என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 22, 2025

யோகி 121


ஷ்ரவன் எதிர்பார்த்தது போலவே, அவன் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் தோட்ட வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, கல்பனானந்தா அவனிடம் வந்தாள். அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்த போது அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள். அவன் அவளிடம் சொன்னான். “ரொம்ப நன்றி சுவாமினி

 எதற்கு?”

 ஷ்ரவன் எச்சரிக்கையுடன் சொன்னான். “இங்கே நான் இன்னொரு யோகியைப் பார்த்திருக்கிறீர்களா என்று உங்களிடம் கேட்டது தவறு தான். யோகிஜி இருக்கும் இடத்தில் இன்னொரு யோகியை நான் கேட்டிருக்கக்கூடாது. அது உங்களை வருத்தமடையச் செய்து விட்டது என்பது நீங்கள் பதில் எதுவும் சொல்லாமல் போனவுடன் தான் எனக்குப் புரிந்தது. அதைப் பெரிதுபடுத்தாமல் மன்னித்து நீங்கள் மறுபடியும் இயல்பாக என்னிடம் பழகுவதற்கு தான் நான் நன்றி சொன்னேன்.”

 நீங்கள் கேட்டதில் தவறில்லை. கேட்டதில் எனக்கு வருத்தமுமில்லை. அதனால் மன்னிக்க எதுவுமில்லை.” என்று கல்பனானந்தா அமைதியாகச் சொன்னாள்.

 சற்று நம்பிக்கை வர, ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நான் கேட்ட கேள்வியை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடாததற்கும் சேர்த்து தான் நன்றி சொன்னேன் சுவாமினி.”

 கல்பனானந்தா திகைப்புடன் அவனையே கூர்ந்து பார்த்தாள். அவன் இப்போது சொன்னதும் முன்பு போலவே அவளைப் பாதித்தது போல் தோன்றியது. அவள் மெல்ல சொன்னாள். “நீங்கள் அந்தக் கேள்வியைச் சும்மா கேட்டீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை ஷ்ரவனானந்தா. ஏதோ ஒரு காரணத்தோடு தான் கேட்டீர்கள் என்று இப்போதும் நான் நினைக்கிறேன்...”

 ஷ்ரவன் அவளிடம் கேட்டான். “இப்போது நான் எதாவது சொன்னாலும், அதையும் நீங்கள் வேறு யாருக்கும் சொல்ல மாட்டீர்கள் என்று நான் நம்பலாமா?”

 கண்டிப்பாக நம்பலாம். சொல்லுங்கள்.”

 ஷ்ரவன் தோட்ட வேலையைத் தொடர்ந்து செய்தபடியே தலையை உயர்த்தாமல் சொன்னான். “எனக்கு அடிக்கடி ஆவிகள் மூலமாகவும் ஏதாவது செய்திகள் வருவதுண்டு சுவாமினி. அப்படி ஒரு நாள், இங்கிருந்த ஒரு பெண் துறவியின் ஆவி என்னிடம் பேசியது...”

 கல்பனானந்தா திகைத்து அவளையுமறியாமல் இரண்டடி பின்வாங்கினாள். படபடப்புடன் அவள் கேட்டாள். “எந்தப் பெண் துறவியின் ஆவி?”

 ஷ்ரவன் சைத்ராவின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. “தெரியவில்லை சுவாமினி. அது யோகாலயத்தில் வாழ்ந்த துறவியின் ஆவியாக என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டது. அந்த ஆவி இங்கே வாழும் காலத்தில் ஒரு யோகியைச் சந்தித்ததாகவும், தன் தாத்தாவும் அந்த யோகியைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொன்னது. நான் யோகி பிரம்மானந்தாவைச் சொல்கிறதா என்று சந்தேகப்பட்டுக் கேட்டேன். அதற்கு அதுஅவரைச் சொல்லவில்லை, நிஜ யோகியைச் சொல்கிறேன்”  என்று சொல்லிவிட்டுப் போய் விட்டது. எனக்கு எதுவுமே புரியவில்லை...”

 கல்பனானந்தா அவனைத் திகைப்புடன் பார்த்தாள். அவளுடைய  அதிர்ச்சி கூடியதை ஷ்ரவன் கவனித்தான். “எனக்குத் தெரிந்த ஒரே யோகி, யோகிஜி பிரம்மானந்தா தான். அதனால் அந்த இன்னொரு நிஜ யோகி யாரென்று தெரிந்து கொள்ளத் தான், நீங்களும் பார்த்திருக்கிறீர்களா என்று உங்களைக் கேட்டேன்.”

 கல்பனானந்தா பதில் எதுவும் சொல்லாமல் சிலை போல் நின்றாள். அவனை எந்த அளவு நம்புவது, அவனிடம் என்ன சொல்வது என்று அவளால் தீர்மானிக்க முடியவில்லை என்பது அவளைப் பார்க்கையில் ஷ்ரவனுக்குப் புரிந்தது.

 அந்த சமயத்தில்  தூரத்தில் இருந்த கண்காணிப்பாளன் மெல்ல அவர்களை நோக்கி நடந்து வர ஆரம்பித்தான். கல்பனானந்தா அவனை ஓரக்கண்ணால் கவனித்து விட்டு அவசரமாகசாயங்காலம் பேசுவோம்என்று செடிகளைக் காட்டியபடி ஷ்ரவனிடம் சொன்னாள்.

 தூரத்தில் அதைக் கவனிக்கும் கண்காணிப்பாளனுக்கு அவள் அந்தச் செடிகள் பற்றி என்னவோ சொல்கிறாள் என்று தான் எண்ணத் தோன்றும். அவளுடைய புத்திசாலித்தனம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் நிதானமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

 வெளிப்பார்வைக்கு அவள் நிதானமாகவே நடந்தாலும் அவளுக்குள் பல்வேறு உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு ஏனோ ஷ்ரவன் மேல் சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அவனுக்குத் தெரியும் காட்சிகள் கூட நடிப்போ என்று கூடத் தோன்றியிருந்தது. ஆனால் பிரம்மானந்தாவும், பாண்டியனும் அவனை நம்பினார்கள் என்பது புரிந்த போது சற்று குழப்பமாகவும் இருந்தது. பிரம்மானந்தா அவசியம் வந்தால் ஒழிய யாரையும் அதிகம் கவனிப்பவர் அல்ல. அவரையும், அவருக்கு ஆக வேண்டிய காரியங்களையும் தவிர வேறு யார் மீதும், வேறெதிலும், அவருக்கு இப்போதெல்லாம் அக்கறை கிடையாது. அதனால் அவர் ஷ்ரவனுக்கு அதிக முக்கியத்துவம் தந்து கவனித்திருக்காமல் போகலாம். ஆனால் பாண்டியன் தன்னைச் சுற்றி நடக்கும் எதிலும் கவனக்குறைவாக இருப்பவர் அல்ல. சோதித்துப் பார்க்காமல் யாரையும் நம்பும் ரகமும் அவரல்ல. அப்படிப்பட்டவர் ஷ்ரவனை முழுமையாக நம்பியது முன்பே அவர் அவனைச் சோதித்துப் பார்த்திருப்பார் என்பதையே காட்டியது. அதனால் ஷ்ரவனை நம்பாமலும் அவளுக்கு இருக்க முடியவில்லை.

 ஷ்ரவன் அவளிடம் சொன்னதை எல்லாம் பிரம்மானந்தா, பாண்டியன் இருவருக்கும் அவள் தெரிவித்தாலும் கூட தனிப்பட்ட முறையில் அவன் மீது எந்த உறுதியான அபிப்பிராயமும் சற்று முன்பு வரை அவளுக்கு இல்லாமலிருந்தது. ஆனால் நேற்று அவன் சுவாமினி, நீங்கள் யோகிஜி தவிர வேறு எந்த நிஜ யோகியையாவது சந்தித்திருக்கிறீர்களா?” என்று கேட்டதும், இன்று, இறந்து போன ஒரு பெண் துறவி நிஜமான யோகியைப் பார்த்து இருக்கிறாள் என்றும் அவளுடைய தாத்தா அந்த யோகியை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் அவள் ஆவி விரும்புகிறது என்று அவன் சொன்னதும், அவனிடம் உள்ளதாகச் சொல்லி இருந்த சக்திகள் பொய்யல்ல என்பதை நிரூபித்து விட்டது. அவன் அந்தத் துறவியின் பெயரைச் சொல்லா விட்டாலும் அவன் யாரைச் சொல்கிறான் என்பதையும் அவள் அறிவாள். சைத்ரா அந்த யோகியைச் சந்தித்தது கல்பனானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பேயில்லை. ஏனென்றால் சைத்ரா உயிரோடு இருக்கையில் யாரிடமும் அதைத் தெரிவிக்கவில்லை என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். அப்படி இருக்கையில் ஷ்ரவன் அதைச் சொல்ல முடிந்தது சைத்ராவின் ஆவி மூலமாகக் கேள்விப்பட்ட தகவலாகவே தான் இருக்க வேண்டும். கல்பனானந்தாவின் மனம் பழைய நினைவுகளால் நிம்மதி இழந்தது

