என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Saturday, January 13, 2018

என் “இருவேறு உலகம்” நாவல் வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

தாங்கள் ஆவலுடன் படித்து வரும் “இருவேறு உலகம்” நாவல் அச்சில் வெளிவந்து விட்டது.

மர்ம மனிதன் யார்? அவன் நோக்கம் என்ன? அவன் சக்திகளை அடைந்த விதம் என்ன? அவனை மாஸ்டரும், க்ரிஷும் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி? மாஸ்டருக்கும், மர்ம மனிதனுக்கும் காளிகோயிலில் கிடைத்த வரைபடம் எதைக் குறிக்கிறது? அதை இருவரும் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? அதில் பொதிந்துள்ள ரகசியம் என்ன? மாஸ்டரிடம் க்ரிஷ் என்ன, எப்படிக் கற்றுக் கொள்கிறான், அவன் கற்றுக் கொண்டது எதிரியைச் சமாளிக்க உதவுகிறதா?  தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தின் விளைவுகளை க்ரிஷ் குடும்பம் எப்படி சமாளிக்கிறது? மர்ம மனிதன் க்ரிஷை அழிக்க எடுக்கும் முயற்சிகள் என்ன? அதை எல்லாம் க்ரிஷ் எப்படி சமாளிக்கிறான்? சங்கரமணி, மாணிக்கம் கோஷ்டி எதிரி கையில் எப்படி எல்லாம் இயக்கப்படுகிறார்கள், முடிவில் என்ன ஆகிறது? மர்ம மனிதன் - மாஸ்டர் - க்ரிஷ் என்ற முக்கோண சக்திகளில் யார் யாரை எப்படி மிஞ்சுகிறார்கள், ஜெயிக்கிறார்கள்?  ஆகிய கேள்விகளுக்குப் பதிலைப் பல திருப்பங்களுடன் இந்த நாவலில் ஒரேயடியாகப் படிக்கலாம். 

அது மட்டுமல்லாமல், இன்றைய அரசியல்வாதிகள் உட்பட பலராலும் பலகாலமாகப் பேசப்பட்டு வரும் இல்லுமினாட்டி ரகசிய அமைப்பு இந்த  நாவலின் பிற்பகுதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த இல்லுமினாட்டி அமைப்புக்கும், மர்ம மனிதன், மாஸ்டர் இருவருக்கும் கிடைத்த வரைபடத்திற்கும் மிக முக்கிய தொடர்பு இருப்பதும், யார் கை ஓங்குகிறது என்பதை அது தீர்மானிக்கும் நிலை உருவாவதும் மிக மிக சுவாரசியமாகச் சொல்லப்படுகிறது.  தொடங்கியபின் முடிக்காமல் கீழே வைக்க முடியாதபடி  நகர்கிற இந்த நாவலில் 140 அத்தியாயங்கள், 672 பக்கங்கள் உள்ளன.  நாவலின் விலை ரூ.700/- 

கதையின் மர்ம முடிச்சுகள் விலகி முடிவு தெரிந்த பின்னரும் மீண்டும் பல முறை திரும்ப நிதானமாகப் படிக்க வைக்கும்படியான தத்துவங்களும், படிப்பினைகளும் இந்த நாவலில் பின்னப்பட்டிருக்கின்றன. படித்து முடித்த பின்னர் என்றும் இந்த நாவல் உங்கள் மனதில் தங்கும் என்பது மட்டும் உறுதி. 

(வழக்கம் போல் இந்த வலைப்பூவிலும் இந்த நாவல் வாரா வாரம் தொடரும். வலைப்பூவில் 2019 ஆம் ஆண்டு ஜூன்மாதம் முடிவடையும்) 

நூலை வாங்க விரும்புவோர் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


நன்றி.

அன்புடன்
என்.கணேசன்



Thursday, January 11, 2018

இருவேறு உலகம் 65

ரித்வாரில் கூட்டியிருந்த கூட்டத்திற்கு இது வரை வந்திராத அளவுக்கு உறுப்பினர்கள் வந்திருந்தனர். இருக்கைகள் எல்லாம் நிறைந்து போய், நின்றிருக்கும் இடத்திலும் நெருக்கமாகவே உறுப்பினர்கள் நிற்க வேண்டி இருந்தது. மாஸ்டர் கூட்டம் கூட்டியதன் காரணத்தை முன்பே தெரிவித்திருக்கா விட்டாலும் காரணம் கசிந்து விட்டிருக்கிறது, அதை அனைவரும் அறிந்திருந்தாகள் என்பதை அங்கு நிலவிய இறுக்கத்திலிருந்தும், முகங்களில் தெரிந்த கோபத்தை வைத்தும் அவரால் ஊகிக்க முடிந்தது. அன்பும் அமைதியும் நிறைந்திருந்த அந்த ரகசிய ஆன்மிக இயக்கம் குருவின் மரணத்திற்குப் பின்னால் ஒரேயடியாக மாறி விட்டதை அவர் வருத்தத்துடன் உணர்ந்தார். ஒவ்வொரு வன்முறையும் தொடர்ந்து வரக்கூடிய பல வன்முறைகளுக்கான விதைகளை விதைத்து விட்டே போகின்றது. வன்முறையின் இயல்பே அது தான். குருவின் மரணம் மூலமாகவும் அதுவே சாதிக்கப்பட்டிருக்கிறது….. அமைதிக்கான இயக்கத்திலேயே வன்முறை இதைச் சாதித்திருந்தால் உணர்ச்சிக்களமான மற்ற இடங்களில் அது என்ன தான் செய்யாது என்று மாஸ்டர் வியந்தார். விஸ்வம், சுரேஷ், பெண் விஞ்ஞானி உமாநாயக் போன்ற அவருக்கு நெருக்கமானவர்கள் கவலையுடன் அந்தக் கூட்டத்தின் கோபத்தைக் கவனித்தது தெரிந்தது.

மாஸ்டர் விரிவாகப் பேசுவதற்கு முன் அவர்கள் கோபத்தை அவர்கள் வார்த்தைகளிலேயே கேட்க விரும்பி சொன்னார். ”அனைவருக்கும் வணக்கம். மிகக்குறுகிய கால அவகாசத்தில் அழைத்திருந்தாலும் அதை ஏற்று இத்தனை பேர் இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. உங்களில் பலரும் ஏதோ தெரிவிக்க ஆசைப்படுவது போல் தெரிகிறது. உங்கள் கருத்துகளைக் கேட்டு விட்டுப் பேசினால் நான் அதையும் கருத்தில் எடுத்துக் கொண்டு பேசியது போல் இருக்கும். அதனால் முதலில் உங்கள் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்…..”

இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை போல் தெரிந்தது. அவர்களில் பலரும் அவர் பேசியதைக் கேட்டதற்குப் பிறகுத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கக் காத்திருந்தது போல் இருந்தது. அவர்கள் தங்களுக்குள் சிறிது நேரம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டார்கள். பிறகு சிறிய கனத்த மௌனத்திற்குப் பின் ஒரு இளைஞன் பேசினான். “மாஸ்டர், நம்முடைய இயக்கம் அமைதியான ஆன்மிக இயக்கம். நமக்கு யாரிடமும் விரோதம் இல்லை. உலக நலனே நம் நோக்கம். இப்படிப்பட்ட அமைதி இயக்கத்தின் குருவை அநியாயமாக ஒருவன் கொன்றிருக்கிறான். அவனாகவே நமக்கு எதிரியாக மாறியிருக்கிறான். அந்த எதிரியால் உலகமே அழியும் நிலைமைக்குப் போகும் என்ற எச்சரிக்கை நமக்கு நம் மூத்தவர்கள் மூலம் கிடைத்திருக்கிறது. அந்த அழிவுக்கு அவன் பயன்படுத்தப் போகிற கருவியாக இருக்கப் போகிறவன் பற்றியும் தகவல் கிடைத்திருக்கிறது. அந்தக் கருவிக்கு நீங்கள் குருவாகப் போகிறீர்கள், சில ரகசியக்கலைகள் சொல்லித் தரப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டு கொந்தளித்து விட்டோம். இது எதிரியை வலிமைப்படுத்துவது போல் ஆகி விடாதா?”

அவன் பேசி முடித்த போது பலரும் தங்கள் ஒட்டு மொத்தக் கருத்தைக் கச்சிதமாய் அவன் பேசியிருக்கிறான் என்பது போல பார்வையால் பாராட்டு தெரிவித்தார்கள். ஒரு முதியவர் அதைத் தொடர்ந்து சொன்னார். “எதிரியின் ஆயுதம் என்று தெரிந்த பிறகு அதை அழிப்பது தானே புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு அதைக்கூர்மைப்படுத்திக் கொடுப்பது நம்முடைய அழிவை அல்லவா வேகப்படுத்தும்”

ஒரு சிலர் கைதட்டினார்கள். பின் அமைதி நிலவியது. இன்னும் யாராவது கூடுதலாகச் சொல்கிறார்களா என்று மாஸ்டர் பார்த்தார். ஆனால் கோபத்துடன் தெரிந்த அத்தனை பேர் கருத்தும் இருவர் பேச்சில் வெளிப்படுத்தி விட்டது போல் தெரிந்தது.

மாஸ்டர் அமைதியாகப் பேச ஆரம்பித்தார். ”இந்த இயக்கத்தில் எல்லோரையும் விட அதிகமாக குருவுக்கு நெருங்கியவன் நான். அதிகமாக அவரை நேசிப்பவனும் நான் தான். ஒரு போக்கிரியாகவோ, வீணாய் போனவனாகவோ வாழ்ந்திருக்க வேண்டிய என்னை மாற்றியது அந்த மாமனிதர். அகங்காரமாய் பேசிய என் வார்த்தைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் எனக்குள்ளே ஏதோ ஒன்று உருப்படியாக இருக்கிறது என்று கண்டுபிடித்து என்னை அழைத்து வந்து மாற்றியது அவர் தான். இன்றைக்கு எனக்கிருக்கும் ஒவ்வொரு சிறப்பும் அவர் போட்ட பிச்சை. அவருக்கு நான் பட்டிருக்கும் கடனை இந்த ஒரு பிறவியில் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் அந்த எதிரி மீது உங்கள் எல்லோரையும் விட அதிகமான ஆத்திரம் எனக்கிருக்கிறது. கோபம் நல்லதல்ல என்று பாடம் நடத்துபவன் நான். ஆனால் இந்தக் கோபத்தை மட்டும் நான் பத்திரமாய் ஒரு மூலையில் பாதுகாத்து வைத்திருக்கிறேன். எதிரியை அழிப்பதில் மட்டுமே அந்தக் கோபத்தை நான் தீர்க்க முடியும். அதில் எத்தனை பாவம் எனக்குச் சேர்ந்தாலும் சரி அதைத் தலைமேல் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான தண்டனையை இறைவன் தந்தால் அதை முணுமுணுப்பில்லாமல் நான் ஏற்றுக் கொள்ளவும் செய்வேன்…”

மிகுந்த கட்டுப்பாட்டுடன் அவர் பேசிய போதும் அவர் உணர்ச்சிகரமாக ஆணித்தரமாகப் பேசியது ஒவ்வொருவர் இதயத்தையும் தொட்டதை சுரேஷ் கவனித்தான். எல்லோரும் இனி என்ன சொல்லப்போகிறார் என்பதில் மிக ஆர்வமாக இருந்தது தெரிந்தது.

”ஜீவசமாதி அடைவதற்கு முன் நம் மூத்த சித்தர் பரஞ்சோதி முனிவர் அன்னிய சக்தி நம் பூமியை ஆட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது. அது தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது என்று சொல்லி இருந்தார். அதன்படியே இஸ்ரோ தயவால் அந்த எதிரியையும், அந்தக் கைப்பாவை க்ரிஷையும் அடையாளம் கண்டோம். எதிரி மகாசக்தி வாய்ந்தவன். சந்தேகமே இல்லை. க்ரிஷைக் கடித்த பாம்பு விஷத்திற்கான முறிவு அமேசான் காடுகளில் இருக்கும் மூலிகைக்கு இருக்கிறது என்று தெரிந்து சில நிமிடங்களில் அவனை அங்கே கொண்டு போயிருக்கிறான். கிட்டத்தட்ட 16000 கிலோமீட்டர் தூரத்தை சில நிமிஷங்களில் கொண்டு போயிருக்கிறான். அதுவும் Astrosat  என்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவுக்கு எடுத்து அனுப்பிய புகைப்படங்களில் படாமல் கொண்டு போயிருக்கிறான். இது அசாத்திய சக்தி. அது ஏலியன் தானா இல்லை ஏலியன் போர்வையில் வேறு எதாவது சக்தியா என்பதில் எனக்கு இன்னமும் தெளிவில்லை. அது எதுவாகவே இருந்தாலும் அப்படிப்பட்ட சக்திக்கு பூமியை அழிப்பது பெரிய காரியமல்ல. சுலபமாகச் செய்து விடும். ஆனால் அது பூமியை ஆட்கொள்ள நினைக்கிறது. ஆள நினைக்கிறது. அதற்கு க்ரிஷை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காகவே அவனைக் காப்பாற்றி திரும்பவும் கொண்டுவந்து விட்டிருக்கிறது. க்ரிஷ் நம்பிக்கையின் காரணமாக அவனுடைய உணர்வு நிலைக்குள் புகுந்து விட அதை அனுமதித்திருக்கிறான். அதற்குப் பின் அவனுக்குள் அது என்னென்ன ‘ப்ரோகிராம்’கள் போட்டு மாற்றியிருக்கிறதோ தெரியவில்லை. க்ரிஷ் நேரில் வந்த போது என் யோகசக்தியால் அவனுக்குள் ஊடுருவி அதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்தேன். முடியவில்லை. எதிரி அவனுக்குள் யோகசக்தியும் துளைக்க முடியாத அரணை ஏற்படுத்தி இருக்கிறான். இப்போது எதிரி மறைந்து விட்டான். க்ரிஷைத் திரும்பவும் கொண்டு வந்து விட்ட போது Astrosat எடுத்திருந்த புகைப்படங்களிலும் எதிரி எந்தத் தடயமும் விட்டுப் போகவில்லை. க்ரிஷ் அவன் போய் விட்டான் என்கிறான். ஆனால் அவன் உண்மையாகவே போய் விட்டானா இல்லையா என்பது தெரியாது. அவன் அப்படிப் போயிருந்தாலும் சரி, போகாமல் பூமியிலேயே எங்காவது ஒளிந்திருந்தாலும் சரி அவனை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை…. இனி எதுவானாலும் சரி அவனை நாம் க்ரிஷ் மூலமாகவே தான் எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்….. ”

மற்றவர்களைப் போலவே மர்ம மனிதன் மாஸ்டரின் வார்த்தைகளை மிகவும் கூர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். மாஸ்டரின் கடைசி வாக்கியங்கள் நூறு சதவீதம் உண்மை என்று தோன்றியது. எதிரி என்ற வார்த்தையை மாஸ்டர் சொன்னது தவறாக இருக்கலாம். அவர் சொன்ன எதிரி உண்மையில் மர்ம மனிதனுக்குத் தான் எதிரி. மாஸ்டர் சொன்னது போல் அந்த எதிரி என்ன ப்ரோகிராம்களை  க்ரிஷுக்குள் புகுத்தியிருக்கிறானோ அது க்ரிஷ் உட்பட யாருக்கும் தெரியாது என்பதே யதார்த்த நிலை. மாஸ்டர் சொன்னது போல் இனி அந்த ஏலியனை க்ரிஷ் மூலமாகத் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த அனுமானத்தையே மர்ம மனிதனும் எட்டியிருந்தான். அதனால் இப்போதைக்கு க்ரிஷ் தான் அவன் எதிரி. ஆனால் முதல் முறையாக எதிரியைப் புரிந்து கொள்ள முடியாமல் கையாள வேண்டி வந்திருப்பது அவனுக்குச் சகிக்க முடியாத நிலைமையாக இருந்தது…..

