என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, February 13, 2023

யாரோ ஒருவன்? 125



வேலாயுதம் வெளியே வந்து பார்க்கையில் நாகராஜ் பக்கத்து வீட்டு கேட் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் கையில் எதுவும் இருக்கவில்லை. வேகமாகத் தன் அறைக்கு ஓடிப் போய் சொன்னார். “அவன் வர்றான். அவன் கையில ஒன்னுமில்லை.”

ஆதாரத்தோடு வருகிறேன் என்று சொல்லி விட்டு வெறுங்கையுடன் ஏன் அவன் வருகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் கல்யாண் யோசித்தான். என்னவாக இருந்தாலும் சரி, போய் நாகராஜை வரவேற்க அவனுக்கு விருப்பமில்லை. வா என்றழைக்காத இடத்தில் நுழைய நாகராஜுக்குச் சுயகௌரவம் விடா விட்டால் இன்னும் நல்லது. அவன் கோபத்தோடு திரும்பிப் போனால் சனியன் விட்டது என்று இருந்து விடலாம். வீட்டில் இருப்பவர்களின் தேவையில்லாத கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்காது. அவன் பைத்தியக்காரன் என்று இப்போதாவது புரிகிறதா என்று கேட்கலாம்….

அவன் எண்ணங்களைப் புரிந்து கொண்ட வேலாயுதமும் வேகமாக உள்ளே வந்து ஹாலில் சோபாவில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார். நாகராஜின் பார்வை ஒன்று இந்தப்பக்கம் வருவதற்காக தவமாய் தவமிருந்தவர் இனி அவனால் எதுவும் ஆக வேண்டியதில்லை, வருவது உபத்திரமே என்று புரிந்து கொண்டதால் இனி எந்த மரியாதையும் பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தேவையில்லை என்று முடிவெடுத்து விட்டார்.

நாகராஜை தீபக்கும் தர்ஷினியும் மட்டுமே வெளியே இருந்து இன்முகத்துடன் வரவேற்றார்கள். “வாங்க அங்கிள்”

நாகராஜ் அவர்கள் இருவர் மட்டுமே வெளியே இருந்து வரவேற்பதையும் மற்றவர்கள் யாருமே தென்படாததையும் அவமரியாதையாக காட்டிக் கொள்ளாமல் லேசாகத் தலையை மட்டும் அசைத்தான். புன்னகையும் இல்லை.

அவர்கள் இருவரும் அவனை உள்ளே அழைத்துப் போன போது மேகலாவும் ரஞ்சனியும் எழுந்து நின்றார்கள். ஆனால் வேலாயுதம், சரத், கல்யாண் மூன்று பேரும் ஒரு சோபாவில் இறுகிய முகத்துடன் அமர்ந்தே இருந்தார்கள்.

அவர்கள் அப்படி அமர்ந்தேயிருப்பது சரியில்லை என்று தீபக்கும், தர்ஷினியும் நினைத்தாலும் அந்த நேரத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பெரிய ஹாலில் மூன்று பேர் அமரக்கூடிய சோபா, இரண்டு பேர் அமரக்கூடிய சோபா, ஒற்றை சோபா என்று இரண்டிரண்டு வட்ட வரிசையில் வைக்கப்பட்டிருந்தன.  ஒற்றை சோபா ஒன்றில் அமர தீபக் மரியாதையுடன் சற்று குனிந்து கை காட்டினான்.

அமைதியாக அமர்ந்த நாகராஜ் நின்றிருந்த மற்றவர்களையும் உட்காரச் சொல்லி சைகை காண்பித்தான்.

வேலாயுதம் உள்ளுக்குள்ளே வெடித்தார். ’யார் வீட்டுல யார் வந்து உட்காரச் சொல்றது. இவன் என்னவோ ராஜா மாதிரி தன்னை நினைச்சுக்கறான். அரசவையில இவன் உட்கார்ந்த உடனே மத்தவங்களை உட்கார்ந்துக்கலாம்னு கை காட்டற மாதிரி கை காட்டறான். இந்த தீபக் தேவையில்லாம இந்த நாய்க்கு ரொம்ப மரியாதை காட்டறான்….’

ரஞ்சனியும் மேகலாவும் ஒரு சோபாவில் அமர, தீபக்கும், தர்ஷினியும் ஒரு சோபாவில் அமர்ந்தார்கள்.

நாகராஜ் தீபக்கையும், தர்ஷினியையும் பார்த்துப் பேச ஆரம்பித்தான். ”நான் அடுத்தவங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சு பல வருஷங்களாச்சு. முதல் முறையாய் இங்கே வந்திருக்கேன்னா அது உங்க ரெண்டு பேருக்காகத் தான் தீபக். உன் அம்மா என் கிட்ட கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் உங்க வீட்டையே சுடுகாடு மாதிரி ஆக்கிடுச்சு, நீங்க சொன்னது உண்மையாய் இருக்க வழியே இல்லை, ஆதாரம் இருந்தா காண்பிங்கன்னு சொன்னாய். உனக்கும், தர்ஷினிக்கும் வழக்கு என்னன்னே தெரியல.  குற்றச்சாட்டு என்னன்னே சரியாய் புரியலை. என்ன நடந்துச்சு, எப்ப நடந்துச்சுன்னும் தெரியல, முக்கியமா இறந்தவனைப் பத்தி உங்க ரெண்டு பேருக்கு எதுவுமே தெரியல. முதல்ல நீங்க அவங்க நட்பைத் தெரிஞ்சுக்கணும். பிறகு குற்றவாளிகளையும் தெரிஞ்சுக்கணும். அரைகுறையாய் தெரிஞ்சுகிட்டா குழப்பமா தான் இருக்கும்… ஆரம்பத்துல இருந்து பார்க்கறீங்களா?”

அவன் பார்க்கறீங்களா என்று கேட்டதன் அர்த்தம் அவர்கள் இருவருக்கும் விளங்கவில்லை. ஆனாலும் கேட்கறீங்களா என்று சொல்வதற்குப் பதிலாகத் தவறி பார்க்கறீங்களா என்று சொல்லி விட்டிருக்க வேண்டும் என்று எண்ணித் தலையசைத்தார்கள்.

கல்யாணும் அப்படியே நினைத்தாலும் மெல்ல அதில் ஆபத்தை உணர்ந்தான். ஆரம்ப காலக் கதையிலிருந்து இவன் சொல்ல ஆரம்பிப்பது அவசியமில்லாதது, ஆபத்தானது என்று உணர்ந்த அவன் வேலாயுதத்தை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தான்.  

