என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, December 22, 2014

விஷத்தையும் உண்ணும் யோகி!


மகாசக்தி மனிதர்கள்-6


ரு யோகியின் சக்திகள் இவ்வளவு தான் என்று முடிவாகக் கூறமுடிவது யாராலும் முடியாத செயல். முழுமையாக யோகக் கலையை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு அவர்களது மனம் தான் எல்லை. மனம் போகிற தூரத்திற்கு அவர்கள் சக்திகளும் நீளும். ஆதிசங்கரர் போன்ற மகா யோகிகள் தங்கள் யோக சக்தியை மனித குலத்தின் நன்மைக்காக பல விதங்களில் பயன்படுத்தி நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றார்கள். அவர் போன்ற மகா யோகிகள் அபூர்வம். பொதுவாக யோகக் கலையில் ஏதாவது ஒரு பகுதியைக் கற்றுத் தேர்ந்து ஓரிரு சக்திகளைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டவர்கள் தான் அதிகமானவர்கள்.

அந்த ஓரிரு சக்திகளே மற்றவர்களை மலைக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். சாதாரண பகுத்தறிவுக்கு எட்டாத அளவுக்கு இருக்கும். அப்படி ஒரு மகாசக்தியைப் பெற்றிருந்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் வாழ்ந்த நரசிங்க சுவாமி.   அவரைப் பற்றியும் ரிஷிசிங் க்ரேவால் விரிவாக எழுதி இருக்கிறார். கல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் பந்தோபாத்யாயா, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் ஆகியோரும் தங்களது நேரடி அனுபவத்தைச் சொல்லி இருக்கிறார்கள்.

முதலில் ரிஷிசிங் க்ரேவாலின் நேரடி அனுபவத்தைப் பார்ப்போம். அவர் நரசிங்க சுவாமியைச் சந்தித்தது 1923 ஆம் ஆண்டில். விஷம் உட்பட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல எதையும் சாப்பிடும் நரசிங்க சுவாமி அக்காலத்தில் இந்தியாவில் மிகப் பிரபலம். அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் தன் சக்தியை அனைவர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டுவதாக ஏற்பாடு ஆகியிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் ரிஷிசிங் க்ரேவால் சென்றிருந்தார்.

அந்த பொது நிகழ்ச்சிக்கு பெரிய அளவு கூட்டம் திரண்டிருந்தது. நரசிங்க தாடி, சுருள்முடி, ஆழமான பார்வை உடைய சுவாமி நடுத்தர வயதினராக இருந்தார். அவருக்கு அருகில் இருந்த மேஜையில் பல திரவ பாட்டில்கள், காகிதப் பொட்டலங்கள் இருந்தன.

நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்பே சென்றிருந்த ரிஷிசிங் க்ரேவால் அந்த பாட்டில்களில் இருப்பது என்னென்ன திரவங்கள் என்று கேட்டார்.

இது கந்தக அமிலம், இது நைட்ரிக் அமிலம், இது ஹைட்ரோ க்ளோரிக் அமிலம், இது பாதரசம், இது கார்போலிக் அமிலம்....என்று நரசிங்க சுவாமி ஒவ்வொரு பாட்டிலாக காண்பித்துக் கொண்டே வந்தார்.  

“இந்தப் பொட்டலங்களில் இருப்பதெல்லாம் என்ன?ரிஷிசிங் க்ரேவால் கேட்டார்.

“இதில் இரும்பு ஆணிகள் இருக்கின்றன. இதில் லாந்தர் விளக்கின் உடைந்த கண்ணாடித்துகள்கள், இதில் சின்னச்சின்ன கற்கள், இதில் நிலக்கரித் துண்டுகள்...என்று நரசிங்க சுவாமி விளக்கினார். ஏதோ பருவநிலை அறிவிப்புகள் போல் அவர் சொல்லிக் கொண்டே வந்தது ரிஷிசிங் க்ரேவாலை ஆச்சரியப்படுத்தியது.

