அன்று யோகாலயத்தில் துறவு மேற்கொள்ள, ஷ்ரவனைத்
தவிர, வேறொரு நடுத்தர வயதுப் பெண்மணியும் வந்திருந்தாள். ஷ்ரவனும் அவளும் முதலில் தியான வகுப்பறையில் அமர்த்தப்பட்டார்கள். கண்ணன்
தான் யோகாலயத்தில் துறவு விதிகளை அவர்களிடம் விளக்குவதற்காக வந்தார். ஷ்ரவனைப்
பார்த்து அவர் மெலிதாய் புன்னகைத்து விட்டு முக்கிய விதிகளை இருவருக்கும் சொல்ல ஆரம்பித்தார்.
துறவறம் பூண்டவர்கள் பழையபடி தங்களுடைய
குடும்பத்துடன் எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. யோகாலயத்தில்
தனிப்பட்ட முறையில் கைபேசி, கணினி ஆகியவற்றை வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை. காவி உடைகளை
மட்டுமே அணிய வேண்டும். மற்ற ஆசிரமங்களைப் போல் அங்கு மொட்டை அடித்துக் கொள்வது கட்டாயமில்லை. விருப்பமிருப்பவர்கள்
மொட்டை அடித்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தலைமுடியை யோகாலயம் நிர்ணயிக்கும் அளவில் வெட்டிக்
கொள்ள வேண்டும். ஆண்களின் தலை முடி ஒரு செண்டிமீட்டர் அளவுக்கு மேலிருக்கக்கூடாது. பெண்களுக்குக்
கூந்தல் ஒரு அடி உயரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அவர்கள்
அதை எப்போதும் கொண்டை தான் போட்டுக் கொள்ள வேண்டும். நெற்றியில்
எப்பொழுதும் திருநீறு இருக்க வேண்டும். எப்போதும் எந்த
விதமான ஒப்பனைக்கும் அங்கே அனுமதியில்லை.
காவி உடைகளும் மூன்று மட்டுமே துறவிகளுக்குத் தரப்படும். அவரவர்
உடைகளை அவரவரே துவைத்துக் கொள்ள வேண்டும்.
அறையின் அளவுக்குத் தகுந்தபடி மூன்று
முதல் ஐந்து துறவிகள் வரை தங்க வேண்டியிருக்கும். அதிகாலையில்
ஐந்து மணிக்கு எழுவது முதல் இரவு பத்து மணிக்கு உறங்கும் வரை தியானம், உணவு, வேலைகள்
தரப்பட்டிருக்கும் நேரத்தில் ஒழுங்குமுறையுடன் செய்யப்பட வேண்டும். ஆண் துறவிகள், பெண் துறவிகள்
தங்குமிடங்கள் தனித் தனி கட்டிடங்கள். எந்தக் காரணத்தைக்
கொண்டும் இங்குள்ளவர் அங்கும், அங்குள்ளவர் இங்கும் செல்ல அனுமதியில்லை. இரவு நேரங்களில் 10
மணிக்குப் பின் யாரும் தங்குமிடத்தை விட்டு வெளியே வந்து உலாவ அனுமதியில்லை....
அவர் சொல்லி விட்டு விண்ணப்பப் படிவத்தையும்
தந்தார். அதிலும் அவர் சொன்ன விதிமுறைகள் இருந்தன. அதனுடன்
வேறுசில விதிமுறைகளும் இருந்தன. அதற்குச் சம்மதித்துக் கையெழுத்திட்டுத் தந்த பின்பே இருவரும்
முதல் பகுதியைத் தாண்டி இரண்டாம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன் பின் அந்தப் பெண் துறவி வேறு பக்கமும், ஷ்ரவன்
வேறு பக்கமும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஷ்ரவன் தலைமுடி
வெட்டி குளித்து விட்டு வந்த போது மூன்று காவி ஆடைகள் அவனுக்குத் தரப்பட்டன. பின் அவனுக்குத்
துறவற தீட்சை வேறொரு வயதான துறவியால் தரப்பட்டது. இனி அவன்
ஷ்ரவனானந்தா என்றழைக்கப்படுவான் என்று சொல்லப்பட்டது. பின் அவன்
அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றான். அது மூன்று
துறவிகள் தங்கும் சிறிய அறை. அந்த அறையில் ஏற்கெனவே ஒரு நடுத்தர வயதுத் துறவியும், ஒரு வயதான
துறவியும் இருந்தார்கள்.
நடுத்தர வயதுத் துறவி தன்னை சித்தானந்தா
என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த முதியவரை
முக்தானந்தா என்று தானே அறிமுகப்படுத்தி
வைத்தார்.
ஷ்ரவன் கைகூப்பினான். சித்தானந்தாவும்
கைகூப்பினார். ஆனால் முக்தானந்தா அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாரேயொழிய
கைகூப்பவில்லை.
பின் வறண்ட குரலில் அவர் சொன்னார். “ஒரு சிறையிலிருந்து
இன்னொரு சிறைக்கு வந்திருக்கிறாய், அவ்வளவு தான்.”
ஷ்ரவன் திகைப்புடன் அவரைப் பார்த்தான். சித்தானந்தா
புன்னகையுடன் சொன்னார். “அவர் நிறைய தத்துவம் பேசக்கூடியவர்.”
ஷ்ரவனும் புன்னகைத்து விட்டு முக்தானந்தாவைப்
பார்த்து சொன்னான். “மரணம் விடுவிக்கும் வரை நாம் செல்லும் இடங்கள் அனைத்துமே
சிறைகள் தானே சுவாமிஜி?”
“உண்மை” என்றபடி
முக்தானந்தா கைகூப்பினார்.
ஷ்ரவனுக்கு ஒரு அலமாரியும், ஒரு கட்டிலும்
ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த அலமாரியில்
ஒரு எவர்சில்வர் உணவுத்தட்டு, ஒரு சிறிய சொம்பு தியான விரிப்பு, ஒரு தலையணை, ஒரு போர்வை
ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்கள்
ஒருவரில் யாராவது ஒருவர் ஒற்றராகவும் இருக்கலாம் என்பதால் யோகி பிரம்மானந்தரால் பெரிதும்
கவரப்பட்டு துறவறம் பூண்டு இங்கு வந்திருப்பதாகவும், அவர் நிழலில் வாழ்ந்து மெய்ஞானம் பெறுவதே
தன்னுடைய ஒரே இலக்கு என்றும் ஷ்ரவன் சொன்னான். சித்தானந்தா அவனைப் பெருமையுடன் பார்த்தாலும், முக்தானந்தாவின்
முகத்தில் சந்தேகம் தான் தெரிந்தது.
ஒரு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. சித்தானந்தா
சொன்னார். “இது உணவுக்கான மணி. வாருங்கள்
போவோம். உங்கள் தட்டையும், சொம்பையும்
எடுத்துக் கொள்ளுங்கள்.”
அவர் சொன்னபடி தட்டையும் சிறிய சொம்பையும்
எடுத்துக் கொண்டு ஷ்ரவன் அவருடன் கிளம்பினான். முக்தானந்தாவும்
பின்னாலேயே வந்தார். ஆனால் அவர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவில்லை.
சாப்பிடும் அறையில் நிறைய ஆண் துறவிகள்
இருந்தார்கள். பெண் துறவிகளுக்கு அதே அறையில் அரை மணி நேரம் கழித்து உணவு
வழங்கப்படும் என்று சித்தானந்தா சொன்னார். அதற்குள்
ஆண் துறவிகள் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து போய் விட வேண்டும் என்றும், அந்த நேரத்தில்
வந்து போக முடியா விட்டால் அடுத்த வேளை உணவுக்குத் தான் வர வேண்டியிருக்கும் என்றும்
சொன்னார்.
அங்கு எளிமையான உணவு தரப்பட்டது. வரிசையில்
நின்று உணவு வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட்டார்கள். அந்த சாப்பாட்டு
அறையில் உணவு பரிமாறிய இரண்டு ஆட்களும் துறவிகளைக் கண்காணிப்பவர்கள் என்பதை முதல் பார்வையிலேயே
ஷ்ரவன் யூகித்தான். சாப்பிடும் போதும் முக்தானந்தா அவர்களுடன் சேர்ந்து அமராமல்
தனியாக ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டார். அங்கிருந்த
மற்ற துறவிகளும் தங்களுக்குள் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசிக் கொள்ளவில்லை. புதியவனான
அவனைப் பார்த்து இரண்டு துறவிகள் மட்டும் புன்னகைத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர்களும்
அதிகம் பேசவில்லை. அவர்கள் பேசிக் கொள்வதை உணவு பரிமாறுபவர்கள் கூர்ந்து கவனிப்பது
தெரிந்தது.
சாப்பிட்ட பின் தட்டுகளை அவரவரே அலம்பிக்
கொண்டு வந்தனர். கடிகாரத்தைப் பார்த்து சிலர் வேகமாகச் சாப்பிட்டார்கள். அடுத்த
மணி அடிப்பதற்குள் அவர்கள் அனைவரும் வெளியே வந்தாகி விட்டது. ஷ்ரவன், சித்தானந்தா
இருவரும் சாப்பிட்டு வெளியே வருவதற்கு முன்பே முக்தானந்தா அறைக்குப் போய் விட்டார்.
திரும்பி வரும் போது ஷ்ரவன் சித்தானந்தாவிடம்
கேட்டான். “சுவாமி முக்தானந்தா அதிகம் பேச மாட்டாரோ?”
சித்தானந்தா சொன்னார். “அவர் பேசுவது
குறைவு. ஆனால் சில சமயங்களில் தனக்குத் தானே பேசிக் கொள்வார்.”
“இங்கே மற்ற
துறவிகளும் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பதைக் கவனித்தேன்” என்றான்
ஷ்ரவன்.
“அதிகம்
பேசுவதை இங்கே ஊக்குவிப்பதில்லை. நீங்கள் ஒருவருக்கொருவரே பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்குள்
இருந்து வரும் குரலை உங்களால் எப்படிக் கேட்க முடியும் என்று யோகிஜி கேட்பார்.”
ஷ்ரவன் “அதுவும்
சரி தான்” என்று சொன்னான்.
மதிய சாப்பாடு முடிந்து அரை மணி நேரம்
இளைப்பாறிய பிறகு சித்தானந்தாவும், முக்தானந்தாவும்
தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விட்டார்கள். முக்தானந்தாவுக்குக்
காய்கறிகள் நறுக்கும் வேலையும், சித்தானந்தாவுக்கு யோகாலயத்தின் ஹால்களைச் சுத்தம் செய்யும்
வேலையும் ஒதுக்கப்பட்டு இருந்தன.
ஷ்ரவன் சொன்னான். “எனக்கு
எந்த வேலையென்று அவர்கள் சொல்லவில்லையே”
சித்தானந்தா சொன்னார். “நாளை உங்களிடம்
பேசிவிட்டு முடிவு செய்து சொல்வார்கள். இன்று உங்களுக்கு
ஓய்வு தான்.”
அவர்கள் போய் விட்டார்கள். அவர்கள்
போய் சிறிது நேரத்தில் கண்ணன் வந்தார். சினேகத்துடன் அவனை
நலம் விசாரித்தார். அவரும், நாளை அவனுக்கு வேலை ஒதுக்கப்படும் என்றும், காலை உணவு
சாப்பிட்டு முடித்த பிறகு அலுவலக அறைக்கு வரும்படியும் சொன்னார். பின் புன்னகையுடன்
கேட்டார். “இங்கிருந்து போன பின்னும் உங்களுக்கு மனக்காட்சியில் ஓநாயும், அந்த இளைஞனும்
வந்தார்களா?”
“இல்லை சுவாமிஜி. அது தான்
எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. சில நாட்கள் நான் வேண்டுமென்றே ஓநாயையும், அந்த இளைஞனையும்
நினைத்தபடியே இருந்திருக்கிறேன். அப்படி இருந்தும் காட்சியில் வரவில்லை. யோகிஜியின்
அனுக்கிரகம் என்றே நான் அதை நினைக்கிறேன்.”
அவர் தலையசைத்தார். பின் சொன்னார். “இங்கே யாரும்
அவர்கள் இருக்கும் இடம், வேலை செய்யும் இடம் தவிர மற்ற இடங்களுக்குப் போய் வருவதற்கு
அனுமதி கிடையாது. யோகிஜி துறவு என்பதே உடலும் மனதும் அலைவதை நிறுத்துவது தான்
என்று சொல்வார்.”
ஷ்ரவன் சொன்னான். “அவர் சொல்வது
சரிதான் சுவாமிஜி. கண்டிப்பாக நான் இங்குள்ள விதிகளை மீற மாட்டேன்.”
கண்ணன் திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தார். சென்று
பாண்டியனிடம் அனைத்தையும் சொன்னார். பாண்டியன் கேட்டார். ”அவன் அறையில
கூட இருக்கற வேற ரெண்டு பேர் யார் யார்?”
“முக்தானந்தாவும், சித்தானந்தாவும்”
“முக்தானந்தா
அங்கே தான் இருக்காரா?” என்று கேட்ட பாண்டியனுக்கு அந்தத் தகவல் மனதில் ஒரு நெருடலை
ஏற்படுத்தியது.
(தொடரும்)
என்.கணேசன்
ஷர்வனுக்கு கம்ப்யூட்டர் சம்பத்தப்பட்ட வேலைகளை தான் கண்ணன் தருவார்...என நினைக்கிறேன்...
ReplyDeleteபுலியின் குகைக்குள் சிரவன் சென்று விட்டான். இனி என்ன எப்படி எங்கே அவன் துப்பு ஆரம்பிக்கும்.மே பே முக்தானந்த அவனுக்கு ஹெல்ப் பண்ணுவார்.
ReplyDelete