பர்வதராஜன் மகனிடம்
சொன்னான். “மகனே. ஆச்சாரியரைப் போன்ற ஆளுக்குப் பேச்சு சாமர்த்தியத்தால் எதையும்
அவருக்கு வேண்டியபடி மாற்றிக் கொள்வது முடியாதது அல்ல. நியாயமாக
நடந்து கொள்ளும் மனிதராக இருந்திருந்தால் பாடலிபுத்திரத்தை வென்று நாம் உள்ளே வந்த
பிறகு அவர் எல்லாத் தீர்மானங்களையும் என்னைக் கலந்தாலோசித்தே எடுத்திருக்க வேண்டும். ராக்ஷசர் கிடைத்தால்
தான் வெற்றி முழுமையாக இருப்பதாக அர்த்தம் என்றும், அதுவரை
அவரே எல்லா முடிவுகளையும் எடுப்பது தான் அனுகூலமாக இருக்கும் என்றும் சாமர்த்தியமாகச்
சொல்லி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டார். ராக்ஷசர் பிடிபட்டாலும்
அதை ஆச்சாரியர் சொன்னால் ஒழிய நமக்குத் தெரியாது என்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம். அவர் சந்திரகுப்தனின்
திருமணம் முடிந்து, ராக்ஷசரின் ஆதரவையும் பெற்ற பின் கூட நமக்கு அதைத் தெரிவிக்கும்
அபாயம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்த பின் ஏதாவது ஒரு சில்லறைக்காரணம்
சொல்லி சமபாதி தருவதை அவர் தட்டிக் கழித்தால் நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம்
நம் கைமீறிப் போன பிறகு நாம் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை என்பதால், ஏதாவது
செய்வதானால் இப்போதே அதைச் செய்வது தான் புத்திசாலித்தனமாக இருக்கும்.”
மலைகேது கேட்டான். “முதலாவது
இவனுக்கு ராக்ஷசர் இருக்கும் இடம் தெரியுமா, தெரிந்தாலும்
சொல்வானா என்பதே நிச்சயமில்லை. அப்படியே ராக்ஷசர் இருக்குமிடம்
நமக்குத் தெரிந்தாலும் அந்த ஆள் இப்போதிருக்கும் நிலையில் என்ன செய்ய முடியும் என்பதும்
நமக்கு நிச்சயமில்லை. அப்படி இருக்கையில் இந்த ஆபத்தான வேலையில் நாம் ஏன் இறங்க
வேண்டும் தந்தையே”
பர்வதராஜன் திருப்தியுடன் புன்னகைத்தான். மகன் ஓரளவு
அறிவுபூர்வமாக யோசிக்கக் கற்றுக் கொண்டு விட்டான். “மகனே. இப்போதே
வெளிப்படையாக நாம் ஆச்சாரியரை எதிர்க்கப் போவதில்லை. சுசித்தார்த்தக்
மூலம் ராக்ஷசரைச் சந்திக்க முடியுமா என்று பார்ப்போம். அப்படிச்
சந்தித்தால் அவரால் ஆச்சாரியரையும் சந்திரகுப்தனையும் எதிர்த்து ஏதாவது செய்ய முடியுமா
என்று பார்ப்போம். ராக்ஷசர் ஆச்சாரியருக்கு இணையான அறிவாளி. அதனால்
அவரால் முடியும் என்றால் அவரிடம் பேரம் பேசுவோம். உனக்கும்
துர்தராவுக்கும் திருமணம் செய்து கொடுத்து, ஆச்சாரியர்
நமக்கு வாக்களித்த சமபாதி நிதி, நிலம் தர முடியுமா என்று கேட்போம். அவர் சம்மதித்தால்
அவருக்கு நட்புக்கரம் ரகசியமாக நீட்டுவோம். அவரால்
முடியா விட்டால் அவரைக் கைவிட்டு விடுவோம். அவரால்
முடிந்தால் ஆச்சாரியரைக் கைவிட்டு விடுவோம். யாரைக்
கைவிடுவது என்பதை முடிவில் தீர்மானித்துக் கொள்வோம். அதுவரை
இருபக்கத்திலுமே தொடர்பில் இருப்போம். என்ன சொல்கிறாய்?”