மனதை க்ரிஷிடம் இருந்து திருப்பி மாஸ்டரின் பேச்சுக்கு மர்ம மனிதன் கொண்டு வந்தான். கடைசியில் மாஸ்டர் இங்கிருப்பவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வந்து ஏற்றுக் கொள்ள வைப்பாரா, இல்லை ராஜினாமா செய்து விட்டு விலகிக் கொள்வாரா என்பதை அறிய ஆர்வமாய் இருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, January 10, 2018

சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 489ல் என் நூல்கள்!


அன்பு வாசகர்களே!

சென்னையில் 10.1.2018 முதல் 22.1.2018 வரை நடக்கும் புத்தகக் காட்சியில் என் நூல்கள் அனைத்தும் அரங்கு எண் 489ல் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அன்பு வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

என் மகாசக்தி மனிதர்கள் நூல் தந்தி பதிப்பகத்தின் அரங்குகள் 56, 57ல் கிடைக்கும்.


என்.கணேசன்

Monday, January 8, 2018

சத்ரபதி – 2

திரிப்படைகள் ஷாஹாஜியைத் தேடிக் கண்டிப்பாக வருவார்கள் என்று ஸ்ரீனிவாசராவ் எதிர்பார்த்திருந்தாலும் கூட இவ்வளவு சீக்கிரம் பின் தொடர்ந்து வருவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஒற்றனிடம் கேட்டார். “எத்தனை பேர் இருப்பார்கள்?”

“சுமார் 1500 பேர் இருப்பார்கள் பிரபு” என்றான் ஒற்றன்.

“யார் தலைமையில் வருகிறார்கள்?” ஸ்ரீனிவாசராவ் கேட்டார்.

“லாக்கோஜி ஜாதவ்ராவ் தலைமையில் வருகிறார்கள்” என்றவுடன் விதி வலிது மட்டுமல்ல வேடிக்கையானதும் கூட என்று ஸ்ரீனிவாசராவ் நினைத்துக் கொண்டார். அவரது சிறு மாளிகைக்கு அடுத்தபடியாக சற்று விசாலமானதும், வசதியானதுமான இன்னொரு சிறு மாளிகையில்  தான் ஜீஜாபாயை அவர் தங்க வைத்திருந்தார். அந்த மாளிகைக்கு அவர் விரைந்தார். ஜீஜாபாய் அவர் அங்குள்ள வசதி குறித்து விசாரிக்க மரியாதை நிமித்தம் வந்திருக்கிறார் என்று நினைத்து சோகத்தை மறைத்துக் கொண்டு அவரை வரவேற்றாள்.

“இருப்பதிலேயே இதுவே அதிக வசதி கொண்டது என்று இதை ஒதுக்கியுள்ளேன் சகோதரி. நீங்கள் பெரும் குறையாக எதையும் உணரவில்லையே” என்று ஸ்ரீனிவாசராவ் கேட்டார்.

கட்டிய கணவனையும்,  பெற்ற குழந்தையையும் பிரிந்து நிர்க்கதியாய் நிற்பவளுக்கு எது தான் வசதியாக இருக்க முடியும் என்று ஜீஜாபாய் மனதில் நினைத்துக் கொண்டாலும் புன்னகையுடன் “ஒரு குறையும் இல்லை சகோதரரே” என்றாள்.

“எதிரிப்படையினர் வந்து கொண்டிருப்பதாக ஒற்றன் மூலம் செய்தி வந்திருக்கிறது சகோதரி” என்று ஸ்ரீனிவாசராவ் மெல்லச் சொன்னார்.

ஜீஜாபாய் இன்னேரம் கணவரும், பிள்ளையும் எவ்வளவு தூரம் போயிருப்பார்கள் என்று மனக்கணக்குப் போட்டு நிம்மதியடைந்தாள். “இன்னேரம் என் கணவர் வெகுதூரம் போயிருப்பார். கவலை கொள்ள எதுவுமில்லை சகோதரரே” என்று அவள் சொன்ன போது ஸ்ரீனிவாசராவ் அவள் தன் நிலையை எண்ணி வருத்தமோ பயமோ கொள்ளவில்லை என்பதை வியப்புடன் கவனித்தார்.

“அந்தப் படைக்குத் தலைமை தாங்கி வருவது உங்கள் தந்தை தான் சகோதரி” என்று ஸ்ரீனிவாசராவ் சொன்ன போது ஒரு கணம் சிலையாய் சமைந்த ஜீஜாபாய் பின் “வருவது என் கணவரின் எதிரி சகோதரரே” என்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் உறுதியாகச் சொன்னாள். ஸ்ரீனிவாசராவ் சிறு தலையசைப்புடன் விடைபெற்றார்.

தக்காணப் பீடபூமியின் அரசியல் சதுரங்கத்தில் சின்னாபின்னமானது அந்தப் பெரும் நிலப்பரப்பு மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்களும் தான். அதில் தன் குடும்பமும் ஒன்றாகிப் போனதை ஜீஜாபாய் இப்போது வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கிறாள்…..

அவள் தந்தை லாக்கோஜி ஜாதவ்ராவ் யாதவ அரசர்களின் வம்சாவளியில் வந்தவர். சிந்துகேத் என்ற பகுதியின் தலைவராக இருந்த அவர் அகமதுநகர் அரசவையில் ஒரு சக்தி வாய்ந்த பிரபுவாகவும் இருந்தார். அவரிடம் 10000 குதிரைகள் கொண்ட சக்தி வாய்ந்த படை இருந்தது. அவருக்குப் பல கிராமங்கள் சொந்தமாக இருந்தன. ஷாஹாஜியின் தந்தை மாலோஜி உதய்ப்பூர் ராணாக்களின் வீரவம்சத்தவர் என்றாலும் அச்சமயத்தில் அகமதுநகர்  படையில் ஒரு சிறுபிரிவின் தலைவராக இருந்தார். சிறுபிரிவுத் தலைவராக இருந்த போதிலும் மாலோஜி மீது அப்போதைய அகமதுநகர் சுல்தான் முதலாம் நிஜாம்ஷாவிற்கும், லாக்கோஜி ஜாதவ்ராவுக்கும் மரியாதை இருந்தது.  மாலோஜியும், அவர் மகன் சிறுவன் ஷாஹாஜியும் அடிக்கடி லாக்கோஜி ஜாதவ்ராவின் மாளிகைக்கு வருவதுண்டு. ஜீஜாபாய் ஷாஹாஜியை விட ஒரு வயது தான் குறைந்தவள் என்பதால் இருவரும் சேர்ந்து விளையாடுவதுண்டு.

அப்படி ஒரு ஹோலிப்பண்டிகையின் போது ஷாஹாஜியும், ஜீஜாபாயும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த போது லாக்கோஜி ஜாதவ்ராவ் நாக்கில் விதி விளையாடியது. குழந்தைகளின் விளையாட்டை ரசித்தவர் “என்னவொரு அருமையான ஜோடி” என்று வாய்விட்டுச் சத்தமாகச் சொல்ல அருகிலிருந்த மாலோஜி அவர்கள் இருவரின் திருமணத்தை அவர் உறுதி செய்து விட்டதாக எடுத்துக் கொண்டதுடன் அங்கிருந்த  எல்லோரையும் அழைத்துச் சொல்லவும் செய்தார். லாக்கோஜி ஜாதவ்ராவ் தான் விளையாட்டாகச் சொன்னதை இவர் காரியமாய்ச் சொன்னதாக எடுத்துக் கொண்டு விட்டாரே என்று திகைத்தார். பின்னால் அவர் அங்கு நடந்ததைத் தன் மனைவி மால்சாபாயிடம் சொல்ல அவள் அவரைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டாள். தன் அன்பு மகள் ஒரு சாதாரண சிறுபடைப்பிரிவின் தலைவரின் மகனுக்கு மனைவியாவதை அவளால் சகிக்க முடியவில்லை. “நீங்கள் தான் விளையாட்டாய் சொன்னீர்கள் என்றால் மாலோஜிக்கு அறிவு எங்கே போயிற்று. நம் அந்தஸ்து என்ன? அவர்கள் அந்தஸ்து என்ன? ஒரு அரசகுமாரனுக்கு மனைவியாக வேண்டிய என் மகளை இப்படி தாழ்ந்த நிலையில் இருப்பவர் மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்…..” என்று சாடவே லாக்கோஜி ஜாதவ்ராவுக்கு மனைவி சொல்வது சரியென்றே தோன்றியது.

மறுநாள் அவர் மாளிகையில் நடக்க இருந்த விருந்துக்கு அனைவரையும் அழைத்த போது மாலோஜியையும் அழைத்தார். விருந்தின் போது நாசுக்காகச் சொல்லி அவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் விருந்துக்கு அழைப்பு விடுத்த போதே, “சம்பந்தம் முடியாமல் உங்கள் வீட்டு விருந்தில் கைநனைப்பது சரியாக இருக்காது” என்று மாலோஜி சொல்லவே லாக்கோஜி ஜாதவ்ராவ் அன்று அப்படிச் சொன்னது விளையாட்டாகத் தான் என்றும் திருமண எண்ணம் தனக்கு இல்லை என்பதையும் வெளிப்படையாகவே  தெரிவித்து விட்டார். உடனே தான் அவமானப்பட்டதாய் நினைத்த மாலோஜி அவரை மற்போருக்கு அழைத்தார். அவமானப்படுத்தப்படுவதாய் நினைக்கும் வீரர்கள் இப்படி தன்னுடன் தனியாக யுத்தம் செய்வதற்கு அழைப்பு விடுவது அக்காலத்தில் சகஜமாய் இருந்தது. இதைக் கேள்விப்பட்ட சுல்தான் முதலாம் நிஜாம் ஷா இருவரையும் வரவழைத்து நடந்ததை எல்லாம் கேட்டறிந்தார். அந்தஸ்து தானே பிரச்னை என்று சொல்லி உடனே 5000 குதிரைகள் கொண்ட படைக்குத் தலைவனாக மாலோஜியை உயர்த்தி, இரண்டு கோட்டைகள் தந்து கவுரவத்திலும் உயர்த்தி, இனி திருமண ஏற்பாடுகள் நடக்கட்டும் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு மறுக்க முடியாமல் லாக்கோஜி ஜாதவ்ராவ் சம்மதித்தார்.  அரசரே நேரடியாக வந்து வாழ்த்த ஷாஹாஜி – ஜீஜாபாய் திருமணம் விமரிசையாக நடந்தது. ஆனாலும் பழைய பகை முழுவதுமாக முடிந்து விடாமல் இரு குடும்பங்களுக்குள் புகைந்து கொண்டே இருந்தது.

அரசியல் சதுரங்கத்தில் ஷாஹாஜி அகமதுநகரின் சுல்தான் பக்கம் தீவிரமாகப் பிற்காலத்தில் சென்றுவிட லாக்கோஜி ஜாதவ்ராவ் ஷாஜஹானின் முகலாயப் படையினர் பக்கம் தீவிரமாகச் செயல்பட்டார். உறவின் நெருக்கத்தை முற்றிலுமாக இரண்டு பக்கமும் உதறித் தள்ளியது. இருபக்கமும் தீவிரப் பகைவர்களானார்கள். ஜீஜாபாய்க்குப் பிறந்த வீட்டுடன் இருந்த தொடர்பு என்றென்றைக்குமாய் அறுந்து போனது. அவள் தன் பெற்றோரைக் கண்டு பல வருடங்கள் ஆகி விட்டன…..  தற்போது மஹூலிக் கோட்டையை முற்றுகை இட்டிருந்த படைக்குத் தலைமை வகித்திருந்தது லாக்கோஜி ஜாதவ்ராவ் தான். தப்பித்து வந்த அவர்களைத் தொடர்ந்து வந்திருப்பதும் அவர் தான். ஆறு மாத முற்றுகையிலும் சரி, இப்போதும் சரி, அவர் தன் மகளும் உள்ளே இருக்கிறாள் என்று ஒரு முறையாவது யோசித்திருப்பாரா என்று ஜீஜாபாய் நினைத்துப் பார்த்தாள்….. உண்மை கசந்தது.!
  


ஸ்ரீனிவாசராவ் ஷாஹாஜியை வரவேற்ற விதத்தில் ஷாஹாஜியின் மாமனாரை வரவேற்கத் துணியவில்லை. லாக்கோஜி ஜாதவ்ராவ் படையினருடன் ஷிவ்னேரி கோட்டை வாயிலுக்கு வந்து சேர்ந்த போது ஸ்ரீனிவாசராவ் கோட்டை வாசலில் காத்து நின்று வரவேற்றார். 

லாக்கோஜி ஜாதவ்ராவ் அந்த வரவேற்பில் மயங்கி விடவில்லை. ஸ்ரீனிவாசராவ் போன்ற மனிதர்களை அவர் நன்றாக அறிவார். செய்யும் தவறுகளை மரியாதையால் மறைக்க முற்படும் ஆட்கள் இவர்கள்….

“என்ன ஸ்ரீனிவாசராவ் மரியாதை எல்லாம் தடபுடலாக இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கையில் நீ செய்திருக்கும் தவறும் இதே அளவில் இருக்கும் போலத் தெரிகிறதே” என்று வெளிப்படையாகவே அவர் கேட்டார்.

“மரியாதைகளை தகுதி உடையவர்களுக்கு எப்போதும் அளிக்கும் பழக்கம் உடையவன் பிரபுவே நான். தங்கள் வயதுக்கும், அறிவுக்கும் பண்புக்கும் அளிக்கும் மரியாதையை இப்படிக் கொச்சைப்படுத்துகிறீர்களே” என்று ஸ்ரீனிவாசராவ் வருத்தத்தைக் காட்டினார்.

“உன்னை அறிந்தவன் என்பதால் சந்தேகப்பட்டேன். அது போகட்டும். உள்ளே எதிரி இருக்கிறானா?”

“உங்கள் எதிரியை உள்ளே விடும் அளவு என்புத்தி இன்னும் கெட்டு விடவில்லை பிரபுவே. அப்படி யாரையும் நான் உள்ளே அனுமதிக்கவில்லை”

”சில நாழிகைகளுக்கு முன் எதிரியை நீர் உள்ளே அனுமதித்ததை நேரில் கண்டதாய் என் ஒற்றர்கள் சொன்னார்களே”” லாக்கோஜி ஜாதவ்ராவ் ஸ்ரீனிவாசராவைக் கூர்ந்து பார்த்தபடியே கேட்டார்.

“அதை நான் மறுக்கிறேன் ஐயா. இன்று தங்கள் மருமகனைத் தவிர வேறு வெளியாட்கள் யாரும் இந்தக் கோட்டைக்குள் புகவில்லை பிரபு” சொல்லும் போது முகத்தை வெகுளியாய் ஸ்ரீனிவாசராவ் வைத்துக் கொண்டார்.

லாக்கோஜி ஜாதவ்ராவின் முகம் உடனே கருத்தது. “அவனை என் மருமகனாக நான் அங்கீகரிக்கவில்லை ஸ்ரீனிவாசராவ். அப்படிப்பட்டவனை உன் கோட்டைக்குள் அனுமதித்ததோடு என் மருமகன் என்று சொல்லி என்னை அவமதிக்கவும் செய்கிறாய். இந்தக் குற்றத்திற்காகவே உன் நாக்கை அறுத்தாலும் தப்பில்லை….”

“அங்கீகரிக்க மறுப்பதால் உறவுகள் இல்லாமல் போய் விடுவதில்லை பிரபு. அவர் தனியாக வந்திருந்தால் உங்கள் எதிரணியில் இருப்பதால் எதிரி என்று நினைத்திருப்பேன். ஆனால் உங்கள் மகள் மற்றும் பேரப்பிள்ளையோடு அவர் வந்ததால் தான் உறவை வைத்தே அவரை அனுமதித்தேன்…..”

மகளையும் பேரனையும் பற்றிச் சொன்னதால் லாக்கோஜி ஜாதவ்ராவ் சற்று மென்மையானது போல் தோன்றியது. ஆனாலும் அவர் அவர்களைப் பற்றி எதுவும் கேட்காமல் “அவன் உள்ளே தான் இருக்கிறானா….” என்று சந்தேகத்தோடு அவர் தன் எதிரியையே விசாரித்தார்.

“இல்லை ஐயா அவர் போய் விட்டார். அதையும் தங்கள் ஒற்றர்கள் தங்களிடம் கண்டிப்பாகத் தெரிவித்திருப்பார்கள். உள்ளே தங்கள் மகள் மட்டும் தான் இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியான தங்கள் மகளை உடன் அழைத்துச் செல்வது அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பயப்பட்டு அவருக்கு மட்டும் தான் ஷாஹாஜி அடைக்கலம் கேட்டார். பெண்மையையும், தாய்மையையும் போற்றும் மரபில் வந்த எனக்கு மறுக்க முடியவில்லை. மேலும் ஒருவேளை நான் மறுத்து அனுப்பி விட்டால், அழைத்துச் செல்லும் வழியில் கர்ப்பிணியான உங்கள் மகளுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால் உங்கள் கோபத்திற்கும் ஆளாக வேண்டி வருமே என்பதாலும் தான் நான் சம்மதித்தேன்….”

(தொடரும்)
என்.கணேசன்
(பொங்கல் திருநாளையொட்டி சத்ரபதி-3 அடுத்த திங்கட்கிழமைக்குப் பதிலாக அடுத்த ஞாயிறு 14.01.2018 அன்று மாலையே பதிவாகும்)

Thursday, January 4, 2018

இருவேறு உலகம் – 64


னோகர் சொன்னான். ”முதலமைச்சர் ஆக இப்பவே தயாராக ஆரம்பிச்சிடுங்க”

“தொண்டர்கள் கிட்டயும், மக்கள் கிட்டயும் என்னையும் விட கமலக்கண்ணன் தான் பிரபலம்….” மாணிக்கம் தனக்கிருக்கும் பாதக சூழ்நிலையைச் சொன்னார்.

“அவங்களப் பத்தி கவலைப்படாதீங்க. அவங்க மீடியால என்ன சொல்றாங்களோ அதைத்தான் நம்புவாங்க. மீடியா முழுசும் நாம கண்ட்ரோல் பண்ணிக்கலாம்…. நான் சொன்ன மாதிரி எம் எல் ஏக்கள நம்ம பக்கம் சாய்க்க மட்டும் பணத்தை ரெடி பண்ணுங்க” மனோகர் அமைதியாகச் சொன்னான்.

“கமலக்கண்ணன்?”

“அந்த ஆள் செண்டிமெண்ட்ல இருப்பாரு. ராஜதுரை பிழைச்சிக்க பிரார்த்தனை பண்ணுவாரு. அவர் மனசுல இப்போதைக்கு வேற எதுவும் ஓடாது”

“உதய் அவங்கப்பா மாதிரி இல்லை….. விவரமானவன்….”

“அவனுக்கும் ராஜதுரை சாவார்னு நிச்சயமா தெரியாது. அவன் உஷாராகறதுக்குள்ள காதும் காதும் வச்ச மாதிரி காரியத்தை முடிச்சுடுங்க”

”அப்படின்னா ராஜதுரை உடனடியா செத்துட மாட்டானா?” சங்கரமணி கேட்டார்.

“உடனடியா சாக மாட்டார். தீவிர சிகிச்சைல இருப்பார். டாக்டர்கள் நாம தயாராகற வரைக்கும் அப்பப்ப ஒரு அறிக்கை கொடுத்துட்டிருப்பாங்க….”

சங்கரமணி மனதில் நினைத்துக் கொண்டார். “எமகாதகனா இருப்பான் போல இருக்கே. படிப்படியா யோசிச்சு வெச்சிருக்கான்…”.

“பதிலுக்கு க்ரிஷைக் கொல்ல உதவணுமா?” மாணிக்கம் மெல்லக் கேட்டார். கூட வேறு எதாவது கேட்டு விடுவானோ என்ற பயம் அவருக்கு இருந்தது.

மனோகர் ஏளனமாகச் சிரித்தான். “முதலமைச்சரையே முடிச்சுக்கட்டற எங்களுக்கு க்ரிஷைக் கொல்ல உங்க உதவி தேவைன்னு நினைக்கிறது உங்களுக்கே ஓவரா தெரியலையா? க்ரிஷை எப்படி டீல் பண்றதுன்னு அப்புறம் யோசிப்போம். அதுக்கு முன்னாடி உங்களை முதலமைச்சராக ஆக்கறதுக்கு எங்களுக்கு வர வேண்டியதைப் பேசுவோம்….”

“எவ்வளவு கோடி வேணும்?” மாணிக்கம் கேட்டார்.

“சம்பாதிக்கறதுல பாதி அப்பப்ப தந்துகிட்டே இருக்கணும்…..”

பிளந்த வாயை மூட சங்கரமணிக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. மாணிக்கமும் இது மிக அதிகமில்லையா என்பது போல் பார்த்தார்.

“எங்களுக்குப் பாதி தந்தால் கூட மீதி இருக்கிறது, நீங்கள் இது வரைக்கும் சம்பாதிச்சிட்டிருக்கிறதுக்கு ரெண்டு மடங்கா இருக்கும்…..”

மாணிக்கம் மாமனைப் பார்த்தார். சங்கரமணி கணக்கு சரி தான் என்பது போல் தலையசைத்தார். அவருக்கு மெல்ல அவனை ஆழம் பார்க்காமல் இருக்க முடியவில்லை. “ஒருவேளை எங்களுக்குத் தர முடியாத நிலைமை வந்தா?”

மனோகர் அலட்டாமல் சொன்னான். “இன்னொரு முதலமைச்சர் சாவார்”

இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. சங்கரமணி எச்சிலை விழுங்கிக் கொண்டு சொன்னார். “சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்”

“நான் சும்மா சொல்லலை” என்றான் அவன்.

மாணிக்கம் சொன்னார். “நான் உங்க குறி க்ரிஷ்னு தான் நினைச்சேன்”

“அவன் தான் எங்க குறி. ஆனால் அவனை டீல் பண்றதுல நிறைய யோசிக்க வேண்டி இருக்கு. அதான் பின்னாடி பாத்துக்குவோம்னு சொன்னேன். பின்னே ஒருத்தனுக்கு எக்கச்சக்கமா சம்பாதிக்க உதவினா திரும்ப அதுக்கேத்த மாதிரி வாங்கிக்கறது தான் வியாபாரத்துல ஒரு மரியாதை”

சங்கரமணி மெல்லக் கேட்டார். “அப்படின்னா எம் எல் ஏக்களை வாங்கற செலவுலயும் பாதி தருவீங்களா?”

“தர மாட்டோம். அதே மாதிரி முதலமைச்சரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பறது, டாக்டர்களை அறிக்கை தர வைக்கிறது இதுக்கெல்லாம் ஆகிற செலவுல நீங்களும் எதுவும் தரவேண்டியது இல்லை. சரி தானே”

சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் மாணிக்கம் சொன்னார். “சரி தான்”

”இந்த ஒப்பந்தத்துல வேறயும் சில நிபந்தனைகள் இருக்கு” மனோகர் சொன்னான்.

சங்கரமணி மனதிற்குள் கூவினார். ’இன்னும் என்னடா?’ மாணிக்கமும் என்ன என்பது போல் அவனைப் பார்த்தார்.

மனோகர் சொன்னான். “இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் மாஸ்டரை நீங்க யாரும் சந்திக்கக் கூடாது…”

சங்கரமணி சத்தமாகவே சொன்னார். “அதுவும் சரிதான். சந்திச்சா அந்த ஆள் எல்லாத்தையும் நம்ம மனசுல இருந்தே தெரிஞ்சுக்குவார். அது தேவை இல்லாத இம்சை….”

