என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 29, 2014

பாவ மன்னிப்பு எவ்வளவு தூரம் சத்தியம்?


பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி...



ஸ்ரீமதி வெங்கட்: நம்மிடம் எந்த கர்ம வினையும் இல்லை எனும் போது, மனிதனுக்கு மறு பிறவி தேர்ந்து எடுக்கும் உரிமை உண்டா?


நான்: மறுபிறவியைத் தேர்ந்தெடுப்பது அவரவர் கர்மவினைகளே. கர்மவினைகள் தீரும் போது பிறவி எடுக்க வேண்டிய அவசியமும் முடிந்து விடுகிறது.


கார்த்திகா: உங்களுடைய மிகப் பெரிய பலம் எதுன்னு சொல்வீங்க?? உங்களோட Co-Workers உங்களோட எழுத்துக்கள் அல்லது புத்தகம் பற்றி எதாவது கருத்து சொல்லி இருக்காங்களா... ??


நான்:
உள்ளதை, விருப்பு வெறுப்பைத் தாண்டி, உள்ளபடியே என்னால் பார்க்க முடிவதே என் பெரிய பலம் என்று நினைக்கிறேன். என் தவறுகளையும், பலவீனங்களையும் என்னால் மாற்றிக் கொள்ள சிரமம் இருந்த காலத்திலும் அவற்றை கண்டு கொள்ள மறுத்ததோ, காரணங்கள் கண்டுபிடித்து அவை இயல்பே என்று என்னை ஏமாற்றிக் கொள்ள நினைத்ததோ இல்லை. அதனால் தவறுகளின் போதும், பலவீனங்களின் போதும் உள்ளே ஒரு குரல் அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கும். அந்தக் குரலை மட்டுப்படுத்த மாட்டேன். நாளாவட்டத்தில் அந்தக் குரலின் நாராசம் தாங்க முடியாமல் என் குறைபாடுகள் குறைந்திருக்கின்றன.


என் கூட வேலை பார்ப்பவர்களுக்கு என் ஆங்கில எழுத்துகள் மிகப் பழக்கமானவை. கிட்டத்தட்ட 25 வருடங்களாக எங்கள் வங்கி சிற்றிதழில் எழுதி வந்திருக்கிறேன். தமிழ் அறியாதவர்களுக்கு அவை மிகவும் பிடித்தமானவை. பல இடங்களில் இருந்து போனில் கூட பாராட்டுக்கள் வரும். தமிழ் அறிந்த அலுவலக நண்பர்கள் தமிழில் நான் எழுதிய கதைகளையும், புத்தகங்களையும் ரசித்துப் பாராட்டி உள்ளார்கள்.


கார்த்திகா: நீங்களே உங்களை ஒரு வெற்றியாளராக உணர்ந்தது எப்போது??


நான்: நான் இதற்கு முன்பே பதில் சொல்லி உள்ளதாக நினைக்கிறேன். என்னை நான் இன்னும் முழு வெற்றியாளனாக உணரவில்லை. சில முயற்சிகளில் திருப்தியும் நிறைவும் அடைந்திருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இனியும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.


கார்த்திகா:
உங்களுக்கு பிடித்த Magazines என்னென்ன?? உங்களை மிகவும் கவர்ந்த மீடியா Person யார்??


நான்: பிடித்தது என்று சொல்லும்படியான பத்திரிக்கைகள் ஒன்றும் இல்லை. பிடித்த மீடியா person என சோ ராமசாமி அவர்களைச் சொல்லலாம்.


கார்த்திகா: காலையில் எழுந்ததும் நீங்கள் நினைக்கற முதல் விஷயம் என்ன??


நான்: இன்னது தான் நினைப்பேன் என்று உறுதியாகச் சொல்லும் அளவுக்கு மனம் முழுதும் என் வசமில்லை. ஆனால் பெரும்பாலும் முக்கியமாய் அன்று செய்ய வேண்டிய விஷயங்கள் நினைவுக்கு வரும்.


கார்த்திகா: Turns U ON/OFF என்று ஒண்ணு இருக்கும்ல.. அப்படி உங்களை உற்சாகப் படுத்தும் ஒரு விஷயம் என்ன?? சோர்வடையச் செய்யும் விஷயம் என்ன??


நான்: என்னை உற்சாகப்படுத்தும் விஷயம் பாசிடிவ் மனிதர்கள், பாசிடிவ் புத்தகங்கள். சோர்வடையச் செய்யும் விஷயம் செய்தே ஆக வேண்டிய பிடிக்காத வேலைகள்.


கார்த்திகா: நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது??


நான்: நான் மட்டுமல்ல எல்லோருமே அதிகமாக உபயோகிக்கும் வார்த்தை “நான்” தான்.


கார்த்திகா: So Nice Sir.. "நான்" - அட.. ஆமாம் ல... இது இல்லாம என்னோட நாள் போகாது அப்படின்னு நீங்க சொல்ற விஷயம் எது??

நான்: இப்போதைக்கு கம்ப்யூட்டர் இண்டர்நெட் இல்லாமல் ஒரு நாளும் போவதில்லை.


கார்த்திகா: இப்போ இருக்கற Media ல என்ன changes வரணும் ன்னு நீங்க நினைக்கறீங்க??

நான்:
இப்போது மீடியாவின் நோக்கமும், போக்கும் பொழுது போக்கு அம்சங்களை நோக்கித் தான் அதிகம் இருக்கின்றது. பல நேரங்களில் அது தவறான எண்ணப் போக்கை மனித மனங்களில் விதைப்பதாக உள்ளது. தவறுகளை விதைப்பது எளிது. ஆனால் அறுவடை பயங்கரமானது. அதனால் நல்ல உபயோகமான விஷயங்களை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்வதாக இருப்பது அவசியத் தேவை என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் கெட்ட விஷயங்களையாவது சொல்லாமல் இருக்கலாம்.


ஸ்ரீமதி வெங்கட்: பாவ மன்னிப்பு என்பது எவ்வளவு தூரம் சத்தியம்,அப்போ நம் கர்ம வினை மன்னிக்கப்பட்டு விடுமா?அது தொடராதா?


