண்டதை நேரில் பார்த்து வியந்தவர்.

முழுவதும் விஞ்ஞான முறையில் அமைக்கப்பட்ட அரங்கில் இது போன்ற நிகழ்ச்சியை நடத்திக் காட்ட இயலுமா என்று அவர் நரசிங்க சுவாமியிடம் கேட்ட போது நரசிங்க சுவாமி சம்மதித்தார். இரண்டு மாதங்களில் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். வேறுபல உயர் மருத்துவ அறிஞர்களும் அங்கு வந்திருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியிலும் கல்லூரி பரிசோதனைச்சாலையில் இருந்த அமிலங்கள் நரசிங்க சுவாமிக்குத் தரப்பட்டது.  முதலில் கந்தக அமிலமும் பின்னர் கார்பாலிக் அமிலமும், மூன்றாவதாக பொட்டாசியம் சயனைடும் தரப்பட்டது. பொட்டாசியம் சயனைடு அதிக பட்சம் மூன்று நிமிடங்களில் உயிரை எடுக்கக்கூடியது. ஆனால் அது நரசிங்க சுவாமிக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருந்தது கூடியிருந்த அறிஞர்களைத் திகைக்க வைத்தது.

அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியிலும் கண்ணாடி பொடி செய்து அவருக்குத் தரப்பட்டது. பொட்டாசியம் சயனைடு உடனடியாகக் கொல்ல முடிந்தது என்றால் கண்ணாடிப் பொடி தாமதமாகக் கொல்லக் கூடியது. மருத்துவ அறிஞர்கள் அவர் மேல் வைத்த கண்களை எடுக்கவில்லை. நரசிங்க சுவாமி பின்னர் ஆணிகளையும் விழுங்கினார். பிறகு மூன்று மணி நேரம் கழிந்து கல்கத்தா மருத்துவர் ஒருவர் அவர் வயிற்றில் இருந்ததை பம்ப் செய்து வெளியே எடுத்து பரிசோதனை செய்தார். விஷம் அப்படியே இருந்தது. கண்ணாடிப் பொடியும் இருந்தது. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போதும் ஆணிகள் உட்பட வயிற்றில் இருந்த இடம் தெளிவாகத் தெரிந்தது. எந்த விதத்திலும் ஏமாந்து விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இருந்த அறிஞர்களுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.  

நிகழ்ச்சி முடிந்தவுடன் சர் சி வி ராமன் சொன்னார்.  எனக்கு மலைப்பாக இருக்கிறது. இது நவீன மருத்துவத்திற்கு விடப்படும் சவாலாகவே நான் கருதுகிறேன்

நிகழ்ச்சிக்கு நிறைய பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் இந்த அற்புதங்கள் எப்படி சாத்தியமாகிறது என்று நரசிங்க சுவாமியைக் கேட்டார்கள். நரசிங்க சுவாமி உடனடியாக யோக நிஷ்டையில் ஆழ்ந்து இந்த விஷங்களுக்கு எதிரான சக்தியை உடலில் ஏற்படுத்தி விடுவதாகச் சொல்லி இருக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் அங்கிருந்த ஒரு பிரபல மருத்துவ அறிஞரைக் கேட்டார்கள். உங்கள் மருத்துவ அறிவைக் கொண்டு இதை எப்படி நீங்கள் விளக்குவீர்கள்?

“இதை மருத்துவ சாஸ்திரத்தால் விளக்க முடியாது. இது புரியாத புதிராகவே இருக்கிறதுஎன்று அந்த மருத்துவர் பதில் அளித்தார்.

ரிஷிசிங் க்ரேவால் நேரில் கண்ட நிகழ்ச்சியும், சர் சி வி ராமன் முன் கல்கத்தா ப்ரசிடென்சி கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள். இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஏமாற்று வேலைகள் நடந்து விடக்கூடாது என்று பார்வையாளர்களும், அறிஞர்களும் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

