சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 7, 2013

பரம(ன்) ரகசியம் – 30



தோட்ட வீட்டில் மதியம் வேலையை முடித்து விட்டு வேலைக்காரன் முனுசாமி போன பின் அந்த சித்தர் பசுபதியைப் பார்க்க வந்து கொண்டிருந்தால் அது நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று முன்பே தன் சந்தேகத்தைத் தாயிடம் பரமேஸ்வரன் தெரிவித்திருந்தார். இப்போது ஈஸ்வரும் தேவார திருவாசகங்களைப் படிக்கக் கூடிய  வேறு நபர் வந்து போயிருக்கலாம், அதற்காகவே அந்தப் புத்தகங்களை அந்தப் பூஜையறையில் பசுபதி வைத்திருக்கலாம் என்று சொன்னது பரமேஸ்வரனுக்குத் தன் முந்தைய கருத்தை ஒப்புக் கொண்ட்து போலவே தோன்றியது. ஆனால் அந்த வேறு நபர் சித்தராகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, மூன்றாவது நபராகவும் இருக்கலாம் என்ற உண்மை பரமேஸ்வரனுக்கு இப்போது உறைத்தது.

ஈஸ்வர் அவர் முகபாவனையில் இருந்தே தன் சந்தேகம் அவருக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான். அடுத்த கேள்வியை அவன் பரமேஸ்வரனிடம் கேட்டான். “உங்களையும் இந்த வீட்டுக்காரங்களையும் தவிர வெளியாள் யாராவது அவரைப் போய் பார்க்கிற மாதிரி இருக்காங்களா?

பரமேஸ்வரன் சொன்னார். “அண்ணாவோட உலகம் தனி. அந்த சிவலிங்கம் தவிர வேற யாருக்கும் அதுல இடமில்லை. நானே அவரைப் பார்க்கப் போகாமல் இருந்தாலும் அவர்  நான் ஏன் வரலைன்னு தவிச்சுப் போயிட மாட்டார். அப்படி இருக்கறப்ப வெளியாள்கள் கிட்ட அவருக்கு எப்படி நெருக்கம் இருக்கும். அவர் இறந்த பிறகு அந்த சித்தரை அந்த வீட்டில் பார்த்ததால அவர் வேணும்னா வந்து போயிருந்திருக்கலாம்னு எனக்கும் சந்தேகம் வந்தது. வேற யாரும் வர வாய்ப்பே இல்லை.

நீங்க பார்த்த ஆள் தான் அந்த சிவலிங்கம் கொடுத்த சித்தர்ங்கறது எப்படி சொல்றீங்க

பரமேஸ்வரனின் அந்த சித்தரின் கண்களைப் பற்றிச் சொல்லி விட்டுச் சொன்னார். “அந்தக் கண்களை என்னால எப்பவுமே மறக்க முடியாது

“அந்த சித்தர் பற்றி நீங்க எப்பவாவது உங்க அண்ணா கிட்ட பேசி இருக்கீங்களா, அவர் ஏதாவது சொல்லி இருக்காரா?

“இல்லை

“அந்த சிவலிங்கத்துக்கு உங்க அண்ணா எதாவது பெயர் சொல்லி இருக்காரா?

“இல்லை

ஈஸ்வர் சிறிது மௌனமாயிருந்து விட்டுக் கேட்டான். “உங்க அண்ணா கிட்ட அபூர்வ சக்திகள் இருந்ததா நீங்க நினைக்கிறீங்களா? அப்படி ஏதாவது சக்தியை நீங்க கண்கூடா பார்த்திருக்கீங்களா?

சிறிது யோசித்து விட்டு பரமேஸ்வரன் சொன்னார். நான் மனசு விட்டு அவரோட பேசிகிட்டிருக்கறப்ப எல்லாம் நான் சொல்லாமலேயே அத்தனையும் அவருக்குத் தெரியும்கிற உணர்வு எனக்கு எப்பவுமே இருக்கும்.. அது எதனாலன்னு எனக்கு சொல்லத் தெரியல. நடக்கப் போகிறது எல்லாம் கூட அவருக்குத் தெரிஞ்சுருந்த மாதிரி தான் இருந்தது. ஆனா அதை அவர் வெளியில காண்பிச்சுக்கப் பிரியப்படலைன்னு தான் நினைக்கிறேன். அதே மாதிரி அவருக்கு அவரோட உடம்பு மேலயும் முழுக் கட்டுப்பாடு இருந்துச்சு. ஒரு பொசிஷன்ல உட்கார்ந்தா மணிக்கணக்கில் எந்த சங்கடமும் இல்லாமல் இயல்பா அவர் இருந்ததைப் பார்த்திருக்கேன்....