மாணிக்கம் மெல்லக் கேட்டார். “ஒருவேளை அவராய் எங்களைச் சந்திக்க வந்தால் என்ன செய்யறது?”

“அவரா வர மாட்டார்.” மனோகர் உறுதியாய் சொன்னான்.

“அந்த ஆள் உங்களுக்கு எதிரியோ?” மெல்ல சங்கரமணி கேட்டுப் பார்த்தார். ஆனால் அவருக்குப் பதில் சொல்வது அவசியம் என்று அவன் நினைக்கவில்லை. அவன் கிளம்ப எழுந்து நின்றான்.

சங்கரமணி டீப்பாயில் இருந்த புகைப்படத்தைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு மனோகரிடம் சொன்னார். “நண்பன்னு சொன்னீங்க. பிசினஸ்லயும் பார்ட்னராயிட்டோம். அப்படி இருக்கறப்ப இந்த ஃபோட்டோ செட்டை எங்க கிட்ட குடுத்துடறது தானே நியாயம்”

“உங்களை எங்க நண்பர்களாவே இருக்க வைக்க அந்த ஃபோட்டோஸ் உதவும். அதனால அது என் கிட்டயே இருக்கட்டும். நீங்கள் நண்பர்களாகவே இருக்கற வரைக்கும் அது வெளியே யார் கைக்கும் கிடைக்காது. நான் கிளம்பட்டுமா?”

அவன் போய் விட்டான். மாமனும், மருமகனும் சிறிது நேரம் பல சிந்தனைகளுடன் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். சங்கரமணி மெல்ல அந்தப் புகைப்படத்தைக் கை நடுங்க எடுத்தார். ”இந்தப் போட்டோ மலை மேல் இருந்து எடுத்த மாதிரி இருக்கு. இதை அந்த க்ரிஷே தான் எடுத்துருக்கணும். அந்த அமாவாசை ராத்திரில வேற எந்த லூசும் அங்கே இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அவன் மாயாவி வேலை எல்லாம் பாக்கறான்….. என்ன ஆராய்ச்சியோ என்ன இழவோ….. அவன் எடுத்த ஃபோட்டோன்னா இவன் கைல இது எப்படிக் கிடைச்சுது? எனக்கு மண்டையே வெடிக்கற மாதிரி இருக்கு மாணிக்கம். அன்னைக்கு என்ன நடந்துது…. இன்னைக்கு என்ன நடக்குது….. ஒன்னுமே புரிய மாட்டேங்குது….”

மாமனின் புலம்பலுக்கு மாணிக்கம் பதில் சொல்லவில்லை. வந்தவனுக்கு எதிராக அவர்கள் இயங்காத வரை அவன் அதை வெளியே விட மாட்டான் என்பதால் அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதற்கு அவசியமில்லை என்று நம்பினார். அவர் மனம் இன்னொரு சந்தேகத்தில் நிலைத்து நின்றது. முதலமைச்சராக இருக்கிற ராஜதுரைக்கு இருக்கும் பலத்த பாதுகாப்பை மீறி யார் உள்ளே போக முடியும். அப்படிப் போனாலும் ஒரேயடியாகக் கொல்லாமல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு அனுப்பும் அளவு மட்டும் ஆரோக்கியத்தைக்  கெடுப்பது மேலும் கஷ்டமான காரியமல்லவா? இந்த ஆள் எப்படி சாதிப்பான்? இதெல்லாம் நடக்கிற காரியம் தானா? ஒருவேளை இவனோ இவன் ஆளோ அந்த முயற்சியில் மாட்டிக் கொண்டால்….? நினைக்கவே நடுங்கியது…


ராஜதுரைக்கு அன்றிரவு நீண்ட நேரம் உறக்கம் வரவில்லை. சங்கரமணி சம்பந்தமாக செந்தில்நாதன் தந்து விட்டுப் போன தகவல்கள் அவரை மிகவும் பாதித்தன. செந்தில்நாதன் சொன்னது போல் அந்த ஆள் எந்தக் கெட்டதிலும் சம்பந்தப்பட சாத்தியம் இருந்தால் கண்டிப்பாய் சம்பந்தப்படுபவர். இது வரை அந்த ஆள் மீது வந்திருக்கும் புகார்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு வாடகைக் கொலையாளியை க்ரிஷ் மீது ஏவும் அளவு இறங்கியிருந்தால் கண்டிப்பாக அதைச் சும்மா விடக்கூடாது. க்ரிஷுக்கு எதாவது ஆகியிருந்தால்,,,, நினைத்துப் பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. இதில் மாணிக்கத்திற்குப் பங்கிருக்குமா என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. புத்திசாலி என்றாலும், கமலக்கண்ணன் அளவு நேரான ஆள் மாணிக்கம் இல்லை என்பதை அவர் அறிவார்.  இந்தச் சம்பவம் நடந்த போது மாணிக்கம் வெளிநாடு போயிருந்ததால் அவருக்குத் தெரியாமல் இது நடந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஒருவேளை தெரிந்தே நடந்திருந்தால் என்கிற கேள்வி அவரைத் தூங்க விடவில்லை. செந்தில்நாதனிடம் இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி சொல்லி இருந்தார். மாணிக்கத்திடமும் போன் செய்து நாளை காலை கட்சி அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். சங்கரமணி குறித்து ஒரு உறுதியான முடிவை எடுத்தாக வேண்டும் என்பதைக் கறாராகச் சொல்ல நினைத்திருக்கிறார்…..

அவர் அறைக்குள் யாரோ நுழைந்தது போல் இருந்தது. யார் என்று பார்க்கத் திரும்பினார். யாரும் தெரியவில்லை. ஆனால் யாரோ மறைந்து இருப்பது போன்ற உணர்வு தோன்றியது. அடுத்த கணம் அவரை எதோ ஒரு சக்தி கட்டிப் போட்டது. கைகாலை அசைக்க முடியவில்லை.  சிறிது சிறிதாக அவர் சுயநினைவை இழக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

Wednesday, January 3, 2018

உங்களிடம் இருப்பது தன்னம்பிக்கையா? தலைக்கனமா?

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது. உங்களிடம் இருப்பது தன்னம்பிக்கையா? தலைக்கனமா? காணுங்கள் இந்தக் காணொளியில்....





என்.கணேசன்

Monday, January 1, 2018

சத்ரபதி – 1


ஷிவ்னேரி கோட்டை மேல்தளத்தில் இருந்த சிறப்புக் காவலன் வெகுதூரத்தில் எறும்புகளாய் ஊர்ந்து வந்து கொண்டிருக்கும் உருவங்களைக் கண்களைச் சுருக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கூர்மையும் அனுமானத் திறமையும் அபாரமானது. நகரும் வேகத்தைப் பார்க்கையில் அவர்கள் குதிரைகளில் மிக வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வருபவர்கள் நண்பர்களா, பகைவர்களா என்று தெரியவில்லை. யார் என்பது அவர்களை முந்திக் கொண்டு அவர்களை விட வேகமாக ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கும் ஒற்றன் மூலம் தெரிந்து விடும். வருபவர்களின் எண்ணிக்கை அறுபதிலிருந்து எண்பதற்குள் இருக்கும் என்று சிறப்புக் காவலனுக்குத் தோன்றியது. இந்த வேகத்திலேயே வந்தார்களானால் ஒன்று அல்லது ஒன்றே கால் நாழிகைக்குள் இங்கு வந்து சேர்ந்து விடுவார்கள் என்று கணக்குப் போட்டவன் கூக்குரலிட்டு கீழ்த் தளத்தில் இருந்து இரு காவலர்களை மேல் தளத்திற்கு வரவழைத்தான். அவர்களைக் காவலுக்கு நிறுத்தி விட்டு கோட்டைத் தலைவருக்குத் தகவல் தர விரைந்தான். போகிற வழியில் அவன் மற்ற காவலர்களையும் எச்சரிக்கை செய்ய அபாய மணி அடிக்கப்பட்டது. கோட்டையின் நூற்றுக் கணக்கான காவலர்கள் அவரவர் காவல் இடத்திற்கு தங்கள் ஆயுதங்களுடன் விரைந்தார்கள். அந்தக் காவலன் கோட்டைத் தலைவரின் இருப்பிடத்தை அடைவதற்கு முன், அபாய மணி ஓசை கேட்டு அவரே வேகமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவன் தகவலை அவரிடம் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டே அவர்  கோட்டையின் மேல்தளத்திற்கு விரைந்தார்….

நம் கதைக்களக் காலமான பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதத்தின் தக்காணப் பீடபூமி மூன்று சுல்தான்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அகமதுநகர், பீஜாப்பூர், கோல்கொண்டா என்ற அந்த மூன்று பகுதி சுல்தான்களும் மாறி மாறித் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும், சமாதானமாய் போய்க் கொண்டும் வாழ்ந்த காலம் அது. அவர்கள் ராஜ்ஜியத்துக்குள்ளேயே பல உள்நாட்டுக் கலவரங்களும் வெடிக்கும். அதில் மற்ற சுல்தான்களின் பங்கும் இருக்கும். அதை அடக்குவது, மற்றவர்களுடன் போரிடுவது, வெற்றி தோல்விகளின் முடிவில் தங்கள் ராஜ்ஜியத்தின் சில பகுதிகளையும், குதிரைகள் யானைகளையும், பெரும் செல்வத்தையும் தந்தும், எடுத்துக் கொண்டும், சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்வது தொடர்ந்து நடக்கும். எந்த உடன்படிக்கையும் நீண்டகாலம் நீடிக்காது. தோற்றவன் வலிமையை வளர்த்துக் கொண்டவுடன் மறுபடி போருக்குக் கிளம்பி பழைய சரித்திரம் சிறு சிறு மாறுதல்களுடன் திரும்பத் திரும்ப எழுதப்படும். இவர்களுடன் கூட்டுச் சேரவும், சண்டையிடவும் அடிக்கடி வடக்கிலிருந்து முகலாயப் பேரரசின் ஒரு படையும் வந்து சேரும். இவர்களுக்கிடையே அணிகள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்தக் காலத்தில் இவர்கள் மட்டுமல்லாமல் சிலர் தனிப்படைகள் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள் போல அங்கங்கே இவர்களுக்கு நடுவில் இருந்தார்கள். அவர்களும் ஒருசில கோட்டைகள், படைகள், வைத்துக் கொண்டு சுயேச்சையாக இயங்கி வந்தார்கள். அவர்களும் தங்களுடைய இலாப நஷ்டங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கூட்டணி வைத்துக் கொள்வதும், பிரிவதும், அணி மாறுவதுமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு தனிப்படையின் தலைவர் தான்  ஷிவ்னேரிக் கோட்டையின் தலைவரான ஸ்ரீனிவாசராவ். 

அவர் கைவசம் இருந்த இந்த ஷிவ்னேரிக் கோட்டை வலிமையான கோட்டைகளில் ஒன்று. பூனாவில் இருந்து சுமார் 56 மைல் தொலைவில் இருந்த இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் குடும்பங்கள் அடைக்கலம் புகலாம். அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை வெளியுதவி இல்லாமல் அவர் அந்தக் கோட்டையில் அடைக்கலம் தர முடியும் அளவு நிதி நிலைமையும், தன்னிறைவான அமைப்பும் இருந்தது.

இப்படி சுல்தான்களும், முகலாயப் பேரரசரும், தனிப்படைத் தலைவர்களும் விளையாடும் இந்த சரித்திரக் களத்தில் யாருக்கும் யாரும் நிரந்தர நண்பர்களும் அல்ல, நிரந்தரப் பகைவர்களும் அல்ல. இன்றைய நண்பன் நாளைய பகைவனாகலாம். எதிர்கால நண்பனாக மறுபடி மாறலாம். அதே போல் இன்றைய பகைவன் நாளைய கூட்டாளியாகலாம். எதிர்கால எதிரியாக மறுபடியும் மாறலாம். இங்கே மாற்றம் ஒன்றே நியதி. அப்போதைய லாபம் ஒன்றே குறிக்கோள். எல்லோருக்குமே எதிர்காலம் நிச்சயமில்லாத ஒன்றாய் இருந்ததால் எதிர்காலத்தைப் பற்றி யாரும் பெரிதாய் சிந்தித்ததில்லை. எதிர்காலம் என்று ஒன்றிருந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்….


ஸ்ரீனிவாசராவ் கோட்டையின் மேல்தளத்திற்குச் சென்று சேர்ந்த போது குதிரையில் வேகமாகக் கோட்டை வாசலில் வந்திறங்கிய ஒற்றன் “வருவது ஷாஹாஜி போன்ஸ்லே” என்று கத்தினான். 

ஷாஹாஜி போன்ஸ்லே அகமதுநகர சுல்தான் நிஜாம்ஷாவிடம் படைத்தளபதியாக இருப்பவர். அகமதுநகர் அரசின் தற்போதைய சுல்தான் இரண்டாம் நிஜாம் ஷா சொந்த புத்தி இல்லாதவனாகவும், பலவீனமானவனாகவும்  இருந்ததோடு நல்ல அறிவுரைகளை ஏற்கவும் தெரியாதவனாக இருந்ததால் ஷாஹாஜி போன்ஸ்லே பல சிரமங்களை உணர்ந்து வந்தார். இதனிடையே முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் பெரும்படை ஒன்று அகமதுநகர மஹூலிக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தது. ’கூடுமான வரை ஆறு மாத காலம் வீரத்தோடு தாக்குப் பிடித்த ஷாஹாஜி போன்ஸ்லேயால் முகலாயப் பெரும்படையை அதற்கு மேல் தாக்குப்பிடித்திருக்க வழியில்லை. அதனால் அவர் தான் தப்பித்து வந்து கொண்டிருக்கிறார்…..!’ அதை யூகித்து, வருவது எதிரியல்ல என்பதால் ஸ்ரீனிவாசராவ் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கூடவே இந்த மனிதரிடம் எந்த வகையில் ஆதாயம் பெறலாம் என்கிற சிந்தனை ஸ்ரீனிவாசராவின் மனதில் ஓட ஆரம்பித்தது. பல வருடங்களாக ஷாஹாஜி போன்ஸ்லேயும் அவரும் ஒருவரை ஒருவர் நன்றாக அறிவார்கள், பல களங்களில் ஒரே அணியில் சேர்ந்து போராடி இருக்கிறார்கள் என்றாலும் தற்போதைய சூழ்நிலையைக் கொள்முதலாக்க எண்ணியபடியே அவர் காவலாளிகளுக்கு ஷாஹாஜி போன்ஸ்லேயை வரவேற்று அழைத்துவர உத்தரவிட்டு தன் சிறு மாளிகைக்குத் திரும்பினார். 

சிறிது நேரத்தில் ஷாஹாஜி போன்ஸ்லேயும் அவரது ஆட்களும் ஷிவ்னேரிக் கோட்டை வாசலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாஹாஜியின் மனைவி ஜீஜாபாயும், அவர்களுடைய நான்குவயது மகன் சாம்பாஜியும்  இருந்தார்கள். ஷாஹாஜியும், அவர் மனைவி ஜீஜாபாயும், சாம்பாஜியும் மிகுந்த மரியாதையுடன் காவலர்களால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்ரீனிவாசராவும் குடும்பத்தினரும் அவர்களது சிறு மாளிகையின் வாசலில் அவர்களை வரவேற்க நின்றிருந்தனர். ஸ்ரீனிவாசராவும், ஷாஹாஜியும் அணைத்து அன்பைத் தெரிவித்துக் கொண்டார்கள். மனைவியையும், சாம்பாஜியையும் ஸ்ரீனிவாசராவ் குடும்பத்தினரின் உபசரிப்பில் விட்டு விட்டு ஷாஹாஜி ஸ்ரீனிவாசராவைத் தனியறைக்கு அழைத்துச் சென்றார்.

“என்ன நண்பரே. தாக்குப்பிடிக்க முடியவில்லையா?” ஸ்ரீனிவாசராவ் கவலையுடன் கேட்டார்.

“ஆம் நண்பரே, ஒரு தற்காலிகப் பின்னடைவு. இந்தச் சூழலில் உங்களிடம் ஒரு உதவியைத் தேடி வந்திருக்கிறேன். நண்பரே” ஷாஹாஜி உடனடியாக விஷயத்துக்கு வந்தார். ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானதாக இருப்பதாலும், உயிரைப் பணயம் வைத்துக் கிளம்பிய பயணத்தின் இடையே இருப்பதாலும் மற்ற உபசார வார்த்தைகள் பேச அவருக்கு நேரமில்லை.

“சொல்லுங்கள் நண்பரே. தக்க சமயத்தில் உதவுவதற்காக அல்லவா நண்பர்கள் இருக்கிறார்கள்” என்றார் ஸ்ரீனிவாசராவ்.

“என் மனைவியை இங்கே விட்டுச் செல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். நிறைமாத கர்ப்பிணியை நான் இவ்வளவு தூரம் குதிரையில் அழைத்து வந்திருப்பதே ஆபத்து. இனியும் அவளை என்னோடு அழைத்துப் போவது அவள் உயிருக்கும் சிசு உயிருக்கும் ஆபத்தாகவே முடியும். அதனால் சில மாதங்கள் அவள் இங்கிருக்கட்டும்….. பின் அவளை அழைத்துச் செல்கிறேன்….”

ஸ்ரீனிவாசராவ் யோசிப்பது போல் காட்டினார். பின் தயக்கத்துடன். “அடைக்கலம் கொடுத்திருப்பது முகலாயர்களுக்குத் தெரிந்தால் ……” என்று இழுத்தார். இது பேரத்தின் துவக்க வார்த்தை என்பது தெரிந்த போதிலும் ஷாஹாஜிக்கு அது வருத்தம் தரவில்லை. இங்கே மகான்களும், உத்தம புருஷர்களும் இல்லை. தங்கள் லாப நஷ்டக்கணக்கிலேயே கண்ணாய் இருக்கும் மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்…! பேரம் பேச அதிக காலம் தன்னிடம் இல்லாததால் ஷாஹாஜி தங்க நாணயங்கள் நிரப்பியிருந்த இரு சிறு பட்டுத்துணி மூட்டைகளை உடனடியாக எடுத்துத் தந்தார். நிலைமை சரியானவுடன் 500 குதிரைகள் தருவதாகவும் வாக்குத் தந்தார். ஓரளவு திருப்தியுடன் ஸ்ரீனிவாசராவ் மெல்லத் தலையசைத்தார்.

“நன்றி நண்பரே! மீண்டும் நல்லதொரு சூழலில் சந்திப்போம். இப்போது விரைகிறேன்…..” என்று கூறி ஸ்ரீனிவாசராவை மீண்டும் ஒரு முறை தழுவி ஷாஹாஜி கிளம்பினார்.

மனைவியிடம் வந்த ஷாஹாஜி “உனக்கு இங்கே பரிபூரண பாதுகாப்பு கிடைக்கும். உன் பாதுகாப்புக்கும் சேவை புரிவதற்கும் நம்பிக்கைக்குரிய இருபது பேரை இங்கே விட்டுப் போகிறேன் ஜீஜா. நிலைமை சரியானவுடன் உன்னை அழைத்துக் கொள்கிறேன். பத்திரமாக இரு. நீ வணங்கும் இறைவன் உனக்குத் துணை இருப்பான்….” என்று சொல்ல ஜீஜாபாயின் கண்கள் கலங்கின. அவள் பேச வார்த்தைகள் வராமல் தலையை மட்டும் ஆட்டினாள்.

மகன் சாம்பாஜியை ஷாஹாஜி தூக்கிக் கொண்டது செல்வதற்கு முன் அவனை ஒரு முறை கொஞ்சி விட்டுத் திருப்பித் தரத்தான் என்று நினைத்த ஜீஜாபாய் ஷாஹாஜி “எங்களுக்கு விடைகொடு ஜீஜா” என்றவுடன் துணுக்குற்றாள்.

நான்கு வயதுக் குழந்தையையும் அவர் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதை சாஹாஜி அவளிடம் முன்பே தெரிவித்திருக்கவுமில்லை.

“குழந்தையை எதற்காக அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று குரலடைக்க ஜீஜாபாய் கேட்டாள்.

“அவன் உன்னுடன் இருப்பது அவனுக்கும் ஆபத்து, உனக்கும் ஆபத்து ஜீஜா. அவனைப் பணயக்கைதியாய்ப் பிடித்து வைக்க எதிரிகள் கண்டிப்பாக முயற்சி செய்வார்கள். அவனை வைத்தே என்னை வரவழைக்கப் பார்ப்பார்கள்……”

ஷாஹாஜி சொன்னது உண்மை தான். போரில் பணயக்கைதியாகப் பிள்ளைகளை வைத்துக் கொள்வது அக்காலத்தில் சர்வசகஜம். மனைவியைப் பணயக்கைதியாகப் பிடித்தால் அது பல நேரங்களில் எந்தப் பலனையும் அளிப்பதில்லை. கணவன் இன்னொருத்தியை மணந்து கொண்டு பாதிப்பே இல்லாமல் வாழ்வைத் தொடர்வது சகஜமாக இருந்தது. ஆனால் பிள்ளைகள் என்ற போது தந்தைகள் ரத்தபாசத்தினால் வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு வந்தே ஆகும் சூழல் இருந்தது.  அந்த உண்மையையும் மீறிய இன்னொரு உண்மை - ஷாஹாஜி தன் மூத்த பிள்ளை சாம்பாஜி மேல் உயிரையே வைத்திருந்தார் என்பது தான். அவனை விட்டுப் பிரிந்திருக்க அவரால் முடியாது என்பதாலேயும் தான் அவனை கூட்டிச் செல்கிறார். சாம்பாஜிக்கும் தந்தையுடன் பயணம் போவதில் எப்போதுமே மகிழ்ச்சி தான். ஜீஜாபாய் மறுத்து எதுவும் சொல்ல முடியாமல் கனத்த மனதுடன் தலையசைத்தாள். ஷாஹாஜி வேகமாகச் செல்ல அவளும் கோட்டை வாசல் வரை கூடவே வேகமாகப் போனாள். வைத்த ஒவ்வொரு காலடியிலும் அவள் மனதின் கனம் கூடிக் கொண்டே போனது.

ஷாஹாஜி வெளியே குதிரை ஏறிய போது சாம்பாஜி திரும்பித் தாயைப் பார்த்தான். தாய் தங்களோடு வராமல் கோட்டை வாசலிலேயே நிற்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் பிஞ்சுக் கைகளை ஆட்டி தாயை வரச் சொன்னான். “அம்மா நீயும் வா”

ஜீஜாபாயின் கண்கள் குளமாயின. பார்வையிலிருந்து அவள் கணவனும் பிள்ளையும் சென்று மறையும் முன்பே கண்ணீர்த் திரை முந்திக் கொண்டு மறைத்தது….. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் பார்த்த போது அவர்கள் நீண்ட தொலைவை அடைந்திருந்தார்கள். இருட்ட ஆரம்பித்திருந்தது. அவள் இதயம் வெடித்து விடும் போலிருந்தது. சோகத்துடன் கோட்டைக்குள் திரும்ப நுழைந்தாள்…..

ஒன்றரை நாழிகை நேரம் கழித்து எதிரிப்படையினர் ஷிவ்னேரிக் கோட்டையை நோக்கி வந்து கொண்டிருப்பதை ஒரு ஒற்றன் ஸ்ரீனிவாசராவிடம் தெரிவித்தான்…

(தொடரும்)

என்.கணேசன்



இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV