என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, May 18, 2021

பொருட்களை வரவழைக்கும் மாயசக்தி!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 26



ர்னல் ஓல்காட் 1880 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் நாள் பதிவு செய்த ஒரு சுவாரசியமான நிகழ்வு ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் இருந்த அபூர்வ சக்திக்க இன்னொரு எடுத்துக்காட்டு. அந்த நிகழ்வைப் பார்ப்போம்.

 

அன்றைய தினம் கர்னல் ஓல்காட்டும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் வேறு நான்கு நபர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்கள். அவர்களுடன் சில பணியாளர்களும் சென்றிருந்தார்கள். அவர்களுக்குத் தேநீர் அருந்துவதற்குத்  தேவையான ஆறு கோப்பைகள் எடுத்துச் சென்றிருந்தார்கள். அந்தக் கோப்பைகள் வித்தியாசமான அழகிய வேலைப்பாடுடன் அமைந்திருந்தன. அவர்கள் மரங்கள் அடர்ந்த ஒரு இயற்கைச் செழிப்புள்ள இடத்தில் ஒரு புல்வெளிப்பிரதேசத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். அப்போது வேறொரு கனவானும் அங்கே வந்து சேர்ந்து அவர்களுடன் கலந்து கொண்டார். அனைவரும் அங்கே தங்கி இயற்கை எழிலை ரசித்தபடி அபூர்வசக்திகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். தேநீர் அருந்தும் நேரம் வந்த போது ஒரு பணியாளர் அங்கே ஆறு கோப்பைகள் தான் கொண்டு வந்திருப்பதாகவும், புதிதாக வந்திருக்கும் கனவானுக்கும் சேர்த்து ஏழு கோப்பைகள் தேவைப்படுவதாகவும் தயக்கத்துடன் தெரிவித்தார்.

 

என்ன செய்வதென்று எல்லோரும் யோசித்த போது ஒருவர் விளையாட்டாகச் சொன்னார். “அதனாலென்ன? ப்ளாவட்ஸ்கீ அம்மையார் புதிய ஒரு கோப்பையை வரவழைத்துக் கொடுக்க மாட்டாராஎன்று கேட்டார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்த எதிர்பாராத கோரிக்கையை நிறைவேற்ற உடனே தயாரானார். சிறிது நேரம் கண்களை மூடி யோசித்த அவர் பிறகு சற்று தூரத்தில்  இருந்த ஒரு மரத்தடி இடத்தைக் காட்டி அங்கே தோண்டிப் பார்க்கச் சொன்னார். அவர்களில் ஒருவர் ஆச்சரியத்துடன் பேனா கத்தியால் இடத்தைத் தோண்டிப் பார்த்த போது சுமார் ஓரடி ஆழத்திற்குப் பிறகு ஒரு கோப்பை இருந்தது. மற்ற ஆறு கோப்பைகளைப் போலவே அந்தப் புதிய கோப்பையும் இருந்தது தான் வியப்பிலும் வியப்பு.

 

அன்று மதியமே இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் அங்கே நடந்தேறியது. அவர்களைக் கண்டு பேச வந்த ஒருவர் தியோசபிகல் சொசைட்டி குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார். கடைசியில் அவரிடம் கர்னல் ஓல்காட் தியோசபிகல் சொசைட்டியின் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள அவரிடம் கோரிக்கை விடுத்த போது அவர் சொன்னார். “எனக்கு உறுப்பினர் சான்றிதழை இப்போதே தரத் தயாரானால் நான் இப்போதே தியோசபிகல் சொசைட்டியில் இணையத் தயார்

 

உறுப்பினர் சான்றிதழ்கள் எல்லாம் அவர்களுடைய அலுவலகத்தில் இருந்தன. சுற்றுலாச் செல்லும் போது அதையெல்லாம் எடுத்துக் கொண்டு வராததால் கர்னல் ஓல்காட் அவருடைய கோரிக்கை நிறைவேற்ற முடியாத கோரிக்கை என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தப் புதிய நபரிடம்உங்களுடைய உறுப்பினர் சான்றிதழ் அங்கே இருக்கிறதுஎன்று சொல்லி சற்று தள்ளி இருந்த ஒரு புதரைக் காட்டினார்.

 

அந்தப் புதிய நபர் மட்டுமல்ல, ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் வந்திருந்த மற்றவர்களும் திகைத்துப் போனார்கள். அந்தப் புதிய நபர் திகைப்பு குறையாமல் அவசர அவசரமாக அந்தப் புதரை நோக்கி விரைந்தார். அந்தப் புதருக்குள் அந்தப் புதிய நபரின் உறுப்பினர் சான்றிதழ் இருந்தது. தியோசபிகல் சொசைட்டியின் உறுப்பினர் படிவத்தில் அந்தப் புதிய நபரின் பெயர் கர்னல் ஓல்காட்டின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்தச் சான்றிதழில் தியோசபிகல் சொசைட்டியின் முத்திரையும் இடப்பட்டு அன்றைய தேதியும் எழுதப்பட்டிருந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் புதிய நபரைப் போலவே கர்னல் ஓல்காட்டும் எல்லையில்லாத  வியப்பில் ஆழ்ந்தார். அந்தச் சான்றிதழில் இருந்தது அவருடைய கையெழுத்து போலவே தான் தோன்றியது. அந்தச் சான்றிதழ்களோ தியோசபிகல் சொசைட்டியின் அலுவலகத்தில் வைத்திருந்தார்கள். அது எப்படி அங்கே வந்தது? அதில் அந்தப் புதிய நபரின் பெயரை எழுதியது யார்? தேதியையும் எழுதியது யார்? திடீரென்று அந்தப் புதிய நபர் அப்படி ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுப்பார் என்று யாருக்குத் தெரியும்? தான் எழுதவில்லை என்ற போதும் அந்த சான்றிதழில் தன் கையெழுத்து தெளிவாக இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கர்னல் ஓல்காட்டுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைக் கடைசி வரை ஊகிக்க முடியவில்லை.   

 

இன்னொரு சமயத்தில் கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், மற்ற சில நண்பர்களும் திரு ஹ்யூம் என்பவர் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். திருமதி ஹ்யூம், திரு ஹ்யூம் உட்பட பதினோரு பேர் ஒரு நாள் இரவு அங்கே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார்யாருக்காவது ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார். உடனே திருமதி ஹ்யூம்எனக்கு வேண்டும்என்று சொன்னார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கேட்டார். “உங்களுக்கு என்ன வேண்டும்?”

 

திருமதி ஹ்யூம் சொன்னார். “எங்கள் குடும்ப நகைகளில் ஒரு முத்துக்கள் பதித்த நகை சிறிது காலத்திற்கு முன் காணாமல் போய் விட்டது. காணாமல் போன நகையை நீங்கள் வரவழைத்துக் கொடுத்தால் அது பெரிய உபகாரமாக இருக்கும்

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார்  கேட்டார். “அந்த முத்து நகை எப்படி இருக்கும் என்று உங்கள் மனதில் தெளிவான பிம்பம் இருக்கிறதா?.

 

திருமதி ஹ்யூம்இருக்கிறதுஎன்று சொன்னார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவரையே கூர்ந்து பார்த்தார். அவர் பார்த்து திருமதி ஹ்யூம் மனதில் இருக்கும் பிம்பத்தை யூகிக்க முயன்றது போல் கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது.

 

பின் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “அந்த நகையை இந்த வீட்டுக்குள் கொண்டு வருவது கஷ்டம். உங்கள் தோட்டத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யட்டுமா?”

 

திருமதி ஹ்யூம் ஒத்துக் கொண்டார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு கேட்டார். “உங்கள் தோட்டத்தில் நட்சத்திர வடிவில் தரையில் பூ மேடைகள் இருக்கின்றனவா?”

 

திரு ஹ்யூம் சொன்னார். “நிறையவே இருக்கின்றன.” சின்னச் சின்ன பூக்களை தோட்டத்தில் கொத்தாக வளர விட்டு நட்சத்திர வடிவங்களில் ஆங்காங்கே பூ மேடைகள் அவர்கள் அமைத்திருந்தார்கள். ஆனால் திரு.ஹ்யூம் அவர்களின் அந்தத் தோட்ட வீட்டுக்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வருவது அது தான் முதல் முறை. அவர் வெளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் அந்தப் பூ மேடைகள் இல்லை என்பதால் எப்படி அறிந்து கொண்டார் என்ற எண்ணமே திரு ஹ்யூம் அவர்களுக்கு மேலோங்கி இருந்தது.    

 

நான் சொல்வது இந்தத் திசையில்...” என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு திசையில் கையைக் காட்டிச் சொன்னார்.

 

வெளியே கடுங்குளிர் நிலவியதால் நகையை வேண்டுமென்று கேட்ட திருமதி ஹ்யூம் வெளியே சென்று பார்க்கத் தயங்கினார். ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் தோட்டத்திற்குச் செல்லவில்லை.  ஆனால் மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து லாந்தர் விளக்குகளை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு விரைந்தார்கள்.  யார் கையில் கிடைக்கும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கைகாட்டிய இடத்தில் ஒரு பெரிய பூமேடைப் பரவல் இருந்தது. அனைவரும் அதனிடையே அந்த முத்து நகையைத் தேடினார்கள். ஒருவர் கையில் அந்த முத்து நகை கிடைக்க அவர் அதை எடுத்துக் கொண்டு திருமதி ஹ்யூமிடம் ஓடோடி வந்தார். “இது தான் நீங்கள் சொன்ன நகையா?” திருமதி ஹ்யூமிற்கோ தன் கண்களை நம்ப முடியவில்லை கைகளில். பிரமிப்புடன் அந்த நகையை வாங்கிப் பார்த்து ஆமென்று தலையை அசைத்தார்.

 

ஒரு முறை கூடத் தன் கண்ணால் பார்த்திராத ஒரு நகையை, சில காலத்திற்கு முன்பே காணாமல் போயிருந்த ஒரு நகையை, ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எப்படி சிறிது நேரத்தில் வரவழைத்தார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு மகாத்மா உதவியுடன் வரவழைத்ததாகச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார்.  

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி

 


 

 

Monday, May 17, 2021

யாரோ ஒருவன்? 32


தன்லாலுக்கு மூத்த ரா அதிகாரி காணாமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் முன்பே அறிந்த விஷயம் தான். ஆனால் அந்த இளம் அதிகாரி இத்தனை காலம் கழித்துக் காணாமல் போனது ஆச்சரியமாகத் தான் இருந்தது. சஞ்சய் ஷர்மாவைத் தன் ரக ஆளாகத் தான் மதன்லால் கணித்திருந்தான். அவன் ரக ஆட்கள் எப்போதும் தகுந்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பவர்கள். அவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டாலும் கூட மாட்டிக் கொள்வதில்லை.  சட்டத்தில் மாட்டிக் கொள்வதை மதன்லால் ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. மாட்டினாலும் அதிலிருந்து தப்பிக்க ஆயிரம் வழிகள். அந்த வழிகளுக்கும் வழிவிட்டே சட்டம் ஒதுங்கி நிற்கிறது என்பதால் அந்த ஓட்டை வழிகளில் அனாயாசமாக ஒருவன் தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பகைத்துக் கொள்வதென்பது வேறு விஷயம். சக்தி வாய்ந்த மனிதர்கள் மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல எதிரிகளை நசுக்கி விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள். சஞ்சய் ஷர்மா அப்படி யாருடைய விரோதத்தையாவது சம்பாதித்து விட்டானா என்னஇந்தச் சிந்தனை ஓட்டத்தில் மனதை ஓட விட்ட மதன்லால் அவனையே நரேந்திரன் கூர்ந்து பார்ப்பதைக் கவனித்து சுதாரித்துக் கொண்டான்.

நரேந்திரன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “மணாலியில் அந்த வெடிகுண்டு சம்பவத்துக்குப் பின்னால் இன்று வரை வேறெந்த வெடிகுண்டு சம்பவமும் நடக்கவில்லை. அபூர்வமாக நடக்கும் சம்பவங்களின் தடயங்களையும், சம்பந்தப்பட்ட ஆட்களையும் கண்டுபிடிப்பதும் முடிவெடுப்பதும் போலீஸுக்கு முடியாத காரியமல்லவே மதன்லால். பின் ஏன் அதில் மெத்தனமாக இருந்து விட்டீர்கள்?”

மதன்லால் எரிச்சலுடன் சொன்னான். “நரேந்திரன், உண்மை நீங்கள் சொன்னதற்கு எதிர்விதமாக இருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன். எப்போதும் நடக்கும் சம்பவங்களின் பின்னணியைப் போலீஸால் யூகிக்க முடியும். சம்பந்தப்பட்ட ஆட்களைப் பிடிக்கவும் முடியும். ஆனால் அபூர்வமாக நடக்கும் சம்பவங்களின் பின்னணியை அனுமானிப்பது சுலபமல்ல. அது மட்டுமல்ல. ஒரு வழக்கின் பின்னாலேயே நாங்கள் இருந்து விட முடியாது. மற்ற வழக்குகளிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது…..”

உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா மதன்லால்?”

இல்லை நரேந்திரன்.”

இறந்து போன தமிழ்ப் பையனின் நண்பர்கள்?”

அவர்கள் அவனைக் கொல்லத் திட்டமிட்டு இருந்தால் தமிழ்நாட்டிலேயே அதைச் செய்திருக்கலாம். மணாலி வரை வந்து செய்ய வேண்டியதில்லை. அது மட்டுமல்ல. அவன் அந்த டாக்சியில் ஏறும் போது கூட அவர்கள் இருக்கவில்லை. அந்த டாக்சியில் அவன் ஏறுவான் என்பதைக் கூட அவர்கள் கணித்திருக்க வாய்ப்பில்லை….அதனால் அந்த டாக்ஸியில் அவர்கள் எப்படி வெடிகுண்டு வைத்திருக்க முடியும்?”

அப்படியானால் என்ன நடந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் மதன்லால்?”  

எந்த யூகத்திற்கும் வழியில்லாமல் எல்லாமே புதிராகத் தான் இருக்கிறது நரேந்திரன்

சிறிது நேரம் அவனையே நரேந்திரன் கூர்ந்து பார்க்க இனி எதுவும் சொல்வதற்கு இல்லை என்று உணர்த்தும் வகையில் முன்பு படிக்க ஆரம்பித்த ஃபைலை மறுபடியும் மதன்லால் சாவகாசமாகப் படிக்க ஆரம்பித்தான். திடீரென்று நரேந்திரன் கேட்டான். “நீங்கள் அஜீம் அகமதை நேரில் பார்த்திருக்கிறீர்களா மதன்லால்?”

எதிர்பாராத அந்தக் கேள்வியால் தூக்கிவாரிப் போட்டது போல் திடுக்கிட்ட மதன்லால்  இல்லை என்று சொல்ல நினைத்தும் சொல்ல வாய் எழாமல் நரேந்திரனை வெறித்துப் பார்த்தான்.  அவன் நினைவுகள் மிகக் குறுகிய காலமான அந்த 87 வினாடிகளுக்குச் சென்றன. அத்தனை நேரம் தான் அவன் அஜீம் அகமது முன்னால் நிற்க அன்றைக்கு அனுமதி கிடைத்தது.    அந்த 87 வினாடிகளில் பத்து வினாடிகள் அஜீம் அகமது அவனை ஊடுருவிப் பார்த்தான். 76 வினாடிகள் பேசினான். சரியென்று சொல்ல மதன்லாலுக்கு ஒரு வினாடி தரப்பட்டது. அதன் பின் வெளியேற அனுமதி கிடைத்தது. வெளியே வந்த பிறகு ஒரு விஷயத்தை அவன் ஆழமாக உணர்ந்தான். இந்த மனிதன் பார்வையில் இனி படாமல் இருப்பது தான் பாதுகாப்பு….

வெறித்துப் பார்த்து முகம் வெளுத்த மதன்லாலிடமிருந்து நரேந்திரனுக்குப் பதில் கிடைத்து விட்டது. இனி தேவையான கேள்விகளுக்குச் சாதாரண வழியில் இவனைப் பதில் சொல்ல வைக்க முடியாது. வேறு விதமாகத் தான் கையாள வேண்டும்....

நரேந்திரன் எழுந்தான். “சரி மதன்லால். இந்த வழக்கு சம்பந்தமாக ஏதாவது ஞாபகம் வந்தால் எனக்குப் போன் செய்யுங்கள். வரட்டுமா?”

அவன் திடீரென்று கிளம்பியது மதன்லாலைத் திகைக்க வைத்தது. அவன் வெளியேறிய போது தான் ஒரு உண்மை அவனுக்கு உறைத்தது. நரேந்திரன் கேட்ட கடைசிக் கேள்விக்கு மதன்லால் பதில் அளிக்கா விட்டாலும் கூடக் காத்திருக்காமல் வற்புறுத்தாமல் அவன் எழுந்து போய் விட்டானே, ஏன்? மதன்லால் நரேந்திரனின் இந்தப் போக்கில் ஆபத்தை உணர்ந்தான். ஏதோ சரியில்லை….


தீபக்கும் தர்ஷினியும் ஷட்டுல்காக் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பக்கத்து வீட்டில் வெளியே ஆட்கள் தெரியாவிட்டாலும் உள்ளிருந்து கவனித்துக் கொண்டிருந்தால் இயல்பாய்த் தெரிய வேண்டும் என்பதற்காக ஒழுங்காகப் பத்து நிமிடங்கள் விளையாடிய தீபக் பதினோராவது நிமிடத்தில் அந்தக்காக்கை வேகமாக அடித்துப் பக்கத்து வீட்டில் விழ வைத்தான். பின் வேலாயுதத்தைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு அதை எடுக்கப் பக்கத்து வீட்டுக்குப் போனான்.  தர்ஷினி காம்பவுண்டு சுவர் வரை போய் நிற்க தீபக் வெளியே போய் பக்கத்து வீட்டு கேட்டைத் திறந்தான்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த வேலாயுதம் சொன்னார். “எனக்கு இவன் பேச்சு, நடவடிக்கை எல்லாம் பார்த்தால் மாதவன் ஞாபகம் தான் வருது. அவனை மாதிரியே தான் எல்லாம் செய்யறான்…”

கல்யாண் எதுவும் சொல்லாமல் தீபக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.  தீபக் பக்கத்து வீட்டின் போர்ட்டிகோவில் விழுந்திருந்தகாக்கை எடுக்காமல்அங்கிள்என்று அழைத்தான். இரண்டு முறை அழைத்த பிறகு மெள்ள சுதர்ஷன் வெளியே வந்தான்.

விளையாடறப்ப காக் இங்கே விழுந்துடுச்சு. எடுத்துக்கறேன் அங்கிள்என்று தீபக் சொன்ன போது சுதர்ஷன் அவனையே திகைப்புடன் பார்த்தபடி சிலை போல நின்றான். பார்த்துக் கொண்டிருந்த கல்யாணுக்கும், வேலாயுதத்துக்கும் அது இயல்பாய் தெரியவில்லை. அந்த வீட்டு வாசலில் வெளியாள் ஒருவன் அழைக்காமலேயே வந்து நிற்கக்கூடும் என்று அந்த ஆள் எதிர்பார்க்கவில்லையோ?     

தீபக்கும் அந்தத் திகைப்பைக் கண்டு திகைத்தான். ’ஏன் இந்த ஆள் இப்படிப் பார்த்துகிட்டே சிலை மாதிரி நிக்கறார்?’

தீபக் சுதர்ஷனின் செய்கையை விசித்திரமாக உணர்ந்ததை வெளிக்காட்டாமல் இயல்பாகப் பேச ஆரம்பித்தான். “நான் தீபக் அங்கிள். டாக்டருக்குப் படிச்சுகிட்டு இருக்கேன். மூனாவது வருஷம்.... நீங்க எந்த ஊர்ல இருந்து வந்திருக்கீங்க அங்கிள்சொல்லிக் கொண்டே தீபக் கைகுலுக்கத் தன் கையை நீட்ட சுதர்ஷனும் மெல்லத் தன் கையை நீட்டிக் குலுக்கினான்.

சுதர்ஷன் அவனை ஆழமாகப் பார்த்தது போல் இருந்தது. தற்செயலாக காக் இங்கே விழுந்து அதை எடுக்கத் தான் வந்திருக்கிறான் என்பதை அவன் நம்பவில்லையோ என்ற சந்தேகம் தீபக்குக்கு வந்தது.

மெல்ல சுதர்ஷன் அரைகுறைத் தமிழில் சொன்னான். “நான் சுதர்ஷன். வட இந்தியாவிலிருந்து வந்திருக்கோம்....”

... உங்க குடும்பத்தோட வந்திருக்கீங்களா?”

இல்லை என் முதலாளியோட வந்திருக்கேன்....”

தீபக் கூடுதலாக எதாவது தகவல் வரும் என்று சில வினாடிகள் காத்தான். அதற்கு மேல் எதுவும் வரவில்லை என்றான பிறகும் திரும்பிப் போக அவனுக்கு மனமில்லை. அவன் புன்னகையுடன் சொன்னான். “பக்கத்து வீடு என் ஃப்ரண்ட் வீடு. எங்க வீடும் ரேஸ் கோர்ஸில் தான். சாரதாம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கோம்.” 

சுதர்ஷன் தலையை ஆட்டி விட்டுச் சொன்னான். “நீங்க காக்கை எடுத்துக்கோங்க...”

இதற்கு மேல் அங்கே நிற்கச் சரியான காரணம் காட்ட முடியாததால் தீபக் ஏமாற்றத்துடன்தேங்க்ஸ் அங்கிள்என்று சொல்லி விட்டு மிக நிதானமாக அந்தக்காக்கை எடுத்தான். நாகராஜ் வெளியே வந்தால் எப்படியாவது பேச்சை வளர்த்து வீட்டுக்குள் நுழைந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டது நடக்காது போல் இருக்கிறது...

அந்தச் சமயத்தில் கதவைத் திறந்து கொண்டு நாகராஜ் வெளியே வந்தான்.



(தொடரும்)
என்.கணேசன்

Thursday, May 13, 2021

இல்லுமினாட்டி 102



சிந்து தாயின் வீட்டில் பாச மழையில் நனைந்தபடியே இருந்தாள். எல்லாம் கனவில் நடப்பது போலிருந்தது. திடீரென்று விழிப்பு வரும், அப்போது பழைய நரகத்திலேயே உழல்வதே நிஜமாக இருக்கும் என்ற பயம் வந்து எட்டிப் பார்த்தது. மெல்லத் தன் கையைக் கிள்ளிப் பார்த்தாள். வலித்தது. நடப்பது கனவல்ல.

நவீன் வீட்டின் விருந்தினர் அறையைச் சகோதரியின் அறையாக மாற்றத் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தான். அவர்கள் யாரும் அவளைத் திரும்ப அனுப்பத் தயாராக இல்லை. நவீன் சொன்னான். “போதும் நீ தனியாய் இருந்தது. உனக்கு எந்த மாதிரி வேலையாக  இருந்தாலும் டெல்லியில் கண்டிப்பாய்க் கிடைக்கும். அங்கே ராஜினாமா செய்துட்டு இங்கேயே வந்துடு...”

அம்மாவும் அதையே சொன்னாள்.   ஆனால் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது, எப்படிப் புரிய வைப்பது என்று புரியாமல் சிந்து வேதனைப்பட்டாள். அவள் விஸ்வத்தைச் சந்திப்பதற்கு முன் இவர்கள் கிடைத்து இருந்தால் அவள் கண்டிப்பாகத் தன் பழைய வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டுப் புதிய அன்பான வாழ்க்கையைச் சந்தோஷமாக ஆரம்பித்திருப்பாள். ஆனால் இப்போது நிலைமையே வேறாக இருக்கிறது. எந்த நேரமும் விஸ்வம் அவளைத் தொடர்பு கொள்வான். அவன் அவளை இனி என்ன செய்யச் சொல்வான் என்று தெரியவில்லை. அவன் சொல்வது எதுவாக இருந்தாலும் அதை க்ரிஷ் அனுமதிக்க மாட்டான். இரண்டு பேரில் ஒருவருக்கு அவள் எதிரியாக வேண்டியிருக்கும். இதில் அவள் அழிவது உறுதி. அழிவு யார் கையால் என்று மட்டும் தான் அவள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்.... விதி அவள் வாழ்க்கையில் விளையாடி இருக்கும் விதம் நினைக்கையில் தனிமையில் ஒரு முறை ஓவென்று அழத் தோன்றியது. எல்லாம் சரியாக இப்போது மாறியும், அவள் கடந்த காலமும், அப்போது எடுத்த முடிவுகளும் அவளுக்கு எதிராக இருக்கிறது.

அவள் தாயிடம் சொன்னாள். “இப்போதைக்கு இங்கேயே வந்துட முடியாதும்மா....”

மிருதுளா சந்தேகத்தோடு மகளைக் கேட்டாள். “அங்கே உன் மனசுக்குப் பிடிச்ச யாராவது இருக்காங்களா சிந்து. இருந்தால் தயங்காமல் சொல்லு. நாங்க வந்து அந்தப் பையனோட அம்மா அப்பாவைப் பார்த்துப் பேச வர்றோம்

சிந்து என்ன சொல்வாள்.? தமிழ்நாட்டு முதலமைச்சரின் மூத்த மகன் அவளைக் காதலிக்கிறான் என்பதைச் சொல்ல முடியுமா? அங்கே அவளுக்கு எத்தனை நாள் வேலை, முடிவில் என்ன ஆகும் என்றெல்லாம் அவளுக்கே தெரியாத போது தாயிடம் என்ன சொல்வாள்?  ”அப்படியெல்லாம் அதுவும் இல்லைம்மா” என்றாள்.

ஒரு வேளை நடிப்புக்குப் பதிலாக அவளுக்கு உதய் மீது நிஜக்காதல் வந்திருந்து இவர்கள் அங்கே பேசப் போனால் நன்றாகவே இருக்கும் என்று இப்போது தோன்றியது. உதயையும் பத்மாவதியையும் இவர்களுக்கு நிறையவே பிடித்து இருக்கும்... ஆனால் நாடகத்தை நிஜமாக்க வழியில்லை...

சிந்துவின் தந்தை மீது மிருதுளாவுக்கு அடுத்தபடியாக அதிகமாய் கோபம் இருந்தது நவீனுக்குத் தான். “அவனை எல்லாம் கல்லாலேயே அடிச்சுச் சித்திரவதை பண்ணிக் கொல்லணும். மனுஷனா அவன்?”

அவன் சகோதரியிடமும் கேட்டான். “உனக்கு அந்த ஆளைப் பார்த்து நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லையா அக்கா?”

சிந்துவுக்கு அப்படித் தோன்றவில்லை என்பது தான் அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது. அவள் தந்தையை ஒரு மனிதனாகவே நினைக்கவில்லை. அவரைப் பற்றி நினைக்கையிலேயே அவளுக்கு அருவறுப்பாக இருந்தது. அதனால் போய்ப் பார்க்கவோ, கேள்வி கேட்கவோ அவளுக்குத் தோன்றவில்லை. அதைத் தம்பியிடம் அவள் சொன்னாள்.

ஆனால் மிருதுளா சொன்னாள். “எனக்கு அந்த ஆளை ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும். அதுக்கப்பறம் ஜென்மத்துக்கும் அந்த ஆள் பார்வையில படறது கூடக் கேவலம்னு நினைக்கிறேன் நான்

மறு நாளே அவர்கள் நால்வரும் மும்பைக்கு விமானத்தில் கிளம்பினார்கள்.


விஸ்வம் ஜிப்ஸியிடம் கேட்டான். “நாம் இருக்குமிடம் எப்படி வாங் வேக்குத் தெரிந்தது?”

ஜிப்ஸி இதற்குப் பதிலை எப்படித் தெரிவிப்பது என்று யோசித்தான்.

விஸ்வம் உடனடியாகச் சொன்னான். “உண்மையைச் சொல்ல யாருமே யோசிக்க வேண்டியதில்லை

ஜிப்ஸி புன்னகைத்தான். உண்மையை சொன்னால் அதை எப்படிக் கண்டுபிடித்துச் சொன்னான் என்றும் சொல்ல வேண்டியிருக்கும். அதைச் சொன்னால்  அவனைப் பற்றியும் அவன் சொல்லியாக வேண்டியிருக்கும். நிறைய நாட்கள் விஸ்வத்திடமிருந்து அவன் மறைக்க முடியாது என்றாலும், இன்னேரம் ஓரளவாவது விஸ்வம் அவனைப் பற்றி யூகித்தாவது இருப்பான் என்றாலும் அவனாகத் தன்னைப் பற்றி இப்போது சொல்ல விரும்பவில்லை.

இல்லுமினாட்டியின் ஆரகிள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா?” என்று ஜிப்ஸி கேட்டான்.

விஸ்வம் எப்படி மறப்பான்? அந்த ஆரகிளின் எச்சரிக்கை ஒன்றை வைத்தல்லவா அவன் விதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ”தயவு செய்து அது இப்போது நான் இங்கேயிருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறது என்று மட்டும் சொல்லாதே நண்பா. எனக்குச் சலிப்பாக இருக்கிறது. என் விதியை நான் தான் தீர்மானம் செய்வேன். அந்தச் சுதந்திரம் மறுக்கப்பட்டால் இந்த உலகில் நான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று நான் நினைக்கிறேன். யாரோ எழுதிய விதியில் நான் பயணிக்க விரும்பவில்லை. அதைவிட மரணம் மேல், எல்லாவற்றையும் முடித்துக் கொள்வது உத்தமம் என்று நான் நினைக்கிறேன்...”