மலைகேது தந்தையின் அதிபுத்திசாலித்தனத்தை
மெச்சியபடி தலையாட்டினான்.
சுசித்தார்த்தக் அன்று
முழுவதும் ஆழ்ந்த ஆலோசனையில் இருப்பது தெரிந்தது. ஏதோ இரு
முடிவுகளுக்கிடையே எந்த முடிவை எடுப்பது என்று அவன் குழப்பத்தில் இருந்தது போல் தெரிந்தது. பர்வதராஜன்
அவனிடம் வேடிக்கையாகச் சொன்னான். “சுசித்தார்த்தக், நாங்கள்
மகதத்தை வெல்வது எப்படி
என்று கூட இந்த அளவுக்கு ஆலோசிக்கவில்லை. நீ ஆலோசிப்பதைப்
பார்த்தால் நீ அதை விடப் பெரிய ராஜ்ஜியம் ஏதோ ஒன்றைப் பிடிக்க யோசிக்கிறாய் என்றல்லவா
எனக்குத் தோன்றுகிறது”
சுசித்தார்த்தக் வெட்கப்பட்டான். “அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை அரசே. இந்த ஏழைக்கு அந்த அளவு பெரிய ஆசையெல்லாம் இல்லை” என்றவன்
அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து எச்சில் விழுங்கியபடி வந்து அவரிடம்
கேட்டான். “அரசே. நீங்கள் பிரதம அமைச்சர் ராக்ஷசரைச்
சந்திக்க ஆசைப்பட்டது நிஜம் தானா? இல்லை சும்மா வேடிக்கையாகச் சொன்னீர்களா?”
பர்வதராஜன் மகனை ஒரு அர்த்தமுள்ள பார்வை
பார்த்துவிட்டு சுசித்தார்த்தக்கிடம் சொன்னான். “சுசித்தார்த்தக், உண்மையாகத்
தான் சொன்னேன். ஏன் கேட்கிறாய்? உனக்கு
அவர் இருக்குமிடம் தெரியுமா?”
சுசித்தார்த்தக் பயமும், ஆர்வமும்
கலந்த பார்வை பார்த்து விட்டுத் தாழ்ந்த குரலில் சொன்னான். ”எனக்குத்
தெரியாது அரசே.”
பர்வதராஜன் அவனிடம் உரிமையோடு கோபித்துக்
கொண்டான். “நீ என்னை இன்னும் நம்ப மறுக்கிறாய் என்பது எனக்கு வருத்தத்தைத்
தருகிறது சுசித்தார்த்தக்.”
சுசித்தார்த்தக் சொன்னான். “உண்மையைத்
தான் சொல்கிறேன் அரசே. அவரிருக்குமிடம் எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையாக
அவரிருக்கும் இடம் தெரிந்த ஆளை எனக்குத் தெரியும்.”
“யாரவன்?” பர்வதராஜன்
ஆர்வத்துடன் கேட்டான்.
சுசித்தார்த்தக் தயக்கத்துடன் சொன்னான். ”நான் சொன்னது
தெரிந்தால் அவன் என்னைக் கொன்றே விடுவான்..... என்னை நீங்கள்
வேலைக்காக வெளியே அனுப்பிய
போது நீங்கள் சொன்னதை எல்லாம் அவனிடம் சொல்லி நீங்கள் பிரதம அமைச்சர் ராக்ஷசரைச்
சந்திக்க ஆசைப்படுவதாகச் சொன்னேன். அதற்கு அவன் என்னை
அதிகப்பிரசங்கி என்றும், முட்டாள் என்றும் திட்டினான். நீங்களும், ஆச்சாரியரும்
ஒரே நோக்கத்தை உடையவர்கள் என்றும், பிரதம அமைச்சர் ராக்ஷசரைச்
சிறைப்பிடிக்க நீங்கள் போடும் திட்டம் தான் இது என்றும் சொல்கிறான்.”
