அர்ஜுன் பல காலமாக அவனைக் குழப்பிக் கொண்டிருந்த ஒரு கேள்வியைக் கேட்டான். “பொதுவாய் அரசியல் தலைவர்களோட பிள்ளைகளும் அரசியலுக்கு வர்றது இப்ப எல்லாம் சர்வ சாதாரணமாய் இருக்கு. ஆனா தாத்தா இருக்கற வரைக்கும் பிள்ளைங்க நீங்க ரெண்டு பேரும் ஏன் அரசியலுக்கு வரலை அப்பா?”
“எங்க ரெண்டு பேருக்கும் அரசியல்ல அவ்வளவா ஈடுபாடு அந்தச் சமயத்துல இருக்கல
அர்ஜுன். நான் வக்கீல் தொழிலில் பிசியா இருந்தேன். ராஜாராமும் மற்ற விஷயங்கள்ல தான் ஆர்வம் அதிகம் காட்டினான்.”
“ஆனா இப்ப நீங்க ரெண்டு பேரும் அரசியல்ல இருக்கீங்க. நீங்க
நேர்முகமாகவும், அவர் மறைமுகமாகவும் அரசியல்ல இருக்கீங்க.
தாத்தா இறந்த காலத்துலயே நீங்க அரசியலுக்கு வந்திருந்தா கண்டிப்பா உங்க
ரெண்டு பேர்ல ஒருத்தர் சுலபமா முதல்வராயிருந்திருக்கலாம்.”
“வாஸ்தவம் தான். ஆனால் அது பின் வழியா அரசியலுக்கு நுழைஞ்ச
மாதிரியா தான் இருந்திருக்கும். எங்களோட
தனித்துவத்தை நாங்க நிலைநாட்டியிருக்க முடியாது. இப்போ நாங்க ரெண்டு பேரும் எங்க விருப்பப்படி
இருக்கிறோம்.”
பானுமதி திரும்பவும் வந்து சுவரில் சாய்ந்து நிற்பதை அர்ஜுன்
பார்த்தான். அவன் ஒரு கணம் தான் அவளைப் பார்த்தான் என்றாலும், அந்த
ஒரு கணத்தில் அவள் கண்களில் ஈரம் தெரிந்ததை நன்றாகவே அவன் பார்த்தான். இனியொரு முறை அவளை அவன் பார்த்தால் அவள் மறுபடி உள்ளே போய் விடுவாள் என்று
அவனுடைய உள்மனம் எச்சரித்தது. அதனால் அவளைப் பார்ப்பதை அவன் தவிர்த்தான்.
ஆனாலும் அவனைப் பற்றிய பேச்சு வந்த பின் தான் அவள் சமையலறைக்கு வேகமாய்ப்
போனாள், அவனைப் பற்றிய பேச்சு முடிந்த பின் வெளியே வருகிறாள்
என்பதை அவனால் லேசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் விஷயத்திலும்,
அவனைப் பற்றிய பேச்சு வரும் போதும் அவள் புதிராகத் தான் நடந்து கொள்கிறாள்.
அது ஏன்?
அர்ஜுன் லேப்டாப்பைப் பார்த்து விட்டு அடுத்த கேள்வியைக் கேட்டான். “எல்லா மனிதர்களுக்கும்
பலம் பலவீனம் உண்டு இல்லையாப்பா. ஆனா உங்கப்பாவைப் பற்றி நான்
கேள்விப்பட்டதெல்லாம் பலங்களாகவே இருந்திருக்கு. யாருமே அவரோட
பலவீனங்களைப் பற்றிப் பேசறதில்லை. அவரோட பலவீனங்கள் என்னவாய்
இருந்துச்சுப்பா?”
நித்யா நிமிர்ந்து உட்கார்ந்தாள். இந்தக் கேள்விக்குப் பதில்
அறிய அவளுக்கும் ஆர்வமாய் இருந்தது. ஞானமூர்த்தி தயங்காமல் சொன்னார்.
“அவரோட பலவீனம் கூட அவரோட நல்ல தன்மையின் ஒரு பகுதியாய் இருந்துச்சு.
அவர் தன்னை மாதிரியே எல்லாரையும்
நினைச்சார். சூதுவாது தெரியாதவராய் இருந்தார். அவர் கூடவே இருந்தவர்களை
கண்மூடித்தனமாய் அவர் நம்பினார். அவருக்கு அவங்கெல்லாம் தப்பு
செய்ய முடியும்னே தோணியிருக்கல. ஒரு தலைவருக்கு அது மிகப்பெரிய
பலவீனம் தான்.”