“:இந்த நிகழ்ச்சியில் இத்தனையுமா சாப்பிடப் போகிறீர்கள்?என்று ரிஷிசிங் க்ரேவால் திகைப்புடன் கேட்டார்.

“ஆமாம். நீங்கள் எல்லாம் எப்படி சாப்பாட்டை சாப்பிடுகிறீர்களோ அப்படி நான் இதைச் சாப்பிடுவேன்என்று நரசிங்க சுவாமி சொல்லி விட்டு சிரித்தார்.

நிகழ்ச்சி ஆரம்பமாகியது. நரசிங்க சுவாமி எழுந்து நின்றார். முதலில் பாதரச பாட்டிலை எடுத்து அதைக் கூட்டத்தில் இருப்பவர்களிடம் பார்க்கக் கொடுத்தார். கூட்டத்தில் இருந்த ஆர்வம் மிக்க ஆட்கள் அதை வாங்கி அது நிஜமான பாதரசம் தானா என்று பார்த்து திருப்தி அடைந்து விட்டுத் திருப்பித் தந்தார்கள். நரசிங்க சுவாமி அந்த பாட்டிலில் இருந்த பாதரசத்தை ஒரு ஸ்பூனில் தன் உள்ளங்கையில் ஊற்றி அதை வாயில் போட்டுக் கொண்டார்.   தலையை ஒரு முறை ஆட்டி விட்டு முழுங்கிய அவர் சிறிது தண்ணீரும் குடித்துக் கொண்டார்.  


அடுத்ததாக கந்தக அமிலம் பாட்டில் கூட்டத்தில் இருப்பவர்களிடம் காட்டப்பட்டது. பிறகு நரசிங்க சுவாமி அதையும் தன் கையில் ஊற்றிக் கொண்டு நக்கி சாப்பிட்டார். பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினரில் ஒரு மருந்துக் கடைக்காரரும் இருந்தார். அவர் தன் கடையிலிருந்து கொண்டு வந்திருந்த கந்தக அமிலத்தை நரசிங்க சுவாமி சாப்பிட்டுக் காண்பிக்கத் தயாரா என்று கேட்டு சவால் விட்டார். கூட்டத்தில் சிலர் அந்த மருந்துக் கடைக்காரர் சவாலுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். நரசிங்க சுவாமி சிறிதும் தயங்காமல் அந்த சவாலுக்கு ஒத்துக் கொண்டார்.


அந்த மருந்துக் கடைக்காரர் கொண்டு வந்த கந்தக அமிலம் உண்மையான கந்தக அமிலம் தானா என்பது ஒரு செப்பு நாணயத்தில் ஒரு சொட்டு அமிலம் விட்டு அங்கேயே பரிட்சிக்கப்பட்டது. அங்கிருந்த மருத்துவ நிபுணர்கள் அது கந்தக அமிலம் தான் என்று அங்கீகரித்த பின்னர் நரசிங்க சுவாமி அதையும் தன் உள்ளங்கையில் ஊற்றி பின் சாப்பிட்டார். பின் உள்ளங்கையை கூட்டத்தினரிடம் காட்டினார். உள்ளங்கையில் எந்த காயமும் இருக்கவில்லை.அடுத்தபடியாக நரசிங்க சுவாமி ஒரு கண்ணாடித் துண்டை எடுத்து கூட்டத்தினருக்குக் காட்டி விட்டு அதை வாயில் போட்டுக் கொண்டார். அவர் அதைக் கடித்துப் பொடியாக்கி தன் நாக்கில் இருப்பதைக் காட்டி விட்டு சிறிது தண்ணீரை வாயில் ஊற்றிக் கொண்டு அப்படியே சேர்த்து அதை விழுங்கினார்.   


