என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 9, 2025

சாணக்கியன் 182

 

மாலையில் நடக்கவிருந்த நடன நிகழ்ச்சிக்கு மலைகேதுவால் செல்ல முடியவில்லை. காரணம் வயிற்றுப்போக்கு. மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரத்தில் ஆரம்பித்தது மாலை வரை நிற்கவேயில்லை. மதிய உணவு உண்டதில் ஏதாவது பிரச்சினை இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்தாலும் பர்வதராஜனும் அதே உணவைத் தான் உண்டான் என்பதும், அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்பதும் அந்தச் சந்தேகத்தை நிராகரித்தன. மலைகேது உணவில் சுசித்தார்த்தக் வயிற்றுப் போக்குக்கான மருந்துகளைக் கலந்திருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.

 

மலைகேது அந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததற்கு மிகவும் வருந்தினான். சுசித்தார்த்தக் நர்த்தகி விஷாகாவின் அழகு குறித்தும், நாட்டியம் குறித்தும் சொல்லியிருந்தவை அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில் அவன் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. அவன் முகவாட்டத்தைப் பார்த்து பர்வதராஜன் வாய்விட்டுச் சிரித்தான். ”நாம் எண்ணியது போல எல்லா சமயங்களிலும் நடந்து விடுவதில்லை மகனே. சிறிய விஷயங்களுக்கு எல்லாம் நாம் வருத்தப்பட ஆரம்பித்தால் நம் வருத்தங்களுக்கு ஒரு முடிவு இருக்காது. நீ இன்று ஓய்வெடுத்துக் கொண்டு இளைப்பாறு. நாளைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.”   

 

மலைகேது தலையசைத்தான். அவனை சுசித்தார்த்தக்கும் இரக்கத்துடன் பார்த்துச் சொன்னான். “ஆம் இளவரசே. மேலும் நீங்கள் அரியணை ஏறிய பிறகு எந்த நேரம் வேண்டுமானாலும் விஷாகாவின் நடனத்தைக் கண்டு களிக்கலாம்....”

 

மலைகேதுவுக்கு அந்த வார்த்தைகள் ஆறுதல் அளித்தன. அவன் மீண்டும் தலையசைத்தபடி கழிவறைக்கு விரைந்தான்.

 

ர்வதராஜன் தனநந்தனின் நடன அரங்கைக் கண்டு மலைத்தான். இத்தனை அழகாய் இருக்கும் ஒரு அரங்கத்தை அவன் இது வரை பார்த்ததில்லை. செல்வத்தை இது போன்ற அழகுபடுத்தலுக்கெல்லாம் செலவழிப்பதில் தனநந்தன் கணக்குப் பார்ப்பதில்லை என்பது அரங்கைப் பார்க்கையிலேயே புரிந்தது.

 

நடன அரங்கில் அவனுக்கும் சந்திரகுப்தனுக்கும் சரிசமமாக ஆசனங்களை வைத்திருந்தது அவனுக்குத் திருப்தியளித்தது. மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆட்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். எனவே அவர்களது சில படைத்தலைவர்களும், முக்கிய அதிகாரிகளும் மட்டுமே வந்திருந்தார்கள். அனைவரும் அவன் வருவதைப் பார்த்து எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள்.  அவன் அமர்ந்த பின்னரே அமர்ந்தார்கள்.

 

இன்னும் சந்திரகுப்தன் அரங்கிற்கு வந்திருக்கவில்லை. தன் இருக்கையில் அமர்ந்தபடியே பர்வதராஜன் பார்வையைச் சுழல விட்டான். சந்திரகுப்தனைக் கொல்லப் போகிறவன் இந்த அரங்கிலேயே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. நடன அரங்கின் மேல் மாடத்தில் துர்தராவும், அவளது தாயும் அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் அவனை அங்கீகரிக்கவில்லை. அது அவனுக்கு ஆத்திரமூட்டியது. ஆனால் அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

 

சந்திரகுப்தன் அரங்கில் நுழைந்தான். பர்வதராஜனைத் தவிர அனைவரும் எழுந்து நின்றார்கள். ராஜகம்பீரத்தோடு அவன் நடந்து வருவதைப் பார்க்க பர்வதராஜனுக்குப் பொறாமையாக இருந்தது. ’மாடு மேய்ப்பவனுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாரேன்என்று மனதில் அங்கலாய்த்தான். அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அரசனானவனைப் போலவே சந்திரகுப்தன் நடந்து கொள்கிறான் என்பதை அவனால் மறுக்க முடியவில்லை. எல்லாம் ஓரிரு நாட்கள் தான் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டான்.