இது போன்ற நிகழ்ச்சிகளில் நரசிங்க சுவாமி செய்து காட்டிய அற்புதங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பரவ ஆரம்பித்தன. அவரைப் பல நாடுகளும் அமைப்புகளும் அழைக்க ஆரம்பித்தன. அவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டு தன் யோகசக்தியை பல்வேறு இடங்களில் நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் ஒரு அப்படி நடந்த ஒரு பொது நிகழ்ச்சி அவர் உயிரையே எடுத்து விட்டது என்பது தான் வருத்தத்திற்குரிய செய்தி. 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி பர்மாவில், ரங்கூன் நகரில், ஜுபிலி அரங்கத்தில் தான் அவருடைய கடைசி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கும் அவர் வழக்கம் போலவே அமிலங்கள், விஷங்கள், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் எல்லாம் விழுங்கினார். இந்த உயிர் கொல்லிகள் அவரைப் பாதிக்காமல் இருக்க அவர் செய்ய வேண்டிய யோக நிஷ்டைகளை முழுமையாகச் செய்ய விடாமல் அங்குள்ள மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடைய ஆர்வ மிகுதி அவர் கவனத்தைச் சிதறச் செய்திருக்க வேண்டும். அவர் உட்கொண்டவற்றில் ஒரே ஒரு விஷத்தைத் தவிர மற்றவற்றைச் செயலிழக்கச் செய்ய அவரால் முடிந்தது. ஒரு விஷம் அவரை உயிர் இழக்கச் செய்தது.

எப்போதாவது இப்படி நிகழலாம் என்று அவர் முன்பே அறிந்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. தனக்கு திடீர் என்று மரணம் நிகழுமானால் தன் அந்திம கிரியைகளை இப்படிச் செய்ய வேண்டும் என்பதை அவர் சில மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். அப்படியே செய்தார்கள்.

நரசிங்க சுவாமி என்ற இந்த ஹத யோகியின் வாழ்க்கை இரண்டு பெரிய உண்மைகளை நமக்குப் புலப்படுத்துகிறது.

முதலாவது யோக சக்தியால் முறைப்படி முயன்றால் உடல் மீது ஒரு மனிதன் எந்த அளவும் கட்டுப்பாடு செலுத்த முடியும் என்ற உண்மை. எண்ணற்ற முறைகள் அவர் பொட்டாசியம் சயனைடு உட்பட பல கொடிய விஷங்கள் உட்கொண்டும் அது அவரை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருந்தது அதற்கான அழுத்தமான ஆதாரம். பல நிகழ்ச்சிகளில் அவருக்கு அந்தக் கொடிய அமிலங்களைத் தாங்களே கொடுக்க முயன்றவர்கள் தப்பிப் தவறி கையில் அமிலங்கள் சிந்தி காயப்பட்ட நிகழ்ச்சிகள் ஏராளம். யோக சக்தியை முழுமையாக தன்வசப்படுத்திக் கொண்ட மனிதரோ அந்த அமிலங்கள் கை, வாய், தொண்டை, வயிறு பகுதிகளில் பயணித்தும் எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது சர் சி வி ராமன் சொன்னது போல விஞ்ஞானத்திற்கு பதில் காண முடியாத சவாலே அல்லவா?     

இரண்டாவது இயற்கைக்கு எதிராக மனிதன் எந்த சக்தியைப் பயன்படுத்தி எதைச் செய்ய முடிந்தாலும் அதில் அவன் எப்போதும் பூரண எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், அப்படி இருக்கா விட்டால் அது அவனுக்கு பேராபத்தை விளைவித்து விடும் என்பது. அதற்கும் நரசிங்க சுவாமி மிகச்சரியான உதாரணம்.

இனி வேறு ஒரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போமா?

(தொடரும்)
-          என்.கணேசன்
-          நன்றி: தினத்தந்தி – 24.10.2014



6 comments:

  1. அருமையான பகிர்வு அண்ணா...

    ReplyDelete
  2. இதில் இரண்டாவது அம்சம் மிக முக்கியம் .அற்புதமான் பதிவு .

    ReplyDelete
  3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா....

    ReplyDelete
  4. நீங்கள் இறுதியாக கூறிய இரண்டு உண்மைகளஃ மிகவும் போற்றப்படவேண்டிய ஒன்று.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.உங்கள் புத்தாண்டு இலட்சியம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. Awaiting for the next episode.

    ReplyDelete
  6. Awaiting your next episode!!

    ReplyDelete