சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 4, 2014

புத்தம் சரணம் கச்சாமி! – 23


 றிந்து கொள்ள வேண்டியதை அறிந்து கொள்ளாமல் இருப்பதைப் போன்ற ஒரு அவமானகரமான விஷயம் உலகத்தில் இல்லை என்ற கொள்கை உடைய லீ க்யாங் மைத்ரேயரன் விஷயத்தில் அந்த அவமானத்தை உணர்ந்தான். அந்த மர்ம மனிதனுக்கு மானசீகமாய் சவால் விட்ட  பிறகு அவனது மூளையின் அத்தனை செல்களும் யோசிக்க ஆரம்பித்தன. ஆசானும் அந்த மர்ம மனிதனும் ஏன் சந்தித்தார்கள், என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை ஓரளவு  யூகிக்கவாவது என்ன வழி என்று யோசிக்கையில், பதில் பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடிகளிலேயே இருக்கலாம் என்று உள்ளுணர்வு சொன்னது.  அப்போது இரவு மணி 9.48. உடனடியாக ஆவணக்காப்பகப் முதன்மைப் பொறுப்பாளருக்குப் போன் செய்தான்.

அப்போது தான் உறங்க ஆயத்தமாகி இருந்த அவர் அளவில்லா சலிப்போடு “ஹலோ சொன்னார்.

“நான் லீ க்யாங் பேசுகிறேன். பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடிகள் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன..

பொறுப்பாளருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எந்த நேரத்தில் சந்தேகங்கள் பற்றி கேட்கிறான் இந்த திமிர் பிடித்தவன் என்று கொதித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் மனைவியின் அண்ணனான சீனப்பிரதமரே கூட லீ க்யாங் மீது தனி மரியாதை வைத்திருந்ததை அறிவார். மேலும் லீ க்யாங்கை எதிரியாக்கிக் கொண்டால் அது எதிர்கால நிம்மதிக்கு உகந்ததல்ல. அரசியல் பதவிகள் வரும், போகும். ஆனால் லீ க்யாங் தன் அதிகார மையத்தில் நீண்ட காலம் இருக்க முடிந்தவன்.... ஆனாலும் தன் அதிருப்தியைக் காட்டினார். “இந்த நேரத்திலா...?

ஆமாம். இது நம் நாட்டு வல்லமைக்கு சவால் தரும் பிரச்னை சம்பந்தப்பட்டது. நான் பொதுச்செயலாளருக்கு ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது....

“அலுவலகத்தில் அந்த மொழிபெயர்ப்புகளைப் பார்த்து பதில் சொன்னால் தான் தங்கள் சந்தேகங்களுக்கு சரியான பதிலை நான் சொல்ல முடியும்பொறுப்பாளர் இதைச் சொல்லி இப்போது பேசுவதைத் தட்டிக் கழிக்கப் பார்த்தார்.

“அப்படியானால் இப்போதே அலுவலகம் போய் பார்த்துச் சொல்லுங்கள். ஏனென்றால் இது அவசரமாய் கவனிக்க வேண்டிய விஷயம். வேண்டுமானால் அவர் அலுவலகத்தில் இருந்து உங்களை அழைத்துப் பேசச் சொல்கிறேன்அவன் அலட்டாமல் சொன்னான்.

இந்த நேரத்தில் பேசுவதே சிரமம் என்று நினைத்த ஆளை அலுவலகத்திற்கே போகச் சொல்கிறானே என்று பொறுப்பாளர் அதிர்ந்தே போனார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சர்வ வல்லமை உள்ளவர். அவரை பிரதமர் உட்பட யாரும் எதிர்த்துக் கொள்ள முடியாது. லீ க்யாங் அட்டைக்கத்தி வீசுபவன் அல்ல. அவர் அலுவலகத்திலிருந்து பேசச் சொல்கிறேன் என்றால் பேச வைக்க முடிந்தவன்.... ஆனால் இந்த நேரத்தில் தூக்கத்தைத் துறந்து அலுவலகம் போவதை விட வேலையை ராஜினாமா செய்து விடுவது கூட உத்தமம் தான் என்றும் தோன்றியது. ஆனால் வந்த வேகத்திலேயே ராஜினாமா எண்ணம் பின்வாங்கியது. மனித மனமல்லவா!

