சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 19, 2024

சாணக்கியன் 140

 

ள்ளிரவு நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ராக்ஷசர் கண்விழித்தார். மிகமிக அவசியமான சமயங்களில் மட்டுமே இப்படி எழுப்பப் படுவது வழக்கம் என்பதால் ராக்ஷசர் பலவிதமாக யோசித்தபடியே விரைந்து எழுந்து வந்து அறைக் கதவைத் திறந்தார். கதவைத் தட்டிய காவலனைஎன்ன விஷயம்?’ என்று அவர் பார்வை கேட்டது.

 

காவலன் பதற்றத்துடன் சொன்னான். “நம் ஆயுதக்கிடங்கு பெருந்தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது பிரபு

 

காவலன் சொன்னது அவரைக் குழப்பத்திலேயே ஆழ்த்தியது. ஆயுதக்கிடங்கில் தீப்பிடிக்க எதுவுமில்லையே என்று யோசித்தவராக,   ”எப்படி?” என்று அவர் கேட்டார்.

 

அந்தக் கேள்விக்கு அவனிடமும் பதில் இருக்கவில்லை. “தெரியவில்லை பிரபு. அங்குள்ள காவலர்களும், அருகில் .உள்ளவர்களும் தீயணைக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியோடு ஒரு வீரன் விரைந்து இங்கு வந்திருக்கிறான்.”

 

ராக்ஷசர் விரைவாக உடை மாற்றிக் கொண்டு, ஆயுதக்கிடங்கை நோக்கித் தன் குதிரையை முடுக்கி விட்டார். செய்தி கொண்டு வந்த வீரனிடம் கூடுதல் தகவல்கள் பெற முயல்வதை விட நேரடியாக சம்பவ இடத்திற்கே நேரில் சென்று இந்த அசாதாரண சம்பவம் குறித்த தகவல்கள் அனைத்தையும் அறிவது புத்திசாலித்தனம் என்று அவருக்குத் தோன்றியது.

 

ஆயுதக்கிடங்கு பற்றியெரியும் ஜுவாலை தூரத்திலிருந்தே அவருக்குத் தெரிந்தது. மக்களின் கூச்சல்களும் கேட்டன. ஆயுதக்கிடங்கை நெருங்க நெருங்க நெருப்பின் வெப்பமும் கூடிக் கொண்டே வந்தது.

 

அவருக்கு முன்பே காவலர் தலைவன் ஜீவசுத்தியும் வந்து சேர்ந்திருந்தான். தீயணைப்பு வேலையில் மற்றவர்களுடன் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவன் ராக்ஷசரைப் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்தபடி அவரருகே வர யத்தனித்தான். ராக்ஷசர் அவனிடம் தீயணைக்கும் பணியைத் தொடர்ந்து கவனி என்று சைகையால் கட்டளையிட அவன் அந்தப் பணியைத் தொடர்ந்தான்.

 

ராக்ஷசரின் பார்வை அங்குள்ள நிலைமையைக் கூர்ந்து கவனித்து அலசியது. தகவல் தெரிவித்த வீரன் சொன்னது போல் அது பெருந்தீ தான். ஆனால் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களே அதிக அளவில் இருக்கும் அந்த ஆயுதக்கிடங்கு இந்த அளவு ஆக்கிரோஷமாக எரிவது இயல்பாக இல்லை. இதில் எதோ சதி நடந்திருக்கிறது....

 

தீயணைக்கும் பணி முழுவதுமாக முடிந்தபின் அவர் ஜீவசித்தியிடம்  கேட்டார். “எப்படி இது ஆரம்பித்தது?”

 

ஜீவசித்தி சொன்னான். ”எனக்கும் தெரியவில்லை பிரபு. கேட்கவும் நேரமிருக்கவில்லை. சற்று பொறுங்கள். காவலுக்கு இருந்தவர்களை அழைத்து வருகிறேன்.”

 

அவன் சென்ற பின் அவர் மறுபடி ஆயுதக்கிடங்கைப் பார்வையால் ஆராய்ந்தார். கதவு உட்பட மரத்தாலான அனைத்தும் கருகி சாம்பலாகி இருந்தன. உள்ளே என்ன நிலவரம் என்பது பிறகு தான் தெரியவரும். தீப்பிடித்திருந்த இடங்கள்  இப்போதும் அனலாய் சுடுவதால் இப்போதே சென்று பார்க்க வழியில்லை...

 

ஜீவசித்தி இரண்டு காவல் வீரர்களுடன் வந்தான். “பிரபு, இவர்கள் இருவரும் தான் இன்று இங்கே காவலில் இருந்தவர்கள்.”

