என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, May 19, 2026

யோகி 156

 


யோகாலயத்தில் இருந்து வெளியே போகிறவர்களும், வெளியே இருந்து உள்ளே வருபவர்களும் அந்தக் கூட்டத்தினரைத் தாண்ட பெரிதும் சிரமப்பட்டார்கள் தாண்டுவதற்குள் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த யோகாலயத்து தடியர்களால் முடியவில்லை. ஒவ்வொரு மணி நேரமும் கூட்டம் கூடிக் கொண்டே போனது.

 

பாண்டியன் பிரம்மானந்தாவிடம் சொன்னார். “சமாளிக்க முடியலை. நமக்கு போலீஸ் உதவி வேண்டியிருக்கு யோகிஜி. நீங்க முதல்வர் கிட்ட பேசறது நல்லது.”

 

பிரம்மானந்தா முதல்வரிடம் பேசினார். “சார். யாரோ பொழுது போகாமல் மொட்டையாய் ஒரு கற்பனைக் கொலை பற்றி பேசி அதை வைரல் ஆக்கி இருக்காங்க. இப்படி ஒன்னு வராதான்னு எதிர்பார்த்துகிட்டு இருந்த வேலை வெட்டி இல்லாத கூட்டம் எங்க வாசல்ல கூடி நிக்கிறாங்க. எங்களால போக, வர முடியலை. போலீஸை அனுப்பிச்சா நல்லா இருக்கும்.”

 

அருணாச்சலம் சொன்னார். “உடனே அனுப்பறேன் யோகிஜி. நீங்க எதுக்கும் ஒரு சரியான பதிலைச் சொல்லி, அது அர்த்தமில்லாத குற்றச்சாட்டுன்னு புரிய வையுங்க. ஏன் தேவையில்லாமல் பிரச்சினையை வளர்த்துக்கணும்.”

 

பிரம்மானந்தா சரியென்றார். யோகாலயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு உடனே வந்தது. ஆனால் கூட்டத்தினரை அப்புறப்படுத்த முடியவில்லை. முடிந்த வரை போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யாத அளவு அங்கிருப்பவர்களைக் கட்டுப்படுத்த மட்டுமே முடிந்தது.

 

யோகாலயம் ஒரு அறிக்கையை உடனடியாக வெளியிட்டது. வைரலாகி இருக்கும் அந்த ஒலிப்பதிவு அவர்களுடைய துறவியுடையது அல்ல என்றும் யாரோ ஒரு விஷமி அவர்களுக்கு எதிராக உருவாக்கிய அவப்பிரசாரம் என்றும், அதில் கூறப்படுவது போல எந்தக் கொலையும் நிகழவில்லை என்பதால் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு அது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.  நீதிமன்றத்தால் தீர்த்து வைக்கப்பட்ட ஒரு பழைய வழக்கையும் இந்த மொட்டைக் குற்றச்சாட்டில் இணைத்துப் பேசி, கோவிட் மரணத்தையும் கொலைக்குற்றமாக்குவது கொடுமையான விஷமப் பிரசாரம் என்றும் அதில் சொல்லப்பட்டது.

 

உடனடியாக அடுத்த ஒலிப்பதிவு வைரலாக வலம் வர ஆரம்பித்தது. அதில் உண்மை விளம்பி என்ற பெயரில் ஒரு ஆண் பேசியிருந்தார். “யோகாலயம் வழக்கம் போல் இந்தக் கொலையையும் மூடி மறைக்கப் பார்க்கிறது. யோகாலயத்தில் புதைக்கப்பட்ட நபர் சேலத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்ற தொழிலதிபர். அவர் யோகாலயம் செல்வதாய்ச் சொல்லிக் கிளம்பி சென்னைக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை. இந்தப் புகார் இப்போதும் சேலம் போலீஸ் நிலையத்தில் இருக்கிறது. அந்தப் பெண் துறவி சொன்ன இடத்தில் தோண்டிப் பார்த்தால் உண்மை தெரிய வரும். அங்கு சந்திரமோகனின் பிணமும் கிடைக்கும். வெறும் அறிக்கை விடாமல், அந்த இடத்தைத் தோண்டிக் காட்டி தாங்கள் குற்றமற்றவர்கள் என்று யோகாலயம் நிரூபிக்க முன் வர வேண்டும்.”  

