சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 14, 2024

யோகி 71

பாண்டியனின் கேள்விக்கு என்ன பதில் வருகிறது என்பதை அறிந்து கொள்ள பிரம்மானந்தாவும் ஆர்வமாக இருந்தார். தற்காத்துக் கொள்வது மிக முக்கியம் என்றாலும், எதிரிகளை அடையாளம் கண்டு கொள்வது அதற்கு இணையான முக்கியம் தான். எதிரிகள் உருவாகையிலேயே கண்டுபிடித்து அழித்து விடாமல் இருப்பது ஆபத்து என்பதை அவரும் அறிவார். இது வரை அவருக்கு எதிராக யாரும் எதையும் செய்து ஜெயித்ததில்லை. எதிராக இயங்குகிறார்கள் என்று தெரிந்தவுடனேயே செயல்பட்டு வந்ததால் தான் இத்தனை தூரம் சாதிக்க முடிந்திருக்கிறது. இன்று முளையிலேயே வேரோடு கிள்ளி எறியா விட்டால், நாளை விருட்சத்தோடு போராட வேண்டியிருக்கும். எந்தப் பிரச்சினையையும், அதிகப்படுத்திக் கொண்டு, பின் அதைத் தீர்க்கப் போராடுவது அறிவீனம்

 

தேவானந்தகிரி பாண்டியனிடம் சொன்னார். “விசேஷ ப்ரஷ்ன பூஜை செய்து முடிச்சதுக்கப்பறம் தான் எதையும் சொல்ல முடியும்.  அந்தப் பூஜையை சந்த்யா காலத்துல ஆரம்பிக்கணும். நீங்க ரெண்டு பேரும் முகம், கை, கால் அலம்பிட்டு வந்து உட்கார்ந்தா பூஜை முடியற வரைக்கும் அந்த இடத்தை விட்டு எழுந்து போகக் கூடாது. அந்த நேரத்துல எதுவும் பேசக்கூடாது.  செல்போனை எல்லாம் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு தூர வெச்சுட்டு வரணும். பூஜை நடக்கறப்ப நீங்க எழுந்திருச்சாலோ, பேசினாலோ பூஜையைத் தொடர்ந்து செய்ய முடியாது. அடுத்த சந்த்யா காலத்துல, அதாவது நாளைக்கு அதிகாலைல தான் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கும். அதுக்குள்ளே துஷ்டசக்தியோட பிடி உங்க மேலே கூடுதலாய் இறுகிடும்கிறதால அதைத் தவிர்க்கறது உத்தமம். பூஜை சமயத்துல உங்க ரெண்டு பேரையும், யோகிஜியையும் தவிர யாரும் அந்த இடத்துல இருக்கக்கூடாது…”

 

பாண்டியனும், சுகுமாரனும் தலையசைத்தார்கள். பாண்டியனுக்கு தேவானந்தகிரி வளவளவென்று பேசுபவராக இல்லாமல் விஷயத்தை மட்டும் தெளிவாகப் பேசும் விதம் மிகவும் பிடித்திருந்தது. இப்படிப்பட்ட மனிதர்கள் காரியத்தையும் சாதித்துக் கொடுத்தால் இவர்களுக்கு எத்தனை பணம் வேண்டுமானாலும் தரலாம்

 

பிரம்மானந்தா கேட்டார். “பூஜையை எங்கே நடத்தலாம்ஜி?”

 

தேவானந்தகிரி சொன்னார். “பதினாறடிக்கு மேலே நீளமும், அகலமும் இருக்கிற இடம் உத்தமம்.”

 

தேவானந்தகிரி தங்குவதற்கு விருந்தினர் தங்கும் கட்டிடத்தில் ஒரு பெரிய அறையை ஒதுக்கித் தந்து விட்டு பாண்டியன் மறுபடியும் பிரம்மானந்தாவிடம் வந்தார். அவர் வரும் போது சுகுமாரன் எந்த மதக்கடவுளும் இந்த ஆவி தொந்தரவிலிருந்து தன்னைக் காப்பாற்றவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

 

பிரம்மானந்தா கேட்டார். “நீண்ட காலம் கும்பிடறவனையே கடவுள் சோதிச்சு, பிறகு தான் காப்பாத்தறார். நீங்களோ கடவுளை இதுவரைக்கும் நம்பாதவர். பயந்து போய் இப்ப தான் அவரைத் தொடர்பு கொள்றீங்க. அதுவும் முழு நம்பிக்கை வந்துன்னு சொல்ல முடியாது. அப்படி இருக்கறப்ப கடவுள் உங்களைக் காப்பாத்துவார்னு எப்படி எதிர்பார்க்கறீங்க டாக்டர்?”

 

சுகுமாரன் திருதிருவென்று விழிப்பதைப் பார்க்க பாண்டியனுக்கு வேடிக்கையாக இருந்தது. இப்போது இடைமறிக்கா விட்டால் பிரம்மானந்தா இனி தொடர்ந்து ஒரு பெரிய பிரசங்கம் செய்து விடுவாரோ என்று பாண்டியன் பயப்பட்டார். இல்லாத கடவுளைப் பற்றிப் பேசி நேரத்தை விரயம் செய்வதில் பாண்டியனுக்கு விருப்பமிருக்கவில்லை. இருப்பதைப் பேசி முடிவெடுக்க எத்தனையோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன

 

சோபாவில் அமர்ந்தபடி பாண்டியன் பிரம்மானந்தாவிடம் சொன்னார். “யோகிஜி. இந்த மந்திரவாதி கிட்ட ஏதோ ஒரு சக்தி இருக்குங்கறது நிச்சயம். பிரச்சினை எங்க ரெண்டு பேருக்கும் தான்னு இவர் கண்டுபிடிச்ச மாதிரி, இதையெல்லாம் செஞ்சது யாருன்னும் கண்டுபிடிச்சு, இதைத் தீர்க்கவும் இவரால முடிஞ்சா நல்லாயிருக்கும்

 

பிரம்மானந்தா சொன்னார். “இவர் அதைக் கண்டுபிடிச்சு, பிரச்சினையைத் தீர்த்துடுவார்னு தான் நான் நினைக்கிறேன். இவரைப் பத்தி என் கிட்ட சொன்னவங்க அனுபவம் அப்படி தான் இருக்கு. ஆவின்னா அதைப் போக வைக்கிற வழி என்னங்கறதையும் தெரிஞ்சு அதைச் செய்யக்கூடியவர்ங்கறாங்க. அதே மாதிரி செய்வினை, சூனியம் மாதிரின்னா, யார், யார் மூலம், எப்படிச் செஞ்சிருக்காங்கன்னும் சொல்லி அதுல இருந்து தற்காப்புக்கும் வழி செஞ்சு தர்றாராம். திரும்ப அவங்க மேலயே அதை ஏவி விடற வேலையிலயும் இவர் கெட்டிக்காரர்னு சொல்றாங்கஅதுக்கு ஒவ்வொன்னுக்கும் தனியாய் பெரிய தொகை வாங்கறாராம். ஆனால் பிரச்சினையை முடிச்சுக் கொடுக்கறார்ங்கறாங்க.”

 

அந்தத் தகவல் பாண்டியனுக்குப் பரம திருப்தி அளித்தது. அவர் முன்பே நினைத்தது போல், காரியம் நடக்கும் என்றால் பணம் எத்தனை தந்தாலும் அது நஷ்டமல்ல. அது கூலி தான்.

 

யோகாலயத்தில் சின்னதும் பெரியதுமாக மூன்று ஹால்கள் இருந்தன. அதில் நாற்பது பேர் அமரக்கூடிய சிறிய ஹால் ஒன்றை தேவானந்தகிரியின் விசேஷ ப்ரஷ்ன பூஜைக்கு பாண்டியன் தேர்வு செய்திருந்தார். தேவானந்தகிரி சொன்னது போல் பூஜை சமயத்தில் அங்கு அவருடன் பாண்டியன், சுகுமாரன் மற்றும் பிரம்மானந்தா மட்டுமே இருந்தார்கள். நீல நிறப் பட்டுக் கச்சம் கட்டி வந்த தேவானந்தகிரி இருட்ட ஆரம்பிக்கும் சந்தியா காலம் வரை பிரம்மானந்தாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 

பிரம்மானந்தா அவரிடம் பேச்சுவாக்கில் சொன்னார். ”இதை எல்லாம் ஒரு காலத்தில் நானும் ஆர்வமாய் கத்துகிட்டேன். ஆனால் யோக மார்க்கத்தில் போனவுடன் நிறுத்திட்டேன். உண்மையைச் சொன்னால். முன்பு செய்ததில் நிறைய இப்போது மறந்தும் போய் விட்டதுஎதுவுமே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் மட்டும் தானே சரியாக ஞாபகம் இருக்கும்?.”

 

தேவானந்தகிரி சொன்னார். “வாஸ்தவம். உங்கள் குரு யார்?”

 

பிரம்மானந்தா கண்ணிமைக்கும் நேரத்தில் உடனடியாய் கற்பனை செய்து சொன்னார். “இமயமலையில் இருக்கிற ஒரு சாது. அப்பவே அவருக்கு வயது எழுபதுக்கு மேல இருக்கும். ஆனால் யாரும் முப்பதுக்கு மேல் அவர் வயசைச் சொல்ல மாட்டாங்கஅப்படி இருப்பார்.”

 

அவருடைய கற்பனையை தேவானந்தகிரி கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. தேவானந்தகிரி சொன்னார். “அவங்கெல்லாம் தவ வாழ்க்கை வாழ்ந்தவங்க. இப்ப அவங்களை மாதிரி ஆட்களை பார்க்கிறது அபூர்வம்... என்னோட குரு பாலக்காட்டு சங்கர நம்பூதிரி. பூஜைக்கு முந்தின நாள் சாயங்காலத்திலிருந்தே விரதமிருப்பார். பூஜை முடியற வரைக்கும் பட்டினி தான். 84 வயசுல இறந்தார். சாகற வரைக்கும் நோய் நொடின்னு அவர் ஆஸ்பத்திரிக்குப் போனவரல்ல...”

. 

தேவானந்தகிரி சரியான முகூர்த்த காலத்தில் தன்னுடைய பையிலிருந்து பட்டுத் துணியால் கட்டியிருந்த ஒரு வெள்ளிப் பேழையை வெளியே எடுத்து ஒரு விளக்கின் அருகே வைத்தார். அந்த வெள்ளிப் பேழை மூடப்பட்டு இருந்ததால் அதனுள்ளே என்ன இருக்கிறது என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. தேவானந்தகிரி பாண்டியனையும், சுகுமாரனையும் இரண்டு மரப்பலகைகளில் அமர வைத்து, விசேஷ ப்ரஷ்ன பூஜையை ஆரம்பித்தார். அதன் பின் அவர் கவனம் சிறிதும் சிதறவில்லை.

 

ஹாலின் ஒரு மூலையில் ஒரு மர நாற்காலியில் பிரம்மானந்தா அமர்ந்திருந்தார். அவர் இது போன்ற பூஜையை இது வரை பார்த்ததில்லை என்பதால் தேவானந்தகிரி எப்படி இந்தப் பூஜையைச் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள மிக ஆவலாய் இருந்தார். இனி எப்போதாவது இது சம்பந்தமாய் பேச வேண்டிய சந்தர்ப்பம் வருமானால் இந்த வழிமுறைகளைச் சொல்லி அவர் சோபிக்கலாம். ஆனால் அவர் தன் ஆவலை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக ஒரு ஆசிரியர் தன் மாணவனுக்குக் கற்றுத் தந்த பூஜையை சரியாகச் செய்கிறானா என்று மேற்பார்வை பார்க்க அமர்ந்திருக்கும் பாவனையைத் தான் வெளிப்படுத்தினார். அவர் உரக்கச் சொன்ன மந்திரங்கள் சிலவற்றை, தானும் அறிந்தவர் போல், பிரம்மானந்தா முணுமுணுக்க ஆரம்பித்தார்.

 

தேவானந்தகிரி மந்திர உச்சாடனங்களைச் செய்தபடியே பாண்டியனையும், சுகுமாரனையும் கூர்ந்து பார்த்து தரையில் சில சின்னங்களை வரைய ஆரம்பித்தார். சில சமயங்களில் அவர்களுடைய உடல்களைத் தாண்டியும் எதையோ அவர் கூர்ந்து பார்த்து வரைந்தார். பரசுராமன் பூஜைகள் செய்த போது வரைந்த சின்னங்கள், தேவானந்தகிரியாலும் இருவரையும் பார்த்து பார்த்து வரையப்பட்டன. இருவருக்கும் பொதுவாக இருந்த சின்னங்களையும், யந்திரங்களையும் ஓரிடத்தில் வரைந்தவர், தனி சின்னங்கள், யந்திரங்களை அதன் இரு பக்கங்களிலும் வரைந்தார். அவர் அனைத்தையும் வரைந்து முடிக்கையில் மணி எட்டாகி விட்டது.

 

பின் சிறிது நேரம் அந்த சின்னங்களையும், யந்திரங்களையும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவர் கண்களை மூடிக் கொண்டார். நீண்ட நேரம் அவர் கண்களைத் திறக்காததைப் பார்த்து அவர் உறங்கி விட்டாரோ என்ற சந்தேகம் சுகுமாரனுக்கு வந்து விட்டது.

 

பின் தேவானந்தகிரி கண்களை மூடியபடியே சொல்ல ஆரம்பித்தார். “மயான காளி சிலை தெரியுது. சிரிச்சுகிட்டிருக்கற ஒரு பொண்ணோட படம் தெரியுது. காவித் துணி தெரியுது…. காவித் துணி தீப்பற்றி எரியறது தெரியுது…”


(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. நீங்கள் பிரம்மானந்தாவை பற்றி ஒவ்வொரு முறை எழுதும் போதும்.... எங்கள் கண்முன் ஜ***கி தான் வந்து நிற்கிறார்...🤣🤣🤣🤣🤣

    இதுபோல் ஏகப்பட்ட கதைகளை அவர் விட்டுள்ளார்...
    மானசரோவரில் வேற்றுகிரகவாசிகள் பார்த்தேன்,
    மழை வரவை கணிப்பேன்,
    ஏழு பிறவி நினைவு,

    இவ்வளவு ஏன்... நீங்கள் எழுதிய "பரிணாம வளர்ச்சியில் தசாவதாரம்" கூட ஒருமுறை பேசியுள்ளார்.....
    உங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன சிலவற்றை பேசியதை நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன்....

    எனக்கு என்னவோ....! இந்த தொடரில் இடம்பெற்றுள்ளன சிவசங்கரன் கதாபாத்திரம் என்.கணேசனாக இருக்குமோ? என்ற சந்தேகம் நீண்ட நாளாக உள்ளது...😂😂😂😂😂😂😂

    ReplyDelete