 

அந்த இரண்டு காவல் வீரர்கள் முகத்திலும் மிரட்சி தெரிந்தது. தீவிபத்து தந்திருந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னமும் மீளவில்லை என்பதும் அவருக்குத் தெரிந்தது. அவர் அவர்களிடம் கடுமையான குரலில் கேட்டார். “இந்த தீவிபத்து எப்படி நடந்தது?” 

 

இருவரில் ஒருவன் எச்சிலை விழுங்கியபடி சொன்னான். “சரியாகத் தெரியவில்லை பிரபு. திடீரென்று உள்ளேயிருந்து புகைய ஆரம்பித்தது. கதவு வழியாகப் புகை வெளிப்படுவதைப் பார்த்து விட்டு நாங்கள் பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனோம். அப்போது உள்ளே நன்றாக தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதுடன் பல இடங்களுக்கும்  வேகமாகப் பரவுவது தெரிந்தது.... முடிந்த வரை உடனடியாக அணைக்க முயற்சி செய்தோம்....”

 

ராக்ஷசர் அவர்களைக் கூர்ந்து பார்த்தபடி கேள்விகள் கேட்டார். அவர்களுக்கு உண்மையிலேயே இந்தத் தீவிபத்தில் பங்கில்லை என்பது புலனாக அவருக்கு அதிக நேரமாகவில்லை. பூட்டியிருந்த ஆயுதக்கிடங்கில் தீப்பற்றியது எப்படி என்ற கேள்வி அவர் மனதில் பிரம்மாண்டமாக எழுந்தது.   

 

அவர் ஜீவசித்தியிடம் கேட்டார். “மன்னருக்கும் தகவல் அனுப்பியாகி விட்டதா?”

 

தங்களுக்குத் தகவல் அனுப்பிய போதே அவருக்கும் அனுப்பியிருக்கிறேன். ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் மன்னரை எழுப்ப அவரது காவலர்கள் தயங்கியிருக்கிறார்கள். காலையில் அவர் எழுந்தவுடன் இந்தத் தகவலைச் சொல்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.”

 

அதைக் கேட்டுவிட்டு ராக்ஷசர் ஒன்றும் சொல்லவில்லை. அனல் தணியும் வரை மௌனமாகக் காத்திருந்த அவர் பின் மிகவும் கவனமாக ஆயுதக்கிடங்கினுள்ளே சென்று ஆராய்ந்தார். நீண்ட நேரம் கழிந்து வெளியே வந்த போது அவர் முகம் இறுகியிருந்தது.  

 

வசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு ராக்ஷசர் தனநந்தனின் வரவுக்காகக் காத்திருந்தார். பத்ரசால், வரருசி உட்பட மற்றவர்கள் தகவல் கிடைத்தவுடனே கிளம்பி வந்து விட்டிருந்தனர். அனைவருக்கும் ஆயுதக்கிடங்கு தீவிபத்தில் கருகியது அதிர்ச்சியாகத் தானிருந்தது என்பது அவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டதிலேயே தெரிந்தது.

 

வரருசி மனத்தாங்கலுடன் சொன்னார். “நம் பாடலிபுத்திரத்தில் இவ்வளவு ஒரு சம்பவம் இது வரை நடந்ததில்லை.”

 

பத்ரசால் கோபத்தோடு சொன்னான். “குற்றவாளிகள் யாரானாலும் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.” 

 

ராக்ஷசர் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. கருத்துக்கள் தெரிவிப்பதால் மட்டும் எந்தக் காரியமும் நடந்து விடுவதில்லை.

 

தனநந்தன் நீண்ட நேரம் கழித்து நிதானமாகத் தான் வந்தான். அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தவுடன் அதை ஏற்றுக் கொண்டு தன் ஆசனத்தில் அமர்ந்த அவன் அவர்களை அமருமாறு சைகை செய்தான். அவர்கள் அமர்ந்தவுடன் ராக்ஷசரிடம் அவன் கேட்டான். “சாதாரணமாக ஆயுதக்கிடங்கில் தீப்பிடிக்க வாய்ப்பில்லையே. என்ன ஆயிற்று?’

 

ராக்ஷசர் மெல்லச் சொன்னார். “எதிரிகள் திட்டமிட்டுச் செய்த சதிச்செயலாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.”

 

தனநந்தன் அவர் முகபாவனையிலும் அவர் சொன்ன தகவலிலும் ஆபத்தை உணர்ந்தான். “எப்படிச் சொல்கிறீர்கள்?”

