என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, February 16, 2021

நீங்காத நினைவலைகள்!

 ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 23 


அலகாபாதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் தங்கி இருந்த போது ஒரு நாள் மாலை ஒரு விருந்துக்குச் சென்றார்கள். அந்த விருந்துக்குப் போகிற பாதையில் அவர்கள் இதற்கு முன் பயணித்ததில்லை. இரண்டு தெருக்கள் சந்திக்கும் ஓரிடத்தை அவர்கள் கடந்த போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தன்னையறியாமல் உடல் நடுங்கினார். கர்னல் ஓல்காட்டுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. குளிரான சமயமும் அல்ல, பயப்படுகிற மாதிரி எந்தக் காட்சியும் அங்கில்லை என்பதால் இந்த அம்மையார் ஏனிப்படி நடுங்குகிறார் என்று திகைத்த அவர் கேட்டார். “ஏன் நடுங்குகிறீர்கள்?”

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “ஏதோ கொடுமை நடந்திருக்கும் உணர்வு இந்த இடத்தைக் கடக்கும் போது எனக்கு ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை”

 

அவர்களுடன் பயணித்த சின்னெட் என்ற கனவான் அலகாபாத்தில் பல வருடங்கள் இருந்தவர். அந்தப் பகுதிகளின் வரலாற்றை அறிந்தவர். அவர் அம்மையாரிடம் சொன்னார். ”அதோ அந்தக் கட்டிடம் தெரிகிறதே அங்கே தான் சில இராணுவ அதிகாரிகள் தங்கியிருந்தார்கள். பல வருடங்களுக்கு முன் இங்கே கலவரம் நடந்த போது அவர்களுடைய சிப்பாய்களாலேயே அந்தக் கட்டிடத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

 

அந்த இடத்தின் வரலாற்றை முன்பே அறியாதிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார், முதல் முதலாக அந்தப் பகுதியில் பயணிக்கையிலேயே அங்கு நிலவிய நினைவலைகள் மூலம் கொடூர சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது என்பதை உணரும் அளவு நுண்ணுணர்வு கொண்டிருந்தார் என்பது கர்னல் ஓல்காட்டுக்கும், சின்னெட்டுக்கும் வியப்பாக இருந்தது.

 

இங்கே வேறொரு உண்மையையும் நாம் உணர வேண்டும். நன்மைகளும், தீமைகளும் நடக்கும் இடங்களில் அந்தந்த நேரங்களில் மட்டுமல்லாமல் பல வருடங்கள் கழிந்தும் அதனதன் அலைகள் அங்கேயே நிலை கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிக நல்ல உதாரணம். மகான்கள் வாழ்ந்த இடங்களில் ஆன்மிக அலைகள் அவர்கள் மறைந்து பல காலமாகிய பிறகும் தங்கியிருப்பதை அங்கே செல்பவர்கள் உணர முடிகிறது என்பது போலவே, ஓரிடத்தில் நடக்கின்ற கொடுமைகளும் தங்கள் நிகழ்வலைகளை அங்கேயே தங்க வைத்து விடுகின்றன. நம் காலம் கழிந்தும் நம் செயல்களின் அலைகளை நாம் விட்டுச் செல்கிறோம் என்றால், அது பற்பல காலங்களுக்கும் அங்கே நிலைத்திருக்கும் என்றால் நாம் நம் செயல்களில் எச்சரிக்கையாக இருப்பதும், அது நன்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் மிக முக்கியமல்லவா?

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் அலகாபாதிலிருந்து வாரணாசி சென்று அங்கே ஆன்மிகப் பெரியோரையும், பண்டிதர்களையும், அறிஞர்களையும் சந்தித்தார்கள். அப்படி அவர்கள் சந்தித்தவர்களில் வாரணாசி கல்லூரி முதல்வராக இருந்த பேராசியர் திபாட் என்பவர். அவர் ஜெர்மானியராக இருந்த போதும் இந்திய தத்துவங்களிலும், புனித நூல்களிலும் ஈடுபாடும் பாண்டித்தியமும் கொண்டவராக இருந்தார். ஒரு நாள் அவரும், வேறு சில இந்திய, வெளிநாட்டு அறிஞர்களும் ஒரு தத்துவ விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் கூட அழைக்கப்பட்டிருந்தார்கள்.

