
பத்ரசால் அவரைப் பார்த்ததும் சற்று பதற்றத்துடன் சொன்னான். ”பிரபு. தலைநகருக்குள் எதிரியின் வீரர்கள் சிலர் எப்படியோ ஊடுருவியிருக்கிறார்கள்.
சிலரைச் சிறைப்படுத்தியிருக்கிறோம். சிலர் இன்னும்
பிடிபடவில்லை. அதனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
யார் வந்தாலும் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்க வேண்டாம். நீங்களும் வெளியே வர வேண்டாம்.”
அவர் அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு வேறு கேள்விகள் கேட்பதற்குள்
பத்ரசால் அவரது காவலனிடம் சொன்னான்.
“சீக்கிரம் கதவை சாத்தி தாளிட்டுக் கொள். நானோ
இளவரசர் சுதானுவோ வந்தால் ஒழிய கதவைத் திறக்க வேண்டாம்.”
காவலனும் கேள்விப்பட்ட தகவல்களால் அதிர்ச்சி அடைந்திருந்ததால்
வேகமாகக் கதவைச் சாத்திக் கொள்ள ராக்ஷசரின் கேள்விகளும் அடைபட்டன.
மலைகேது பர்வதராஜனிடம் கேட்டான். “தந்தையே இன்னமும் ஏன் ஆச்சாரியரும்,
சந்திரகுப்தனும் நம்மைச் சந்தித்துப் பேச வராமல் இருக்கிறார்கள்? அவர்கள் உத்தேசம்
என்னவென்று நமக்குத் தெரியவில்லையே”
பர்வதராஜன் சொன்னான்.
“ஆச்சாரியரும், சந்திரகுப்தனும் நம்மை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல்
அதை வெளிக்காட்டாமல் இருக்கும் சிரத்தையையும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
சிறைப்பட்டிருப்பது பாடலிபுத்திரம் மட்டுமல்ல மகனே. நாமும் தான். நம்முடன் இருக்கும்
நம் படையினரும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போது நம்மால் அவர்களை எதிர்த்து ஒன்றும்
செய்ய முடியாது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”
மலைகேது கவலையுடன்
கேட்டான். “இனி என்ன செய்வது தந்தையே?”
பர்வதராஜன் சொன்னான்.
“அவர்கள் வராவிட்டால் என்ன, நாம் போய் அவர்களைச் சந்திப்போம். இதில் கௌரவம் பார்க்க
ஒன்றுமில்லை மகனே. காரியமாக வேண்டியவர்கள் கௌரவம் பார்ப்பது சரியல்ல. இரவில் செல்வோம்.
பகலில் சென்று, உங்களால் எங்கள் ரகசியம் வெளிப்பட்டு விட்டது என்று அவர்கள் நம்மைக்
குற்றம் சாட்ட வேண்டாம்.”
அவன் சொன்னது போலவே
இரவானதும் அவர்கள் இருவரும் சாணக்கியர் தங்கியிருந்த சிறு கூடாரத்திற்குச் சென்றார்கள்.
சாணக்கியர் எதோ படித்துக் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்தவுடன் புன்னகையுடன் வரவேற்றார்.
“உங்கள் தகுதிக்கேற்ப ஆசனங்கள் வைத்து வரவேற்கும் வசதியில்லாததால் தான் நான் வரச் சொல்லவில்லை.
இந்தத் துணிவிரிப்பில் அமர்ந்து இந்த வசதிக்குறைவைப் பொறுக்க வேண்டும் பர்வதராஜனே”
பர்வதராஜன் அவர்
காலைத் தொட்டு வணங்கி விட்டு “காரியமாக வேண்டி நீங்கள் இந்த வசதிக்குறைவான இடத்தில்
தங்கியிருக்கும் போது அற்ப சமயம் இந்த வசதிக்குறைவில் நாங்கள் இருப்பது ஒரு விஷயமேயில்லை
ஆச்சாரியரே,” என்று சொல்லியபடி கஷ்டப்பட்டு அந்தத் துணிவிரிப்பில் அமர்ந்தான். மலைகேது
அங்கு அமர்வதை ஒரு தண்டனையாகவே நினைத்தாலும் தந்தையைப் பின்பற்றி தானும் அமர்ந்தான்.
“இங்கு நீங்கள்
வந்து இரண்டு நாட்களாகின்றன. நாம் இன்னும் எந்தத் தாக்குதலையும் ஆரம்பிக்காமல் இருக்கின்றோம்.
இருவரும் வேடத்தையும் கலைக்காமல் இருக்கிறீர்கள். நாம் இன்னும் எதற்காகக் காத்துக்
கொண்டிருக்கிறோம் ஆச்சாரியரே?”
சாணக்கியர் சொன்னார்.
