சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, March 24, 2010

ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை!




உலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள்.

பரதனைப் போல் ஒரு உத்தமனை இலக்கியத்தில் காண்பது கூடக் கடினம். கைகேயி அவனுக்காக வரம் பெற்ற பிறகு அவன் படும் பாடு கொஞச நஞ்சமல்ல. முடிசூட்டிக் கொள்ள குலகுரு விசிட்டர் சொன்ன போது அவன் விஷம் சாப்பிடச் சொன்னது போல நடுங்கினான், பயந்தான், அயர்ந்தான், அருவி போலக் கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தான் என்கிறான் கம்பன்.

தஞ்சம் இவ்வுலகம் நீ ’தாங்குவாய்’ என
செஞ்சவே முனிவரன் செப்பக் கேட்டலும்
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்
அஞ்சினன்; அயர்ந்தனன்; அருவிக் கண்ணினன்.


”தந்த வரத்திற்கு இழிவு வரக்கூடாது என்று  தந்தை இறந்தான். தந்தை சொல்லை ஏற்று நடப்பது தான் தர்மம் என்று அண்ணன் அரச பதவியைத் துறந்தான். அப்படிப் பட்ட அண்ணனோடு பிறந்தவன் தாயின் சூழ்ச்சியால் ஆட்சி பிரிந்தான் என்ற பெயரை என்னால் பெற முடியுமா?” என்று வருந்துகிறான்.

இறந்தான் தந்தை ஈந்த வரத்திற்கு இழிவு என்னா;
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான்; தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும்
பிறந்தான், ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமோ?

உடனே பெரும்படையோடு அண்ணனை அழைத்து வர பரதன் கிளம்புகிறான். படையுடன் அவன் வருவதைப் பார்த்த குகன் ஆரம்பத்தில் அவனைத் தவறாக எண்ணிக் கோபப்படுகிறான். என்னை மீறி ஆற்றைக் கடந்து இவர்கள் எப்படி இராமனைச் சென்று அடைகிறார்கள் என்று பார்க்கிறேன்? (ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?) என்று கரையில் நின்று பார்க்கிறான்.

அருகில் வந்த பிறகு பரதனை அவன் கண்டதோ வேறு விதத்தில். கம்ப இராமாயணத்தில் மிக அற்புதமான இடம் இது. கம்பன் பரதனையும், அவனைப் பார்த்த குகன் மனநிலையையும் மிக அழகாக விளக்குகிறான்.

பரதன் கைகளோ தொழுத வண்ணம் இருக்கின்றன. உடலோ துவண்டு போயிருக்கிறது. கண்களோ அழுதழுது சிவந்திருக்கிறது. முகமோ துக்கம் என்பது இது தான் என்று வரையறுக்கும் படியாக இருக்கிறது. இதைக் கண்டவுடன் அவனை முழுதும் புரிந்து கொண்ட குகன் அவனை இன்னும் கூர்ந்து பார்க்கிறான்.


தொழுதுயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுதழி கண்ணினன்: அவலம் ஈதென
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுதுணர் சிந்தையான் முடிய நோக்கினான்.


”பார்த்தால் இவன் என் நாயகனான இராமன் போல் இருக்கின்றான். அவனுடன் இருக்கும் தம்பியான இலக்குவனின் சாயலும் இருக்கின்றது. தவ வேடம் வேறு பூண்டிருக்கிறான். அவனுடைய துன்பத்திற்கோ முடிவிருப்பதாகத் தெரியவில்லை. இராமன் இருக்கும் திசை நோக்கித் தொழுகின்றான். இவனைப் போய் தவறாக நினைத்தேனே எம்பெருமானின் பின்னால் பிறந்தவர்களால் தவறும் இழைக்க முடியுமோ?” என்று தன்னையே கடிந்து கொள்கின்றான்.

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான்;
துன்பம் ஒரு முடிவில்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு என்றான்.


பரதன் வந்த காரணத்தை அறிந்து அவனிடம் பேசிய பின்னரோ அவன் மரியாதை பலமடங்கு அதிகரிக்கிறது. “உன்னுடைய தாயின் பேச்சைக் கேட்டு உன் தந்தை உனக்களித்த நாட்டை தீயதாக ஒதுக்கி, துக்கத்தை முகத்தில் தேக்கியபடி கிளம்பி இங்கே வந்திருக்கிறாய் என்பதைப் பார்க்கும் போது, புகழ்பெற்ற உன் தன்மையைக் காணும் போது ஆயிரம் இராமர்கள் சேர்ந்தாலும் உனக்கு இணையாவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை” என்று குகன் மனம் திறந்து சொல்கிறான்.


தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை
தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேள் ஆவரோ தெரியினம்மா!



பின் பரதன் இராமனை சந்தித்து அவனை நாடு திரும்ப வற்புறுத்தி அவன் ஒத்துக் கொள்ளாததால் அண்ணனுடைய பாதுகைகளை அரியணையில் வைத்து ஆட்சி நடத்த பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு துயரத்துடன் நாடு திரும்புகிறான். அப்படித் திரும்புகையிலும் “சரியாகப் பதினான்கு வருடங்கள் தான். அதைத் தாண்டி ஒரு நாளும் அதிகமாக நான் தாங்க மாட்டேன்” என்று சொல்லி அண்ணனின் ஒப்புதலும் வாங்கிக் கொண்டு தான் போகிறான். அரியணையில் இராம பாதுகைகள் இருக்க பரதனோ துறவி போல் வாழ்க்கை நடத்துகிறான்.

குறித்த காலத்தில் இராமன் அயோத்தி வர முடியாத சூழ்நிலை உருவாகவே அவன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் போது கோசலை வந்து அவனைத் தடுக்கிறாள். தந்தை கேட்டுக் கொண்டதால் இராமன் 14 வருடங்கள் வனவாசம் போக வேண்டி இருந்தது. ஆனால் பரதனோ யாரும் கூறாமலேயே கிட்டத்தட்ட அண்ணனைப் போலவே வனவாசம் போலவே அங்கு வாழ்ந்ததைக் கடந்த 14 வருடங்களாகப் பார்த்து வந்த அவள் அவனிடம் சொல்கிறாள். ”அரசன் சொன்னதும், அவன் மகனான இராமன் இசைந்து காட்டிற்குச் சென்றதும் விதியின் செய்கையே. பின்னால் நடந்தவை எல்லாம் கூட யோசித்துப் பார்த்தால் அதன் தன்மையே. இப்படி இருக்கையில் உன் மேல் குற்றம் ஏற்றுக் கொண்டு என்ன செய்யத் துணிந்தாய் என் மகனே?”


மண் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்
மின் இழைத்த விதியின் முயற்சியால்
பின் இழைத்ததும் எண்ணில் அப்பெற்றியால்
என் இழைத்தனை என் மகனே என்றாள்


“உனக்கு உன் அருமை தெரியவில்லை, பரதா. உலகத்தில் பிரளயமே வந்தாலும் உன் பெருமை அழியுமோ?

(உன்) அருமை உணர்ந்திலை! ஐய நின்
பெருமை ஊழி தீயினும் பேருமோ?



“எண்ணிப் பார்த்தால் கோடி இராமர்கள் சேர்ந்தாலும் உன் மனதிற்கு ஈடாவார்களோ? புண்ணியாத்மாவான உன் உயிர் போனால் மண்ணும், வானும், உயிர்களும் வாழ முடியுமோ?

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்(கு) அரு(கு) ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?


நல்ல வேளையாக இராமன் விரைவில் வந்து பரதனைத் தழுவிக் கொள்ள எல்லாம் சுபமாக முடிகிறது. இப்படி இராமனின் தாயான கோசலையும், பக்தனான குகனும் கூட மனம் நெகிழ்ந்து இராமனை விடப் பன்மடங்கு சிறந்தவன் என்று சொன்ன பெருமை கம்ப இராமாயணத்தில் வேறெந்த கதாபாத்திரத்திற்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்

11 comments:

  1. நல்லதொரு பகிர்வுக்கு மிகவும் நன்றி கணேசன்.

    ReplyDelete
  2. ராம நவமி நல்வாழ்த்துக்கள்
    ஸ்ரீ ராமருக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்த கோடிகளுக்கும்..........

    ReplyDelete
  3. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை
    பரம்பொருளே இறங்கி வந்து வாழ்ந்து காட்டிய உன்னத அவதாரம்
    ஸ்ரீ ராம அவதாரம்
    ஜெய் ஸ்ரீ ராம்

    ReplyDelete
  4. இதை படிக்கையில் ஒரு ஆன்மீக வாதியாக மாற ஆசைப்படுகிறேன்

    ReplyDelete
  5. கலக்கல். ரொம்ப நல்ல தகவல். படித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  6. ////“உனக்கு உன் அருமை தெரியவில்லை, பரதா. உலகத்தில் பிரளயமே வந்தாலும் உன் பெருமை அழியுமோ?///

    அப்பேர்பட்ட சிறந்த ஆன்மாவுக்கு என் ஆயிரம் கோடி வணக்கம்.

    ReplyDelete
  7. excellent compilation on the subject. May your work flourish !

    ReplyDelete
  8. good story will tink?how cai i write same story?what time i thik i get this story?

    ReplyDelete
  9. Very good thoughts - My humble request to kindly take care of spelling mistakes

    ReplyDelete