சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 20, 2014

பரம(ன்) ரகசியம் – 89


தற்கு மேல் ஈஸ்வர் தாமதிக்கவில்லை. ஹரிராம் தனக்கு அனுப்பியதாய் தோன்றிய ஆபத்து செய்தியையும், தனக்கு இப்போது தெரிந்த காட்சியையும் அவன் பார்த்தசாரதியிடம் தெரிவித்தான். பார்த்தசாரதிக்கு விசேஷ மானஸ லிங்கத்தின் மீதும், அந்த சித்தர் மீதும் கோபம் வந்தது. இப்படி காட்சி காண்பித்து மற்றவர்களைத் திகிலில் ஆழ்த்துவதை விட தாங்களே செய்ய வேண்டியதைச் செய்து விடலாமே....

உடனே பாபுஜியின் இடத்திற்குப் போவது என்ற முடிவெடுத்தவுடன் பார்த்தசாரதி தனக்கு இந்த வழக்கில் உதவும் இரண்டு திறமையான போலீஸ்காரர்களையும் ஆலோசனைக்கு அழைத்தார். நால்வரும் சேர்ந்து ஆலோசித்தார்கள். 

மகேஷ் அந்த இடத்தில் மெயின் கேட்டில் இரண்டு செக்யூரிட்டிகள் தவிர வேறு காவல் இல்லை என்று சொல்லி இருந்தான்.  காவலுக்கு ஆட்களை அதிகம் கூட்டிக் கொண்டே போனால் இந்த விசேஷ மானஸ லிங்கம் பற்றிய விவரங்கள் வெளியே கசிந்து விடும் என்று அவர்கள் பயந்ததாக மகேஷ் தெரிவித்திருந்தான். தாங்கள் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை என்று அவர்கள் நம்பினார்கள் என்றான். ஆட்களுக்குப் பதிலாக வலிமையான நாய்களைத் தருவிக்கலாம் என்று நாய்ப்பிரியரான பாபுஜி ஆசைப்பட்ட போது குருஜி நாய்கள் குரைப்பது தியானத்தைக் குலைக்கும், ஆராய்ச்சிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று தடுத்து விட்டதாகவும் மகேஷ் சொன்னான். அந்த இடத்தில் பாபுஜி, ஜான்சன், அலெக்ஸி, கியோமி, ஹரிராம், கணபதி ஆகியோருடன் வேறு மூன்று வேலையாட்கள் மட்டும் தான் இருக்கிறார்கள், பாபுஜி ஒருவரிடம் தான் துப்பாக்கி உள்ளது, அங்குள்ள காம்பவுண்ட் சுவர் சுமார் எட்டு அடிகள் இருக்கும், பாபுஜி வெளியில் இருந்து தங்களுக்கு வரும் ஆபத்துக்கள் பற்றிய தகவல்கள் சொல்லவும் மற்ற பல வேலைகளுக்கும் தனியார் துப்பறியும் நிபுணர்களைப் பயன்படுத்துகிறார் முதலான தகவல்களை மகேஷ் தெரிவித்திருந்தான்...

ஆலோசித்து கடைசியில் போலீஸ்காரர்கள் ஆறு பேர் தங்களுடன் வந்தால் போதும் என்று பார்த்தசாரதி முடிவெடுத்தார்.

ஈஸ்வர் கேட்டான். “அங்கே பாபுஜியின் ஆள்கள் தான் குறைவே ஒழிய அவர் சொன்னதைச் செய்ய ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஆள்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர் ஒரு போன் செய்தால் போதும் அவர்கள் வந்து விடுவார்கள் என்று மகேஷ் சொன்னானே. நம் ஆட்கள் ஆறு பேர் போதுமா?

பார்த்தசாரதி சொன்னார். “அந்த ஆள்கள் மறைமுகமா அவருக்கு என்ன உதவி வேணும்னாலும் செய்யலாம். ஆனா போலீஸோட நேரடியா மோத வர மாட்டாங்க. அப்படி செஞ்சா அவங்க லைசென்ஸ் கேன்சல் ஆயிடும். அதுக்கப்புறம் அவங்க அந்த தொழிலே செய்ய முடியாது. அதனால அவங்கள பத்தி கவலைப்பட வேண்டியதில்லை.  நம்ம ரெண்டு பேர் கூட ரெண்டு போலீஸ்காரங்க உள்ளே வரட்டும். மத்த நாலு பேர் வெளியே யாரும் தப்பிச்சுடாமல் பார்த்துகிட்டு காவலுக்கு நிக்கட்டும். நமக்கு ஏதாவது பிரச்சினைன்னா மட்டும் அவங்கள்ல ஒன்னு ரெண்டு பேரை உள்ளே கூப்பிட்டுக்கலாம்....