“நாம் இங்கே செயலற்று இருப்பது போல் தோன்றினாலும் நம் ஆட்கள் பாடலிபுத்திர நகருக்குள்ளே
சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பர்வதராஜனே. அவர்கள் வேலை முடிந்தவுடன்
நமக்கு ரகசிய சமிக்ஞை தருவார்கள். பின் நாம் இயங்குவோம்”
பர்வதராஜன் இனி
சுற்றி வளைத்துப் பேசுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தவனாகச் சொன்னான். “ஆச்சாரியரே. உங்களிடம் நான் பெருமதிப்பு
வைத்திருக்கிறேன். ஆனால் தங்கள் ரகசிய திட்டங்கள் என்னைச் சலிப்பில் ஆழ்த்துகின்றன.
நான் மதிக்கும் மனிதர்களிடம் எதையும் மறைத்துப் பேசும் பழக்கமற்றவன் என்பதனால் தான்
உண்மையை மறைக்காமல் சொல்கிறேன்.”
”வெற்றியடைய
விரும்பும் மனிதன் தன் காரியம் முடியும் வரை எதிலும் சலித்துப் போகக்கூடாது பர்வதராஜனே.
உண்மையில் நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் பொறுமையிழக்கக்கூடாது.
எந்த நேரத்திலும் செயல்படத் தயாரான உற்சாக மனநிலையில் இருக்க வேண்டும்”
“என்ன
நடக்கிறதென்றே தெரியாமல் இருக்கையில், எந்த நம்பிக்கையில் செயல்படத் தயாரான உற்சாக
மனநிலையில் இருப்பது ஆச்சாரியரே.”
“அஸ்தமித்திருக்கும்
சூரியன் நாளை மறுபடி கிழக்கில் உதிக்கும் என்று எந்த நம்பிக்கையில் இருக்கிறாய் பர்வதராஜனே.
சூரியன் போகின்ற வழி உனக்குத் தெரியுமா? சூரியனை இயக்கும் சக்தியின் போக்கு உனக்குத்
தெரியுமா? எதுவுமே தெரியாமல் நாளை விடியும், சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று எந்த
நம்பிக்கையுடன் உறங்குகிறாய்?”
பர்வதராஜன்
பெருமூச்சு விட்டான். இன்னும் ஏதாவது சொல்லி அவரிடமிருந்து கூடுதல் தத்துவங்கள் கேட்கும்
மனநிலையில் அவனில்லை…
சின்ஹரன் மிக ரகசியமாய் ஜீவசித்தியைச் சந்தித்தான். “எல்லாரும்
தயாரல்லவா?”
ஜீவசித்தி சொன்னான்.
“தயாராகவே இருக்கிறார்கள். அங்கே என்ன நிலைமை?”
“தனநந்தனும் ராக்ஷசரும்
நம் திட்டங்களுக்கு இடைஞ்சல் செய்ய முடியாதபடியான ஏற்பாடுகள் செய்து விட்டோம். இனி
வேகமாக நாம் செயல்பட வேண்டும். நகரத்தின் பிரதான வாயிலில் நம் காவலர்கள் எத்தனை பேர்
இருக்கின்றார்கள்?”
“மூன்று
பேர் இருக்கிறார்கள். ஆனால் வெளியே முற்றுகை உள்ளதால் வாயிற்காவலை கூடுதல் காவல்
வீரர்களை நிறுத்தி பலப்படுத்தி இருக்கிறார்கள் என்றாலும் அவர்களைச் சமாளிக்க, தயாராக
மறைந்திருக்கும் நம் மற்ற வீரர்கள் போதும். வெளியிலிருந்து
நம் படை உள்ளே நுழைவதைத் தடுக்க உறக்கத்திலிருக்கும் மகதப்படைகள் விரைந்து
வந்துவிடக் கூடாது. அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.”
“உறங்கிக் கொண்டிருக்கும் மகதப்படையினர் அவ்வளவு வேகமாக வந்து விட மாட்டார்கள். நம் படைகளும் உறங்கிக் கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதால் அவர்கள் நம் படை உள்ளே நுழையும் என்று சிறிதும் எதிர்பார்ப்பில் இல்லை. அறிந்து அவர்கள் கிளம்பி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.”
“பத்ரசால்?”
“அவன் நம் படைகளை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமாகவே இருப்பான். அவன் என் உண்மை அடையாளத்தைத் தெரிந்து கொள்ளாத வரை அவனை நம் விருப்பத்திற்குத் திசை திருப்பலாம். ஆனால் உண்மையை அவன் தெரிந்து கொண்டால் அவனைச் சமாளிப்பது கஷ்டம் தான்...”
”அவனிடமும் சுதானுவிடமும்
நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே. இருவரும் ஆபத்தானவர்கள்”
“ஆபத்தான வேலையில்
ஈடுபடும் போது ஆபத்தானவர்களைத் தவிர்க்க நமக்கு வழியில்லை நண்பரே. ஆச்சாரியரும் சந்திரகுப்தனும்
உள்ளே நுழைந்து விட்டால் பின் நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அது வரை கவனமாகவே
இருக்க வேண்டும். இருப்போம்”
(தொடரும்)
என்.கணேசன்