அதைப் புரிந்து கொண்ட வேலாயுதம் கறாரான குரலில் சொன்னார். “பாரு. இங்க யாருக்கும் கதை கேட்க நேரமில்லை. இவங்க ரெண்டு பேரும் இவங்க நண்பனைக் கொலை செஞ்சாங்கன்னு சொல்லியிருக்கே. ஆதாரம் உன் கிட்ட இருக்குன்னு சொல்லியிருக்கே. அந்த ஆதாரத்தை முதல்ல காட்டு. போட்டோவா, போலீஸ் ரிப்போர்ட்டா, இல்லை சாட்சி யாராவதா சீக்கிரம் காட்டிகிட்டு போய்கிட்டே இரு…”

தர்ஷினி தாத்தாவைப் பார்த்துச் சொன்னாள். “நீங்க சும்மா இருங்க தாத்தா. எங்களுக்கு ஆரம்பத்துல இருந்து எல்லாம் தெரிஞ்சாகணும். நீங்கல்லாம் சேர்ந்து திடீர்னு என்னென்னவோ பேசிக்கிறீங்க, சொல்லிக்கிறீங்க, கூடிக்கூடிப் பேசிக்கறீங்க. நாங்க ரெண்டு பேரும் குழப்பத்தோட உச்சத்துல இருக்கோம். எங்க அப்பா அம்மா சம்பந்தப்பட்ட ரகசியம் எதுவா இருந்தாலும் எங்களுக்கு ஆரம்பத்துல இருந்து தெரிஞ்சாகணும். அங்கிள் நீங்க ஆரம்பத்துல இருந்தே சொல்லுங்க..”

நாகராஜ் முதல் முறையாக வேலாயுதம், சரத், கல்யாண் பக்கம் திரும்பினான். மூன்று வினாடிகள் பார்த்து விட்டுப் பார்வையை மறுபடி தீபக் தர்ஷினி பக்கம் அவன் திருப்பினான். ஆனால் அந்த மூன்று வினாடிப் பார்வையிலேயே மூவரும் ஏதோ ஒரு சக்தி தங்களைக் கட்டிப்போடுவது போல் உணர்ந்தார்கள். வாயைத் திறக்கவும் கூட அவர்களால் முடியவில்லை. வெளிப்பார்வைக்கு அவர்கள் சாதாரணமாக அமர்ந்திருப்பது போலவே தெரிந்ததால் மற்றவர்கள் கவனம் அவர்கள் பக்கம் திரும்பவில்லை. அவர்கள் நாகராஜ் என்ன சொல்லப்போகிறான் என்பதிலேயே கவனமாய் இருந்தார்கள்.

நாகராஜ் தன் தலைக்கு மேல் கையை நீட்டினான். அவன் தலைக்கு மேல் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. திரைப்படம் பார்ப்பது போல் வெட்ட வெளியில் தெரிவது அவர்களைப் பிரமிக்க வைத்தன.

முதலில் மாதவன் புன்னகையும், உற்சாகமுமாய் தெரிய அவன் அருகில் ரஞ்சனி தெரிய அவர்களுக்கு இருபக்கங்களிலும் கல்யாணும் சரத்தும் தெரிந்தார்கள்.

நாகராஜ் சொன்னான். “இது தான் சத்தியமங்கலம்கிற சின்ன ஊர்ல இருந்த ஒரு காலேஜ்ல படிச்ச நால்வர் அணி. அப்படித்தான் எல்லாரும் இவங்கள கூப்பிடுவாங்க. ஏழ்மை நிலைமைல தான் நான்கு பேர் குடும்பங்களும் இருந்துச்சு. ஆனாலும் எல்லையில்லாத சந்தோஷத்தோடவும், எதிர்காலக் கனவுகளோடவும் இருந்தாங்க....”

எல்லோருமே திகைப்புடன் பார்த்தார்கள். அந்த நால்வரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுத்த புகைப்படத்தை ஒரு பெரிய திரையில் இப்போது போட்டுக் காட்டுவது போல் தோன்றியது. அடுத்து இரண்டு பேர்களாக, மூன்று பேர்களாக அவர்கள் சேர்ந்திருந்த காட்சிகள் வர ஆரம்பித்தன. எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலையில்லாமல் அவர்கள் இருந்த நட்பின் தருணங்கள் வந்து திரையில் தங்கித் தங்கிப் போயின. ரஞ்சனியின் கண்கள் விரிந்து ஈரமாயின. கல்யாணும், சரத்தும், வேலாயுதமும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். இந்த மாயாவி பழைய படங்களை எப்போது எடுத்தான். எப்படி வெட்ட வெளியில் அதைப் போட்டுக் காட்டுகிறான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. எல்லாம் தத்ரூபமாக நேரில் பார்ப்பது போலவே இருந்தன.

கல்யாணுக்கு பாம்பாட்டி அந்த விசேஷ நாகரத்தினம் மட்டும் அந்த ஆளுக்குக் கிடைத்தால் கடவுள் மாதிரியாயிடுவான் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. நாகராஜ் பழைய நிகழ்வுகளைப் படங்களாக பிரபஞ்ச வெளியிலிருந்து வரவழைக்கிறானோ? 

படமாகத் தெரிந்தது அடுத்தபடியாக வீடியோ காட்சிகளாக விரிய ஆரம்பித்தன. மாதவன், சரத், கல்யாண் மூன்று பேர்களும் சைக்கிளில் போவது தெரிந்தது. போகும் போது ஏதோ அந்தக் காலச் சினிமாப்பாட்டை சத்தமாகப் பாடிக் கொண்டே போனார்கள். நகருக்கு வெளியே எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் நீர்வீழ்ச்சி தெரிந்தது. நெருங்கி வரும் போது அது கொடிவேரி நீர்வீழ்ச்சியாக இருந்தது. அடுத்த காட்சியில் மூன்று பேரும் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

தீபக் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவன் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று வந்த காட்சி இது. இவர்கள் மூவர் தான் அன்று அரைகுறையாய் அவனுக்குத் தெரிந்தவர்கள். தீபக் அருகில் இருந்த தர்ஷினியின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.


அவளுக்குப் புரிந்தது. அவளிடம் ஏற்கெனவே அவன் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது மனத்திரையில் தத்ரூபமாய் வந்து போன காட்சியைப் பற்றி சொல்லி இருக்கிறான்.... இது தான் அவன் பார்த்த காட்சியா என்று அவள் வியந்து பார்த்தாள். 

(தொடரும்)
என்.கணேசன்


Sunday, February 12, 2023

பிரசாதம் நூலுக்கு தினத்தந்தி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மதிப்புரை!

 இன்றைய தினத்தந்தி (12.02.2023)யில் என் பிரசாதம் (ஆத்ம தேடலும், தெளிவும்) நூலுக்கு மதிப்புரை வந்துள்ளது.


ஜனவரி 2023 ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பிரசாதம் நூலுக்கும், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் நூலுக்கும் மதிப்புரைகள் வந்துள்ளன.




நன்றி: தினத்தந்தி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Thursday, February 9, 2023

சாணக்கியன் 43


விதஸ்தா நதிக்கரையை யவனப்படையும், காந்தாரப்படையும் அடைந்த போது மறுகரையில் முன்பே கேகயப் படைகள் தயார்நிலையில் நின்றிருந்தன.

 

அலெக்ஸாண்டர் கண்களைச் சுருக்கி மறுகரையில் நின்றிருந்த கேகயப்படையைக் கூர்ந்து பார்வையிட்டான்.  கேகயப்படை பிரம்மாண்ட அளவில் தெரிந்தது. முக்கியமாக முன்னணியில் நின்றிருந்த  யானைப்படை பயமுறுத்தும் வகையில் நின்றிருந்தது.

 

”பிரம்மாண்டம்” என்று அலெக்ஸாண்டர் முணுமுணுத்தான். அதை சசிகுப்தன் மொழிபெயர்த்துச் சொன்ன போது ஆம்பி குமாரனுக்குச் சுருக்கென்றது. எதிரிப் படையை அலெக்ஸாண்டர் பாராட்டுவது அவனுக்குச் சகிக்கவில்லை. அவன் முகம் கருத்தது.

 

ஆனால் அலெக்ஸாண்டர் அவன் பக்கமே திரும்பவில்லை. அலெக்ஸாண்டரின் முழுக்கவனமும் விதஸ்தா நதியிலும் மறுகரையில் இருக்கும் கேகயப்படை மீதுமே  தங்கியிருந்தது. நீண்ட நேரம் அந்த நதியையும், கேகயப்படையையும் அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். ஆம்பி குமாரன் ஒரு மனிதன் இப்படி சிதறாத முழுக்கவனத்துடன் நிலைமையை ஆராய்வதை இப்போது தான் பார்க்கிறான். வெற்றியடைய விரும்புபவன் முதலில் வெற வேண்டிய தகுதி சிதறாத முழுக்கவனம் என்று அடிக்கடி விஷ்ணுகுப்தர் சொல்லிக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதற்கு ஒரு உதாரணத்தை நேரடியாகப் பார்க்கையில் தான் அவர் சொன்னது மிகச்சரி என்று அவனுக்குப் புரிகிறது...  


அலெக்ஸாண்டரின் தளபதிகளும், சசிகுப்தனும் அவன் கவனத்தைக் கலைக்காமல் அமைதியாக இருப்பதைக் கவனித்த ஆம்பி குமாரன் தானும் மௌனமாக இருந்தான். ஆனால் இத்தனை நேரம் பார்க்க அந்த நதியிலும், எதிர்க்கரையில் நிற்கும் கேகயப்படையிலும் என்ன இருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.

 

இத்தனைக்கும் கிளம்புவதற்கு முந்தைய நாள் தான் அலெக்ஸாண்டர் இக்கரையோரத்தில் உள்ள கிராமத்தில் வாழும் கிழவன் ஒருவனை அழைத்து வரச் சொல்லி அவனிடம் பல கேள்விகள் கேட்டிருக்கிறான். இம்மழைக்காலத்தில் எந்த அளவு மழை பொழியும், நதியின் ஓட்டம் எப்படி இருக்கும், வெள்ளம் வந்தால் அதன் அளவு எப்படி இருக்கும், கரையோரங்களில் பாதிப்பு எப்படி இருக்கும் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறான். அதே போலத்தான் ஆம்பி குமாரனிடம் கேகயப் படைவலிமை பற்றியும் ஏற்கெனவே ஏராளமான கேள்விகள் கேட்டு அனைத்துத் தகவல்களையும் பெற்றிருந்தான். கேள்விப்பட்டதையும், கண்ணால் பார்ப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து அவன் மனதளவில் ஒரு முடிவை எட்டுவான் போல் இருக்கிறது….

 

ஆம்பி குமாரனுக்கு இதெல்லாம் புதிய அனுபவம். படை பலமும், வீரமும் மட்டுமே வெற்றிக்குப் போதுமானது என்கிற அளவில் தான் அவன் இது வரை நினைத்து வந்திருக்கிறான். ஆனால் அலெக்ஸாண்டரைக் கவனித்துப் பார்க்கையில் தான் அவை மட்டும் போதுமானது இல்லை என்பது மெள்ளப் புரிவது போலிருந்தது.  பாடமாகப் படிக்கையிலும், அறிவுரையாகக் கேட்கையிலும் கசந்த விஷயங்கள் ஒரு மாபெரும் வெற்றியாளனின் நடவடிக்கையில் காணும் போது மண்டையிலடித்தாற்போல விளங்குகின்றன.

 

அலெக்ஸாண்டர் திடீரென்று கேட்டான். “எதிரிப்படையில் புருஷோத்தமன் எங்கே இருக்கிறான்?”

 

தூரத்தில் மிகச்சிறியதாய் தெரிந்த உருவங்களைக் கண்களைச் சுருக்கித் தானும் பார்த்து விட்டு ஆம்பி குமாரன் சொன்னான். “யானைப்படையின் மத்தியில் இருக்கிறான். அவன் பின்னால் அமர்ந்து அவன் தலைக்கு மேல் ஒரு காவலன் குடை பிடித்துக் கொண்டிருக்கிறான்.”

 

அலெக்ஸாண்டர் மெல்லக் கேட்டான். “காவலன் பின்னால் குடைபிடித்தபடி அமர்ந்திருக்கா விட்டால், வித்தியாசப்படுத்துகிற வகையில் உடை நகைகள் கிரீடம் எதுவும் அணிந்திராமலும் இருந்தால் உன்னால் அந்தப் படையில் புருஷோத்தமனைச் சுலபமாகக் கண்டுபிடித்திருக்க முடியுமா நண்பா?”

