என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Friday, March 19, 2021

சத்தியமும் சக்திகளும்!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 24

 

இந்திய வேதாந்த, தத்துவ ஞானத்தால் வெகுவாகக் கவரப்பட்டு அது குறித்து நிறைய எழுதியும், பேசியும் வந்த கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அதையும் தாண்டிய மேலான மதிப்பீடுகளில் தான் இந்தியாவின் உண்மையான பெருமை பளிச்சிடுவதாக இங்கு தங்கி வாழ்ந்த காலங்களில் உணர்ந்தார்கள். இந்திய பாமர மக்களிடம் அந்த மதிப்பீடுகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் உபதேசங்களை விட அதிகமாக நாடகங்களும், கூத்துகளுமே அதிகம் பயன்படுத்தப்பட்டதை அவர்கள் கண்டு வியந்தார்கள். உபதேசங்களில் இருக்கும் மிகப்பெரிய குறை அதைப் பின்பற்றுவதில் இருக்கும் சிக்கல்களை அதிகம் பெருட்படுத்துவதில்லை என்பது தான். மேலும் அறிவுக்கு, எட்டுவது நடைமுறை வாழ்க்கையிலும் பின்பற்றவும் உதவும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அதனால் இந்தியாவில் உபதேசங்களை கதைகள். நாடகங்கள், கூத்துக்கள் ஆகியவற்றின் மூலமே பாமர மக்களின் சிந்தனைகளில் வலிமையாக ஏற்றப்பட்டன. கதாபாத்திரங்களின் வழியாகப் பெற்ற பேருண்மைகள் உணர்வுபூர்வமாக மக்கள் மனதில் புகுத்தப்பட்டன. அதை கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் ஒரு கல்லூரியில் கண்ட ”அரிச்சந்திரா’ நாடகத்தில் பரிபூரணமாக உணர்ந்தார்கள்.

 

மார்க்கண்டேய புராணத்தில் “அரிச்சந்திரோப்பாக்கியானா” என்ற தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கதையின்படி ஒரு முறை வசிஷ்டர் மற்றும் விசுவாமித்திரர் ஆகிய முனிவர்கள் இருவரும் சத்திய வழியில் வாழ்க்கையை நடத்துவதில் இருக்கும் சிக்கல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது வசிஷ்டர் அரசனாக இருந்த அரிச்சந்திரனைப் பற்றிக் குறிப்பிட்டு ஒரு சிறு குறையும் காணாத வகையில் சத்திய வாழ்க்கை வாழும் அவனைப் போல் பரிபூரண சத்தியசீலன் வேறு யாரும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். அதற்கு விசுவாமித்திர முனிவர் கஷ்டங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்று தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் போது எப்படிப்பட்ட மனிதனும் மாறி விடுகிறான் என்றும் அதற்கு அரிச்சந்திரன் விதிவிலக்கல்ல என்றும் வாதிட்டார். வசிஷ்ட முனிவரோ பொதுவான மனிதர்கள் அப்படி இருக்கலாம், ஆனால் அரிச்சந்திரனைப் போன்ற அப்பழுக்கற்ற உயர்மனிதர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தங்கள் உயர்நிலையை இழப்பதில்லை என்று வாதிட்டார். பரிசோதனைக்கு உட்படுத்தாமல் எதையும் தீர்மானிப்பது சரியல்ல என்று சொன்ன விசுவாமித்திர முனிவர் அரிச்சந்திரனை மாற்றிக் காட்டுவதாக சவால் விட்டார். அந்தச் சவாலுக்கு வசிஷ்டரும் ஒத்துக் கொண்டார்.  

 

விசுவாமித்திர முனிவர் அரசன் அரிச்சந்திரனின் அவைக்குச் சென்று தானமாக ராஜ்ஜியத்தையே கேட்க அரிச்சந்திரன் மறுக்காமல் ராஜ்ஜியத்தையே அவரிடம் தந்து விட்டு மனைவி மகனுடன் காசிக்குச் சென்றான்.. பின் விசுவாமித்திரரின் சோதனைகள் தொடர்ந்தன. அதன் முடிவில் அரிச்சந்திரன் அடிமையாக விற்கப்பட்டான். அவன் மனைவி, மகனும் அப்படியே அடிமைகளாக விற்கப்பட்டார்கள். அரிச்சந்திரன் சுடுகாட்டில் பணியாளனாக அமர்த்தப்பட்டான். அரிச்சந்திரன் மனைவியும், மகனும் இன்னொருவரிடம் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். கடுமையான கஷ்டங்கள் அவர்களுக்குத் தொடர்ந்தன. ஒவ்வொரு கட்டத்திலும் அவன் கொடுத்த வாக்கை மீறுவதாக இருந்தால் அவனுடைய ராஜ்ஜியம் உட்பட அனைத்தையும் திரும்பித் தருவதாக விசுவாமித்திர முனிவர் அவனுக்கு ஆசை காட்டுகிறார். ஆனால் அதற்கு அரிச்சந்திரன் ஒத்துக் கொள்ளவில்லை. முடிவில் அரிச்சந்திரனின் மகன் பாம்பு கடித்து மரணமடைந்தான். அவன் சடலத்தை எடுத்துக் கொண்டு அரிச்சந்திரனின் மனைவி சுடுகாட்டிற்கு வர அரிச்சந்திரன் பெருந்துக்கத்தில் ஆழ்கிறான். அவனும் அவன் மனைவியும் கண்ணீர்க் கடலில் மூழ்கினார்கள். இனியும் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்ற விரக்தியில் அவர்கள் இருவரும் மகனுடைய சிதையிலேயே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்த அந்த வேளையில் தேவலோகத்தில் இருந்து இந்திரனும், எமனும் வருகிறார்கள். அரிச்சந்திரனுடைய மகன் உயிரைத் திருப்பித் தருகிறார்கள். விசுவாமித்திரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு ராஜியத்தைத் திருப்பித் தருகிறார். எக்காலத்திலும் தன் சத்தியத்தைத் தவற விடாத அரிச்சந்திரன் கதை ஆண்டாண்டு காலமாக நாடகங்களிலும், தெருக்கூத்துகளிலும், சொல்லப்பட்டு வருவதை கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கண்டார்கள். அந்தக் கதை அவர்களை மிகவும் உருக்கி விட்டது. பைபிளில் வரும் ‘ஜாப்’ என்பவனின் கதைக்கு இணையான ஒரு கதையாக அவர்கள் அதைக் கண்டார்கள். இது போன்ற கதைகள் மனிதர்களின் இதயத்தோடு பேசவல்லது, அவர்களை மாற்ற வல்லது என்பதால் இந்தியாவின் ஆன்மிக ஞானத்திற்கு இது போன்ற கதைகளின் பங்கு மகத்தானது என்று நினைத்தார்கள்.

 

இந்தச் சமயத்தில் ஒரு கணவன் மனைவி இருவரும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள். மிக மிக அனுசரணையாக அவர்கள் நடந்து கொண்ட போதிலும் அவர்கள் நேர்மையானவர்கள் அல்ல என்பதை கர்னல் ஓல்காட் உணர்ந்தார். அதை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் அவர் சொல்லவும் செய்தார்.  ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. எத்தனையோ சக்திகள் பெற்றிருந்த அம்மையாருக்குத் தனிப்பட்ட முறையில் நேர்மைக்குறைவுகளை அடையாளம் காண முடியாமல் போனது கர்னல் ஓல்காட்டுக்கு வியப்பாக இருந்தது.

 

சிலநாட்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கப்பலில் பயணம் சென்றார்கள். அப்போது கப்பலில் பணி புரிந்த எலியட் என்ற பொறியாளர் அவர்களுடன் மிக நெருக்கமானார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பற்றி முன்பே நிறைய கேள்விப்பட்டிருந்த அவர் தன் பெயரிட்ட ஒரு கைக்குட்டையைத் தனக்குப் பரிசளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். உடனே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர் பெயரிட்ட கைக்குட்டையை வரவழைத்துக் கொடுத்தார். திகைப்புடன் பெற்றுக் கொண்டு அந்தக் கைக்குட்டையைப் பரிசோதித்த எலியட் தன்னுடைய பெயரில் ஆங்கில எழுத்து ’ட’ இரண்டு இருப்பதாகவும், அந்தக் கைக்குட்டையில் ஒரு ‘ட” தான் இருப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.  அதனாலென்ன சரிசெய்து விடுவோம் என்று சொல்லி ப்ளாவட்ஸ்கீ அம்மையார் இரண்டு ‘ட” இருக்கும்படி பெயரிட்ட கைக்குட்டையையும் உடனே வரவழைத்துக் கொடுத்தபோது எலியட் அடைந்த வியப்புக்கு அளவே இல்லை..