“அதுல அவருக்கு யாரு குரு?

தெரியல. அந்த சித்தர் குருவாய் இருந்திருக்கலாம்...

ஈஸ்வருக்கு அவரிடம் அதிகத் தகவல்கள் எதுவும் இல்லை என்பது புரிந்தது. அண்ணனிடம் அவருக்கு இருந்த அன்பும் அக்கறையும் அண்ணனைத் தாண்டி அந்த சிவலிங்கத்திடம் போய் விடவில்லை என்பதும் புரிந்தது. ஓரளவாவது ஆர்வம் அவருக்கு இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக அவருக்கு சிவலிங்கம் பற்றிய தனி அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்....

பரமேஸ்வரன் ஈஸ்வரிடம் கேட்டார். நீ படிச்சவன். விஞ்ஞான சூழ்நிலைல வளர்ந்தவன். நீ அந்த சிவலிங்கத்துல ஏதாவது சக்தி இருக்கும்னு நிஜமாவே நம்பறியா?

“அந்த சிவலிங்கம் சித்தர்களும், உங்கண்ணா மாதிரியானவங்களும் பூஜை செய்ததா இருக்கிறதால கண்டிப்பா அதில் சக்தி இல்லாமல் இருக்காதுன்னு நினைக்கிறேன்

அவர் அவனைத் திகைப்புடன் பார்க்க அவன் சொன்னான். “என்னோட ஆராய்ச்சிகளே இந்த மாதிரி சக்திகளைப் பத்தினது தான். நிறைய ஆராய்ச்சி செய்திருக்கேன். செய்துகிட்டிருக்கேன்....

ஆனந்தவல்லி ஈஸ்வரைப் பெருமையாகப் பார்த்தாள். அவளுக்குத் தெரிந்து அவள் குடும்பத்தில் இதுவரை இவனையும் இவன் தந்தையையும் போல மெத்தப்படித்த அறிவுஜீவிகள் வேறு யாரும் இருந்ததில்லை. மகேஷ் அவளுடைய பெருமிதப் பார்வையை எரிச்சலுடன் கவனித்தான். என்ன ஆச்சு இந்தக் கிழவிக்கு. இவன் என்ன நோபல் பரிசா வாங்கிட்டான்’.

அந்த எரிச்சலுடன் திரும்பியவன் தன் தாயும் அப்படியே ஈஸ்வரைப் பார்ப்பதைப் பார்த்து நொந்து போனான். மீனாட்சிக்குத் தன் மருமகனும் அண்ணனைப் போல பெரிய பெரிய ஆராய்ச்சிகள் செய்வதில் பெருமை இருந்தது....

இதை எல்லாம் கவனிக்காத பரமேஸ்வரன் ஈஸ்வரைக் கேட்டார். “உனக்கு எப்படி அந்த பூஜை ரூம்ல தேவாரம், திருவாசகம் எல்லாம் இருந்தது தெரிஞ்சுது?

ஈஸ்வர் அவரைக் கூர்மையாகப் பார்த்தபடியே சொன்னான். “அப்பா சொன்னார். அவர் கிட்ட நான் நிறைய கேட்டு தெரிஞ்சுகிட்டிருந்தேன்...

அவன் நிறைய கேட்டு தெரிந்து வைத்திருப்பது வெறும் சிவலிங்கத்தைப் பற்றி மட்டும் அல்ல என்பது அவன் சொன்ன விதத்தில் இருந்தே தெரிந்தது. இவனிடம் சிறிது நேரம் பேசினால் கூட இவனுடைய அப்பாவை நினைவுபடுத்தாமல் இருக்க மாட்டான் என்று அவருக்குப் புரிந்தது. அவர் பேச்சை மாற்றினார். “இந்த வழக்கை விசாரிச்சுகிட்டிருக்கற பார்த்தசாரதிங்கற போலீஸ் அதிகாரி உன்னோட செல் நம்பரைக் கேட்டார். நான் கொடுத்திருக்கேன். உன் கிட்ட பேசணும்னார்..

ஈஸ்வர் எழுந்து விட்டான். “நல்லதாச்சு. எனக்கும் அவர் கிட்ட பேச வேண்டி இருக்கு....”. வேறெதுவும் சொல்லாமல் அவன் போக மகேஷும், மீனாட்சியும் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

ஆனந்தவல்லி மகனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். பரமேஸ்வரன் கேட்டார். “என்னம்மா பார்க்கறே?

நீ உன் அண்ணன் கிட்ட மனசு விட்டுப் பேசினப்ப எல்லாம் பாரம் குறைஞ்சிருக்குன்னு சொன்னியே. உன் மகனைப் பத்தியும் அவன் கிட்ட பேசி இருக்கியாடா?

பரமேஸ்வரன் பதில் சொல்லாமல் பார்வையை வேறிடத்துக்குத் திருப்பினார். அவர் மகன் சங்கரைப் பற்றி யாரும் அவரிடம் பேசக்கூடாது என்பது இந்த வீட்டில் எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனந்தவல்லியும் அதை இன்று வரை கடைபிடித்து வந்தாலும் இன்று ஏனோ பேசுகிறாள். அவர் தன் அண்ணனிடமே பேசாத விஷயம் ஒன்றிருக்கும் என்றால் அது அவர் மகன் பற்றிய விஷயம் தான். அது அவருடைய தனிப்பட்ட ஒரு ரணம். அதை அவரால் யாரிடமும் சொல்லவோ பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்பதை ஏன் இவர்கள் யாருமே புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்கள் என்று நினைத்தார்..

அந்த மௌனத்திலேயே பதிலைத் தெரிந்து கொண்ட ஆனந்தவல்லி பரிவுடன் சொன்னாள். “நீ அதைப்பத்தி அவன் கிட்ட பேசி இருந்தா உன் பாரம் என்னைக்கோ குறைஞ்சுக்கும்டா.

பரமேஸ்வரன் தாய் பக்கம் தன் பார்வையைத் திருப்பவில்லை. வாயைத் திறந்து பேசவுமில்லை. ஆனந்தவல்லி ஒரு பெருமூச்சு விட்டு எழுந்தாள்.   

ஸ்வருக்குத் தன் பின்னாலேயே மகேஷ் வந்தது ஆச்சரியமாக இருந்தது. விமானநிலையத்திற்கு வராதவன், வீட்டுக்கு வந்தவுடன் கூட உடனடியாக வந்து பார்க்காதவன், இப்போது ஏன் இப்படி அட்டை போல் ஒட்டிக் கொள்கிறான் என்று குழம்பினான்.

அவன் செல்போன் இசைத்தது. எடுத்து யாரிடமிருந்து என்று பார்த்தான். புதிய எண்ணாக இருந்தது. பேசினான். “ஹலோ

“ஹலோ. நான் பார்த்தசாரதி பேசறேன். உங்க பெரிய தாத்தா கொலைக் கேஸை நான் தான் இன்வெஸ்டிகேஷன் செய்துட்டிருக்கேன். உங்க தாத்தா கிட்ட கேட்டு தான் இந்த நம்பரை வாங்கினேன். உங்க கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு...

பேசலாமே. எப்ப வீட்டுக்கு வர்றீங்க?

பார்த்தசாரதிக்கு ஆனந்தவல்லி இருக்கும் இடத்திற்குப் போவதில் தர்மசங்கடம் இருந்தது. ‘இந்த ரெண்டு நாள்ல என்ன கண்டுபிடிச்சு இருக்கீங்க?என்று கண்டிப்பாகக் கேட்பாள். சம்பளம் தரும் முதலாளியைப் போல் இதைக்கூட கண்டுபிடிக்காம என்ன செய்துகிட்டிருக்கீங்கஎன்று கேட்டாலும் கேட்பாள். அந்தக் கிழவியிடம் இன்னொரு தடவை சிக்க விரும்பாமல் அவர் சொன்னார். “வெளியே எங்கேயாவது சந்திச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

அப்படின்னா அந்த தோட்ட வீட்டுல சந்திக்கலாமா?

ஈஸ்வருக்கு அந்தத் தோட்ட வீட்டுக்குச் சென்று பார்க்கும் எண்ணம் முன்பே இருந்தது. இன்னும் அந்த வீட்டில் சிவலிங்கம், பசுபதி சம்பந்தப்பட்ட அலைகள் நிறைந்திருக்கும் என்று தோன்றியது. அறுபது வருடங்கள் புனிதமாக இருந்த இடத்தில் இருந்து அவ்வளவு சீக்கிரம் அந்த அலைகள் கலைந்து போக வாய்ப்பில்லை....

“கண்டிப்பா தோட்ட வீட்டுல சந்திக்கலாம் சார். எத்தனை மணிக்கு வர்றீங்க?

“சாயங்காலம் நாலு மணி சுமாருக்கு வரட்டுமா

“வாங்க சார். நானும் அங்கே நாலு மணிக்குள்ளே வந்துடறேன்.

அவன் செல்போனைக் கீழே வைத்து விட்டு ஈஸ்வர் மீனாட்சியிடம் சொன்னான். “எனக்கு அந்தத் தோட்ட வீட்டுல வேலை பார்த்துகிட்டிருக்கிற ஆள் கிட்டயும் பேசணும் அத்தை. எத்தனை மணிக்குப் போனால் அவனை அங்கே பார்க்கலாம்”.

“பெரியப்பா இருக்கிற வரைக்கும் முனுசாமி அங்கே மதியம் ரெண்டு மணி வரைக்கும் இருப்பான். இப்ப என்ன செய்யறான்னு தெரியலை. ஆனா அவன் செல்போன் நம்பர் இருக்கு. அவனை வரச்சொன்னா இங்கே கூட வருவான்.

“வேண்டாம்.  அவனை அங்கேயே பார்க்கிறேன். அந்த போலீஸ் ஆபிசர் பார்த்தசாரதியும் அங்கே தான் வர்றதாய் சொல்லி இருக்கார். காலைல அவன் கிட்ட பேசிட்டு நாலு மணிக்கு அவரை சந்திக்கலாம்னு இருக்கேன்

மகேஷ் அவனிடம் கேட்டான். “நீயும் அந்த கொலைகாரங்களைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யறியா?

“இல்லை. அந்த சிவலிங்கத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யறேன்.

பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் அமெரிக்கால செய்துட்டு இருந்தாய்னு அம்மா சொன்னாங்க. அப்படிப்பட்ட நீ இந்த சிவலிங்கம் லெவலுக்கு இறங்குவாய்னு நான் எதிர்பார்க்கலைமகேஷ் ஏளனமாய் சொல்ல மீனாட்சி மகனை முறைத்தாள். அவள் மகனைத் திட்ட வாய் திறப்பதற்குள் ஈஸ்வர் புன்னகையுடன் பதில் அளித்தான்.

“அந்த சிவலிங்கம் லெவலுக்கு உயரமுடியுமான்னு தான் யோசிக்கிறேன்

மீனாட்சிக்கு மருமகன் கோபித்துக் கொள்ளாதது ஆறுதலாக இருந்தது. அப்பா கிட்ட கோவிச்சுக்கற மாதிரி இவன் யார் கிட்டயும் கோவிச்சுக்க மாட்டேன்கிறான். மத்தவங்க கிட்ட அண்ணா மாதிரியே பெருந்தன்மையா நடந்துக்கறான். கடவுளே இவன் எங்கப்பா கிட்டயும் அப்படியே நடந்துக்கற மாதிரி அருள் புரியேன்’.

ஈஸ்வர் சொன்னான். “அப்பா ஃப்ரண்ட் தென்னரசுவையும் பார்த்து பேசணும்னு நினைச்சுட்டு இருக்கேன். அவர் இங்கே இருக்காரா இல்லை வெளியூருக்குப் போயிருக்காரான்னு தெரியலை

மீனாட்சி தன் மகனிடம் கேட்டாள். “ஏண்டா தென்னரசு அங்கிள் வெளியூருக்குப் போயிருக்காரா என்ன

மகேஷ் வேண்டா வெறுப்பாய் சொன்னான். “இல்லை”

