என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Saturday, February 9, 2008

இதில் நீங்கள் எந்த வகை?

சில ஆண்டுகளுக்கும் முன் உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியை நடத்தினார்கள். optimism, pessimism என்ற இருவகைப் பண்புகளும் மனிதர்களின் மனநிலையையும் அவர்களது நடவடிக்கையையும் எப்படியெல்லாம் தீர்மானிக்கின்றன என்பது தான் அந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். அதற்கு ஆரம்பத்தில் பள்ளிக் குழந்தைகளை ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்தார்கள். ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமியருள் optimism வகைக்கு ஒரு சிறுவனும், pessimism வகைக்கு ஒரு சிறுமியும் கடைசியில் முதல் நிலைக்குத் தேர்ச்சி பெற்றார்கள்.

அந்த இருவரையும் விரிவான கடைசி ஆராய்ச்சிக்குத் தங்கள் ஆராய்ச்சிக் கூடத்திற்கு வரவழைத்தார்கள். முதலில் அந்த சிறுமியை புத்தம் புதிய விளையாட்டுப் பொருட்கள் நிரம்பிய ஒரு அறைக்கு அனுப்பினார்கள். "இந்த அறையில் நிறைய புதிய விளையாட்டு சாமான்கள் இருக்கின்றன. உனக்கு அரை மணி நேரம் தருகிறோம். நீ எதில் எல்லாம் விளையாடுகிறாயோ அதெல்லாம் உன்னுடையவை. அவற்றை நீ உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்" என்று சொல்லி அனுப்பினார்கள். அறையினுள் வீடியோ காமிரா இருந்தது. தங்கள் ஆராய்ச்சி அலுவலகத்தில் இருந்து அந்தச் சிறுமியின் நடவடிக்கையை அவர்கள் கண்காணித்தனர்.

அந்தச் சிறுமி அந்த அறைக்கு உற்சாகமே இல்லாமல் தயக்கத்தோடு நுழைந்தாள். பின் ஒவ்வொரு பெட்டியையும் பிரித்து அதில் உள்ள விளையாட்டுப் பொருளை வெளியே எடுத்துப் பார்த்து அதை சுவாரசியமில்லாமல் தள்ளி வைக்க ஆரம்பித்தாள். "இதெல்லாம் புது விளையாட்டு சாமான் இல்லை. புதியதென்று சும்மா சொல்கிறார்கள்", "இதில் பேட்டரியே இல்லை. இதில் எப்படி விளையாடுவது", "எல்லாம் பழைய மாடல் விளையாட்டு சாமானாக இருக்கிறது. ஒன்று கூட ஹேரி பாட்டர் விளையாட்டு சாமான் கிடையாது", "இதில் கலரே சரியில்லை", "விளையாடியதை எல்லாம் வைத்துக் கொள்ளக் கொடுப்பேன் என்று சும்மா சொல்கிறார்கள். அப்படியெல்லாம் தர மாட்டார்கள்"...... என்றெல்லாம் அந்தச் சிறுமி சொல்லிக் கொண்டே ஒவ்வொன்றாக நிராகரித்ததைக் கண்டார்கள். அரை மணி நேரம் கழித்து அந்தச் சிறுமி ஒரு விளையாட்டு சாமானுடனும் விளையாடாமல் வெறுங்கையோடு வெளியே வந்தாள்.

ஆராய்ச்சியாளர்களால் தாங்கள் கண்டதை நம்ப இயலவில்லை. அத்தனை புதிய விளையாட்டு சாமான்களில் அந்தச் சிறுமியால் ஒன்றில் கூட விளையாட முடியவில்லை என்பது விசித்திரமாக இருந்தது.

அடுத்ததாக ஒரு அறையில் குதிரைச் சாணத்தை மலையாகக் குவித்து அந்த optimist சிறுவனை அந்த அறைக்குள் அனுப்பினார்கள். அனுப்பும் முன் "இந்த அறையில் நீ அரை மணி நேரம் விளையாடலாம்" என்று மட்டும் சொல்லி உள்ளே அனுப்பினார்கள். அந்த அறையினுள்ளும் வீடியோ கேமிரா வைத்திருந்ததால் அவர்களால் தங்கள் ஆராய்ச்சி அலுவலகத்தில் இருந்து அவனது நடவடிக்கையை கவனிக்க முடிந்தது.

