என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, May 13, 2013

மேன்மையான யோக நிலை!




கீதை காட்டும் பாதை 25



வழும் குழந்தை ஓடுவதற்கு முன் உட்கார, நிற்க, நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இது எல்லோருக்கும் தெரிகிறது. யாருமே தவழும் குழந்தை நாளையே ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. ஆனால் தியானம் விஷயத்தில் மட்டும் பெரும்பாலான மக்களின் ஆசை அந்த அளவில் தான் இருக்கிறது. கட்டுக்கடங்காத மனம் ஒருசில பயிற்சிகளிலேயே உடனடியாக தியான நிலைக்கு வந்து விட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். அதில் தோல்வி வருவது இயற்கை என்றாலும் அந்த இயற்கை விளைவிலேயே சலிப்பும் அடைகிறார்கள்.

யோக நிலைக்கு செல்லும் முன் முதலில் வாழ்க்கை ஒரு ஒழுங்கு முறைக்குள் ஒரு வரம்புக்குள் வர வேண்டும்.  அப்போது தான் மனம் ஒழுங்கு நிலைக்கு வரும். அதன் பின் தான் அதற்கு அடுத்த நிலையான தியானம் அல்லது யோக நிலைக்குப் போக முடியும்.  ஸ்ரீகிருஷ்ணர் தியான யோகத்தில் அதை மறுபடியும் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஒழுங்கிற்கு உட்பட்ட உணவும், செயல்களும் உடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்கிற்கு உட்பட்டவனாய் இருப்பின் அவனுடைய  யோகம் துயரை அழிக்கும்.

மனதை சிறிது சிறிதாக ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்த பின் தான் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒருவன் முயலவே முடியும். அப்போதும் கூட அது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் அதற்கான குறைந்த பட்சத் தகுதியைப் பெற்று விட்ட நிலை அது. விடாமுயற்சியால் முடியக் கூடிய யோக நிலையை மேலும் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

எப்போது ஒருவனுடைய சித்தம் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு ஆத்மாவிலேயே நிலைத்திருக்குமோ, சகல ஆசைகளிலும் பற்று நீங்கியதாக இருக்குமோ அப்போது அவன் யோகி என்று சொல்லப்படுகிறான்.

சித்தத்தை அடக்கி  ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியின் யோக நிலைக்கு, காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கே உவமையாகும்.

ஒரு கணமும் ஓரிடமும் நிலைத்து நிற்க முடியாமல் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டு இருக்கும் மனம், அதில் சந்தோஷம், இதில் சந்தோஷம் என்று பொய்யான அனுமானங்களில் முயன்று முயன்று ஏமாறும் மனம், தெளிவடைந்து வெளி நோக்கை விட்டு விட்டு உள் நோக்கிப் பயணிக்கும் போது யோகம் கைகூட ஆரம்பிக்கும். அனுபவத்தாலும், அறிவாலும் ஆசைகள் புதைகுழி என்று கவனமாக அவற்றில் இருந்து கவனமாக விலகி ஆத்மாவில் நிலைத்து நிற்கும் போது யோகம் முழுமையாக கைகூடுகிறது. அப்போது தான் மனிதன் யோகி ஆகிறான்.

அவனது யோக நிலைக்கு கீதை சொல்லும் இந்த உதாரணம் மிக அழகானது. காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கு’  தங்குதடை இல்லாமல் சீரான ஒளியைத் தரக்கூடியது. திடீரென்று பிரகாசித்து திடீர் என்று அணையக்கூடிய அபாயநிலைக்குச் செல்லும் விளக்கின் ஒளி தெளிவாக எதையும் காட்டாது. தெரிவது என்ன என்று தெளிவாக அறிவதற்குள் அதன் ஒளிக் குறைவால் குழப்பம் அல்லது அரைகுறையாய் அறியும் தடுமாறும் நிலை காற்றில் அசையும் விளக்கில் அதிகம். காற்றின் வேகம் அதிகம் இருந்தாலோ பெரும்பாலும் விளக்கு அணைந்தே போய் இருட்டில் மூழ்க வேண்டி வரும். அப்போது விளக்கு இருந்தும், திரி இருந்தும், எண்ணெய் இருந்தும் கூடப் பயனில்லை.

யோக நிலை கூடிய மனிதனோ காற்றோட்டம் இல்லாத இடத்தில் அசைவின்றி எரியும் விளக்கு போல எல்லா நேரங்களிலும் சீரான ஞான ஒளியுடன் திகழ்கிறான். ஞானம் அவ்வப்போது குறையும் பலவீனமோ, ஞானம் அணைந்தே போகும் அபாயமோ யோகியிடம் இல்லை.

ஸ்ரீகிருஷ்ணர் மேலும் யோகத்தின் மேன்மையான நிலையை விளக்குகிறார்.

யோகப் பயிற்சியால் கட்டுப்படுத்தப்பட்ட சித்தமானது எங்கே பூரணமாய் லயித்து நிலைத்திருக்கிறதோ, எந்த நிலையில் ஆத்மாவினால் ஆத்மாவை அறிந்து ஒருவன் மகிழ்ச்சி அடைகிறானோ,

எந்த நிலையில் புலன்களைக் கடந்து நிற்கும் பேரின்பத்தை புத்தியால் அறிகிறானோ, எதில் நிலைத்த பின் அவன் உண்மையில் இருந்து வழுவுவதில்லையோ,

எதை அடைந்த பின் மற்றொரு லாபம் உயர்ந்ததென்று கருத மாட்டானோ, எதில் நிலைத்த பின் பெரிய துக்கம் வந்தாலும் சஞ்சலப்பட மாட்டானோ,

அதை துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகம் என்று அறிவாயாக. மனம் கலங்காமல் திடமாக ஒருவன் அந்த யோகத்தைப் பயில வேண்டும்.

புலன்களைக் கடந்து நிற்கும் பேரின்பத்தை முட்டாள்கள் அடைய முடியாது. எத்தனை சந்தர்ப்பங்களில் புலன்கள் வழிப்போய் அவஸ்தையில் மாட்டிக் கொண்டாலும் அவன் அடுத்தது அப்படி இருக்காது என்ற மூட நம்பிக்கையில் மேலும் புலன்வழியிலேயே சந்தோஷத்தைத் தேடுகிறான். அனுபவங்கள் அவனுக்கு எதையும் கற்றுக் கொடுப்பதில்லை. பலர் பல சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாமல் அப்படியே பிறவிகள் தோறும் முயன்று ஏமாறுகிறார்கள்.

சித்தம் ஆத்மாவில் நிலைத்து நிற்கும் போதே நிலையான இன்பம் சித்திக்கின்றது. அது சாதாரண இன்பம் அல்ல பேரின்பம். அந்த நிலையை ஒருவன் அடைய முடிந்தாலும் விவரிக்க முடியாது. விவரித்தாலும் மற்றவர்க்கு விளங்க வைக்க முடியாது.  சமுத்திரத்து தவளை கிணற்றுத் தவளைக்கு சமுத்திரத்தை எப்படி விவரிக்க முடியும். விவரிக்க முயன்றாலும் கிணறை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அறிந்த கிணற்றுத் தவளை கிணறு என்ற அளவுகோலால் அல்லவா சமுத்திரத்தை அளக்கவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்கும். முடிகி  காரியமா அது!

யோக நிலையை அடைந்தவனுக்குப் பொய்யின் அவசியம் இருக்காது. எந்தப் பூச்சும் தேவை இருக்காது. எனவே உண்மையிலிருந்து விலகவோ, உண்மையைத் திரிக்கவோ அவன் முயலமாட்டான். மேலும் அந்த யோக நிலையை அடைந்த பின் வேறெதுவும் அதைக்காட்டிலும் லாபமாக இருக்க முடியாது. அதன் பின் எந்த துக்கம் வந்தாலும் உண்மையில் கலங்க வேண்டிய காரணம் இருப்பதாக யோகி நினைக்க மாட்டான். எல்லாம் தெளிவாகவும், உறுதியாகவும் அறிந்த பின் சஞ்சலப்பட என்ன இருக்கிறது?

அந்த யோக நிலையை விளக்கிக் கொண்டே வந்த ஸ்ரீகிருஷ்ணர் கடைசியில் ஒரே வாக்கியத்தில் அதற்கு விளக்கம் தருகிறார். துக்கத்தின் சேர்க்கைக்கு எதிர்மாறான யோகம். எதெல்லாம் துக்கத்தை நம்மிடம் சேர்க்குமோ அதற்கு எதிர்மாறான யோகம் என்கிறார். துக்கமே வேண்டாம் என்று சொல்பவர் அடைய வேண்டிய யோக நிலை இது. அதை கலங்காத, திட மனதுடன் ஒருவர் கற்றுத் தேர்ந்தால் பின் கற்க எதுவுமில்லை. பின் பெற வேண்டியதும் எதுவுமில்லை.

இந்த யோக நிலையை, ஸ்ரீகிருஷ்ணர் போலவே, திருமூலரும் மிக எளிமையான சொற்களில் அழகாக விளக்குகிறார்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!

எந்தக் கேடும், எந்த துக்கமும் வேண்டாம் என்று நினைப்பவன் முதலில் தன்னை அறிய வேண்டும். ஏன் என்றால் எல்லாத் தீமையும், எல்லாத் துக்கங்களும் மனிதன் தன்னை அறியாத குறைபாட்டால் தான் வருகின்றன. தன்னை அறியும் அறிவை, அந்த யோக நிலையை அடைந்த பின், அறிந்த அந்த ஆத்மநிலையையே போற்றி அவன் பூரண திருப்தியுடன் வாழ்வான்.

பாதை நீளும்....

-          என்.கணேசன்

Thursday, May 9, 2013

பரம(ன்) ரகசியம் – 43




வேதபாடசாலையில் இருந்து ஈஸ்வருக்கு அடுத்த நாளே வரச் சொல்லி அழைப்பு வந்தது. வேதபாடசாலையில் தற்போது குருஜி தங்கி இருக்கிறார்  என்றும், ஈஸ்வர் விரும்பினால் அவரையும் சந்தித்துப் பேசலாம் என்றும் சொன்னார்கள். நண்பன் சொன்னதற்காக ஈஸ்வர் வேதபாடசாலை செல்கிறானே ஒழிய மற்றபடி அங்கு செல்வதில் அவனுக்குப் பெரிதாக ஆர்வம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் குருஜியைச் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பமும் கிடைப்பதை அவன் எதிர்பாராத அதிர்ஷ்டமாகவே நினைத்தான்.

அவன் குருஜியின் சொற்பொழிவுகளை அவன் தொலைக்காட்சி மூலமாகவும், இணையம் மூலமாகவும் நிறைய கேட்டிருக்கிறான். அவரது அறிவுத்திறனைக் கண்டு பிரமித்துப் போயிருக்கிறான். ஆன்மிகத்தில் அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாதா என்று பல முறை வியந்திருக்கிறான்.  வேதங்கள், உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம், தம்மபதம், பைபிள், குரான், என்று அவர் அனாயாசமாக மேற்கோள்கள் காட்டிப் பேசுவது பேசும் விஷயத்திற்குத் திணிக்கப்படுவது போல் ஒரு முறை கூட அவனுக்குத் தோன்றியதில்லை. மிகக் கச்சிதமாகப் பொருந்தும்படியாகவே இருக்கும். பதஞ்சலியின்  யோகசூத்திரங்களுக்கு அவர் ஆற்றிய உரைகளை அவன் பலமுறை கேட்டிருக்கிறான். அவனது துறைக்குப் பொருத்தமான எத்தனையோ தகவல்கள் அவர் உரைகளில் இருந்து அவனுக்குக் கிடைத்திருக்கிறது. அவர் ஒரு காலத்தில் இமயமலையில் சித்தர்களுடனும், யோகிகளுடனும் இருந்து நிறைய கற்றிருக்கிறார் என்று கேள்விப்பட்ட பின் அவரை என்றாவது ஒருமுறை சந்திக்க வேண்டும், அவர் அனுபவங்கள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என சில முறை எண்ணி இருக்கிறான். இப்போது தானாகவே அந்த சந்தர்ப்பம் அமைந்தது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

சொல்லப் போனால் விஷாலியால் காயப்பட்ட மனதுக்கு கிடைத்த முதல் சந்தோஷம் அது தான். வேறெதிலாவது மூழ்கி அவளை மறந்து விட அவன் மனம் ஆசைப்பட்டது. அது முடிகிற காரியமாய் தெரியவில்லை. சில நிமிடங்கள் மறக்க முடிந்தாலும் சீக்கிரமே ஏதாவது ஒரு காரணம் பிடித்துக் கொண்டு அவள் அவன் நினைவில் வந்து கொண்டிருந்தாள். மனம் ரணமானது. அவன் அந்த ரணத்தை வெளியே காண்பிக்காமல் எத்தனை ஜாக்கிரதையாய் பாதுகாத்தாலும் முதலில் கண்டுபிடித்தவள் ஆனந்தவல்லி தான்.

என்னடா பாட்டு எதுவும் காணோம். ரெண்டு நாளா இங்கிலீஷ்லயும் தமிழ்லயும் பாடிகிட்டு இருந்தே. இப்ப உம்முன்னு இருக்கே

‘என்னைக் கவனிக்கறதைத் தவிர இந்தப் பாட்டிக்கு வேற வேலையே இல்லையாஎன்று மனதில் நினைத்துக் கொண்ட ஈஸ்வர் வெளிப்பார்வைக்கு அலட்டிக் கொள்ளாமல் சொன்னான். “அப்படி எல்லாம் இல்லையே

“சும்மா மறைக்காதேடா. எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லு. என்னடா பிரச்சனை?என்று அவன் அருகே வந்து கவலையுடன் ஆனந்தவல்லி கேட்ட போது அவள் அன்பில் மனம் இளகியவனாய் ஈஸ்வர் அவள் தோளைப் பிடித்து அணைத்துக் கொண்டு சொன்னான். “ஒன்னுமில்லை பாட்டி

அவளும் அவனது செய்கையால் மனம் குளிர்ந்தாள். மேற்கொண்டு அவள் எதுவும் கேட்பதற்கு முன் அவன் அலைபேசி அவனைப் பாடி அழைத்தது.

அழைத்தவர் பார்த்தசாரதி. ...சீர்காழி கோயில்ல இருந்த பையன் மாயமா மறைஞ்சுட்டான். அவனைப் பத்தியோ, அவனைக் கூட்டிகிட்டு போனவங்க பத்தியோ புதுசா எந்தத் தகவலும் கிடைக்கலை. போலீஸ் போகறதுக்கு கொஞ்ச நேரம் முன்னால் தான் யாரோ கூட்டிகிட்டு போயிருக்காங்க. ... நீங்க சொன்ன ஆன்மிக பாரதம் புஸ்தகம் எழுதின நீலகண்ட சாஸ்திரி பத்தின முழு விவரமும் கிடைச்சுடுச்சு. அவர் காரைக்குடியை சேர்ந்தவர். அவர் இறந்து 22 வருஷம் ஆயிடுச்சு. அவர் மூத்த மகன் இன்னும் இருக்கார். இப்ப சென்னையில மயிலாப்பூர்ல இருக்கார். ஸ்டேட் பேங்க்ல வேலை பார்த்து ரிடையர் ஆனவர். அவரைக் கண்டு பிடிச்சு பேசினேன். அந்த ஆன்மிக பாரதம் புஸ்தகத்தோட ஒரு பிரதியை இன்னும் வச்சிருக்கார். என் கைல குடுத்தார். 178 ஆவது பக்கத்துல உங்க விசேஷ மானஸ லிங்கம் பத்தியும், இன்னொரு நவபாஷாண லிங்கத்தைப் பத்தியும் சொல்லி இருக்கார். படிக்கட்டுமா?

அந்தப் பக்கத்தை பல முறை படித்திருந்தாலும் வேண்டாம் என்றால் பார்த்தசாரதிக்கு சந்தேகம் ஏற்படலாம் என்ற காரணத்தால் குரலில் ஆர்வத்தைக் கொட்டி சொன்னான். “படிங்க சார்

பார்த்தசாரதி படித்தார். அவர் படித்து முடித்த பின் ஈஸ்வர் “ஆச்சரியமாய் இருக்கு சார். இப்ப நடந்ததை எல்லாம் பார்க்கறப்ப அவர் சொன்ன மாதிரி தான் ஆயிருக்கறதா தோணுதுஎன்றான்.

அந்தப் புஸ்தகத்துல எழுதாத இன்னொரு தகவலையும் நீலகண்ட சாஸ்திரி மகன் சொன்னார். நம்ப முடியலை. நம்பாமல் இருக்கவும் முடியலை....

“என்ன சொன்னார் சார்?இப்போது ஈஸ்வர் உண்மையாகவே ஆர்வத்தோடு கேட்டான்.

“நீலகண்ட சாஸ்திரி அந்தப் புஸ்தகம் பிரசுரிச்சு சில வருஷங்கள் கழிச்சு யாரோ ஒரு பெரியவரை சந்திச்சாராம். அவர் விசேஷ மானஸ லிங்கம் பத்தி முழுசா தெரிஞ்சவராம். அவர் சொன்னாராம். 2012, 2013 வருஷங்கள்ல உலகம் எல்லாம் அனர்த்தங்கள் அதிகமா நடக்கப் போகுது. மனுஷன் விலங்குகளை விட மோசமா நடந்துக்கப் போறான். எவனும் நிம்மதியா இருக்க முடியாத மாதிரி சூழ்நிலைகளும், வியாதிகளும், இயற்கை சீற்றங்களும் இருக்கும்.  அந்த நேரத்துல இந்த விசேஷ மானஸ லிங்கமும் கைமாறுகிற சூழ்நிலை வரும். அது சுமுகமா இருக்காது. நிறைய அழிவுகள் வரும். இதுல நம் தேசத்து ஆட்கள் மட்டுமல்லாமல் அன்னியர்களும் சம்பந்தப்படுவாங்க. அந்தக் காலக் கட்டத்துல கலிமுத்தினதுக்கு எல்லா அறிகுறிகளும் தெரியும்...” ”

ஈஸ்வர் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். எத்தனையோ வருடங்களுக்கு முன்பே 2012, 2013 வருடங்களில் இப்படி எல்லாம் நடக்கும் என்று சொல்ல முடிந்தது ஜோதிடமா, பெரியவர்களின் தீர்க்கதரிசனமா? பசுபதியை ஒரு வெள்ளைக்காரர் பார்க்க அனுமதி கேட்டார் என்ற தகவலையும், அவர் சிவலிங்கத்தைத் திருடிச் சென்ற கூட்டத்தில் ஒருவராக இருக்கலாம் என்ற பார்த்தசாரதியின் சந்தேகத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது அன்னியர்களும் சம்பந்தப்படுவார்கள் என்பது பொருந்துகிறது.  அவன் கேட்டான். “கடைசில என்ன ஆகும்னு சொன்னாராம்?

பார்த்தசாரதி சிரித்தார். “நானும் அதைத் தான் கேட்டேன். அதை அந்தப் பெரியவர் சொல்லலையாம். நீலகண்ட சாஸ்திரி மகன் சொல்றார். “அன்னைக்கு அப்பா கிட்ட அந்தப் பெரியவர் சொன்னதெல்லாம் நடந்துட்டு வர்றதுங்கறதை தினமும் நியூஸ்பேப்பர் படிக்கறப்ப நினைச்சுப்பேன். ஆனா விசேஷ மானஸ லிங்கம் பத்தி மட்டும் ஒன்னும் விவரம் தெரியலை. அது இமயமலைப் பக்கம் நடந்துகிட்டிருக்கோ என்னவோ”.  நான் அவர் கிட்ட அது இங்கேயே நடந்துகிட்டு இருக்குன்னு சொல்லப் போகலை... எனக்கு திடீர்னு அந்த ஆளும் சிவலிங்கத்தை திருடிட்டு போன கூட்டத்துல ஒரு ஆளா இருக்குமான்னு கூட சந்தேகம் வந்துச்சு. ஆனா அந்த ஆளால் மூச்சு வாங்காமல் நாலடி நடக்க முடியலை. அதைப் பார்க்கறப்ப அந்தக் கூட்டம் இல்லை எந்தக் கூட்டத்துலயும் இடம் பிடிக்கற அளவு தெம்பு அவர் கிட்ட இல்லைன்னு தோணுது...

ஈஸ்வர் புன்னகைத்தான்.

பார்த்தசாரதி சொன்னார். “நான் உங்க கிட்ட நேர்ல பேச வேண்டியது கொஞ்சம் இருக்கு. நாளைக்கு சந்திக்கலாமா?

“நாளைக்கு வேறொரு இடத்திற்குப் போக வேண்டி இருக்கு. அடுத்த நாள் சந்திக்கலாமா?

பார்த்தசாரதி சம்மதித்தார். தோட்ட வீட்டிலேயே சந்திக்கலாம் என்று சொன்னார். ஈஸ்வர் பேசி முடித்த போது ஆனந்தவல்லி கேட்டாள். “யார் பேசினது?

போலீஸ் ஆபிசர் பார்த்தசாரதி

“அந்த் ஆள் பசுபதியைக் கொன்னவங்களை கண்டுபிடிச்சுட்டானா

“இன்னும் இல்லை

பேச்சுல தான் கெட்டிக்காரன் போல இருக்கு. இப்படி மணிக்கணக்குல பேசிகிட்டு இருந்தா அப்புறம் கண்டுபிடிக்க எப்படி நேரம் கிடைக்கும்?

ஈஸ்வர் வாய் விட்டுச் சிரித்தான். பார்த்தசாரதி இங்கு வராமல் தோட்ட வீட்டில் சந்திக்கலாம் என்று சொல்ல முக்கிய காரணம் ஆனந்தவல்லி தான் என்பதில் அவனுக்கு சந்தேகமேயில்லை.

ணபதியின் தாய் காமாட்சிக்கு நான்கு நாட்களாய் மனதில் ஏதோ இனம் புரியாத பெரும் பீதி எழுந்து கொண்டே இருந்தது. முதலில் குருஜி சொன்னார் என்ற காரணத்திற்காகவும், தினம் ஐநூறு ரூபாய் கிடைக்கும் என்ற காரணத்திற்காகவும் கணபதி போகிற இடத்தைக் கூட சொல்லாமல் போனது அந்தத் தாய் உள்ளத்திற்குச் சரியாகப் படவில்லை. தன் வயது வந்த பெண்களைக் கூட எங்கு அனுப்பவும் அவள் பயப்பட்டதில்லை. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ளத் திறம் படைத்தவர்கள் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் கணபதி அப்படி அல்ல. தன்னைப் பற்றியோ, தன் லாபத்தைப் பற்றியோ, தன் பாதுகாப்பைப் பற்றியோ நினைக்கத் தெரியாத வெகுளி அவன். அவனை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்.

ஆனால் அவனை அழைத்துக் கொண்டு போனவர் சாதாரண ஆள் அல்ல, அனைத்து தரப்பினரிடமும் நன்மதிப்பு பெற்றிருந்த குருஜி, அவர் கண் அசைவுக்கு எதையும் செய்ய அதிகார வர்க்கத்தில் இருந்து அன்றாடங்காய்ச்சி வரையும், கோடீஸ்வரர்களில் இருந்து குடிசைவாசிகள் வரையும் தயாராக இருக்கையில் அவர் கணபதியை ஏமாற்றி எதையும்  சாதிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர் என்பதை காமாட்சி மனதில் திரும்பத் திரும்பச் சொல்லிச் சமாதானப்படுத்திக் கொண்டாள். ஆனாலும் தினமும் கணபதி போனிலாவது பேசிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றி வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான்கு நாட்களுக்கு முன் கணபதியைத் தேடி ஒரு முதியவர் வந்தார். முதலில் பிள்ளையார் கோயிலுக்குப் போனவரை சுப்புணி தான் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான். கணபதி இல்லை என்று சொன்னவுடன் அவன் எங்கே போயிருக்கிறான் என்று அவர் கேட்டார். போன இடம் தெரியாது என்று சொன்ன போது அந்த முதியவர் என்ன செய்வதென்று நிறைய நேரம் யோசித்தார்.

சுப்புணி அந்த இடத்தை விட்டுப் போகும் வரை காத்திருந்து விட்டு பிறகு ஒரு முடிவெடுத்தவராக அந்த முதியவர் அரக்கு வைத்த உறை ஒன்றை காமாட்சியிடம் தந்து விட்டு கணபதி வந்தவுடன் அதை அவனிடம் பத்திரமாக, கண்டிப்பாகத் தந்து விடச் சொன்னார்.  

நீங்க யாரு

“சுப்பிரமணியன்என்று மட்டும் அவர் சொன்னார்.

“இதுல என்ன இருக்கு? இதை ஏன் கணபதி கிட்ட தர்றீங்க?

“அதுல என்ன இருக்குன்னு எனக்கே தெரியாதும்மா. கணபதி கிட்ட தரச் சொல்லி எனக்கு உத்தரவு. அதான் தந்துட்டு போக வந்தேன். தயவு செய்து நீங்கள் யாரும் அதைத் திறந்து படிக்க வேண்டாம். அது கணபதி கண்ணில் மட்டும் பட வேண்டியது. நான் வரட்டுமா

அவள் மற்ற கேள்விகளை நினைப்பதற்குள் அவர் போய் விட்டிருந்தார். காமாட்சிக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் அவர், இதைக் கணபதியிடம் தர அவருக்கு உத்தரவு போட்டவர்கள் யார் என்றெல்லாம் அவர் தெளிவாகச் சொல்லாமல் விட்டது அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனாலும் அது கணபதி கண்ணில் மட்டும் பட வேண்டியது என்பதை அந்த முதியவர் அழுத்திச் சொன்னதால் அவள் அந்த உரையைப் படிக்கப் போகவில்லை. ஆனால் நான்கு நாட்களாக அவளுக்குள் ஒரு பெரும்பயம் அடிக்கடி எழுந்து அவளைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. நான்காம் நாள் இரவிலோ கணபதியின் உயிருக்கே ஆபத்து வருவது போல் கனவு வந்தது. அந்த அரக்கு வைத்த உறை கூரிய கத்தியாய் மாறி கணபதியின் கழுத்தை அறுப்பது போல வந்த கனவு கலைந்து அலறியபடி விழித்தவள் பின் உறங்கவே இல்லை.

மூத்த மகள் சொன்னாள். “பேசாமல் அதைப் பிரிச்சு பார்த்துடேன்

அவர் அதை அவன் மட்டும் தான் பார்க்கணும்னு சொன்னாரேடி

அப்படின்னா அவன் வந்து படிச்சுக்கட்டும். விட்டுடுஇரண்டாம் மகள் சொன்னாள்.

“அவன் படிச்சே ஆக வேண்டிய முக்கியமான விஷயம் அதில் இருக்கும் போல இருக்குடி. அந்தப் பெரியவர் சொன்னது எனக்கு அப்படித் தான் பட்டுது. அவன் அதை லேட்டாகப் பார்த்தால் ஏதோ ஆபத்து இருக்கும்னு தோணுதேடி

“சரி அப்படின்னா அதை அவனுக்கு அனுப்பிடேன்

எப்படிடி அவன் எங்கே இருக்கான்னே தெரியலையேடி

“அவன் எங்கே இருக்கான்கிறது அந்தக் குருஜி கிட்ட கேட்டால் சொல்லிட்டுப் போறாரு.

“அவர் போன் நம்பர் நம்ம கிட்ட இருக்காடி?

மூத்த மகள் கணபதி தொலைபேசி எண்கள் எழுதி வைத்த பாக்கெட் டைரி ஒன்றை எடுத்துப் பார்த்தாள். இதுல குருஜி வீட்டு லேண்ட்லைன் நம்பர் இருக்கு

உடனடியாக காமாட்சி அந்த எண்ணிற்குப் போன் செய்தாள். குருஜியின் காரியதரிசி பேசினான். குருஜி வெளியூர் சென்றிருப்பதாகவும் அவர் ஒரு வாரம் கழித்து தான் வருவார் என்றும் சுரத்தில்லாமல் சொன்னான். இதைச் சொல்லிச் சொல்லியே அவனுக்கு அலுத்து விட்டிருந்தது.

“சரி கணபதி எங்கே இருக்கான்?

அவன் திடுக்கிட்டுப் போனான். “யார் பேசறது?

“நான் கணபதியோட அம்மா பேசறேன்

கணபதி இங்கில்லையேம்மா. என்ன விஷயம்மா?

“அவனுக்கு ஏதோ முக்கியமான கடிதம் வந்திருக்கு. அதை அவன் கிட்டே தரணும். அதான் கேட்டேன். அது பத்தி எப்படியாவது அவன் கிட்ட நான் அதைப் பேசியாகணும். அவன் இருக்கற இடத்துப் போன் நம்பர் தாங்ககாமாட்சியின் குரலில் அசாதாரண உறுதி தெரிந்தது.

காரியதரிசி சொன்னான். நான் கணபதியையே உங்க கிட்ட கொஞ்ச நேரத்துல பேசச் சொல்றேன்ம்மா

அடுத்து அவன் அவசர அவசரமாகக் குருஜியை அழைத்துத் தகவலைச் சொன்னான். குருஜியின் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. ஒரு நிமிஷம் யோசித்து முடித்து விட்டு கணபதியை உடனடியாக அங்கு அழைத்து வரச் சொன்னார்.

கணபதி வந்தான். “என்ன குருஜி?

உங்கம்மாவுக்கு உன்  கிட்டே பேசணுமாம்

கணபதி முகத்தில் கலவரம் பரவியது. “எங்கம்மாவுக்கு என்ன ஆச்சு?

“ஒன்னும் ஆகலை. உனக்கேதோ லெட்டர் வந்திருக்காம். அது பத்தி பேசணுமாம். நீயே போன் செஞ்சு பேசு.

கணபதி நிம்மதி அடைந்தான்.. “எனக்கு லெட்டர் போடறா மாதிரி யாருமே இல்லையே குருஜி. ஒருவேளை அது அட்ரஸ் மாறி வந்திருக்கும். எங்கம்மாவுக்கு அது கூட தெரியலை போல இருக்கு. நம்ம பையனுக்கும் ஏதோ லெட்டர் வந்திருக்குன்னு பெருமையா போன் பண்றா போல இருக்குசொல்லி விட்டு கலகலவென கணபதி சிரித்தான்.

புன்னகைத்த குருஜி சொன்னார். “எதுக்கும் நீ போன் செய்து பேசினா தெரிஞ்சுடும். அவங்களுக்கும் உன் கிட்ட பேசின திருப்தி இருக்கும்இந்தப் போன்லயே பேசு. வேணும்கிற அளவு பேசு. நான் உள்ளே போறேன்.

குருஜி உள் அறைக்குப் போனார்.

கணபதி நன்றியுடன் தலையாட்டி விட்டு போன் எண்களை அழுத்த ஆரம்பித்தான். அவனுக்கும் அம்மாவிடம் பேச வேண்டும் போல இருந்தது. ‘அம்மா கிட்ட பேசி எத்தனை நாளாச்சு...

உள் அறையில் நுழைந்தவுடன் போன் ரிசீவரை எடுத்த குருஜி கணபதியின் தாய் என்ன சொல்லப் போகிறாள் என்பதைக் கேட்கத் தயாரானார்.

(தொடரும்)
-          என்.கணேசன்




Monday, May 6, 2013

உண்மையான பக்தி








அறிவார்ந்த ஆன்மிகம் - 5


உண்மையான பக்திக்கு நம் நாட்டு புராண இதிகாசங்களில் என்றுமே முதலிடம் இருந்திருக்கின்றது. வேள்விக்கும் தவத்திற்கும் கூட இறைவன் தாமதமாக அருள் புரிவதுண்டு, ஆனால் பக்திக்கு இறைவன் விரைந்து வந்து அருள் புரிவான் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அனுமாருடைய பக்தி அவருக்குக் கொடுத்த எல்லையற்ற சக்தி பற்றி வால்மீகியும், கம்பனும் சலிக்காமல் சொல்கிறார்கள். உண்மையான பக்தி அடியாருக்காக இறைவனை மண் சுமக்கவும், பிரம்படி படவும் வைத்ததென்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது.


உண்மையான பக்திக்கு அத்தனை சக்தியும் பெருமையும் இருக்கின்றது. உண்மையான பக்தியில் பக்தன் என்ன செய்தாலும் இறைவன் பொறுத்துக் கொள்கிறான். அதே போல உண்மையான பக்தியில் இறைவனுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பக்தனும் தயாராக இருக்கிறான். இதற்கு கண்ணப்ப நாயனார் கதையை விடப் பொருத்தமான உதாரணத்தைச் சொல்ல முடியாது.


பொதப்பி நாட்டிலுள்ள உடுப்பூரில் வேட்டுவ இனத்தில் பிறந்தவர் திண்ணனார். குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலானவற்றில் பயிற்சிகளைக் கற்றுச் சிறப்படைந்தவர். ஒரு நாள் திண்ணனார் நாணன், காடன் என்ற நண்பர்களோடு தன் முதல் வேட்டைக்குச் சென்றார். சென்ர இடத்தில் வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் தப்பி ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப் பன்றியைத் திண்ணனார் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள்.


இளைப்பாறும் போது அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணனார். இதனைக் கண்ணுற்ற நாணன் “இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா” என்றான். சம்மதித்து அவனுடன் மலை ஏறும்போது குடுமித் தேவருக்கு சிவ கோசாரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி தினமும் பூஜை செய்வதனை நாணன் மூலம் திண்ணனார் அறிந்தார். மலையேறிய திண்ணனாருக்கு குடுமித் தேவரைக் கண்டவுடன் இன்பமும் பெரும்பக்தியும் ஏற்பட்டன. அவரை வணங்கியும், கட்டித் தழுவியும் ஆடிப் பாடினார். பின் பசியோடிருப்பார் இறைவன் என்ற எண்ணம் வரவே சென்று நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப் படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார். மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு ”இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று சொல்லி படைத்து வணங்கினார். இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி திண்ணனார் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் மீண்டும் இறைவனுக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார்.


வழக்கம் போல, பூஜை செய்ய வந்த சிவ கோசாரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்திப் புலம்பினார். பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூஜை செய்து சென்றார். அடுத்து திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திய சிவ கோசாரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றி திண்ணனாரை “நமக்கினியன்” என்று சொல்லி திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்க்கும்படி கூறிவிட்டு மறைந்தார்.


மறு நாள் திருக்காளத்தி நாதரும், குடுமித் தேவருமான சிவபெருமான் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார் பதறி செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்துப் பார்த்தார். காடெங்கும் திரிந்து பச்சிலை பறித்து இட்டார். ஆயினும் உதிரம் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊ’னுக்கு ஊன்’ என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே தம் வலக்கண்ணை அம்பினால் தோண்டி எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு அவர் மகிழ்ந்து ஆடினார்.


சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார். தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்று விடும் என்று உணர்ந்தார் திண்ணனார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் ”நில்லு கண்ணப்ப” என்று கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார்.


இதனைக் கண்ட சிவ கோசாரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.


ஆதிசங்கரர் தனது சிவானந்த லஹரியில் ஒரு சுலோகத்தில் பக்திக்கு இலக்கணமாக கண்ணப்பரையே கூறுகிறார். அச்சுலோகத்தின் பொருள்:



“வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது;


வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது;


சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது;


பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு எவர்?”




இறைச்சி, உமிழ்நீர், தலையில் சூடி வைத்திருந்த மலர் ஆகியவற்றை இறைவனுக்குப் படைத்தது ஆகமவிதிப்படி பெரும் குற்றங்களே. ஆயினும் கண்ணப்பரை “நமக்கினியன்” என்று சிவகோசாரியாரின் கனவில் கூறியது இறைவன் கண்ணப்பர் முன்பே அறிந்திருந்த அறிவையும், அவர் தன் மேல் வைத்திருந்த பக்தியின் அளவையும் வைத்தே என்பதில் சந்தேகமில்லை. இறைவன் செயலை மட்டும் பார்க்கவில்லை. அதன் பின் இருந்த நோக்கத்தையும் மிக முக்கியமாகப் பார்த்தார்.


பின் கண்ணைக் கொடுத்ததும் மற்றொரு கண்ணையும் தர முன்வந்ததும் அதுவரை யாரும் கண்டிராத பக்தி என்பதால் தான் ஆதிசங்கரரே அவரைப் பக்திக்கு உதாரணமாகச் சொன்னார். பின் மிதியடி கொண்ட காலால் இறைவனை மிதித்ததும் ஆகம விதிப்படி பெருங்குற்றமானாலும், நோக்கத்தின் படி அளவு கடந்த பக்தியின் செய்கையாகவே கருதப்படுகிறது.


இப்படிப்பட்ட பக்தி மிக மிக அபூர்வம். அதனால் தான் மாணிக்கவாசகரே


”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி”


என்று ’கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாக’த் திருக்கோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.


மாணிக்கவாசகர் சொன்ன நிலையிலேயே நாம் எல்லோரும் இருக்கிறோம். நாமும் இறைவன் அருளுக்குப் பாத்திரமாக வேண்டி நிற்கிறோம். இறைவன் அருள் கிடைக்க நாம் கண்ணப்பரைப் போல அபரிமிதமான பக்தி கொள்ளா விட்டாலும் உண்மையான பக்தியாவது கொண்டிருக்க வேண்டும்.


உண்மையான பக்தி எப்போது பார்த்தாலும் அதைக் கொடு, இதைக் கொடு என்று விண்ணப்பித்துக் கொண்டிருக்காது. உண்மையான பக்தி கடவுளுக்குச் செய்ததை எல்லாம் கணக்கு வைத்துக் கொண்டிருக்காது. உண்மையான பக்தி இறைவனிடம் பேரம் பேசாது. உண்மையான பக்தி எந்த நிலையிலும் இறைவனை சந்தேகிக்காது. உண்மையான பக்தியில் மகத்தான நம்பிக்கை இருக்கும். உண்மையான பக்திக்கு வெளி வேஷங்கள் தேவைப்படாது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான பக்தியில் இறைவனிடம் கேட்க ஒன்றுமில்லாத நேரத்திலும் கூட பிரார்த்திக்கும் மனம் இருக்கும்.


இப்போது யோசியுங்கள். உங்கள் பக்தி உண்மையா?


- என்.கணேசன்


நன்றி: தினத்தந்தி - ஆன்மிகம் - 09-04-2013



Thursday, May 2, 2013

பரம(ன்) ரகசியம் – 42




குருஜி கணபதி முகத்தையே கூர்ந்து பார்த்தார். அந்த முகத்தில் களங்கமோ, புத்திசாலித்தனமோ சிறிதும் தெரியவில்லை. புன்னகையுடன் கணபதியை வரவேற்றார். வா கணபதி பஞ்சமுக ஆஞ்சநேயர் தரிசனம் எப்படி இருந்துச்சு?

உங்க தயவுல எந்தக் குறையும் இல்லாமல் ஆஞ்சநேயர் தரிசனம் நல்லா இருந்துச்சு குருஜி. இந்த ஏழைக்கு ஏ.சி கார் தேவை இருந்திருக்கலை. பஸ்லயே போயிருந்திருப்பேன்....கணபதி பணிவுடன் சொன்னான்.

குருஜி புன்னகையுடன் சொன்னார். “நான் சொன்னேன்னு உன்னோட பிள்ளையாரைக் கூட விட்டுட்டு சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய இங்கே வந்திருக்கே. உனக்கு நான் இது கூட செய்யலைன்னா எப்படி கணபதி. எத்தனை நேரம் தான் நீ இங்கே போரடிச்சுப் போய் உட்கார்ந்திருப்பாய். அதான் போகச் சொன்னேன். அந்தக் கார் வழியில ரிப்பேர் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். எனக்கே சங்கடமாயிடுச்சு....

அதுலயும் நல்லதே ஆச்சு குருஜி. அதனால எனக்கு ஒரு அண்ணன் கிடைச்சாரு...

முகத்தில் ஆச்சரியத்தைக் காண்பித்த குருஜி கேட்டார். “அண்ணனா? அது யாரு?

கணபதி உற்சாகமாய் ஈஸ்வரைச் சந்தித்த விதத்தையும் அவன் தனக்கு பட்டு உடைகள் வாங்கித் தந்ததையும் விவரித்தான். அவன் மீது வைத்த கண்களை எடுக்காமல் குருஜி மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“...நான் வேண்டாம்னு எத்தனை சொல்லியும் அவர் கேட்கலை. நீ என்னை வேற மனுஷனாய் நினைக்கறியான்னு கேட்டு வாயடைச்சுட்டார். என்னோட பிள்ளையாருக்கும் ஒரு பட்டு வேட்டி வாங்கித் தந்தார். இன்னைக்கு என்னால உங்களுக்கும் ஈஸ்வர் அண்ணாவுக்கும் அனாவசிய செலவு. எல்லார் கிட்டயும் வாங்கிகிட்டே இருக்கேன். எப்ப இதை எல்லாம் திருப்பித் தரப் போறேன்னு தெரியலை...சொல்லும் போது அவன் குரல் தழுதழுத்தது.

அவன் ஈஸ்வர் அண்ணாவிடம் என்னவெல்லாம் பேசினான் என்பதை குருஜி துருவித் துருவிக் கேட்டு தெரிந்து கொண்டார்.  அவன் தன் கிராமத்து விலாசத்தை ஈஸ்வரிடம் தெரிவித்தது அவருக்கு அபாயத்தை எச்சரித்தது. ஈஸ்வர் கணபதியின் பிள்ளையாரைப் பார்க்க வர முடிவது கஷ்டம் என்று சொன்னது சற்று திருப்தியைத் தந்தாலும் கூட அவருக்கு நெருடலாகவே இருந்தது.

வாய் விட்டே குருஜி கேட்டார். “நீ இங்கே சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யறதைச் சொல்லிடலையே

“சொல்லலை. பிள்ளையாரோட அப்பாவுக்குப் பூஜை செய்யறேன்னு சொன்னேனே ஒழிய எங்கேன்னு நான் சொல்லலை. அவர் யார் கிட்டயும் சொல்லப் போக மாட்டார்னாலும் நீங்க சொன்னது ஞாபகம் வந்ததால் நான் சொல்லலை.

தலையசைத்த குருஜி கணபதியைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னார். “உன் கிட்ட இன்னைக்கு ஏதோ ஒரு பெரிய மாற்றம் தெரியுது கணபதி. அது என்னன்னு எனக்கு சொல்ல வரலை. ஒரு அண்ணன் கிடைச்ச சந்தோஷமா இல்லை ஆஞ்சநேயரைப் பார்த்த சந்தோஷமான்னு தெரியலை. ஆனா ஏதோ மாறின மாதிரி மட்டும் நிச்சயம் தெரியுது.

கணபதி திடீர் என்று நினைவு வந்தவனாகச் சொன்னான். “எனக்கு அந்த ஜவுளிக் கடையில ஷாக் அடிச்சுது. அதுகூட காரணமாய் இருக்கலாம்...

“ஷாக் அடிச்சுதா எப்படி?

கணபதி தனக்கும் ஈஸ்வருக்கும் இடையே போகும் போது தங்களைத் தொட்ட மனிதனைப் பற்றிச் சொன்னான். ”... அவர் தொட்டது கரண்ட் கம்பி மேல பட்டது மாதிரி இருந்துச்சு. அப்படித்தான் ஈஸ்வர் அண்ணாவுக்கும் இருந்துச்சுன்னு நினைக்கிறேன். நான் அந்த ஆள் முகத்தைக் கூடப் பார்க்கலை. நாங்க சுதாரிக்கறதுக்குள்ள அந்த ஆள் மாயமா மறைஞ்சுட்டார். ஈஸ்வரண்ணா அப்பவே ஓடிப் போய் பார்த்தார். அந்த ஆள் தெரியலை. ஈஸ்வரண்ணா கடைக்காரங்க கிட்ட எல்லாம் அந்த ஆளைப் பத்தி கேட்டுப் பார்த்தார். யாருமே அவரை சரியா பார்க்கலை... எனக்கு கனவு மாதிரி இருந்தாலும் இப்பவும் அந்த ஷாக் அடிச்ச உணர்வை மறக்க முடியலை.

குருஜிக்கு சிறிது நேரம் எதுவும் பேச முடியவில்லை. பேச முடிந்த போது கேள்விக்கணைகளால் கணபதியைத் துளைத்தெடுத்தார். கணபதியின் பதில்களை வைத்து அந்தக் காட்சியை நேரிலேயே பார்ப்பது போல் உணர்ந்த அவருக்கு ஈஸ்வருக்கும் கணபதிக்கும் இடையே புகுந்து தொட்டு விட்டுப் போன ஆள் யார் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை.

அடுத்ததாக அவர் கேள்விகள் கணபதியும் ஈஸ்வரும் தொடப்பட்ட நேரத்தைப் பற்றியதாக இருந்தன. மிகச்சரியாக வினாடி துல்லியமாக எந்த நேரம் என்பதைத் தெரிந்து கொள்ள குருஜி விரும்பினார். அந்த ஆள் தொட்டு விட்டுப் போய் ஐந்து நிமிடங்களுக்குள் டிரைவர் அழைத்துப் போக வந்து விட்டான் என்று கணபதி தெரிவிக்கவே மீதியை டிரைவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்த அவர் கணபதிக்கு விடை கொடுத்தார்.

அவ்வளவாக சாமர்த்தியம் போதாத கணபதிக்கே அவர் கேட்ட கேள்விகள் ஆச்சாரியத்தைத் தந்ததால் போவதற்கு முன் கேட்டான். ஏன் இவ்வளவு தூரம் கேட்கறீங்க குருஜி?

குருஜி கட்டாயமாய் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “வித்தியாசமாய் எதைக் கேட்டாலும் அதை ஆழமாய் புரிஞ்சுக்கற வரைக்கும் என்னால் விட முடியாது கணபதி. உன் அனுபவம் வித்தியாசமாய் இருந்ததால் தான் கேட்டேன்

அதற்காக அந்த நேரத்தை ஏன் துல்லியமாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள், அந்த நேரத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கும் அளவு புத்தி கூர்மை இல்லாத கணபதி குருஜி தந்த பதிலில் திருப்தி அடைந்தவனாக அவரை வணங்கி விட்டுக் கிளம்பினான்.

அவன் போனவுடன் டிரைவரை அழைத்து கேள்விகள் பல கேட்டு அந்த நேரத்தை சரியாகத் தெரிந்து கொண்ட குருஜி அவனை அனுப்பி விட்டு அவசர அவசரமாய் பஞ்சாங்கத்தை எடுத்துப் புரட்டினார். அந்த நேரம் அபூர்வ சக்திகளின் தீட்சைக்கோ, உபதேசத்துக்கோ பொருத்தமான மிகப் புனிதமான முகூர்த்த நேரம்.....

அதிர்ச்சியில் இருந்து மீள இந்த முறை குருஜிக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. கணபதியை சூழ்ந்திருந்த சக்தி வட்டம் எப்படி வந்ததென்று அவருக்கு இப்போது புரிந்தது....

அந்த நேரத்தில் குருஜியின் பர்சனல் செல்போன் இசைத்தது. ஜான்சன் தான் பேசினார். “குருஜி நான் ஓட்டலில் இருந்து பேசுகிறேன். பத்து நிமிஷங்களுக்கு முன் தான் வந்து சேர்ந்தேன். உங்களை சந்திக்க வரலாமா?

வாஎன்று சுருக்கமாகச் சொல்லிய குருஜி முக்கால் மணி நேரம் கழித்து ஜான்சன் வந்து சேரும் வரை ஆழ்ந்த சிந்தனையிலேயே இருந்தார். எப்போதுமே தெளிவாகவும் சக்தி பிரவாகமாகவும் இருக்கும் குருஜி அன்று ஆழ்ந்த யோசனையுடனும், களைத்துப் போயும் இருந்ததாக ஜான்சனுக்குத் தோன்றியது. “என்ன குருஜி ஏதாவது பிரச்சினையா?என்று ஜான்சன் கேட்டார்.

எதுவுமே பிரச்சினை இல்லை ஜான்சன். எல்லாமே சில சூழ்நிலைகள் தான். சமாளிக்கத் தெரியாத வரை பிரச்சினைகள் போல தெரியலாம். சாமர்த்தியமாக சமாளிக்க முடிந்தால் அந்த சூழ்நிலைகள் நமக்கு அனுகூலமாய் கூட மாறலாம்.... இது பற்றி அப்புறம் சொல்கிறேன். மும்பையில் பாபுஜியுடன் சந்திப்பு எப்படி இருந்தது? அதை முதலில் சொல்

ஜான்சன் எல்லாவற்றையும் சொன்னார். முகம் தெரியாத அறுவர் பற்றி சொன்ன போதும் குருஜி எந்த ஆச்சரியத்தையும் காட்டாததைப் பார்த்த போது அந்த அறுவர் பற்றி குருஜி முன்பே அறிவார் என்பது புரிந்தது. குருஜியை நம்பிய அளவுக்கு அவர்கள் தன்னை நம்பவில்லை அதனால் தான் இருட்டில் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் அவருக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

அவர் முகபாவனையிலேயே அதை உணர முடிந்த குருஜி ஆறுதல் படுத்தும் விதமாகச் சொன்னார். “ஜான்சன், சில விஷயங்கள் தெரியாமல் இருப்பது தான் நல்லது. அது தான் பாதுகாப்பு

யார் அவர்கள்?பதில் வரும் என்று நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஜான்சனுக்குக் கேட்கத் தோன்றியது.

குருஜி சொன்னார். “இந்த ப்ராஜெக்டின் ஸ்பான்சர்ஸ். வேறு வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அந்தந்த நாடுகளில் சக்தி வாய்ந்தவர்கள். நாளைய உலகைத் தீர்மானிக்கப் போகிறவர்கள்..... உன்னிடம் ஒன்று கேட்க நினைத்து இருந்தேன்.. நீ அந்த மீட்டிங்கில் பாபுஜியின் அப்பாவைப் பார்த்தாயா?

அந்த ஆறு பேரில் ஒருவராக அவர் உட்கார்ந்திருந்தால் எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. வெளிச்சத்தில் பாபுஜியைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

“அந்த ஆள் சக்கர நாற்காலியில் தான் உட்கார்ந்திருப்பார். மங்கலான வெளிச்சத்தில் கூட அது உனக்குத் தெரியாமல் போகாது.

“இல்லை குருஜி. சக்கர நாற்காலியில் யாரும் இருக்கவில்லை. ஏன் கேட்கிறீர்கள்?

அவர் ஆரம்பத்தில் இருந்தே இந்தப் ப்ராஜெக்ட் சரிவர முடியுமா என்பதில் சந்தேகமாக இருந்தவர். பாபுஜி அவர் அபிப்பிராயத்திற்கு மதிப்பு தருபவன். அதனால் தான் நீ பேசுவதைக் கேட்க அவரை அவன் அழைத்து வந்தானா
என்று கேட்டேன்.

ஜான்சனிற்கு பாபுஜியின் தந்தையார் பற்றித் தெரிந்து கொள்ள பெரிய ஆர்வம் இருக்கவில்லை. அவர் ஆர்வம் முழுவதும் விசேஷ மானஸ லிங்கம் மீது இருந்தது. அதனால் பரபரப்புடன் கேட்டார். குருஜி சிவலிங்கத்துடன் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

குருஜி சிவலிங்கத்திடம் பேசிய பேச்சுக்களை ஜான்சனிடம் சொல்லவில்லை. மற்றபடி தன் அனுபவத்தை முழுமையாகச் சொன்னார். ஒளி வெள்ளத்தில் மிதந்து நிற்பது போல் காட்சி அளித்த விசேஷ மானஸ லிங்கம் காந்தமாய் தன்னை இழுத்ததையும், நெருங்க நெருங்க அவர் மனதையே கரைக்கப் பார்த்ததையும் சொன்ன போது ஜான்சனுக்கு பிரமிப்பாய் இருந்தது.

குருஜியின் மன உறுதியை ஜான்சன் நன்றாக அறிவார். சொல்லப் போனால் அந்த அளவு மன உறுதி உள்ள எந்த மனிதரையும் இது வரை ஜான்சன் தன் வாழ்நாளில் இது வரை பார்த்தது இல்லை. அவரையே ஆட்கொள்ள முடிந்த அந்த சிவலிங்கம் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று எண்ணிய ஜான்சன் கேட்டார். இப்படி இருந்தால் எப்படி ஆராய்ச்சி செய்ய முடியும்?

சிவலிங்கத்தில் இருந்து பன்னிரண்டு அடிகள் தள்ளி இருக்கிற வரை பிரச்சினை இல்லை. ஆராய்ச்சிகளை அந்தத் தூரத்தில் இருந்து கூடத் தாராளமாகச் செய்யலாம்....

“நாம் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துபவர்கள் அந்த சிவலிங்கத்தின் ஒளியைப் பார்க்க முடியுமா?

அபூர்வமாய் சில சமயங்களில் ஓரிரண்டு வினாடிகள் பார்க்க முடிந்தாலும் முடியலாம். ஆனால் அதற்கு மேல் பார்க்க முடியாது. அதனால் அவர்களுக்கே தாங்கள் பார்த்தது ஒளி தானா இல்லை பிரமையா என்ற சந்தேகம் வந்து விடும். அதனால் கவலைப்படாதே....

சரி... கணபதியை நாம் ஆராய்ச்சியில் பயன்படுத்த முடியுமா?

“அவனை ஏதாவது சொல்லி நம்ப வைத்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது ஒன்றும் கஷ்டமல்ல. ஆனால் இப்போது அவன் எந்த அளவுக்கு ஆராய்ச்சிக்குப் பயன்படுவான் என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது.

“ஏன் குருஜி?

குருஜி கணபதி-ஈஸ்வர் சந்திப்பையும் சித்தர் அவர்களைத் தொட்டு விட்டுப் போனதையும் சொல்லி விட்டுத் தொடர்ந்தார். “இப்போது கணபதியைச் சுற்றியும் ஒரு சக்தி வட்டம் தெரிகிறது. அது அந்த சித்தர் வேலை தான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதைய கேள்வி அந்த சக்தி வட்டம் என்ன எல்லாம் செய்யும், என்ன எல்லாம் செய்யாது என்பது தான்....

அப்படின்னா அந்த ஈஸ்வரைச் சுற்றியும் அந்த சக்தி வட்டம் இருக்கலாமா?

“இருக்கலாம். அந்த சித்தர் அவர்களைத் தொட்ட நேரம் ஒரு அபூர்வமான முகூர்த்த நேரம். அது போன்ற முகூர்த்த நேரத்தை தீட்சை தரவும் மந்திர உபதேசம் தரவும் தேர்ந்தெடுப்பதுண்டு ...

சிறிது நேரம் ஜான்சன் பேசும் சக்தியையே இழந்தது போல இருந்தது. அவருக்கு ஏதேதோ புரிகிறது போலவும் இருந்தது. ஒன்றுமே புரியாதது போலவும் இருந்தது. அவர் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்தன.

“என்ன யோசிக்கிறாய் ஜான்சன்?குருஜி கேட்டார்.

“நம் எதிரிகளின் பட்டியலில் ஈஸ்வர் இருப்பதை நான் விரும்பவில்லை குருஜி. நான் அன்றைக்கு உங்களிடம் சொன்னதன் பிறகு நீங்கள் அவனைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டும் இருப்பீர்கள். அதனால் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அந்த சித்தர் அவனையும் நமக்கு எதிராக பயன்படுத்த நினைத்தால் அவன் அவருக்குப் பயங்கரமான ஆயுதமாவான். அவனை கணபதியைப் போல் நாம் அலட்சியப்படுத்தி விட முடியாது. பசுபதி அவன் பெயரைச் சொல்லி விட்டுப் போனது, அவன் கணபதியை சந்தித்தது, சித்தர் அவனைத் தொட்டு விட்டுப் போனதில் அவனுக்கு ஏதாவது சக்தி கூடி இருந்தாலோ, சக்தி வட்டம் சேர்ந்திருந்தாலோ, அது- இந்த மூன்றுமே எனக்கு சரியாகப் படவில்லை....

ஜான்சன் நீ மனோதத்துவம் படித்தவன். அதனால் உனக்குத் தெரியாதது இல்லை. மனிதன் தைரியத்தை இழக்க ஆரம்பிக்கும் போது எல்லாவற்றையும் இழக்க ஆரம்பிக்கிறான்....

ஜான்சன் பலவீனமாகச் சொன்னார். “புரிகிறது. ஆனால் என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

“எதற்குப் பயப்படுகிறோமோ அதை நேரடியாக உடனடியாகச் சந்திக்கலாம் என்கிறேன். பயத்தை விரட்ட அதை விட சிறந்த வழி என்ன இருக்க முடியும்?

“எனக்குப் புரியவில்லை

“ஈஸ்வரை நேரில் சந்திக்கலாம் என்று சொல்கிறேன்.

“நான் அவனைச் சந்திக்க வேண்டுமா?ஜான்சன் திகைப்புடன் கேட்டார்.

“உன்னை இந்தியாவில் பார்ப்பது அவனுக்கு பல சந்தேகங்களை இப்போதில்லா விட்டாலும் பிறகாவது கிளப்பலாம். அதனால் நான் அவனைச் சந்திக்கிறேன். அவனை நேரில் எனக்கும் பார்க்க வேண்டி இருக்கிறது. அவனைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அவன் இந்த வேதபாடசாலைக்கு வந்து பார்க்க அனுமதி கேட்டு இருக்கிறான். நம் ஆராய்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னால் அவனை நான் சந்திப்பது நல்லது என்று தான் நானும் நினைக்கிறேன். அவனை நாளைக்கே வரச் சொல்கிறேன்.  நீ கவலையை விடு....

அந்த சிவலிங்கத்தையே பார்த்து எடை போட முடிந்த குருஜிக்கு ஈஸ்வரை எடை போடுவது ஒரு பெரிய விஷயம் அல்ல என்ற நம்பிக்கை ஜான்சனுக்கு இருந்தது.  அது மட்டுமல்ல ஈஸ்வரை எப்படிக் கையாள்வது என்பதையும் குருஜி சீக்கிரமே கண்டுபிடித்து விடுவார். ஜான்சன் முகத்தில் சற்று பிரகாசம் வந்தது.  

(தொடரும்)
-          என்.கணேசன்


Monday, April 29, 2013

களை நீக்கும் கலை!




ரு தாவோ கதை....

ஒரு தாவோ குரு தன் மூன்று சீடர்களுடன் யாத்திரை செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய வயல்வெளி முழுவதும் களைகள் மண்டிக் கிடப்பதைக் கண்டார். தன் சீடர்களிடம் குரு கேட்டார். “இந்தக் களைகளை நீக்க சிறந்த வழி என்ன?

முதலாம் சீடன் சொன்னான். “கையால் ஒவ்வொரு களையாக வேரோடு பிடுங்குவது தான் சிறந்த வழி. அது மிக எளிமையான வழியும் கூட.

இரண்டாம் சீடன் சொன்னான். “இத்தனை பெரிய வயலில் ஒவ்வொரு களையாக கையால் பிடுங்கிக் கொண்டிருந்தால் எப்போது அத்தனை களைகளையும் பிடுங்கி முடிப்பது. களை பிடுங்கும் உபகரணங்களை உபயோகப்படுத்தி களை பிடுங்கினால் குறுகிற நேரத்தில் நிறைய களைகள் பிடுங்கி விடலாம்.

மூன்றாம் சீடன் சொன்னான். களைகளைத் தீயால் கொளுத்தினால் ஒரேயடியாக அத்தனை களைகளையும் அழித்து விடலாம். அது தான் விரைவான எளிமையான வழி

குரு சொன்னார். “இந்த வயல்வெளியே மனித மனம் என்றும், களைகள் அவனுக்குத் தேவையற்றதும், முன்னேற்றத்திற்கு உதவாததுமான தீய எண்ணங்கள் என்றும் எடுத்துக் கொண்டால் அப்போதும் நீங்கள் சொன்ன வழிகள் மிகப் பொருத்தமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

முதல் சீடன் சொன்னான். “ஆம் குருவே. ஒவ்வொரு தீய எண்ணத்தையும் தனித்தனியாக கவனத்தில் எடுத்து அதன் தீய தன்மையையும், பலனற்ற தன்மையையும் புரிந்து கொண்டு அதை மனதில் இருந்து நீக்கி விடுவதே எளிமையான சிறப்பான வழி என்று நினைக்கிறேன்.

இரண்டாம் சீடன் சொன்னான். “மனதில் உள்ள தீய எண்ணக் களைகளை விரைவாக நீக்க தியானம், ஜபம், மந்திரங்கள் போன்ற உபகரணங்கள் சிறப்பாகப் பயன்படும் என்று நினைக்கிறேன் குருவே”.

மூன்றாவது சீடன் சொன்னான். “புத்தர் அல்லது கடவுளர்களிடம் மனதை ஒப்படைத்தால் ஒரேயடியாக தீய எண்ணக் களைகள் கருகி விடும் என்று நான் நம்புகிறேன் குருவே

குரு சொன்னார். “மூன்றுமே நல்ல வழிகள் தான். சிந்திக்க வேண்டிய வழிகள் தான். ஆனால் அவை தாவோ கண்ணோட்டத்தில் மிகப் பொருத்தமானது தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது

அதற்குப் பின் அவர் அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சீடர்கள் தத்தம் வழியே சிறந்தது என்று நினைத்தாலும் குருவின் அங்கீகாரம் கிடைக்காததில் ஏமாற்றம் அடைந்தனர்.

சில மாதங்கள் சென்றன. குருவும் சீடர்களும் அதே பாதையில் இன்னொரு முறை வர நேர்ந்தது. களைகள் இருந்த வயல்வெளியில் விவசாயிகள் இப்போது நெற்பயிர் விளைவித்திருந்தார்கள்.

குரு அந்த நெற்பயிர் வயலைக் காட்டி சொன்னார். “இது தான் என் கேள்விக்குப் பதில். இது தான் தாவோ முறை

சீடர்களுக்குப் புரியவில்லை. குரு விளக்கினார். “நீங்கள் மூவர் சொன்ன வழிகளும் தற்காலிகமான வழிகள். களைகளைப் பிடுங்கிய அளவு, அழித்த அளவு அவை மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டே இருக்கும். அதை நிரந்தரமாக அழிக்க ஒரே வழி அந்த வயலை அப்படியே வெற்றிடமாக வைத்திராமல் அதில்  உபயோகமான பயிர்களை விதைப்பது தான்.

அதே போல் தீய எண்ணங்களை அழிப்பதற்கு நீங்கள் சொன்ன வழிகளும் தற்காலிகமானவை தான். எந்த வழியில் அழித்தாலும் காலி இடம் இருக்கும் வரை அவை திரும்பத் திரும்ப மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அந்த தீய எண்ணங்கள் இருக்கும் இடத்தில் நல்ல உபயோகமான எண்ணங்களை விதைப்பது தான் தாவோ முறைப்படி புத்திசாலித்தனமான பொருத்தமான செயல். அப்படிச் செய்தால், நல்லெண்ணங்கள் நிரம்பிய மனதில் தீய எண்ணங்கள் மீண்டும் எழ இடமே இருக்காது. அப்படியும் ஓரிரண்டு அங்கொன்றும் இங்கொன்றும் எழலாம் என்றாலும் அவற்றை நீக்குவது பெரிய கஷ்டமான காரியம் அல்ல.

அந்த தாவோ குரு சொன்னது மனதில் பதியவைத்துக் கொள்ளது தக்கது. மனதில் தீயவற்றையும், பலவீனத்தையும் போக்க தினசரி போராட்டம் நடத்த அவசியம் இல்லை.  சிந்தனைகளில் நல்லதையும், பயனுள்ளதையும் கொண்டு வருவதில் நாம் எல்லா சமயங்களிலும் உறுதியாக இருந்தால் தீயதும், பலவீனமும் தங்க நம் மனதில் இடமே இருக்காது.

-       -    என்.கணேசன்