 

ஆம்பி குமாரன் தயக்கத்துடன் சொன்னான். “சிரமம் தான் நண்பா”

 

முகாமிட்டிருக்கும் தன்னுடைய கூடாரத்திற்கு ஆம்பி குமாரனையும், சசிகுப்தனையும், மற்ற படைத்தளபதிகளையும் அழைத்துச் சென்ற அலெக்ஸாண்டர் அவர்களிடம் கேட்டான். “நம் படை நிலவரம் நமக்குத் தெரியும். அவர்கள் படை நிலவரத்தையும் பார்த்து விட்டோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

 

அலெக்ஸாண்டரின் தளபதிகளில் ஒருவன் சொன்னான். ”நிறைந்து ஓடும் நதியை நாம் படகுகள் மூலமாகவும், தற்காலிகப் பாலங்கள் அமைப்பதன் மூலமாகவும் தான் கடந்து போரிட வேண்டும். அப்படி நாம் கடக்க முயற்சி செய்யும் போதே அவர்கள் கற்களையும், ஆயுதங்களையும் வீசித் தாக்கி நம்மை தடுக்க முயல்வது நிச்சயம். எதிரியின் மிகப்பெரிய படை வேறு வேலைகள் இல்லாமல் சும்மா இருக்கும் போது அந்த ஒரு வேலையை திறம்படச் செய்ய முடியும். நமக்கு அது பிரதிகூலம் தான். அப்படியே நம் காலாட்படையும், குதிரைப்படையும் கஷ்டப்பட்டு நதியைக் கடந்து போனாலும் முன்னணியில் நிற்கிற அவர்களது பெரிய யானைப்படை நம்மைத் தாக்கினால் சமாளிப்பது கஷ்டம். குறிப்பாக யானைகளின் தாக்குதலை நம் குதிரைகளும், வீரர்களும் சமாளிப்பது கஷ்டம். குதிரைகள் மிரண்டு ஓடும் சாத்தியக்கூறு அதிகம். எதிரிகள் முன்னணியில் யானைப்படையை நிறுத்தியிருப்பது அதை எதிர்பார்த்துத் தான்...”

 

சசிகுப்தன் சொன்னான். “மேலும் நம் இத்தனை படையும் ஒரே நேரத்தில் மறு கரையை அடைய முடியாது. பகுதி பகுதியாகத் தான் போய்ச் சேர முடியும். ஒவ்வொரு பகுதியையும் அவர்களுடைய அனைத்துப் படைகளும் தாக்குவது அவர்களுக்கு எளிது. அதனால் நம் அடுத்த பகுதிகள் போய்ச் சேர்வதற்கு முன் முந்தைய பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்திருக்கும் ஆபத்து இருக்கிறது”

 

அவர்கள் அதை எந்த விதத் தயக்கமுமில்லாமல் சொன்னதும், அதை அலெக்ஸாண்டர் எந்த வித எதிர்ப்பும், கோபமும், கலக்கமும் காட்டாமல் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டதும் ஆம்பி குமாரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனால் இப்படி எதிர்மறையான தகவல்களை அமைதியாகக் கேட்டுக் கொள்ள முடிந்திருக்காது.

 

“இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க என்ன மாற்று வழி நமக்கு இருக்கிறது?” அலெக்ஸாண்டர் அமைதியாகக் கேட்டான்.   

 

அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். அவர்களுக்கு வழி எதுவும் தெரியவில்லை. வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது. அலெக்ஸாண்டர் யோசித்தபடியே சொன்னான். “எதிரிகளுக்கு முழுமையாக நிறைந்து ஓடும் இந்த விதஸ்தா நதியும், என்னேரமும் பெருக்கெடுத்து ஓட முடிந்த வெள்ளமும், மழைக்காலமும், நதியைக் கடந்து போரிட வேண்டியிருக்கும் நம் அவசியமும் அனுகூலங்களாக இருக்கின்றன.”

 

அவர்கள் தலையசைத்தார்கள். அலெக்ஸாண்டர் அமைதியாகச் சொன்னான். “யோசிப்போம்…. நதியைக் கடக்க பெரிய படகுகள் அமைக்கும் பணி எந்த அளவில் இருக்கிறது”

 

ஆம்பிகுமாரன் சொன்னான். “பெருமளவில் நம் ஆட்கள் செய்து முடித்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஆக வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன”

 

“நல்லது. அவர்கள் அந்த வேலையை முழுமூச்சாகச் செய்யட்டும்.” என்ற அலெக்ஸாண்டர் அனைவரும் போகலாம் என்பது போல கையால் சைகை செய்தான்.

 

அனைவரும் எழுந்து கிளம்பத் தயாராக ஆம்பி குமாரன் சற்று யோசித்தான். சசிகுப்தன் பார்வையால் அவனை எழுப்பினான். வெளியே வந்த பிறகு சசிகுப்தன் ஆம்பி குமாரனிடம் சொன்னான். “அலெக்ஸாண்டர் இது போன்ற நேரங்களில் தனிமையில் யோசிப்பதையே விரும்புவார். ஒரு முடிவுக்கு வரும் வரை யாரிடமும் அனாவசியமாகப் பேச மாட்டார்…..”

 

ஆம்பி குமாரன் சற்று கவலையுடன் கேட்டான். “நாம் இந்த மழைக்காலம் முடியும் வரை காத்திருந்திருக்கலாமோ?”

 

“அதுவே உசிதம் என்றால் இப்போது அலெக்ஸாண்டர் கிளம்பியே இருக்க மாட்டார். ஏதாவது ஒரு திட்டம் அவர் முன்பே போட்டிருப்பார். இப்போது இங்கே வந்து தற்போதைய நிலவரத்தைப் பார்த்த பின் அந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதை உணர்கிறார். அதை ஒருசில நாட்களில் செய்து விடுவார். அதனால் கவலை தேவையில்லை”

 

சசிகுப்தன் உறுதியாகச் சொன்னான்.  அவன் அலெக்ஸாண்டருடன் சேர்ந்து பாரசீகப் படையுடன் போரிட்டவன். ஆம்பி குமாரனை விட அதிக காலமாக அலெக்ஸாண்டருடன் பழக்கியிருப்பவன் அவன். அந்த அனுபவத்தை வைத்து தான் அவன் சொல்கிறான் என்பதால் ஓரளவு ஆம்பி குமாரனும் தைரியமடைந்தான்.

 

அன்றிரவு நன்றாக மழை பெய்தது. காலச்சூழ்நிலை முன்கூட்டியே தெரிந்திருந்ததால் படைகள் மழையில் நனையாமல் பாதுகாப்பாக இருப்பதற்கும் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. அனைவரும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அலெக்ஸாண்டர் தன் கூடாரத்திலிருந்து வெளியே வந்தான். நள்ளிரவு நேரத்தில் கொட்டுகிற மழையில் தன் குதிரை மீதேறியவன் விதஸ்தா நதிக்கரையோரம் பயணிக்க ஆரம்பித்தான்.

 

உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த ஆம்பி குமாரன் தன் கூடாரத்தில் இருந்தபடியே அதைத் திகைப்புடன் பார்த்தான். எங்கே போகிறானிவன்?

 

(தொடரும்)

என்.கணேசன்

Wednesday, February 8, 2023

முந்தைய சிந்தனைகள் 92

 சிந்திக்க சில சிந்தனைகள், என் நூல்களிலிருந்து ....













Monday, February 6, 2023

யாரோ ஒருவன்? 124


நரேந்திரன் தொடர்ந்து சொன்னான். “நமக்கு இருக்கும் சாதகமான அம்சங்கள் இரண்டு. ஒன்று நாம் அவனைக் கண்டுபிடித்து விட்டோம் என்பது அஜீம் அகமதுக்குத் தெரியாதது. இன்னொன்று அந்தத் தொழிற்சாலை. அந்தத் தொழிற்சாலைக்குள் நம் ஆட்கள் நுழைந்து அவனைக் கண்காணித்து சமயம் பார்த்து .... எதாவது செய்யலாம்.”

அவன் அர்த்தம் பொதிந்த அமைதியுடன் இடைவெளி விட்டு எதாவது செய்யலாம் என்று சொன்னது ரா அதிகாரிகளின் முகங்களில் புன்னகையை வரவழைத்தது.

ஒரு அதிகாரி கேட்டார். “அஜீம் அகமது உஷார்ப் பேர்வழி என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படியிருக்கையில் நம் அதிகாரிகள் கூர்க்காவின் சந்தேகத்தைக் கிளப்பாமல் எப்படி உள்ளே நுழைய முடியும்? பின் வழி எதாவது இருக்கிறதா?”

“பின்னால் வழி எதுவும் இல்லை. கட்டிடங்கள் தான் இருக்கின்றன. முன் வழியாகத் தான் போக வேண்டும். நாங்கள் அந்தத் தொழிற்சாலையின் காமிராக்களைச் செக் செய்த போது எதிர் கூர்க்காக்கள் இரண்டு பேருமே அந்த சரக்கு லாரிகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து திருப்தி அடைந்து விட்டார்கள் என்பது புரிந்தது. வேறு வாகனம் அங்கே நிதானமாகப் போனாலோ தெரியாத ஆள் வந்தாலோ மிகவும் கூர்ந்து கவனிக்கிற கூர்க்காக்கள் இந்த சரக்கு வாகனங்களைப் பார்த்துப் பழகி விட்டார்கள். இப்போது அவர்கள் அதைக்கூர்ந்து பார்ப்பதைக் கூட விட்டு விட்டார்கள். அந்தச் சரக்கு வாகனத்தில் நம் ஆட்கள் நான்கு பேர் மறைந்திருந்து உள்ளே போகிறார்கள்”

இன்னொரு அதிகாரி சொன்னார். “அத்தனை பெரிய தொழிற்சாலையில் நம் ஆட்கள் போய், அதற்கான காரணமும் தெரிந்தால் கண்டிப்பாக தொழிலாளிகள் வெளியே வரும் போதும், போகும் போதும் அந்த வீட்டை வித்தியாசமாகப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அந்த வித்தியாசமான பார்வையே நாம் சந்தேகப்படுவதை கூர்க்காவுக்கும் அஜீம் அகமதுக்கும் காட்டிக் கொடுத்து விடுமே நரேந்திரன்”

நரேந்திரன் சொன்னான். “அதையும் யோசித்துப் பார்த்து விட்டேன். நம் அதிகாரிகள் போய்ப் பதுங்கி இருப்பதும் கண்காணிப்பதும் தொழிற்சாலையின் முன்பகுதியிலேயே உள்ள ஆபிஸ் ரூமில் இருந்து தான். அங்கிருந்து தான் அந்த வீட்டைக் கண்காணிக்க முடியும். அந்த ஆபீஸ் ரூமில் மேனேஜிங் டைரக்டர், ஒரு அக்கவுண்டண்ட், ஒரு க்ளர்க் மட்டும் தான் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேருக்கு மட்டும் தான் நம் ஆட்கள் எதற்குப் போயிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தெரியும். அந்த மூன்று பேரை எதிர் வீட்டை சந்தேகப்பட வைக்கக்கூடாது என்றும், மற்ற தொழிலாளிகளுக்கு விஷயம் கசிந்து விடக்கூடாது என்றும் எச்சரித்து கவனமாக இருக்க வைப்பது நமக்கு முடியாத காரியமல்ல.... அவர்கள் அங்கே வேலை செய்வதும் எட்டு மணி நேரம் தான். மற்ற தொழிற்சாலை தொழிலாளிகள் போல அவர்கள் மூன்று ஷிஃப்டில் வேலை செய்வது இல்லை”

ரா தலைவர் திருப்தியடைந்து கேட்டார். ”நாம் ஆபரேஷன் எப்போது ஆரம்பிக்கப் போகிறோம்.”

நரேந்திரன் சொன்னான். “நம் ஆட்கள் கண்காணிக்க இன்றிரவே தொழிற்சாலைக்குள் போகிறார்கள். கண்காணித்துக் கிடைக்கிற தகவல்களை வைத்து தான் மற்றதை எல்லாம் நாம் தீர்மானிக்க முடியும்”

மாலை ஆறு மணி வரை நேரம் போவது அங்கே எல்லோருக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது. வேலாயுதம், சரத், கல்யாண் மூவரும் வேலாயுதத்தின் அறைக்கு அவசர ஆலோசனை செய்ய விரைந்தார்கள். தீபக்கும் தர்ஷினியும் தனியாக புல்வெளியில் அமர்ந்து பேச ஆரம்பிக்க, மேகலாவும், ரஞ்சனியும் வீட்டிற்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ரஞ்சனி மேகலாவிடம் மாதவன் என்ற தங்கள் நெருங்கிய நண்பனைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் நால்வருக்கு இடையே இருந்த ஆழமான நட்பைப் பற்றியும் மனம் விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள். மிக மிக நல்லவனான அந்த நண்பன் கல்யாண், சரத்துடன் மணாலியைச் சுற்றிப்பார்த்து விட்டு அங்கே ட்ரெக்கிங் போய்விட்டு வருவதாகப் போனவன் அங்கு வெடிகுண்டு விபத்தில் இறந்து போனதைச் சொன்னாள். சொல்லும் போது அவள் அழுத அழுகை மேகலாவையும் கண்கலங்க வைத்தது. இப்போதும் மாதவனின் வயதான பெற்றோர் சத்தியமங்கலத்தில் இருக்கிறார்கள் என்றும் ஒரு காலத்தில் மாதவனின் தாய் சமையலை வயிறார சாப்பிட்டு அங்கே நான்கு பேரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்த நாட்கள் அதிகம் என்றும் சொன்னாள்.