‘உன் தலையில் இடி விழஎன்று மனதிற்குள் சபித்து விட்டு ஆவணக் காப்பகப் பொறுப்பாளர் சொன்னார்.  “உங்களுக்கு என்ன சந்தேகம் என்று சொல்லுங்கள். என் நினைவில் இருக்கும் விஷயங்களானால் நான் அலுவலகம் போகாமலே கூடச் சொல்ல முடியும்...

இதைத்தான் லீ க்யாங் எதிர்பார்த்தான். பத்மசாம்பவா பற்றியும் அந்த ஓலைச்சுவடி பற்றியும் பேசும் போது அவருக்கு மேலெழுந்தவாரியான ஆர்வம் இருப்பது போல அவனுக்குத் தோன்றவில்லை.

சிறிது மௌனம் சாதித்து விட்டு அவன் கேட்டான். “சரி.... இந்த மைத்ரேயர் சம்பந்தமான இப்போதைய காலத்துக்குப் பொருந்துகிற ஓலைச்சுவடிகள் இரண்டு பகுதிகளாக 15 மற்றும் 10 வருடங்களுக்கு முன்பு கிடைத்தன என்று சொன்னீர்கள். அவை யாருக்குக் கிடைத்தன. நமக்கா, தலாய் லாமா கூட்டத்திற்கா? எப்படிக் கிடைத்தன?

“15 வருடங்களுக்கு முன்பு கிடைத்த ஓலைச்சுவடிகள் ஒரு குகையில் தியானத்திற்குப் போன ஒரு ஜெர்மன் சுற்றுலாப்பயணிக்குக் கிடைத்தது. அவன் அதை திபெத்திலிருந்த நம் ஆவணக்காப்பகத்திற்கு அவனாகவே கொண்டு வந்து கொடுத்தான். இரண்டாவது பகுதி 10  வருடங்களுக்கு முன் ஒரு லாமாவுக்குக் கிடைத்திருக்கிறது....

“அது எப்படி நம் கைக்கு வந்தது?”

”மொழிபெயர்ப்புக்காக அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்த போது அது நம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக அதை நாம் கைப்பற்றி ஆவணக்காப்பகத்தில் பத்திரப்படுத்தி வைத்து விட்டோம்....

அந்த ஓலைச்சுவடி உண்மையானது தான் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

எந்த ஆவணத்தையும் நாம் முழு பரிசோதனை செய்து இரண்டு நிபுணர்களிடம் கருத்து வாங்காமல் உள்ளே சேர்ப்பதில்லை. அந்த இரண்டு ஓலைச்சுவடிகளும் பத்மசாம்பவாவுடையது தான் என்று தனித்தனியாக இரண்டு நிபுணர்களும் சான்றிதழ் தந்திருக்கிறார்கள்    

அந்த ஓலைச்சுவடிகள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு கையில் கிடைக்கும் போது அவர்கள் மாற்றி விட முடியும் வாய்ப்பிருக்கிறதா?

“நாம் ஆவணமாகச் சேர்க்கும் எந்த ஓலைச்சுவடியையும் யார் கைக்கும் தருவதில்லை. அதை துல்லியமான புகைப்படமாக எடுத்து வைத்துக் கொள்கிறோம். மொழி பெயர்ப்பாளர்களுக்கு நாம் தருவதெல்லாம் அந்தப் புகைப்படங்களைத் தான். அதனால் இரண்டு நிபுணர்களின் சான்று பெற்ற பிறகு எந்த ஆவணமும் வெளியாள் கைக்குப் போக வாய்ப்பே இல்லை

“மொழிபெயர்ப்பாளர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோமா இல்லை அவர்களாகவே வருவார்களா?

“இரண்டு அல்லது மூன்று மொழிபெயர்ப்பாளர்களை நாம் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தந்து அவர்கள் மொழிபெயர்ப்பையும் நாம் ஆவணப்படுத்திக் கொள்வோம்.

“பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடிகளின் மொழிபெயர்ப்புகள் 18 இருப்பதாக நீங்கள் சொன்னதாக எனக்கு ஞாபகம். அதெப்படி?

நாம் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்வது தான் இரண்டு, மூன்று பேரை. எந்த ஓலைச்சுவடியையும் மொழி பெயர்க்க விரும்புபவர்கள் நம்மிடம் பணம் கட்டி அதன் புகைப்படங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை அவர்கள் மொழிபெயர்த்து அதன் நகலை நம்மிடமும் கொடுப்பதுண்டு....

அப்படி கொடுப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்

“வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் நம்மிடம் வரும் போது மொழிபெயர்ப்புகளைக் கேட்பதுண்டு. அப்படி நாம் தரும் மொழிபெயர்ப்புகளை உபயோகித்துப் புத்தகமாகப் போடும் போது அந்த மொழிபெயர்ப்பாளர்கள் பெயரையும் அதில் தெரிவிப்பதுண்டு. சில சமயங்களில் மேலதிக விவரங்களுக்கு அவர்கள் அந்த மொழிபெயர்ப்பாளர்களை அணுகுவதும் உண்டு. அதற்கு நல்ல தொகை தருவதுமுண்டு. புகழ், பணம் இரண்டும் கிடைப்பது தான் லாபம்  அவருக்கு வாய் வலித்தது.

ஆனால் லீ க்யாங்கின் சந்தேகங்கள் தீரவில்லை. அவன் கேட்டான். “ஆனால் மொழிபெயர்க்கிறவர்கள் எல்லாம் அதன் நகலைத் தருவார்கள் என்று சொல்ல முடியாது இல்லையா

“ஆமாம்

“அதனால் நம்மிடம் இல்லாத மொழிபெயர்ப்புகளும் வெளியே இருக்கலாம்

“ஆமாம்

“நம்மிடம் ஓலைச்சுவடிகளின் புகைப்படங்களை வாங்கியவர்கள் பற்றிய தகவல்கள் இருக்குமா?

“அவர்கள் பணத்துடன் விண்ணப்பித்த பிறகு தான் நாம் புகைப்படங்கள் தருகிறோம். அதனால் அவர்கள் விலாசமும், மற்ற தகவல்களும் நம்மிடம் இருக்கும்....

“ஆனால் நம்மிடமிருந்து புகைப்படங்கள் வாங்கியவர்கள் மற்றவர்களுக்கு அதை வினியோகித்திருந்தால் அது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. சரி தானே.

“சரி தான்அவருக்கு நாக்கு வறண்டது.

எனக்கு பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடிகளின் புகைப்பட நகல்கள் வாங்கியவர்கள் பெயர் விலாசம் எல்லாம் வேண்டுமே

“எனக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருக்கிறதால் தலை சுற்றல் இப்போது இருக்கிறது....பொறுப்பாளர் பரிதாபமாக இழுத்தார்.

அவரை அதற்கு மேல் சோதிக்க விரும்பாமல் அவன் சொன்னான். “சரி.... நாளை காலை பதினோரு மணிக்குள் அந்த விலாசங்களையும், இப்போது நம்வசம் இருக்கும் மொழிபெயர்ப்புகளையும் கொடுங்கள்.

பொறுப்பாளர் நன்றி தெரிவித்து விட்டு களைப்புடன் அப்படியே படுக்கையில் சாய்ந்தார்.


லீ க்யாங்குக்கு வாங் சாவொவிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. ஆசான் டெர்கார் மடாலயத்தில் அழைத்துப் பேசி ஒரு தாளையும் தந்த நபர் லக்னோவில் பேல்பூரி விற்பவன் என்பதைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருந்தான். லீ க்யாங்குக்கு ஆசானின் குறும்பு லேசாய் புன்னகையை வரவழைத்தது.

ஆளை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு ஆளைத் தேர்ந்தெடுத்து கவனத்தைத் திசை திருப்பச் சொன்னது ‘அவனாகஇருக்க வேண்டும். இந்த வகையில் எல்லாம் சிந்திக்க அவருக்குத் தெரியாது... அவன் பலே கில்லாடியாக இருக்க வேண்டும்.... அலட்டாமல் இயங்கக்கூடியவனாக இருக்கிறான்....  அவனைப் பற்றி முழுவதுமாய் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். முதலில் இந்த மைத்ரேயன் எங்கிருக்கிறான் என்று தெரிந்து கொள்வது முக்கியம். அது தான் அவசரமாய் அறிய வேண்டியது....’   

மைத்ரேயன் விஷயத்தில் தனக்குத் தேவையான தகவல் ஆவணக் காப்பகப் பொறுப்பாளர் நாளை தரப்போகிற தகவல் குவியலில் கண்டிப்பாக இருக்கும் என்று லீ க்யாங்கின் உள்ளுணர்வு சொன்னது. இது வரை அந்த உள்ளுணர்வு பொய்த்திராததால் அவன் உற்சாகமடைந்தான்..... அவனால் உறங்க முடியவில்லை.


