”சொல்வது உண்மையாக இருந்தால் நான் கண்டிப்பாக வருத்தப்பட மாட்டேன்” என்று சிந்து சொன்னதில் அவளுடைய சாமர்த்தியத்தை க்ரிஷால் பார்க்க முடிந்தது. சொன்ன பிறகு ”நீ சொல்வது உண்மையல்ல. அதனால் தான் வருத்தப்படுகிறேன்” என்று சொல்ல வழியை ஏற்படுத்திக் கொண்டே அவள் பேசுகிறாள்...
க்ரிஷ் சொன்னான். “சரி நான் சொல்கிறேன். நான் பேசும் போது நீ குறுக்கே பேசக்கூடாது. முழுவதும் கேட்க வேண்டும். உனக்கு எதாவது சொல்ல இருந்தால் நான் பேசி முடித்த பிறகு நீ சொல்லலாம். நீ பேசும் போது நானும் குறுக்கிட மாட்டேன். சரியா?”
சிந்துவுக்கு அவனுடைய அந்த நிபந்தனை பிடிக்கவில்லை. உண்மையைப் பேசுபவனை முழுவதும் பேச அனுமதித்தால் அது ஆபத்து. அவன் முடித்த பின் பேச ஒன்றுமிருக்காது...
ஆனால் அவள் அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால் ஒழிய அவன் எதுவும் சொல்ல மாட்டான் என்று அவனைப் பார்க்கையிலேயே புரிந்தது. இருந்தாலும் அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் படுகிற மன உளைச்சலை உடனடியாக முடித்துக் கொள்ள தீர்மானித்து விட்டு வந்திருப்பதால் அவள் சரியென்று தலையசைத்தாள்.
க்ரிஷ் எழுந்து ஒரு நாற்காலியை சிந்துவுக்கு முன்னால் இழுத்துப் போட்டு அதன் நுனியில் உட்கார்ந்தான். பின் மிக மென்மையான குரலில் அவன் சொல்ல ஆரம்பித்தான். “சிந்து உலகத்தில் அன்பானவர்கள், அன்பில்லாதவர்கள் என்று இரண்டு பிரிவிலும் நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக உன் வாழ்க்கையில் சிறிய வயதில் உனக்கு அன்பானவர்கள் கிடைக்கவில்லை. பிஞ்சு வயதில் அப்படிப்பட்ட அனுபவம் கஷ்டம் தான். ஆனால் பெற்றோரும், உறவுகளும் அமைவது நம் தீர்மானத்தில் இல்லை. அன்பு கிடைக்காத அந்தச் சூழ்நிலையில் உன்னைத் தவிர வேறு எந்தக் குழந்தையாவது வளர்ந்திருந்தால் உடைந்து போயிருக்கும், நீ திடமான மனதுடன் அருமையாகச் சமாளித்தாய். ஆனால் அன்பை எதிர்பார்த்தால் மனம் ரணமாகும் என்ற தப்பான பாடத்தையும் நீ படித்துக் கொண்ட மாதிரி எனக்குத் தெரிகிறது. தனியாகவே இருப்பது மன வலியையும், ஏமாற்றங்களையும் தவிர்க்க நல்ல வழி என்று ஒரு தீவாகவே நீ வாழ்ந்து விட்டாய்...”
சிந்து எதை எதிர்பார்த்திருந்தாலும் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவளைப் பார்க்கும் போதே தெரிந்தது. க்ரிஷ் தொடர்ந்தான். “அன்பான குடும்பம் அமையாததால் அன்பே தேவையில்லை என்று நீ இருந்து விட்டது சரியல்ல. குடும்பத்தில் கிடைக்காதது வெளியேயும் கிடைக்காது என்று நினைத்ததும் சரியாகத் தெரியவில்லை. நீ முயற்சி செய்திருந்தால் உனக்கு நல்ல நண்பர்கள், தோழிகள் கிடைத்திருப்பார்கள். ஒரு அன்பான, இயல்பான வாழ்க்கையை அவர்கள் மூலம் நீ வாழ்ந்திருக்கலாம். அதற்குப் பதில் நீ உன் தாயின் தவறுக்கும், தந்தையின் தவறுக்கும் உன்னையே தண்டித்துக் கொண்டிருக்கிறாய். அது தேவையாக இருந்திருக்கவில்லை.”
சிந்து சிலை போல அமர்ந்திருந்தாள். அவள் பேச நினைத்திருந்தாலும் அவளால் பேச முடிந்திருக்காத நிலையில் இருந்தாள். அவள் இதயத்தின் ரணத்தை அவன் இப்படி வெளிப்படையாகப் பேசி உரசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. உதய்க்கு க்ரிஷ் சொல்வதெல்லாம் உண்மையாக இருந்தாலும் இப்போது தேவையில்லாமல் அவளுடைய சின்ன வயதுக் கஷ்டத்தைச் சொல்லிக் காட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. இப்போது அவள் மாறி அவனைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறாள், அவர்கள் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்திருக்கிறாள். அப்படி இருக்கையில் என்றோ இருந்த நிலைமையைப் பற்றி ஏன் இவன் பேசுகிறான் என்று நினைத்தான். மேலும் க்ரிஷ் கடைசியாகச் சொன்ன வார்த்தையில் தவறுதலாகத் ‘தாய்’ என்று சொல்லி விட்டதாக நினைத்தான். அவன் தம்பியிடம் சொன்னான். “க்ரிஷ் சிந்து சின்னவளாக இருக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க. நீ அவளோட சித்தியைச் சொல்றாய்ன்னு நான் நினைக்கிறேன்”
க்ரிஷ் அண்ணனிடம் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து விட்டுத் தொடர்ந்தான். ”உனக்கு யாரும் அவசியமில்லை, யாருடைய அன்பும் அவசியமில்லை, உனக்கு வேண்டிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் அளவு நீ சம்பாதிக்கிறாய். அதை வைத்துக் கொண்டு நிம்மதியாய் வாழ்வாய் என்று நம்பிக் கொண்டிருக்கிறாய். அது தவறு சிந்து”
உதய் முதல் முறையாய் தம்பி மேல் குறை கண்டுபிடித்தான். க்ரிஷ் அறிவுஜீவி தான். அவள் இங்கு வரும் வரை இருந்த நிலைமையை அவன் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அதை இப்போது அலச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தவனாய் சொன்னான். “அந்தப் பழைய கதை எல்லாம் இப்ப எதுக்குடா? சிந்து இப்ப என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிருக்கா. நம் குடும்பத்தை நேசிக்க ஆரம்பிச்சிருக்கா. அவள் மாறுவதற்கு இப்போது தான் அவளுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. அவ மாறிட்டா.”
க்ரிஷ் பொறுமையாய் அண்ணனிடம் சொன்னான். “இப்பவும் கூட சில சமயங்கள்ல சிந்து அவள் போட்டுகிட்ட வட்டத்துக்குள்ளயே வாழற மாதிரி தோணுதுண்ணா. முழுசா வெளியே வர முடியலைன்னு பார்க்கறேன். இங்க இருக்கிறப்ப கூட அவள் மனசு அவள் குடும்பத்தை, அவர்கள் நடந்துகிட்டதை, அப்பப்ப ஒப்பிட்டுப் பார்த்துக்கற மாதிரி தோணுது. அவள் எதை எல்லாம் இழந்தாள்னு அவள் கணக்கெடுக்கற மாதிரி பட்டதால தான் சொன்னேன்...”
சிந்து தன் வாழ்க்கையின் மிக உச்சக்கட்ட வலியில் அந்தக் கணம் இருந்தாள். அவள் தன் மனக்காயங்களை இன்று வரை யாரிடமும் காட்டிக் கொண்டதில்லை. அவள் தந்தையிடமோ, சித்தியிடமோ, தங்கையிடமோ கூடக் காண்பித்துக் கொண்டதில்லை. அவர்களுடைய பாராமுகத்தினால், வெறுப்பினால் எந்தப் பாதிப்பும் அடையாதபடி அமைதியாகவும், அழுத்தமாகவுமே அவள் அவர்களுக்குக் காட்சியளித்திருந்தாள். முதல் முறையாக ஒருவன் அவள் அனுபவித்த வலிகளை உணர்ந்து சொல்கிறான். அந்த வீட்டில் அவள் அவர்கள் குடும்பத்தோடு தன் குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்த்ததைக்கூட துல்லியமாக உணர்ந்து கொண்டு பேசுகிறான். அவளுக்கு அந்தக் கணமே செத்து விட்டால் கூட தேவலை என்று தோன்றியது. அடுத்தவர்கள் இரக்கத்தை விட அது மேலானது என்றே நினைத்தாள். அவள் கட்டுப்பாட்டையும் மீறி அவள் உணர்ந்த கடுமையான வலி அவள் முகத்தில் தெரிந்தது.
க்ரிஷுக்கு அதைப் பார்க்கையில் தாங்க முடியவில்லை. அவன் எதிரியிடம் கூட இந்த வலியை ஏற்படுத்துவதை அவனால் தாங்க முடியாது. அவளை அவன் இப்போது எதிரியின் ஆளாகப் பார்க்கவும் இல்லை. அநியாயமாகத் துன்புறுத்தப்பட்ட ஒரு பாவப்பட்ட பெண்ணாக மட்டுமே அவளைப் பார்க்க முடிந்தது. லேசாகக் கண்கள் ஈரமாக அவள் கையைத் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு மானசீகமாகச் சொன்னான். “உன்னைக் காயப்படுத்தவோ, பழைய காயங்களைக் கிளறிப்பார்க்கவோ இதை எல்லாம் நான் சொல்லவில்லை சிந்து. நீ இது வரை அனுபவித்த வலி போதும். இனியும் நீ அதைச் சுமந்து கொண்டே இருக்கக்கூடாது. அதை உதறி விட்டு முழு மனதோடு புதிய வாழ்க்கை வாழ முடிவு செய்ய வேண்டும். அன்பே பிரதானம். வாழ்க்கையில் நேசிப்பவர்களுடன் இருப்பதே சொர்க்கம் சிந்து. அன்பின் இடத்தை பணமோ, சொத்துக்களோ, ஏன் சாதனைகளோ கூட ஈடுகட்டி விட முடியாது. உண்மையான நேசம் தரும் சந்தோஷத்தையும், நிறைவையும் அது எதுவுமே தந்துவிட முடியாது.... நீ புத்திசாலி.... தைரியமானவள். நீ முயற்சி செய்தால் உனக்கு எதுவும் முடியாததல்ல. நீ மாற வேண்டும். பழைய வாழ்க்கையிலிருந்து விலகி புதிய வாழ்க்கைக்கு முழுமையாய் வர வேண்டும் சிந்து...”
சிந்து மாபெரும் உணர்ச்சிப் போராட்டத்தில் இருந்தாள். அவளுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி அவன் அறிந்திருந்தது அதிர்ச்சியைத் தந்தது. அவளுடைய தாய் இறந்ததாய் தான் அவள் இது வரை எல்லோரிடமும் சொல்லி வந்திருக்கிறாள். ஆனால் அவள் தாய் ஓடிப்போனதை அவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்பது ‘உன் தாயின் தவறுக்கும்’ என்று சொன்னது மூலம் தெரிகிறது. அவள் எப்படியெல்லாம் தன் சிறு வயதில் உணர்ந்தாள் என்பதையும், அன்பே தேவையில்லை என்று முடிவெடுத்தாள் என்பதையும் கூட அவன் தெரிந்து வைத்திருக்கிறான். அவர்கள் வீட்டில் இருந்த போது தன் வீட்டை அவள் நினைத்து ஒப்பிட்டுப் பார்த்ததைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறான். க்ரிஷ் அவன் மனதில் இருப்பதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து வந்த அவளிடம் அவள் மனதை இருப்பதை எல்லாம் சொல்லி முடித்திருக்கிறான்...
ஏதாவது பேசினால் தவறாகப் பேசி விடுவோமோ என்று சிந்து பயப்பட்டாள். உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அடக்கிக் கொண்டு, அவன் கைகளில் இருந்து அவளுடைய கையை விடுவித்துக் கொண்டு க்ரிஷிடம் சொன்னாள். “நன்றி.”
பின் எழுந்தவள் உதயிடம் சொன்னாள். “நான் கிளம்புகிறேன். நாளைக்குப் பேசுவோம்” அவன் பதிலேதும் சொல்வதற்கு முன் வேகமாக அவள் வெளியேறி விட்டாள்.
(தொடரும்)
என்.கணேசன்