என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, January 25, 2021

யாரோ ஒருவன்? 16


ஜனார்தன் த்ரிவேதி சஞ்சயைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்தார். அவன் காணாமல் போய் இரண்டு நாட்கள் முடிந்து விட்டன. அவனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. செல்போன் ஸ்விட்ச்சுடு ஆஃப் என்ற தகவல் சொல்கிறது. சஞ்சயின் மனைவி தினமும் காலையில் வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டுப் போகிறாள். அவன் கூட இருந்தால் இரண்டு பேருக்கும் சண்டையே முடிவதில்லை. அவரே போய் பல முறை மத்தியஸ்தம் செய்து விட்டு வந்திருக்கிறார். கணவன் காணாமல் போய் விட்டால் மனைவிகளுக்கு என்ன தான் அன்பு பெருகி விடுகிறதோ தெரியவில்லை. கணவனுடன் ஒரு வாரமாகச் சண்டை போடவில்லை என்று அவள் சத்தியம் பண்ணிச் சொன்னாள். அதனால் அவன் குடும்பப் பிரச்சினை காரணமாக எங்கும் போயிருக்க வாய்ப்பில்லை என்பது மீண்டும் உறுதியாகத் தெரிகிறது.

ஜனார்தன் த்ரிவேதி ஐம்பது வருடங்களாக அரசியலில் இருக்கிறார். அவர் கட்சி முப்பத்தைந்து வருடங்கள் ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது. அவர் அதில் இருபத்தியேழு வருடங்கள் மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார். நடப்பது அவர் கட்சி ஆட்சியாக இருந்தால் ஒரு போன்கால் போதும். எல்லா வேலைகளும் நடந்து விடும். ஆனால் ஆட்சி மாறிய பிறகு அவ்வளவு சுலபமாகச் சின்ன வேலை கூட நடப்பதில்லை. சோதனைக்காலங்களில் அரசியலில் யாருக்கும் யாரும் நண்பர் அல்ல. அவரவர் பிரச்னையை அவரவரே தீர்த்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் ஆட்சி செய்யும் காலத்தில் ஏற்படுத்தி விட்டிருக்கும் பிரச்னைகள் எல்லாருக்கும் இருக்கிறது. அவரவர் பிரச்னைகளைத் தீர்க்கத் தீவிரமாகப் பாடுபடும் போது அடுத்தவர் பிரச்னையைத் தீர்க்க யாருக்கும் நேரமிருப்பதில்லை.  இது நடைமுறை யதார்த்தம் தான். அதனால் அவர் வருத்தப்படவில்லை.

அவர் முன்பு சந்தேகித்த தீவிரவாத ஆட்களும் இதில் ஈடுபடவில்லை என்று தெரிவித்த பிறகு அவருக்கு மறுபடியும் நரேந்திரன் மேல் தான்  சந்தேகம் வலுத்திருந்ததால் அவன் போகுமிடங்களை எல்லாம் கண்காணிப்பது தான் புத்திசாலித்தனம் என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. தொடர்ந்து அவன் போகுமிடங்களைக் கண்காணித்தால் அவன் எங்கேயாவது சஞ்சயை ஒளித்து வைத்திருக்கும் பட்சத்தில் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று அவர் நினைத்தார்.

ஒருவேளை சஞ்சய் நரேந்திரனிடம் சிக்கி இருந்தால் அவன் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாமல் உண்மைகளைச் சொல்லி விடும் அபாயம் இருக்கிறது. அப்படி சஞ்சய் உள்ளதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் தீவிரவாதிகளுக்குக் கூட பிரச்னை இல்லை. அவருக்கு அதில் பெரிய பிரச்னை வந்து விடும். அதனால் அவர் சஞ்சயை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து மீட்க வேண்டிய அவசரத்தில் இருந்தார்.  அதனால் அவர் தன் மேனேஜரிடம் நகரத்தில் நம்பகமான திறமையான துப்பறியும் நிறுவனம் எது என்று விசாரித்து சொல்லச் சொன்னார்.