 

யோகாலயத்திற்கு எதிரான ஊடகங்களும், பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் அறிக்கை வேண்டாம். தோண்டிக் காட்டுஎன்று ஏகோபித்த குரலில் சொல்ல ஆரம்பித்தன. யோகாலயம் இதை ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் மற்றும் மாற்று மதவாதிகளின் ஆதாரமற்ற புகார் என்று சொல்லி திசை திருப்பப் பார்த்தது. யோகாலயத்திற்கு ஆதரவான ஊடகங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் எல்லாம் முடிந்த வரை அப்படியே பிரசாரம் செய்தன.  ஆனால் நடுநிலையாளர்கள்தோண்டிக் காட்டி தங்கள் பக்கத்து உண்மையை யோகாலயம் நிரூபிக்கலாமே. அந்த ஒரு செயலில் எல்லா விமர்சனமும் நின்று போகுமேஎன்று சொன்னது யாருக்கும் மறுக்க முடியாததாய் இருந்தது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் களத்தில் இறங்கின. “ஆளும் கட்சி கொலைகாரர்களுக்கு ஆதரவு காட்டுவது ஏன்? அந்த ஒலிப்பதிவில் சொல்லப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்க்க ஆணை இடாதது ஏன்? அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு இருக்கிறது என்பதாலா?” என்று எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் நூற்றுக் கணக்கில் புகார்கள் போகத் துவங்கின. ஒரு சிலர் அந்த ஒலிப்பதிவில் சொல்லியிருக்கும் இடம் மட்டும் அல்லாமல் மற்ற இடங்களையும் தோண்டிப் பார்த்தால் இது போல் பல கொலைகள் தெரிய வரலாம் என்று பேச ஆரம்பித்தார்கள்.

 

பாண்டியனும், பிரம்மானந்தாவும் அதிர்ந்து போனார்கள். சைத்ராவுக்குக் கூட புதைக்கப்பட்ட நபர் யாரென்று தெரிந்திருக்கவில்லை. இங்குள்ள துறவிகள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை. இதில் சம்பந்தப்பட்ட பாண்டியனின் ஆட்கள் அவரால் பரிசோதிக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள். அவர்களுக்குத் தாராளமாகப் பணம் தந்து அவர் திருப்தியாக வைத்துக் கொண்டு இருக்கிறார். அதனால் இது அவர் ஆட்கள் மூலமாய் கசிந்த தகவல் அல்ல 

 

பிரம்மானந்தா அன்றிரவு இருப்பு கொள்ளாமல் தவித்தார். யோகாலயத்துக்கு வெளியே உள்ள கூட்டம் இரவிலும் முழுவதுமாகக் கலைந்து செல்வதில்லை. மூன்றில் ஒரு பங்கு ஆட்கள் இரவிலும் அங்கேயே தங்கி இருக்கிறார்கள். யோகாலயத்திற்குள்ளே யாராவது உள்ளே வருவதைப் பார்த்தாலும், உள்ளேயிருந்து யாராவது வெளியே செல்வதைப் பார்த்தாலும் சூழ்ந்து கொள்கிறார்கள், கேள்வி கேட்கிறார்கள், கோஷம் எழுப்புகிறார்கள். வெளியே இருக்கும் போலீஸாரும் ஓரளவுக்கு மேல் நாங்களும் என்ன செய்ய முடியும்?’ என்று சொல்லி அவர்களை அடித்துத் துரத்தாமல் இருக்கிறார்கள்....

 

முதல்வரின் தனி அலைபேசியிலிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. “யோகிஜி. நிலைமை என் கையையும் மீறிப் போய்கிட்டிருக்கு. பொதுமக்கள் கிட்ட இருந்தும், மீடியா கிட்ட இருந்தும் எனக்கு பிரஷர் அதிகமாய் வருது. சட்டசபைக் கூட்டம் ரெண்டு நாள்ல தொடங்கப் போகுது. நான் உடனே எதுவும் செய்யாட்டி எதிர்க்கட்சிக்காரங்களை என்னால சமாளிக்க முடியாது. நாளைக்கு அந்த ஒலிப்பதிவுல சொல்லப்பட்டு இருக்கற இடத்தைத் தோண்டிப் பார்க்க நான் அனுமதி தரப் போறேன். பொய்ப்புகார் தானே. கவலைப்படாதீங்க. தோண்டி, ஒன்னும் கிடைக்கலன்னா அத்தனை வாயையும் அடைச்சுடலாம்.” முதல்வர் அவருடைய அபிப்பிராயத்திற்காகக் காத்திருக்காமல் பேச்சை முடித்துக் கொண்டார்.