சிறுவனுக்குக் குதிரைச் சாணத்தைப் பார்த்தவுடன் குஷி கிளம்பி விட்டது. ஒரே தாவலில் அந்தச் சாண மலைக்குள் பாய்ந்தான். அடுத்த அரைமணி நேரமும் பையன் சாணத்தை அறையெங்கும் இறைத்து பம்பரமாகச் சுழன்று சாணத்தில் விளையாடினான். பையனின் குதூகலச் சிரிப்புச் சத்தம் காதைப் பிளந்தது. அரை மணி நேரம் கழித்து பையனை வெளியே அழைத்து வந்தார்கள். சிறுவன் உடலெல்லாம் சாணம் ஒட்டியிருக்க, முகமெல்லாம் பல்லாக வெளியே வந்தான்.

ஆராய்ச்சியின் தலைவர் அந்தப் பையனிடம் ஆச்சரியத்துடன் கேட்டார். "உள்ளே அந்த சாணத்தில் அப்படி என்ன தான் விளையாடினாய்?"

அந்தச் சிறுவன் சொன்னான். "அத்தனை குதிரைச் சாணம் அங்கே இருக்கணும்னா கண்டிப்பா ஒரு குதிரையும் அங்கே எங்கேயாவது இருக்கணும். அதைத் தான் அந்த சாணத்துல தேடிகிட்டு இருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் என்னை விட்டிருந்தால் அந்தக் குதிரையை எப்படியாவது கண்டுபிடிச்சிருப்பேன்"

நிறையிலும் குறை காணுவது pessimissm என்றால் குறையிலும் நிறை காணுவது optimism.

பிரபஞ்சம் பூரணத்துவத்துடன் இயங்கினாலும் அது நமது மனக்கணிப்பில் உள்ள பூரணத்துவம் அல்ல. நமது கற்பனையின் படியோ, ஆசைப்படியோ உலகம் எப்போதும் இயங்குவதில்லை. நமது திருப்தியையோ, அதிருப்தியையோ உலகம் என்றுமே பொருட்படுத்தியதில்லை. இனி பொருட்படுத்தப் போவதுமில்லை. அப்படி இருக்கையில் உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம். உள்ளபடியே ஏற்றுக் கொண்டு அதை மெருகுபடுத்தியோ, நமக்கு வேண்டியபடி மாற்றிக் கொண்டோ நிறைவு காண்பது optimism. உள்ளதில் உள்ள சொத்தைகளைக் கண்டு சோர்வடைந்து சோகமடைவது pessimism.

நாம் எப்படியிருந்தாலும் காலச் சக்கரம் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. உலகம் தன் வழியில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. கடைசியில் எல்லாம் மண்ணோடு மண்ணாக சுவடில்லாமல் முடியத் தான் போகிறது. இங்கு இருக்கிற வரையில் நாம் இருக்கக் கூடிய இந்த இரண்டு வகைகளில் நீங்கள் எந்த வகை?

-என்.கணேசன்

11 comments:

 1. இப்போது உள்ள கால கட்டத்தில் அறிவும் அமைதியும் தான் தேவை .உங்கள் பதிவு நன்றாகா இருக்கிறது .மேலும் நல்ல தவகல்கள் எழுதுங்கள் ............நன்றி

  ReplyDelete
 2. have read it before somewhere..still very nice to read again !! keep going (i regularly read your blog)

  ReplyDelete
 3. thanks for your valuable information

  ReplyDelete
 4. Optimist will never find new things they will happy what ever they having they live in a small hut but pessimist they will suffer and get what they want. becz i am pessimist

  ReplyDelete
 5. i was able to find what i'm thank u viji

  ReplyDelete
 6. ungaludaiya ovvoru pathivum oru (ARPUTHA VILAKKU) sir.

  ReplyDelete
 7. படித்ததும் என்னை நானே சோதித்துக் கொண்டேன். மிக நல்ல கட்டுரை

  ReplyDelete
 8. மிக அருமையான கட்டுரை

  ReplyDelete