மேகலாவுக்கு எல்லாம் புதிய தகவலாக இருந்தன. “என் கிட்ட இவர் இதையெல்லாம் சொன்னதே இல்லை.” என்றாள். அவள் மனதுக்குள் ‘எனக்கு நீங்களே இவரை டா போட்டுப் பேசற அளவுக்கு ஃப்ரண்டுன்னு கூட இன்னைக்கு வரைக்குத் தெரியாது’ என்றும் சொல்லிக் கொண்டாள்.

ஆனால் அவள் மனதுக்குள் சொன்ன வார்த்தைகளை தர்ஷினி தீபக்கிடம் வாய்விட்டே சொல்லிக் கொண்டிருந்தாள். “... ஏண்டா உனக்குத் தெரியுமா?”

தீபக் சொன்னான். “எனக்கும் தெரியாது.”

“உனக்கு கனவுல யாரோ வந்து என் சாவு இயற்கையல்ல. என்னை கொன்னுட்டாங்கன்னு சொல்றமாதிரி கேட்டதா சொன்னியே. அது இவங்க ஃப்ரண்ட் மாதவனா இருக்குமோ?”

“இருக்கும்னு இப்ப தோணுதுடி. அந்த மாதவன் தான் ஆவி தான் எங்கம்மாவையும் வந்து பார்த்துகிட்டே இருந்திருக்கு போல. அது தான் அம்மா நாகராஜ் அங்கிள் கிட்ட கேட்க வெச்சு இந்தத் தேவையில்லாத  பிரச்சனை வந்துடுச்சு”

“ரொம்ப நெருங்கின நண்பன் செத்துப் போனா அவனைப் பத்தி பேசினா கூட மனசு வேதனையாகும்னு பேசாம இவங்க இருந்ததெல்லாம் எனக்கு லூசுத்தனமா தெரியுது. அதை விட லூசுத்தனமா தெரியறது உன்னோட நாகராஜ் அங்கிள் எங்கப்பாவையும், உங்கப்பாவையும், கொலைகாரங்களா சொல்றது தான். நீ அந்த ஆள என்னவோ முக்காலமும் அறிஞ்ச ஞானி மாதிரி சொன்னே. இப்போ அந்த ஆள் இவங்கள விட பெரிய லூசா இருக்காரு”

“அவர் என்ன கடவுளா? அவருக்கும் சிலது தப்பாகும் தான்.”

“சரி தப்பாச்சுன்னா அதை சொல்லிட்டு விட்டுட வேண்டியது தானே. ஆதாரத்தைக் கொண்டு வந்து காமிக்கறேன்கிறாரு. என்ன ஆதாரமா இருக்கும். ஏதாவது போட்டோ மாதிரி இருக்குமா?”

அதே கேள்வியைத் தான் வேலாயுதம் மகனைக் கேட்டுக் கொண்டிருந்தார். கல்யாண் சொன்னான். “போட்டோ எல்லாம் இருக்க வழியே இல்லைப்பா.”

சரத் சந்தேகத்தோடு கேட்டான். “நாகராஜ் அவனோட நாகசக்தியை வெச்சு ஏதாவது போலி போட்டோவை அவனே தயாரிச்சுக் கொண்டு வந்தா”

வேலாயுதம் சொன்னார். “ஒரிஜினல் போட்டோவைக் கொண்டு வந்தாலே இது ஜோடிச்சதுன்னு சத்தியம் செஞ்சு சொல்ற காலத்துல நாகராஜ் ஜோடிச்ச போட்டோவைக் கொண்டு வர்றது தமாஷாய் தான் இருக்கும். ஏண்டா அவனுக்கு முதல்லயே மனோரீதியான பிரச்சினைகள் இருக்குன்னு அந்த டிடெக்டிவ் ஏஜென்ஸிகாரன் எழுதி அனுப்பியிருந்தானே ஞாபகம் இருக்கா. அந்த மனப்பிரச்சினைகள் இப்ப முத்தியிருக்குமோ? அதனால தான் இப்படி எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிருக்கானோ?”

அவர் சொன்ன பிறகு கல்யாணுக்கும் அந்தச் சந்தேகம் பலமாக எழுந்தது. இல்லாவிட்டால் இல்லவே இல்லாத ஆதாரத்தை வீட்டுக்கே வந்து காட்டுகிறேன் என்று சொல்ல மாட்டான். அவனைப் போய்ப் பார்க்க ஐந்து லட்சம், ஐந்து மாத காலக் காத்திருப்பு என்ற உயர்ந்த இடத்தில் இருந்தவன் ரஞ்சனியிடம் சொன்ன அளவு வரை கூட தன் மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டிருந்தான். தீபக் போய் பேசியதற்கு ஆதாரத்துடன் வீட்டுக்கே வருகிறேன் என்று சொன்ன போது சறுக்கியது தான் பெரிய சறுக்கல்...

“என்னடா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறே” என்று வேலாயுதம் கேட்டு முன்பே கேட்டிருந்த கேள்விகளை ஞாபகப்படுத்தினார்.

“அதைத் தான் நானும் நினைச்சுகிட்டிருந்தேன்ப்பா. அவனுக்குப் பைத்தியம் தான் முத்திடுச்சு....”

சரத் சொன்னான். “நல்ல வேளையா நாளைக்கு இங்கேயிருந்து போறான். அவன் போய்த் தொலைஞ்சாலே நமக்கு நிம்மதி. ஆதாரம்கிற பேர்ல என்னத்த கொண்டு வந்து காமிக்கப்போறானோ தெரியல. அது ஒன்னு தான் மனசுல நெருடலா இருக்கு.”

கல்யாண் நண்பனிடம் கடுமையான குரலில் சொன்னான். “என்ன சொன்னாலும் காமிச்சாலும் அது பொய்ன்னு ஆணித்தரமா சொல்லப் போறோம். நீ வாயடைச்சுப் போறது, பின்னால போய் ஒளியறது, இதை எல்லாம் நிறுத்தணும். நான் பேசறப்ப அதை நீயும் அடிச்சுச் சொல்லணும். மறக்காதே. உனக்கே தெரியும் எந்த மண்ணாங்கட்டி ஆதாரமும் இல்லைன்னு. அப்படி இருக்கறப்ப பயம் என்னத்துக்கு?”

சரத்தும் தைரியம் பெற்று உறுதியாக முகத்தை வைத்துக் கொண்டு தலையாட்டினான். மணி ஆறு ஆகியது.



(தொடரும்)
என்.கணேசன்

Thursday, February 2, 2023

சாணக்கியன் 42

 

சில மனிதர்கள் ஆழமாக சிந்திக்க முடியாதவர்கள். அவர்களால் தங்களை விட அறிவில் மேம்பட்டவர்களிடம் ஆலோசனை கேட்க முடியாது. அவர்கள் நலனில் அக்கறை கொண்டு வலிய வந்து யாராவது அறிவுரையோ, ஆலோசனையோ தந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றவர்கள் அறிவுரை அவர்களுக்கு வேம்பாகக் கசக்கும். அதனால் எதற்கும் யாரையும் ஆலோசனை கேட்காமல் தாங்களாக யோசித்து, சில அனுமானங்களை எட்டி சில முடிவுகளை எடுப்பார்கள். அதன் விளைவுகளைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பார்க்கும் சிரமங்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தாங்கள் நினைப்பது தான் சரி, அது தான் அப்பழுக்கில்லாத திட்டம் என்று நினைப்பார்கள். ஆனால் நடைமுறையில் பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும் போது பெருங்கலக்கம் அடைவார்கள். ஆனால் அது அவர்களே எடுத்திருக்கும் முடிவின் விளைவுகள் என்பதால் யாரையும் அவர்கள் குற்றம் சொல்லவும் வழியில்லை. வாய் விட்டுப் புலம்பவும் வழியில்லை. வருத்தத்தை வெளிப்படுத்தினால் தங்கள் முட்டாள்தனத்தை தாங்களே வெளிப்படையாக ஒத்துக்கொள்வது போல் ஆகி விடும் என்பதால் அந்த முடிவில் உள்ள சில்லறை நற்பலன்களை எண்ணியும், வராமல் தடுத்த பெரிய தீயபலன்களை எண்ணியும் ஆறுதல் அடைவார்கள். ஆம்பி குமாரன் அப்படித் தான் ஆறுதலடைந்தான்.

 

ஆனால் கேகய நாட்டுக்கு எதிராகப் போருக்கு தட்சசீலத்திலிருந்து  அலெக்ஸாண்டருடன் கிளம்புகையில் அவன் அடிவயிற்றில் ஒருவித பயம் எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.  போரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற பயமல்ல அது. அலெக்ஸாண்டருடன் செல்வதால் வெற்றி நிச்சயம் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை.  அவன் அடிவயிற்றுக் கலக்கத்திற்குக் காரணம் தட்சசீலத்தை பிலிப்பிடம் விட்டுப் போவது போல் உணர்ந்தது தான். இன்று வரை ’இப்போதும் நான் தான் காந்தார அரசன், அரியணையில் நான் தான் அமர்ந்திருக்கிறேன்” என்ற மனசமாதானமாவது இருந்தது. இப்போது தலைநகரை விட்டுப் போகையில் அந்த மனசமாதானமும் விலகிப் போனது.

 

கேகயத்துடன் போர் முடிந்து இங்கே திரும்பி வந்து விடுவோமா இல்லை அலெக்ஸாண்டர் மற்ற போர்களுக்கு, தொடர்ந்து அழைத்துப் போவானா என்று ஆம்பி குமாரனுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் பாக்ட்ரியாவில் இருந்து வந்த சசிகுப்தன் கேகயத்துடன் நடக்கும் போருக்கும் அவர்களுடன் வருகிறான். அப்படியே அவனும் அலெக்ஸாண்டருடன் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எப்போது தான் திரும்பி வருவது என்பது நிச்சயமில்லை. எப்போது வந்தாலும் பழைய அதிகாரம் அவனுக்கு இங்கே திரும்ப இருக்குமா என்பதும் தெரியவில்லை. அலெக்ஸாண்டர் கிளம்புவதற்கு முன் பிலிப்புடன் தனியாகச் சிறிது நேரம் பேசி விட்டு வந்தான். பிலிப்பிடம் அலெக்ஸாண்டர் என்ன சொன்னான் என்பது தெரியாதது அவனுக்குள் பீதியைக் கிளப்பியது.

 

“என்ன நண்பா உன்னிடம் உற்சாகத்தையே காணோம். உன் எதிரியை வெல்வோம் என்பதில் உனக்கே நம்பிக்கை இல்லையா?” என்று அலெக்ஸாண்டர் கேட்டான்.

 

இன்னமும் நண்பா என்று தான் அலெக்ஸாண்டர் அழைக்கிறான் அதனால் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று மறுபடியும் நம்பிக்கையை வரவழைத்துக் கொண்ட ஆம்பி குமாரன் பயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகமாகச் சொன்னான். “அப்படியெல்லாம் இல்லை நண்பா. நம் வெற்றி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று நண்பா”

 

நல்ல வேளையாக அலெக்ஸாண்டர் மேற்கொண்டு துருவிக் கேள்விகள் கேட்கவில்லை. இருவரும் தங்கள் குதிரைகளில் ஏறிக் கொள்ள இரு படைகளும் வீர முழக்கத்துடன் கிளம்பின.

 

கிளம்பிய வேளையில் லேசாக மழைத் தூறல் ஆரம்பிக்க அலெக்ஸாண்டர் பரவசமடைந்தவன் போல ஆகாயத்தைப் பார்த்தான். சில கணங்கள் பார்த்திருந்துவிட்டு அவன் ஆம்பி குமாரனை அழைத்துச் சொன்னான். “ஆகாய தேவதை நம்மை ஆசிர்வதிக்கிறது நண்பா. நல்ல ஆரம்பம். நீ சொன்னதை இயற்கையும் ஆமோதிக்கிறது, பார்த்தாயா?”

 

ஆம்பி குமாரன் அந்த வார்த்தைகளில் மேலும் உற்சாகமடைந்தான். ஆரவாரத்துடன் படைகள் முன்னேறின. வழிநெடுக தட்சசீல மக்கள் நின்று வாழ்த்தினார்கள். அப்படி வாழ்த்த முன்பே ஆம்பி குமாரன் ஏற்பாடு செய்திருந்தான். ஓரிடத்தில் மக்களோடு சேர்ந்து சாணக்கியரும், அவரது மாணவர்களும் நின்றிருந்தார்கள். ஆம்பி குமாரன் தன் ஆசிரியரைப் பார்த்தும் பார்க்காதது போலக் காட்டிக் கொண்டான். பார்த்ததாய் காட்டிக் கொண்டால் சம்பிரதாயத்துக்காகவாவது வணக்கத்தைத் தெரிவிக்க வேண்டும். இழந்த உற்சாகத்தைத் திரும்ப மீட்டிருக்கிற இந்த வேளையில் அவர் அலட்சியப் பார்வை அவன் மீது விழ வேண்டியதில்லை.... அவருடன் இருக்கின்ற அவரது மாணவர்கள் மக்களின் வாழ்த்து ஆரவாரத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதையும் அவன் கவனிக்காமலில்லை. அகங்காரிகள்.... ஆம்பி குமாரன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

 

அலெக்ஸாண்டரும் அந்த மாணவர்களைக் கவனித்தான். அவனுக்கு தட்சசீலத்திற்குள் நுழையும் போதே துடிப்பான சந்திரகுப்தனைப் பார்த்த நினைவு இருந்தது. சந்திரகுப்தனுக்கு அருகே நின்று கொண்டிருந்த அந்தணர் குடுமியை விரித்து விட்டபடி நின்று கொண்டிருந்தார். மற்றவர்களைப் போல் வேடிக்கை பார்க்கும் பார்வையாக இல்லாமல் அவருடைய கூர்மையான பார்வை அவனைத் துளைத்துப் பார்ப்பது போல் இருந்தது. அவரை நெருங்கிய போது தான் அவன் அவரைக் கவனித்தான் என்பதால் அவனால் அதிகம் கவனிக்க முடியவில்லை. அதற்குள் அவன் குதிரை அவரைக் கடந்து விட்டது. அவர் அவன் தொலைவில் வந்து கொண்டிருக்கையிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.  அவனுக்கு அவனுடைய ஆசிரியர் அரிஸ்டாட்டில் நினைவுக்கு வந்தார். அவர் பார்வையும் இப்படித் தான் கூர்மையாக இருக்கும். ஆனால் இந்த அந்தணரின் பார்வையில் கூர்மையுடன் வேறெதோ ஒன்று கூடுதலாக இருந்தது போல் தோன்றியது. அது என்ன என்பதை அவனால் வகைப்படுத்த முடியவில்லை....

 

படைகள் கடந்து போன பிறகு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் கலைய ஆரம்பித்தார்கள். சாணக்கியரும் அவரது மாணவர்களும் கல்விக்கூடம் நோக்கித் திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்.

 

சாணக்கியர் அலெக்ஸாண்டர் பற்றிக் கேள்விப்பட்டதையும், இப்போது பார்வையால் அவர் உணர்ந்ததையும் மனதுக்குள் ஒப்பிட்டுப் பார்த்தார். சில விஷயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. முக்கியமாய் அவனிடம் தெரிந்த அந்தத் துடிப்புத் தன்மை.  எதையும் எப்படியும் சாதித்து முடிப்பேன் என்று அவன் உடலில் ஒவ்வொரு அணுவும் அறிவிப்பது போல் தோன்றியது.

 

அவர் தன் மாணவர்களிடம் சொன்னார். “அலெக்ஸாண்டரை இது வரை தோல்வியே காணாதவன் என்று சொல்கிறார்கள். எந்தச் சூழலையும் சந்தித்து வெற்றி காணக்கூடியவன் என்று சொல்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் அவனிடம் இருக்கும் துடிப்புத் தன்மையும் உற்சாகமும் தான். எத்தனையோ யவன அரசர்கள் அரசாண்டு மாண்டிருக்கிறார்கள். ஆனால் அலெக்ஸாண்டர் அவன் ஆளும் பகுதி தாண்டி வெகுதூரம் வந்திருக்கிறான். கடந்து வந்த ஒவ்வொரு பகுதியையும் வென்றிருக்கிறான். அதற்குக் காரணம் அவனுக்குள் இருக்கும் அந்த அக்னி தான். நீங்கள் சாதிக்க நினைப்பது எதுவானாலும் சரி அது போன்றதொரு அக்னியை உங்களுக்குள் எப்போதும் உருவாக்கி வைத்திருக்க முடிந்தால் நீங்கள் சாதிக்க முடியாதது எதுவுமிருக்காது”

 

அவர் பொதுவாகவே சொன்னாலும் இந்த அறிவுரை குறிப்பாக அவனுக்குச் சொல்லப்பட்டது என்பதை சந்திரகுப்தன் உணர்ந்து புன்னகைத்தான். சற்று முன் கண்ட காட்சியில் அலெக்ஸாண்டருக்குப் பதிலாக அவனை இருத்திப் பார்த்தான். முன்னும் பின்னும் படைகள் பரிவாரங்கள் இருக்க ஒரு வீரியம் மிக்க அழகான குதிரையில் அவன் போவது போல் எண்ணிப் பார்த்தான். அவன் உடல் முறுக்கேறியது. அவன் முன் காட்சிகள் நீண்டு விரிந்தன…

 

சாணக்கியர் அவன் மௌனத்தில் அவனுடைய கனவுகளை உணர்ந்தார். அந்தக் கனவுகளுக்குத் தகுதியானவனே அவன் என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. வீரத்திலும் உறுதியிலும் சந்திரகுப்தன் அலெக்ஸாண்டருக்குச் சிறிதும் குறைந்தவன் அல்ல. நேற்று சின்ஹரன் கூட சந்திரகுப்தனுடைய முன்னேற்றத்தை மிகவும் மெச்சி அவரிடம் சொல்லியிருந்தான். எதையும் மிகவும் கச்சிதமாகவும், விரைவாகவும் அவனால் கற்றுக் கொள்ள முடிகிறது என்றும், அதை அதே வேகத்துடன் அவனால் மெருகேற்றிக் கொள்ள முடிகிறது என்றும், அவன் ஆளப்பிறந்தவன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் சின்ஹரன் பிரமிப்புடன் தெரிவித்திருந்தான்.

 

எல்லாம் அவர் திட்டப்படியே நடந்தால் அவர் கனவும், சந்திரகுப்தன் கனவும் சேர்ந்து நனவாகும். அவருடைய திட்டம் மிகவும் சிக்கலானது, கடினமானது என்றாலும் அறிவோடு உறுதியாக முயன்றால் முடியாதது என்பது கிடையவே கிடையாது. அதில் அவருக்குச் சந்தேகமேயில்லை.

 

(தொடரும்)

என்.கணேசன்