பேராசிரியர் திபாட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை தியோசபிகல் சொசைட்டி என்ற புதிய அமைப்பை ஆரம்பித்தவர் என்ற அளவில் அறிந்திருந்தாரே ஒழிய அவரது அபூர்வ சக்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை. அவர் பேசும் போது “ஒரு காலத்தில் இந்திய யோகிகள் சித்தர்கள் தங்களுடைய ஆத்மசக்தியால் பல அபூர்வ சித்திகளை அடைந்திருந்தார்கள் என்று பல நூல்களில் படிக்க நேர்ந்தாலும் அந்த சித்திகளை இக்காலத்தில் காண முடிவதில்லை.”

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பேராசிரியர் திபாட்டிடம் கேட்டார். “நீங்கள் எது போன்ற சித்திகளைக் காண முடிவதில்லை என்று சொல்கிறீர்கள்?”

 

பேராசிரியர் திபாட்டுக்கு உடனடியாக எந்தச் சக்தியைச் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டு “நினைத்த மாத்திரத்தில் மலர்களை வரவழைப்பார்களாம். அது போன்ற சித்திகளைச் சொல்கிறேன்” என்றார்.

 

கர்னல் ஓல்காட்டுக்கு இது வேடிக்கையாக இருந்தது. எத்தனையோ சமயங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் விதவிதமான மலர்களை அந்தரத்திலிருந்து வரவழைத்ததைக் கண்டவர் அவர் என்பதால் அவர் புன்னகைத்தார். அவர் எதிர்பார்த்தது போலவே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கிடைத்த வாய்ப்பை விடவில்லை. “இந்திய யோகிகளின் அந்த சித்திகளை இப்போது பார்க்க முடியவில்லை என்று சில வருடங்கள் இங்கே இருந்த பின்னும் நீங்கள் சொல்வது வியப்பளிக்கிறது. அந்த யோகிகளின் சித்திகளை உங்களுக்கு மேலை நாட்டுக்காரியான நான் செய்து காட்டுகிறேன்” என்று சொல்லி விட்டு அவர் வலது கையைத் தலைக்கு மேல் உயர்த்தி வேகமாக அசைக்க பல ரோஜா மலர்கள் அங்கிருக்கும் அனைவர் மேலும் விழுந்தன.

 

பேராசிரியர் திபாட் இந்த உடனடி நிரூபணத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகபாவனையிலேயே தெரிந்தது. மறுபடியும் இந்திய தத்துவ ஞானம் பற்றிய விவாதம் தொடர்ந்தது. சாங்கிய ஞானம் பற்றி பேராசிரியர் திபாட் பேச ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அதுகுறித்த தன் ஆழமான பார்வையை விளக்கினார். தத்துவ ஞானம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும் பேராசிரியர் திபாட்டுக்கு அந்த ரோஜா மலர்கள் விழுந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை. இந்த அம்மையார் இதற்காக முதலிலேயே தயார்ப்படுத்தி வந்திருக்க வேண்டும், இதில் ஏதோ ஜாலம் இருக்கிறது என்ற வகையிலேயே சிந்தித்தது போல் இருந்தது.

 

அவர் முடிவில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு நன்றி தெரிவித்து விட்டுச் சொன்னார். “உங்களிடம் பேசிக் கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய ஞாபகார்த்தமாக இன்னொரு ரோஜாவை நீங்கள் வரவழைத்துக் கொடுத்தால் அதை நான் என்னுடன் எடுத்துக் கொண்டு போவேன்”

 

’இந்த அம்மையார் முன்கூட்டியே தயார்ப்படுத்திக் கொண்டு வந்து இருக்கிற மலர்களை எல்லாம் விழ வைத்து விட்டிருந்தால் இரண்டாவதாக வரவழைத்துக் கொடுக்க இவருக்கு எதுவும் இருக்க வழியில்லை என்று அவர் நினைத்தது போல் கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “ஒன்றென்ன, வேண்டுமான அளவு எடுத்துக் கொண்டு போங்கள்” என்று சொல்லி மறுபடி தன் கையைத் தலைக்கு மேல் உயர்த்தி அசைத்தார். மறுபடியும் மலர்கள் மேலிருந்து வந்து விழுந்தன. ஒன்று பேராசிரியர் தலைக்கு மேல் விழுந்து அங்கிருந்து அவர் மடியில் விழுந்தது. அவர் கேட்ட ஒரு ரோஜா அவர் மேலேயே விழுந்திருப்பது போலவும், அந்த ஒரு ரோஜாவை எடுத்துக் கொண்டாலும் சரி, சுற்றிலும் விழுந்திருக்கிற மற்ற ரோஜாக்களை எடுத்துக் கொண்டாலும் சரி என்று அம்மையார் சொல்லியது போல் இருந்தது. பேராசிரியர் திகைப்புடன் ஒற்றை ரோஜாவை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

 

வரவேற்பறையில் அவர்களுடைய வேலையாள் ஒரு சிமினி விளக்கை அப்போது தான் பற்ற வைத்து முடித்திருந்தான். தன்னைச் சந்தேகப்பட்ட பேராசிரியருக்கு கூடுதலாகச் சில வித்தைகள் காட்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆசைப்பட்டது போல கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது. அம்மையார் அந்த வேலையாளிடமிருந்து வாங்கி இடது கையில் வைத்துக் கொண்டார்.  பின் அந்த தீபத்தையே உற்றுப் பார்த்தபடி வலது ஆட்காட்டி விரலை மேலசைத்து ”மேலே போ” என்றார் சாதாரணமாக எரிந்து கொண்டிருந்த அந்த தீபம் மெல்ல மெல்ல வளர்ந்து சிமினி விளக்கின் உச்சி வரை எரிய ஆரம்பித்தது. பின் “கீழே வா” என்றார். தீபம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து கடைசியில் திரியளவே மிகச்சிறியதாக எரிய ஆரம்பித்தது. அம்மையார் மேலும் ஒரு முறை தீபத்தை மேலேற்றியும், கீழிறக்கியும் அந்தப் பேராசிரியரைத் திகைக்க வைத்தார். அந்தப் பேராசிரியர் மிக உன்னிப்பாக ஏதாவது ஜாலம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முயன்றார். சிமினி விளக்கின் திருகாணி அருகே கூட அம்மையாரின் விரல் செல்லவில்லை என்பதை பார்த்துக் கொண்டே இருந்ததால் அவரால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஏமாற்றத்துடன் விடைபெற்றார்.

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி   

Monday, February 15, 2021

யாரோ ஒருவன்? 19

கல்யாண் இரவு வீட்டுக்கு வந்தவுடன் வேலாயுதம் அன்று நாகராஜிடமும், மில் அதிபரின் கணக்குப் பிள்ளையிடமும் பேசியதை விவரமாகச் சொன்னார். நாகராஜ் ஒரு முறை சந்திக்க ஐந்து லட்சம் ரூபாய் வாங்குவதாகச் சொன்னது கல்யாணையும் திகைக்க வைத்தது. இது நாட்டில் எந்தச் சாமியாரும் வாங்காத அதிகத் தொகையாய்த் தெரிகிறதே என்று அவன் எண்ணினான். இத்தனைக்கும் பார்க்க அவன் சாமியார் போலக்கூடத் தெரிவதில்லை. கல்யாணுக்குத் தெரிந்த பல சாமியார்கள் தங்களைத் தெய்வீகத் தூதர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். அதற்கு அந்தச் சாமியார்களின் சிஷ்யர்கள் கச்சிதமாக உதவுவார்கள். தானே வீட்டு வாசலையும் கூட்டுவதில் சங்கடப்படாமல், அதே நேரத்தில் ஒரு சந்திப்புக்கு ஐந்து லட்சம் வாங்குவதிலும் தயக்கமில்லாமல் இருக்கும் நாகராஜ் நிறையவே வித்தியாசமாகத் தெரிகிறான்.

கல்யாண் யோசனையோடு கேட்டான். “அவனோட ஆசிரமத்தோட விலாசம், போன் நம்பர் எதையாவது வாங்கினீங்களா? அதிருந்தால் அவனைப் பத்தின முழு விவரங்களைச் சேகரிச்சிடலாமே”

வேலாயுதம் சொன்னார். “இல்லையே.... எனக்கு அந்த ஆள் ஒரு அப்பாயின்மெண்டுக்கு அஞ்சு லட்சம்னு சொன்னவுடனேயே வேற எதையும் கேட்கணும்னு தோணலை. திகைச்சுப் போயிட்டேன். அதுல ஒரு நாளுக்கு ஒரு ஆளுக்கு மேல பார்க்க மாட்டானாம். கலிகாலம் எந்த நிலைமைக்குப் போயிடுச்சு பாத்தியா? ஒரு தொழில் செய்ய நாம எத்தனை போராடிச் சம்பாதிக்க வேண்டியிருக்கு. இவனுக்குத் தொழிலாளர் பிரச்சன இருக்கா, வியாபாரப் பிரச்சன இருக்கா, பணவசூல் பிரச்சன இருக்கா?”

கல்யாண் அவர் சொல்வதில் உள்ள உண்மையை நினைத்துப் பெருமூச்சு விட்டான். பணத்தின் மீது அவனுக்கு இருந்த ஈர்ப்பு எல்லையில்லாதது. எங்கே அது நிறைந்திருந்தாலும் அவன் கவனம் தானாக அதன் பக்கம் போய் விடும். பணத்தை ஆராதிப்பவன் அவன். அந்த ஆராதனையும், பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காத மனோநிலையும் தான் அவனை ஏழ்மையில் இருந்து இன்றைய செல்வச் செழிப்புக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இப்போதும் அவனுக்கு அவனை விடப் பெரிய பணக்காரர்களை எல்லாம் பார்க்கும் போது ’நாம் எப்போது அவர்கள் மாதிரி ஆவோம்’ என்ற ஏக்கம் எழ ஆரம்பித்து விடும். இப்படி ஒரு நாளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் நாகராஜின் சொத்து மதிப்பு என்ன இருக்கக்கூடும் என்று கல்யாண் யோசிக்க ஆரம்பித்தான்

பணத்தின் மீது இருக்கும் இந்தக் கூடுதல் ஈர்ப்பு தந்தையிடம் இருந்து தான் தனக்கு வந்திருக்க வேண்டும் என்று கல்யாண் நினைத்துக் கொள்வான். அவருக்கும் அப்படித் தான். பணத்தைப் பற்றியோ பணக்காரர்களைப் பற்றியோ பேசும் போது அவர் குரல் கூட மாறிவிடும். குரலில் ஒரு புதிய சுருதி, லயம் எல்லாம் சேர்ந்து விடும். அவரை அறியாமல் கண்கள் விரியும். ஒருவிதப் பரவசம் கூடி விடும்….

இன்றும் தந்தையும் மகனும் இரவில் அவர் அறை ஜன்னல் வழியே பக்கத்து வீட்டைப் பார்க்க ஆரம்பித்தார்கள். பதினோரு மணிக்கு மேல் அவர்கள் இருவருக்கும் எதிர்பார்ப்பு கூட ஆரம்பித்தது. ஆனால் ஏனோ அன்றிரவு பாம்பின் சீறல் கேட்கவில்லை. இனி கேட்காதோ என்று இருவரும் யோசிக்கையில் பாம்பின் சீறலுக்குப் பதிலாகத் திடீரென்று 11.26க்கு அந்தக் குறிப்பிட்ட அறை ஜன்னல் வழியாக நீலமும் பச்சையுமாய் கலந்து பளீரென்று அதிக வெளிச்சத்தில் ஒளிச்சிதறல்கள் தெரிந்து மறைந்தன. சுமார் பத்து வினாடிகள் தான் அவை தெரிந்திருக்கும். அந்த ஒளிச்சிதறல்கள் மறைந்த பின் நாகராஜ் மெலிதான குரலில் ஏதோ சொல்வது கேட்டது. என்ன சொன்னான் என்பதில் தெளிவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து மெலிதாக ஒரு பாம்பின் சீறல் கேட்டது. அதன் பின் அங்கு பரிபூரண அமைதி நிலவ ஆரம்பித்தது....

