சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, June 24, 2011

படித்ததில் பிடித்தது - ”நிம்மதி சூழ்க!”



நெருங்கிய உறவுகளையும், நேசிக்கின்ற மனிதர்களையும் காலனிடம் பறி கொடுத்து நிற்கின்ற தருணங்கள் மிகவும் துக்ககரமானவை. அதிலும் அந்த மனிதர்களின் முகத்தை கடைசியாய் பார்த்து விட்டுத் திரும்புகையில் ‘இனி நாம் காணப் போவதில்லையே’ என்ற யதார்த்தம் உறைக்கையில் இதயம் இயல்பாகவே இமயமென கனப்பதுண்டு. சமீபத்தில் அது போன்ற ஒரு அனுபவத்தை உடுமலை எரிவாயு மயானத்தில் சந்திக்க நேரிட்டது. அப்போது அங்குள்ள சுவரில் பதித்திருந்த ‘நிம்மதி சூழ்க!’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதி இருந்த கவிதையைப் படிக்க நேர்ந்தது. பிணத்தை மயானத் தீயில் தள்ளி விட்டு பின் வாங்குகையில் அந்த கவிதையை அங்கு ஒலிபரப்பவும் செய்தார்கள். சென்றிருந்த அனைவரும் அங்கு அமர்ந்து ஐந்தாறு நிமிடங்கள் ஒலித்த அந்தக் கவிதையைக் கேட்டு விழிகள் ஈரமானோம். அந்த நேரத்திற்குப் பொருத்தமான மிக அற்புதமான கவிதை அது. நம் உணர்வுகளைப் பிரதிபலித்து, இதயத்தைத் தடவிக் கொடுத்து லேசாக்கிய அந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தக் கவிதையை நீங்களும் படித்து ரசியுங்களேன்.

- என்.கணேசன்



நிம்மதி சூழ்க!


ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

- கவிஞர் வைரமுத்து

24 comments:

  1. ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
    சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
    நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
    நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

    ReplyDelete
  2. ஆஹா! திரு கணேசன் அவர்களே! நெஞ்சத்தை நெருடிவிடும் மிக அருமையான கவிதையை வாசிக்கும் வாய்ப்பைத் தந்தீர்களே மிக்க நன்றி. என்னுடைய மிக நெருங்கிய நண்பர் அண்மையில் அகால மரணமுற்றபோது நான் அடைந்த வேதனையை மனக்கண் முன் தோன்ற வைத்து விட்டீர்கள்.''அந்தப்போனவர்'' சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
    தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
    பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
    போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

    ReplyDelete
  3. மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
    மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
    வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
    விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்
    supper........

    அருமையான பகிர்வு
    வாழ்த்துக்கள்.........


    எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..
    ஐயா நல்ல கதை...

    ReplyDelete
  4. ஈரம் கசியும் கவிதை.
    படிக்கும் போதே மரண பயம் போய்விடும்.
    நன்றி, கணேசன்.

    ReplyDelete
  5. தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
    சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
    மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
    மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்//
    very nice... thankyou!

    ReplyDelete
  6. Dear Mr Ganeshan,

    very nice post as well.

    Best Regards,
    P.Dhanagopal

    ReplyDelete
  7. மயானத்தில் போய் நிற்கும் போதுதான் மனித உறவுகளின் பலமும் பலவீனமும் புரிகிறது . அது மட்டுமல்லாமல் வாழ்வே மாயம் என்பதும் புரிகிறது, ஆனால் இவை அனைத்தும் வெறும் பிரசவ வைராக்கியம் போல் அல்லவா ஆகிவிடுகிறது?

    ReplyDelete
  8. மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
    மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்// True... I see my father again through my son(1year old)

    ReplyDelete
  9. Excellent! like all the lines of poem. keep it in our thoughts all the time not at that moment only.

    ReplyDelete
  10. athma endru youtube il type seiyaum indha songai mp3 format il download seiyalam

    Nandri

    ReplyDelete
  11. "ஜனனமும் பூமியில் புதியது இல்லை
    மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
    இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
    இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை"

    ஜனனமும் மரணமும் இயற்கையின்ஆணை

    ReplyDelete
  12. அருமை கணேசன்! முழு கவிதையையும் படித்து மகிழ்ந்தேன். மனசை ரொம்பவும் தொட்டுவிட்டது. மனதினுள் பாடலும் இசையோடு ஒலித்தது. பாடியவர், இசையமைத்தவர் யாரென்று சொல்ல முடியுமா?
    ஒவ்வொரு வரியும் ஆழமாய் இறங்குகின்றன. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பகிர்விற்கு மிக்க நன்றி கணேசன் ஜி .

      // ரஞ்சனியம்மா //
      நானும் தேடிட்டு இருக்கேன் ம்மா ... Extremely soothing voice & music... உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் எமக்கும் பகிருங்கள் ம்மா ...!

      Delete
    2. அருமையான பகிர்வு ...!

      Delete
    3. யூட்யூபில் ஆத்மா பாடல் என்று தேடினால் கிடைக்கும். விஜய் ஜேசுதாஸ், சுதாரகுநாதன் இருவர் தனித்தனியாகப் பாடி உள்ளார்கள். ஒன்று இதோ-
      http://www.youtube.com/watch?v=uUPFuJIa9qY

      Delete
    4. திருமதி. ரஞ்சனி நாராயணன் & ஜீவன்சுப்பு, இந்தப் பாடலுக்கு இசையமைத்தது இனியவன் http://maaruthal.blogspot.in/2010/03/blog-post_12.html

      Delete
  13. நன்றி திரு சிவகுமார்!

    ReplyDelete
  14. unarvukalai Thundi Unmaiyai Vilakki Manitha nayathai thelivura Vaithu manitha neyathai Unmaiyudan valavaikkum Arumaiyana kavithai. Thinanthorul eappalai ketkum janman tharum.

    ReplyDelete
  15. SUDHA RAGUNATHAN very very voice amma

    ReplyDelete
  16. தென்றலின் பூங்கரம்
    தீண்டிடும் போதும்

    சூரியக் கீற்றொளி
    தோன்றிடும் போதும்

    மழலையின் தேன்மொழி
    செவியுறும் போதும்

    மாண்டவர் எம்முடன்
    வாழ்ந்திட கூடும் - > எங்கோ அனுபவித்தது போல் உள்ளது

    ReplyDelete
  17. https://www.youtube.com/watch?v=SIP63wSK3wY
    அருமையான பாடல்.
    கேட்டு கண் கலங்கினேன்.
    நீங்களும் கேளுங்களேன்.
    அ.ஸ்ரீ விஜயன்

    ReplyDelete