தே நேரத்தில் அவனைப் போலவே உறங்க முடியாமல் கல்கத்தாவில் அந்த வழுக்கைத் தலையனும் தவித்தார். கடந்த இரண்டு வருட காலங்களாக அவர் கஷ்டப்பட்டு உழைத்தது வீண் போகவில்லை, அதன் பலனை இனி அனுபவிக்கப் போகிறோம் என்ற சந்தோஷம் அவரை உறங்க விடவில்லை. இத்தனை நாள் சாதாரண ஆராய்ச்சியாளனாக இருந்த அவர் உலகப்புகழ் பெறப் போகிறார். உலகம் அவர் கண்டுபிடித்ததை வியப்புடன் பார்க்கப் போகிறது.

தலாய் லாமாவே அவரை அன்று அதிர்ச்சியுடன் அல்லவா பார்த்தார். ஆனால் தலாய் லாமா அவரை இன்னமும் முழுமையாக நம்பி விடவில்லை போல் தோன்றியது. நம்பி இருந்தால் கண்டிப்பாக ஆர்வத்துடன் மைத்ரேயர் பற்றி அவர் கண்டுபிடித்த முழு விவரங்களையும் கேட்டிருப்பார் என்று ஒரு கணம் தோன்றினாலும் தலாய் லாமா மேல் தவறில்லை என்று உடனே தோன்றியது.

‘சொன்னதை ஜீரணிக்கவே தலாய் லாமாவுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு தான் பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே. என் விமானம் கிளம்பும் நேரமாகி இருந்ததால் எனக்கும் அவரிடம் தொடர்ந்து பேச முடியவில்லை... பரவாயில்லை. தகவல்கள் வெளிவரும் போது தலாய் லாமாவே என்னை அழைத்துப் பேசத்தான் போகிறார்.... இந்த இரண்டு வருடங்களில் எத்தனை தூரம் வந்து விட்டேன்...... திபெத்தின் ஆவணக்காப்பகத்தில் இருந்து பத்மசாம்பவாவின் ஓலைச்சுவடியின் புகைப்பட நகலை வாங்கிய போது இந்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும் என்று நானே எதிர்பார்த்திருக்கவில்லை.....'

இந்த சிந்தனை ஓட்டத்தில் இருந்த அவர் வரவிருக்கும் ஆபத்தை அறிந்திருக்கவில்லை!



(தொடரும்)
என்.கணேசன்



8 comments:

  1. ஐயையோ லீக்யாங் நெருங்கிட்டானே

    ReplyDelete
  2. லக்‌ஷ்மிDecember 4, 2014 at 6:52 PM

    உங்கள் பாத்திரங்கள் மிக யதார்த்தமாய் அமைகின்றன. உதாரணத்திற்கு இந்த சோம்பேறி பொறுப்பாளரும், அவரை அழகாய் கையாளும் லீ க்யாங்கும். லீ க்யாங் அக்‌ஷய் இருவர் மோதலையும், அந்த மைத்ரேயன் பாத்திரத்தை எப்படி கொண்டுவரப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  3. // அறிந்து கொள்ள வேண்டியதை அறிந்து கொள்ளாமல் இருப்பதைப் போன்ற ஒரு அவமானகரமான விஷயம் உலகத்தில் இல்லை என்ற கொள்கை // உண்மைதான் நண்பரே? அருமையான கருத்து!!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. ஒவ்வொரு பதிவுகளிலும் அறிவார்ந்த கருத்துக்கள் (அ) தத்துவக் கருத்துக்கள் (அ) ஆன்மிகக் கருத்துக்கள் இவற்றில் ஏதாவது ஒன்று இயல்பாக பொருந்துமாறு எழுதி வருகிறீர்கள்.அருமை!
    நாவல் மிகவும் விறுவிறுப்பாக போகிறது
    சு விபுலானந்தன்.

    ReplyDelete
  5. A different novel concept in Tamil nicely written. I liked your writing style.

    ReplyDelete
  6. லீ க்யாங் பொறுப்பாளரிடம் கேட்கும் கேள்விகளை படிக்கும் போதே லீக்யாங்கின் துல்லியம் தெரிகிறது...... பொறுப்பாளாரை கையாண்ட விதம் அருமை..... ”வழுக்கை தலையர்” புதிய திருப்பம்

    ReplyDelete
  7. I think ippo 7th time intha novel ah read pandren, ovvoru words um romba rasichi, aazhnthu read pandren sir,, neenga yaaraiyum eh low ah solla maatreenga, ellarkullavum iruka positive ah azhagaa soldreenga,,

    En life ku kedaikkra good qualities ellam pokkisham ah iruku unga writings...

    ReplyDelete