மீனாட்சி மகேஷிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதை ஈஸ்வர் ஆச்சரியத்துடன் பார்த்தான். மீனாட்சி விளக்கினாள். “இவன் என்னேரமும் அவங்க வீட்டுல தான் இருப்பான். அவரோட பொண்ணு விஷாலியும், இவனும் சின்னதுல இருந்தே ஃப்ரண்ட்ஸ். அவ கிழிச்ச கோட்டை இவன் தாண்ட மாட்டான். நானே இவன் கிட்ட ஏதாவது முக்கிய வேலையாகணும்னா அவ கிட்ட சொல்லி தான் செய்ய வைப்பேன்

இந்த அம்மாவுக்கு யார் கிட்ட எதைச் சொல்றதுங்கற விவஸ்தையே கிடையாதுஎன்று நினைத்தவனாய் கடுகடுப்புடன் மகேஷ் தாயைப் பார்த்தான். அவளோ மகன் முகத்தைப் பார்க்கக்கூட இல்லை. மருமகன் மீதே அவள் கவனம் இருந்தது.

ஈஸ்வருக்கு மீனாட்சி சொன்ன பிறகு தான் தென்னரசு அவன் அப்பாவுடைய நண்பர் மட்டுமல்ல, மகேஷின் அப்பாவின் நண்பரும் கூட என்பது நினைவுக்கு வந்தது. மூன்று பேரும் ஒன்றாகப் படித்தவர்கள்... மகேஷின் முகத்தைப் பார்த்த போது அவன் மீனாட்சியின் பேச்சை ரசிக்கவில்லை என்பது புரிந்தது. அவனைக் கூர்ந்து பார்த்தபடியே சொன்னான். “அந்த சிவலிங்கம் ஜொலிச்சதை எங்கப்பா தனியா பார்க்கல. தென்னரசு அங்கிளும் அப்ப அவர் கூட இருந்தார்.

மகேஷ் அதற்கு பதில் அளிக்கவில்லை.  காதிலேயே அது விழாதது போல் இருந்தான்.

மீனாட்சி  இன்னும் விஷாலி நினைப்பில் தான் இருந்தாள். ஈஸ்வர் சொன்னதோ, மகேஷ் மரக்கட்டை போல நின்றதோ அவள் கவனத்திற்குச் செல்லவில்லை. அவள் சொன்னாள். “விஷாலி மாதிரி ஒரு பொண்ணை இந்தக் காலத்துல நீ பார்க்க முடியாது ஈஸ்வர். அழகு, புத்திசாலித்தனம், நல்ல மனசு இத்தனையும் சேர்ந்து ஒரு பொண்ணு கிட்ட இருக்க முடிஞ்சதை நான் இது வரைக்கும் பார்த்ததில்லை.

ஈஸ்வர் ஒரு குறும்புப் புன்னகையுடன் சொன்னான். “நீங்க எங்கம்மாவை நேர்ல இன்னும் பார்த்ததில்லை இல்லையா அத்தை

மீனாட்சி சிரித்துக் கொண்டே சொன்னாள். “எங்கண்ணா மாதிரி ஒருத்தன் மனசுல இடம் பிடிக்கறதும், உன்னை மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்துக்கறதும் சாதாரணமான ஒரு பெண்ணால் முடியாதுன்னு எனக்குத் தெரியாதா ஈஸ்வர். நான் சொன்னது இந்தக் காலத்துப் பொண்ணுகள்ல அப்படி பார்த்ததில்லைன்னு தான்.

ஈஸ்வர் சொன்னான். “நான் விஷாலியைப் பார்த்துட்டு சொல்றேன்

மகேஷிற்கு இந்த விதமான பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை. பேச்சை மாற்ற அவன் நினைக்கையில் அவனுக்கு உதவுகிற மாதிரி மறுபடி ஈஸ்வரின் செல்ஃபோன் இசைத்தது.

போனில் பேசியது ஈஸ்வரின் நெருங்கிய நண்பன் சாந்தனு. டேய் ஈஸ்வர். நீ எனக்காக ஒரு வேலை செய். நான் அங்கே இருக்கிற வேதபாடசாலைக்கு ரெண்டு லட்ச ரூபாய் டொனேட் செய்திருக்கேன். அவங்களோட ஒரு நியூ ப்ராஜெக்டுக்கு ஃப்ரண்ட்ஸ் சில பேர் கிட்ட பணம் கலெக்ட் பண்ணியும் அனுப்பறதா இருக்கேன். நாம தான் சம்பாதிக்கறதுக்கு எல்லாத்தையும் விட்டுட்டு வந்துட்டு அமெரிக்கா லைஃப் பேட்டர்னுக்கு மாறிட்டோம். நம்ம வேதம், நம்ம கலாச்சாரத்தை எல்லாம் காப்பாத்தற ஒரு இன்ஸ்டிட்யூஷனுக்கு பணம் தந்தாவது உதவலாமேன்னு நினைக்கிறேன். நீ அங்கே போயிருக்கறதால ஒரு ஹெல்ப் பண்ணுடா. நீ ஒரு தடவை அந்த வேதபாடசாலைக்குப் போய் பார்த்துட்டு வாடா. அவங்க வெளியே சொல்ற மாதிரியே நல்ல விதமா தான் எல்லாம் செய்துட்டு இருக்காங்களா, இல்லை நம்மளை மாதிரி NRI காரங்கள் கிட்ட வசூல் பண்ற உத்தியான்னு நீ நேர்ல பார்த்துட்டு வந்து சொன்னால் நல்லாயிருக்கும். சரியாடா?

(தொடரும்)
-          என்.கணேசன்


11 comments:

  1. " நீ ஒரு தடவை அந்த வேதபாடசாலைக்குப் போய் பார்த்துட்டு வாடா"

    Nice twist at last ...பரமன் ரகசியம் தொடரும் :)

    ReplyDelete
  2. போனில் பேசியது ஈஸ்வரின் நெருங்கிய நண்பன் சாந்தனு

    " நீ ஒரு தடவை அந்த வேதபாடசாலைக்குப் போய் பார்த்துட்டு வாடா"

    ஆஹா ..ஈஸ்வர் சிவலிங்கத்தை நெருங்கப்போகிறான் ...!!

    ReplyDelete
  3. You mix the charaters, emotions and suspense in your plot very well. Really very interesting. Thank you

    ReplyDelete
  4. ஈஸ்வர் ஒரு குறும்புப் புன்னகையுடன் சொன்னான். “நீங்க எங்கம்மாவை நேர்ல இன்னும் பார்த்ததில்லை இல்லையா அத்தை”

    Timely! Every episode makes the story even more interesting!!

    ReplyDelete
  5. urayalkal migavum sharp aga arumayaga ulladhu.

    ReplyDelete
  6. “அந்த சிவலிங்கம் லெவலுக்கு உயரமுடியுமான்னு தான் யோசிக்கிறேன்”
    Great line at great time...loved it a lot...

    Heroine entry aahh?? nice...

    ReplyDelete
  7. கனகசுப்புரத்தினம்February 8, 2013 at 1:30 AM

    உங்கள் வார்த்தைகள் எளிமையாக இருந்தாலும் மிக வலிமையாக வந்து விழுகின்றன. படிப்பவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணத்துக்கு இந்த எபிசோடில்

    “நீ அதைப்பத்தி அவன் கிட்ட பேசி இருந்தா உன் பாரம் என்னைக்கோ குறைஞ்சுக்கும்டா.”

    “அந்த சிவலிங்கம் லெவலுக்கு உயரமுடியுமான்னு தான் யோசிக்கிறேன்”

    “நீங்க எங்கம்மாவை நேர்ல இன்னும் பார்த்ததில்லை இல்லையா அத்தை”

    உண்மையாக சொல்கிறேன் கணேசன், படிக்கும் போதே காட்சிகள் கண் முன் விரிகின்றன. கதாபாத்திரங்கள் உயிர் பெற்று விடுகிறார்கள். நல்ல எழுத்து. பாராட்டுக்கள். தொடருங்கள்.



    ReplyDelete
  8. valimaiyana varikal...

    ReplyDelete
  9. Story goes very interesting..

    ReplyDelete
  10. //நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால்// நிச்சயமாக ஒரு நல்ல வாசிப்பனுபவமும், அமைதியும், நம்பிக்கையும் உணர முடிகின்றது அன்பு நண்பரே!! என். கணேசன் அவர்களே!! தங்களின் பணி மென்மேலும் வளமுடன், நலமுடன் வளர வாழ்த்துக்களும், மிக்க வந்தனங்களும்!! அன்புடன் கே எம் தர்மா...

    ReplyDelete
  11. தாங்கள் சொல்லும் விதம் நடை அருமை, அந்த சிவன் மேலே நானும் அடிமையகிவிடுவேன் போல்

    ReplyDelete