நான்:
பாவமன்னிப்பு என்பது தன் பாவத்திற்காக மனிதன் மனம் மிக வருந்தி, உருகி மன்னிப்பு கேட்டால் மட்டுமே உண்மையாகக் கிடைக்கக் கூடியது. அது மனிதன் திருந்த ஒரு வாய்ப்பு. அப்படி உள் மனம் உறுத்தக் கேட்கும் போது அவன் துடிப்பதே அவன் பாவத்திற்கான தண்டனை. அதனால் கர்மவினை அந்த தண்டனையோடு முடிவடைகிறது. மேல் போக்காக, மனம் மாறாமல் இது நடக்குமானால் பாவமன்னிப்பு கிடைக்காது. தன் செயலுக்கான தண்டனையை அவன் பெற்றே ஆக வேண்டும்.


ஸ்ரீமதி வெங்கட்: இன்றைக்கு சயின்ஸ் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் திருப்பதி தோன்றியதை கண்டு பிடித்து இருகின்றனர். ஆனால் கொங்கணர் 1 நூற்றாண்றை சேர்ந்தவர் தானே வள்ளுவர் மனைவி கொக்கு என்ன நினைத்தாயோ கொங்கனா?என்று கேட்பார்?இவர் எப்படி திருப்பதியில் ஜீவ சமாதி அடைந்து இருக்க முடியும்?


கொங்கணர் பற்றிச் சொன்ன இதே ‘கொக்கென்று நினைத்தாயோ?’ என்று கேள்வியை கௌசிகன் என்ற முனிவனைப் பார்த்து ஒரு பதிவிரதை கேட்டு அவர் அவளால் தர்மவியாதன் என்ற கசாப்புக்கடைக்காரனிடம் அனுப்பப்பட்டு அங்கு ஞான உபதேசம் பெற்றார் என்று மகாபாரதத்தில் வருகிறது.


மற்ற விஷயங்களில் பெருமளவு முன்னேற்றம் அடைந்திருந்த நம் முன்னோர்கள் வரலாற்றுக் குறிப்புகளில், கால அளவைப் பதிவு செய்வதில், அந்த அளவு சரியாக இருக்கவில்லை. (கல்ஹணரின் ராஜதரங்கிணி தான் ஓரளவு சரியான வரலாற்றுப் பதிவுகளை சரியாகச் செய்த முதல் நூல் என உலக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கிறார்கள். அது 12 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரத்து வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.)


அதனால் தகவல் பிழைகள் நீங்கள் சொன்னது போலவே இருக்கலாம். இந்த நிகழ்ச்சிகளில் சொல்லப்பட்ட செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு நிகழ்ச்சிகளின் காலப்பிழையை புறந்தள்ளி விடலாம்.


கார்த்திகா: எளிமையாகவும் அதே சமயம் எல்லார்க்கும் புரியும் படி தெளிவாகச் சொல்லிட்டீங்க Sir.. //அப்படி உள் மனம் உறுத்தக் கேட்கும் போது அவன் துடிப்பதே அவன் பாவத்திற்கான தண்டனை.// Fantastic Sir!

இப்பொழுது எந்த புத்தகம் வாசிக்கிறீர்கள்??

இக்கேள்வியின் பதிலைத் தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கோம் Sir..

நான்: Dan Millman எழுதிய The Life You Were Born to Live (A Guide to Finding Your Life Purpose) படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய Way of the Peaceful Warrior எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். இந்தப் புத்தகமும் நன்றாக உள்ளது.

கார்த்திகா: உங்களுடைய பலம் பற்றி ஏற்கனவே சொல்லிடீங்க.. அதே போல உங்க Plus - Minus இது ன்னு எதைச் சொல்லுவீங்க??

நான்: Plus நேர்மை, பல துறைகளில் ஆர்வம், விடாமுயற்சி, சந்தோஷமான மனம்

Minus பல விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாதது, உடல் உழைப்பு, அலைச்சல் உள்ள செயல்களில் சோம்பல், தேவைப்படும் போது கூட அடுத்தவர் மனதை நோகடிக்கிற மாதிரி பேச முடியாதது.


கார்த்திகா: Thanks & Sorry - இதை சொல்லணும் ன்னு நீங்க நினைக்கற Person யாராது இருக்காங்களா??


நான்: Thanks & Sorry – நியாயமாய் இந்த வார்த்தைகளை நான் என் மனைவியிடம் தான் சொல்ல நினைக்கிறேன். என் பல சாதனைகள் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய நேரத்திலேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.


கார்த்திகா: இதுவரை நாங்க கேட்ட கேள்விகளுக்கு அழகாகவும் அருமையாகவும் பதில் சொன்னீங்க.. அதில் உங்களுக்குப் பிடிச்ச - நீங்க விரும்பி பதிலளித்த கேள்வி எது?? இப்படி கூடவா கேட்பீங்க ன்னு நினைச்ச கேள்வி எது??


நான்: எல்லாக் கேள்விகளுமே நான் விரும்பி பதில் அளித்த கேள்விகள் தான். வித்தியாசமான எதிர்பாராத கேள்விகள் எனக்குப் புதிதல்ல. அதனால் இப்படிக் கூடவா கேட்பீங்கன்னு நான் எதையும் நினைக்கவில்லை. ஆனால் காலையில் எழுந்தவுடன் என்ன நினைப்பீங்க என்ற கேள்வி சிறிது வேடிக்கையாகப் பட்டது.


கார்த்திகா: இதோ Show முடிவுக்கு வந்துட்டோம்.. அப்படியே நம்ம Session ai Rate பண்ணுங்க sir..

Great!
Good!
OK!
Mokkai!


நான்: இந்த ஷோவை Good! என்றே ரேட் செய்ய வேண்டும். சில கேள்விகள் என் கடந்த வாழ்க்கையை ஒரு பரிசீலனை செய்ய உதவி இருக்கின்றன. கார்த்திகா, உங்களுக்கும் மற்ற பெண்மை டாட் காம் உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எத்தனை கேள்விகளுக்கு என் பதில்கள் திருப்திகரமாய் அமைந்தன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பேட்டி எனக்கு திருப்திகரமாய் இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.