 

ராக்ஷசர் விளக்கமாகச் சொன்னார். “பொதுவாக நாம் ஆயுதக்கிடங்கின் முன்பகுதியில் வீரர்களின் பயிற்சிக்காக தினசரி பயன்படுத்தும் முக்கிய ஆயுதங்களை வைத்திருப்போம். பரந்த பின்பகுதியில் மற்ற அனைத்து ஆயுதங்களையும் வைத்திருப்போம். பின்பகுதியில் சீக்கிரமாகத் தீப்பிடிக்க உகந்த பொருள்கள் முன்பே அங்கே குவிக்கப்பட்டிருந்தன போலத் தெரிகிறது. பின்பகுதியை நாம் அடிக்கடி திறந்து பார்க்கும் அவசியம் இல்லாததால் அது நம் கவனத்திற்கு வரவில்லை. சாதாரணமான, இயல்பான தீவிபத்தாக இருந்திருந்தால் பக்கவாட்டில் இருக்கும் சில ஆயுதங்கள் சேதமடைந்திருக்கலாமேயொழிய இப்படி எல்லா ஆயுதங்களும் முழுமையாகச் சேதமாயிருக்க வாய்ப்பேயில்லை. இப்படி ஆக வேண்டும் என்றே ஆயுதங்களுக்கு இடையிடையே எரிபொருள்களை திட்டமிட்டு வைத்திருந்தால் மட்டுமே இப்படி நிகழ முடியும்....” 

 

ஆத்திரத்தில் தனநந்தனுக்குப் பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை

 

பத்ரசால் கேட்டான். “முன்பகுதியில் இருந்த ஆயுதங்கள்?”

 

அவையும் நிறைய சேதமாகியுள்ளன என்றாலும் கூட கஷ்டப்பட்டு முயன்றால் ஓரளவு சரிசெய்து விடலாம். ஆனால் எண்ணிக்கையில் அவை பின்பகுதி ஆயுதங்களை வைத்து ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. யாரோ மிகவும் சாமர்த்தியமாகத் திட்டமிட்டு இக்காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.”

 

தனநந்தன் கோபத்தில் கொதித்தபடி கேட்டான். “யாரந்த எதிரிகள்?”

 

ராக்ஷசர் சொன்னார். “என் சந்தேகம் விஷ்ணுகுப்தர் மற்றும் சந்திரகுப்தன் மீது தான்

 

சமீப காலமாகவே எல்லாவற்றிற்கும் அவர்கள் பெயர்களையே ராக்‌ஷசர் சொல்வது அவர்களுக்கு அவர் தரும் கூடுதல் முக்கியத்துவம் போல் தோன்றினாலும் அவர் எதிலும் முட்டாள்தனமாய் யோசிப்பவர் அல்ல என்பதால் தனநந்தன் அவர் கருத்தை அலட்சியப்படுத்த விரும்பாமல் கேட்டான். ”அங்கு காவலுக்கு நம் ஆட்கள் இருக்கும் போதே இந்தச் சதியை எப்படி அவர்களால் அரங்கேற்ற முடிந்தது? இதில் நம் காவலர்களுக்கும் பங்கிருக்கிறதா?”

 

ராக்ஷசர் எதுவும் சொல்வதற்கு முன்பே வரருசி சொன்னார். “விஷ்ணுகுப்தர் மாந்திரீகத்திலும் வல்லவர் என்று நான் கேள்விப்பட்டதை முன்பே சொல்லி இருக்கிறேன். மாந்திரீகத்தில் தீயை ஓரிடத்தில் வரவழைப்பது முடிந்த காரியமே

 

பத்ரசாலுக்கு மாந்திரீகத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. அவன் ராக்ஷசர் கருத்தை அறிய அவரைப் பார்த்தான்.

 

ராக்ஷசருக்கும் அது மாந்திரீகச் செயலாகத் தெரியவில்லை.  அவர் ஆயுதக்கிடங்கில் ஆராய்ந்த போது கிடைத்த நிறைய எரிபொருள்களின் தடயம், நிஜம் வேறு என்று அவரை எச்சரித்தது. அவர் சொன்னார்.

விஷ்ணுகுப்தரின் அசாத்திய வளர்ச்சியைப் பார்க்கையில் நீங்கள் சொல்வது போல் மாந்திரீகம் மாதிரியான எதாவது கூடுதல் சக்தி அவருக்கு உதவியிருக்கலாம் என்று தோன்றுகிறது தான். ஆனால் இந்த தீவிபத்தில் மாந்திரீகத்தை விட, சதியின் பங்கையே நான் அதிகம் பார்க்கிறேன். இது  ஏதோ ஓரிரு நாளில் நடந்து முடிந்த செயலாய் தோன்றாததால் இந்தச் சதியில் இங்குள்ளவர்களில் ஒருசிலருக்கும் பங்கிருக்கலாம் என்பதையும் என்னால் மறுக்க முடியவில்லை

 

அந்தக் கடைசி செய்தி அவர்கள் அனைவரையும் அதிர வைத்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, December 16, 2024

யோகி 81

 