ஜிப்ஸிபுரிகிறதுஎன்று தலையசைத்தான். பின் மெல்லச் சொன்னான். “ஆரகிள் இந்த இல்லுமினாட்டி கோயிலில் தான் எல்லாம் தீர்மானிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லியிருக்கிற ரகசியச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது....”

அப்படியானால் இல்லுமினாட்டிக்கும் இந்த இடம் பற்றித் தெரிந்து விட்டதா?”

இல்லை. அந்த ரகசியச் சுவடி வைத்திருக்கும் ஆள் மூலமாகத் தான் இந்தத் தகவலை வாங் வே பெற்றிருக்கிறார். அதை வைத்துத் தான் நீ இங்கே இருக்கக்கூடும் என்று யூகித்திருக்கிறார். ஆனால் அவர் அறிந்ததை   இல்லுமினாட்டி தலைமையிடம் தெரிவிக்க மாட்டார் என்பதால் இதில் பிரச்னை இல்லை”

“அந்த ரகசியச் சுவடி வைத்திருக்கும் ஆள் இல்லுமினாட்டி தலைமையிடம் தெரிவிக்க மாட்டானா?”

“அவ்வளவு சுலபமாக யாரும் இல்லுமினாட்டி தலைமையை அணுகி விட முடியாது. அந்த ஆளைப் பொருத்த வரை வாங் வேயிடம் சொன்னது இல்லுமினாட்டி தலைமையிடம் சொன்னது போலத் தான் என்பதால் நிம்மதியாக இருப்பார்.”

“அந்த ரகசியச் சுவடியில் வேறென்ன தகவல்கள் எல்லாம் இருக்கின்றன?”

”அது அந்த ஆளுக்குத் தெரிய வரும் போது தான் நமக்கும் தெரிய வரும். அந்தக் காலத்தில் சில மந்திரங்கள், விசேஷ பூஜைகள் செய்து சில சுவடிகளை எந்தச் சக்திக்கும், அலைவரிசைக்கும் சிக்காதபடி மறைத்து வைப்பதுண்டு. அதைச் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தச் சுவடி இருக்கும் இடத்திற்குப் போய் அதை எடுத்துப் படிக்க முடியாத நிலைமையில் அந்த ஆள் இருக்கிறார். படித்தது நினைவுக்கு வந்ததைச் சொல்லி இருக்கிறார். மீதி அவருக்கும் நினைவில் இல்லை...”

“ஆனாலும் இதெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் விஷயங்கள் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை நண்பா. பின் நம் முயற்சிகளுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? நம் திட்டங்களுக்கு என்ன பொருள் இருக்கிறது?” விஸ்வம் முன்பு விட்ட இடத்திற்கே மறுபடி வந்தான்.

ஜிப்ஸி  சொன்னான். “பிரபஞ்சத்தில் சில விஷயங்கள் மட்டுமே முன்கூட்டியே தீர்மானிக்கப் படுகின்றன நண்பனே. அவற்றை மட்டுமே ஆரகிளோ, ஒரு சித்தரோ, யோகியோ சொல்ல முடியும். ஆனால் மற்ற விஷயங்களைச் சக்தி வாய்ந்த தனி மனிதர்களே தீர்மானிக்கிறார்கள். தங்கள் எண்ணங்கள், செயல்கள், திட்டங்கள் மூலம் நிகழ்காலத்திலேயே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறார்கள். இந்த முறை உறுதியாகச் சொல்கிறேன் நண்பா. நீயும் வேறு சிலரும் தான் தீர்மானிக்கப் போகிறீர்கள். அதில் எந்தச் சந்தேகமும் உனக்கு வேண்டாம். நான் சொல்வதை நம்பு. உங்களில் யார் வெல்வீர்கள் என்பது தான் இப்போதிருக்கும் முக்கியமான கேள்வி... நீ பலவீனமாகி விட்டால் அடுத்தவர்களைத் தீர்மானிக்க நீ அனுமதிக்கிறாய் என்றாகி விடும். அதை மட்டும் அனுமதிக்காதே. மரணத்தையும் வென்றவன் நீ. அப்படிப்பட்ட உன்னால் முடியாதது எதுவும் இருக்கப் போவதில்லை...”

(தொடரும்)
என்.கணேசன்