என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Monday, December 1, 2008

அடுத்தவர் பாராட்டு அவசியமா?

பேரும் புகழும் வேண்டி மனிதர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'அரைப்படி அரிசியில் அன்னனம், விடியும் வரையில் மேளதாளம்' என்றொரு பழமொழி உண்டு. குறைவாகச் செய்தாலும், பலரும் அதைப் பெரிதாக நினைத்துப் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப் பாராட்டத் தவறுபவர்கள் வயிற்றெரிச்சல் பேர்வழிகள் என்ற வகைப்படுத்தப்படுவார்கள். இன்று அரசியல், ஆன்மீகம், கலை என்று எல்லா துறைகளிலும் இந்தப் புகழாசை மலிந்திருக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் புகழ் பற்றிய எண்ணமே இல்லாமல் பெரும் சாதனைகள் செய்த ஓரிருவர் அல்ல, ஒரு கூட்டமே ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் அஜந்தா, எல்லோரா சென்றிருந்தேன். அஜந்தாவில் பிரமிக்க வைக்கும் ஓவியங்கள் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு ஓவியமும் கலை நுணுக்கத்துடன் வரையப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஓவியத்தை வரையவும் பல வாரங்கள் தேவைப்பட்டிருக்கும். அந்தக்காலம், இந்தக் காலம் போல வண்ணங்கள் ரெடிமேடாகக் கிடைக்கும் காலமல்ல. ஒவ்வொரு வண்ணத்தையும் இயற்கை முறையில் கஷ்டப்பட்டு தயாரித்து வரைந்திருக்கிறார்கள். ஆனால் எந்த ஓவியத்திலும் வரைந்தவரின் பெயர் இல்லை. (அதற்கு கீழே இந்தக் கால ரசிகர்கள் தங்கள் பெயர்களை எழுதிப் புளங்காகிதம் அடைந்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதனால் இப்போது அதன் அருகே பார்வையாளர்களை விடுவதில்லை. சில அடிகள் தள்ளியே நின்று பார்க்க வேண்டி இருக்கிறது).

எல்லோராவிலும் கண்ணையும் கருத்தையும் கவரும் ஏராளமான சிற்பங்கள் இருந்தன. மலையைக் குடைந்து செதுக்கிய சிற்பங்கள் பல. எல்லாம் மிக நுணுக்கமான நிகரில்லா வேலைப்பாடுகள். அதிலும் ஒன்றில் கூட செதுக்கியவர் பேரில்லை.

நம் உபநிடதங்களை மிஞ்சக் கூடிய அறிவுப் பொக்கிஷங்கள் வேறு ஏதாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. அவற்றில் கூட எழுதிய ஆட்கள் பெயர் இல்லை.

சரித்திரம் நம்மைப் பற்றிப் பேச வேண்டும் என்ற ஆர்வம் அந்த ஓவியர்களிடமோ, சிற்பிகளிடமோ, ரிஷிக்களிடமோ இருந்தது போலத் தெரியவில்லை. ஆத்மதிருப்தி ஒன்றே அவர்கள் குறிக்கோளாகவும், பெற்ற பலனாகவும் இருந்திருக்கிறது.

இன்றோ பெருமைக்குரிய செயலுக்காகப் பாராட்டு என்ற நிலை போய் பாராட்டை எதிர்பார்த்து செயல் என்றாகி விட்டது. இதில் பெரிய குறை என்ன என்றால் இது போன்ற செயலின் தன்மை பாராட்டைப் பொறுத்தே அமையும். பாராட்டு இல்லா விட்டால் செயலும் இல்லை என்ற நிலையும் வந்து விடும். ஒவ்வொன்றையும் மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று யோசித்து மற்றவர்களைத் திருப்திப்படுத்த முனைந்தால் நம் செயல்களின் மூலம் ஆத்ம திருப்தியைக் காணத் தவறி விடுவோம்.

பாராட்டைப் பொறுத்தே செயல்புரிவது என்று சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள் நினைத்திருந்தால் இன்று நாம் எந்தக் கண்டுபிடிப்புகளின் பயன்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்க முடியாது. காரணம் எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆரம்ப கட்டங்களில் பாராட்டை விட கசப்பான விமரிசனங்களும், ஏளனமும் தான் பரிசாகக் கிடைத்திருக்கின்றன. பல உண்மைகள் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட போது கடும் எதிர்ப்பும், பைத்தியக்காரப் பட்டமும் தான் கிடைத்திருக்கின்றன. விமரிசனங்களின் உஷ்ணத்தில் பின் வாங்கியிருந்தால் எந்த சாதனைகளுமே உலகில் அரங்கேறி இருக்க முடியாது. இவ்வளவு தூரம் உலகம் முன்னேறி இருக்க முடியாது.

எல்லாத் துறைகளிலும் முத்திரை படைத்தவர்களும், ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றத்திற்குக் காரணமாய் இருந்தவர்களும் பாராட்டை விட தங்கள் ஆத்ம திருப்தியையே முக்கியமாக நினைத்தார்கள். தாங்கள் சரியென்று இதயத்தின் ஆழத்திலிருந்து நம்பியதைச் செய்தார்களே ஒழிய பாராட்டுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள முயற்சிக்கவில்லை.

எனவே அடுத்தவர் பாராட்டுக்கு அதிக முக்கியத்துவத்தை எப்போதும் கொடுத்து விடாதீர்கள். அடுத்தவர் பாராட்டுக்கள் உங்கள் செயலின் தன்மையைத் தீர்மானிக்க விட்டு விடாதீர்கள். தங்கள் நோக்கம் உன்னதமாக இருக்கட்டும். செயல் தங்கள் முழுத் திறமையின் வெளிப்பாடாக இருக்கட்டும். இரண்டும் இருந்தால் அந்தச் செயலைச் செய்து முடிக்கையில் கண்டிப்பாக மனநிறைவைக் காண்பீர்கள். அதைவிடப் பெரிய பாராட்டு அடுத்தவரிடமிருந்து உங்களுக்குத் தேவையில்லை.


-என்.கணேசன்

9 comments:

 1. மிக்க நன்றிங்க! பதிவை மேலும் மேலும் படிச்சு மனச இனிதான் பக்குவப் படுத்தணும்!! சரியாகப் படுகிறது!!!

  ReplyDelete
 2. ரொம்ப நல்ல பதிவு! நான் இதப் பத்தி எழுதணும்னு நினைச்சிட்டு இருந்தேன்(ஒழுங்கா எழுத வராட்டியும்)
  நிறைய பேருக்கு இந்த பதிவு போய் சேர விரும்புகிறேன்

  ReplyDelete
 3. சீரிய சிந்தனை நண்பரே.
  மறுமொழிக்காக எழுதாமல் நல்லதை எழுதுவோம். சேருபவர்களுக்குச் சேரட்டும். :)

  ReplyDelete
 4. உங்களுடைய சிந்தனைகள் அனைத்தும் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளவை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. Romba Nalla sollirukeenga. Vazhthukkal!

  ReplyDelete
 6. Romba Nalla sollirukeenga. Vazhthukkal!

  ReplyDelete
 7. kadamai cheyya lancham ketkum intha kaalathil, ethu oru eye opening artilcle. Please keep doing the good work without expectation. Your work will be recognised soon.

  GK.

  ReplyDelete
 8. //சரித்திரம் நம்மைப் பற்றிப் பேச வேண்டும் என்ற ஆர்வம் அந்த ஓவியர்களிடமோ, சிற்பிகளிடமோ, ரிஷிக்களிடமோ இருந்தது போலத் தெரியவில்லை. ஆத்மதிருப்தி ஒன்றே அவர்கள் குறிக்கோளாகவும், பெற்ற பலனாகவும் இருந்திருக்கிறது.//

  மிகவும் அருமை. அந்தப் பக்குவம் வருவது சுலபமில்லை. ஆனால் அசாத்தியமும் இல்லை. சிந்திக்க வைத்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 9. புகழ் விரும்புவோர் இகழ்ச்சியை தாங்க முடிவதில்லை..

  புகழ், இகழ் இரண்டையும் தாங்க பழகிக்கணும்..

  //எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் ஆரம்ப கட்டங்களில் பாராட்டை விட கசப்பான விமரிசனங்களும், ஏளனமும் தான் பரிசாகக் கிடைத்திருக்கின்றன. பல உண்மைகள் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட போது கடும் எதிர்ப்பும், பைத்தியக்காரப் பட்டமும் தான் கிடைத்திருக்கின்றன//

  நிஜம்.

  ReplyDelete