சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 29, 2023

யாரோ ஒருவன்? 140



பீம்சிங்குக்கு காளிங்க சுவாமி சொன்னது ஆச்சரியத்தைத் தந்தாலும் அவன் விளக்கம் எதுவும் கேட்காமல் ஜீப் டிரைவரிடம் தன்னை லக்ஷ்மண் ஜூலாவிற்கு அழைத்துப் போகச் சொன்னான்.

சிறிது நேரத்தில் ஜீப் லக்ஷ்மண் ஜூலாவை அடைந்தது. லக்ஷ்மண் ஜீலா ரிஷிகேசத்தின் எல்லையில் கங்கையின் இரு கரைகளுக்கு இடையே இருக்கும் நீண்ட தொங்கும் பாலம். சுற்றுலாப்பயணிகள் அதிகம் கண்டு ரசிக்கும் ஒரு இடம். அந்த நேரத்தில் அங்கே கூட்டம் அதிகமில்லை...

காளிங்க சுவாமி அவன் மனதினுள் சொன்னார். “நீ உன் பையிலிருந்து அந்த ரத்தினத்தை வைத்திருக்கும் மஞ்சள் துணியை எடுத்துக் கொள். பின் இறங்கி அந்தப் பாலத்தில் நடந்து போ..”

பீம்சிங் அவர் சொன்னது போலவே செய்தான். கிட்டத்தட்ட அந்தப் பாலத்தின் மையப்பகுதியை அவன் அடைந்த போது அவர் சொன்னார். “இங்கே நில்

அவன் நின்றான். “வலது பக்கம் திரும்பி கங்கையைப் பார்த்தபடி நில்அவன் அப்படியே செய்தான். “மஞ்சள் துணியிலிருந்து அந்த ரத்தினத்தைக் கையில் எடுத்துக் கொள்பீம்சிங் அப்படியே மஞ்சள் துணியிலிருந்து அந்த நாகரத்தினத்தைக் கையில் எடுத்துக் கொண்டான்.

முதலில் மனதில் உன் அனுமாரை வணங்கு. பின் காளியை வணங்கு.  பின் நாகதேவதையை வணங்கு. பின் கங்கையை வணங்கு….”

அப்படியே ஓவ்வொருவராக நினைத்து பீம்சிங் வணங்கினான். காளிங்கசுவாமி பின் சொன்னது அவனைத் திகைக்க வைத்தது. “அந்தக் கல்லை பலம் கொண்ட வரைக்கும் தூரத்தில் கங்கை நீரில் தூக்கி எறி

திகைத்த பீம்சிங் சிறிது தயங்கினான். “யோசிக்காதே பீம்சிங். அதன் பாதையில் இதுவரையில் தான் உன் பங்கு. அதன் அடுத்த பயணத்தை கங்கை பார்த்துக் கொள்வாள்… இனி இந்த விஷயத்தில் நாம் செய்ய முடிந்தது எதுவுமில்லை....”

பீம்சிங் திகைப்பு மாறாதவனாய் அந்த விசேஷ நாகரத்தினக்கல்லை பலம் கொண்ட வரை தூரமாக வீசி எறிந்தான். சூரிய வெளிச்சத்தில் அந்தக் கல் விசேஷமாக ஜொலித்தபடியே போய் தூரத்தில் கங்கை நீரில் மூழ்கியது.

பின் பக்கம் திரும்பி நின்று மாகாளியை வணங்கியபடி அந்த மஞ்சள் துணியை கங்கையில் போடு 

பீம்சிங் அப்படியே செய்தான். காளிங்க சுவாமி சொன்னார். “நீ இனி உன் வீட்டுக்குக்குப் போய்க் கொள். உனக்கு வர வேண்டிய மீதி ஏழு லட்சத்தை நான் உனக்கு அனுப்பி வைக்கிறேன்…”

அந்த விசேஷ நாகரத்தினத்தை கங்கையில் வீசியவுடனேயே பெருத்த நிம்மதி அடைந்திருந்த பீம்சிங் சொன்னான். “சுவாமிஜி. எனக்கு பணம் எதுவும் வேண்டாம். அந்த மூன்று லட்சத்தையும் கூட திருப்பித் தர நான் தயார்…. அஜீம் அகமது என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வது?”

காளிங்க சுவாமி சொன்னார். “சுவாமிஜி சொன்னபடி சேர்த்து விட்டேன் என்று சொல். அது போதும்.”

அவன் மனதிலிருந்து காளிங்க சுவாமி இருந்த சுவடில்லாமல் மறைந்து போனார். திரும்பி நடந்த போது பீம்சிங்குக்கு ஏனோ நிம்மதியாக இருந்தது.  ஆனால் ஒரு நிமிடம் கழித்து அவனுக்குத் தோன்றியது. “பைத்தியக்காரத் தனமாக எதை எதையோ நினைப்பதற்குப் பதிலாக ஐந்து கோடி ரூபாய் வேண்டும் என்று நினைத்திருந்தால் அந்தப் பணம் கிடைத்திருக்குமோ? அப்படிக் கிடைத்திருந்தால் மீதி வாழ்நாள் பூராவும் பணக்கஷ்டம் வராமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்...”

அவன் அந்த ரத்தினக்கல்லை வீசி எறிந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தபடி ஒரு நிமிடம் நின்றிருந்து விட்டு மறுபடி நடக்க ஆரம்பித்தான். ‘அந்தப் பணம் வந்தவுடன் கூடவே என்னென்ன எண்ணமெல்லாம் வந்திருக்குமோ, என்னென்ன பாடுபட்டிருப்பேனோ யாருக்குத் தெரியும்? இன்றைக்குப் பைத்தியம் பிடிக்காமல் தப்பித்ததே அனுமாரின் கருணை தான்...”


ரேந்திரன் அஜீம் அகமதைக் கொல்வதற்காக ஏழு மறைவிடங்களில் குறி பார்த்துச் சுடக்கூடிய வல்லவர்களான இரண்டிரண்டு ஆட்களை நிறுத்தியிருந்தான். ஏழு இடங்களில் மூன்று வீட்டு மொட்டைமாடிகள், மூன்று பாதி கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், ஒன்று ஒரு பெரிய குப்பைத் தொட்டி. நான்கு பைக்குகள், மூன்று கார்கள் எந்த நேரத்திலும் உடனடியாகப் பயன்படுத்தும் தயார் நிலையில் மறைவிடங்களில் இருந்தன. கார்களுக்குள்ளேயும், பைக்குகளுக்கு அருகிலேயும் ஆட்கள் தயாராக ஒளிந்திருந்தார்கள். அஜீம் அகமது அந்த வீட்டை விட்டுக் கிளம்பினால் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை அவன் கடப்பதற்குள் சுட்டுக் கொன்று விட வேண்டும் என்பது அவர்கள் இலக்காக இருந்தது. பிடித்துக் கைது செய்வதும், அவனை உயிரோடு வைத்திருப்பதும் தேவையில்லாமல் பிரச்னைகளை வளர்த்துக் கொள்வதாக இருக்கும் என்று ராவின் தலைவரும், மற்ற உயரதிகாரிகளும் எண்ணினார்கள்.   

அஜீம் அகமது தப்பிப்பதானால் அவர்கள் தகவலைக் கசிய விட்ட அன்றைய இரவே அதைச் செய்வான் என்பது நரேந்திரனின் அனுமானமாக இருந்தது. தகவல் தெரிந்த பின் அங்கிருந்து தப்பிக்க காலம் தாழ்த்துமளவு அஜீம் அகமது முட்டாள் அல்ல. எந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பான் என்ற கேள்விக்கு அவன் பைக்கில் தப்பிப்பதானால் தொழிற்சாலையின் இரவு ஷிஃப்ட் துவங்கும் பத்து மணியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நரேந்திரன் முதலில் நினைத்தான். தொழிலாளியின் சீருடையில் அவன் இருந்தால் அந்த நூற்றுக் கணக்கானவர்களின் வாகனங்களோடு அவனும் கலந்து கொண்டால் தப்பிப்பது அஜீம் அகமதுக்குச் சுலபமாக இருக்கும். ஆனால் அப்படி வெளிப்படுவது அவன் சுடப்பட்டு சாவதற்கும் வழிவகுக்கும் என்று நினைக்க வாய்ப்பு இருப்பதால் அவன் திறந்தவெளியில் போகாமல் காரில் போவதையே புத்திசாலித்தனமாக நினைப்பான் என்று நரேந்திரனுக்குப் பிறகு தோன்றியது. அப்படிக் காரில் தப்பித்துப் போவதானால் தொழிற்சாலை ஷிஃப்ட் நேரங்கள் அவனுக்கு வேகமாகத் தப்பிக்கச் சாதகமாக இருக்காது என்பதால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அதிகாலை நான்கு மணிக்குள் அதிக வாகனப்போக்குவரத்து இல்லாத நேரம் சாதகமானது என்று அஜீம் அகமது நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று நரேந்திரன் கணக்குப் போட்டான்.

அப்படி அஜீம் அகமது தப்பிக்க அவனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அவன் ஆட்களில் மூன்று பேர்கள் அவனுக்கு உதவலாம் என்பதால் அந்த மூன்று பேரையும் அதிரகசியமாகக் கண்காணிக்க அவர்கள் வசிக்கும் இடங்களில் ஏற்பாட்டைச் செய்திருந்தான்.

அன்று மதியம் நடந்த ரகசியக் கூட்டத்தில் ”ஆபரேஷன் ஏஸ்கொயர்” என்று அவர்கள் பெயர் வைத்திருந்த திட்டத்தில் பங்கு பெறும் செயல்வீர்ர்களிடம் நரேந்திரன் அவனும், அன்வரும், ஜெய்தீப்பும், விக்டருமாகச் சேர்ந்து தீட்டியிருந்த திட்டத்தை விளக்கினான். திரையில் அந்தப் பகுதியின் பெரிய வரைபடத்தைக் காட்டி அஜீம் அகமது எந்தெந்த வழிகளில் போகும் வாய்ப்பு இருக்கிறது என்று முக்கிய ஐந்து வழித்தடங்களைக் காட்டிய நரேந்திரன் எந்தெந்த வழியில் போனால் எவரெவர் எங்கு எப்படித் தாக்க வேண்டும் என்று சொன்னான்.

திட்டத்தில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதில்களும் தரப்பட்டன. ஒரு இடத்தில் அவர்கள் திட்டத்தில் சிறு குறையிருப்பதை ஒரு செயல்வீரன் சுட்டிக் காட்டிய போது அவனைப் பாராட்டிய நரேந்திரன் உடனே அதற்குத் தேவையான மாற்றத்தையும் உடனடியாகச் செய்தான். எல்லோரும் எந்தச் சந்தேகமும் இல்லாதபடித் தெளிவடைந்த பிறகு அங்கிருந்து கலைந்தார்கள்.   


ஜீம் அகமது ஒரு முடிவுக்கு வந்தவுடன் உடனடியாக அவனுடைய ஆட்களுக்குப் போன் செய்து என்ன திட்டம் எந்த நேரம் என்று தெரிவித்தான். பின் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள ஆரம்பித்த அவனுக்கு மகேந்திரன் மகன்  அவன் நோய்டாவில் இருப்பதை அறிந்த பின் மும்முரமாக தேட ஆரம்பித்திருப்பான் என்று நினைக்கையில் எரிச்சலாக இருந்தது. “இவன் அடங்க மாட்டேன்கிறானே. காளிங்க சுவாமி எப்போது வேலையை ஆரம்பிப்பது, எப்போது இவன் அடங்குவது” என்று நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்த அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தவனாக ஒரு எண்ணுக்குப் போன் செய்து “மகேந்திரன் பொண்டாட்டியை இன்னைக்கு சாயங்காலம் முடிச்சுடு” என்று சொன்னான். காளிங்க சுவாமி வேலையை ஆரம்பிக்க நேரமானாலும் பரவாயில்லை. இப்போதைக்கு மகேந்திரன் மகன் கவலையில்லாமல் அஜீம் அகமதுக்கு எதிரான வேலைகளைப் பார்க்க வேண்டாம்….

(தொடரும்)
என்.கணேசன்  

தற்போது விற்பனையில்







     

2 comments:

  1. Super developments.

    ReplyDelete
  2. உயர்நிலையில் இருக்கும் மனிதர்களில் சிலர் அந்த விஷேஷ நாகரத்தினம் கையில் கிடைத்தவுடன் தடுமாறி திசைமாறி விடுவார்கள்.... ஆனால்,காளிங்க சுவாமியும் , பீம்சிங்கும் இந்த விசயத்தை சரியாக கையாண்டார்கள்.... அற்புதம்....

    ReplyDelete