என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 10, 2026

ரட்சகன் 4

 


ப்சல்கான் அனுப்பிய தகவல் மூன்று நாட்கள் கழித்து, நான்கு ஆட்களைக் கடந்து, அவன் சார்ந்த இயக்கத் தலைவர் அகமது அன்சாரியை வந்தடைந்தது.  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் எல்லைப்பகுதியில் ஒரு மறைவிடத்தில் வசித்து வரும் அவர் முதலில் அந்தக் கடிதத்தைப் படித்தார். அந்தக் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து அப்சல்கானினுடையது அல்ல என்பதை அவர் நன்றாக அறிவார். ஆனாலும் அந்தத் தகவல் அனுப்பியவன் அப்சல்கான் என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை. இப்படி குறிப்பாகவும், சுருக்கமாகவும், ஒற்றை வரியில் ஆலோசனை சொல்வதில் அவனுடைய முத்திரை பலமாக இருக்கிறது.

 

அவருக்கும் தங்கள் இயக்கத்திற்குச் சம்பந்தமல்லாத எதைப் படிப்பதிலும் ஆர்வம் கிடையாது என்பதால் முழுவதுமாக அந்த வாரப் பத்திரிக்கையில் பதினாறாம் பக்கக் கட்டுரையை படிக்க அவர் முனையவில்லை. அந்தக் கட்டுரையை அவர் மேலோட்டமாகப் படித்தார். அதிலேயே அப்சல்கான் எதைச் சுட்டிக்காட்டுகிறான் என்பது அவருக்குப் புரிந்து விட்டது. படித்து முடித்த பின் அவர் நீண்ட நேரம் ஆலோசித்தார்..

 

காலம் நிறையவே மாறிவிட்டது.  ஒரு காலத்தில் அவர்களைப் பார்த்து அச்சப்பட்டவர்கள் இப்போது அந்த அச்சத்திலிருந்து விலகி விட்டார்கள். உலக நாடுகள் கிட்டத்தட்ட அனைத்துமே அவர்களுக்கு எதிராகத் திரும்பி விட்டன. அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் உலகநாடுகள் கரங்களைக் கோர்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டன. ஒரு காலத்தில் மென்மையான அணுகுமுறையைக் காட்டிய இந்தியா இன்று துணிந்து அடக்குமுறையைக் காட்டுகிறது.  ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் கூட அவர்களுடைய இயக்கத்தினர் இப்போது பாதுகாப்பாக இருக்க முடிவதில்லை.

 

இதை மாற்ற அவர்கள் ஏதாவது செய்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய இயக்கத்தின் உபதலைவன் இந்தியச் சிறை ஒன்றில் அடைபட்டுக் கிடப்பது இயக்கத்துக்கு அவமானம் தான். அவனைத் தூக்கிலிட்டால் அது நிரந்தர அவமானமாக இருந்து விடும். ஏதாவது செய்து அவனைக் காப்பாற்றினால் தான் அவர்களுக்குப் பணம் தந்து ஆதரிப்பவர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள். பணம் தந்து ஆதரிப்பவர்கள் அவர்கள் மீது நம்பிக்கையை இழந்து விட்டால் பின் அவர்கள் பணம் மற்றும் ஆயுத உதவி செய்வதும் படிப்படியாக நின்று விடும். அதனால் உருப்படியாக எதாவது செய்யாமலிருப்பது தற்கொலை செய்வதற்கு இணையானது. கண்டிப்பாக எதாவது செய்து அப்சல்கானை அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும். அது முடியாது என்பது தான் யதார்த்த நிலைமை.

 

முன்பெல்லாம் விமானம் கடத்துவது போன்ற நடவடிக்கைகள் அவர்களைப் போன்ற இயக்கங்களுக்கு பயணிகளை பணயக்கைதிகளாக்கி அரசாங்கத்திடம் பேரம் பேச உதவியாக இருந்தன. ஆனால் இப்போது விமானப் பயணத்தில் கெடுபிடிகள் அதிகமாகி விட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் தலைவர்கள் போன்ற முக்கியஸ்தர்களைக் கடத்தவும் வாய்ப்பு சுத்தமாக இல்லை. அரசியல் தலைவர்கள் பலமடங்கு பாதுகாப்போடு இருக்கிறார்கள். ராஜேஷ்வர் போன்ற பெரும்பணக்காரர்களின் ஆதரவும் தயவும் ஆளும் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் மிக முக்கியம். அதனால் அவர்களையோ அவர்கள் குடும்பத்தினரையோ கடத்தினால் அதன் மூலமும் அரசாங்கத்தைப் பணிய வைக்க முடியும். ஆனால் அவர்களோ அரசியல்வாதிகளை விட மூன்று மடங்கு பாதுகாப்பை தனியார் பாதுகாவலர் மூலம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து ஒரு விதிவிலக்கு இருக்கிறது என்று தான் அப்சல்கான் சுட்டிக் காட்டி இருக்கிறான்.    

 

அப்சல்கானின் ஆலோசனையை எந்த அளவு செயல்படுத்த முடியும் என்பதையும், அது எந்த அளவு பலன் தரும் என்பதையும் அகமது அன்சாரியால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. நிலைமையைத் தெளிவுபடுத்த முடிந்த ஒருவன் மும்பையில் பிரபல பத்திரிக்கையில் வேலை பார்க்கிறான். அவர்கள் இயக்கத்திற்கு பல முக்கியத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் நம்பிக்கைக்குரிய ஆள் அவன்.. அவனுக்கு அங்கேயுள்ள நிலைமை துல்லியமாகத் தெரியும். அவனை வரவழைத்துக் கேட்க அகமது அன்சாரி முடிவு செய்தார். இது போன்ற விஷயங்களை அலைபேசியிலேயே கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும், இரண்டு காரணங்களுக்காக அவர் அதைத் தவிர்த்தார். முதலாவது, இது போன்ற பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படலாம். பேசிய எண்கள் கண்காணிக்கப்படலாம். பேசும் இடங்கள் தெரிய வரலாம். இரண்டாவது, அலைபேசியில் பேசும் போது வார்த்தைகளும், தொனியும் மட்டுமே கேட்கக் கிடைக்கும். நேரில் பேசும் போது கண்கள், முகபாவனை, அசைவுகள் எல்லாம் கூட கூடுதலாகத் தகவல்கள் சொல்லும். ’வீடியோ கால்பயன்படுத்தினால் கூட அது நேரில் பார்த்துப் பேசுவதற்கு இணையாகாது என்பதால் அந்த ஆளை அகமது அன்சாரி அவனை நேரில் வரச் சொன்னார்.

 

அவனும் மறுநாள் நேரில் வந்தான். அப்சல்கானின் கடிதம் மற்றும் உமன்ஸ் வர்ல்டு கட்டுரை பற்றி அவனுக்குத் தெரிவித்த அகமது அன்சாரி அவனிடம் கேட்டார். “அப்சல்கானுடைய ஆலோசனை பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

 

அவன் வெளிப்படையாகச் சொன்னான். “அவர் துருப்புச்சீட்டாக நிர்ப்பயாவை நினைத்திருந்தால் அவர் சொல்லும் திட்டம் கைகூடப் போவதில்லை. ஏனென்றால் சொத்தையெல்லாம் துறந்து நிர்ப்பயா வந்திருந்தாலும் அவளுக்கு இருக்கும் பாதுகாப்பை ராஜேஷ்வர் திரும்பப் பெற்று விடவில்லை. வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அவளை ரகசியமாய் ஒரு தனிப்படை காவல் காத்து வருகிறது. அதை மீறி அவளைக் கடத்துவது முடியாத காரியம். ”

 

இது அப்சல்கானுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுடைய திருமணம் முடிந்து சில காலம் கழித்து தான் அப்சல்கான் சிறை சென்றான். அதனால் அவன் நினைக்கும் அடுத்த துருப்புச் சீட்டாக நிர்ப்பயாவின் இரண்டு வயதுக் குழந்தை இருக்க வாய்ப்புண்டு..

 

அகமது அன்சாரி கேட்டார். “அந்தக் குழந்தை....”

 

அந்தக் குழந்தைக்கும் கூட அவர்களது பாதுகாப்பு இருக்கிறது. அந்தக் குழந்தையை ராஜேஷ்வர் குடும்பத்தினர் இதுவரைக்கும் வந்து பார்த்தது கூடக் கிடையாது. ஆனாலும் அந்தக் குழந்தை கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதை ராஜேஷ்வர் உணர்ந்தே இருக்கிறார். அதை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது.”

 

அந்தக் குழந்தை பிறந்த பின்னும் ராஜேஷ்வர் குடும்பம் மகளுடன் வந்து ஒட்டிக் கொள்ளவில்லை என்று அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை படித்து விட்டு அப்சல்கான் என்ன நினைத்தானோ தெரியவில்லை. அந்தக் குழந்தைக்கும் கூட இப்படி கடும் பாதுகாப்பு இருப்பது அப்சல்கானுக்குத் தெரியுமா தெரியாதா என்று அகமது அன்சாரியால் யூகிக்க முடியவில்லை.

 

அடுத்து மிஞ்சியிருப்பது நிர்ப்பயாவின் கணவன் தான். அகமது அன்சாரி கேட்டார். “அப்சல்கான் சொல்லும் துருப்புச்சீட்டு நிர்ப்பயாவின் கணவன் யுவராஜாக இருந்தால்? அவன் பாதுகாப்புக்கும் ராஜேஷ்வரின் காவல் படை இருக்கிறதா?”

 

இல்லை. அதனால், அவன் ஐ.பி.எஸ் அதிகாரியானாலும், அவனைக் கடத்துவது கஷ்டமில்லை.  ஆனால் ராஜேஷ்வர் மருமகனாக அங்கீகரிக்காத ஆளைக் கடத்துவதன் மூலம் நாம் அவரிடம் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ள முடியாது.”

 

இதே அபிப்பிராயம் தான் அகமது அன்சாரிக்கும் இருந்தது. யுவராஜைக் கடத்துவது ஒருவிதத்தில் ராஜேஷ்வருக்கு உதவுவது போல் தான். அவருடைய மகள் வாழ்க்கையிலிருந்து அவனை விலக்கினால், அவளுக்கு அவர் விருப்பப்படி வேறு  ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர முடியும்.   அதனால் யுவராஜை அப்புறப்படுத்துவதை அவர் வரவேற்கவும் செய்யலாம்.

 

அப்சல்கான் யாரைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தச் சொல்கிறான் என்று நீ நினைக்கிறாய்? எது நமக்கு அனுகூலமாக இருக்கும்?””

 

அந்தக் குழந்தையையோ, யுவராஜையோ தான் பயன்படுத்த அவர்  நினைத்திருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தையைக் கடத்த வாய்ப்பில்லை. யுவராஜைக் கடத்தி பலனில்லை..”

 

அவன் சொல்வது உண்மை தான். அவர் அவனை அனுப்பி விட்டார். இனி என்ன முடிவெடுப்பது என்று அவர் ஆழமாக யோசித்தார். பலனில்லாத சாகசத்தால் அவமானம் நிச்சயம். அதே நேரத்தில் செயலற்று இருப்பதும் அவமானம் தான். எதைத் தேர்ந்தெடுப்பது? முயற்சி எடுக்கா விட்டால் வெற்றி சாத்தியமே அல்ல; நூறு சதவீதம் தோல்வி நிச்சயம். முயற்சி எடுத்தால் சிறிதளவாவது வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் முட்டாள்த்தனமாக இருந்தாலும் கூட முயற்சி எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவர்களுடைய இயக்கம் இருக்கிறது...


(தொடரும்)

என்.கணேசன்





 

1 comment: