தனநந்தன் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இறுகிய முகத்துடன் சாணக்கியரை வெறித்துப் பார்த்தான்.
சாணக்கியர் அவனுக்கு எதிரே இருந்த ஆசனத்தில்
அமர்ந்தார். தனநந்தன் வறண்ட குரலில் சொன்னான். “நீ வென்று
விட்டாய் சாணக்கின் மகனே. இப்போது மகிழ்ச்சியல்லவா?”
சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “நீர்க்குமிழி
வாழ்க்கையில் வெற்றியென்ன தோல்வி என்ன தனநந்தா. யாரேயானாலும்
ஒவ்வொரு கட்டத்திலும் இரண்டையும் மாறி மாறியல்லவா சந்திக்க
வேண்டியிருக்கிறது. வென்றவனானாலும், தோற்றவன்
ஆனாலும் எல்லோருடைய
முடிவும் மரணமாகவே அல்லவா இருக்கிறது. அப்படியிருக்கையில்
மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது?”
தனநந்தன் ஏளனமாகச் சிரித்தான். “மிக அழகாகத்
தத்துவம் பேசுகின்றாய். ஆனால் உன் செயல்களோ சூழ்ச்சியும் திருட்டுத்தனமுமாக அல்லவா
இருக்கின்றன.”
“ஒவ்வொருவருடைய
இயல்பைப் பொருத்தபடியே அவரவரிடம் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது தனநந்தா. மகான்களிடம்
நடந்து கொள்வது போல உன்னிடம் நடந்து கொள்ள முடியுமா?”
அடக்கமாக இருப்பவர் போல் தத்துவத்தில்
பேச்சை ஆரம்பித்த சாணக்கியரின் இந்த வார்த்தைகள் ஏளனமாக இருப்பதை உணர்ந்த தனநந்தன் சாணக்கின் மகன் கேலி பேசும் நிலைக்கு
அவன் வந்து விட்டதில் மனம் புழுங்கினான். ”உன் தந்தை பேச்சில் மட்டும் கெட்டிக்காரனாக இருந்தான்.
நீ பேச்சிலும் செயலிலும் கெட்டிக்காரனாக இருக்கிறாய்.”
சாணக்கியர் தந்தையின்
நினைவுகளில் அலைக்கழிக்கப்பட்டபடி சொன்னார். “பேச்சில் மட்டும் கெட்டிக்காரராக இருந்த
என் தந்தை உன்னால் சிறைப்பிடிக்கப்பட்டு பின் என்ன ஆனார், எப்போது இறந்தார், இறந்தபின்
எரிக்கப்பட்டாரா, புதைக்கப்பட்டாரா என்று இந்த நாள் வரை தெரியாமல் நான் இருக்கிறேன்
தனநந்தா.. என் தந்தை சிறைப்பட்ட பின் எனக்கு பிக்ஷையும் கிடைக்காமல், என் தாயும்
இறந்து, நான் பட்டினியோடு இதே பாடலிபுத்திர வீதிகளில் வலம் வந்திருக்கிறேன்
தனநந்தா. கல்வியும், பேச்சும், நீதி நேர்மையும் மட்டுமிருந்து ஒருவன்
நல்லபடியாக பிழைத்து விட முடியாது என்ற பாடம் கிடைத்த பின் சாணக்கின் மகனுக்கு மற்றவற்றிலும்
கெட்டிக்காரனாகும் கட்டாயம் அமைந்து விட்டது.”
தனநந்தன் விரக்தியுடன்
சொன்னான். “கெட்டிக்காரனாகி எல்லாக் கணக்கையும் சரிபார்த்து பழி தீர்த்துக் கொண்டாய்
வாழ்த்துக்கள்.”
சாணக்கியன் சொன்னார்.
“எல்லாக் கணக்குகளையும் சரிபார்க்கவும், தீர்க்கவும் முடிந்த சக்தி கடவுளுக்கு மட்டுமே
உண்டு தனநந்தா. அதனால் அந்த முயற்சியில் நான் இறங்கவில்லை. சிலவற்றை உன் வழியில் பழி
தீர்க்கவும் நான் விரும்பவில்லை. என் தந்தையின் பிணத்தைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை.
அவருக்கான ஈமச்சடங்குகள் செய்யும் பாக்கியமும் எனக்கு நீ தரவில்லை. ஆனால் அதே தீர்ப்பை
உனக்கும் தர நான் விரும்பவில்லை. உன் பிள்ளைகளின் ஈமச்சடங்குகளைச் செய்ய உன்னை அனுமதிக்கிறேன்.
அதைச் செய்ய உன் குலகுருவை அழைத்திருக்கிறேன். அவை எதிலும் பங்குபெற உன் குடும்பத்தினரைத்
தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. ஒரு தந்தையாக அந்தக் கடமையை முடி. பிறகு உன்னைச்
சந்திக்கிறேன்.”
சாணக்கியர் எழுந்து
சென்று விட்டார்.
சின்ஹரனின் ஈமச்சடங்குகளை
சந்திரகுப்தனே செய்தான். அவனுக்கு ஒரு சகோதரனாக, போர்ப்பயிற்சிகளில் ஆசிரியனாக, கடந்த
சில போர்களில் தோளோடு தோள் கொடுத்து நண்பனாக உடனிருந்தவன் சின்ஹரன். அதனால் அந்தச் சடங்குகளை மனப்பூர்வமாக சிரத்தையுடன்
அவன் செய்யும் போது சாணக்கியரும் அவனுடன் இருந்தார். அந்தச் சடங்குகளை முடித்து விட்டு
அவர்கள் கங்கைக்கரையிலிருந்து திரும்பிய போது ஒரு விரன் வேகமாக
வந்து அவர்களை வணங்கி விட்டுச் சொன்னான். “ஹிமவாதகூட
அரசர் தங்களைக் காண வேண்டும் என்று அவசரப்படுகிறார் ஆச்சாரியரே. தாங்கள்
சிறிது நேரத்தில் வந்து விடுவீர்கள் என்று சொன்னாலும் அவர் கேட்காமல் உங்களை உடனே காண
வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்கிறார்.”
ஆச்சாரியர் சந்திரகுப்தனை அர்த்தமுள்ள
பார்வை பார்த்து விட்டுச் சொன்னார். “இதோ வருகிறோம் என்று
சொல் வீரனே”
பர்வதராஜன் கடும் அதிருப்தியில் இருந்தான். எதுவும்
அவன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்பதே அவன் அதிருப்தியின் முக்கிய காரணமாக இருந்தது. அவன் ஆரம்பத்தில்
தன் சாமர்த்தியத்தால் சாணக்கியரை மடக்கி விட்டதாக எண்ணியிருந்தான். ஆனால் போகப்
போக அவர் சாமர்த்தியத்திற்கு அவன் இசைந்து போய்க் கொண்டிருப்பதாகத் தோன்ற ஆரம்பித்து
விட்டது. மகதத்தை அவர்கள் வென்று விட்ட போதும் அந்த வெற்றியை அவனால்
உளமாரக் கொண்டாட முடியவில்லை. தனநந்தனின் படையினர் தோற்று சரணடைந்து விட்ட பின் எழுந்த
முழக்கம் சந்திரகுப்தனின் வெற்றியைச் சித்தரித்த முழக்கமாக இருந்தது. யாருமே
பர்வதராஜனை வாழ்த்தி முழக்கம் இடவில்லை. எண்ணிக்கையில் சொற்பமாக
இருந்தாலும் ஹிமவாதகூட வீரர்களே கூட சந்திரகுப்தனை வாழ்த்தியே முழக்கமிட்டார்கள்.
காரணம் சந்திரகுப்தனின் வீரமும், திறமையும், ஆளுமையும்
என்பதை பர்வதராஜனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த முற்றுகையின்
போதும் பின் நடந்த போரின் போதும் அவனும் அவன் மகனும் தீவிரமாகப் பங்கேற்காமல் பக்கவாட்டில்
வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்கள் போலத் தான் அதிக நேரங்களில் இருந்தார்கள். அது பர்வதராஜனுக்குத்
தவறாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் சந்திரகுப்தனும், சாணக்கியருமே
தீர்மானித்து செய்வதால் இதையும் அவர்களே செய்யட்டும், தேவைப்பட்டால்
மட்டுமே தீவிரமாகப் பங்கேற்பது என்ற முடிவுக்கு அவன் வந்திருந்தான். தேவை வரவில்லை. அதனால்
அவன் தீவிரமாய்ப் பங்கேற்கும் அவசியமும் ஏற்படவில்லை. ஆனாலும் வாழ்த்து, முழக்கம், பாராட்டு, புகழ் எல்லாம்
அவன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது நடக்கவில்லை.
வெற்றிக்குப் பின்னும் எல்லாவற்றையும்
சாணக்கியரும், சந்திரகுப்தனும் சேர்ந்து தான் தீர்மானித்தார்கள். யார் யார்
எங்கு தங்குவது என்பதிலிருந்து முக்கிய வேலைகளில் காவலர்கள், வீரர்கள், அதிகாரிகள்
நியமனம் முதல் அவர்கள் இருவருமே தீர்மானித்துக் கொண்டது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஒப்பந்தப்படி
அவனையும் அவர்கள் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். மேலும் பணியாளர்கள், வீரர்கள்
முதற்கொண்டு சந்திரகுப்தனையே அரசனாகப் பாவித்துப் பேசியது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. குறுகிய
சமயத்தில் அனைத்தையும் முடிவு செய்து பிசிறில்லாமல் எல்லாக் காரியங்களையும் சாணக்கியர்
அரங்கேற்றும் விதம் அவனைப் பயமுறுத்தியது. இப்படியே
போக விட்டால் ஆச்சாரியர் தங்களைப் பூஜ்ஜியம் ஆக்கி விடுவார் என்று எண்ணிப் பயப்பட்ட
அவன் இது குறித்து உடனே ஆச்சாரியரிடம் வெளிப்படையாகப் பேசி விடுவது என்று தீர்மானித்தான்.
ஆனால் பாடலிபுத்திரத்திற்கு வந்ததிலிருந்தே
ஆச்சாரியரையும் சந்திரகுப்தனையும் காண்பதே குதிரைக் கொம்பாக இருந்தது. அவர்கள்
இருவரும் எங்கிருக்கிறார்கள் என்பதே யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. அது பர்வதராஜனுக்குப்
பீதியைக் கிளப்பியது. அவனுக்கு எதிராகவும் சாணக்கியர் ஏதாவது சதித்திட்டத்தைத்
தீட்டிக் கொண்டிருக்கிறாரா என்று பயந்த அவன் அவனுக்கு அவர்கள் ஒதுக்கியிருந்த பணியாளர்களிடமும், காவலர்களிடமும்
ஆச்சாரியரையும், சந்திரகுப்தனையும்
உடனே காண வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்தான்....
சாணக்கியரும், சந்திரகுப்தனும்
அவனைக் காண வரும் வரை அவனுக்கு நிம்மதியிருக்கவில்லை. அவர்கள்
வந்ததும் அவன் மிக பவ்யமாக சாணக்கியரின் பாதம் தொட்டு வணங்க, மலைகேதுவும் அப்படியே வணங்கினான்.
ஆசி வழங்கிய சாணக்கியர் “உனக்கு வசதிகள் எதிலும் குறையில்லை அல்லவா பர்வதராஜனே”
என்று கேட்டபடி அமர்ந்தார்.
“ஏற்பாடு செய்திருப்பது தாங்கள் என்பதால் வசதிக்குறைவுக்கு வாய்ப்பே இல்லை அல்லவா
ஆச்சாரியரே.”
“நீ அவசரமாகப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டதால்
வசதிகளில் ஏதாவது குறையிருக்குமோ என்று எண்ணிப் பதறி விட்டேன்.”
‘இடியே விழுந்தாலும் பதறும் ஆளா நீர்?’ என்று மனதில் கறுவிய
பர்வதராஜன் இனிமையாகச் சொன்னான். “ஆச்சாரியரே நான் உங்கள் இருவரையும்
அழைத்தது இனி நடக்கவிருக்கும் காரியங்களைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காகத் தான்.
இந்த வெற்றியோடு எல்லாம் முடிந்து விடவில்லையே. நாம் சேர்ந்து தீர்மானிக்கவும், முடிவெடுக்கவும் இனியும்
நிறைய இருக்கின்றதே”
அவன் சொன்னதில் ’சேர்ந்து’ என்ற வார்த்தைக்குத் தந்த அழுத்தத்தை சாணக்கியரும்,
சந்திரகுப்தரும் கவனித்தாலும் இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சாணக்கியர் சொன்னார். “நீ சொல்வது உண்மை.
வெற்றிக்குப் பிறகு நாம் சேர்ந்து முடிவெடுக்க நிறைய இருக்கின்றது.
ஆனால் நம் வெற்றியே இன்னும் முழுமையடைந்து விடவில்லை பர்வதராஜனே”
பர்வதராஜன் குழப்பத்தோடு கேட்டான். “என்ன சொல்கிறீர்கள் ஆச்சாரியரே?”
(தொடரும்)
என்.கணேசன்
பர்வதராஜனும் அவன் மகனும்.... "பாதி பங்கு வேண்டாம், ஆளை விட்டால் போதும்" என ஓடப் போகின்றர்....
ReplyDelete