என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 17, 2026

ரட்சகன் 5

 


காலம் பொன் போன்றது என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ராஜேஷ்வருக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தும். சில நிமிடங்களில் அவர் பல நூறு கோடி ரூபாய்களைச் சம்பாதித்ததும் உண்டு. சில நிமிடங்களில் அவர் பல நூறு கோடி ரூபாய்களை இழந்ததும் உண்டு. அவருடைய முடிவுகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் பொருளாதாரத்தையும் பல்லாயிரம் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்க வல்லவை. அவர் முடிவெடுக்கும் ஒவ்வொரு வினாடியும் ஏராளமானவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் விதமாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கும். அதனாலேயே அவருக்கு வழக்கமான வியாபார சம்பந்தமான விஷயங்களைத் தவிர மற்றவற்றைக் கவனிக்கவும் நேரம் இருப்பதில்லை.

 

அப்படிப்பட்டவர் உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் மகள் தந்திருந்த பேட்டிக் கட்டுரையை முழுவதுமாகப் படிக்க அன்று நேரத்தை ஒதுக்கினார். சில வரிகளை இரண்டு முறை படித்தார். சில வரிகளைப் படித்து விட்டு புன்முறுவல் பூத்தார். சில வரிகளைப் படித்து விட்டு கண்கலங்கினார். சில வரிகளைப் படித்து விட்டு அவர் கண்களை மூடி யோசித்தார். அந்தப் பத்திரிக்கையை மூடி வைக்கையில் அவர் மனம் லேசாக இருந்தது.

 

அந்த எழுத்தாளர் எழுதியிருந்தார். “செல்வம் மனிதனை மாற்றக்கூடியது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பெருஞ்செல்வம் பெரிய அளவிலேயே மனிதனை மாற்றக் கூடியது என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால் பெருஞ்செல்வமும் மாற்றி விடாத ஒரு தூய்மையான ஸ்படிகமாக இந்தப் பெண் இருக்கிறாள் என்பதை நான் வியப்போடு பார்க்கிறேன்.”

 

பெருஞ்செல்வம் அவளை மாற்றி விடவில்லை என்பது மட்டுமல்ல, அந்தப் பெருஞ்செல்வத்தை உதறித் தள்ளி விட்டு செல்லுமளவு அவளிடம் அது ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தாமல் இருந்திருக்கிறது...  

 

சிறுவயதிலிருந்தே அவருடைய மகள் நிர்ப்பயா மிக வித்தியாசமானவளாக இருந்தாள். ஆடம்பரமான எதிலுமே நாட்டமில்லாதவளாக அவள் இருந்தாள். கல்வியில் அவள் சிறந்து விளங்கினாள். எல்லா வகுப்புகளிலும் மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களைத் தாண்டி அவள் எப்போதும் கீழிறங்கியதில்லை. கலந்து கொள்ளும் கல்வி சம்பந்தமான போட்டிகளில் அவள் பரிசு பெறாமல் இருந்ததில்லை. அறிவுத் திறமையில் பெற்றோரைப் பெருமைப்படுத்திய அவள் மற்ற விஷயங்களில் புதிராகவும், வித்தியாசமானவளாகவும் இருந்தாள்.

 

முதல் குழந்தையான அவள் எதைக் கேட்டாலும் கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கித்தர முடிந்த அவரிடம் அவளாகக் கேட்டது புத்தகங்கள் மட்டுமே. விலையுயர்ந்த பொருள்கள் எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டாக இருந்ததேயில்லை. பழகுகின்ற ஆட்களிடமும் அவள் குணாதிசயங்களில் உயர்தரத்தை எதிர்பார்த்தாளே ஒழிய அவர்களுடைய செல்வநிலை அவளுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை.

 

அரண்மனை போன்ற அவருடைய வீட்டில் அடிக்கடி விருந்துகள் நடக்கும். சினிமா நடிகர் நடிகைகள், அமைச்சர்கள், பெரிய அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பெரும்பணக்காரர்கள், மற்ற பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொள்வார்கள். அந்த விருந்துகளில் கலந்து கொள்வதை மிகப் பெரிய கவுரமாக அவர்கள் மற்றவர்களிடமும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அந்த விருந்துகளில் பெரும்பாலும் அவருடைய மகள் தென்பட மாட்டாள். அவளுடைய அறையில் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள். அவருடைய மனைவி நிர்மலாவுக்கு மகள் இப்படிச் செய்வது கடுங்கோபமாகவும், அவமானமாகவும் இருக்கும். மகளை அவள் கடுமையாகத் திட்டுவதும் உண்டு.

 

ஏன் நீ வரலை

 

வந்தால் போரடிக்குதும்மா

 

என்னடி போர். எல்லாரும் எப்படி சந்தோஷமாய் அனுபவிச்சாங்க தெரியுமா? உனக்கு சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரியல.”

 

உனக்கு சந்தோஷம்னா என்னன்னு தெரியுமாம்மா?”

 

என்னடி கேள்வி இது?”

 

நிர்ப்பயா தாயை இரக்கத்துடன் பார்த்து விட்டு பழையபடி தன் புத்தகத்தில் ஆழ்ந்து விடுவாள்.

 

ராஜேஷ்வரும் அவள் வராததற்கு ஒரு முறை காரணம் கேட்டதுண்டு.  நிர்ப்பயா அன்று சொன்னாள். “யாரும் உங்க மேலயோ அம்மா மேலயோ இருக்கிற அன்பால வரலை. எல்லாரும் உங்க பணத்துக்காக வர்றாங்க. நம்ம வீட்டோட, விருந்தோட பிரம்மாண்டத்தை அனுபவிச்சுட்டுப் போக வர்றாங்க. ஆத்மார்த்தமாய் யாரும் பேசறதுமில்லை. பழகறதுமில்லை. எல்லாரும் போலித்தனமாய் இருக்காங்கப்பா. என்னால அந்த போலித்தனத்தை ரசிக்க முடியல.”

 

என்றோ இந்த போலித்தனத்தை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்ட ராஜேஷ்வரை நிர்ப்பயா ஆச்சரியப்படுத்தினாள். இது தான் உலகம், இது தான் உலக இயல்பு என்று அவள் எப்போது உணர்ந்து கொள்வாள் என்று அவருக்கு விளங்கவில்லை. அவளுடைய மதிப்பீடுகளும், விருப்பங்களும் பணம் சாராதவையாக இருந்தன. அவரிடம் குவிந்திருக்கும் பணம் அவளுக்குப் பெரிய விஷயமாக இருப்பதாகவே அவருக்குத் தோன்றவில்லை. அது ஏன் என்று அவர் அவளிடம் ஒரு முறை நேரடியாகவே கேட்டிருக்கிறார்.

 

அவள் சொன்னாள். “உங்க பணத்தையும், நீங்க இருக்கிற உயரத்தையும் நான் மதிக்கிறேன்ப்பா. உங்களால தான் எத்தனையோ லட்சக்கணக்கானவங்களுக்கு ஒரு வேலையோ, வாழ்வாதாரமோ இருக்கு. அது எனக்குப் பெருமையாய் தான் இருக்கு.”

 

அவளுடைய சிந்தனையோட்டம் அந்த விஷயத்தில் மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் கூட வித்தியாசமாக இருந்தது. மேலும் அவளால் பெரும்பாலானவர்களைப் போல முட்டாள்த்தனமான பேச்சுகளையும் கிசுகிசுக்களையும் வம்பு தும்புகளையும் ரசிக்க முடிந்ததில்லை. அவற்றில் கலந்து கொள்ளாமல் மௌனமாக ஒதுங்கி விடுவாள்.

 

அவளுடைய தம்பி நிரஞ்சன் அவளுக்கு எதிர்மாறாக இருந்தான். அவன் ஜாலியாகவும், வாழ்க்கையை அனுபவிக்கத் துடிப்பவனாகவும் இருந்தான். தந்தையின் பணத்தையும், குடும்ப விருந்துகளையும் ரசித்து அனுபவிப்பவனாகவும், அதே நேரத்தில், வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு வியாபாரத்தையும் சிறப்பாகச் செய்பவனாக இருந்தான். இளமைக்கே உரிய சில அவசரங்கள் அவனிடம் இருப்பதைத் தவிர ராஜேஷ்வர் மற்றபடி அவனிடம் தவறு காணவில்லை. மகன் விஷயத்தில் பெற்றோர் இருவரும் திருப்தியாகவே இருந்தனர்.

 

மகள் கல்லூரியில் சேர்ந்தவுடனேயே அவளுக்குத் தகுந்த வரனைப் பார்ப்பதில் நிர்மலா மும்முரமாக இறங்கினாள். மகளது படிப்பு முடிந்தவுடன்  தான் திருமணம் என்றாலும் தகுந்த வரனை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வது முக்கியம் என்று அவள் நினைத்தாள். நிர்ப்பயாவைத் திருமணம் செய்து கொள்ள தகுந்த வரன்களிடையே கடுமையான போட்டி நிலவியது.

 

ராஜேஷ்வரும், குடும்பத்தினரும் சிறிதும் எதிர்பாராத விதமாக நிர்ப்பயா தன்னுடன் கல்லூரியில் படிக்கும் யுவராஜ் என்ற ஒரு இளைஞனைக் காதலிப்பதாகச் சொன்னாள். அவன் ஐபிஎஸ் தேர்வுக்கு முயற்சிக்கிறான் என்றும் அதை அவன் முடித்தவுடன் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் உறுதியாகவும் இருந்தாள். நடுத்தர வர்க்கத்திலும் கீழ்மட்டத்தில் இருக்கும் அந்த இளைஞனை அவள் திருமணம் செய்து கொள்வதை ராஜேஷ்வர், நிர்மலா, நிரஞ்சன் மூவருமே விரும்பவில்லை. அவர்களைப் போலவே அவனுக்கும் தாய்மொழி தமிழ் தான் என்பதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமும் இல்லாததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நிர்ப்பயாவின் பணத்திற்காகத் தான் யுவராஜ் அவளைக் காதலிக்கிறான் என்று சொன்னார்கள். அவர்கள் எதிர்ப்பு அவளை அசைக்கவில்லை. யுவராஜ் ஐபிஎஸ் ஆனதும் அவள் அவனை மணந்து கொள்ளத் தயாரானாள்.

 

நிரஞ்சன் தந்தையிடம், அவர்கள் இருவர் மட்டுமே இருக்கையில் சொன்னான். “அந்தப் பையன் கிட்ட பேசிப் பாருங்கப்பா. இல்லாட்டி முடிச்சுடுவோம்.” அதையே நிர்மலாவும் பிறகு சொன்னாள். நிர்ப்பயாவை மாற்ற முடியாது என்பது உறுதியாகத் தெரிந்ததால் அந்த இளைஞனை விலக வைப்பது தான் ஒரே வழி என்று ராஜேஷ்வரும் நினைத்தார்.

 

ஒரு நாள் ராஜேஷ்வர் யுவராஜை தனியாக வரவழைத்தார். நிர்ப்பயாவுக்குப் பதிலாக அவனுக்கு எத்தனை பணம் வேண்டும் என்று அவனிடம் வெளிப்படையாகவே கேட்டார்.

 

யுவராஜ் சொன்னான். “உங்க மகள் மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை சார்.”

 

அவன் அமைதியாகத் தான் அதைச் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவரை அறைந்தன. ஆனாலும் நிர்ப்பயாவின் தந்தையாக அவரில் ஒரு பகுதி அந்தப் பதிலை மெச்சவும் செய்தது. அவன் மீது ஒரு தனி மதிப்பும் அவருக்கு ஏற்பட்டது. நிர்ப்பயாவை அவன் ஆத்மார்த்தமாய் தான் காதலிப்பதாகவும், அவருடைய பணத்தில் ஒற்றை ரூபாய் கூட அவனுக்கு வேண்டாம் என்றும் சொன்னான்.

 

நடுத்தர வர்க்கத்திலிருந்து தொழிலை ஆரம்பித்து இந்த அளவு உயர்ந்தவர் தான் அவரும். அவர் இத்தனை கால அனுபவத்தில் பல்லாயிரம் விதமான ஏமாற்றுக்காரர்களைப் பார்த்திருக்கிறார். ”பணம் ஒரு பொருட்டே அல்லஎன்று சொல்பவர்களில் 99.99 சதவீதம் பேர் பொய்யர்களே. மீதி இருக்கும் 0.01 பேரில் நிர்ப்பயா ஒருத்தியைத் தவிர அவர் வேறு யாரையும் பார்த்தது இல்லை. இனி பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதனால் அந்த 0.01 சதவீதத்தில் அவனைச் சேர்க்க அவர் தயங்கினார். சமயம் வரும் போது அவன் வேறு முகம் காட்டுவான் என்று அவர் நம்பினார்.


(தொடரும்)

என்.கணேசன்





2 comments:

  1. ஐயா, அமானுஷ்யன், எப்போ வருவார்? கதை ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது.

    ReplyDelete