சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 13, 2014

பரம(ன்) ரகசியம் – 84

ரிராமிற்கு ஈஸ்வரின் கேள்வி மனதைத் திரும்பத் திரும்ப தாக்கிக் கொண்டிருந்தது.  “நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இது வரைக்கும் ஒருத்தரையாவது நேசிச்சிருக்கீங்களா?

அவர் உயிருக்குயிராக நேசித்த காதல் மனைவி ஒரு குறைப்பிரசவத்தில் குழந்தையுடன் இறந்த பிறகு அவர் யாரையும் நேசித்ததில்லை. அவர் நேசம் என்றால் வலி என்று அர்த்தப்படுத்திக் கொண்டு விட்டார். பார்த்த இடங்களில் எல்லாம் அது சரி என்பதற்கான காரணங்களும் அவருக்குக் கிடைத்தன. கற்ற தியானமும், பெற்ற அபூர்வ சக்திகளும் கூட அவர் மனக்காயத்தை ஆற்றியதில்லை. அபூர்வ சக்திகள் வேறு, மன நிம்மதி என்பது வேறு. அந்த அபூர்வ சக்திகள் பக்குவத்தை வரவழைத்ததில்லை. உள்ளே இருந்த ஒரு வெறுமையை நிறைத்ததில்லை. தற்கொலை முயற்சியிலிருந்து அவரைக் காப்பாற்றி அவருக்குக் குருவாக இருந்த சாதுவிடம் பல காலம் கழித்து அவர் ஒரு முறை கேட்டிருக்கிறார். என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? என்னை சாக விட்டிருக்கலாமே?

“வந்த வேலை முடியாமல் யாரும் சாக முடியாது?

“நான் வந்த வேலை என்ன?

அந்த சாது சின்ன முறுவலுடன் பதில் சொன்னார். “அதை வரண்ட மனதில் நீ தெரிந்து கொள்ள முடியாது. மனதில் ஈரம் வேணும். நேசம் வேணும். உன் மனைவி, குழந்தைன்னு நெருக்கமான மனுஷங்க மேல மட்டும் வர்ற நேசம் அல்ல... எல்லார் மேலயும் வர்ற ஆத்மார்த்தமான நேசத்தை சொல்றேன்.  அந்த நேசம்னா என்னன்னு ஒரு நாள் புரியறப்ப உன் வேலை என்னன்னு தெரியும். உன் வாழ்க்கையோட அர்த்தமும் உனக்குப் புரியும்.

ஆண்டுகள் பல போய், வயது கூடிக் கொண்டே வந்த போதும் ஹரிராமிற்கு கடவுள் உட்பட யாரிடமும் அந்த நேசம் ஏற்பட்டதில்லை. கணபதி தான் அந்த நேசத்தை அடையாளம் காட்டினான். அவருடைய குரு சொன்ன ஈரத்தை அடையாளம் காட்டினான். அவனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டிருந்தது. ஆனால் அவர் அவனையும் நேசிக்க ஆரம்பித்து விடுவோமோ என்று பயந்தார். அந்தப் பயத்தை ஈஸ்வர் அடையாளம் கண்டு கொண்டு தான் கேட்கிறானா இல்லை கல்நெஞ்சக்காரன் என்று முடிவு செய்து விட்டே கேட்கிறானா?

ஈஸ்வரிடம் கருத்துப் பரிமாற்றத்திலேயே அவர் கேட்டார். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இது வரைக்கும் ஒருத்தரையாவது நேசிச்சிருக்கீங்களான்னு கேட்டீங்களே ஏன்?

ஈஸ்வருக்கு குருஜியின் அதிசய மனமாற்றம் பெருத்த மனநிம்மதியை ஏற்படுத்தி இருந்தது. கணபதியைத் தவிர வேறு யாராலும் குருஜியை மாற்றி இருக்க முடியாது என்று ஈஸ்வர் நம்பினான். கணபதியின் கள்ளங்கபடமில்லாத தன்மையும், அவனது அசைக்க முடியாத நம்பிக்கையுமே குருஜியின் அதிரடி மாற்றத்திற்குக் காரணம் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. கொலை கூடச் செய்யத் துணிந்த ஒரு மனிதருக்கு, ஒரு நல்லவனின் நம்பிக்கையைக் கொல்ல மனம் வராமல் போனது மானுடத்தின் வெற்றியே என்று அவன் நினைத்தான்.

ஹரிராமின் கேள்வி மனத்திரையில் வந்து விழ அவன் பதிலளித்தான். “கடவுள் புண்ணியத்துல குருஜி மனம் மாறினதால கணபதி தப்பிச்சான். இல்லாட்டி அவன் நிலைமை என்ன ஆயிருக்கும்னு யோசிச்சீங்களா? பச்சைக் குழந்தை மாதிரி அவன். அவனைத் தடுத்து நிறுத்தி காப்பாத்தணும்னு தோணலையே உங்களுக்கு

யாரையும் யாரும் காப்பாத்தணும்னு இல்லை. அந்த வேலையைக் கடவுள் பார்த்துக்குவார். அதுவும் விசேஷ மானஸ லிங்கத்தைத் தொட்டு சுமந்துட்டு வர முடிஞ்சவன் அவன்....

கடவுள் கிட்ட நல்லவங்களுக்கு எப்பவுமே பாதுகாப்பு உண்டு. ஆனா மனுஷ ரூபத்துல சில மிருகங்கள் உண்டு. அதுக கிட்ட இருந்து நம்மளை மாதிரி ஆளுங்க தான் நல்லவங்களை காப்பாத்தணும். கடவுள் அவங்களை நமக்கு அறிமுகப்படுத்தறதே அதுக்காகத் தான்  

ஹரிராம் மௌனமாக இருந்தார். அவர் தன் மனைவி, குழந்தை மரணத்திற்குப் பின் யார் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள விரும்பியதில்லை.  தன் வாழ்க்கையே பாரமாக இருக்கையில் வேறு மனிதர்களின் பாரங்களை சுமக்க முடியுமா என்ன?  அவனுடைய குருவான சாது அதைத் தான் ஒரு குறையாக நினைத்தாரோ? மனதில் ஈரம் வேணும். நேசம் வேணும்.... எல்லார் மேலயும் வர்ற ஆத்மார்த்தமான நேசம் உனக்கு வரும் போது வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்று சொன்னாரே, அதையே தான் இவனும் சொல்கிறானோ?..
                                                           
இவன் சொல்வது போல் குருஜி மனம் மாறாமல் கணபதிக்கு மூளைச்சலவை செய்திருந்தால் என்ன ஆகி இருந்திருக்கும். குருஜி மனதில் ஓடிய எண்ணங்களைப் பார்த்த போது தான் அவருக்கு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்று புரிந்தது. தீமையை எல்லாம் நன்மை என்று தன் வாக்கு சாமர்த்தியத்தால் குருஜியால் கணபதியை நம்ப வைத்திருக்க முடியும். அவனை அவர்கள் பின் எப்படியும் பயன்படுத்தி இருக்க முடிந்திருக்கும். ஒரு அழகான, புனிதமான கற்புள்ள பெண்ணை வேசியாக்குவது போல் அது.... நினைக்கவே மனம் பதறியது...

கணபதி “எங்க சிவன் எப்படிங்க? பரவாயில்லையா?  என்று கேட்டது நினைவுக்கு வந்தது. சோமாலியக் கொள்ளைக்காரர்களுக்கு அம்மா எல்லாம் இருப்பாங்க இல்லையா? அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும்னு நினைக்கறப்ப அழுகையா வருதுஎன்று சொன்னதும், “எல்லாரும் நல்லா சந்தோஷமாயிருக்கணும்னு கேட்டா என்ன குருஜி?என்று கேட்டதோடு மனதில் ‘ தனித்தனியாய் ஒவ்வொருவரும் கேட்பதை விட இப்படி எல்லாரும் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று கேட்பது நல்லதுஎன்று நினைத்ததும் நினைவுக்கு வந்தது.

அதோடு சற்று முன் குருஜியிடம் அவன் அழுது சொன்ன வார்த்தைகளும், குருஜி அதற்குக் கட்டுப்பட்ட விதமும், அவன் அங்கிருந்து கிளம்பிய பின் அவன் நின்ற இடத்தை குருஜி தொட்டு வணங்கியதும் ஹரிராமின் வறண்ட இதயத்தைப் பெரிதும் ஈரப்படுத்தின.....

“நான் சொன்னதை அண்ணன் கிட்ட சொல்லிட்டீங்களா?என்று கணபதி அவரிடம் கேட்டு அவர் நினைவலைகளைத் தடுத்தான். ஹரிராம் ஈஸ்வரைப் பார்க்க, கணபதி குருஜி கெட்டவருன்னு அண்ணன் சொன்னது தப்பு என்று சற்று ஆவேசமாகவே சொன்னதை ஆமாம் என்று ஈஸ்வர் முழு மனதுடன் ஒத்துக் கொண்டான். மன்னிச்சுக்கோ கணபதி. எனக்கு அவரை சரியா தெரியலை

“அது பரவாயில்லை அண்ணா. தெரிஞ்சு யாராவது மத்தவங்களைத் தப்பா நினைப்பாங்களாஎன்று கணபதி பெருந்தன்மையுடன் சொல்ல புன்னகைத்த ஈஸ்வர் இனி என்ன செய்வது என்று யோசித்தான்.

குருஜியின் குறுக்கீடு இனி இருக்காது என்பது உறுதியாகி விட்டது. ஆனால் மற்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்பது குருஜி பேச்சில் இருந்து புரிந்தது. இனி நடக்க இருக்கும் ஆராய்ச்சி வில்லங்கமான ஆராய்ச்சியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் குருஜியே அவர்கள் சொல்கிறபடி கேட்காதே என்று கணபதியிடம் கூறி இருக்கிறார்.  அவர்களைத் தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஈஸ்வர் யோசித்தான். அது போன்ற கவலை எதுவுமில்லாமல் கணபதி அந்தப் பட்டு வேஷ்டி பிள்ளையாருக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான். ஈஸ்வருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

விசேஷ மானஸ லிங்கத்தை மனதில் நினைத்துக் கொண்டு சொன்னான். “இவன் கவனத்தை என் பக்கம் திருப்புவதே அடிக்கடி கஷ்டமாய் இருக்கிறது. இந்த லட்சணத்தில் இவனுடன் சேர்ந்து இன்னொருவனை வேறு தேடச் சொல்கிறார் சித்தர். வேடிக்கையாயில்லை?

விசேஷ மானஸ லிங்கம் திடீர் என்று ஒளிர்ந்து மறைந்து ஹரிராம் மட்டுமே ஒரு கணம் தெரிந்தார். அந்த மூன்றாவது ஆள் இவர் தானோ? எதிலும் ஒட்டாமல் சிந்தனை வசப்பட்டு நிற்கும் இந்த மனிதர் கணபதியைத் தடுத்து நிறுத்தச் சொன்ன போது கூட அசையாதவர் ஆயிற்றே!  இந்த மனிதர் யார் என்று கூடத் தெரியவில்லையே! கணபதியிடம் கேட்க நினைத்தான்.

கணபதியை மூன்று முறை அழைத்த பிறகு தான் அவன் கவனம் ‘கனவில் வந்திருக்கும் ஈஸ்வர் அண்ணாமீது திரும்பியது. “யார் அவர்?

ஓ...இவரைக் கேட்குறீங்களா? இவர் தான் சிவனை ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறவங்கள்ல ஒருத்தர். பேரு... பேரு...அவனுக்கு அவர் பெயர் நினைவில் வரவில்லை. “உங்க பேர் என்னங்க?என்று கேட்டு விட்டு ஈஸ்வருக்குத் தெரிவித்தான். “ஹரிராம்.

எதிரணியில் ஆராய்ச்சிக்கென்று அழைத்து வரப்பட்டவர் என்று அறிந்ததும் ஈஸ்வருக்கு  சந்தேகம் தலை தூக்கியது. அவரையே கூர்ந்து பார்த்தான். அவரை எடை போடுவது சுலபமாக இல்லை. ஆனால் எதிரணியில் இருந்த போதும் அவர் எதிரியாக இருக்க சாத்தியமில்லை என்றும் தோன்றியது. ஓலைச்சுவடி வார்த்தைகள் படி தூங்காமல் தேடும் போது அல்லவா அவர் கிடைத்திருக்கிறார்.

கணபதி மனத்திரையில் அந்தப் பட்டு வேஷ்டியை தன் பிள்ளையாருக்கு சார்த்தி மறுபடி அழகு பார்க்க ஆரம்பித்திருந்தான். கணபதியையே பார்த்துக் கொண்டிருந்த ஹரிராம் அதை ரசிப்பது போல் தெரிந்தது. நேசமே இல்லாதவர் என்று குற்றம் சாட்டியது தவறோ என்று தோன்ற ஈஸ்வர் அவரிடம் மன்னிப்பு கேட்டான்.

அவன் எண்ணை அலைகள் வந்து சேர்ந்தவுடன் ஹரிராம் தன் பார்வையை கணபதியிடம் இருந்து ஈஸ்வரிடம் திருப்பினார். நீங்கள் கேட்டதுல தப்பே இல்லை. நான் பதில் சொல்லாதது தான் தப்பு... ஒரு காலத்துல ஒரு பொண்ணை உயிருக்குயிராய் நேசிச்சிருக்கேன்....ஹரிராமிற்குத் தன்னைப் பற்றி சொல்லத் தோன்றியது. சொன்னார்.

ஈஸ்வருக்கு அவரைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் மீது நம்பிக்கை பிறந்தது. அந்த மூன்றாவது ஆளாக இவர் இல்லா விட்டாலும் கூட எதிரியல்ல என்று நம்பத் தோன்றியது. விசேஷ மானச லிங்கத்தை மானசீகமாக நினைத்து வணங்கி விட்டு ஈஸ்வர் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னான்.

இதற்குள் கணபதி அங்கேயே சுவரில் சாய்ந்து உட்கார்ந்து உறங்க ஆரம்பித்திருந்தான்.

ஹரிராமிற்குத் தன்னை அந்த மூன்றாவது மனிதனாக நினைக்க முடியவில்லை. ஆனால் அவருக்கு அவருடைய குரு சொன்ன அந்த வேளை வந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

ஈஸ்வர் இனி அந்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாகத் தொடரக் கூடாது. விசேஷ மானஸ லிங்கத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது, அதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அது மனித சமுதாயத்திற்கே அவர் செய்ய முடிந்த பெரிய உதவியாக இருக்கும் என்று சொன்னான்.

ஹரிராம் யோசித்தார். இந்த ஒரு வேலைக்காகத் தான் அவர் இது வரை உயிர் வாழ வேண்டி வந்ததோ? நேசத்தை அவருக்கு கணபதி புரிய வைத்தான். அர்த்தம் இல்லாத வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஈஸ்வர் சொல்லித் தருகிறானோ?... ஹரிராம் சொன்னார். “நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க  

ரொம்ப நன்றி. இனி அவர்கள் விசேஷ மானஸ லிங்க சக்திகளுடன் லயிக்கக் கூடாது. அவர்கள் செய்யச் சொல்கிற ஆராய்ச்சியில் இருந்துகிட்டே அவர்களுக்கு எதிராக அதை நீங்கள் செய்யலாம். விசேஷ மானஸ லிங்கத்திற்கும் அவர்களுக்கும் நடுவே ஒரு தடுப்பு சக்தியை உருவாக்கலாம். அது உங்களுக்கு கஷ்டமில்லை. உங்கள் சப்ஜெக்ட் தான் அது

ஹரிராம் தலையசைத்தார்.

ஈஸ்வர் “கணபதிஎன்றழைத்து கவனத்தை அவன் பக்கம் திருப்பிய போது தான் அவன் உறங்குவதைக் கவனித்தான்.  சிரித்துக் கொண்டே எழுப்பினான். “கணபதி... கணபதி...

“ஐயோ இந்த அண்ணன் என்னை ஏன் தூங்கவே விட மாட்டேன்கிறார்...என்று சிறிது சலித்துக் கொண்டே கணபதி விழித்தான்.

சோமாலிய கடல் கொள்ளைக்காரர்கள் ஆராய்ச்சியில் மற்ற மூன்று பேரை விட ஜோராக சிவனின் ருத்ர தாண்டவத்தைக் கற்பனை செய்த கணபதியின் கற்பனைக்குத் தகுந்த மாதிரி அவர்கள் படகும் அவர்களும் சூறாவளியில் சிக்கி ஆடி படாதபாடு பட்டதை நினைத்துப் பார்த்த ஈஸ்வர் அடுத்த நாள் ஆராய்ச்சியில் என்ன செய்ய வேண்டும் என்று கணபதிக்குச் சொல்லித் தந்தான்.

றுநாள் ஆராய்ச்சிக்கு எகிப்தின் தேர்தலில் ஜனாதிபதியாக நிறுத்தப்பட உத்தேசித்த நபரின் புகைப்படம் வழங்கப்பட்டது. அந்த நபரின் செல்வாக்கை அதிகரிக்கச் சொன்னார்கள். இன்னும் மூன்று நாள்களில் நடக்க இருக்கும் கருத்துக் கணிப்பில் அது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னார்கள். கணபதியை அவர்கள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. மற்ற மூவரைத் தான் அவர்கள் அதிகம் நம்பினார்கள். ஆனால் தியான மண்டபத்திற்கு குருஜி வரவில்லை.

ஜான்சன் பாபுஜியைக் கேட்டார். “என்னாச்சு?

பாபுஜி குருஜியின் அறைக்கு விரைந்தார். குருஜி ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். “குருஜி நேரமாயிடுச்சு. கவனிக்கலையா?

குருஜி பழைய குருஜியாகத் தெரியவில்லை. ஒரே நாளில் பல வயது கூடினது போலத் தெரிந்தார். என்ன ஆச்சு குருஜி

குருஜி களைப்புடன் சொன்னார். “என்னவோ மாதிரி இருக்கு. இன்னைக்கு தியானம் எனக்கு கைகூடும்னு தோணலை. அதனால் தான் வரலை. நீங்க அதை ஆரம்பிச்சுக்கோங்க. மத்தவங்க எல்லாம் இருக்காங்க தானே

தலையசைத்த பாபுஜிக்கு ஏமாற்றமாக இருந்தது. “ரெஸ்ட் எடுத்துக்கோங்க. குருஜி என்று சொல்லி விட்டு தியான மண்டபத்திற்கு வந்து ஜான்சனிடம் விஷயத்தைச் சொன்னார். ஜான்சனுக்கும் ஏமாற்றமாகத் தான் இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் வெறும் மூன்று பேரை வைத்துத் தானே ஆராய்ச்சியை நடத்துவதாக இருந்தது, பின்பு தானே குருஜியும் அதில் சேர்ந்தார் என்ற நினைவு வர, அது பெரிய விஷயமில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆராய்ச்சி ஆரம்பமானது. முந்தைய நாளைப் போலவே அவரவர் இடத்தில் அமர்ந்து கொண்டு ஆரம்பித்தார்கள்.  ஈஸ்வர் அதே நேரத்தில் தோட்ட வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு ஆரம்பித்தான். சிவனுக்கும், கியோமி அலெக்ஸுக்கும் நடுவே ஒரு தடை எழுப்ப வேண்டும் அதனால் நடுவே ஒரு நந்தி இருப்பதாகவும் அவர்களுக்கு அது சிவனை மறைப்பதாகவும் எண்ணிக் கொள்ள ஈஸ்வர் கணபதியிடம் சொல்லி இருந்தான். கணபதிக்கு அதில் சிறிதும் சிரமம் இருக்கவில்லை. நந்தனாருக்கு நந்தி சிவனை மறைத்து நின்ற கதையை அவன் படித்திருக்கிறான். அந்த நந்தி பிரம்மாண்டமாக அலெக்ஸி, கியோமி முன்னால் வளர்ந்து கொண்டே போவது போல தத்ரூபமாக நினைக்க ஆரம்பித்தான்.  

ஹரிராம் ஆல்ஃபா தீட்டா அலைகளுக்கு வந்து முன்பே கற்றிருந்த மந்திரக் காப்புத் தடுப்புச் சுவரை எழுப்ப ஆரம்பித்தார். இந்த சக்திகளில் மற்ற இருவரை விட நன்றாகவே முன்னேறி இருந்த காரணத்தால் அவர்கள் இருவரும் அறிந்து விடாதபடி அதை ரகசியமாய் அவரால் செய்ய முடிந்தது. ஈஸ்வர் அங்கிருந்தபடியே ஒரு பெரிய திரையை விசேஷ மானஸ லிங்கத்திற்கு முன்பு உருவகப்படுத்திக் கொண்டிருந்தான்.

அலெக்ஸியும் கியோமியும் ஆல்ஃபா அலைகளுக்குப் போன போது விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகள் அகப்படவில்லை. அவர்கள் அலைகள் பாதியிலேயே ஏதோ ஒன்றில் இடித்துக் கொண்டு நிற்பது போல அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் எத்தனை தான் முயன்றாலும் அதைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.

ஏமாற்றத்துடன் அவர்கள் தியானத்தில் இருந்து மீண்டு வந்து ஜான்சனிடம் சொன்னார்கள். அவர்கள் சொல்லும் போது ஹரிராமும் சேர்ந்து கொண்டு அதையே சொன்னார். ஜான்சன் EEG மெஷின்கள் பதித்து இருந்த அலைகளை மகேஷிடம் மறுபடியும் சரி பார்த்து சொல்லச் சொன்னார். மகேஷ் பார்த்துச் சொன்னான். அலெக்ஸியும், கியோமியும் ஆல்ஃபா அலைகள் எட்டு சிபிஎஸிலும், ஹரிராம் தீட்டா ஆறு சிபிஎஸிலும் இருந்திருப்பது தெரிந்தது. ஜான்சன் குழப்பத்துடன் கணபதியைப் பார்த்தார். ஹரிராமிற்கு திக்கென்றது. ஒரு வேளை ஜான்சன் கூப்பிட்டுக் கேட்டால் சாமர்த்தியமாய் இவனுக்குப் பொய் சொல்ல வராதே!

கணபதி தான் எழுப்பி இருந்த நந்தியிடம் பேசிக் கொண்டிருந்தான். “நீ நந்தனாருக்கு சிவனை மறைச்சது சரியா?என்று கேட்டுக் கொண்டிருந்தான். இந்த முட்டாள் ஆராய்ச்சியில் பிரச்சினை வந்திருப்பது கூடத் தெரியாமல் ஏதோ கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறான் என்று மனதினுள் சலித்துக் கொண்ட ஜான்சன் கணபதியை எதுவும் கேட்கவில்லை.

அவர் மூன்று பேரையும் கேட்டார். தடுப்பது என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது?

கியோமி சொன்னாள். “ஏதோ சுவர் தடுக்கிற மாதிரி இருக்கு

அலெக்ஸி சொன்னார். “ஏதோ மாடோ எருமையோ மறைக்கிற மாதிரி இருக்கு

ஹரிராம் சொன்னார். “யாரோ ஆள் இடையில் நிற்கிற மாதிரி தெரிகிறது

ஜான்சன் மூவரும் மூன்று விதமாகச் சொல்கிறார்களே என்று குழம்பினார். தடைகளைச் சொல்லும் போது மனிதர்கள் ஆழ்மனதில் தங்கள் பழைய அனுபவங்களில் உள்ள தடைகளுடன் சம்பந்தப்படுத்திக் கூட உணர்வதுண்டு. அதனால் இப்படி இருக்கலாம். இவர்கள் மூவரில் ஆழமான அலைகளில் இருப்பது ஹரிராம் தான். அவர் சொல்வது சரியாக இருக்கலாம். தடுப்பது ஆள் என்பது தான் சரியாக இருக்கும். அது ஈஸ்வர் தான்.....

“எதற்கும் நீங்கள் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்து விட்டு மறுபடி ஆரம்பியுங்கள்என்று சொல்லி மூவரையும் அனுப்பினார். பாபுஜி கேட்டார். “என்ன ஆகியிருக்கும்”.  ஜான்சன் சொன்னார். “ஈஸ்வர்

பாபுஜிக்கு ஆத்திரமாய் வந்தது. அங்கு நடப்பதை எல்லாம் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த அறுவரில் நால்வர் சைகைகளில் பாபுஜியிடம் என்ன பிரச்சினை என்று கேட்டார்கள். வந்து சொல்கிறேன் என்று பதிலுக்கு சைகை காட்டி விட்டு பாபுஜி ஜான்சனையும் அழைத்துக் கொண்டு குருஜியின் அறைக்கு விரைந்தார். இப்போதும் குருஜி எதையோ எழுதிக் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்ததும் கேட்டார். என்ன ஆச்சு?

சொன்னார்கள். குருஜி முகத்தில் திகைப்பைக் காட்டினார். களைப்புடன் கண்களை மூடிக் கொண்டு ‘எதற்கும் இன்னொரு தடவை முயற்சி செய்து பாருங்கள்என்றார்.

வெளியே வந்த பாபுஜி ஜான்சனைக் கேட்டார். “என்ன ஆச்சு இவருக்கு?

“உடம்புக்கு முடியலை போல இருக்கு ஜான்சன் சொன்னார்.

பாபுஜி தனதறைக்குப் போய் அறுவருடனும் வீடியோ கான்ஃப்ரன்ஸிங்கில் பேசினார். நடந்ததை எல்லாம் சொன்னார். அவர்கள் ஆறு பேருக்கும் அது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆரம்பத்தில் குருஜி விசேஷ மானஸ லிங்கத்தைப் பற்றிப் பேசிய போது அவர்களுக்கு சுவாரசியமான அவநம்பிக்கை மட்டும் தான் இருந்தது. ஆனால் சோமாலியக் கடற்கொள்ளையரின் மரணம் அதில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதை வைத்துக் கொண்டு உலகையே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாமே என்று தோன்ற ஆரம்பித்து இருந்தது. ஒரே நாளில் உறங்காமல் கனவுகளை வளர்த்துக் கொண்ட அவர்கள் தாங்கள் எப்படி எல்லாம் ஆக வேண்டும், என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று பெரிய பட்டியல்களையே வைத்திருந்தார்கள். பாபுஜியோ அவர்களைப் போல் இருமடங்கு நீண்ட பட்டியலை உருவாக்கி வைத்திருந்தார்.  இந்த நிலையில் இப்படி ஒரு தடங்கல் வந்தது அவர்கள் ஏழு பேரையும் பைத்தியம் பிடிக்கச் செய்து விடும் போல இருந்தது.

இஸ்ரேல்காரர் கேட்டார்.குருஜி ஏன் இப்படி செய்யறார். அவர் அப்படி என்ன தான் எழுதுகிட்டிருக்கார்?

பாபுஜி சொன்னார். ‘ஏதோ உயில் மாதிரி தெரியுது

“உயிலா? அப்படின்னா அவருக்கு நிஜமாகவே உடம்புக்கு முடியலைன்னு நினைக்கிறேன்இனி அவர் நம் ஆராய்ச்சிக்கு பயன்படுவார்னு தோணலைஅமெரிக்கர் சொன்னார்.

“ஈஸ்வர் தான் பிரச்சினைன்னா அவனை தீர்த்துக் கட்டிடலாமே எகிப்தியர்  சொன்னார்.

“அந்தத் தோட்ட வீட்டுக்கு வெளியே ஒரு போலீஸ் படையே இருக்கு. அவனை நாம் இப்போதைக்கு ஒன்னும் செய்ய முடியாதுபாபுஜி சொன்னார்.

“எதற்கும் இன்னொரு தடவை ஆராய்ச்சியைத் தொடர்ந்து பாருங்கள். பிறகு முடிவு செய்யலாம் ஜப்பானியர் சொன்னார்.

ஒரு மணி நேரத்தில் மறுபடி ஆராய்ச்சி தொடர்ந்தது. அதே விளைவு தான்.

ஏழு பேருடைய ரத்த அழுத்தமும் அதிகரித்துக் கொண்டிருந்தது. தென்னாப்பிரிக்கர் தனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதியைச சந்தித்து ஆலோசனை கேட்டு விட்டு மறுபடி பாபுஜியைத் தொடர்பு கொண்டார். 

”...அவர் சொல்றார். அந்த சிவலிங்கம் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பையனைக் கொன்றால் அந்த எதிர்ப்பு சக்தியை அழிச்சுட முடியுமாம்

(தொடரும்)
என்.கணேசன்

(பரம(ன்) இரகசியம் உட்பட என் அனைத்து நூல்களும் தற்போது 14.2.2014 முதல் 23.2.2.14 வரை தஞ்சையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கடை எண் 22ல் கிடைக்கும்)

13 comments:

  1. நேசம்னா என்னன்னு ஒரு நாள் புரியறப்ப உன் வேலை என்னன்னு தெரியும். உன் வாழ்க்கையோட அர்த்தமும் உனக்குப் புரியும்.”

    அருமையான வரிகள்..!

    அந்த சிவலிங்கம் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பையனைக் கொன்றால் அந்த எதிர்ப்பு சக்தியை அழிச்சுட முடியுமாம்”

    கணபதியின் உயிருக்கு ஈஸ்வர் அஞ்சிய மாதிரியே ஆபத்து வந்துவிட்டதே..!

    ReplyDelete
  2. கணபதி நந்தியிடம் ‘நீ நந்தனாருக்கு சிவனை மறைச்சது சரியா?’ என்று கேட்கும் இடம் சூப்பர். அந்த கேரக்டர் கண் முன்னால் தத்ரூபமாக உணர்கிறோம்.

    தயவு செய்து கணபதியை கொன்று விட வேண்டாம்.

    ReplyDelete
  3. Superb .... remba viruvirupa poguthu... antha 3rd person yarune kandu pidika mudiyalaye... ganapathi kuda sivan erukarathala avanuku onnum agathu....

    ReplyDelete
  4. ”...அவர் சொல்றார். அந்த சிவலிங்கம் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற பையனைக் கொன்றால் அந்த எதிர்ப்பு சக்தியை அழிச்சுட முடியுமாம்”

    இதை படிக்கும் போதே மனசு தாங்கலை... கணபதி ஏதோ கூட உள்ளவன் மாதிரி ...!!!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. விசேஷ மானச லிங்கமே...
    கணபதியைக் காப்பாற்று!

    ReplyDelete
  6. very interesting. going in jet speed.

    ReplyDelete
  7. பர(ம)nன் ரகசியம் @ its best….!!!

    ReplyDelete
  8. Ganeshan Sir,
    I have a doubt when Hariram is having mind reading capability to scan others mind why did he accept for this experiment with Guruji. Anyway he does not have any interest in life, so no benefit for him too and there is no compulsion to help Guruji and others too....

    Thanks and regards,
    B. Sudhakar.

    ReplyDelete
  9. As a novel, it is interesting very much sir. Thank you for this episode to guess on Hariram as teh third person in the group rather Guruji.

    However, I feel Guruji would be the 3rd one as he is having the expert of Ganam which is possessed by a saint.

    Ganapathi’s character invoked to decide that a strong trust can do and can actually make anything to happen. We must trust as the way Ganapathi trusted Guruji.
    More than anything in this novel, not only Ganapathi….the representation of each character evokes more insightful thoughts as to love and trust unconditionally. Thank you, thank you very much sir

    ReplyDelete
  10. A week before only i started reading this novel and finally reached this week part and very much eagerly waiting for the next episode...
    I read most of the readers posted as publish the novel at least twice a week even i do want to say the same...
    wonderful going ...!!

    ReplyDelete
  11. நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. Ganeshan Naan enna sollaradhunne theriyala. Ungaludaya indha paraman ragasiyam is simply superb. Idhu en manasa edho pandradhu. Endha kadayil varum ganesan alavukku illainnalum naanum avanai madhiri dhan. Sariya manasai kadavul kitta seluthaama erundhutten. En vazhkaiyil engayo thavaru nadandhiduchu. Still ennaala meendu varamudiyumnu thoninaalum vayasu oru kaaranama irukku. Kettu pona en manasai kadavul kitta eppidi kondu poradhunnu theriyala. Aanaa aasaiya irukku. Neenga nalla ezhudharinga. Thodarndhu nalla ezhudha ennudaiya vazhthukkal.

    Rajan
    8099235559

    ReplyDelete
  13. Dear Ganeshan,

    Paraman rahasiyam was read by me in just one day. I felt you have done a great job. Ganapathy is resembling my inner sense, but I am now corrupted. I would like to be the same as ganapathy and I am sincerely going to be a ganapathy in real life.

    ReplyDelete