 எத்தனை தான் ஆன்மீகத்தில் ஆழமாகப் போயிருந்தாலும், எத்தனை தான் தத்துவங்களைப் புரிந்து வைத்திருந்தாலும், பிரச்சினையான சூழ்நிலைகள் வரும் போது மனம் ஞானத்திலிருந்து வழுக்கி அஞ்ஞானத்தில் அமிழ்ந்து விடுகிறது. ஆத்ம சொரூபம் மறந்து போய், சூழ்நிலைகளை மனம் எடுத்துக் கொள்ளும் விதமே நிஜமாகி விடுகிறது. எதையும் கடந்து போக மனம் அனுமதிப்பதில்லை. பயனில்லாத விஷயங்களையும், கற்பனையான புரிதல்களையுமே பிடித்து வைத்துக் கொண்டு மனம் கஷ்டப்படுகின்றது. விலகி நின்று பார்க்கும் போது புரிகின்ற எதுவும், ஒன்றில் கலந்து நின்று அனுபவிக்கும் போது புரிவதில்லை. அதனாலேயே அவள் விலகி நிற்கும் துறவறத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் மனம் விலகி நிற்கும் கலையை சுலபத்தில் கற்றுக் கொள்வதில்லை. திரும்பத் திரும்ப நினைவலைகளில் சிக்கிக் கஷ்டப்படும் முட்டாள்தனத்திலிருந்து மனம் தப்பிக்க முடிவதில்லை...

 இதை மணிக்கணக்கில் அவளால் பேச முடியும். இதை பக்கம் பக்கமாய் அவளால் எழுதவும் முடியும். பல சமயங்களில் அந்தப் புரிதலோடு அவள் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்திருக்கிறாள். ஆனால் எல்லாச் சமயங்களிலும் அந்த ஞானமும், மாறாத அமைதியும் அவளுக்குச் சாத்தியப்பட்டதில்லை. தற்சமயமும் அது போன்றது தான்...

 ஆனால் அந்த நிஜ யோகியால் வாழ்க்கையின் எந்தச் சூழலையும், எல்லாச் சமயங்களிலும் ஞானத்தெளிவுடனும், மாறாத அமைதியுடனும் சந்திக்க முடியும். ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டியிருப்பதைப் போல் அவரால் வாழ முடியும். அவள் அதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறாள். அவளைப் போல் அவர் நீண்ட சொற்பொழிவுகள் ஆற்றியதில்லை. யாருக்கும் எந்த உபதேசமும் அவர் செய்ததும் இல்லை. அவர் வாழ்க்கையே உபதேசமாக இருந்திருக்கிறது. அதுவே வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. சில காலமாக பிரச்சினையான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரும் போது, அவள் அவரை நினைத்து தான் அமைதியை மீட்டு எடுக்கிறாள். உடைந்து போகாமல் சூழ்நிலைகளைச் சந்திக்கிறாள். தத்துவங்களை விட, ஆன்மீகத்தை விட அது தான் அதிகமாக அவளுக்கு உதவுகிறது

 ஆனால் இன்று மட்டும் ஏனோ அவர் நினைவும் அவளுக்கு அமைதி தரவில்லை. காரணம், ஷ்ரவன் அவர் நினைவை மட்டுமல்லாமல் அவள் மனதில் புதைந்திருந்த கடந்த கால நினைவுகளையும் சேர்த்துக் கிளறி விட்டிருந்தான்...

(தொடரும்)

என்.கணேசன்






3 comments:

  1. இங்கே உள்ள பல வரிகள் கதைக்காக மட்டுமல்ல .... வாழ்க்கைக்கு ஆன ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்த பொன் எழுத்துக்கள் ......

    ReplyDelete
  2. ஆன்மீக‌ பாதையில் செல்பவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அப்படியே கூறியிருக்கிறீர்கள்... அற்புதமான வரிகள்...நன்றி

    ReplyDelete
  3. வாவ் கணேசன் சார்..

    ReplyDelete