கார்த்திகா:
Felt So Honored.. ரொம்ப நன்றி சார். எங்க Show -க்கு வந்ததுக்கு. சின்ன சின்ன கேள்விகளுக்கு கூட ரொம்ப பொறுமையாக, ஆழமாக, தெளிவான பதில் சொன்னீங்க. தகுதியும் திறமையும் இருந்தால் வெற்றி தானாக தேடி வரும் அப்படிங்கறதுக்கு ஒரு முன்னுதராணம் சார் நீங்க. அதே போல் உங்களிடம் இருந்து நாங்க கத்துகிட்டது பொறுமை, நிதானம், விடாமுயற்சி, தெளிவான சிந்தனை. உங்களோட சில நிமிடங்கள் பேசினாலே போதும் எங்களுக்குள்ள ஏகப்பட்ட நல்ல எண்ணங்கள் வித்தாகிறது.

இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்களும் உங்களோட எழுத்துகளும் மிகப்பெரிய உந்துகோலாக அமையும்ன்னு சொன்னால் அது மிகையல்ல சார்.

எங்களோட பெண்மை Friends இப்ப அடிக்கடி சொல்ற ஒரு விஷயம், நாங்கள் NG Replies திரும்ப திரும்பப் படிச்சிட்டு இருக்கோம்ன்னு தான். எங்களுக்கு தெரியாத புரியாத பலவற்றை உங்கள் எழுத்துகள் மூலமாக ரொம்ப எளிமையாகவும் மனசில பதியும்படியும் சொல்லி இருக்கீங்க. On Behalf our Members, Our Sincerest Thanks to you sir!

உங்களோட எழுத்துக்கள் இன்னும் நிறைய வாசகர்ளை சென்றடையவும், இன்னும் உயர்ந்த நிலை அடையவும் எங்களுடைய வாழ்த்துக்கள் சார்.

Many thanks for taking the time out of your busy schedules to talk with us. We look forward to the Opportunity to do so again.. Wishing you all Success in the forthcoming days.. All the Very Best Sir.

Last but Not the Least, I’d like to thank all our friends for your Support & Encouragement throughout Our show.. And This is an outcome of that Only. Esp Sakthi,You’re the one who is ever-ready to listen to my Annoying ques / wacky ideas, even at such late nights. Many Thanks for your Care & Assistance.. Cheers Dears!

And Sir,
Thanks for being a Part of our Penmai's Celebrity Talk Show.. In honor & Gratefulness of Our guest, We've made a Special gift for you..

Yeah, Here Comes a Cute Marble Ganesha & a Coffee Mug cum Pen Stand With Our logo + Your Name!! Hope you like our gift..












நான்: உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், அழகான பரிசிற்கும் மிக்க நன்றி கார்த்திகா. நான் பிள்ளையார் பக்தன். எனக்கு பிள்ளையாரையே பரிசளிக்கத் தோன்றியதற்கும், என் பெயரிட்ட Coffee Mug cum Pen Standக்கும் மீண்டும் நன்றி. நல்ல நினைவுகளுடன் உங்கள் அனைவரிடம் இருந்தும் விடை பெறுகிறேன். Bye.

- என்.கணேசன்

Monday, May 26, 2014

ஆழ்வார்களின் ஆன்மிகமும், அறிவியலும்!


அறிவார்ந்த ஆன்மிகம் - 39

மகாவிஷ்ணுவின் மகத்தான குணங்களில் மயங்கி அவர் நினைவிலேயே ஆழ்ந்து போனதால் அந்த அடியார்கள் ஆழ்வார்கள் என்றழைக்கப்பட்டார்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிமு பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை பன்னிரண்டு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாடல்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்றழைக்கப்படுகிறது.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவியாழ்வார் ஆகிய பன்னிரண்டு ஆழ்வார்கள் உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையுமெல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி பாடிய பாடல்கள் அவை.

நாலாயிர திவ்யபிரபந்தம் வெறும் பக்தி இலக்கியமாக மட்டும் அல்ல. அந்தப் பாடல்களில் பக்தியோடு சமூக நோக்கு உண்டு, மனித நேயம் உண்டு, ஆன்மிக ஞானத்தின் சாராம்சம் உண்டு, ஏன் அறிவியல் கூட உண்டு. அவற்றை சிறிது பார்ப்போம்.

ஆழ்வார்களின் பக்தியிலும் பரந்த கண்ணோட்டம் உண்டு. பொய்கையாழ்வார் பாடிய ஒரு பாடல் இது.

''தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்தது எப்பேர் அப்பேர் - தமருகந்தது
எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம்'' .-                 

எந்த உருவத்தை விரும்புகிறோமோ அது அவன் உருவம். எந்தப் பெயரைக் கொடுக்கிறோமோ அது அவன் பெயர். எந்தவிதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்வீர்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரத்தான் ஆகிய இறைவன்என்று சொல்கிறார் அவர். பக்தி தான் ஆழ்வார்களின் அடித்தள நாதம். உருவமோ, பெயரோ, தன்மைகளோ இல்லாத இறைவன் பக்தர்கள் விரும்புகின்ற உருவத்தில், பெயரில், தன்மைகளில் பொருந்தி விடுகிறான் என்று சொல்கின்ற பரந்துபட்ட நோக்கு அவர்களுடையது.

அதே போல இறைவன் தங்களுக்கு என்ன தந்தாலும் அது நன்மைக்கே என்று எண்ண முடிந்த அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுடையதாக இருந்த்து.
           வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் 
           மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால் 
           மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டு அம்மா! நீ 
           ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே! 

என்று பாடினார் குலசேகராழ்வார். வித்துவக் கோட்டு அம்மானே! மருத்துவர் கத்தியால் அறுத்துச் சூடு போட்டாலும் அவர் மீது வெறுப்பு கொள்ளாத, அன்பு குறையாத நோயாளி போல,  நீ உன் மாயத்தால் நீங்காத துன்பத்தைத் தந்தாலும் உனக்கு அடிமையாய் உன் அருளையே எதிர்பார்த்து இருப்பேன்   என்ன அழகான உதாரணம் பாருங்கள்.