அந்த அவசரத்திலும் ஈஸ்வர் கிளம்பும் முன்னால் நம்பீசன் பற்றிய தகவல்கள் ஏதாவது இருக்கிறதா என்று இண்டர்நெட்டில் சிறிது பார்த்துக் கொண்டு போவது நல்லது என்று நினைத்தான். இப்போதைய ஆபத்து நம்பீசனால் வந்திருப்பதாக இருந்தால் அவரைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்று அவன் உள்ளுணர்வு அவனை எச்சரித்தது.  இணையத்தில் நம்பீசன் பற்றிய தகவல்களைத் தேடினான்.

நவீன காலத்து மந்திரவாதியாக அவர் இணையத்தில் பிரபலமாக இருந்தார். பணத்தில் குறியாக இருப்பவர் என்றாலும் ஏற்றுக் கொண்ட காரியத்தைச் சிறப்பாகச் செய்து கொடுப்பவர் என்ற பெயரையும் அவர் எடுத்திருந்தார். நம்பீசனை சக்தி வாய்ந்த மந்திரவாதி என்று பலரும் சொன்னாலும் சில சில்லறை அபூர்வ சக்திகளை தன் வசப்படுத்திக் கொண்டவர் என்பது மட்டும் ஈஸ்வருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் எந்த மாதிரி இயங்கக் கூடியவர், அவர் சிறப்பு சக்திகள் என்னென்ன, அவரைப் பற்றி மற்றவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டான். அவர் திறமையை நேரில் பார்த்தவர்கள் அவர் என்ன செய்தார் எப்படி செய்தார் என்று வர்ணித்ததை ஈஸ்வர் கவனமாகப் படித்தான். நம்பீசன் பயன்படுத்தும் யுக்திகள் ஈஸ்வருக்குத் தெளிவாகவே புரிந்தன.

அவன் தன் லாப்டாப்பில் நம்பீசனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கையில் பார்த்தசாரதி தன்னுடன் இருந்த போலீஸ்காரர்களில் ஒருவரைத் தனியாக அழைத்துச் சென்று தாங்கள் போன பிறகு மகேஷை ரகசியமாய் கண்காணிக்க ஏற்பாடு செய்யச் சொன்னார்.

அவர்கள் ஒரு போலீஸ் ஜீப், இரண்டு கார்களில் சரியாக இரவு 10.13 மணிக்குக் கிளம்பினார்கள். மூன்று போலீஸ்காரர்களுடன் ஒரு கார் முன்பும், மூன்று போலீஸ்காரர்களுடன் போலீஸ் ஜீப் பின்னாலும் வர நடுவில் சென்ற காரில் பார்த்தசாரதியும் ஈஸ்வரும் இருந்தார்கள். 

மகேஷ் இருந்த ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பிய அவர்கள் தோட்ட வீட்டை நோக்கிச் செல்லாமல் அதற்கு நேரெதிர் திசையில் போக ஆரம்பித்தவுடன் எங்கு செல்கிறார்கள் என்பதை பாபுஜி நியமித்திருந்த துப்பறியும் ஆட்கள் ஊகித்தார்கள். ஒரு மணி நேரத்திற்குள் போலீஸ் அங்கு போய்ச் சேர்ந்து விடலாம் என்பதைத் தெரிவிக்க அவருக்குப் போன் செய்தார்கள். எத்தனை முறை அவர்கள் முயற்சித்தும் “ஸ்விட்ச்டு ஆஃப்”  தகவல் தான் வந்து கொண்டிருந்தது. 


