என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, April 24, 2025

சாணக்கியன் 158

 

பின்னாலிருந்து ஆரவாரத்துடன் வரும் பெரும்படையைத் திகைப்புடன் பர்வதராஜனும், பிரமிப்புடன் மலைகேதுவும் பார்த்தார்கள். சந்திரகுப்தனும் சாணக்கியரும் தங்கள் கூடுதல் படை வந்த பின்னும் தங்கள் வேடங்களைக் கலைத்துக் கொண்டு வெளிப்படவில்லை. அவர்களது படைத் தலைவர்களும், அடையாளம் அறிந்திருந்த முக்கியஸ்தர்களும் கூட முன்பே அவர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளைப்படி அமைதியாக இருந்தார்கள். இது பர்வதராஜனை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. இப்படி பலபேர் அறிந்திருக்கும் ஒரு விஷயத்தை ரகசியம் என்று சொல்லியே அவனை சாணக்கியர் முட்டாளாக்கி விட்டார் என்று நினைத்தான்.

 

தந்தையின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் மலைகேது உற்சாகத்துடன் சொன்னான். “அருமையான திட்டமிது தந்தையே. தனநந்தனும், ராக்‌ஷசரும் இதை எதிர்பார்த்திருக்க வாய்ப்பேயில்லை.”

 

பர்வதராஜன் மகனைக் கடிந்து கொண்டான். “முட்டாளே இதை நானும் எதிர்பார்த்திருக்கவில்லை. தனநந்தனையும், ராக்‌ஷசரையும் மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து இவர்கள் முட்டாளாக்கி விட்டிருக்கிறார்கள். அது புரியாமல் நீ இவர்களைச் சிலாகித்துப் பேசுகிறாய்.”

 

“இதனால் நமக்கு என்ன பிரச்சினை தந்தையே?”

 

மகனே சிறுபடையுடன் நாம் பாதி வழியிலிருந்து இங்கே கிளம்பிய போது நம் படையும், சந்திரகுப்தன் படையும் சரிபாதியாக இருந்தன. அதனால் நான் ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போது கூடுதலாக அவர்களது பெரும்படை அவர்களுடன் இங்கு வந்து சேர்ந்து விட்டதுஇப்போது கணக்கிட்டால் நம் படையினர் இதில் மிக மிகக் குறைவாகி விட்டார்கள். நம் மீதிப்படையினர் சிராவஸ்தி அருகில் இருக்கிறார்கள். அது உடனடியாக இங்கே அவர்கள் வந்து சேர முடியாத தூரம். இப்போது பாடலிபுத்திரத்தை முற்றுகை இட்டு வெற்றி பெற்று நாம் உள்ளே நுழைந்தால் யார் கை ஓங்கி இருக்கும் என்று நினைக்கிறாய்? ஆச்சாரியர் தான் அனைத்தையும் முடிவு செய்கிற மாதிரி இருக்கும். ஏனென்றால் இப்போது இங்கே அவர்கள் படைகள் தான் அதிகம். அவர் கட்டளைகள் தான் நிறைவேற்றப்படும். நாம் பகிரங்கமாக அவர்களை எதிர்க்க முடியாது....”


“ஆனால் வென்றதில் சரிபாதியை நீங்கள் சாமர்த்தியமாகக் கேட்டு அவரிடம் ஒப்புதல் வாங்கியிருக்கிறீர்கள் அல்லவா தந்தையே. அதை அவர் மறுக்க முடியாதே”

 

“மகனே நேர்வழியை மட்டும் பின்பற்றுபவர்களிடம் நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் ஆச்சாரியர் வெற்றியடைய எந்த வழியைப் பின்பற்றவும் யோசிக்காதவர். அதனால் அவரிடம் மிகவும் எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டியிருக்கிறது.”

 

“அப்படியானால் நாம் என்ன செய்வது தந்தையே?” மலைகேது கவலையுடன் கேட்டான்.

 

“பொறுத்திருந்து பார்ப்போம். அவர் தன் சாமர்த்தியத்தை நம்மிடம் காட்ட முற்பட்டால் நாம் அதிசாமர்த்தியத்தை அவரிடம் காட்ட வேண்டியது தான்.“

 

வசர ஆலோசனைக்கூட்டத்தில் கூடியிருந்த அனைவர் முகத்திலும் கவலை தெரிந்தது.  சுதானுவும் பத்ரசாலும் கூட முற்றுகை நடக்கும் என்பதை முன்பே எதிர்பார்த்திருந்தாலும் இப்படி ஒரு பெரும்படை பாடலிபுத்திரத்தை முற்றுகையிடும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.  உள்ளே அவர்கள் திட்டம் வெற்றியடைந்தாலும் கூட அதன் பின் வெளியே முற்றுகை இட்டிருக்கும் எதிரிகளைச் சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனென்றால் சில நாட்களுக்கு முன் தான் கலிங்கத்தின் எல்லைக்கும், சிராவஸ்திக்கும் கணிசமான படைகளை அனுப்பியிருக்கிறார்கள். அதனால் இங்கிருக்கும் படைவலிமை இப்போது சற்று குறைவு தான்...

 

எல்லோரையும் விட அதிர்ந்து போயிருந்தவன் தனநந்தன் தான். சாணக்கின் மகன், தந்தையை இழந்த பின் மகதத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடிப் போனவன், எங்கோ சாதாரண ஆசிரியர் பணியில் இருந்தவன், ஒரு காலத்தில் உதவி கேட்டு ஓடி வந்து இங்கு அரசவையிலிருந்து வெளியே வீசப்பட்டவன், இன்று  வாமனன் விஸ்வரூபம் எடுத்தது போல் விஸ்வரூபம் எடுத்திருக்கிறான். அதை எண்ணுகையில் அவனுக்குத் தாங்க முடியவில்லை. எப்போதும் நிதானமும் அமைதியும் இழக்காத ராக்‌ஷசர் முகத்தில் கூடக் கவலை தெரிகிறது. ஒவ்வொரு முறை கேட்ட போதும் எதிரிகளை மிகச் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று சொல்லி வந்த பத்ரசால் கூட இப்போது அந்த அளவு நம்பிக்கையுடன் தெரியவில்லை.

 

தனநந்தன் கோபத்தில் குரல் நடுங்க கேட்டான். “அப்படியானால் அந்த மடல் நம்மைத் திசை திருப்ப நமக்குத் தரப்பட்டதா?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “இப்போது யோசிக்கையில் அப்படித் தான் தெரிகிறது. கலிங்கமும் நம்மிடம் போர் தொடுக்கும் உத்தேசத்தில் இருந்திருக்க வழியில்லை. நாம் பெரிய படைகளை அவர்கள் எல்லைக்கு அனுப்பியதால் தற்காப்பு நடவடிக்கையாகத் தான் அவர்களும் எல்லையில் படைகளை குவித்திருக்கிறார்கள் போல் இருக்கிறது.”

 

தனநந்தன் கேட்டான். “கலிங்க எல்லைக்கும், சிராவஸ்திக்கும் சமீபத்தில் அனுப்பிய படைகளை நாம் திருப்பி வரவழைக்க முடியாதா.... ?”

 

ராக்‌ஷசர் சொன்னார். “முடியும். ஆனால் கண்டிப்பாக காலதாமதம் ஆகும். பின் இன்னொரு பிரச்னை இருக்கிறது. நாம் கலிங்க எல்லையிலிருந்து படைகளை வரவழைத்துக் கொண்ட பிறகு கலிங்கமும் தன் படைகளை பின்வாங்கிக் கொள்ளும் என்று சொல்லி விட முடியாது. நம் பலவீனமான நிலைமையைப் புரிந்து கொண்டு ‘வந்தது தான் வந்தோம், சில பகுதிகளையாவது ஆக்கிரமித்து எடுத்துக் கொண்டால் என்ன?’ என்று அவர்கள் நினைத்தால் நமக்குப் பிரச்சினை ஆகிவிடும்... சிராவஸ்திக்கு அனுப்பியதையும் திருப்பி வரவழைப்பதில் பிரச்சினை இல்லாமல் இல்லை. சந்திரகுப்தனின், பெரும்படையும் அங்கே சென்றிருக்கிறது... சமீபத்தில் அனுப்பியுள்ள நம் படை போகா விட்டால் அங்கு நம் நிலைமையும் பலவீனமாகவே இருக்கும்...”

 

தனநந்தன் கோபத்தில் கொதித்தான். நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போல் ஆகி விட்டதே. மிகப்பெரிய படைகள் இருந்தும் இருப்பதைப் பல இடங்களுக்குப் பிரித்து இங்கே பலவீனமாக இருக்கும்படியான ஒரு நிலைமைக்குச் சாமர்த்தியமாகத் தள்ளி விட்டானே சாணக்கின் மகன்....

 

ராக்ஷசர் இன்னொரு விஷயத்தை வாய்விட்டுச் சொல்லவில்லை. குதிரைகள் மாற்றப்பட்டதன் பாதிப்பையும், ஆயுதங்களின் குறைபாடுகளின் பாதிப்பையும் கூட அவர்கள் படைகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒற்றர்கள் தெரிவித்திருந்த தகவலை அவர் தெரிவித்து எந்தப் பலனும் இல்லை என்று நினைத்தார். ஆனால்  மெல்ல தன் மனதில் எழுந்த பலத்த சந்தேகத்தை அடுத்ததாகச் சொன்னார். ”இங்கே வந்திருக்கும் பெரும்படையை பர்வதராஜன் தலைமையில் அனுப்பி விட்டு சந்திரகுப்தனும் விஷ்ணுகுப்தரும் தொலைவில் இருக்கும் முட்டாள்தனத்தைச் செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. வெளிப்படாவிட்டாலும் இருவரும் முற்றுகை இட்ட கூட்டத்திலேயே இருக்க வேண்டும் என்று என் உள்மனது சொல்கிறது....”


அந்தச் செய்தி அங்கே பேரிடியாக விழுந்திருக்கிறது என்பது தொடர்ந்து நிலவிய பலத்த மௌனத்திலிருந்து வெளிப்பட தனநந்தன் அதை உணர்ந்து கொதித்தான். யாராவது எதாவது தைரியமான வார்த்தைகளைச் சொல்ல மாட்டார்களா என்று அவன் எதிர்பார்த்தான். சுதானு தன் தந்தையின் பார்வையிலிருந்து அதை உணர்ந்து உடனே சொன்னான். “நல்லது. நம் பிரதான எதிரிகளைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. அவர்களாகவே நம் வாசல் வரை வந்திருந்தார்களானால் நாம் தக்க பதிலடி தருவோம். இப்போதைய நம் படை பலத்தை வைத்தே நாம் நிறைய நாட்கள் உள்ளே தாக்குப் பிடிக்க முடியும். சேனாதிபதி சிராவஸ்திக்குப் போவதைத் தள்ளிப் போட்டதும் மிக நல்லதாகப் போய் விட்டது. அரண்மனையில் உள்ளவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். தலைநகரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை சேனாதிபதி ஏற்றுக் கொள்ளட்டும்.  உள்ளிருந்தபடியே எதிரிகளைத் தாக்கும் உபாயங்களை யோசித்து செயல்படுத்தும் வேலையை சுகேஷும் பிரதம அமைச்சரும் ஏற்றுக் கொள்ளட்டும். என்ன சொல்கிறீர்கள்?”

 

ராக்‌ஷசர் தனநந்தனைப் பார்த்தார். அவனுக்கும் செயலற்று இருப்பதை விட இருக்கும் பொறுப்புகளைப் பிரித்து எடுத்துக் கொண்டு ஆக வேண்டியதை யோசிக்கும் மகனின் புத்திசாலித்தனம் பிடித்திருந்தது. ”அப்படியே ஆகட்டும்” என்றான்.

 

ராக்‌ஷசருக்கு சுதானு சொன்னதில் எந்தத் தவறும் காண முடியாவிட்டாலும் ஏதோ ஒரு ஆபத்தை அவர் கூடுதலாக உணர்ந்தார். அதை அவரால் இன்னதென்று குறிப்பாகச் சொல்ல முடியாததால் மறுத்துச் சொல்ல முடியவில்லை.

 

ஆலோசனைக்கூட்டம் முடிந்த பின் சுதானு பத்ரசாலை தனியே அழைத்துச் சொன்னான். ”சேனாதிபதி நாளை ஏகாதசி. நாம் செயல்பட வேண்டிய நாள். நாளை இரவுக்குள் நாம் நம் தடைகளை நீக்கி விட்டால் தான் மகான் சொன்னது பலிக்கும். முதலில் நாம் நமக்கு மிக நம்பிக்கையான ஆட்களையும், அறிவுகூர்மையான ஆட்களையும் தேர்ந்தெடுத்து நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும்....”

 

பத்ரசாலுக்கு சுதானு சொன்னதைக் கேட்டவுடனே சின்ஹரன் தான் நினைவுக்கு வந்தான். இந்தச் சிக்கலான சமயத்தில் அவனைப் போன்ற ஒருவன் உதவி இருந்தால் எதையும் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் மெல்லச் சொன்னான். ”இளவரசே. நீங்கள் சொன்னபடியான ஒரு ஆளை எனக்குத் தெரியும். அவன் ஒரு வணிகன். வெளி தேசத்தவன். மிகவும் புத்திசாலி. உங்கள் மகானின் பக்தனும் கூட. எனக்கு இதற்கு முன் பல முறை உதவியிருக்கிறான். அவன் இப்போது பாடலிபுத்திரத்தில் தான் இருக்கிறான். அவன் உதவியை நாடினால் நமக்கு புத்திசாலித்தனமான ஆலோசனைகள் சொல்வான்.  கேட்போமா?”

 

சுதானுவுக்கு அந்த ஆள் மகானின் பக்தன், மிகவும் புத்திசாலி என்ற இரண்டு தகுதிகளுமே அப்போது போதுமானதாக இருந்தன. ஆனாலும் சிறிது சந்தேகத்துடன் கேட்டான். “அவன் நம்மைக் காட்டிக் கொடுத்துவிட மாட்டானே”

 

“மாட்டான் இளவரசே. சொல்லப் போனால் மகான் பற்றிக் கனவு வந்த பின் உங்களிடம் சொல்வதற்கு முன்பாக நான் முதலில் சொன்னதே அவனிடம் தான். அவன் தான் உங்களிடம் சொல்ல என்னை வற்புறுத்தியவன்.”

 

அதற்கு மேல் சுதானு யோசிக்கவில்லை. ”இன்றிரவே ரகசியமாய் அவனை அழைத்து வாருங்கள் சேனாதிபதி.” என்றான்.

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. தனநந்தன் அரண்மனைக்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன...அனைத்து விசயங்களும் தெரிந்திருந்தும் ராக்ஷசரால், பல ஆபத்தான விசயங்களை வெளிப்படையாக கூறமுடியவில்லை...
    'தவறு செய்கிறோம்' என்பதை உணராத சேனாதிபதி...
    அரியணைக்கு ஆசைபடும் மகன்...
    'அரசன் அழிய வேண்டும்' என நினைக்கும் மக்கள்...

    சுயநலம் மிக்க அரசனால் இது போன்ற விளைவுகள் ஏற்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை....

    ReplyDelete