மேலும் ஒரு மணி நேரம் தந்தையும் மகனும் காத்திருந்து பார்த்தார்கள்.  எந்தச் சத்தமும் வெளிச்சமும் அங்கிருந்து வரவில்லை.

வேலாயுதம் சொன்னார். “இன்னைக்கு அவ்வளவு தான் போல இருக்கு”

கல்யாண் யோசனை செய்தபடியே உறங்கக் கிளம்பினான். வேலாயுதம் மகனிடம் நினைவுபடுத்தினார். “நேத்து தெரிஞ்ச வெளிச்சத்துக்கும், இன்னைக்குத் தெரியற வெளிச்சத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு பாத்தியா. நேத்து ஒளிச்சிதறல் இல்லை. இன்னிக்கு ஒளிச்சிதறல் இருக்கு. இன்னைக்குத் தெரியறது அந்தக் கல் வெளிச்சம் தான். நீ என்ன சொல்றே?”

அதையே தான் அவனும் நினைத்தான். எதற்கும் ஒரு முறை ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம் என்று அவன் நினைத்தபடி அவரைப் பார்த்தான். அவன் சொல்லாமலேயே அவன் நினைப்பைப் புரிந்து கொண்டு அவர் தலையசைத்தார். அவன் தனதறைக்குச் செல்ல, அவரும் பின் தொடர்ந்தார்.

கல்யாணின் மனைவியும் மகளும் வெளியூர் சென்றிருந்தார்கள் என்பதால் தந்தையையும் மகனையும் தவிர அங்கே யாருமில்லை என்றாலும் அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் கல்யாண் அறைக் கதவை முதலில் தாளிட்டான். பின் தன் பீரோவைத் திறந்தான். பீரோவுக்குள் பணம் வைத்திருக்கும் லாக்கர் ஒன்று பிரத்தியேகமாய் பொருத்தப்பட்டிருந்தது. அதைத் திறந்தான். உள்ளே பணம் கட்டுக் கட்டாய் இருந்தது. நகைகளும் நிறைய இருந்தன.  அதற்குள் ஒரு மூலையில் சிவப்புப் பட்டுத்துணியில் கட்டி வைத்திருந்த ஒரு மிகச்சிறிய ரத்தினக்கல்லைக் கையில் எடுத்தான்.  அதை உள்ளங்கையில் வைத்து விளக்கொளியில் பார்த்த போது ஒளிச்சிதறல் அறைமுழுவதும் மின்னியது. பக்கத்து வீட்டில் மின்னியதும் இதே போன்ற ஒளிச்சிதறல் தான். ஆனால் பக்கத்து வீட்டில் ஒளிர்ந்தது இதை விடப் பலமடங்காக இருந்தது என்பது தான் விசேஷம்...


ஜனார்தன் த்ரிவேதியைச் சந்திக்க நிறைய ஆட்கள் காத்திருந்தார்கள். பலரும் கட்சிக்காரர்கள். ஒருசில மற்றவர்களும் அங்கே இருந்தார்கள். அவர்களில் குடியானவனைப் போல் தோற்றமளித்த ஒருவன் கையில் ஒரு மனுவுடன் காத்திருந்தான்.  ஜனார்தன் த்ரிவேதியின் உதவியாளனுக்கு  அந்த ஆள் அவர்கள் புதிதாய் வேலையைத் தந்திருந்த டிடெக்டிவ் ஏஜென்ஸி ஆள் என்பது சிறிது நேரம் கழித்துத் தான் கூர்ந்து பார்த்த போது தெரிந்தது. தெரிந்தவுடன் அவரைச் சந்திக்க சீக்கிரமாய் உள்ளே அனுப்பி வைத்தான்.

ஜனார்தன் த்ரிவேதி உள்ளே நுழைந்த ஆளிடம் சிரித்தபடி கேட்டார். “இங்கே வர எதற்கிந்த வேஷம்?”

அந்த ஆள் அவர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடிச் சொன்னான். “உங்கள் வீடு, ஆபிஸ் எல்லாவற்றையும் ரகசியப் போலீஸ் கண்காணிக்கிறது”

ஜனார்தன் த்ரிவேதி அதிர்ச்சியடைந்தார். அந்த ஆள் தொடர்ந்து சொன்னான். “என் யூகம் சரியாக இருந்தால் உங்கள் தொலைபேசி கூட ஒட்டுக் கேட்கப்படும் வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எங்கே போனாலும், உங்களை யார் சந்தித்தாலும் கண்காணிக்கிறார்கள்….”

சஞ்சய் ஷர்மா எதையும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பதை அவர் உறுதியாக நம்பினாலும் கூட இந்தத் தகவலால் அவர் நிறையவே பாதிக்கப் பட்டார். அவர்கள் அவரை எதற்குக் கண்காணிக்க வேண்டும்?

அவன் தொடர்ந்து சொன்னான். “அதனால் போனில் பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசுங்கள். பிரச்னைக்குரிய ஆள்கள் யாரையும் சந்திப்பதைத் தவிருங்கள். எச்சரிக்கையாக இருங்கள்”

அவர் நரேந்திரனைப் பின் தொடர ஆட்களை ஏற்பாடு செய்தால் ரா அவரைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறது…. மெல்ல எழ ஆரம்பித்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டே கேட்டார். “நரேந்திரன் எங்கெங்கே போகிறான் என்பதைக் கண்காணித்தீர்களா? அவன் போகிற எதாவது ஒரு இடத்தில் அவன் யாரையாவது அடைத்து வைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா?”

அவன் அந்த மனு போன்ற காகிதத்தை அவரிடம் நீட்டினான். அந்தக் காகிதத்தில் இரண்டு நாட்களாக நரேந்திரன் எங்கெல்லாம் போயிருக்கிறான் என்ற விவரங்கள் கடிகார நேரத்தோடு தரப்பட்டிருந்தன. எங்கே எத்தனை நேரம் இருந்தான் என்பது கூட அதில் இருந்தது. அந்த ஆள் சொன்னான். “இந்த இரண்டு நாட்களாக அவன் போயிருக்கும் இடம் எதிலும் யாரையும் அடைத்து வைத்திருக்கச் சாத்தியமில்லை. அப்படி அவன் எங்கேயாவது அடைத்து வைத்திருந்தாலும்  இந்த இரண்டு நாட்களில் அங்கே போவதைத் தவிர்த்து இருக்கலாம். இன்றைக்குக் காலை மணாலிக்கு விமானத்தில் போயிருக்கிறான். அங்கும் எங்கேயெல்லாம் போகிறான் என்பதைக் கண்காணிக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்…”

மணாலிக்கு நரேந்திரன் போகும் காரணத்தை ஜனார்தன் த்ரிவேதியால் யூகிக்க முடிந்தது. போய் புதிதாக அவன் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது என்றாலும் கூட அந்தப் பழைய வழக்கை அவன் இப்படி தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்திருப்பது அவர் மனதில் நெருடலாக இருந்தது. அவர்களைக் காட்டிக் கொடுக்கும்படியாக ஏதாவது அங்கு இருக்கக்கூடுமோ?



(தொடரும்)
என்.கணேசன்

Sunday, February 14, 2021

எதையும் நம் வாழ்க்கையில் எப்படி வரவழைக்கிறோம்?

நம் வாழ்க்கையில் மனிதர்களையும், சூழ்நிலைகளையும் 95 சதவீதம் நாம் தான் வரவழைத்துக் கொள்கிறோம். அது எப்படி என்று விளக்கும் காணொளி.

Saturday, February 13, 2021

உதாரணமாக இரு!

கீதை காட்டும் பாதை 13

பண்டிதன் (படித்தவன், அறிந்தவன்) கடமை என்ன? அவன் எப்படி இருக்க வேண்டும்?