போகும் போது பார்த்தசாரதி தன் சந்தேகத்தை ஈஸ்வரிடம் கேட்டார். “அந்த சிவலிங்கம் சக்தி வாய்ந்த்துன்னு சொல்றீங்க. அப்படி இருக்கறப்ப அது இருக்கிற இடத்துல இந்த நம்பீசன் மாதிரி ஆள்களோட மந்திரவாதம் எல்லாம் எப்படி பலிக்கும்

ஈஸ்வர் சொன்னான். “நேராக மோதாத வரை ஒரு மகாசக்தி அதுக்கு கீழான சக்திகளுக்கு எதிரானதல்ல. பெரும்பாலும் நம்பீசன் தன்னோட மந்திரவாத வேலையை எல்லாம் விசேஷ மானஸ லிங்கம் முன்னாடி உட்கார்ந்து செய்ய மாட்டார். அதுக்கு எதிராகவும் எதுவும் செய்ய மாட்டார்...

இந்த சக்திகள் விஷயத்தில் ஈஸ்வருக்குத் தெளிவான அபிப்பிராயங்கள் இருப்பதாக பார்த்தசாரதிக்குத் தோன்றியது. ஆனால் அவருக்கு அவை நிறையவே குழப்பத்தைத் தந்தன. சரி... ஹரிராமும் சக்தி வாய்ந்தவர்னு சொல்றீங்க. அவர் இப்ப அந்த சிவலிங்கத்துக்கு சம்பந்தப்பட்டவர் போலவும் தோணறார். அப்படி இருக்கிறப்ப அவரையும் மீறி எப்படி நம்பீசனால் ஆபத்தை ஏற்படுத்த முடியும்?

ஈஸ்வர் சொன்னான். “ஒரு மனிதனுக்கு எவ்வளவு சக்தி இருந்தாலும் அவன் அதைப் பயன்படுத்தும் தயார்நிலையில் இருந்தால் தான் அது அவனுக்கு உதவும். அவர் அப்படி தயார்நிலையில் இல்லாமல் கொஞ்சம் அசந்திருக்கலாம். அந்த நேரமாய் பார்த்து நம்பீசன் அவர் மேல் எதாவது சக்திப்பிரயோகம் செய்திருக்கலாம். அப்படி சக்திப்பிரயோகம் மட்டுமல்ல,  எத்தனையோ பலவீனங்கள் நம்மை ஆக்கிரமிப்பதே கூட நாம அசந்திருக்கும் போது தான்.... ஒரு விதையாய் மனசில் விழுந்து மளமளன்னு மரமாய் வளர்ந்து நம்மைப் பாடாய் படுத்தறதெல்லாம் அப்படித் தான். அதனால தான் நம் முன்னோர்கள் ‘முழுமையான விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்காங்க. புத்தமதம், தாவோ மதம் எல்லாத்துக்கும் அது தான் அஸ்திவாரமே!....

பார்த்தசாரதிக்கு ஏதோ புரிகிற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. நம்பீசன் சக்திப்பிரயோகம் செய்திருக்கலாம்னு சொல்றீங்களே அதுல இருந்து ஹரிராம் தன்னை விடுவிச்சுக்கவே முடியாதா?

நம்பீசன் மாதிரி ஆள்களால செய்ய முடிஞ்ச சக்திப் பிரயோகம் குறுகிய காலத்துக்கு தான் சக்தி வாய்ந்ததாய் இருக்கும். சில மணி நேரங்கள்ல இருந்து அதிகபட்சமாய் ஒன்னு ரெண்டு நாள் வரை அந்த சக்தி வேலை செய்யலாம். வேறொரு சக்தி வாய்ந்த ஆளால் அவங்களை விடுவிக்க முடியும். இல்லைன்னா அந்த குறிப்பிட்ட காலம் முடிஞ்சு அது தானாவே அவிழ்ந்துடும். இதுவே உதயன் சுவாமி மாதிரி அதீத சக்தி படைச்ச ஆள்களால ஏவப்படற சக்திப்பிரயோகமாய் இருந்தால் விடுவிச்சிக்கறது சிரமம் தான்....