அவருடைய மேனேஜர் நன்றாக விசாரித்து விட்டு அவரிடம் சொன்னான்.. “ஐயா எல்லாரும் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸி பேரைத்தான் சொல்றாங்க. ஆனால் அந்த ஏஜென்ஸிக்காரங்க தொகை அதிகம் கேட்கறாங்க. ஒருத்தனே பின் தொடர்ந்தா கண்டுபிடிச்சுடுவாங்கங்கறதால அவங்க ஒரு ஆள், ரெண்டு ஆளை இந்த வேலையில் அனுப்பறதில்லையாம். பத்து ஆளுகள அனுப்புவாங்களாம். யாருமே ஒரு வீதிக்கு மேல பின் தொடர மாட்டாங்களாம். அடுத்த வீதிக்கு வேற ஒருத்தன் தயாரா இருப்பானாம். அப்படி அந்த ஏரியால எந்தப் பக்கம் போனாலும் சுற்றுவட்டாரத்துல அவங்க ஆளுக தயாரா காத்துகிட்டிருப்பாங்களாம். ஒருத்தருக்கொருத்தர் தகவல் பரிமாற்றம் பண்ணிகிட்டு அப்பப்ப திட்டம் போட்டு ஒவ்வொரு ஏரியாவுக்கும் பின்னாடியே போவாங்களாம். இன்னும் என்னென்னவோ டெக்னிக் சொன்னானுக. என் தலையில ஏறலை. ஆனா காசு அதிகமா வாங்கினாங்கங்கன்னாலும் வேலை ஆகும்னு சொன்னாங்க”

அவருக்குப் பணம் ஒரு பிரச்னையே அல்ல. உடனடியாக அந்த ஏஜென்ஸியிடமே அந்த வேலையை ஒப்படைக்கத் தீர்மானித்தார்.
  

நாகராஜின் வீட்டில் போர்ட்டிகோவில் ஒரு மின்விளக்கு தவிர மற்ற விளக்குகள் எல்லாம் இரவு பத்து மணிக்கு அணைக்கப்பட்டு விட்டன. வேலாயுதம் அறையின் ஜன்னல் அருகே நின்றிருக்க கல்யாண் செல்போனில் அவர் கட்டிலில் சாய்ந்தபடி வாட்சப் பார்த்துக் கொண்டு இருந்தான். பதினோரு மணியும் கடந்தது. இன்னும் எந்தச் சத்தமும் பக்கத்து வீட்டிலிருந்து கேட்கவில்லை. கண்கள் தானாக மூடிக் கொள்ள பதினொன்றே கால் மணிக்கு கல்யாண் மெள்ள எழுந்தான். “நான் தூங்கப் போறேன்ப்பா. நீங்களும் தூங்குங்க. ஏதோ ஒரு நாள் அப்படிச் சத்தம் கேட்டால் தினமும் கேட்கும்னு அர்த்தமில்லை.”

அந்த நேரத்தில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்று திடீர் சத்தம் மிகத் தெளிவாகப் பக்கத்து வீட்டிலிருந்து கேட்க மகன் பேசுவதைக் கேட்பதற்கென்று திரும்பியிருந்த வேலாயுதம் கண்கள் விரிய படக்கென்று திரும்பி ஜன்னல் வழியே கூர்ந்து பார்த்தார். அந்தச் சத்தம் கேட்டு ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று பின்  வேகமாகத் துடிக்க ஆரம்பித்ததால் கல்யாணும் பாய்ந்து போய் ஜன்னல் அருகே நின்று கொண்டான். முன்பே இவர்கள் விளக்கை அணைத்து இருட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதால்  இவர்கள் பார்ப்பதை நாகராஜ் எந்த வகையிலும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. சற்று முன் கேட்ட சத்தம் பிரமையோ என்று கல்யாண் நினைக்கும்படியாக எந்தச் சத்தமும் இல்லை. சுமார் பதினாறு நிமிடங்கள் கழித்து பாம்பு சீறும் சத்தம் இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டு மறுபடி கேட்டது.

கல்யாண் தந்தையிடம் தாழ்ந்த குரலில் கேட்டான். “சத்தம் கேட்பது வீட்டுக்கு உள்ளிருந்தா இல்லை வெளியேவா?”

“உள்ளே இருந்து தான்...” அவர் உறுதியாகச் சொன்னார்.

மறுபடி அரை மணி நேரம் கழித்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று நீண்ட சத்தம் கேட்டது. இப்போது பக்கத்து வீட்டின் ஜன்னல் வழியே நீலமும் பச்சையும் சேர்ந்த மாதிரியான ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது. வேலாயுதம் படபடக்கும் இதயத்தோடு அவன் காதருகே சொன்னார். “இந்த வெளிச்சம் நேத்து தெரியல”


இதெல்லாம் நாகராஜுக்குத் தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்று கல்யாண் யோசித்தான். வீட்டில் பாம்பு சீறும் சத்தம் கேட்ட பின் எவனாவது நிம்மதியாகத் தூங்க முடியுமா? சற்று முன் பளிச்சென்று தோன்றி மறைந்த பச்சை- நீல வெளிச்சம் அதுவாக இருக்குமோ? நினைக்கையிலேயே கல்யாணின் இதயம் படபடக்க ஆரம்பித்தது.



“போதும் தூங்குங்க” என்று நாகராஜ் தன் கனமான குரலில் மெல்லச் சொல்வது கேட்க இரண்டு பேரும் வேகமாக ஜன்னலிலிருந்து விலகி இரண்டு பக்கங்களில் சாய்ந்து கொண்டார்கள். இருவருக்கும் இதயத்துடிப்புகள் வேகமெடுத்தன. அவன் அவர்களைப் பார்த்து விட்டுச் சொல்கிறானோ?

ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தங்கள் ஒரே நேரத்தில் கேட்டன. அவன் சொன்னதற்குப் பாம்புகள் பதில் சொல்வது போல் தோன்றியது பிரமையாகக். கூட இருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு தொடர்ந்த அமைதி நிலவ ஆரம்பித்தது.

வேலாயுதம் அசடு வழியச் சொன்னார். “அவன் நம்மளச் சொல்லலை”   

கல்யாண் இதயம் படபடக்க சிறிது நேரம் சிலையாக அமர்ந்திருந்தான். ஒரு வேளை இது அதுவோ? மகன் அவ்வளவு சீக்கிரம் எதிலும் அதிரக்கூடியவன் அல்ல என்பதால் வேலாயுதம் திகைப்புடன் மகனை லேசாக உலுக்கியபடி கேட்டார். “என்னடா ஆச்சு?”

அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் அவன் வாழ்க்கையில் கதவைத் தட்டிய அதிர்ஷ்டம் மீண்டும் இப்போது கதவைத் தட்டுகிறதோ என்ற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது.  பக்கத்து வீட்டில் சத்தம் அடங்கியது. ஆனால் அவன் இதயத்தின் படபடப்பு அடங்கவில்லை. அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் போது அந்தக் கதவைத் திறக்க முற்படாமல் இருப்பது அடிமுட்டாள்தனமே அல்லவா?



(தொடரும்)
என்.கணேசன்

Sunday, January 24, 2021

கருத்துகளை தீர்ப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!

மற்றவர்களின் கருத்துக்களை எல்லாம் தீர்ப்பாய் எடுத்துக் கொள்வது முட்டாள்தனமானது.  இந்த உண்மையை உணர சரித்திரம் படைத்த பலர் அனுபவங்களைப் பாருங்கள்.

Saturday, January 23, 2021

சமுத்திரமாக இருங்கள்!