அடுத்ததாக நைட்ரிக் அமிலம் எடுக்கப்பட்டது. அந்த நைட்ரிக் அமிலத்தை ஒரு கைக்குட்டையில் சில துளிகள் கொட்டி தீய்ந்து போன அந்த்க் கைக்குட்டையை கூட்டத்தினர் பார்வைக்கு நரசிங்க சுவாமி அனுப்பினார். பின் அந்த நைட்ரிக் அமிலத்தையும் தன் கையில் ஊற்றி பின் அதை வாயில் போட்டுக் கொண்டார்.


கூட்டத்தில் இருந்த ஒருவன் “ஏன் எல்லாவற்றையும் கையில் விட்டுக் கொண்டு அப்புறம் சாப்பிடுகிறீர்கள். அதை கையில் ஊற்றாமலேயே அப்படியே வாயில் ஊற்றிக் கொள்ளக் கூடாதா?


அந்தக் கேள்வியும் நரசிங்க சுவாமியை எந்த விதத்திலும் கோபம் மூட்டவில்லை. “தாராளமாக அப்படியும் செய்யலாம்என்றார்.


நைட்ரிக் அமிலத்தை அவர் வாயில் ஊற்ற அந்த மருந்துக் கடைக்காரரே முன் வந்தார். நைட்ரிக் அமிலத்தை அவர் நரசிங்க சுவாமியின் வாயில் நேரடியாகவே ஊற்றினார்.  


அதன் பின்னும் நரசிங்க சுவாமி உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை கூட்டத்தில் சிலரிடம் இருக்கவில்லை. கண்முன் அந்த மனிதர் துடித்துச் சாவதை பார்க்க மனமில்லாமல் அவர்கள் அங்கிருந்து கிளம்பத் தயாரானார்கள். ஆனால் நரசிங்க சுவாமி ஏதோ இனிப்புப் பண்டம் சாப்பிடும் சிறுவன் போல மகிழ்ச்சியுடன் அதைச் சாப்பிட்டு விட்டு தண்ணீர் சிறிது குடித்தார். எல்லோருக்கும் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை.  
 

அடுத்ததாக ஆணிகளையும் கற்களையும் நரசிங்க சுவாமி சாப்பிட்டார். கடைசியாக நாகப் பாம்பின் விஷத்தைச் சாப்பிட்ட நரசிங்க சுவாமி கூட்டத்தில் இருக்கும்  யாராவது உயிருள்ள கடும் விஷப் பாம்புகளைக் கொண்டு வந்தால் அவர்கள் கண் முன்னாலேயே அதைச் சாப்பிடுவதாகவும் சவால் விட்டார்.


கூட்டத்தினர் பேச்சிழந்து போய் அவரைப் பிரமிப்புடன் பார்த்தார்கள். கூட்டம் முடிந்தும் சிலர் தங்கி இருந்து அவருக்கு எதாவது ஆகிறதா என்று பார்த்தார்கள். அவர் பூரண ஆரோக்கியத்தோடு மகிழ்ச்சியாகவே இருந்தார்.
.
ரிஷிசிங் க்ரேவால் மறு நாள் காலை சென்று நரசிங்க சுவாமியைப் பார்த்தார். அப்போதும் நரசிங்க சுவாமி நலமாகவே இருந்தார்.

என்னவொரு ஆச்சரியம் இந்த மனிதர் என்று வியந்த ரிஷிசிங் க்ரேவால் அவரிடம் கேட்டார். “உயிரையே எடுக்கக் கூடிய இத்தனை ஆபத்தான பொருள்களையும், விஷங்களையும் சாப்பிட்டும் நீங்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதெப்படி?


(தொடரும்)

-          என்.கணேசன்    
நன்றி: தினத்தந்தி – 17-10-2014


     

2 comments:

  1. அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  2. ”மனமது செம்மையானால் மந்திரமும் ஜெபிக்க வேண்டாம்” என்பது சொல்லப்பட்டதே மந்திரத்தின் மகிமையை சொல்ல என்பது போல அதிசயங்கள் நிகழ்த்துவது யோகிகள் மனதின் வலிமையை உணர்த்த என்பதாக இந்த பதிவுகள் சொல்லுகின்றன .

    ReplyDelete