ஸ்ரேயாவுக்கு ஒரு சின்ன நைப்பாசை இருந்தது. அவள் வழக்கத்திற்கு மாறாக எதிர்த் திசையில் போனாலும் ஷ்ரவன் வேகமாக நடந்து வந்து அவளுடன் சேர்ந்து கொள்வான், பேசுவான் என்ற ஆசை அவள் மன ஓரத்தில் இருந்தது.  ஆனால் அவன் அவளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தனியாகவானாலும், வழக்கமான பாதையிலேயே போக ஆரம்பித்தது அவளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அவள் தன்னையே திட்டிக் கொண்டாள். ‘இந்த முட்டாள் மனதிற்கு எத்தனை பட்டாலும் புத்தியே வராது 

 

வட்டப் பாதையில் எதிர் எதிர் திசையில் போனாலும் ஏதாவது ஒரு புள்ளியில் சந்தித்தேயாக வேண்டுமல்லவா? அப்படி அவன் அவளெதிரே வந்த போதும் சின்னப் புன்முறுவல் செய்து தான் கடந்து போனான். அப்படிப் புன்முறுவல் கூடச் செய்யாமல் அவன் கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு கடந்து போயிருந்தால் கூட அவளுக்கு ஓரளவு திருப்தியாக இருந்திருக்கும். அவள் வேண்டுமென்றே எதிர்த் திசையில் சென்றதற்கு அவன் கோபித்துக் கொண்டது போல் இருந்திருக்கும். அது கூட ஏதோ ஒரு வகையில் அவளை அவன் பொருட்படுத்தியிருக்கிறான் என்பதாக இருந்திருக்கும். அவன் அந்தச் சில்லறை சந்தோஷத்தைக் கூட அவளுக்குத் தரவில்லை.

 

அவனை அப்படியே நிறுத்தி, அவன் தோள்களைப் பிடித்து உலுக்கி, “நீ உன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்குமளவு அவளுக்கு ஆத்திரம் வந்தது. ஆனால் அதற்கும் பெரிய எதிர்வினை இருக்காது என்ற சலிப்பும் அவள் மனதில் எழுந்தது. அவளையும் அறியாமல் அவள் கண்கள் கலங்கின. நல்ல வேளையாக இப்போதும் அரையிருட்டாக இருப்பதால் யாரும் அவள் கண்ணீரைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

 

நடைப் பயிற்சி முடிந்து அறைக்குள் நுழைந்த போது மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை ஷ்ரவன் உணர்ந்தான். அதையும், அவன் தனியாக அறைக்குள் இருக்கும் இந்தக் கணத்தில் கூட அவனுக்கு வெளிக்காட்ட முடியவில்லை.  அதையும் அந்தக் காமிரா பதிவு செய்து கொள்ள வாய்ப்பு உண்டு. காரணம் என்னவென்று கண்காணிப்பாளர்கள் ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

திடீரென்று அவனுக்கு அந்த உபாசனை மந்திரத்தை ஜபிக்கத் தோன்றியது. அவன் கட்டிலில் சம்மணமிட்டு நேராக அமர்ந்து, கண்களை மூடி, அந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான்.  சுமார் 720 முறை ஜபித்து முடித்தவன்,  அவனுடைய  அறைக் கதவை ஊடுருவி ஒரு ஓநாய் உள்ளே வருவதைப் பார்த்தான்.

 

அவன் திடுக்கிட்டுக் கண்விழித்தான். ஆனால் தரையில், அவன் எதிரில், நெருப்பு உமிழும் கண்களுடன் அந்த ஓநாய் இப்போதும் இருந்தது.

 

டாக்டர் சுகுமாரனின் மனைவி கணவனின் நடவடிக்கைகளில் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டாள். அதுவும் தலைகீழ் மாற்றங்களாக இருந்தன. சாதாரணமாகவே மற்றவர்கள் மரியாதை காட்டும்படியாக கம்பீரமாக நடந்து கொள்ளக்கூடிய சுகுமாரன் இப்போது சில சமயங்களில் கோமாளியைப் போல் தெரிந்தார். முன்பெல்லாம் அவள் பல முறை கெஞ்சிக் கூத்தாடினால் தான் அவரை ஒரு கோயிலுக்கே கூட்டிக் கொண்டு போக முடியும். தீவிர நாத்திகரான அவர், ஆன்மீக ஈடுபாடுள்ள அவளைப் பல தர்மசங்கடமான கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வதுண்டு. அப்படிப்பட்டவர் அவள் சில நாட்கள் வெளியூருக்குப் போய் வருவதற்குள் மயான காளி படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு மாறியிருந்தார். நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடும் ஏதோ ஒரு பைத்தியக்கார நண்பனின் வீட்டுக்குப் போய் இரவெல்லாம் தங்கியிருந்து விட்டுத் திரும்பி வந்தவர் தான் ஒரு தாயத்து கட்டிக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், நாய்க்கும் சேர்த்து ஒரு தாயத்து கட்டிக் கொண்டு வந்தார். அவளுக்குத் தெரிந்து எந்த வீட்டு நாய்க்கும், யாரும் தாயத்து கட்டியதில்லை.