உதயன் சுவாமியைப் பற்றி ஈஸ்வர் சொன்னவுடன் பார்த்தசாரதிக்கு அந்த பனிமூட்ட சம்பவம் நினைவுக்கு வந்தது. ரிஷிகேசத்தில் இருந்து கொண்டு தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பனிமூட்டத்தை ஏற்படுத்தியது அவர் தான் என்று மகேஷ் சொன்னதாக ஈஸ்வர் அவருக்குத் தெரிவித்திருந்தான். எப்படிப்பட்ட சக்திகளை எல்லாம் நம்மவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று பிரமிப்பாக இருந்தது. அந்த உதயன் சுவாமி குருஜியின் நண்பராம்.... குருஜி மட்டும் மனம் மாறாமல் இருந்திருந்தால் விசேஷ மானஸ லிங்கம் எதிரிகள் வசமாகி இருக்கும் என்று ஈஸ்வர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவரை மனம் மாற வைத்தது கணபதியா, மனசாட்சியா, சேர்த்து வைத்திருந்த ஞானமா இல்லை விசேஷ மானஸ லிங்கமே தானா?..... அவர் எங்கே போய் விட்டார்?

ஸ்வரையும் மந்திரசக்தியால் கட்டிப்போட முயற்சி செய்து கொண்டிருந்த நம்பீசன் அந்த சக்தி போதவில்லை என்பதை உணர்ந்தார். அவர் ஆரம்பத்தில் அவனைப் பார்த்த போது மிகவும் தளர்ச்சியோடு தெரிந்ததால் அதற்கேற்றாற் போல குறைவான சக்தியையே அவர் பிரயோகித்திருந்தார். ஆனால் அந்த சக்தி அவனை சேர்வதற்குள் அவன் சுதாரித்து விட்டிருந்தான். இப்போதோ  ஹோமகுண்டலத்தில் தெரிந்த அந்த வெளி மனிதனின் உருவம் நெருங்க ஆரம்பித்திருப்பதை உணர்ந்தார். அதை பாபுஜியிடம் சொல்லலாம் என்று திரும்பினால் பாபுஜி காணவில்லை.

பாபுஜியை அந்த அறுவரும் பேசச் சொல்லி நச்சரித்து சைகை காட்டிக் கொண்டிருந்ததால் அவர் நம்பீசனைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் தனதறைக்குச் சென்று  அவர்களிடம் சுருக்கமாகப் பேசிவரச் சென்றிருந்தார். அப்படிப் பேசிய போது தான் எகிப்தியர் ஒரு நல்ல செய்தியைச் சொன்னார். அவர்கள் ஆதரிக்கும் அந்த எகிப்திய அரசியல்வாதிக்கு எதிராக தினம் பேசிக் கொண்டிருந்த வேறொரு செல்வாக்கான அரசியல்வாதி இப்போது ஆதரவாகப் பேச ஆரம்பித்து விட்டாராம். இரண்டே பேர் தான் இப்போது இந்த ஆராய்ச்சியில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் முயற்சி ஓரளவு பலனளிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை அறிந்த போது பாபுஜிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

ஜான்சன் தியான மண்டபத்திற்கும், நம்பீசன் ஹோமம் நடத்தும் இடத்திற்குமாக அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்தார். கியோமி, அலெக்ஸி இருவரும் ஆல்ஃபா எட்டு ஒன்பது சிபிஎஸ்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிராம் செயலற்றுப் போயிருந்தாலும், விசேஷ மானஸ லிங்கத்தில் லயிக்க முடியாமல் போயிருந்தாலும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு ஆல்ஃபா ஒன்பதிற்கு வந்து தனிப்பட்ட தியானத்தில் லயிக்க ஆரம்பித்திருந்தார். அவர் மறுபடி ஆழமாக தீட்டா அலைகளுக்கே போனாலும் இந்த ஆராய்ச்சிக்கு எதிராக செயல்பட முடியாது என்பதில் ஜான்சனுக்கு சந்தேகமே இல்லை.

தூரத்தில் வந்து கொண்டிருந்த ஜான்சனைப் பார்த்தாலும் அவரை அழைத்து ஆங்கிலத்தில் தகவல் தெரிவிக்கும் அளவுக்கு நம்பீசனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவரிடம் சொல்ல முயற்சிக்காமல் அந்த வெளி மனிதனை செயலற்றுப் போக வைக்க அதிக சக்தியைப் பிரயோகிக்க ஆரம்பித்தார். பாபுஜி வந்தால் தன் மந்திர சக்தியால் அந்த வெளிமனிதனை இங்கேயே வரவழைத்திருப்பதாகச் சொல்லி அதற்கும் ஒரு தொகை வசூலித்து விடலாம் என்ற எண்ணம் வந்த போது அவரை அறியாமல் அவர் ஹோம குண்டத்தைப் பார்த்துப் புன்னகைத்தார்.