எல்லாம் இறைவனே என்று சொல்லி சரணாகதி அடையும் பக்தி ஆழ்வார்களுடையது. தங்கள் தவறுகளையும் பலவீனங்களையும் ஒத்துக் கொள்வதிலும் நீயே வழிகாட்ட வேண்டும் என்று சொல்வதிலும் அவர்களுக்கு சிறிதும் தயக்கம் இல்லை. நம்மாழ்வார் பாடிய அழகான பாடல் ஒன்றில் இந்த உணர்வு மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

இவையன்றே நல்ல இவையன்றே தீய
இவையென் றிவையறிவ னேலும் இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறைவனே
என்னால் செயற்பால தென்?

அவர் சொல்கிறார். “இவை நல்லது இவை கெட்டது என்று எனக்குத் தெரிகிறது என்றாலும் இவற்றை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே இறைவனே! என்னால் செய்ய முடிந்தது என்ன இருக்கிறது. எல்லாம் நீயே அல்லவா?சஞ்சலங்கள் நிறைந்த வாழ்வில் ஒவ்வொரு பக்தனும் அவ்வப்போது புலம்பும் நிலையே அல்லவா இது?  

நாலாயிர திவ்விய பிரபந்தத்தை எழுதிய ஆழ்வார்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள், உயர்நிலைகளில் இருப்பவர்கள் மட்டுமே அல்ல. எல்லாக் குலத்தவர்களும் அந்தப் பட்டியலில் இருந்தார்கள். அரசர் முதல் கள்வர் வரை   பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். சாதி வித்தியாசம் பார்க்காமல் இருப்பது வைணவக் கருத்துக்களில் பிரதானமாக இருந்தது.


"பழுதிலா ஒழுகலாற்று பலசதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்
தொழுமின் நீர்”  

என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகிறார். இழிகுலத்தவர்களேயானால் கூட இறைவனின் அடியார்கள் என்றால் அவர்கள் தொழத் தக்கவர்கள் என்ற கொள்கையில் ஆழ்வார்கள் உறுதியாய் இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சாதி, மதப் பிரிவினைகள் பெரிதாக இருந்த காலத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு நிலை எடுத்திருந்தது ஆழ்வார்களின் சமத்துவத்திற்கான சமூகப் புரட்சி சிந்தனையே அல்லவா?

இனி ஆழ்வார்களின் அறிவியல் சிந்தனையைப் பார்ப்போம்.  ஆண்டாள் பாடுகிறார்.

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

மழைக் கடவுளே…! எதையும் நீ ஒளிக்காதே.. கடலுக்குள் புகுந்து அதிலிருந்து தண்ணீரை முகர்ந்து, பின் ஆகாயம் ஏறி கண்ணன் உருவம் போல் கறுத்து, அழகிய தோளுடைய பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னல் அடித்து, அவனது சங்கு போல் இடி முழங்கி, அவனது சாரங்கம் (வில்) அம்புகளைப் பொழிவதைப் போல உலகம் அனைத்தும் வாழவும், நாங்கள் மார்கழி நீராடவும் பெய்திடுவாய்…!!!

கடலுக்குள் நீர் முகர்ந்து, பின் மேலே போய் கருமேகமாகி இடி மின்னல் போன்ற பக்க விளைவுகளோடு உலகம் வாழப் பெய்யுமாறு மழையை வேண்டுகிற இந்தப் பாடலில் ஆண்டாள் மழை பொழிவது எப்படி என்கிற விஞ்ஞானத்தை, ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, தெளிவாக அறிந்திருந்தது போல் அல்லவா தோன்றுகிறது?

அதே போல இன்னொரு பாடலில் பொய்கையாழ்வார் இப்படிப் பாடுகிறார்.

என்று கடல் கரைந்தது ? எவ்வுலகம் நீறேற்றது ?
ஒன்றும் உணரேன் நான் அன்று அது
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது நீ
படைத்திடந்து உண்டு உமிழ்ந்த பார்.

இதன் விளக்கம் இது தான். “எப்போது கடலைக் கடைந்தாய்? எப்போது உலகை நீர் கொண்டு நிரப்பினாய்? இது எதுவும் எனக்குத் தெரியாது. அன்றொரு நாள் கடலை அடைத்து பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலே படுத்தும் உறங்குகிறாய். இவ்வுலகைப் படைக்கிறாய்; பெயர்த்தெடுக்கிறாய்; அதை உண்டு உமிழ்கிறாய்.

இதில் அடைத்து உடைத்து என்ற வரிக்கு சக்தியை ஒரு புள்ளியில் அடைத்து வெடிக்கச் செய்து பிரபஞ்சம் உருவாக்கிய Big Bang Theory யின் சாயல் இருப்பதாக சில அறிஞர்கள் வியாக்கியானம் செய்கிறார்கள்.

இப்படி ஆழ்வார்களின் அழகான பாசுரங்களில் பக்தி மட்டுமல்லாமல் அறிவியல் மற்றும் சமூக பிரக்ஞையும் மிக உயர்ந்த அளவில் இருப்பது நம்மை வியக்க வைக்கிறதல்லவா?

-என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 03.12.2013

Saturday, May 24, 2014

காஷ்மீரின் சில காமிரா பதிவுகள்! - 2

காஷ்மீரி உடையில்




குல்மார்கின் பனிக்காட்சி



எங்கெங்கும் பனிமயம் 


நான் என் மகளுடனும், தம்பி, அவன் மகனுடன்




அனந்த்நாக் அருகே உள்ள பாழடைந்த அவந்திபுரம் விஷ்ணு கோயில் தென்னாட்டுக் கோயிலை நினைவுபடுத்துகிறது.



இங்கு சிற்பம் சிதைந்தாலும் ஸ்ரீரங்கநாதரின் புன்னகை சிதையவில்லை



என் குடும்பமும் என் தம்பி குடும்பமும் குதிரைகளில் ...



மொகல் கார்டனில் மகள்களுடன்



’பேதாப் வேலி’யில் சகோதரனுடன்


காஷ்மீரை பூலோக சொர்க்கம் என்கிறார்கள். மறுக்க முடியவில்லை.

- என்.கணேசன்

Thursday, May 22, 2014

நம் பாவ புண்ணியம் நம் பிள்ளைகளுக்கா?