 

என்ன கண்றாவி இது?” என்று ஏளனமாகக் கேட்ட அவளிடம் அசடு வழிய காரணம் சொன்னார். “சும்மா அங்கே எல்லா நாய்களுக்கும் கட்டினாங்க.  இதுக்கும் இருக்கட்டும்னு விட்டுட்டேன்

 

சரி அந்தக் கருமத்தை நீங்க ஏன் கட்டியிருக்கீங்க?”

 

இல்லை அங்கே ஆளுகளும் எல்லாரும் கட்டிகிட்டாங்க

 

யாருங்க உங்களோட அந்த லூஸு ஃப்ரண்டு. குடும்பம் நடத்தற வீட்டுல மயான காளி படத்தைக் கொடுக்கறான். நாய்க்கு பிறந்த நாளைக் கொண்டாடறான். நாய்களுக்கும் ஆள்களுக்கும் தாயத்து கட்ட வைக்கிறான். எல்லாமே ஏடாகூடமாய் இருக்கே. முதல்ல அந்த ஆளோட சகவாசத்தை விட்டொழிங்க.”

 

டாக்டர் சுகுமாரனுக்கு மனைவியின் ஓயாத விமர்சனம் எரிச்சலை மூட்டியது என்றாலும் அவரால் எதற்கும் பதில் சொல்ல முடியவில்லை. ”சரி இனி அந்த ஆள் வீட்டுக்குப் போகலை.” என்று உடனடியாக சரணாகதி அடைந்தார். ’நாயை வெளியே கொண்டு போக ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சு சும்மா ஒரு பேச்சுக்கு நாய்க்கு பிறந்த நாள் விழா கொண்டாடற ஆளைச் சொன்னால் அதையும் ஒரு பிரச்சினை ஆக்கறாளே. இவளுக்கு அந்த ஆவியே தேவலை மாதிரி இருக்குஎன்று மனதிற்குள் நொந்து கொண்டார்.

 

நல்லது. முதல்ல நாய் கழுத்துல இருக்கற தாயத்தை எடுத்து வீசுங்க. அக்கம் பக்கத்துல எல்லாம் சிரிக்கிறாங்கஎன்று சொல்லி அந்தத் தாயத்தைக் கழற்றி விட அவள் நாலடி எடுத்து வைத்திருப்பாள். அவர் அசாதாரண வேகத்தில் தாவிக் குதித்து வந்து அவளை இடைமறித்தார்.

 

அந்தத் தாயத்தை மட்டும் கழட்டினா, இங்கே ஒரு கொலை விழும் சொல்லிட்டேன்என்று ஆத்திரத்துடன் கத்திய சுகுமாரனைத் திகிலுடன் அவர் மனைவி பார்த்தாள்.

 

தீ உமிழும் கண்களுடன் எதிரில் நின்றிருந்த ஓநாயைப் பார்த்தவுடன் ஷ்ரவனின் இதயம் சில வினாடிகள் துடிக்க மறந்தது.

 

பாண்டியனை பயமுறுத்தி வந்த ஓநாய் இப்போது அவனிடம் வந்திருப்பது எப்படி? காசர்கோட்டிலிருந்து வந்த மந்திரவாதி தன் மந்திர வித்தையால் ஓநாயை அவன் மேல் திருப்பி ஏவியிருக்கிறாரா? ’இனி என்ன செய்வது?’ என்ற திகில் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

 

சில வினாடிகளில் தன் நிதானத்தை ஷ்ரவன் திரும்பப் பெற்றான். மந்திர உபதேசம் செய்த பரசுராமன் அது அவனை ஆபத்திலிருந்து காக்கும் கவசமாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அவன் அந்த மந்திரத்தை ஜபிக்கும் போது தான் இந்த ஓநாய் வந்திருக்கிறது. மேலும் அவன் இந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்கும் வரை இந்த ஓநாய் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்று தைரியம் பெற்ற அவன் தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தான். அந்த ஓநாய் அவனையே பார்த்தபடி நின்றது. அதன் கண்கள் தொடர்ந்து தீயை உமிழ்ந்த போதிலும், அவன் ஆரம்பத்தில் உணர்ந்த திகில் குறைய ஆரம்பித்தது.

 

நிதானமாக அவன் அந்த மந்திரத்தை 1008 முறை சொல்லி முடிக்கும் வரை அது அங்கேயே நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

 

இன்றைய தினமும் 1008 முறை அந்த மந்திரத்தைச் சொல்லி முடித்து விட்டதால், அந்த மந்திரம் அவனைக் காக்கும் என்ற நம்பிக்கையுடன் அவன் அந்த ஓநாயைப் பார்த்துஹாய்என்றான்.