திடீர் என்று ஏதோ ஒரு அன்னிய சக்தி தன்னைத் தீண்ட வருவது போல் ஈஸ்வர் உணர்ந்தான். இந்த ஒரு கணம் கண்டிப்பாக வரும் என்று அவன் முன்பே எதிர்பார்த்திருந்தான். அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஆழ்மனதில் முன்பே ஒரு ப்ரோகிராமும் (program) போட்டிருந்தான். எந்த துஷ்ட சக்தி அவனை நெருங்கினாலும் விசேஷ மானஸ லிங்கத்தின் அருளால் அவனைச் சுற்றி உள்ள ஆரா (aura) மண்டல நிலையிலேயே அது தடுக்கப்பட வேண்டும் என்று வேண்டி அப்படி நடக்க சக்தி வாய்ந்த கற்பனைக் காட்சிகளையும் உருவகப்படுத்தி தோட்ட வீட்டின் பூஜை அறையிலேயே பயிற்சி மேற்கொண்டிருந்தான்.   அந்த ப்ரோகிராம் வேலை செய்தது. அந்த அன்னிய சக்தி அங்கேயே நின்று பலமிழந்து காற்றில் கரைந்தது.

ஈஸ்வர் அருகில் இருந்த பார்த்தசாரதியைக் கூர்ந்து பார்த்தான். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு எதிராக எந்தப் பிரயோகமும் நடக்கவில்லை.... நடந்திருந்தால் அவர் முகத்திலேயே சின்ன வித்தியாசமாவது தெரிய ஆரம்பித்திருக்கும்.

அவரையும் எச்சரித்து வைப்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை அங்கே சென்று விட்ட பிறகு ஏதாவது நெருங்கினாலும் அவர் சுதாரிப்பார்.... இப்படி மகேஷ் மூலம் விஷயம் தெரிந்து அந்த இடத்துக்கு நேரில் போக வேண்டி இருக்கும் என்பது எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு ஆனதால் அவருக்குத் தற்காப்பு ஏற்படுத்த எதாவது செய்ய வேண்டி வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. குறுகிய காலத்தில் எந்த அளவு அவரால் கற்றுத் தேற முடியும் என்பது அவனுக்கு நிச்சயமில்லை....

மெள்ள சொன்னான். “சார், அந்த நம்பீசன் ஏதாவது மந்திரஜாலத்தை நம் கிட்டே கூட காண்பிக்கலாம்....

“என்ன செய்வான்?

“திடீர்னு நம்மைக் கட்டிப் போட ஒரு மந்திரப் பிரயோகம் செய்யலாம். இல்லாட்டி ஏதோ ஒரு துஷ்ட சக்தியை ஏவி நம்மள பயமுறுத்தப் பார்க்கலாம்....

பார்த்தசாரதிக்கு ஆரம்பத்தில் இதில் எல்லாம் நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் இந்த வழக்கிற்கு வந்த பின் எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்று அவருக்குப் புரியவில்லை. “சரி... அப்படி ஏவி விட்டால் நாம என்ன செய்யணும்?

“முதல்ல பயப்படாமல் இருக்கணும். எந்த துஷ்ட சக்தியும் நம்மை ஆட்டிப்படைக்க நாம அனுமதிக்கறதே நம்ம பயத்தாலயும் அது மேல வைக்கிற நம்பிக்கையாலயும் தான். நம்ம பயமும், அந்த நம்பிக்கையும் தான் உண்மையில் அதோட சக்தியாய் மாறிடுது. அது நம்மள ஆட்டி வைக்கிற சக்தியை ஏற்படுத்திக் கொடுத்துடுது... அது மேல இருக்கிற நம்பிக்கையை விட அதிக நம்பிக்கை நம்ம மேலயோ, நாம் நம்பற கடவுள் மேலயோ அதிகமாய் இருக்கணும். அதனால நீங்க சக்தி வாய்ந்ததா நினைக்கிற சாமி உங்களைக் காப்பாற்ற கூடவே இருக்கிறதா நினைச்சு அந்த சாமி பேரை ஜபிக்கலாம்.... ஏதாவது விசித்திரமான, பயங்கரமான உருவமோ, சக்தியோ நம்மை அணுகற மாதிரி இருந்தா அதுக்கு பெரிய முக்கியத்துவம் தந்துடக் கூடாது. குழந்தைகள் பூச்சாண்டி முகமூடி போட்டுகிட்டு நம்மள பயமுறுத்த வர்ற மாதிரி நினைச்சுகிட்டு கண்டுக்காமல் போய்கிட்டே இருக்கணும்...