கீதை காட்டும் பாதை 10

தரும் முக்கியத்துவமும், சிந்தனைகளும் சாதாரண மனிதனுக்கும், ஞானிக்கும் எப்படியெல்லாம் மாறுபடுகிறது? சமுத்திரம் போல் நிறைந்திருக்கும் வித்தை ஞானிக்கு எப்படி சாத்தியப்படுகிறது?

Friday, January 22, 2021

அற்புத சக்திகள் ஆத்மஞானத்திற்கு உதவுமா?

 


ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 22 

 

இந்தியா வந்த பின் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கர்னல் ஓல்காட்டும் நிறைய துறவிகளையும், சாதுக்களையும் சந்தித்தார்கள். ஆன்மிக ஞானத்திலும், அற்புத சக்திகளிலும் பேரார்வம் கொண்ட அவர்களுக்கு ஒவ்வொரு சந்திப்பிலும் சிந்திப்பதற்கும், வியப்பதற்கும் நிறைய விஷயங்கள் கிடைத்தன. அப்படி அவர்கள் சந்தித்த துறவிகளில் மிக முக்கியமானவர் பாபு சுர்தாஸ் என்ற துறவி. அவர் குருநானக்கின் கொள்கைகளில் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் யமுனை நதிக்கரையில் தலைக்கு மேல் கூரையில்லாத ஒரு சிறு மேட்டுப் பகுதியில் ஐம்பத்தியிரண்டு ஆண்டுகளாக வசித்து வருவதாகக். கேள்விப்பட்டதும் இருவருக்கும் வியப்பு மேலிட்டது. கடுங்குளிர், பெருமழை, கடும் வெயில் போன்ற இயற்கையின் அதீதங்களைப் பொருட்படுத்தாமல், வேறு இடங்களுக்குச் சென்று ஒதுங்காமல் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன் அருகில் கலவரம் நடந்து கொண்டிருந்த போது கூட இடம் மாறிச் செல்லவில்லை என்றும் அவர்கள் கேள்விப்பட்டார்கள். வயோதிகத்தினால் அவர் கண் பார்வையையும் இழந்திருந்தார் என்றாலும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதது போலவே அவர் தன் உடல் இழப்புகளாலும் பாதிக்கப்படாமல் வாழ்ந்தார். அங்கிருந்த பலரும் அவர் மெய்ஞானத்தால் முக்காலத்தையும் அறிய வல்லவராக இருந்தாலும் தன் சக்திகளை வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொன்னார்கள்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் துறவி பாபு சுர்தாஸைச் சந்தித்த போது கடும் வெயில் வாட்டிய சமயம். அங்கு சென்று நிற்கவே அவர்கள் சற்று சிரமப்பட்டார்கள் என்றாலும் எந்தவொரு பாதிப்புமில்லாமல் வெறும் தரையில் வெயிலில் அவர் அமர்ந்திருந்தார். அவரை வணங்கி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் அவரிடம் பேச்சுக் கொடுத்தார்கள். உள்ளூர் மொழி அறியாததால் மொழி பெயர்க்க பணியாளன் மூல்ஜீயை அழைத்துச் சென்றிருந்தார்கள்.

 

அந்தத் துறவி தனக்கு நூறு வயதானதாகச் சொன்னார். ஞான மார்க்கம் பற்றி அவரிடம் பேசிய போது சிப்பி மழை நீரைப் பத்திரமாகச் சேமித்து அதை முத்தாக்கிக் கொள்வது போல ஞானிகள் தங்கள் அனுபவங்களால் உணர்ந்த உண்மைகளை ஞானமாக்கி சேமித்து வைத்துக் கொள்கிறார்கள் என்றார். கர்னல் ஓல்காட்டுக்கு அந்த உவமை பிடித்திருந்தாலும் முத்து உருவாவது அப்படியல்ல என்றும், அது உருவாகும் அறிவியலையும் அவருக்கு விளக்கத் தோன்றியது. அவர் விளக்கத்தை அந்தத் துறவி ஏற்றுக் கொள்ளவில்லை. அது கர்னல் ஓல்காட்டுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் மற்றபடி அந்தத் துறவி மெய்ஞானி என்பது அவர் உபதேசித்த உண்மைகளில் தெரிந்தது.

 

அந்தத் துறவி சொன்னார். “மனதை ஒருவன் மிகவும் அமைதியாகவும்,  உலக விஷயங்களால் பாதிக்கப்படாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். அலைபாயாத நீர்நிலையில் மட்டுமே சூரியனின் பிம்பத்தைத் தெளிவாகக் காண முடிவது போல மனம் அமைதியாக இருக்கும் போது மட்டுமே ஞானத்தின் உண்மையை ஒருவன் உணர முடியும். கஷ்ட நஷ்டங்களால் மனிதன் மனமுடைந்து விடத் தேவையில்லை. அவற்றிலிருந்தும் அவன் எத்தனையோ படிப்பினைகளையும், ஞானத்தையும் பெற்று அவற்றை நன்மையாக்கிக் கொள்ள முடியும்”

 

அவரிடம் அற்புத சக்திகள் எதையாவது வெளிப்படுத்த கர்னல் ஓல்காட் கோரிக்கை விடுத்த போது அற்புதசக்திகளை வெளிப்படுத்துவது முட்டாள்களின் விளையாட்டு போன்றது என்றும் மெய்ஞானத்திற்கு அது எந்தச் சிறுபலனையும் சேர்த்து விடப் போவதில்லை என்றும் சொல்லி மறுத்து விட்டார்.   

மெய்ஞானத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து மற்ற எல்லாவற்றையும் மறுத்து வாழ்ந்த அந்த ஞானியிடம் சிறிது நேரம் அளவளாவி விட்டு இருவரும் திரும்பினார்கள். பின் சில வருடங்கள் கழித்து அந்தத் துறவி இறக்கும் வரை கர்னல் ஓல்காட் அலகாபாத் போகும் போதெல்லாம் சென்று அவரைச் சந்தித்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 

அவரைப் போலவே  இன்னொரு சன்னியாசி கான்பூர் அருகே கங்கைக் கரையில் வாழ்ந்து வருவதைக் கேள்விப்பட்டு அவரையும் இருவரும் சென்று பார்த்தனர். அந்தத் துறவி மெலிந்து வயிறு ஒடுங்கிப் போனவராய் இருந்தார். ஆனால் அவர் முகத்தில் ஞானஒளி வீசியது. அவரும் அற்புதங்கள் எதுவும் செய்து காட்ட முகச்சுளிப்புடன் மறுத்து விட்டார். ஆனால் அவர் சுர்தாஸைப் போல அற்புதங்கள் செய்து காட்டுவதை முட்டாள்தனமான விளையாட்டு என்பது போலப் பேசவில்லை. மாறாக அவர் அறிந்த ஜங்க்ளீ ஷா என்ற துறவி ஒருவருடைய உணவை நூறு பேருடைய உணவாகப் பெருக்கிக் காட்டுகிற சக்தி படைத்தவராக இருந்ததைச் சொன்னார். இப்படி உணவைப் பலமடங்காகப் பெருக்கிக் காட்டும் சக்தி அக்காலத்தில் பல துறவிகளிடம் இருந்ததாக கர்னல் ஓல்காட் கேள்விப்பட்டிருந்தார்.

 

இன்னொரு சன்னியாசி சற்று தொலைவில் உள்ள லுகி பாவா என்ற சாது தண்ணீரை நெய்யாக மாற்றும் சக்தி படைத்தவர் என்று தெரிவிக்க கர்னல் ஓல்காட் லுகி பாவாவின் ஆசிரமத்திற்கும் சென்று பார்த்தார். லுகி பாவா தத்துவஞான சிந்தனைகளில் மேம்பட்டவராக இருந்தார். அவரும் அற்புதங்கள் செய்து காட்ட மறுத்தார். எல்லா அற்புதங்களையும் உள்ளே தேடச் சொன்னார். இவ்வாறாக கர்னல் ஓல்காட் உண்மையான துறவிகள் மெய்ஞானத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை மற்ற சக்திகளுக்குத் தருவதில்லை என்பதை தன் அனுபவத்திலேயே கண்டு கொண்டார்.

 

 

கர்னல் ஓல்காட்டும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் ஆரிய சமாஜ் அமைப்பில் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள். காரணம் தியோசபிகல் சொசைட்டியைப் போலவே சமூகப் பொதுநலனும், ஆன்மிகமும் ஆரிய சமாஜ் அமைப்பில் முக்கியத்துவம் பெற்றிருந்தன. அதனால் அவர்கள் ஆரிய சமாஜ் தலைமையகம் சென்று அங்குள்ள சுவாமிகளைச் சந்தித்துப் பேசினார்கள். தியோசபிகல் சொசைட்டியின் சில அம்சங்கள் பற்றிப் பேசினார்கள். பின் அதன் தலைமை சுவாமிகள் ஆற்றிய பிரசங்கத்தில் கலந்து கொண்டார்கள்.

 

தன் பேச்சில் ஆரிய சமாஜ் சுவாமிகள் பிரார்த்தனை பற்றி வித்தியாசமாகப் பேசினார். “பலர் பிரார்த்தனை என்றால் கடவுளின் பெயரைப் பல முறை சொல்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பலமுறை கடவுள் பெயரைச் சொல்லி விட்டு கடவுள் ஒரு சேவகன் போல அவர்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது அபத்தமானது. உண்மையான பிரார்த்தனை கடவுளை உணர்ந்த தியானமும், உழைப்பும் தான்…”

 

கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்தார்கள். அங்கு தங்கியிருந்த நாட்களில் அந்த சுவாமிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் தன் இளமைக்காலத்தில் ஏழு ஆண்டுகள் அடர்ந்த காடுகளில் தவத்தில் கழித்ததைச் சொன்னார். பிரார்த்தனை பற்றி வித்தியாசமான கருத்து தெரிவித்தது போலவே அவர் அபூர்வசக்திகள் குறித்தும் தேவைப்படும் நேரத்தில் அந்தத் தேவைக்காக மட்டுமே சக்திகளை வெளிப்படுத்துவது சரியானது என்று தெரிவித்தார். அவர் காடுகளில் வசித்த காலத்தில் கடும் விஷங்கொண்ட பாம்புகளும், கொடிய விலங்குகளும் கூட சுற்றிலும் இருந்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் சேர்ந்து வாழ முடிந்ததைப் பற்றிச் சொன்னார். ஒரு முறை அவர் காட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்த போது பசியோடு எதிரே வந்த ஒரு கரடி அவர் மீது பாய முற்பட்டதையும், ஒரு கையசைப்பில் அது நின்று பின் விலகிப் போனதையும் சொன்னார். மௌண்ட் அபுவில் பவானி கிரி என்ற துறவி ஒரு பாட்டில் விஷம் முழுவதும் குடித்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க முடிந்ததைப் பார்த்திருப்பதாகவும், அதில் ஒரு துளி ஒரு மனிதனைக் கொன்று விடப் போதுமானது என்றும் சொன்னார். அது போல அந்தத் துறவி நாற்பது நாட்களுக்கும் மேல் உணவின்றி எந்த அசௌகரியமும் உணராமல் இயல்பாக வாழ முடிந்ததையும் பார்த்திருப்பதாகச் சொன்னார். மொத்தத்தில் ஞான மார்க்கத்தில் மேலே உயர்ந்தவர்களுக்கு அந்தச் சக்திகள் இயல்பாக வரும், அதைத் தேவையான இடத்தில் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது முறையான செயல் என்ற வகையில் அவர் பேச்சிருந்தது,

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி தினத்தந்தி 28.08.2019