 

அந்த ஓநாய் ஓரடி அவனை நெருங்கியது. அவனுக்கு ஏனோ இப்போது பயம் சுத்தமாக விலகியிருந்தது. அதற்குப் பதிலாக, ஒரு வளர்ப்புப் பிராணியிடம் தோன்றக்கூடிய அன்பு அவனுள் எழுந்தது. இது பரசுராமன் உருவாக்கி அனுப்பிய சக்தியின் அம்சம் என்றால், இதுவும் அவனுடைய கட்சி என்று உள்ளுணர்வு சொன்னது. இது எதிரி திரும்ப அவன் மீது ஏவிய துஷ்டசக்தி என்றால் அவன் அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது வந்து, அதைச் சொல்லி முடித்த பின்பும் இருந்து, பின் அவனை மேலும் நெருங்கி இருக்காது.

 

எதற்கும் அசராத பாண்டியனை கதிகலங்க வைத்த இந்த ஓநாய் உண்மையிலேயே நம் நண்பன் தான் என்று நினைக்கையில் அவனுக்கு அதன் மீது சினேகம் மேலும் அதிகரித்தது.   அதனுடன் நட்பாய் மேலும் பேச நினைத்து அவன் வாயைத் திறந்த போது தான் ரகசிய காமிரா மூலம் அவன் கண்காணிக்கப்படுவது அவனுக்கு நினைவுக்கு வந்தது. 


(தொடரும்)

என்.கணேசன்

 



 

Thursday, December 12, 2024

சாணக்கியன் 139

 

கத அரசவையின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் எப்போதும் அதிகம் பேசுபவரும், முடிவுகள் எடுப்பவரும் ராக்‌ஷசர் தான். அவர்களில் அதிகம் வாயே திறக்காதவர் ராஜ குரு. அவர் பேசும்படியான விஷயங்கள் பெரும்பாலும் எதுவும் இருக்காது. ஏதாவது யாகங்கள், சடங்குகள் நடக்க வேண்டியிருந்தால் மட்டுமே அவர் பேசுவார். மற்றபடி அவர் ஒரு பொம்மை போல் உட்கார்ந்து செல்லக்கூடியவரே. ஆனால் முதல் முறையாக அவர் ஆலோசனைக்கூட்டத்தின் ஆரம்பத்திலேயே வாயைக் கனைத்துக் கொண்ட போது தனநந்தன் உட்பட அனைவரும் அவரை வியப்போடு பார்த்தார்கள்.

 

அவர் சொன்னார். “மன்னா, நீ சீக்கிரம் சுகேஷைப் பட்டத்து இளவரசனாக அறிவித்து விட வேண்டும். அவனும் அதற்கான வயதை எட்டி விட்டான். இதை நீ இனியும் தள்ளிப் போடுவது நல்லதல்ல.”

 

தனநந்தன் தலையசைத்தான். அவன் மூத்த மனைவி அமிதநிதாவும் சில நாட்களாக அவனிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். மகள் திருமணத்திற்கு அடுத்தபடியாக அவள் அதிகம் பேசுவது இதைத்தான். ராஜகுருவே அவன் மனைவி சொல்லித் தான் இந்தப் பேச்சை இன்று எடுத்திருக்கிறார் என்று அறியாத அவன் சொன்னான். “நல்லதொரு முகூர்த்த நாளைப் பார்த்துச் சொல்லுங்கள் குருவே. அறிவித்து விழாவை ஏற்பாடு செய்து விடுவோம்.”

 

”இரண்டு நாட்களில் சொல்கிறேன்” என்று ராஜகுரு சொன்னார். இனி நீங்கள் என்ன வேண்டுமோ பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் விதமாகத் தன் இருக்கையில் சாய்ந்து கொண்டார்.

 

ராக்‌ஷசர் சொன்னார். “பட்டத்து இளவரசராக அறிவித்து விட்டால் அவரை நாம் நம் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கு பெறச் செய்யலாம். இனி அவரும் ஆட்சி, நிர்வாக விஷயங்களில் ஈடுபடுவது நல்லது.”

 

வரருசி சொன்னார். “கூடவே இளவரசரின் கல்வி ஞானத்தையும் அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. நியாயமாக நாம் பெரிய கல்விக்கூடங்களுக்கு அவரை அனுப்பியிருக்க வேண்டும்….”

 

தனநந்தன் புன்னகைத்தான். அவன் மூத்த மகன் சுகேஷும் அவனைப் போலவே கல்வியில் சற்றுப் பின் தங்கியவன் தான்.  இதைச் சொன்னால் மகன் எப்படி முகம் சுளிப்பான் என்று எண்ணியவனாய் வேடிக்கையாகச் சொன்னான். “அமைச்சரே. பெரிய கல்விக்கூடங்களில் கல்வியை விட அதிகமாக தேவையற்றவையே சொல்லித் தரப்படுகின்றன என்பதைத் தான் நாம் பார்க்கிறோமே. நீங்கள் படித்த பிரசித்தி பெற்ற தட்சசீலக் கல்விக்கூடத்திலேயே மாணவர்கள் கல்வியை விட அதிகமாக புரட்சியை அல்லவா கற்றிருக்கிறார்கள்.”

 

தனநந்தன் சாணக்கியர் பெயரைச் சொல்லாமல் புரட்சியைப் பற்றி மட்டும் சொன்னதை ராக்‌ஷசர் கவனித்தார்.  வரருசியோ தான் படித்த கல்விக்கூடத்தை மன்னன் குறைவாகச் சொன்னதில் வருத்தமடைந்தார்.  மெல்லச் சொன்னார். “நான் படித்த காலத்தில் அப்படி இருக்கவில்லை அரசே”

 

தனநந்தன் தன் பலத்த சந்தேகத்தைக் கேட்டான். “பின் நிகழ்காலத்தில் மட்டும் அதை எப்படி அந்தக் கல்விக்கூடம் அனுமதிக்கிறது. கல்விக்கூடத்திற்கு அனுப்புவது கல்வி கற்கவா, புரட்சி செய்யவா? எல்லோருக்கும் என்ன கர்மம், என்ன தர்மம் என்றெல்லாம் போதிக்கிற ஆசிரியர்கள் தங்கள் கடமையையும், தர்மத்தையும் மறந்து விட்டு புரட்சியைக் கற்றுத் தரலாமா? மாணவர்களின் பெற்றோர்கள், கல்விக்கூட நிர்வாக அறிஞர்கள் எல்லாம் எப்படி இதை அனுமதிக்கிறார்கள்?”

 

இப்போதும் அவன் கேட்க வருவது சாணக்கியரின் செயல்களை எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதைத் தான் என்று புரிந்து கொண்ட வரருசி விளக்கினார். “பாடப்பிரிவுகளில் அரசியல், ராஜநீதி போன்றவையும் கற்பிக்கப்படுகிறது அரசே. அதை மாணவர்களைப் படிப்பித்து நடைமுறைக்கும் மெல்ல மெல்ல விஷ்ணுகுப்தர் ஒருவர் தான் இழுத்து விடுகிறார் என்று கேள்விப்பட்டேன். மற்ற ஆசிரியர்கள் அதைச் செய்வதில்லை. ப்படிப் புரட்சியில் ஈடுபடும் மாணவர்களும் தங்கள் சுய விருப்பத்தால் தான் அதில் ஈடுபடுவதால் கல்விக்கூட நிர்வாகம் அதைப் பெரிதுபடுத்தவில்லை போல் தெரிகிறது.. ஆனால் இப்போது விஷ்ணுகுப்தர் தட்சசீல கல்விக்கூடத்தில் ஆசிரியர் பணியில் இல்லை என்று கேள்விப்பட்டேன். புரட்சி வேலைகளில் ஈடுபட்ட மாணவர்களும் அவரோடு கல்விக்கூடத்திலிருந்து வெளியேறி விட்டார்களாம்.”    

 

தனநந்தன் முகம் சுளித்தபடி சொன்னான். “இதெல்லாம் தண்டிக்க வேண்டிய குற்றங்கள். இவற்றை அனுமதிப்பது தவறான முன்னுதாரணமாகப் போய்விடும். ஒரு ஆசிரியருக்கு அவ்வளவு அதிகாரமும், சுதந்திரமும் தந்திருப்பதே தவறு.”

 

வரருசி மெல்லச் சொன்னார்.   ”ஆச்சாரியர் பொருளாதாரம் அரசியல் மட்டுமல்லாமல் மாந்திரீகம், ஏவல் சக்திகள் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றவர் என்று நான் கேள்விப்பட்டேன். அவருடைய வெற்றிகளுக்கு அதுவும் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். அது எந்த அளவு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் கல்விக்கூடத்தில் எடுக்காமல் இருக்க அது காரணமாக இருக்கலாம்.”

  

சாணக்கின் மகன் விட்டு வைத்திருக்கும் வித்தை எதாவது இருக்கிறதா என்று எண்ணி தனநந்தன் வயிறெரிந்தான்.

 

பேச்சு போகும் போக்கை விரும்பாத ராக்‌ஷசர் நிர்வாக விஷயங்களைப் பேச ஆரம்பித்தார்.

 

 

சுதானு கோபத்துடன் தாரிணியிடம் வந்து சொன்னான். “பட்டத்து இளவரசர் அறிவிப்பு குறித்த பேச்சு அடிபட ஆரம்பித்து விட்டது பார்த்தீர்களா தாயே

 

தாரிணி சொன்னாள். “என் காதிலும் அது விழுந்தது சுதானு. ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையில் நானில்லை

 

சுதானுவின் கோபம் இரட்டிப்பாகியது. “ஏன் தாயே?”

 

அன்று மகாவிஷ்ணு கோயிலில் நாம் பார்த்த மகான் என்ன சொன்னார் நினைவிருக்கிறதா? இத்தனைக்கும் அவர் நமக்கு வேண்டப்பட்டவர் அல்ல. அதைச் சொன்னதற்கு நம்மிடமிருந்து பரிசு எதுவும் கூட அவர் வாங்கவில்லை. ஞானதிருஷ்டியில் பார்த்துச் சொல்லி விட்டு மாயமாய் மறைவது போல் போய் விட்டார். மகான்கள் வாக்கு பொய்யாகாது மகனே

 

சுதானுவின் கோபம் தணிந்தது. அந்த ஆள் மகான் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. அவன் தாய் சொல்வது போல் பழுத்த கிழமான அவர் ஆதாயத்திற்காகச் சொல்லவில்லை. அதை எதிர்பார்த்து ஒரு கணம் நிற்கக்கூட இல்லை. மகாவிஷ்ணு கோவிலுக்கு ஒன்பது சனிக்கிழமைகள் செல்வது என்று அவர்கள் நினைத்திருந்தது அந்தப் பூஜாரிக்குக் கூடத் தெரியாது. அப்படியிருக்கையில் ஞானதிருஷ்டி அல்லாமல் வேறு வழியில் அவர் அறிய வாய்ப்பேயில்லை. எத்தனை தெளிவாக அவன் வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லி இனி எட்டு சனிக்கிழமைகளும் தொடர்ந்து வழிபடுங்கள் என்றும் சொன்னார்.  அடுத்ததாக அவர் சொன்ன இன்னொரு விஷயம் தான் புதிராக இருக்கிறது.

 

அவர் சொன்னதை அவன் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டான். “வெளியே எதிரிகள் முற்றுகையிட்டிருக்கும் காலத்தில் உள்ளே உனக்குள்ள தடையை நீ நீக்கி விட்டால் உன் ஆசை நிறைவேறுவது உறுதி. அது வரை பொறுத்திரு

 

அந்த மகான் எதை முற்றுகையிடுவது  பற்றிக் குறிப்பிடுகிறார் என்றும் அவனுக்கு விளங்கவில்லை. அவர் சொல்வது அரண்மனையையா,, பாடலிபுத்திரத்தையா, இல்லை வேறு எதையாவதையா என்று தெரியவில்லை. அதை யோசித்து ஒரு நாளெல்லாம் குழம்பிய அவன் மீண்டும் அவரைச் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றெண்ணி தன் காவலர்களை விட்டு அவரைத் தேடச் சொன்னான். யாருக்கும் அவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. எந்தக் கோயில்களிலும் அருகில் உள்ள யாத்திரைத் தலங்களிலும் யாரும் அவரைப் பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது. யாரோ ஒருவர் மட்டும் பாடலிபுத்திர பயணியர் விடுதிக்கு அருகே பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் விடுதியில் விசாரித்த போதும் அப்படி யாரும் அங்கே தங்கவில்லை என்று சொன்னார்கள்.

 

அதை அவன் தாரிணியிடம் தெரிவித்த போது அவள் “மகான்கள் அற்புதங்களை நடத்த முடிந்தவர்கள். அவர்கள் பலர் பார்க்க எங்கும் தங்கவோ, பயணம் செய்யவோ வேண்டியதில்லை மகனே. தேவைப்படும் போது மட்டுமே அவர்கள் பிறர் கண்களுக்குக் காட்சியளிப்பார்கள். மற்ற நேரங்களில் அருவமாக இருக்க முடிந்தவர்கள் என்று என் தாயார் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை நாம் நம் கண்களால் காண முடிந்ததே பாக்கியம். அவர் வாயால் அருள்வாக்கு ஒன்றைக் கேட்க முடிந்தது அதைவிடப் பெரிய பாக்கியம்என்று சொன்னாள்.

 

அதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் சுதானுவின் கோபம் தணிந்தது.  அவன் தாயிடம் சொன்னான். “ஆனாலும் அதிக கால தாமதம் செய்யாமல் தந்தையிடம் பேசுவது நல்லது அம்மா. அவர் சுகேஷை பட்டத்து இளவரசனாக அறிவித்து விட்டால் பிறகு அதை மாற்றுவதை அவரும் தர்மசங்கடமாக உணர்வார்.”

 

தாரிணி சொன்னாள். “நான் கண்டிப்பாகப் பேசுகிறேன். இது விஷயமாக ஒரு தீர்மானத்தை எட்டும் வரை நீ அவரிடம் அனாவசிய வாக்குவாதம் செய்யாமல் இரு.”

 

(தொடரும்)

என்.கணேசன்