பார்த்தசாரதி தலையசைத்தார். சொல்கிற விஷயங்களை இவனுக்கு எளிமையாகச் சொல்லத் தெரிகிறது. நிறைய அறிவாளிகளுக்கு இப்படி எளிமையாகச் சொல்லத் தெரிவதில்லை. புரியாதபடி பெரிய பெரிய வார்த்தைகளைக் கொட்டி தங்கள் அறிவின் ஆழத்தைக் காண்பிக்க முயற்சிப்பார்களே ஒழிய அடுத்தவனுக்குப் புரிய வேண்டும் என்று நினைப்பதில்லை. புரிந்து விட்டால் சொல்பவன் அறிவைப் பார்த்து பிரமிக்க மாட்டார்கள் என்ற எண்ணமும் அதன் பின்னால் இருக்கலாம்....

ஈஸ்வர் சொன்னான். இதெல்லாம் உடனடியா நமக்கு இயல்பா வந்துடாது. மனசுல பயிற்சி செய்துக்கறது நல்லது.... எதுக்கும் நம்ம கூட உள்ளே வர்ற உங்க ஆள்கள் கிட்டயும் சொல்லிடுங்க....

பார்த்தசாரதிக்கு அவன் நல்ல எண்ணத்திலேயே சொல்கிறான் என்பது புரிந்தாலும் தன்னையோ தன் ஆட்களையோ யாரும் எதுவும் பயமுறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனாலும் அவன் சொல்லச் சொன்னதை அப்படியே தங்களுடன் உள்ளே வரவிருக்கும் தங்கள் ஆட்களிடமும் போனில் சொல்லி விட்டு, எதற்கும் இருக்கட்டும் என்று தன் இஷ்ட தெய்வமான திருவரங்கத்தானை அவர் சிறிது நேரம் ஜபித்தார்.  அவனைப் பார்த்த போது அவன் முகத்தில் அமைதியும் அசாத்திய உறுதியும் தெரிந்தது. ஒன்றரை மணி நேரத்திற்கு முன் குமுறிக் குமுறி அழுதவனா இவன்? இப்போது அந்த துக்கங்களின் சாயல் கூட இல்லையே என்று அவர் வியந்தார்.

உண்மையில் ஈஸ்வர் தன் மனதில் இருந்த அத்தனை துக்கங்களையும், அத்தனை கவலைகளையும், சந்திக்க வேண்டி உள்ள மற்ற பிரச்சினைகளையும் அந்தக் கணத்தில் ஒதுக்கி வைத்திருந்தான். அவற்றை எல்லாம் அவன் மறுக்கவில்லை. ஆனால் இந்த அதிமுக்கியமான நேரத்தில் அசை போட வேண்டிய விஷயங்கள் அல்ல அவை. சிதறுகின்ற மனம் பலவீனமான மனம். அது அவனுக்கு எதிரியாக மாறி விடும்... அமைதியாக காரின் ஜன்னல் வழியே அவர்களுடனேயே பயணம் வந்து கொண்டிருந்த அழகான முழுநிலவை ரசித்துப் பார்த்தான். விஷாலி நினைவுக்கு வந்தாள். மற்ற சந்தர்ப்பங்களாக இருந்திருந்தால் அவள் நினைவை அவன் தொடர்ந்திருப்பான். இப்போது அவளையும் ஒதுக்கி விட்டு இன்று ஆக வேண்டிய செயல்களில் கவனம் செலுத்தினான்...

இந்த பௌர்ணமி இரவு மிக முக்கியமாக இருக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. அவனுக்குத் தோன்றிய காட்சி அதைத் தான் தெரிவித்திருக்கிறது. முன்பு ஒரு முறை வந்த காட்சியில் கணபதியும், சிவலிங்கமும், விழுவது போலத் தான் தெரிந்தது. இந்த முறை ஹரிராமும் சேர்ந்திருக்கிறார். அவன் சிறிது சோர்ந்தாலும் அவனும் அந்த வீழ்ச்சியில் சேர்ந்து விட வேண்டி இருக்கும். ஏனென்றால் அவன் அந்த விசேஷ மானஸ லிங்கத்துடனும், மற்ற இருவருடனும் சம்பந்தப்பட்டவன்..... இதற்கு முன் தெரிந்த காட்சியில் காலம் காட்டப்படவில்லை. ஆனால் இன்று தெரிந்த காட்சியில் காலம் காட்டப்பட்டுள்ளது. பௌர்ணமி அன்று அது நடைபெறப் போகிறது, முந்திக் கொள், ஏதாவது செய், உன் சொந்தக் கவலைகளில் மூழ்கி செயலற்றுப் போய் விடாதே என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அவன் சித்தரையும், பசுபதியையும் மனதார வணங்கினான். அந்த விசேஷ மானஸ லிங்கத்தை உருவாக்கி தொழுத அத்தனை முகம் தெரியாத சித்தர்களையும் வணங்கினான். கடைசியில் விசேஷ மானஸ லிங்கத்தை மனதில் நிறுத்தி வணங்க ஆரம்பித்தான்....

ம்பீசனின் புதிய ஹோம குண்டத்தில் அக்னி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. ஹோமத்தை ஆரம்பிக்கும் போது தளர்ச்சியாக இருந்த அந்த வெளியாள் பிறகு நன்றாகவே சுதாரித்து விட்டான். அவருடைய ஆரம்ப அஸ்திரத்திற்கு அவன் அசையவில்லை. தற்போது அதிக பலமும் பெற்று வருவதாகத் தோன்றியது. அவர் மணியைப் பார்த்தார். மணி 11.00. இன்னும் சரியாக 42 நிமிடங்கள் கழிந்தால் பௌர்ணமியும் கழிந்து விடும். அவன் சக்தியும் வடிந்து விடும். அது வரை தாக்குப் பிடித்தால் போதும். அவர் பின்னால் திரும்பிப் பார்த்த போது பாபுஜி நின்றிருந்தார். அவரிடம் நம்பீசன் தற்போதைய நிலவரத்தைச் சொன்னார்.

ஈஸ்வரின் வருகை பற்றித் தெரிந்தவுடன் பாபுஜி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார். நம்பீசன் நம்பிக்கையோடு சொன்னார். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போடலை. அவனை அழிக்கிற பெரிய அஸ்திரம் என் கிட்ட இருக்கு....

பாபுஜி அலறினார். “ஐயோ அவன் தனி ஆளாய் வர மாட்டான். கூட போலீஸும் வரும்

நம்பீசன் சொன்னார். “போலீஸ் அல்ல ராணுவமே வந்தாலும் அவங்களை அலறி ஓட வைக்கிற அஸ்திரம் என் கிட்ட இருக்கு. அதுக்கு கொஞ்சம் பணம் செலவாகும்....

“எத்தனை?

“பத்து லட்சம் குடுங்க போதும்....என்று சொல்லி அவரையே நம்பீசன் பார்க்க பாபுஜி அழாத குறையாகச் சொன்னார். “அந்தப் பணத்தை இப்பவே அனுப்ப ஏற்பாடு செய்யறேன். பணம் வந்து சேர்ந்த தகவலுக்காக காத்திருக்காமல் உடனடியாய் நடக்க வேண்டியதைப் பாருங்கள். ப்ளீஸ்...

சொல்லி விட்டு அவர் நம்பீசனுக்குப் பணம் அனுப்ப கட்டளை பிறப்பிக்க நம்பீசன் செல்போனை எடுத்த போது தான் துப்பறியும் ஆட்களின் மிஸ்டு கால்களைப் பார்த்தார். ஈஸ்வர் வருகிறான் என்பதைத் தெரிவிக்கத் தான் போன் செய்திருப்பார்கள். பாபுஜி அவர்களிடம் போனில் பேசினார்.

ஈஸ்வர் பார்த்தசாரதியுடன் ஆறு போலீஸ்காரர்கள் வருகிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால் ராணுவமே வந்தாலும் கவலை இல்லை என்று சொன்ன நம்பீசனை அவர் மலை போல் நம்பினார். உடனடியாக அவருக்குப் பணம் அனுப்பக் கட்டளை இட்டு விட்டு பாபுஜி பரபரப்புடன் காத்திருந்தார். கூடவே  இந்த நம்பீசனையே முழுவதும் நம்பி இருக்காமல் வேறு சில கறுப்புப் பூனைகளையும் துணைக்கு அழைத்திருக்கலாமோ என்றும் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் அதற்கு இப்போது நேரமும் இல்லை.... “பாவி மகேஷ்... அவனை உயிரோடு வெளியே விட்டே இருக்கக்கூடாது....


அதே நேரத்தில் நம்பீசன் சில கோர சக்திகளை  உதவிக்கு அழைக்க ஆரம்பித்தார். அந்தத் தீயில் விபரீத உருவங்கள் தெரிய ஆரம்பித்தன.

(தொடரும்)

என்.கணேசன்

6 comments:

  1. விஷ்ணுMarch 20, 2014 at 7:29 PM

    புத்தகமாகப் படித்த பின்னும் வியாழன் தோறும் தங்கள் ப்ளாக் பக்கம் இழுக்கிறது பரம(ன்) ரகசியம். வழக்கம் போல் பரபரப்புடன் போகிறது.

    ReplyDelete
  2. அற்புதமான படைப்பிற்கு நன்றி திரு என்.கணேசன் !!!!

    ReplyDelete
  3. துஷ்ட சக்தியும் கூட நம் அனுமதியின்றி நம்மிடம் செயல்படாது என்று விளக்கிய விதம் அருமை.
    பார்த்தசாரதி ஈஸ்வரை பற்றி நினைத்து வியப்பது போல் நாங்களும் உங்கள் எழுத்துக்களையும் புரிய வைக்கும் விதத்தையும் பார்த்து வியக்கிறோம்.
    #சொல்கிற விஷயங்களை எளிமையாகச் சொல்லத் தெரிகிறது. நிறைய அறிவாளிகளுக்கு இப்படி எளிமையாகச் சொல்லத் தெரிவதில்லை. புரியாதபடி பெரிய பெரிய வார்த்தைகளைக் கொட்டி தங்கள் அறிவின் ஆழத்தைக் காண்பிக்க முயற்சிப்பார்களே ஒழிய அடுத்தவனுக்குப் புரிய வேண்டும் என்று நினைப்பதில்லை. புரிந்து விட்டால் சொல்பவன் அறிவைப் பார்த்து பிரமிக்க மாட்டார்கள் என்ற எண்ணமும் அதன் பின்னால் இருக்கலாம்.#

    ReplyDelete
  4. அன்புக்குரிய வலைப்பூ நண்பர்களுக்கு,
    பெண்மை.காம் என்பது உலகஅளவில் சுமார் 75000 உறுப்பினர்களை கொண்ட தமிழர்களுக்கான வலைப்பூ ஆகும்.
    இந்த வலைப்பூவில் " பிரபலங்களுடன் கலந்துரையாடல்" ( Penmai's Celebrity Talk Show ) என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    இம்முறை நம் விழிப்புணர்வு எழுத்தாளர் என்.கணேசன் அவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.( Lets have a Talk Drive with En.Ganeshan!! )
    கீழே கொடுக்கபட்டிருக்கும் லிங்கின் மூலம் பெண்மை.காம் உறுப்பினர்களின் கேள்விகளையும் எழுத்தாளரின் சுவையான பதில்களையும் படிக்கலாம்.
    Page 1 - http://www.penmai.com/forums/fans-club-others/67615-lets-have-talk-drive-en-ganeshan.html
    page 2 - http://www.penmai.com/forums/fans-club-others/67615-lets-have-talk-drive-en-ganeshan-2.html
    Page 3 - http://www.penmai.com/forums/fans-club-others/67615-lets-have-talk-drive-en-ganeshan-3.html
    Page 4 - http://www.penmai.com/forums/fans-club-others/67615-lets-have-talk-drive-en-ganeshan-4.html
    Page 5 - http://www.penmai.com/forums/fans-club-others/67615-lets-have-talk-drive-en-ganeshan-5.html

    By,
    https://www.facebook.com/groups/nganeshanfans

    ReplyDelete
  5. திகிலுடன் தொடர் .

    ReplyDelete