பெண்மை.காமில் அளித்த பேட்டியின் தொடர்ச்சி

ஸ்ரீமதி வெங்கட்: ஒரு பழ மொழி உண்டு மாதா பிதா செய்தது மக்களுக்கு,சொத்து மட்டும் இல்லை பாவ புண்ணியமும் தான் என்றால் என் கர்ம வினை தீர்க்க நான் ஏன் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்? என் மகளுக்கு மகனுக்கு தானே போய் சேர வேண்டும்.இதை என்னிடம் ஒரு mnc வேலை பார்க்கும் ஒருவர் கேட்டார்.. நீங்கள் இதற்கு என்ன சொல்வீர்கள்?


நான்: மாதா பிதா செய்தது மக்களுக்கு என்று சொல்வதில் உண்மை இல்லை. அவரவர் செய்தது அவரவர்க்கு மட்டுமே. பண்ணின பாவ புண்ணியக் கணக்கை இந்த ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மத்திலோ அவரவரே செலவு செய்து தீர்க்க வேண்டும். மாதா பிதா செய்ததற்கு ஏற்றாற் போல் பிள்ளைகள் இருப்பார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய இவர்கள் கணக்கை அவர்கள் ஏற்பார்கள் என்பது தவறான அபிப்பிராயம். வால்மீகி திருடனாக இருந்த போது தன் திருட்டுப் பாவங்களையும் தன் குடும்பம் ஏற்கும் என்று நம்பியிருந்து, நாரதர் அவரிடம் “உன் குடும்பத்தினர் ஏற்பார்களா என்று கேட்டுப் பார்” என்று சொன்ன பிறகு போய் மனைவி மக்களிடம் கேட்டாராம். அவர்கள் அதில் தங்களுக்குப் பங்கில்லை என்று கறாராகக் கூற வால்மீகி வாழ்க்கை திசை திரும்பியது என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.


ப்ரியா: I have a colleague who is a Maratti. We both share similar interest in reading. So I was just sharing my thoughts with her on "Paraman Ragasiyam". I quoted your lines about that comparison between cooking vessel and our own finger. Just because the vessel bears the brunt of fire, that doesn't make it powerful/greater(Sorry that I'm not quoting your exact words here). That was a fantastic comparison/narration. Hearing that she felt quite intrigued and asked me whether this book will be published/translated in other languages such as Hindi/English? So do you have any plans like that?


நான்:
பரம(ன்) இரகசியம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றும், அப்படி மொழி பெயர்க்கப்பட்டால் Best seller ஆக கண்டிப்பாக இருக்கும் என்று சில வாசகர்கள் என்னிடம் சொன்னார்கள். அதிலும் அர்ஜுன் என்ற ஒரு வாசகரும், சீதாலட்சுமி என்ற மூதாட்டியும் பல முறை தெரிவித்து ஆசைப்பட்டவர்கள். சீதாலட்சுமி அம்மாள் முதலில் இந்திய மொழிகளில் ஒன்றிற்கு பரம(ன்) இரகசியம் மொழி பெயர்ப்பு ஆனாலும் பரவாயில்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நேரம் வந்தால் மொழிபெயர்ப்பாகலாம். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் என் சில வாசகர்களைப் போலவே அது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியடையும் தருணமாகவே இருக்கும்.


கார்த்திகா:
என்னைக் கவர்ந்த Quotes ஏராளம். இப்போது உடனடியாக நினைவுக்கு வருபவை இவை-


* தீதும் நன்றும் பிறர் தர வாரா. - புறநானூறு


* உன் விவாதமும், பேச்சும் அறிவாளிகளோடு இருக்கட்டும். அதை விட்டு விட்டு முட்டாள்களோடு நீ விவாதம் செய்தால் முடிவில் பார்க்கின்ற பார்வையாளர்களுக்கு யார் முட்டாள் என்பது தெரியாமல் போய் விடும். – பெர்னாட்ஷா

 * Envy is ignorance. Imitation is suicide. - Emerson


* I am grateful to all those people who said “no”. It Is because of them I did it myself. –
Anonymous


* The happiest people are rarely the richest, or the most beautiful or even the most talented. Happy people do not depend on excitement and fun supplied by externals, they enjoy the fundamental, often very simple, things of life.Jane Canfield

சித்ரா: "நீங்கள் எழுதிய அமானுஷ்யன்..பரம(ன்) ரகசியம் இரண்டிலும்...அக்க்ஷய்......ஈஸ்வர் ..இருவரும் அசாதாரண திறமை படைத்தவர்கள்......

கதைக்களமும் வேறுமாதிரியானவை..............

அப்படி இருக்கும்பொழுது.....இவ்விருகதைகளிலும் ஒரு சிறிய...யதார்த்தமான.....காதல்..பாசம்..புரிதல் கலந்த..ஒரு பகுதி வருகிறது.......

என்னுடைய கேள்வி.....கதைகளத்திற்கு சிந்திக்கும் பொழுது.......இரண்டின் பாதைகளும்...வேறு வேறு...சிந்தனைகளிலும் கண்டிப்பாக மாற்றம் தேவைபட்டிருக்கும் ............

கதை படித்த எங்களுக்கே சில விசயங்களில் இருந்து வெளியில் வருவதற்கு நாட்கள் ஆகின்றன...நீங்கள் எப்படி நினைவுகளை....மாற்றி எழுதுகிறீர்கள்......

காதலும்....அதிகம் இல்லையென்றாலும் அப்பகுதியும் அதன் சிறப்புடன்..அழகிய பாடல் வரிகளுடன்........செல்கின்றது..


அதே சமயத்தில் ஆன்மிகம்......அமானுஷ்யம் ....அதீத சக்தி.....அனைத்தும் ஒரு நேர்கோட்டில் எப்படி உங்களால் முடிகிறது...

அதன் தாக்கம் இரண்டிலும் ஊடுருவவதில்லையா....


நான்: காதல், பாசம், ஆன்மிகம், ஆழ்மனசக்தி, அமானுஷ்யம் இவை எல்லாமே நான் ஆழமாய் உணரும் விஷயங்கள். ஒரே மனிதன் காதலனாய், மகனாய், பக்தனாய், புதியன கற்பதில் மாணவனாய், வித்தியாச அனுபவங்களை அனுபவிப்பவனாய் இருக்கிறானல்லவா. அந்தந்த இடத்தில் அதற்குத் தகுந்த மாதிரி மாறிவிடுவதை நாம் தினமும் பார்க்க முடிகிறதல்லவா? அப்படித் தான் எழுதுவதும். அந்தந்த அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் போது அதை ஆழமாய் உணர்கிற போது அந்தந்த பகுதிகள் சிறப்பாக வந்துவிடும்.


ப்ரியா: Religion-Spiritualism => Are they always connected/inter-linked??


நான்:
Religion-Spiritualism இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்க முடிந்தது என்றாலும், எப்போதுமே சார்ந்தது என்று சொல்லி விட முடியாது. மதங்களில் ஆழமாக ஈடுபடுபவர்களில் சிலர் ஆன்மிகத்தில் பூஜ்ஜியமாக இருப்பதையும் பார்த்திருக்கிறேன். அதே போல் ஆன்மிக ஞானம் உள்ளவர்கள் மதங்களிலும், அதன் சடங்குகளிலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.


கார்த்திகா: உங்களோட எழுத்தில் கண்டிப்பாக இது இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயம் ஏது?? உங்களோட எழுத்துக்கள் மூலமாக மற்றவர்களுக்கு நீங்கள் உணர்த்த நினைக்கும் விஷயம் எது..??

நான்: என் எழுத்தில் கண்டிப்பாக இது இருக்க வேண்டும் என்று எந்த ஒரு பிரத்தியேக விஷயத்தையும் நான் வைத்துக் கொள்வதில்லை. எழுதுகின்ற கதை அல்லது கட்டுரைக்குத் தகுந்தபடி ஏதோ ஒரு நல்ல செய்தி வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மட்டும் நினைக்கிறேன்.


ஸ்ரீமதி வெங்கட்: முக்திக்கு வழி ஞானமா? பக்தியா?எனக்கு தெரிந்த எல்லோரும் ஞானம் தேவை என்கின்றனர். ஆனால் கண்ணப்ப நாயனாருக்கு இருந்தது ஞானம் என்பதை விட ஒருவித முரட்டு பக்தி மட்டுமே. மேலும் மீரா ஆண்டாள் வெறும் பக்தி மூலம் முக்தி அடைந்தவர்கள். பிறகு ஞானம் எதற்கு? முக்திக்கு வழி ஞானம் என்று சொல்வதின் பொருள் என்ன?


நான்: முக்திக்கு கர்மம், பக்தி, ஞானம் என்று மூன்று வழிகள் உண்டு. அவற்றில் இந்த வழி உயர்ந்தது, அந்த வழி தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. எந்த வழிப் பயணம் நமக்கு ஏற்றது, நம் இயல்பிற்குப் பொருத்தமானது என்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் எதிலும் முழுமையாகப் போக வேண்டும். இடையிலேயே இளைப்பாறி விட்டால் முக்தி உட்பட நாம் எந்த இலக்கையும் அடைய முடியாது. இலக்கை அடைந்த பின் இறைவன் நீ ஏன் வேறு வழியில் வரவில்லை என்று கேட்க மாட்டான்.


கார்த்திகா: கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் இதை பண்ண மாட்டேன்னு நீங்க சொல்ற ஒரு விஷயம் எது??

நான்: எத்தனை கோடி கொடுத்தாலும் ஈனத்தனம் என்று நான் நினைக்கிற, தரம் தாழ்ந்த, செயல்களைச் செய்ய மாட்டேன். பணம் கண்ணியத்திற்கு ஈடாகாது.



(தொடரும்)


Wednesday, May 21, 2014

குருநானக் உபதேசித்த ஆன்மிகம்!


அறிவார்ந்த ஆன்மிகம்-38

சமூகத்தில் ஆன்மிகம் மலிந்து போகும் போதெல்லாம் மகான்கள் பிறந்து வழி காட்டுகிறார்கள். மனித குலத்தைத் திருத்தி நல்வழிப்பாதைக்குத் திருப்புகிறார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தில் (இன்றைய பாகிஸ்தானில்) லாகூருக்கு அருகே அப்படி அவதரித்தவர் தான் குருநானக் என்ற மகான்.

இளமையிலேயே அறநெறியில் மனிதன் வாழ்வதே அவன் இறை மார்க்கத்தில் வாழ்ந்து வருகிறான் என்பதற்கு அடையாளம் என்று நம்பியவர் அவர். மோசடிகளில் எல்லாம் மிகப்பெரிய மோசடி கடவுள் பெயரால் செய்யப்படும் மோசடி என்ற ஆணித்தரமான கருத்து குருநானக்கிற்கு உண்டு. இறைவன் பெருமை உணர்ந்தவர்கள் அறநெறியில் வாழவேண்டுமே அல்லாது ஏமாற்றிப் பிழைக்கலாகாது என்பதை எல்லா விதங்களிலும் உபதேசித்து வந்தார் குரு நானக். அவர் அதை உபதேசித்த விதங்கள் வித்தியாசமானவை.


 ஒருமுறை கயிலாயம், மானசரோவர் வழியாக கர்தார்பூர் என்ற நகருக்கு வந்தார் குருநானக். அங்கே ஒரு போலிச் சாமியார் ஒரு மேசை முன் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருப்பதுபோல் நடித்து வந்தான். அடிக்கடி கண்திறந்து மேசைமேல் விழும் நாணயங்களை மட்டும் கவனமாக எடுத்து வைத்துக் கொள்வான்! காசை எடுத்து வைத்துக் கொள்ளும் போது மட்டுமே அவனுடைய போலித் தியானம் கலையும்.

இதைப் பார்த்த குருநானக் ஒருநாள் அந்த போலிச் சாமியார் கண்மூடி இருந்த நேரத்தில் மேசையையே அப்புறப்படுத்தி விட்டார். கண்திறந்த போலிச் சாமியார், ""என் மேசை எங்கே, என் காசு எங்கே?'' என்று அலறினான்.

""புண்ணியம் செய்த மேசை அல்லவா அது! தன்மேல் விழும் காசை உன்னைப்போல் அது லட்சியம் செய்ததே கிடையாது. எனவே நீ மேலுலகம் போவதற்குள் காசில் ஆசை இல்லாத அந்த மேசை மேலுலகம் போய் விட்டது!'' என்றார் குருநானக். அவன் வெட்கித் தலைகுனிந்தான். "ஆன்மிகம் பணம் சம்பாதிப் பதற்கான வழி அல்ல. அது ஆண்டவனின்  அருள் பெறுவதற்கான மார்க்கம்!'' என்று  அவனுக்கு அறிவுறுத்தி திருத்தினார் குருநானக். 


குருநானக்கின் ஆன்மிகம் உலகியல் நெறிப்பட்டது. எல்லாரும் அவரவர் கடமையைச் செய்வது மிக முக்கியம் என்று சலிக்காமல் கூறுவார். ஒருநாள் அவரது அறவுரைகளைக் கேட்க ஒருவன் வந்தான். அந்த நேரத்தில் அவனது நண்பன் ஒருவன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தான். "நான் தங்கள் உபதேசத்தைக் கேட்பது நல்லதா? என் நண்பனுக்குப் பணிவிடை செய்வது நல்லதா?''  என்று அவன் கேட்டான் "நோயுற்றிருக்கும் உன் நண்பனுக்குப் பணி விடை செய். அதுவே நீ கடவுளின் அருளைப் பெறச் செய்யும் நல்ல செயல் ' என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் குருநானக். 


""இயன்றவரை எல்லாருக்கும் நல்லதே செய்யுங்கள். எதிரியைக்கூட மன்னியுங்கள். மனத்தாலும் பிறருக்குக் கெடுதல் நினையாதீர்கள்! அன்பே எல்லா மதங்களையும்விட உயர்வான மதம்'' என்றெல்லாம் அவர் சொன்ன உயர்ந்த கருத்துகள் மக்களைக் கவர்ந்தன. 

அமெனாபாத் என்ற ஊருக்கு அவர் சென்ற போது, அந்த ஊர் கவர்னரான மாக்பாகோ அவரைத் தன் வீட்டு விருந்துக்கு அழைத்தான். குருநானக்கோ ஏழைத் தச்சரான பாய்லாலு என்பவர் வீட்டிலேயே உணவு உண்பதாகக் கூறி அவன் அழைப்பை மறுத்துவிட்டார். பெரிய விருந்தே அளிக்க உத்தேசித்திருந்த தன்னைப் புறக்கணித்து விட்டு ஏழைத் தச்சன் வீட்டில் தந்த எளிய ரொட்டியையே உண்ட குருநானக் மீது செல்வந்தனான கவர்னரின் சீற்றம் அதிகமானது.  ஏன் தன் வீட்டு விருந்துக்கு வரவில்லை என்று கேட்டு நேரில் சென்று அவன் சீறினான். மக்கள் கவர்னரின் சீற்றத்தை குருநானக் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

”உன் வீட்டு உணவுக்கும் தச்சன் வீட்டு உணவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை உனக்கு நிரூபிக்கிறேன். உன் இல்லத்திருந்து ஒரு ரொட்டித் துண்டைக் கொண்டுவரச் சொல்! என்றார் குருநானக். உடனே அவன் தன் வீட்டில் இருந்து  ரெட்டித் துண்டை வரவழைத்தான். அந்த ரொட்டித் துண்டை கையில் எடுத்துப் பிழிந்தார் நானக். ரொட்டித் துண்டிருந்து செக்கச்செவேலென ரத்தம் வழிந்தது. நீ ஏராளமான ஏழைகளின் உழைப்பைச் சுரண்டினாயே? அவர்களின் ரத்தம்தான் இது! என்றார் நானக். பிறகு அந்த ஏழைத் தச்சன் அளித்த ரொட்டியைக் கையிலெடுத்துப் பிழிந்தார். அதிலிருந்து வெள்ளை வெளேர் என்று பால் வடிந்தது. கவர்னர் மாக்பாகோ திகைப்படைந்தான். எப்படி சம்பாதிக்க்றோம் என்பது தன் இல்லத்தின் உணவில் கூட பிரதிபலிக்கிறதே என்று புரிந்த அவன் மனம் மாறினான்.. அவர் மாபெரும் மகான் என்பதை உணர்ந்து வணங்கினான். அன்றிலிருந்து ஏழைகளைக் கொடுமைப் படுத்துவதில்லை என்று அவருக்கு வாக்குறுதியும் கொடுத்து அதன் படியே வாழ ஆரம்பித்தான்.

ஒருமுறை சஜ்ஜன் என்கிற கொள்ளைக்காரன் வீட்டுக்குத் தன் சீடர்களுடன் சென்று வாசலில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்ட குருநானக் இனிமையான குரலில் பாடலானார். திருட்டும் ஒரு தொழிலா, இத்தகைய பாவ வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா என்று தொடங்கிய பாடல் மெல்ல மெல்ல வளர்ந்தது. சஜ்ஜன் அதுவரை நிகழ்த்திய கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் அது புள்ளிவிவரத்தோடு விவரிக்கலாயிற்று! முதலில் திகைத்த சஜ்ஜன் போகப் போக கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். அவனால் கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் பணம் போனதால் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள் என்பதை அவர் பாடல் விவரித்தபோது, சஜ்ஜனின் கண்ணீர் அவர் பாதங்களைக் கழுவிக் கொண்டிருந்தது.
மகானே! நான் இதுவரை செய்த பாவங்களை எப்படித் தொலைப்பேன்? அதற்கு ஏதாவது ஒரு வழியை நீங்கள் தான்சொல்ல வேண்டும்! என்று அவன் கதறினான். அவன் பாவங்கள் தொலைய குருநானக் ஒரு வழி சொன்னார்.  அது இதுவரை வேறு எந்த ஞானியும் சொல்லாத புதிய வழி.  யாரையெல்லாம் கொன்றானோ யாரிடமிருந்தெல்லாம் திருடினானோ அவர்களின் வீட்டுக்கெல்லாம் மறுபடி சஜ்ஜன் போய்க் குற்றத்தை ஒப்புக்கொண்டு அங்குள்ளவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதே நானக் சொன்ன வழி.

சஜ்ஜன் தான் திருடிய வீடுகளையும் கொலைசெய்த வீடுகளையும் தேடிக் கண்டு பிடித்தான். அங்குபோய் அவன் கண்ணீர் விட்டு,  உண்மையைச் சொல்லி மன்னிப்பு கேட்ட போது அவனை நையப் புடைத்தவர்களும் உண்டு. கோபத்தில்  எட்டி உதைத்து அவமானப்படுத்தியவர்களும் உண்டு. அவன் பதிலுக்குத் தாக்காமல் கண்ணீரோடு அடி வாங்கிக் கொண்ட விதத்தைப் பார்த்து மக்கள் திகைத்தார்கள். மெல்ல மெல்ல ஆசைகளைக் குறைத்துக் கொண்டு ஒரு துறவிபோல் பின்னர் வாழலானான். குருநானக்கின் பெருமை சஜ்ஜனின் செயல் மூலமாக விறுவிறுவென்று பரவலாயிற்று.

இது போன்ற அவர் வித்தியாசமான அறிவுசார்ந்த அணுகுமுறையால் ஒரு அப்பழுக்கற்ற ஓர் உண்மையான மகான் தங்களிடையே வாழ்கிறார் என்பதை உணர்ந்து மக்கள் அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள்

இந்து,  இஸ்லாம்,  பௌத்தம்,  சமணம் ஆகிய எல்லா மதத்தவரின் புனிதத் தலங்களுக்கும் குருநானக் பயணம் செய்தார். அனைத்து இடங்களிலும் இறைவன் சத்திய கர்த்தர் என்ற நினைவுடன் வணங்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். அனைத்து மதத்தினர்களையும் அவர் ஒன்று சேர்க்கவும், அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் முயன்றார். இதனால் எல்லா மதத்தவரும் குருநானக்கிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர்.


குருநானக், மூன்று அத்தியாவசிய கடமைகளில் மனிதனின் வாழ்க்கை முறையைச் சுருக்கமாக கூறுகிறார். அவை-

வாண்ட் சாக்கோ – தன்னிடம் இருப்பதை உண்மையான தேவையில் இருப்போருக்கும், நம்மை விடக் குறைவாக இருப்போருக்கும் பகிர்ந்து கொள்தல் வேண்டும்.

கிராத் கரோ – நேர்மையாகவும், நியாயமாகவும் வாழ்தலும், சம்பாதிப்பதும் வேண்டும்.

நாம் ஜபோ – இறைவனுடைய திருப்பெயரை ஜபிக்க வேண்டும்.


சீக்கியர்களின் முதல் குருவான அவர் பொய், பித்தலாட்ட வாழ்க்கையை எதிர்த்தார். மனிதர்களுக்கு ஒருவன் தீமை செய்து வாழ்ந்து இறைவனுக்கு உகந்தவனாக மாட்டான் என்ற தீர்க்கதரிசன சிந்தனை அவரிடம் உறுதியாக இருந்தது. இதுவல்லவா அறிவார்ந்த ஆன்மிகம்!


-என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 26.11.2013



Monday, May 19, 2014

தினமணியில் பரம(ன்) இரகசியம் நாவல் விமர்சனம்

இன்று தினமணியில் வெளியான பரம(ன்) இரகசியம் விமர்சன்ம்


காதல், குடும்பம், பாசம், ஆழ்மன சக்தி, ஆன்மிகம், அமானுஷ்யம், அறிவியில் ஆராய்ச்சிகள், தத்துவம், சஸ்பென்ஸ் என்று பலதரப்பட்ட விஷயங்கள் அடங்கிய கலவை நாவல் இது. இருப்பினும் இந்நாவலில் ஆன்மிக உணர்வே தூக்கலாகத் தெரிகிறது. நாவல் முழுவதும் விசேஷ மானஸ லிங்கம் காட்சி தந்து நமது மனதில் நிறைந்து விடுகிறது. அத்துடன் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசப் பிணைப்பை மிகச் சிறந்த ஒரு திரைப்படத்தில் காண்பதைப் போல நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நூலாசிரியர். இத்துடன் மாமியார்-மருமகள், தாய்-மகன், தந்தை-மகள், பாட்டன்-பேரன், பாட்டி-பேரன் என பல்வேறு கதாபாத்திரங்களும் உயிரோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. கணபதியின் கதாபாத்திரமும், ஈஸ்வரின் கதாபாத்திரமும் மானுட மேன்மையை உணர்த்துவதாக உள்ளன. இத்தகைய மனிதர்கள் உலகில் ஆங்காங்கே பிறந்து வளர்ந்தால் உலகமே அன்பு மயமாகத் திகழும். சில மெகா தொடர்களில் ஏராளமான கதாபாத்திரங்களையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டு, சிக்கல்களை விடுவிக்கத் தெரியாத நிலையில் திடுதிடுப்பென சீரியலை முடித்துவிடுவார்கள். அதுபோலன்றி, இந்நாவலின் இறுதி முடிவு வாசகர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவலைப் படிப்பது ஓர் இனிய அனுபவம்.


நன்றி: தினமணி-நூல் அரங்கம் 19-05-2014

Saturday, May 17, 2014

காஷ்மீரின் சில காமிரா பதிவுகள்! - 1


காஷ்மீரின் அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. காணும் இடம் எல்லாம் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கின்றது. நாங்கள் கண்டு களித்தவற்றில் சில காட்சிகளை நீங்களும் கண்டு களியுங்களேன்....

படகு வீட்டில் இருந்து ஷிகாரா என்னும் குட்டிப் படகில் பயணம் செய்கையில் எடுத்தது -



தங்கியிருந்த படகு வீடு



மிகவும் புகழ் பெற்ற டுலிப் கார்டன்



டுலிப் கார்டனில் குடும்பத்தாருடன்



சோனாமார்கில் குடும்பத்தாருடன் பனிச்சறுக்கு




சோனா மார்கில் குதிரை சவாரி



கடுகு வயலில்



சிந்து நதிக்கரையில்



(மேலும் சில புகைப்படங்கள் அடுத்த வாரம்)

- என்.கணேசன்