என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 7, 2025

சாணக்கியன் 173

 

சாணக்கியர் சொன்னார். ”பர்வதராஜனே. கொடுத்த வாக்கு மாறுவதும், மானமிழந்து வாழ்வதும் ஒன்று என்ற கொள்கையில் இருப்பவன் நான். அதனால் அவன் அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் என்னால் மறுக்க முடியவில்லை. அதை நான் ஒத்துக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று

 

பர்வதராஜன் உடனே சொன்னான். “நீங்கள் ஒத்துக் கொண்டாலும் சந்திரகுப்தன் ஒத்துக் கொள்ள வேண்டியதில்லையே. அவனுக்குத் தன் திருமணத்தை முடிவெடுத்துக் கொள்ளும் பரிபூரண சுதந்திரம் இருக்கிறதல்லவா? அதனால் அவன் தாராளமாக மறுக்கலாமே.”

 

சந்திரகுப்தன் சொன்னான். “ஆச்சாரியர் வாக்கு மாறினார் என்ற பழிச்சொல் என்னால் வருவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் நானும் இத்திருமணத்திற்குச் சம்மதித்து விட்டேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “இவனைப் போன்ற ஒருவன் என் மாணவனாக இருப்பது என் பாக்கியமே அல்லவா பர்வதராஜனே. திருமணத்திற்கு நான் ஒத்துக் கொண்டாலும் திருமணம் முடியும் வரை தனநந்தன் இங்கிருக்க முடியாது என்று மிகத் தெளிவாகச் சொல்லி விட்டேன். அவன் மகளின் தாய் வேண்டுமானால் இங்கிருக்கட்டும், அவன் நான் சொன்னபடி இன்றைய சூரியாஸ்தமனத்திற்கு முன் போய் விட வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவன் இப்போது கிளம்பிக் கொண்டிருக்கிறான். அவன் கிளம்பும் போது வெறும் கையில் போவது அவன் மகள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி விடும் என்று தோன்றியதால் அவன் ரதத்தில் அவன் மனைவி, உடைகள் சேர்ந்த பின் மீதமிருக்கும் இடத்தில் எத்தனை செல்வத்தை அவனால் கொண்டு செல்ல முடியுமோ அத்தனை செல்வத்தையும் கொண்டு செல்லவும் அனுமதித்திருக்கிறேன். அது அதிகமாக இருக்க முடியாது என்றாலும் அந்த அனுமதியை அவனுக்கு நான் தந்திருக்கிறேன். நாம் செல்வத்தைப் பிரிக்கும் போது எங்கள் பங்கிலிருந்து அந்தச் செல்வத்தை நீ கழித்துக் கொள்ளலாம்.”

 

அதற்கு மேல் பர்வதராஜனுக்கு ஆட்சேபணை சொல்ல எதுவுமில்லாமல் இருந்தது அவர் பேச்சு என்றாலும் பர்வதராஜன் தன் அதிருப்தியைத் தெரிவிக்க நினைத்தான். “வெற்றிக்குப் பின் தனநந்தன் விஷயத்தை நீங்களாகவே தீர்மானித்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை நான் வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன் ஆச்சாரியரே

 

சாணக்கியர் அவன் அதிருப்தியில் எந்த விதமான பாதிப்பும் அடையாதவராகச் சொன்னார். “நீ விருப்பு வெறுப்பின்படி சிந்திப்பதைத் தாண்ட வேண்டும் என்று உனக்கு அறிவுறுத்த வேண்டியவனாக நானிருக்கிறேன் பர்வதராஜனே. தனநந்தன் எனக்குப் பரம எதிரியாக இருந்த போதும் இந்த வேளையில் அந்த வெறுப்பு நாம் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானிப்பது தவறு என்று நான் நினைக்கக் காரணமே மக்களின் மனதில் நம் மீது நன்மதிப்பு குறைந்துவிடக்கூடாது என்பதால் தான்

 

பர்வதராஜன் எரிச்சலுடன் கேட்டான். “மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ஆச்சாரியரே? நம் தீர்ப்பை அனுசரிக்க வேண்டியவர்கள் அல்லவா அவர்கள்?” 