 

பிரம்மானந்தா தன்னைச் சுற்றிலும் இருந்த பத்திரிக்கைகளைப் பார்த்தார். எல்லாப் பத்திரிக்கைகளிலும் முதல்பக்கச் செய்தி இதுவாகவே இருந்தது. ஆச்சரியக்குறிகள், கேள்விக்குறிகள், போட்டு நடந்தது, நடக்காதது, கற்பனை எல்லாம் சேர்த்து என்னென்னவோ எழுதியிருந்தார்கள். இதற்கு முன்பெல்லாம் அவர் அவற்றை ஏளனமாய் பார்ப்பார். ‘யார் என்னை என்ன செய்து விட முடியும்? நானிருக்கும் உயரம் என்ன தெரியுமா? நீங்கள் அத்தனை பேர் சேர்ந்து ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்றாலும் தொட முடியாத உயரம்என்ற எண்ணம் அவர் மனதில் ஓடும். ஆனால் இப்போதோ அவர்கள் அத்தனை பேரும் ஏறி நிற்கிறபடி மண்ணோடு மண்ணாக அவர் அமிழ்ந்து விட்டார்.

 

ஒரு பத்திரிக்கையில் சைத்ராவின் புகைப்படம் வெளியாகி இருந்தது. அதிலிருந்த சைத்ரா அவரைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. அவர் பார்வையைத் திருப்பிக் கொண்டார். இப்போது பேசப்படும் கொலையைப் பற்றி அவள் அவரிடம் தெரிவிக்க வந்த காட்சி இப்போதும் மனதில் பசுமையாக இருக்கிறது. அவருக்குத் தெரியாமல் யோகாலயத்தில் கொலை நடந்திருக்கிறது என்று பரபரப்புடனும், ஆதங்கத்துடனும் சொன்னாள் அந்த முட்டாள் பெண். அவர் அப்போதே பாண்டியனை வரவழைத்தார் அவள் சொன்ன புகாரைச் சொன்னார். பாண்டியன் சிரித்தார். அவரும் சேர்ந்து சிரித்தார். இருவரும் சேர்ந்து சிரிக்கையில் தான் அவளுக்கு எல்லாம் புரிந்தது. முதலில் நம்ப முடியாமல் அதிர்ந்த அவள் பின் அவரைக் கேவலமாகப் பார்த்தாள்.

 

பாண்டியனின் ஆட்கள் அவளை பாதாள அறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் அவள் சொன்னாள். “ஒரு நாள் உங்கள் கர்மாவும் உங்களைப் பார்த்துச்  சிரிக்கும்.”

 

அவள் சொன்ன நாள் வரும் என்று அவர் நம்பவில்லை. கர்மா என்பதே மனிதர்களைப் பயமுறுத்தி ஒழுக்கத்தில் இருக்க வைக்க ஆன்மீகவாதிகள் கண்டுபிடித்த வெற்று வார்த்தை என்று தான் அவர் நினைத்திருந்தார். புத்திசாலி எதிலும் மாட்ட வேண்டியதில்லை, சட்டத்தின் ஓட்டைகளில் சிரமம் இல்லாமல் தப்பிக்கலாம் என்பதற்கு அவருக்கு முன் உதாரணங்களும் நிறையவே இருந்திருக்கின்றன. ஆனால் அவள் சொன்ன நாள் இருந்திருப்பது மட்டுமல்லாமல் இவ்வளவு சீக்கிரமாக வந்து சேர்ந்தும் விட்டது கர்மாவில் ஓட்டைகள் இல்லை போலிருக்கிறது. அவரால் நழுவ முடியவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்



No comments:

Post a Comment