சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, June 29, 2011

நேரெதிர் கோணங்கள்


கீதை காட்டும் பாதை 9

நேரெதிர் கோணங்கள்


நிலைத்த மதியுடையவனை விவரிக்கையில் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அருமையான உதாரணத்தைச் சொல்லி சாதாரணமான மனிதர்களில் இருந்து எப்படி நிலைத்த மதியுடையவன் வித்தியாசப்படுகிறான் என்பதை விளக்குகிறார்.

“சாதாரணமான ஜீவன்களுக்கு இரவாக இருக்கையில் புலன்களை அடக்கிய மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா ஜீவன்களும் விழித்துக் கொண்டிருக்கையில் அவன் உறங்குகின்றான்”

நிலைத்த மதியுடையவனும், ஆசைகளில் அலை மோதும் சாதாரண மதி உடையவனும் விழித்திருக்கும் நேரங்களும், உறங்குகின்ற நேரங்களும் நேர் எதிரானவை. சாதாரணமான மனிதன் உறங்குகையில் தான் கவலைகள், லாப நஷ்டங்கள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மறந்திருக்கிறான். ஆனால் நிலைத்த மதியுடைய ஞானியோ விழித்திருக்கையிலேயே அவற்றில் எல்லாம் விடுபட்டு அமைதியாக இருக்கிறான். உலக விஷயங்கள், ஆசாபாசங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ மற்றவர்கள் விழித்திருக்க அவன் நிம்மதியாக உறங்குகின்றான்.

சாதாரண மனிதன் முக்கியமாக நினைக்கும் விஷயங்கள் எல்லாம் நிலைத்த அறிவையுடையவனுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். அதே போல நிலைத்த அறிவுடையவன் முக்கியம் என்று நினைக்கும் விஷயங்கள் சாதாரண மனிதர்களுக்கு முக்கியமில்லாததாகத் தோன்றும். சாதாரணமான மனிதனுக்கு பணம், பதவி, அதிகாரம், புகழ் எல்லாம் தான் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகவும், வெற்றியாகவும் தோன்றும். அதன் பின்னால் ஓடி ஓடிக் களைத்தாலும், அதனால் எத்தனை பாடு பட்டாலும், அவன் தன் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வதில்லை. மாறாக அவனது ஓட்டமும், அவற்றின் மேல் உள்ள ஆசையும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. உறக்கத்தில் மட்டுமே அவன் அதையெல்லாம் மறந்திருக்கிறான். சில சமயங்களில் உறங்கக் கூட மறக்கிறான். அவனது ஆசைகளினால் ஏற்படும் கவலையின் தாக்கத்தில் அவன் உறங்கக் கூட முடியாமல் தவிக்கிறான்.

மாறாக நிலைத்த மதியுடையவனுக்கு பணம், பதவி, புகழ், அதிகாரம் ஆகியவை துக்கத்திற்கான தூண்டில்கள் என்றும், என்னேரமும் எப்படியும் மாறக்கூடியவை என்றும் தெளிவாகத் தெரிவதனால் அந்தத் தூண்டில்களில் சிக்காமல் விலகி இருக்கிறான். அவன் முக்கியம் என்று உணரும் ஆத்ம சிந்தனைகளும், தர்ம நியாயங்களும் சாதாரண மனிதனுக்கு வெற்றுப் பேச்சுகளாகவும் யதார்த்த வாழ்க்கைக்கு பயனில்லாததாகவும் தோன்றுகின்றன. இப்படி இருவரும் உலகையும், வாழ்க்கையையும் அணுகும் கோணங்கள் நேர் எதிர் கோணங்களாக இருக்கின்றன.

சாதாரணமான மனிதன் புறத்தோற்றத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் தருகிறான். அடுத்தவர் கண்ணில் அழகாகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும், பாராட்டுக்குரியவனாகவும் தெரிய ஆசைப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சகல முயற்சிகளும், உழைப்புகளும் அந்த நோக்கத்திற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. பிரபலமாக இருந்தால், பலர் பொறாமைப்படுகிற மாதிரி இருந்தால் அதுவே வெற்றி என்று நினைக்கிறான். எத்தனை குறைபாடுகள் தன்னிடம் இருந்தாலும் அவை மற்றவர்களுக்குத் தெரியாத வரை அவன் அதுகுறித்து கவலை கொள்வதில்லை. ஆக அவன் கவனம் புறத்திலேயே இருக்கிறது. அகமோ ஒழுங்குமுறை இல்லாமல் இருக்கிறது. அகத்திற்கும், புறத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகமாக அதிகமாக அவன் அமைதியின்மையும், துக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.


ஆனால் நிலைத்த மதியுடையவன் புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவன் தன் வெற்றியை அடுத்தவர்கள் அபிப்பிராயத்தில் பார்ப்பதில்லை. எப்படித் தெரிகிறோம் என்பதைக் காட்டிலும் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம் என்று நினைக்கிறான். அவன் மகத்தான செயல்களை செயல்களைச் செய்வதில் நிறைவடைகிறான். அந்த செயல்களை எத்தனை பேர் கவனிக்கிறார்கள், அறிந்திருக்கிறார்கள் என்பது குறித்து அவன் கவலை கொள்வதில்லை. அவன் அகத்தூய்மையில் அதிக கவனம் வைக்கிறான். அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறான். அவனுடைய அகத்திற்கும், புறத்திற்கும் இடையே இடைவெளி இருப்பதில்லை. எனவே நடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இருப்பதில்லை. உள்ளொன்று புறமொன்று இல்லாததால், அடுத்தவருக்குத் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியத்தையும் அவன் உணராததால் அமைதியும் நிறைவும் இயற்கையாகவே அவனுக்கு அமைந்து விடுகின்றன.

ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான உதாரணத்தையும் கூறுகின்றார்.

“நதிகளிலிருந்து எப்போதும் தண்ணீர் கடலில் விழுந்த வண்ணமிருந்தாலும் அது நிரம்பி வழிவதில்லை.அது போல எல்லா ஆசைகளும் யாரிடத்தில் அடங்கி விடுகின்றனவோ அவன் சாந்தியடைகிறான். ஆசைகளில் ஆசை வைப்பவன் மனச்சாந்தி அடைவதேயில்லை”

இதை எட்வின் ஆர்னால்டு அருமையாக விளக்குகிறார். “ஆன்மா மாகாசமுத்திரத்தைப் போன்றது. எல்லா பிரதேசங்களில் இருந்தும் தினந்தோறும் வெள்ளத் தண்ணீர் வந்து விழுகின்றது. ஆனால் அதன் காரணமாக சமுத்திரம் ஒருபோதும் ததும்பி வழிவதில்லை. அதன் தண்ணீர் கரையைத் தாண்டிச் செல்வதில்லை. நதிகளிலிருந்து ஏராளமான தண்ணீர் வந்து விழுந்தும் கூட சமுத்திரம் பொங்குவதில்லை. குற்றம் குறையற்ற நிறை மனிதனும் அப்படித்தான். அவன் ஆன்மாவாகிய கடலில் புலன்களின் உலகத்திலிருந்து மாயையாகிய நதிகள் வந்து விழுகின்றன. எனினும் அவன் நிலை குலைவதில்லை.”

நிலைகுலைய சந்தர்ப்பங்களே இல்லாத போது அமைதியுடன் இருப்பது பெரிய விஷயமில்லை. அதற்குப் பெரிய தகுதியும் வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் இருந்தும் அலைக்கழிக்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் வரும் போது தன்னிலை குலையாமலிருப்பது தான் உண்மையான ஞானம். அது அத்தனை சுலபமில்லை என்பதை நாம் நம் அனுபவங்களில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

உபாசனா போன்ற தியான வகுப்புகளுக்குச் சென்று அங்கு பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தவர்கள் அந்த பத்து நாட்களில் தங்களில் பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். ரம்மியமான இயற்கை சூழல் உள்ள இடம், தியானத்திற்கேற்ற சுற்றுப்புறம், காலையில் இருந்து இரவு வரை நல்லோர் சத்சங்கம், ஆன்மிக சொற்பொழிவுகள், நல்ல புத்தகங்கள் போன்ற அனைத்துமே ஒரு பெரிய மாற்றத்தை அந்த பத்து நாட்களில் அடைவது இனி வரப் போகும் நாட்கள் எல்லாம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற உறுதியை அவர்களிட்ம் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் வழக்கமான வாழ்க்கை சூழலுக்குத் திரும்பியவுடன் அந்த பத்து நாட்கள் மாற்றம் காணாமல் போய் விடுவதை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். யதார்த்த உரசல்களில் மேலோட்டமாய் அடைந்த அமைதி தேய்ந்து காணாமல் போய் விடுவதில் ஆச்சரியம் இல்லை.

சமுத்திரம் நதி நீரையும், வெள்ள நீரையும் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அது போல நாமும் புலன்கள் அனுப்பும் தகவல்களையும், தானாக வந்து சேரும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் மறுத்து விலக முடியாது. வந்து சேர்வது அவற்றின் இயல்பு. அவற்றில் நம் அமைதியை இழந்து விடாமல் இருக்கும் ஆழமான ஞானத்தைப் பெற்று உறுதியாக நிற்கும் வித்தையை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய அந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளே வேண்டாம் என்று சொல்வது வாழ்க்கையையே புறக்கணிப்பது போலத் தான். நம் காலுக்கு செருப்பு போட்டுக் கொள்ள வேண்டுமே ஒழிய கல்லும் முள்ளும் இல்லாத பாதைகளே வேண்டும் என்று ஆசைப்படுவது அறிவீனம்.

அகம் மாறும் போது புறம் தானாக மாறி விடுகிறது. நிலைத்த மதி உடையவன் பெரும்பாலானோரைப் பின்பற்றி பந்தயக்குதிரையாய் ஓடி மற்றவர்களை ஜெயிக்க முற்படுவதில்லை. தன்னை ஜெயித்து, தன்னுடைய அறியாமையை ஜெயித்து தெளிவு பெறுகிறான். என்னைப் பாதிக்கிற எந்த சபலத்தையும், சூழ்நிலைகளையும் அனுப்பாதீர்கள் என்று அவன் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதில்லை. வருவதைத் தெளிவுடன் சந்தித்து பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறான். வருகின்றவற்றை உள்ளே இருந்து ஏதோ ஒன்று வரவேற்றால் அல்லவா அவை உள்ளே நுழையும். வரவேற்பில்லை என்றால் வருபவை தானாக விலகி விடுமல்லவா? எனவே அவன் உலகை மாற்ற முயற்சிப்பதில்லை. அது முடியாத காரியம் என்பதை அவன் அறிவான். மாறாக தன்னை மாற்றிக் கொண்டால் உலகம் தானாக மாறி விடும் என்பதையும் அவன் அறிவான். இப்படித் தான் நிலைத்த மதியுடையவன் நிறையவே சாதிக்கிறான். அதே நேரத்தில் தன் அமைதி நிலை மாறாமல் இருக்கிறான்.

இத்துடன் சாங்கிய யோகம் நிறைவு பெறுகிறது. அடுத்ததாக ஸ்ரீகிருஷ்ணர் சாங்கிய யோகத்தில் மேலோட்டமாய் சொன்ன கர்மயோகத்தை விரிவாகவே விளக்க முற்படுகிறார். இனி மூன்றாவது அத்தியாயமான கர்மயோகத்தில் பயணிப்போம்.

பாதை நீளும்.....

என்.கணேசன்

நன்றி: விகடன்

5 comments:

  1. தெளிவினைத்தரும் விளக்கமான பதிவு
    தங்கள் பதிவினைத் தொடர்வதில்
    பெருமிதம் கொள்கிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நற்கருத்துக்கள் பொதிந்த பதிவு - நன்றிகளுடன் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. கர்மயோகத்தில் பயணிப்போம்.
    we are waiting for know about karmayogam வாழ்த்துக்கள் கர்மயோக பாதை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எப்ப‌டியிருக்கிறோம்... எப்ப‌டியிருக்க‌ வேண்டுமென‌ தெளிவாக‌ எடுத்துக் காட்டியுள்ளீர்க‌ள். ந‌ன்றி.

    ReplyDelete
  5. Very good article - Santhanam

    ReplyDelete