 

அவனுக்குக் கைகூப்பி வணக்கம் தெரிவித்த சந்திரகுப்தன் தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.  ஆசனத்தில் அமர்ந்தவுடன் அவன் பார்வை மேல் மாடத்திற்குப் போனதையும், அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவளுடைய பார்வையுடன் பூட்டிக் கொண்டதையும் பர்வதராஜன் கவனித்தான். அதை அவனால் சகிக்க முடியவில்லை. “நடனம் ஆரம்பிக்கட்டும்என்று உரத்த குரலில் ஆணையிட்டான்.

 

சந்திரகுப்தன் பார்வையை விடுவித்துக் கொண்டான். தங்கப்பதுமை போல் விஷாகா நடந்து வர அரங்கில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. அனைவரும் அவளை வைத்த கண் அகற்றாமல் பார்த்தார்கள். அழகு என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவள் போல் ஒய்யாரமாய் நடந்து வந்த விஷாகாவிடம் பலரும் மனதைப் பறி கொடுத்தார்கள். அவர்களில் பர்வதராஜனும் ஒருவனாக இருந்தான்.  சுசித்தார்த்தக் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டான்.

 

விஷாகாவுடன் ஆறு நடன அழகிகள் கூடவே வந்தாலும் அவள் அழகுக்கு முன் அவர்கள் அழகு பொலிவிழந்தது போலவே அவனுக்குத் தோன்றியது. அவனுக்கும் சந்திரகுப்தனுக்கும் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு விஷாகா நடனமாட ஆரம்பித்தாள். பர்வதராஜன் அவள் அழகிலும் நடனத்திலும் தன்னை மறந்தாலும் இடையிடையே சந்திரகுப்தனைக் கவனிக்கத் தவறவில்லை. சந்திரகுப்தன் பாதி நடனத்தையும் பாதி துர்தராவையும் ரசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.


விஷாகாவின் பார்வையோ பர்வதராஜன் மேலேயே நிலைத்திருந்தது. அது மகிழ்ச்சியாக இருந்தாலும் பர்வதராஜனுக்கு ஆச்சரியத்தையும் அளித்தது.

 

மதுக்கோப்பைகளை ஏந்தி வந்த சுசித்தார்த்தக்கிடமிருந்து பர்வதராஜன் ஒரு மதுக்கோப்பையை வாங்கிக் கொண்ட போது சுசித்தார்த்தக் தாழ்ந்த குரலில்  சொன்னான். ”விஷாகா உங்களுக்காகவே நடனமாடுவது போலிருக்கிறது அரசே. எதிர்கால அரசர் நீங்கள் தான் என்று தெரிந்து கொண்டு உங்கள் மனதில் இடம் பிடிக்க அவள் முயற்சி செய்கிறாள் என்று நினைக்கிறேன்.”

 

அதைக் கேட்க பர்வதராஜனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. திடீரென்று இளமை திரும்பியது போல் அவன் உணர்ந்தான். சுசித்தார்த்தக் சொல்வது போல அவள் அவனையே பார்த்தபடி தான் ஆடுகிறாள். அவள் அழகனும், இளைஞனுமான சந்திரகுப்தனைக் கூட கண்டுகொள்ளாமல் அவனுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது. அவள் அழகும், நளினமும் பர்வதராஜனை என்னென்னவோ செய்தன.  நீண்ட காலமாக போர் ஆயத்தங்களிலேயே கழித்து வந்ததால் சரச சல்லாபங்களுக்கு அவனுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. அவன் மற்ற அனைத்தையும் மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான்.    

 

ஒரு நடனம் முடிந்து அவள் சற்று இளைப்பாறச் சென்று விட வேறு நர்த்தகிகளின் நடனங்கள் தொடர்ந்தன. ஆனால் அவளைப் பார்த்து ரசித்த பர்வதராஜன் கண்களுக்கு மற்ற நடனங்கள் சோபை தரவில்லை. மறுபடி அவள் ஆட வரும் வரை அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. மறுபடி அவள் ஆட ஆரம்பித்தவுடன் அவளைப் பார்த்தபடியே பர்வதராஜன் காலத்தை மறந்தான். மறுபடி அவள் சென்று மற்றவர்கள் ஆட ஆரம்பிக்க மறுபடி பர்வதராஜன் இருப்பு கொள்ளாமல் தவித்தான்.

 

அடுத்த மதுக்கோப்பையைக் கொண்டு வந்து தந்த சுசித்தார்த்தக் அவனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “மன்னர் தனநந்தர் இருந்த வரை விஷாகாவின் நடனத்தை இத்தனை பேர் பார்க்க அனுமதித்ததே இல்லை. அந்த அளவு அவள் மேல் அவர் மையல் கொண்டிருந்தார். இந்த நடன அரங்கில் வலது புற மூலையில் ஒரு கதவு தெரிகிறதல்லவா? அது இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பின் மன்னர் தங்கி இளைப்பாறும் அறையின் கதவு. நடனம் முடிந்த பின் அவளும் அங்கே சென்று விடுவாள்….”

 

பர்வதராஜன் அவனை அர்த்தத்தோடு பார்க்க சுசித்தார்த்தக் மெலிதாகப் புன்னகைத்தான். சிறிது நேரத்தில் நடன நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. எல்லோரும் அங்கிருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள். விஷாகா பர்வதராஜனை ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள். பர்வதராஜனின் பார்வை அவள் பின்னாலேயே சென்றது. அவள் நடன அரங்கின் வலப்புற மூலைக் கதவைத் திறந்து சென்று மறைந்த போது அவன் மனம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.

 

சந்திரகுப்தன் அவனருகே வந்து சொன்னான். “நீங்கள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி மிக அருமை பர்வதராஜனே. கண்களையும் மனதையும் குளிர வைத்து விட்டீர்கள். நான் இப்படியொரு அழகான நடன நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை.”

 

பர்வதராஜன் புன்னகைத்தான். ’சாவதற்கு முன் இது போன்ற சில சந்தோஷங்களையும் அனுபவித்து விடு சந்திரகுப்தாஎன்று மனதிற்குள் முணுமுணுத்தான். ஆனால் வாய் விட்டு எதாவது பேச ஆரம்பித்தால் சந்திரகுப்தன் சற்று அதிக நேரம் அங்கு தங்கி விட வாய்ப்பிருப்பதால் அவன் அதைத் தவிர்த்தான். சந்திரகுப்தன் விடைபெற்றுச் செல்ல சிறிது நேரத்தில் சுசித்தார்த்தக்கும், பர்வதராஜனின் சில காவலர்களும் மட்டும் தான் அங்கிருந்தார்கள்.

 

பர்வதராஜன் சொன்னான். “நீங்கள் நம் அரண்மனைக்குச் செல்லுங்கள். நான் பின்பு வருகிறேன்.”

 

அவர்களும் சென்று விட பர்வதராஜன் வலது மூலை கதவு நோக்கி வேகமாக நடந்தான். கதவைத் திறந்து உள்ளே நுழைந்த போது அங்கிருந்த மஞ்சத்தில் தங்கப் பதுமை போல் பேரழகோடு மெல்லிய ஆடை அணிந்து விஷாகா அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவனைப் பார்த்து அவள் நாணத்தோடு எழுந்து நிற்க, பர்வதராஜன் அருகே சென்று அவளை அணைத்துக் கொண்டபடி மஞ்சத்தில் அமர்ந்தான். அங்கிருந்த விளக்கொளியில் அவள் கண்கள் ஜொலித்தன. அவள் இதழ்களின் ஈரம் அவனை மயக்கின. ஆசையுடன் அவள் இதழ்களில் முத்தமிட்ட பர்வதராஜன் காலத்தை மறந்தான். சிறிது நேரத்தில் தொண்டையில் ஏதோ கசப்பையும், எரிச்சலையும் அவன் உணர்ந்தான். பின் உடலெல்லாம் அந்த எரிச்சல் பரவி உடல் படுவேகமாகப் பலவீனமடைய ஆரம்பித்தது. பர்வதராஜன் பீதியடைந்து அவளிடமிருந்து விலகி எழுந்திருக்க முயன்றான். அவனால் முடியவில்லை. அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தபடி மஞ்சத்தில் சரிந்த அவன் உடல் துடிக்க சிறிது நேரத்தில் உயிரிழந்தான்.

 

  

(தொடரும்)

என்.கணேசன் 




1 comment: