சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 18, 2008

உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!

ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை.

தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தனித்துவத்தில் சாதனை புரிந்து வெற்றி பெற்ற பின் அவனை ஓஹோ என்று போற்றுகிற சமூகம் அவனுடைய ஆரம்பகாலக் கட்டங்களில் அவனுக்கு உதவும் விதமாக இருப்பதில்லை என்பது கசப்பான உண்மை. எத்தனையோ துறைகளில் தங்கள் தனித் திறமையால் முத்திரை பதித்தவர்கள் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கையில் நாம் இதை உணர முடியும்.

ஆனால் கடவுள் படைப்பில் எதுவுமே இன்னொன்றின் நகலாக இருப்பதில்லை என்பதே மகத்தான உண்மை. ஒரு பெற்றோருக்கு இலட்சக்கணக்கில் குழந்தைகள் பிறக்க முடிந்தால் கூட எதுவும் இன்னொன்றின் நகலாக இருக்க முடியாது என்று விஞ்ஞானம் சொல்கிறது. இறைவன் அவ்வளவு நுணுக்கமாக வேறுபடுத்திப் படைக்கும் மனிதனை ஒரே மாடலில் வார்த்து மாற்றி விட சமூகம் விடாமல் முயற்சி செய்வது ஆச்சரியமே அல்லவா?

ஆனால் சோகம் என்ன என்றால் இந்த சமூகத்தின் முயற்சி பெரும்பாலானவர்கள் விஷயத்தில் வெற்றி பெற்று விடுவது தான். ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் திறமையோடு தான் படைக்கப்படுகிறான். அதை விருத்தி செய்து சாதிக்கவே அவன் இயல்பு அவனைத் தூண்டும். ஆனால் எத்தனை பேரால் தங்கள் அந்தராத்மாவின் குரலைக் கேட்க முடிகிறது? அதன்படி நடக்க முடிகிறது? சமூகம் தன் இரைச்சலால் அந்த சின்னக் குரலை மூழ்கடித்தல்லவா விடுகிறது.

"என்ன இந்தக் கோர்ஸா எடுத்திருக்கிறாய்? முடிச்சா என்ன சம்பாதிக்க முடியும். பேசாம பி.ஈ பண்ணா மாசம் குறைந்த பட்சம் ஐம்பதாயிரமாவது சம்பாதிக்கலாம்"

"என்ன எழுத்தாளராகணுமா? அவனவன் எழுதின பேப்பருக்கான செலவு கூட திருப்பிக் கிடைக்காம கஷ்டப்படறான். அதெல்லாம் விட்டுட்டு இப்படி செய்தா காலம் பூரா கஷ்டப்படாம இருக்கலாம்"

இப்படி எத்தனையோ லாஜிக்கான, மறுக்க முடியாத வாதங்கள். மாறுபட்டு நடக்கவும் விமரிசனங்களைத் தாங்கவும் முடியாமல் போகும் போது, இத்தனை பேர் சொல்வது தப்பாக இருக்க முடியுமா என்று குழப்பம் வரும் போது, நம்முள் ஒலிக்கும் குரல் நிஜமா, பிரமையா என்ற சுய சந்தேகம் வரும் போது பெரும்பாலானவர்கள் சமூகம் வார்க்கும் வார்ப்புகளாக, இயந்திரங்களாக மாறி விடுகிறார்கள். தங்களைத் தொலைத்துக் கொண்டு மற்ற நிழல்களின் நிழல்களாக வெறுமையாகக் கரைந்து போகிறார்கள்.

நீங்கள் நீங்களாக இருக்கும் வரை நிறைவைக் காண்பீர்கள். மற்றவர்களின் நகல்களாக மாற முயற்சிக்கும் போது இயற்கையில் இருந்து விலகி செயற்கையாக வாழத் துவங்கும் போது நிறைவு மறைய ஆரம்பிப்பதைக் காண்பீர்கள்.

வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனை சந்திக்கும் போது கடவுள் "நீ ஏன் பில் கேட்ஸ் போல் ஆகவில்லை என்று கேட்கப் போவதில்லை. நீ ஏன் நீயாக வாழவில்லை? உன் வாழ்க்கை வாழத் தானே உன்னைப் படைத்தேன். நீ ஏன் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறாய்" என்று தான் கேட்கப்போகிறார். மாறாக மற்றவர்களின் நகல்களாக ஆக்கத் துடிப்பது சைத்தானின் வேலை. இதை நான் ஒரு கவிதையாக இன்னொரு பதிவில் தந்திருந்தேன்.

எனக்கென்று ஒரு வரம்

சாத்தான் நேரில் வந்தது
வரமொன்று கேள் என்றது
பொன்னும் பொருளும் போகங்களும்
போதிய வரை தர நின்றது
நான் நானாக வேண்டும்
எனக் கேட்டேன்.
நீ நீயானால் உன்னிடம்
எனக்கென்ன வேலை என்றது
ஏமாற்றத்துடன் சென்றது

எனவே உங்கள் உள்ளே ஒலிக்கும் குரலை உன்னிப்பாகக் கேளுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாக உள்ள ஈடுபாடுகளை ஆராயுங்கள். இயற்கைக்கு ஒத்து கட்டுப்பாட்டுடன் வாழுங்கள். அடுத்தவர் செய்கிறார்களே என்று உங்களுக்கு ஒவ்வாத எதையும் செய்ய போகாதீர்கள். மற்றவர்கள் மெச்ச வேண்டுமென்று செயற்கையாக நடந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட வெட்கப்படாதீர்கள்.

திருபாய் அம்பானியும், நரசிம்ம மூர்த்தியும் தங்கள் துறையில் சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்திக் கொண்டார்கள், கொடி கட்டிப் பறந்தார்கள் என்று அவர்களைக் காப்பியடிக்க ஜேசுதாசும், குன்னக்குடி வைத்தியநாதனும் முயன்று இருந்தால் நாம் இரு துறைகளின் மேதைகளைப் பார்ப்பதற்கு பதிலாக இரு அனாமதேயங்களை அல்லவா பார்க்க வேண்டி இருந்திருக்கும்.

எனவே இந்தத் துறை தான் சிறந்தது, இந்த தொழில் தான் உயர்ந்தது, இந்த முறை தான் சரி என்று முன்கூட்டியே கணித்து உங்கள் மீது திணிக்க முனைபவர்களை அலட்சியம் செய்யுங்கள். உங்களுக்கு இயற்கையாக உள்ள ஈர்ப்பும் திறமையும் எதன் மீது உள்ளதோ அதில் உங்களுக்கு இருக்கும் தனித் தன்மையோடு ஆர்வத்தோடு முனையுங்கள்.

மற்றவர்கள் சொல்வது எல்லாம் முட்டாள்தனம், அலட்சியப்படுத்துங்கள் என்று சொல்ல வரவில்லை. அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள். அவர்கள் அனுபவ அறிவின் வாக்குகளை சிந்தியுங்கள். ஆனால் முடிவு மட்டும் உங்களுடையதாக இருக்க வேண்டும். உங்கள் உண்மையான தேடலையும், குணாதிசயங்களையும் ஒட்டியே அமைய வேண்டும். அதுவே உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும்.

மற்றவர் வாழ்வில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர் வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெறுங்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நகலாக வாழ்ந்து விடாதீர்கள்.

Francis Bacon எழுதிய வரிகளில் ஒன்று உலகப் புகழ் பெற்றது-"Character is Destiny". அதன் கூடவே வரும் இன்னொரு வாசகமும் அர்த்தம் பொதிந்த அருமையான உண்மை. - "Imitation is Suicide". இந்த வாசகத்தை நம் மனதில் பதித்துக் கொள்வது மிகவும் நல்லது. பிறரது நகல்களாக வாழ்வது தற்கொலை செய்து கொள்வது போன்றது.

முதலில் உங்களைக் கண்டறியுங்கள். மற்றவர்களை ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு உங்களை அமைதியாக ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உங்களை நீங்கள் கண்டறிய முடியும். இல்லா விட்டால் மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொல்வதன் தொகுப்பையே "நாம்" என்று தவறான கணிப்பில் வாழ்ந்து விடுவீர்கள். உண்மையான உங்களைக் கண்டறிந்த பின், உள்ளே ஒலிக்கும் அந்தக் குரலைக் கேட்க ஆரம்பித்த பின் உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரம்பியுங்கள். மற்றவர்கள் கண்களுக்கு அது சிறப்பென்று தோன்றாமல் இருக்கலாம். ஆனால் ஆத்ம திருப்தியை நீங்கள் உங்கள் வாழ்வில் உணர ஆரம்பிப்பீர்கள்.

உங்களைக் கண்டறிந்த பின் எக்காரணம் கொண்டும் உங்களைத் தொலைத்துக் கொள்ளாதீர்கள். அப்படித் தொலைத்து விட்டால் கூடவே வாழ்வின் எல்லா நன்மைகளையும் தொலைத்து விடுவீர்கள் என்பது மட்டுமல்ல, கடவுள் உங்களைப் படைத்ததன் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி வாழ்வை வீணடித்து விடுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

- என்.கணேசன்

11 comments:

  1. மற்றவர் வாழ்வில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர் வாழ்க்கையில் இருந்து ஊக்கம் பெறுங்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கையின் நகலாக வாழ்ந்து விடாதீர்கள்.

    All lines are nice. But these lines are fantastic. Thank you.

    ReplyDelete
  2. அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

    ரேகா ராகவன் .

    ReplyDelete
  3. Mr. Ganesan, This is very wonderful article.if most of the people in the society also starts recognize this point,we can see lot of individual talent comiung out from our country..entire sociry should start accepting people who try hard to reach their indvidual talents. good article..must read by Parents and to be in-laws !!!! do not expect their son-in-law or daughter-in-law in IT or good job ..start appreciate individual talents ..we don't even need to wait until 2020 to be a great nation in the world..

    ReplyDelete
  4. Realy Great Article Ganesan.We should learn to practise this.
    Mukthar Tanjore

    ReplyDelete
  5. Ganaesan, really a nice and very useful to all.
    Keep it up.
    Mukthar.Tanjore

    ReplyDelete
  6. Ganaesan, really a nice and very useful to all.
    Keep it up.
    Mukthar.Tanjore

    ReplyDelete
  7. Nice Article. Well done.

    ReplyDelete
  8. நேர்மையான கட்டுரை.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. Hai Ganeshan

    It is really good. If anyone reads it, it will definitely change one's life

    ReplyDelete