ஷ்ரவனுக்கு அந்த ஓநாய் சென்ற பிறகு தான் கவனம் நடப்பு சூழலுக்குத் திரும்பியது. அப்போது தான் கல்பனானந்தா, பாடம் நடத்திக் கொண்டே அவனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பதை ஷ்ரவன் கவனித்தான். ‘இவள் எத்தனை நேரமாய் என்னையே பார்க்கிறாள்? இப்போது நான் ஏதாவது வித்தியாசமாக நடந்து கொண்டேனா? ஓநாய் வந்து போனது எத்தனை நேரம் நீடித்திருக்கிறது?’
அவன் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்
கல்பனானந்தா அவனைப் பார்ப்பது மிகவும் குறைந்து விட்டது. ஆனாலும்
அவ்வப்போது அவனைக் கவனிப்பதை அவள் நிறுத்தவில்லை.
பாண்டியன் அன்று வெளியே சில முக்கிய வேலைகளை முடித்துக் கொண்டு
யோகாலயத்துக்குத் திரும்பி வந்த போது கண்ணன் முக்கியத் தகவலுடன் காத்திருந்தார்.
“காலைல ஷ்ரவன்
அறையில ஒரு அமானுஷ்யமான விஷயம் நடந்துருக்கு. தலைகால்
புரியல. நீங்க ஒரு தடவை பார்த்துடறது நல்லது.” என்று கண்ணன்
சொன்னார்.
பாண்டியனுக்கு ‘அமானுஷ்யமான’ என்ற வார்த்தையைக்
கேட்டதும் சுருக்கென்றது. ஒரு அதிகாலை நேரத்தில் டாக்டர் சுகுமாரன் அவரை அழைத்துப்
பேசியதிலிருந்து நடந்த அமானுஷ்ய நிகழ்வுகள், தேவானந்தகிரி
வந்து, பரிகார பூஜை செய்து, தாயத்து
கட்டி விட்டுச் சென்ற பின் தான் ஓய்ந்திருக்கின்றன. வழக்கமான
வேலைகளை இந்த இரண்டு, மூன்று நாட்களாக இப்போது தான் அவர் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது
இன்னொரு அமானுஷ்யமா? கண்ணன் மிக புத்திசாலி. கண்ணனுக்கே
புரியாமல் போகும் விஷயங்கள் குறைவு...
கண்ணன் சொன்ன காமிரா பதிவைப் பார்க்க
அமர்ந்தார். கண்ணன் சொன்னார். “6.40ல இருந்து
பாருங்க”
பாண்டியன் காலை
6.40லிருந்து காமிரா பதிவை ஓட விட்டார்.
ஷ்ரவன் கட்டிலில் அமர்ந்து கண்களை மூடி
தியானம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. திடீரென்று கண்களைத்
திறந்த அவன் முகத்தில் திகைப்பும், திகிலும் தெரிய
ஆரம்பித்தன. பின் ஓரளவு அமைதியடைகிறான். பின் “ஹாய்” என்று சொல்கிறான். அவன் முகத்தில்
பல விதமான உணர்ச்சிகள்... அவனுடைய வலது முழங்கால் அருகே முத்திரையாக அவன் வைத்திருந்த
கைவிரல்களை அவன் திடீரென்று விரித்து நீட்டுவது தெரிந்தது. அதன் பின்
நடந்தது தான் பாண்டியனையும் தூக்கிவாரிப் போட்டது.
ஷ்ரவனின் உடல் நடுங்க ஆரம்பித்தது. இல்லை, அதை நடுக்கம்
என்றும் சொல்ல முடியாது. துடிக்க ஆரம்பித்தது என்று சொல்வது சரியாக இருக்கும். மின்கம்பியைத்
தொட்டவன் துடிப்பது போல் துடிக்க ஆரம்பித்த அவன் உடல் முன்னும் பின்னும் ஆட ஆரம்பித்தது. கடுமையான
ஜுரத்தில் இருப்பவன் அரற்றுவது போல அவன் அரற்ற ஆரம்பித்தான். ஆரம்பத்தில்
தட்டிவிட்ட தஞ்சாவூர் பொம்மை போல் ஆடிய ஆட்டம் பின் மேலும் வேகம் எடுத்தது. வேகம் கூடிக்
கொண்டே வந்து கடைசியாக ஷ்ரவன் அப்படியே குப்புறக் கவிழ்ந்தான். குப்புறக்
கவிழ்ந்த பின் அவனுடைய உடல் துடிப்பதும், அரற்றுவதும் படிப்படியாகக்
குறைய ஆரம்பித்தது. உட்கார்ந்த நிலையிலேயே குப்புறக் கவிழ்ந்த அவன் உடல் துடிப்பது
நின்றது. அவன் கவிழ்ந்த நிலையிலேயே கிடந்தான்.
கண்ணன் சொன்னார். “இனி
7.26ல இருந்து பாருங்க”
பாண்டியன் பதிவை
7.26க்கு நகர்த்தினார்.
ஷ்ரவன் உடலில் சிறு சிறு அசைவுகள் தெரிய
ஆரம்பித்தன. கண்விழித்த அவன் தன்னைச் சுற்றிலும் திகைப்புடனும், குழப்பத்துடனும்
பார்த்தான். பின்பு பக்கத்தில்
வைத்திருந்த அலைபேசியை எடுத்து நேரம் என்ன என்று பார்த்தான். பின்பும் ஏதோ யோசனையில்
ஆழ்ந்திருந்தவன் அவசரமாக எழுந்தான்.
“அவ்வளவு தான்” கண்ணன் சொன்னார். “அப்பறமா குளிச்சு, சாப்பிட்டுட்டு வகுப்புக்கும் போயிருக்கிறான்.
மதியமும் சாதாரணமாகத் தான் சாப்பிட்டிருக்கிறான். இப்படி ஒரு விஷயம் காலையில் அவனுக்கு நடந்திருக்கும்னு யாருமே சொல்ல முடியாது.
அவனே அப்படி நடந்ததைப் பத்தி பெருசா கவலைப்பட்ட மாதிரியும் தெரியலை.”
பாண்டியனுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவன் துடித்ததையும்,
அரற்றியதையும் பார்க்கையில் ஜன்னி வந்திருக்கலாம் என்று ஆரம்பத்தில்
தோன்றியது. ஆனால் அவன் கடைசியில் எழுந்து போனதையும், பின்பு சாப்பிட்டதையும், இயல்பு
வாழ்க்கைக்குத் திரும்பியதையும், ஆனதைப்
பற்றி எந்தக் குழப்பமும், அதிர்ச்சியும்
காட்டாமல் இருப்பதையும் யோசிக்கும் போது, இது ஜன்னி போன்ற ஆரோக்கிய பாதிப்பு போல் இல்லை.
பாண்டியன் கண்ணனிடம் சொன்னார். “சாயங்காலம்
வகுப்பு முடிஞ்சவுடனே நீ அவன் கிட்ட போய் பேசு”
மாலை வகுப்புகள் முடிந்து தனதறைக்கு ஷ்ரவன் வந்து கதவைத் திறந்து
கொண்டிருக்கும் போது ஒரு துறவி அவனிடம் வந்தார். அவர் தான்
சைத்ராவின் தந்தை வந்த போது சந்தித்துப் பேசியவர் என்பதை அவரைப் பார்த்தவுடன் ஷ்ரவன்
யூகித்தான்.
அவர் புன்னகையுடன் அவனிடம் கேட்டார். “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?”
ஷ்ரவன் குழம்பினாலும்,
புன்னகையுடன் சொன்னான். “நல்லாயிருக்கேன் ஜீ.”
‘நான் காலையில் இந்தப் பக்கமாக வந்த போது உங்கள் அறையிலிருந்து உடல்நலம் சரியில்லாதவர்கள்
அரற்றுவது போலச் சத்தம் கேட்டது. அது தூக்கத்திலா, உடல்நலம் சரியில்லாமலா என்று தெரியவில்லை. நான் கதவைத்
தட்டிக் கேட்கலாமா என்று கூட நினைத்தேன். சிறிது நேரம் இங்கே
கதவுப்பக்கம் நின்றும் பார்த்தேன். பின் அந்த அரற்றல் சத்தம்
குறைந்து விட்டது. பிறகு போய் விட்டேன். ஆனால் எதற்கும் உங்களிடம் நேரடியாகவே கேட்கலாம் என்று தான் நான் நேரில் வந்தேன்.”
ஷ்ரவனின் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. என்ன சொல்ல வேண்டும்,
எப்படிச் சொல்ல வேண்டும் என்று அவன் கச்சிதமாகத் தயாராக வேண்டியிருந்தது.
அதனால், யோசிக்கும் நேரத்தை நீட்டிப்பதற்காக அவன்
கேட்டான். “நீங்கள் வந்த போது எத்தனை மணி இருந்திருக்கும்ஜீ?”
அவரும் யோசிப்பது போல் காட்டிவிட்டுச் சொன்னார். “சுமார் ஏழு மணி இருக்கும்
என்று நினைக்கிறேன்.”
ஷ்ரவன் தயாராகி விட்டான். “நான் சொன்னால் நீங்க நம்ப மாட்டீங்க”
என்று சொன்னான்.
அவர் புன்னகையுடன் சொன்னார். “பரவாயில்லை. சொல்லிப்பாருங்கள்.”
ஷ்ரவன் அறைக்குள் நுழைந்து கொண்டே சொன்னான். “முதல்ல உள்ளே வாங்க ஜீ”
ஷ்ரவன் அவரை அறையினுள்ளே நாற்காலியில்
அமர வைத்தான். பின் மிகவும் மரியாதையுடன் அவர் எதிரில் அமர்ந்து, சொல்ல ஆரம்பித்தான்.
“ஜீ முதல்ல
நான் என்னைப் பத்திச் சொல்லிடறேன். நான் யோகிஜியோட
பரம பக்தன். முதல்ல எல்லாம் நல்லா பேசறாருங்கற அளவுல தான் அவர் மேல அபிப்பிராயம்
வச்சிருந்தேன். ஆனால் ஆழமாய் அவர் பேச்சுகளை உள்வாங்க ஆரம்பிச்ச பிறகு நான்
உணர்ந்ததைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. தினமும் யோகிஜி
பேசின பேச்சுகளை யூட்யூப்ல கேட்பேன். அவரை சர்வசக்தி
படைச்ச ஒரு சித்தராய் நான் அடையாளம் கண்டுகிட்டேன். அவருக்குக்
கிடைச்ச தெய்வீக அனுபவங்கள்ல ஏதாவது ஒன்னாவது எனக்குக் கிடைக்கணும்னு அவரை உருக்கமாய், மானசீகமாய்
வேண்டிகிட்டே இருந்தேன். அவர் மனமிரங்கி
எனக்கு அருள் பாலிச்ச சம்பவம் தான் இன்னைக்குக் காலைல நடந்தது.”
ஷ்ரவன் கண்களை மூடி, மேலே பார்த்துக்
கைகளைக் கூப்பினான். அந்தத் துறவி அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஷ்ரவன் தொடர்ந்தான். “வழக்கம்
போல யோகிஜியை நான் மனசுல ஆழமாய் பிரார்த்திச்சுட்டு இன்னைக்குக் காலைல தியானம் பண்ண
ஆரம்பிச்சேன். என் மனசெல்லாம்
யோகிஜி தான் நிறைஞ்சிருந்தார். நான் என் சுயநினைவைக் கூட இழந்துட்டேன்னு சொல்லலாம். அவர் மட்டும்
தெரிஞ்சார். அவரே எல்லாம்னு நான் சரணாகதி அடைஞ்சிருந்தேன். திடீர்னு
ஒரு வாலிப வயசுப் பையன் தெரிஞ்சான். அவன் யோகாலயத்துக்கு
வெளியே நின்னுகிட்டிருக்கறது தெளிவா என் மனத்திரையில் தெரிஞ்சுது. அவன் நாயையோ, ஓநாயையோ (அது சரியாய் தெரியலை) உள்ளே அனுப்பற
மாதிரி தெரிஞ்சது. உள்ளே வந்த அது என் அறைக்குள்ளேயும் நுழைஞ்சு நின்னுகிட்டிருந்துச்சு. உடனே என்
ரத்தமே உறைஞ்சது மாதிரி பயந்துட்டேன். தெய்வீக அனுபவத்தைக்
கொடுன்னு யோகிஜி கிட்ட கேட்டா, இந்த மாதிரி ஒரு காட்சி வருதேன்னு மனசு நொந்து போயிட்டேன். அப்பறம்
தான் போன வாரம் நண்பன் ஒருத்தனோட சேர்ந்து ஓமன் படம் பார்த்தது நினைவு வந்துச்சு. அது தான்
என் மனசுல பதிஞ்சு இப்படி காட்சி தெரியுதுன்னு
புரிஞ்சுகிட்டேன். அப்புறம் தானா என் மனசு ரிலேக்ஸ் ஆச்சு. அந்த மிருகத்தோட
கண்ணுல நெருப்பு கூடத் தெரிஞ்சுது. ஆனா நான் பயப்படலை. யோகிஜி
என் மனசெல்லாம் நிறைஞ்சிருக்கறப்ப எனக்கென்ன கவலையும், பயமும். நான் தைரியமாய்
அந்த மிருகத்தைப் பார்த்து ஹாய்னு சொன்னேன். அது அப்படியே
என்னை பாத்துகிட்டே நின்னுச்சு. பிறகு திடீர்னு என் மேல பாய்ஞ்சுது பாருங்க. என் உடம்பெல்லாம்
மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு. அப்புறம் என்ன ஆச்சுன்னு
எனக்கே தெரியல. நான் நினைவை முழுசா இழந்துட்டேன்.”
ஷர்வன் சொல்லும் கதையை உண்மை, என்றே கண்ணன் நம்பி விடுவார்...
ReplyDeleteஉண்மையான ஆன்மீக அனுபவம் இல்லாத அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது....
மாயப் பொன்மான், ரட்சகன், சாணக்கியன் ஆகிய மூன்று நாவல்களும் தோழி மூலம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கியாயிற்று..விமலா டீச்சர் ஈரோடு
ReplyDeleteபாண்டியன் கண்ணன் தாண்டி நிச்சயம் யோகியின் கவனத்திற்கு shravan கொண்டு செல்படுவான். கால்பந்து வெறு இன்றைய அவனது activities பார்த்து விட்டார். எதிர் பாராத திருபண்ணாகள் இனிதான் வரப்போகிறது
ReplyDelete