பர்வதராஜன் சொன்னான். “அவனைத்
தவறு சொல்ல முடியாது சுசித்தார்த்தக். அவன் பார்வையில் நானும், சந்திரகுப்தனும்,
சாணக்கியரும் சமமான எதிரிகள். மகதம் மீது படையெடுத்து வந்து வென்ற எதிரிகள். உண்மை
அதுவாக இருப்பதால் அவன் நிலைமையில் நான் இருந்திருந்தால் நானும் அவனைப் போலவே
சந்தேகித்திருப்பேன். சூழ்ச்சியும், சதியும் நிரம்பிய
உலகமல்லவா இது. யாரும் சொல்லும் வார்த்தைகளை மட்டும் நம்பி எச்சரிக்கையாக
இல்லாமல் இருந்தால் ஏமாந்தல்லவா போக வேண்டி இருக்கும்.”
சுசித்தார்த்தக் பர்வதராஜனை மிகுந்த
மரியாதையுடன் பார்த்தான். “எத்தனை பக்குவத்துடன் அவனையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்
அரசே. உங்களைப் போய் அவன் சந்தேகப்பட்டு விட்டானே என்று எனக்கு
வருத்தமாக இருக்கிறது.”
பர்வதராஜன் சொன்னான். “சுசித்தார்த்தக்
நீ அவனிடம் போய் சொல். நான் என் மகன் மலைகேது தலை மீது கை வைத்து சத்தியம் செய்து
சொல்கிறேன். கண்டிப்பாக என் உத்தேசம் ராக்ஷசரைக்
காட்டிக் கொடுப்பதல்ல. அவரைப் பார்த்துப் பேச ஆசைப்படுகிறேன் அவ்வளவு தான். அதுவும்
ஆச்சாரியரின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு மனமொடிந்து போனதால் தான் அந்த விருப்பமும்
கொண்டேன். நான் ராக்ஷசரைச் சந்தித்துப்
பேசினேன் என்று தெரிந்தாலே ஆச்சாரியர் என்னை எதிரியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்
என்ற ஆபத்து எனக்கும் இருக்கிறது. அதை அவனுக்கு
எடுத்துச் சொல்”
சுசித்தார்த்தக் யோசித்து விட்டுச்
சம்மதித்தான். பிறகு அவன் வெளியே சென்று சிறிது நேரம் கழித்து வந்து பர்வதராஜனிடம்
சொன்னான். “அரசே. அந்த ஆளிடம் நீங்கள் கூறியதைச் சொன்னேன். அவன் தற்போதும்
முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரியாக இருப்பதால் தங்களிடம் தன்னை வெளிப்படுத்திக்
கொள்ள விரும்பவில்லை. அவன் ராக்ஷசர் தற்போது மறைந்திருக்கும்
இடத்தையும் தெரியப்படுத்த மறுத்து விட்டான். ஆனால் அவன்
ராக்ஷசரை நீங்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதற்குச் சம்மதித்திருக்கிறான்.”
பர்வதராஜன் சொன்னான். “அது போதும்
சுசித்தார்த்தக். நான் உன் நண்பனின் எச்சரிக்கையுணர்வை மதிக்கிறேன். அவரவர்
பாதுகாப்பு அவரவருக்கு முக்கியம். நான் எப்போது ராக்ஷசரைச்
சந்திப்பது? எப்படிச் சந்திப்பது?”
“அவன் ஒரு
பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்த பின் சொல்கிறானாம். அதிகாலையில்
மாறுவேடத்தில் வரச் சொல்கிறான். நள்ளிரவு வரையும் கூட ஆச்சாரியரின் ஒற்றர்கள் முக்கிய இடங்களையும், மனிதர்களையும்
கண்காணிக்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். அதன் பின்
அவர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதில்லையாம்.”
“எப்போது
எங்கே எப்படி அவன் வரச் சொல்கிறானோ அப்படியே வருகிறேன் சுசித்தார்த்தக். இந்த
சூழ்நிலையில் ஆச்சாரியரின் கவனத்திற்கு வர நானும் விரும்பவில்லை.” என்று பர்வதராஜன்
சொன்னான்.
(தொடரும்)
என்.கணேசன்
சாணக்கியன் தற்போது வெற்றிகரமான இரண்டாம் பதிப்பில் ...
No comments:
Post a Comment