 

அந்தக் கப்பலின் கேப்டன் இது போன்ற சக்திகளில் பெரும் நம்பிக்கையோ, ஆர்வமோ இல்லாதவர். அவர் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதிக நேரம் சீட்டாட்டத்தில் இருப்பதைக் கவனித்து அம்மையார் இந்தச் சீட்டுக்கள் மூலமாகத் தான் சக்திகளை அறிகிறார் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். ஒரு நாள் அவர் திடீரென்று வந்து “என் எதிர்காலம் பற்றி இந்தச் சீட்டுக்கள் என்ன சொல்கின்றன என்று சொல்லுங்கள் பார்ப்போம்”

 

கர்னல் ஓல்காட்டுக்கு இது வேடிக்கையாக இருந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் புன்னகைத்தபடி அந்தச் சீட்டுகளைக் குலுக்கிப் போட்டு விட்டுப் பார்த்து விட்டு “ஆச்சரியமாக இருக்கிறதே” என்றார். கேப்டன் திகைப்புடன் கேட்டார். “என்ன ஆச்சரியத்தைக் காண்கீறீர்கள்?” என்று கேட்டார்.

 

“நீங்கள் தொடர்ந்து கடலில் பணி புரிய மாட்டீர்கள் என்றும் கரையில் தான் உங்கள் எதிர்காலம் நிரந்தரமாக இருக்கும் என்றும் சீட்டுகள் சொல்கின்றன” என்றார். அந்தக் கேப்டன் “எனக்கும் அது தான் ஆசை. ஆனால் நீங்கள் சொன்னபடி நடக்க வழி எதுவும் தெரியவில்லை” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஆனால் நடக்கவே வழியில்லாத அந்த ஆருடத்தைப் பற்றி அனைவரிடம் அவர் சொல்லிச் சிரித்ததைக் கர்னல் ஓல்காட் கவனித்தார். சீட்டுக்கட்டில் இது வரை எந்தச் சக்தியையும் வெளிப்படுத்தி இருக்காத இந்த அம்மையார் ஏன் தேவையில்லாமல் எதையோ சொல்லி ஏளனத்திற்கு ஆளாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

 

ஆனால் அவர்கள் இலங்கை சென்று இரு மாதங்கள் அங்கு தங்கி மும்பை திரும்பிய பிறகு அம்மையாருக்கு அந்தக் கேப்டனிடமிருந்து கடிதம் வந்தது. அம்மையார் சொன்னபடியே தனக்கு நிரந்தரமாக துறைமுகத்தின் பொறுப்பாளர் பணி ஒன்று எதிர்பார்க்காமல் கிடைத்திருப்பதைத் தெரிவித்த அவர் கப்பலில் கேலி செய்ததைத் தயவுசெய்து மன்னித்து விடும்படி பணிவாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி   

Thursday, March 18, 2021

இல்லுமினாட்டி 94


உதய்க்கு சிந்து சடாரென்று போனது மிகவும் வருத்தமாய் இருந்தது. க்ரிஷிடம் அவன் கோபித்துக் கொண்டான். ”ஏண்டா அவள் தான் என்ன கண்டுபிடித்தாய்னு கேட்டால் பேருக்கு ஏதாவது சொல்லிட்டு போலாம் தானே. அதை விட்டுட்டு ஆராய்ச்சி செய்யறேங்கற பேர்ல ஆளுகளையுமா இப்படி போஸ்ட் மார்ட்டம் செய்யறது? அதை வெளிப்படையாய் வேறு சொல்கிறாய். அவள் தான் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிகிட்டு வருகிறாள் தானே? என்னைக் காதலிக்கிறாள். நம் எல்லோரிடமும் அன்பாய் பழகுகிறாள். இப்படியே போச்சுன்னா முழுசுமா ஒருநாள் மாறியும் இருப்பாள். நீ அதுலயும் குறை கண்டுபிடிச்சு, அவளைக் கஷ்டப்படுத்தித் துரத்திட்டியே”

உதயிடம் கோபத்துடன் துக்கமும் வெளிப்பட்டதைக் கவனித்த க்ரிஷ் அண்ணனுக்காக அனுதாபப்பட்டான். அவள் காதலும் பொய், குடும்பத்தாரிடம் காட்டிய அன்பும் பொய் என்று தெரிந்தால் இவன் என்ன ஆவான் என்று நினைக்கவே அவனுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.  

க்ரிஷ் சொன்னான். “பாரு. காயத்தைச் சுத்தம் பண்ணி மருந்து போடறப்ப வலிக்கும் தான். ஆனால் அந்த வலிக்குப் பயந்து அப்படியே விட்டுட்டா நிலைமை விபரீதம் ஆயிடும். சிந்து இப்ப வருத்தத்துல போயிருக்கலாம். ஆனால் அவள் புத்திசாலி. வீட்டுக்குப் போய் யோசிப்பா. அப்ப தான் மாற்றம் வரும். இல்லாட்டி அவ வெளியே சந்தோஷமாயிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் அந்த சந்தோஷம் ஆழமாயிருக்காது. உள்ளுக்குள்ளே அந்தப் பழைய துக்கம், வலி எல்லாம் அப்படியே தானிருக்கும். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறவ அப்படி உள்மனக் காயத்தோடவே இருந்துட்டா உனக்குப் பரவாயில்லையா?”

உதய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சில நேரங்களில் ஏதோ ஆழ்ந்த யோசனையில் சிந்து மூழ்குவதை அவனும் கவனித்திருக்கிறான். கூடவே இருக்கும் போதும் ஏதோ தனியுலகில் அவள் இருப்பது போல அவனும் உணர்ந்திருக்கிறான். இவன் சொல்வது போல் அது அவளுடைய உள்மனக்காயத்தின் விளைவாக இருந்து, அவள் அதில் இப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதில் அவனுக்கும் சம்மதமில்லை. ஆனால் தம்பி காயத்திற்கு மருந்து போட்டு அனுப்பியிருக்கிறானா இல்லை, காயத்தைக் கிளறிவிட்டு அனுப்பியிருக்கிறானா என்பதை அவனுக்கு உறுதியாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் தம்பியை அதற்கு மேலும் கோபித்துக் கொள்ள அவனால் முடியவில்லை. அவன் ஆத்மார்த்தமாகத் தான் அறிவுரை கூறி இருக்கிறான் என்பது சிந்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவன் கண்கள் ஈரமாகச் சொன்ன விதத்திலேயே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் சிந்து ஏதோ ஒரு மாதிரியாகிப் போன விதம் அவன் மனதை என்னவோ செய்து கொண்டிருக்கிறது. ’பேசாமல் நானே இவனிடம் கேட்டுக் கொண்டு அவளிடம் விஷயத்தைப் பக்குவமாய்ச் சொல்லி இருக்கலாம்....’


சாமுவலுக்கு வாங் வே போன் செய்து கர்னீலியஸ் கூடுதலாகக் கண்டுபிடித்திருந்த வாசகத்தைத் தெரிவித்திருந்தார்.

”உங்கள் மகாகவி ஒருவன் அற்புதக் கவிதை ஒன்றை எழுதிய அவ்விடம் இரு தளம் கொண்டது”

அந்த வாசகத்தைப் படித்தவுடன் முதலில் சாமுவலுக்கு எரிச்சல் தான் வந்தது. கவிஞர்கள் எங்கே உட்கார்ந்து கவிதை எழுதினார்கள் என்பதை எல்லாம் யாராவது கண்டுபிடிக்க முடியுமா? அதிலும் கவிஞனின் பெயர் கூட இல்லை. யாரது மகாகவி? அவன் எப்போது எழுதிய கவிதை? அந்த வாசகத்தில் ‘இரு தளம் கொண்டது’ என்பது மட்டும் தான் ஒரு உபயோகமான தகவலாகத் தோன்றியது. ஜெர்மனியில் இருக்கிற இல்லுமினாட்டி கோயில்கள் எல்லாம் பார்த்தாகி விட்டது. அவற்றில் எதிலும் விஸ்வமும், கூட்டாளியும் இல்லை. அதில்  இரு தளம் கொண்ட பழைய இல்லுமினாட்டி கோயில்களை மறுபடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 

இல்லுமினாட்டி உளவுத்துறையின் உபதலைவருக்கு பார்த்ததையே மறுபடி பார்க்க சலிப்பாக இருந்தது. அதில் ஒரு பிரச்னையும் இருந்தது. அவர் சில குறிப்பிட்ட வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்து மறுபடி தேடுகிறார் என்ற செய்தி மட்டும் உளவுத்துறையின் தலைவனான இம்மானுவலுக்குத் தெரிந்தால் ஏன் என்ற கேள்வி ஒன்று எழும். ஒரு கேள்வி பின் பல கேள்விகளை எழுப்பும்.  அது பேராபத்து.   
        
இம்மானுவல் இப்போதெல்லாம் அவருக்குப் பார்க்கவோ, பேசவோ அதிகம் கிடைப்பதில்லை. முந்தா நாள் அவனைப் பார்த்த போது அவன் கையில் விஸ்வத்தின் கூட்டாளி பற்றிய ஃபைல் இருந்தது. அது முன்பு பார்த்ததை விட தடிமனாக இருந்தது. கேட்டாலும் அவன் பதில் சொல்ல மாட்டான் என்று தெரிந்தே சாமுவல் ஃபைலில் எழுதியிருந்த பெயரைப் பார்த்தபின் நினைவு வந்தது போலக் கேட்டார். “இவனைப் பற்றி எதாவது தகவல் கிடைத்திருக்கிறதா?”

“சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவுமில்லை” என்று சொல்லியபடி இம்மானுவல் நகர்ந்து விட்டான்.   

சாமுவலுக்குக் கோபம் பொங்கியது. உபதலைவரிடம் கூட மறைக்கிற இந்தப் போக்கு அவனுடைய அகம்பாவத்தைக் குறிப்பதாகவே அவர் நினைத்துக் கொண்டார். அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்து ஒரு மாற்றம் இல்லுமினாட்டியில் வருமானால் இவனைத் தக்க விதத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

ஏற்கெனவே பார்த்திருந்த பழைய இல்லுமினாட்டிக் கோயில்களில் இருதளம் உள்ள கோயில்களைத் தேர்ந்தெடுத்து ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு தானே நேரில் செல்வது  என்று தீர்மானித்தார். போய் விசாரிக்கையில் ஏதாவது கவிஞர் அந்த இடத்திற்கு வந்து போனதோ, அங்கு கவிதை எழுதியதோ நடந்திருக்கிறதா என்றும் மெல்லக் கேட்டுப் பார்க்க வேண்டும். இதற்கு மற்றவர்களை அனுப்பினால் ஏதாவது பேச்சு வாக்கில் ஏதாவது உளறி தகவல் இம்மானுவலை எட்ட வாய்ப்பிருக்கிறது. எனவே அது வேண்டாம்...


சிந்து தன்னைப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கட்டுப்படுத்திக் கொண்டு தான் உடையாமல், வெடிக்காமல், வீடு வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு வந்து தன் படுக்கையில் விழுந்த போது அவள் அது வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை குமுறிக் கொண்டு வந்தது. அவள் நினைவு தெரிந்த நாளில் இருந்து அழுததில்லை. அழுகையை அவள் பலவீனமாக நினைத்தாள். அதிலும் அவள் தந்தை, சித்தி, தங்கை முன் என்றுமே துக்கத்தின் சாயலைக் கூடப் பிற்காலங்களில் அவள் காட்டியதில்லை. வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள் அழுவதில்லை என்று எங்கோ எதிலோ படித்தது மனதில் பசுமையாகப் பதிந்திருந்தது. இதுநாள் வரை வெற்றிகரமாகச் சமாளித்தவளுக்கு இன்று தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அவளிடம் எல்லாவற்றையும் சொன்ன க்ரிஷின் முகத்தில் ஒரு கேலியோ, அவள் பழைய வாழ்க்கையை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலித்து விட்ட கர்வமோ, ஒரு குற்றவாளிக்கு நீதிபதி சொல்லும் தீர்ப்பின் பாவனையோ தெரிந்திருந்தால் அவள் கண்டிப்பாக உடைந்திருக்க மாட்டாள். அவை எதுவும் ஒரு சதவீதம் கூட அவனிடம் தெரியவில்லை. அவள் வலியை உணர்ந்து அதில் பங்கு கொண்டவனாய் அவனும் வலியுடன் அவளிடம் பேசினான். அவன் கைவிரல்கள் அவள் கையைப் பிடித்திருந்ததில் கூட அவன் இரக்கம் வெளிப்பட்டது. அவன் கண்களில் தெரிந்த ஈரம் பொய் அல்ல என்பதை அவள் தன் அந்தராத்மாவில் உணர்ந்தாள். வாழ்க்கையில் நிறைய சம்பாதித்து யாருமே நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்குப் போய் அவளை அலட்சியம் செய்தவர்கள்  எல்லாம் பொறாமைப்படும்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டிருந்தாள். அதைக்கூட அவன் அறிந்தவனாய் அன்புக்கு எதுவும் இணையில்லை. அதற்கு ஈடாக நீ எதைச் சம்பாதித்தாலும் முடிவில் ஏமாந்து தான் போவாய் என்று ஆத்மார்த்தமாய் சொன்னது அவளை நிறையவே பாதித்தது. அதை அவனைத் தவிர வேறு யார் சொல்லி இருந்தாலும் அவள் அத்தனை முக்கியத்துவம் தந்திருக்க மாட்டாள். சாதிக்க முடியாதவனின் கையாலாகாத தத்துவம் என்று மனதிற்குள் பரிகசித்து ஒதுக்கியிருப்பாள். ஆனால் அவன் அதிகாரம், பணம், அறிவு, சொத்து, சாதனை என எல்லாவற்றிலும் உச்சத்திலேயே இருப்பவன். அவள் இனி வாழ்நாள் எல்லாம் உழைத்தாலும் எதிலும் அவனை எட்டவே முடியாது. அவன் அத்தனை அதிர்ஷ்டங்களுடன் அன்பையும் அளவில்லாமல் பெற்றவன். அப்படி எல்லாவற்றையும் அடைந்து உயரத்தில் இருப்பவன், பெற்றிருக்கும் அன்பை மற்றவற்றோடு வாழ்க்கையில் எடைபோடும் முழுத்தகுதியும் உள்ளவன், அவளிடம் அவள் இதயத்துடன் பேசுவது போலச் சொல்லியிருக்கிறான்.. ”உண்மையான நேசம் தரும் சந்தோஷத்தையும், நிறைவையும் அது எதுவுமே தந்துவிட முடியாது.... நீ புத்திசாலி.... தைரியமானவள். நீ முயற்சி செய்தால் உனக்கு எதுவும் முடியாததல்ல. நீ மாற வேண்டும்”

அவனை பத்து வருடங்கள் முன் அவள் சந்தித்திருந்து, அவன் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கண்ணீரின் நடுவில் நினைத்துக் கொண்டாள். அப்போது கண்டிப்பாக அவள் மாறியிருப்பாள். இப்போதோ அவள் திரும்பிச் செல்ல முடியாத பயணத்தில் நிறைய தூரம் வந்து விட்டவள். இனி அவள் மாற நினைத்தாலும் விஸ்வம் விட மாட்டான்..... அவள் என்ன செய்வாள்?

(தொடரும்)
என்.கணேசன்


Total 151 chapters

Monday, March 15, 2021

யாரோ ஒருவன்? 23


“யாரோ விளையாடறாங்கன்னு நினைக்கிறேன். ஆத்மாக்கள் தேடி வர்றதெல்லாம் கட்டுக்கதை தான். இந்த நாட்டில் தான் அதுக்குப் பஞ்சமேயில்லையே.” என்றான் கல்யாண். அவன் தீபக்கின் கனவுக்கு முக்கியத்துவம் காட்டி நண்பனைப் பயமுறுத்த விரும்பவில்லை.  தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வென்றே ஒதுக்கி விட்டான்.

“ஏன் இத்தனை வருஷம் கழிச்சு இப்படி?” என்று சரத் சந்தேகத்தோடு கேட்டான்.

“நீ நினைக்கிற அந்தப் பழைய விஷயத்தைத் தான் அந்த மொட்டைக்கடுதாசிக்காரன் சொல்றான்னு உனக்கு எப்படித் தெரியும்? அவன் விளையாட்டா, பொதுவா அப்படிச் சொல்லியிருக்கலாமே”

“அப்படின்னா ஏன் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் இந்த மொட்டைக்கடுதாசி?”

“நமக்கு இப்படி எழுதிப் போட்ட மாதிரியே எத்தனையோ போஸ்ட் பாக்ஸ்ல அந்த முட்டாள் எழுதிப் போட்டிருக்கலாம். நமக்கு எப்படித் தெரியும்? நாமளே இதை வெளியில் நாலு பேருக்குச் சொல்வோமா? அந்த மாதிரியே அவனுகளும் அமுக்கமாய் இருக்கலாம். பாரு சரத். நாட்டுல வேலைவெட்டி இல்லாத பயலுக நிறைய இருக்காங்க. அவனுகளுக்கு நேரமும் போக மாட்டேங்குது. இப்படி எதாவது எழுதிப்போடுவான். இல்லைன்னா எதோ ஒரு போராட்டத்துல குதிப்பான். எதுவும் கிடைக்கலைன்னா தற்கொலை பண்ணிட்டு சாவான். இந்த பைத்தியக்காரன்களை நாம பெருசா நினைக்கக் கூடாது...”

சரத்துக்கு அவன் சொல்வது சரிதானென்று தோன்ற, லேசாய் சிரிப்பு வந்தது. ஓரளவு பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட மெல்ல எழுந்தான்.

நரேந்திரன் மணாலிக்கு வந்து ஒரு நாள் முடிந்து விட்டது. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கிருந்த மனிதர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும், அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு இருபத்தியிரண்டு வருடங்களுக்கும் முந்தைய நிகழ்வுகளை நினைவுபடுத்த முடிவதும் அவ்வளவு சுலபமாக இல்லை. அந்தக் காலத்து மணாலி எப்படி இருந்தது, நகர வீதிகள் எப்படி இருந்தன, வசித்த ஆட்கள் எங்கே வசித்தார்கள், அப்போதைய ஆட்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதையெல்லாம் வைத்து ஒரு தெளிவான சித்திரத்தை, பிம்பத்தை மனதில் நிறுத்துவது பெரிய வேலையாகத் தான் இருந்தது. ஆனாலும் அந்தப் பெரிய வேலையில் சலிப்பில்லாமல் இறங்கியிருந்தான்.

டெல்லியில் அவனைப் பின் தொடர்ந்த துப்பறியும் ஏஜென்ஸி கும்பல் இங்கேயும் மிகவும் கவனமாக அவனைப் பின் தொடர்ந்து வந்தது. ஒரு முறை பார்த்த துப்பறியும் ஆசாமி மறுமுறை அவ்வளவு சீக்கிரமாகப் பார்க்கக் கிடைக்கவில்லை என்றாலும் அந்த ஆட்களின் செயல்முறைகள் ஒரேபோல் தான் இருந்ததால் பலவித உருவங்களுக்குள் ஒரே துப்பறியும் நிறுவனத்தை அவனால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவன் அவர்களைப் பெரிதாக நினைக்கவில்லை.

அவன் தந்தை மகேந்திரன் அஜீம் அகமது அந்தச் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் வசித்தான் என்பதைக் கண்டுபிடித்து தான் அங்கே கடைசியாக வந்திருந்தார். அதனால் மணாலியில் அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்களைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டான். அவன் தந்தை மகேந்திரனின் புகைப்படம் காண்பித்துக் கேட்டான். பலருக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. சிலர் நினைவுபடுத்திக் கொண்ட மாதிரி இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட எல்லாருமே அஜீம் அகமது பெயரைக் கேட்கும் வரை அவனிடம் இயல்பாகப் பேசினார்கள். அஜீம் அகமது பெயரைச் சொன்னவுடனே முகம் மாறினார்கள். ஒருவித இறுக்கமும் பயமும் அவர்களைச் சூழ்வதை நரேந்திரன் கவனித்தான். அதன் பின் இல்லை, தெரியாது, நினைவில்லை என்ற வார்த்தைகளே அவர்களிடமிருந்து திரும்பத் திரும்ப வந்தன.  இப்படி அஜீம் அகமதை விசாரித்து வந்திருக்கும் ஒருவனிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தால் கூட அவன் வந்து பழிவாங்கி விடுவானோ என்று அவர்கள் பயந்தது போலிருந்தது.

அப்படிப்பட்டவர்களுடன் பேசி ஒரு தகவலும் கிடைக்காமல் சலித்துப் போன நரேந்திரனுக்கு அதிர்ஷ்டவசமாய் முகமது யூனுஸ் என்ற முதியவர் கிடைத்தார். அந்தப் பகுதியில் அப்போது ஐந்து அறைகள் மட்டுமே கொண்ட சிறிய லாட்ஜ் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். இப்போதும் அந்த லாட்ஜ் அப்படியே மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அந்தப் பகுதியில் மாற்றமேயில்லாத பழைய கட்டிடம் அவருடையது தான் என்று பலரும் சொல்லியிருந்தார்கள்.  

முன்பு பலரிடம் பேசியிருந்த அனுபவத்தின் காரணமாக நரேந்திரன் அவரிடம் எடுத்தவுடன் அஜீம் அகமது பற்றிக் கேட்கவில்லை. ஏன் அவர் மட்டும் அந்த லாட்ஜைப் புதுப்பிக்காமல் பழைய மாதிரியே வைத்துள்ளார் என்று நரேந்திரன் ஆர்வம் காரணமாகக் கேட்டான்.      

“ஒரே மகன் கனடாவில் இருக்கிறான். அங்கேயே செட்டில் ஆகி விட்டான். இங்கே அவன் திரும்ப வரப்போவதில்லை. அப்படி இருக்கும் போது இந்தக் கட்டிடத்துக்கு ஏன் நான் செலவு செய்ய வேண்டும்? என் காலம் முடியும் வரை எனக்கு வருமானத்திற்கு இது ஒரு வழி. அந்த அளவில் தான் இதை நான் நடத்திக் கொண்டு வருகிறேன். நான் செத்தவுடன் என் மகன் இதை விற்று விட்டுத் தான் போகப்போகிறான்...”

“நீங்கள் கனடா போகவில்லையா?”

“ஒரு மாதம் போயிருந்தேன். சலித்து விட்டது. பக்கத்தில் யாருடனும் பேச வழியில்லை. வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடைக்க வேண்டும். சனி ஞாயிறு தான் மகன் எங்கேயாவது கூட்டிக் கொண்டு போவான். நயாகரா போய்ப் பார்த்தேன். அருமையாக இருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் சாதாரணம் தான். அதை விட மணாலியே பரவாயில்லை.  இங்கே என்றால் நண்பர்களும், உறவினர்களும் இருக்கிறார்கள். யாரும் கிடைக்காவிட்டால் டூரிஸ்ட்களிடம் கூடச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம். அதனால் மகனிடம் சொல்லி விட்டேன். இனி நான் வரமாட்டேன். அப்பாவைப் பார்க்க வேண்டுமென்றால் குடும்பத்தோடு நீ இந்தியாவுக்கு வா. என்னை அங்கே கூப்பிடாதே என்று சொல்லி விட்டேன்….”

முதியவருக்குப் பேசுவதில் நிறைய ஆர்வம் என்பது புரிந்தது. அன்பானவராகத் தெரிந்தார். அவர் கேட்டார். “நான் ஏன் இந்த லாட்ஜைப் புதுப்பிக்கவில்லை என்று கேட்கவோ, கனடாவுக்குப் போகவில்லை என்று கேட்கவோ நீங்கள் வரவில்லை என்று நினைக்கிறேன். எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

நரேந்திரன் தன் தந்தையின் புகைப்படத்தை அவருக்குக் காட்டினான். “இவர் இருபத்தியிரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு ஆளைத் தேடி இங்கே வந்தார். அப்படி வந்தவர் திரும்பவும் டெல்லிக்கு வரவில்லை. “

மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொண்டு அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்த முகமது யூனுஸ் பின் அவனிடம் ”நீங்கள்?” என்று கேட்டார்.

நரேந்திரனுக்கு இவரிடம் தன் பதவியைச் சொல்வதை விட உறவைச் சொல்வது உதவும் என்று தோன்றியது. ”நான் அவர் மகன்” என்றான்.

முகமது யூனுஸ் முகத்தில் கனிவும், இரக்கமும் தெரிந்தது. “உங்கள் அப்பா யாரைத் தேடி இங்கே வந்தார்?” என்று அவர் கேட்டார்.

இந்த இடம் வரை எல்லா இடங்களிலும் சுமுகமாகத் தான் போனது. இந்தக் கேள்விக்கான பதில் சொன்ன பிறகு தான் இறுக்கமும், தந்தி வாசகங்களும், மௌனமும்... நரேந்திரன் சொன்னான். “அஜீம் அகமது என்ற தீவிரவாதியைத் தேடி இங்கே வந்தார்.”

அந்தப் பெயர் அவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது என்றாலும் அவர் மற்றவர்களைப் போல் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கவில்லை.   ”உங்கள் தந்தை ஏன் அவனைத் தேடி வந்தார்”

“அவர் போலீஸ் அதிகாரியாக இருந்தார். அதனால் தான் ஒரு விசாரணை விஷயமாய் அவனைப் பிடிக்க வந்தார்.”

“நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?”

“நானும் போலீஸ் அதிகாரி தான்....”

“போலீஸ் அதிகாரியான உங்கள் அப்பா திரும்பி வராவிட்டாலும் கூட, நீங்களும் போலீஸ் அதிகாரியாகி இருக்கிறீர்கள். அவரைத் தேடி வந்திருக்கிறீர்கள்?”

நரேந்திரன் தலையசைத்தான். முகமது யூனுஸ் அவனை வியப்புடன் பார்த்தார். ”அல்லாவின் தீர்மானமே தீர்மானம்...” என்று முணுமுணுத்த அவர் அமைதியாகச் சொன்னார். “உங்கள் தந்தையை நான் பார்த்திருக்கிறேன்.”



(தொடரும்)
என்.கணேசன்



Sunday, March 14, 2021