 

சாணக்கியர் சொன்னார். “நாம் இன்று மகதத்தை வெல்ல முடிந்ததற்கு முக்கிய காரணம் மக்களுக்கு தனநந்தன் மீதிருந்த அதிருப்தியும் என்று நீ மறந்து விடக்கூடாது பர்வதராஜனே. நமக்கு நாளை எதிரிகள் உருவானால் மக்கள் அவர்களுக்கு ஆதரவான நிலை எடுத்து விடும் முட்டாள்தனத்தை நாம் செய்துவிடக் கூடாது.”

 

ஆனாலும் தனநந்தனுக்கு அவ்வளவு கருணை காட்டியிருக்கத் தேவையில்லை. அவன் இனியும் நமக்கு எதிராக நடந்து கொள்ள மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?”

 

அப்படி நடந்து கொண்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவனைத் தண்டிப்பேன் பர்வதராஜனே. அதற்கு மேலும் கருணை காண்பிக்க நான் கடவுள் அல்ல. என் கொள்கை ஒன்றே ஒன்று தான். நான் எப்போதும் நியாயமாக நடந்து கொள்வேன். கொடுத்த வாக்கை என்றும் மீற மாட்டேன். ஆனால் அதையே என் பலவீனமாக நினைத்து யாராவது எதிராகச் சதியில் ஈடுபட்டால் அதே வழியில் அவர்களைக் கையாளத் தயங்க மாட்டேன்.”

 

அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னதைக் கேட்டு பர்வதராஜன் சிறிது மௌனம் சாதித்து விட்டுக் கேட்டான். “ராக்ஷசர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையா ஆச்சாரியரே?”

 

அவர் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் வேலையாட்கள், காவலர்களிடம் விசாரித்து வருகிறேன். அவர் எங்கேயாவது மறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றால் அது எந்த இடம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்.. இது வரை திட்டவட்டமாக எதுவும் தெரியவில்லை.... இங்கு இருக்கும் பணியாள் ஒருவன் கூட அவர் வீட்டில் பணி புரிந்தவன், அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவனையும் விசாரிக்க வேண்டும்...”

 

பர்வதராஜன் சுசித்தார்த்தக்கை சத்தமாக அழைக்க, சுசித்தார்த்தக் தயங்கியபடி அங்கே வந்தான். சாணக்கியர் அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “நீ எத்தனை ஆண்டுகளாக ராக்ஷசரிடம் பணி புரிந்தாய்?”

 

பத்து வருடங்கள் இருக்கும் பிரபு

 

அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் நீ என்றும் அவர் ரகசியங்கள் பலவும் அறிந்தவன் நீ என்றும் கேள்விப்பட்டிருந்தேனே அது உண்மை தானா?”

 

சுசித்தார்த்தக் பதறியபடி சொன்னான். “யாரோ புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் பிரபு. அவர் பணியாட்களிடம் எல்லாம் நெருக்கமாக இருப்பவர் அல்ல. எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே வைத்திருக்கக்கூடியவர். எப்போதும் கடுகடுவென்றே இருப்பவர் என்பதால் தான் அவர் சொந்தப் பெயரை விட்டு விட்டு அவரை ராக்‌ஷசர் என்று அனைவரும் அழைக்கிறார்கள்...”

 

அவர் தற்போது எங்கேயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?”

 

சத்தியமாகத் தெரியாது பிரபு

 

சாணக்கியர் யோசித்தபடி அவனையே கூர்ந்து பார்த்திருந்து விட்டு அவனை அனுப்பி விட்டார். பின் அங்கிருந்து கிளம்பியவர் பர்வதராஜனிடம் ரகசியமாய் சொன்னார். “எனக்கென்னவோ இவன் கூடுதலாக அறிந்திருப்பான், எதையோ மறைக்கிறான் என்று தோன்றுகிறது. நீ எப்போதும் இவன் மேல் ஒரு கண் வைத்திருப்பது நல்லது.”

 

அவர்கள் போன பின்பு பர்வதராஜன் யோசனையில் ஆழ்ந்தான். மலைகேது தந்தையிடம் கேட்டான். “என்ன யோசிக்கிறீர்கள் தந்தையே?”

 

பர்வதராஜன் சொன்னான். “இந்த இரண்டு தந்திரக்காரர்களையும் எந்த அளவு நம்பலாம் என்று யோசிக்கிறேன் மகனே

 

ஆச்சாரியர் நம்மிடம் எதையும் மறைக்கவில்லையே தந்தையே.”

 

எதையும் அவர் மறைக்கவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும் மகனே. அவர் தனநந்தனிடம் பேசும் போது அங்கு நாமிருக்கவில்லையே. ஆச்சாரியரைப் போன்ற அறிவாளி வாக்குக் கொடுத்து ஏமாறும் ரகமல்ல. எனக்கென்னவோ அவரே தனநந்தனிடம் பேரம் பேசி சந்திரகுப்தனுக்கு துர்தராவைத் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்திருக்கலாம்...”

 

அதனால் அவருக்கென்ன லாபம்?”

 

மகத அரியணையை சந்திரகுப்தனுக்காக அவர் குறித்து வைத்திருப்பதாக என் உள்மனம் சொல்கிறது. அதற்கு அச்சாரமாகவே அவர் சாமர்த்தியமாக அதைச் செய்திருக்கலாம். அவள் அரசியாகிறாள் என்றால் தனநந்தனின் ஆதரவாளர்களும் சந்திரகுப்தனை ஆதரிக்கும் வாய்ப்பிருக்கிறது அல்லவா?   மகதத் தலைநகரையும், முக்கியமான பகுதிகளையும் அவர்கள் எடுத்துக் கொண்டு முக்கியமல்லாத பகுதிகளை நம் தலையில் கட்டப்பார்க்கும் உத்தேசம் அவருக்கு இருக்க வாய்ப்புண்டு. சரி பாதியாய் எல்லாவற்றையும் பிரித்துக் கொள்வது என்று பேசிக் கொண்டோமே ஒழிய எதுயெது யாருக்கு என்று பேசிக் கொள்ளாததை அவர் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது மகனே.”

 

அதற்கு நாம் ஒத்துக் கொள்ளாவிட்டால் அவர் என்ன செய்ய முடியும் தந்தையே?”

 

நாம் கேட்க வேண்டிய கேள்வி அதுவல்ல மகனே, நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விநாம் கேட்பதற்கு அவர் ஒத்துக் கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும் என்பது தான்.”

 

எப்படிப் பிரித்தாலும் கிடைப்பது நமக்கு லாபம் தானே தந்தையே. இந்த வெற்றிக்காக நாம் அதிகம் கஷ்டப்படவில்லையே

 

முட்டாளே. நீயே இப்படிப் பேசினால் எப்படி? அவர் கொடுத்த வாக்கை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நமக்கு மிகுந்த இலாபம் தரும்படியான பகுதிகளையும், செல்வத்தையும் பிரித்தெடுத்துக் கொள்ளத் தான் நாம் யோசிக்க வேண்டுமேயொழிய நமக்கு எதிரான நியாயத்தை நாம் யோசிக்கக் கூடாது....”

 

சரி தான். நாம் கவலைப்பட பெரிதாக எதுவும் இல்லை என்று உங்களிடம் தான் நான் சொல்ல வந்தேன் தந்தையே. நீங்கள் அவரிடம் பேரம் பேசும் போது நான் இதையெல்லாம் சொல்லப் போவதில்லைஎன்ற மலைகேது குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். “சுசித்தார்த்தக்குக்கு ராக்ஷசர் பற்றிக் கூடுதல் தெரிந்திருக்கும் என்று ஆச்சாரியர் சொல்கிறாரே அவனிடம் நீங்கள் கேட்டுப் பார்த்தால் என்ன? ராக்ஷசரை சிறைப்பிடித்து விட்டால் பின் சாணக்கியர் பங்கீட்டைத் தொடர்ந்து தாமதிக்க முடியாதல்லவா?”

 

(தொடரும்)

என்.கணேசன்    



  

2 comments:

  1. சாணக்கியர் பேசியபடியே வென்றதில் பாதியை கொடுப்பார்..ஆனால், அதை முழுவதுமாக பர்வதராஜன் கையிலேயே கொடுக்காமல், மற்ற மூன்று மன்னர்களுக்கும் சேர்த்து பங்கிட்டு கொடுப்பார்..என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  2. மிக அருமையான பார்வை "நாம் கேட்பதற்கு அவர் ஒத்துக் கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும் என்பது தான்.”

    ReplyDelete