அதைச் சொல்லும் போது அவர் குரலில் வருத்தம் தெரிந்தாலும் அவருடைய
வருத்தம், அவர்
சொல்ல நினைத்த உண்மையைச் சொல்ல விடாமல் தவிர்த்து விடவில்லை என்பதை அர்ஜுன் கவனித்தான்.
அது அவருடைய தனிப்பெரும் குணம். எதிலுமே பொய்யால் நிலையான நன்மைகள்
கிடைக்க வழியில்லை என்று ஆழமாக நம்புபவர் அவர். கசந்தாலும் உண்மையே யாரையும் காப்பாற்றக்கூடியது
என்பது அவருடைய ஆணித்தரமான கருத்து. சில சமயங்களில் கசப்பான உண்மைகளைச்
சொல்வதால் யாரும், எதுவும் மாறிவிடப் போவது கிடையாது என்று நினைப்பாரானால்
மௌனமாகவாவது இருந்து விடுவாரே ஒழிய, இதமான பொய்யைச் சொல்ல அவர்
முற்பட்டதில்லை. ஒரு அரசியல்வாதிக்கு இது மிகப்பெரிய பலவீனமே.
ஆனாலும் அவர் இதை மாற்றிக் கொண்டதில்லை.
“உங்கப்பா உங்களையும், சித்தப்பாவையும் அரசியலுக்குக்
கொண்டு வரணும்னு நினைச்சதுண்டா அப்பா.?”
“இல்லை. நாங்களாக விருப்பப்பட்டு அரசியலுக்கு வந்திருந்தால்
அவர் தடுத்திருக்கவும் மாட்டார்.”
“நீங்க ரெண்டு பேரும் தேர்ந்தெடுத்த துறைகள் பற்றி அவரோட அபிப்பிராயம் என்னவா
இருந்துச்சு?”
“அவர் அதைப் பெருமையா தான் நினைச்சார். என்னோட வக்கீல்
ப்ராக்டிஸ் வெற்றிகரமா போய்ட்டு இருந்ததுலயும், ராஜாராமோட கட்டுரைகள்
வெளிநாட்டுப் பத்திரிக்கைகள்ல எல்லாம் பிரசுரமாயிட்டு இருந்ததுலயும் அவருக்கு ரொம்ப
சந்தோஷம். அமெரிக்கால நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைல ராஜாராமோட
கட்டுரை முதல் தடவையா வந்தப்ப அவர் பட்ட சந்தோஷம் கொஞ்சநஞ்சமல்ல. அவனோட ஆங்கிலம் எளிமையாய் இருக்காது. அதனால அவருக்கு
அந்தக் கட்டுரை சரியாய்ப் புரியலை. அதனால அவனை அதைத் தமிழ்ல மொழிபெயர்த்து
எழுதச் சொல்லி அதைப் படிச்சார். ஒரு வாரத்துக்கு அவரைப் பார்க்க
வர்றவன் போறவன் கிட்ட எல்லாம் அதைக் காண்பிச்சு, “இது என் மகன்
ராஜாராம் எழுதினது. நியூயார்க் டைம்ஸ்லயே பிரசுரம் பண்ணியிருக்காங்க.
எனக்குப் புரியலடா. தமிழ்ல எழுதிக்கொடுன்னு சொன்னேன்.
எனக்காக தமிழ்ல மொழிபெயர்த்துக் குடுத்தான்.”னு
பெருமையா சொல்லிகிட்டு இருந்தார்… இப்ப அவர் இருந்திருந்தால்
அவன் ஆக்ஸ்ஃபோர்டுல எல்லாம் போய் பேசறதுக்கும் அவர் ரொம்ப பெருமைப்பட்டுருப்பார்…”
தம்பியைப் பற்றிச் சொல்வதில் அவருக்கும் பெருமிதம் இருந்ததை
அர்ஜுன் கவனித்தான். அவருடைய தந்தையின் ஸ்தானத்தில் இருந்து தந்தைக்குமாய் சேர்த்து அவர் பெருமைப்படுவது
போல் அவனுக்குத் தோன்றியது. அரசியலில் அவருக்கு எதிராக தம்பி
செயல்பட்டாலும் அவர்கள் இருவருடைய உறவை அது பாதித்து விடவில்லை என்பதை அர்ஜுன் கவனித்து
இருக்கிறான். அவன்
கோபப்பட்டது போல அவர் கோபம் கொள்ளவில்லை.
அர்ஜுன் கேட்டான்.
“இப்ப உங்கப்பா உயிரோட இருந்து நீங்களும் அவரும் எதிரெதிர் அரசியலில்
ஈடுபடுவதைப் பார்த்தால் அவர் என்ன நினைச்சிருப்பார்னு நீங்க நினைக்கறீங்க?”
“அவரால அதை ஜீரணம் செய்யறது கஷ்டமாய் தான் இருந்திருக்கும்.”
அவர் அதைப் பற்றிக் கூடுதல் கருத்து சொல்வார் என்று அர்ஜுன்
எதிர்பார்த்தான். ஆனால் ஞானமூர்த்தி அந்தச் சுருக்கமான கருத்தோடு நிறுத்திக் கொண்டார்.
கூடுதலாகச் சொல்வது கசப்பான
கருத்துக்களாக இருக்குமோ?
நீண்ட காலமாக அவனைக் குடைந்து கொண்டிருந்த கேள்வியை அவன் கேட்டான். “அவர் பெரிய அரசியல் தலைவர்.
நீங்கள் அப்பவே பெரிய வக்கீலாக இருந்தீங்க. அப்படி
இருக்கறப்ப எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிச்சிருந்த அம்மாவை நீங்க கல்யாணம் செஞ்சுக்க
அவர் எப்படி ஒத்துகிட்டார். அம்மாவோட குடும்ப பின்னணியும் உங்க
குடும்பப் பின்னணிக்கு சரிசமமாய் இருக்கலையில்ல?”
அவன் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே பானுமதி சட்டென்று சமையலறைக்குச் செல்வதை அவன் கவனித்தான். நித்யா அதைக் கவனிப்பதையும் அவன் பார்த்தான். ஏழைப் பெண்ணான பானுமதியை ஞானமூர்த்தி தான் விரும்பித் திருமணம் செய்து கொண்டதாக முன்பு ஒரு முறை அவர் பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார். ஞானமூர்த்தி-பானுமதி திருமண சமயத்தில் பானுமதியின் பெற்றோரும் உயிரோடு இல்லை என்றும் அர்ஜுனும், நித்யாவும் கேள்விப்பட்டிருக்கிறார்கள். படிப்பிலும், அந்தஸ்திலும் இணையாக இல்லா விட்டாலும் பானுமதி மிக அழகானவள். அதற்காக அவர் அவளை விரும்பித் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று அர்ஜுன் நினைத்துக் கொண்டிருந்தான். ஞானமூர்த்தி அவள் அழகைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாலும், வாசுதேவன் அந்தத் திருமணத்தை எப்படி ஏற்றுக் கொண்டார் என்று அறிய அர்ஜுன் ஆசைப்பட்டான்.
ஞானமூர்த்தி பதில் சொல்ல சில வினாடிகள் எடுத்துக் கொண்டார். பின் சுருக்கமாகச் சொன்னார்.
“கொஞ்சம் தயங்கினார். பிறகு நான் உறுதியாய் இருந்ததைப்
பார்த்து அவர் ஒத்துகிட்டார்”
அந்தத் திருமணத்தில் ஆரம்பத்தில் வாசுதேவனுக்குத் தயக்கம் இருந்திருக்கிறது
என்பது அர்ஜுனுக்குப் புரிந்தது.
அவன் அருகில் அமர்ந்திருந்த நித்யா அண்ணனுக்கு மட்டும் கேட்கும்படியாக
முணுமுணுத்தாள். “அப்பா சட்டத்துல மட்டுமல்ல, மத்த விஷயத்துலயும் ஸ்ட்ராங்காத் தான் இருந்திருக்கார் கவனிச்சியா?
இதை கத்துக்கோ.”
அர்ஜுன் கஷ்டப்பட்டு புன்னகையை மறைத்தான்.


Many thanks
ReplyDeleteI feel like Arjun is not Gnana murthi's son. May be son from his mom's first marriage. Bnana murthi adopted him just like his dad adopted him. Just a wild guess
ReplyDelete