விஷ்ணுகுப்தர் கங்கையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். தனநந்தனின் அரசவையில் நுழைந்ததற்கு கங்கையில் மூழ்கி தான் அவர் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அவருக்குள் கொழுந்து விட்டு எரியும் ஆத்திரத்தையும் கங்கையே அணைக்க வேண்டும். என்ன தான் உணர்ச்சிகளை அடுத்தவர்க்குக் காட்டாமல் மறைத்தாலும் கோபம் அவருக்குள் நிறைந்திருந்தது. கோபாலன் சொன்னது போல் காகம் தன் கருமையைக் காலப்போக்கிலும் இழப்பதில்லை. விஷ்ணுகுப்தருக்கு அவருடைய தந்தையின் நினைவும் வந்து மனதைக் காயப்படுத்தியது. தனநந்தனைப் பார்த்த முதல் கணத்திலிருந்து அந்தப் பழைய நினைவுகள் மேலோங்க ஆரம்பித்ததையும் அவரால் தடுக்க முடியவில்லை. இதையெல்லாம் மீண்டுமொரு முறை அனுபவிக்கத் தானா அவருடைய அந்தராத்மா அவரைப் பாடலிபுத்திரத்திற்கு வரவழைத்திருக்கிறது?
கால்கள் முன்னோக்கிப் போக, மனம் பின்னோக்கிப்
போக நேரம் போவது தெரியாமல் நடந்து கொண்டிருந்த விஷ்ணுகுப்தரை நிகழ்காலத்திற்கு வரவழைத்தது ஒரு
சிறுவனின் கணீரென்ற குரல். “அரசர் சந்திரகுப்தர் அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார்...”
விஷ்ணுகுப்தர் ஆச்சரியத்துடன் நின்று
சத்தம் வந்த திசையில் பார்த்தார். தலையில் ஒரு தலைப்பாகை கட்டி அதில் ஒரு மயிலிறகைச் செருகி
இருந்த ஒரு சிறுவன் ராஜநடை நடந்து வந்து ஒரு பாறையின் மீது லாவகமாக ஏறி உட்கார்ந்தான். அவன் தான்
’அரசர் சந்திரகுப்தன்’ போலிருக்கிறது
என்று விஷ்ணுகுப்தர் புன்னகை செய்தபடி நினைத்துக் கொண்டார். அவன் வருவதை
அறிவித்த உயரமான நிறுவன் அந்தப் பாறை அருகே நின்று கொள்ள ஆறு சிறுவர்கள் தரையில் அமர்ந்து
கொண்டார்கள். அப்போதிருந்த மனநிலையின் கனத்தை இந்தச் சிறுவர்களின் விளையாட்டு
குறைக்கும் என்று நினைத்தவராக ஓரமாக நின்று அவர்கள் விளையாட்டை விஷ்ணுகுப்தர் கவனிக்க
ஆரம்பித்தார்.
சந்திரகுப்தன் கம்பீரமாக உயரமான சிறுவனிடம் “ஆரம்பி” என்பது
போல கையை அசைத்தான். அந்தச் சிறுவன் கணீர் குரலில் சொன்னான். “மக்கள்
தங்கள் குறைகளை அரசரிடம் முறையிடலாம்”
ஒரு சிறுவன் எழுந்து வந்து சொன்னான். “வணக்கம்
அரசே. நான் என் அடுத்த வீட்டுக்காரனிடம் கிணறை வாங்கினேன். அதற்கான
பணம் வாங்கிக் கொண்ட பின்னும் அவன் என் கிணற்றிலிருந்து தான் தினமும் தண்ணீர்
எடுத்துக் கொண்டு போகிறான் அரசே.”
“உன் அடுத்த
வீட்டுக்காரன் சபையில் இருக்கிறானா?” சந்திரகுப்தன் அரச
தோரணையிலேயே கேட்டான்.
“ஆம் அரசே” என்று சொல்லியபடி
இன்னொரு சிறுவன் எழுந்து முன்னுக்கு வந்து நின்றான்.
“நீ இவனிடம்
உன் கிணற்றை விற்றுப் பணம் பெற்றுக் கொண்டது உண்மையா?”
“ஆம் அரசே”
“பின் ஏன்
இன்னும் நீ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டிருக்கிறாய்?”
அந்தச் சிறுவன் குறும்புப் புன்னகையுடன்
சொன்னான். “அரசே நான் கிணற்றைத் தான் அவனிடம் விற்றேன். அதில் இருக்கிற
நீரை விற்கவில்லை.”
சந்திரகுப்தன் ஒரு கணம் அந்தச் சிறுவனையே
யோசனையுடன் பார்த்தான். பின் அவன் சொன்னான். “நல்லது
அப்படியானால் அந்தக் கிணற்றிலிருக்கும் நீரை நீ முழுவதுமாகக் காலி செய்து விடு. இல்லா விட்டால்
அவனுடைய கிணற்றில் நீ வைத்திருக்கும் உன் தண்ணீருக்கு நீ வாடகை தர வேண்டி இருக்கும்...”
அந்தக் குறும்புச் சிறுவனின் முகத்தில்
இதை எதிர்பார்த்திராத திகைப்பு தெரிந்தது. விஷ்ணுகுப்தர்
சந்திரகுப்தனின் தீர்ப்பில் இருக்கும் புத்திசாலித்தனத்தை வெகுவாக ரசித்தார். மனம் சற்று
லேசானதில் அவருக்கும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் ஒரு யோசனை தோன்றியது.
“வணக்கம் அரசே” என்று சொன்னபடி அவர் அவர்களை நெருங்க சந்திரகுப்தனைத் தவிர மற்றவர்கள் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்கள். அவன் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவர் நெருங்கியவுடன் “என்ன வேண்டும் அந்தணரே?” என்று கம்பீரமாகவே கேட்டான்.
“எனக்கு வேள்விகள் செய்ய நெய் வேண்டியிருக்கிறது. அதற்கு
எனக்கு ஒரு பசு வேண்டும்.” என்று விஷ்ணுகுப்தர் வணங்கிய நடிப்புடன்
சொன்னார்.
சந்திரகுப்தன் சுற்றும் முற்றும் பார்த்தான். அருகில் அவன் நண்பர்கள்
யாரும் இல்லாததால் சற்றுத் தள்ளி தரையில் இருந்த ஒரு கல்லைக் காட்டிச் சொன்னான்.
“அந்தப் பசுவை நீங்கள் ஓட்டிக் கொண்டு போகலாம் அந்தணரே”
விஷ்ணுகுப்தர் சொன்னார். “அதற்குத் தர என்னிடம் பணம் இல்லை அரசே”
சந்திரகுப்தன் பெருந்தன்மையுடன் சொன்னான். “பணம் வேண்டியதில்லை அந்தணரே”
தனநந்தன் நினைவுக்கு வர விஷ்ணுகுப்தர் சொன்னார். “இதனால் உங்கள் கஜானாவுக்கு
நஷ்டம் வந்து விடாதா அரசரே”
சந்திரகுப்தன் சொன்னான். “இந்தப் பசுவிலிருந்து கிடைக்கும் நெய்யினால்
நீங்கள் வேள்விகள் செய்தால் நாட்டில் நன்றாக மழை பெய்யும். நாட்டில் நன்றாக மழை பெய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும். நல்ல விளைச்சல் இருந்தால் வரிவசூலும் நன்றாக இருந்து கஜானா நிறையவும் செய்யும்.
அதனால் இந்தப் பசுவைத் தானம் தருவதால் கஜானாவுக்கு லாபமே ஒழிய
நஷ்டம் வராது அந்தணரே”
வயதுக்கு மீறிய அறிவும், சமயோசிதமும், இந்தச் சிறுவனிடம்
தெரிவதுடன் இந்தச் சிறுவன் மற்றவர்கள் போல் ஓடாமல் துணிச்சலுடன் அமர்ந்திருக்கும் விதம்
அவன் தைரியத்தையும் வெளிப்படுத்தியதைக் கண்ட விஷ்ணுகுப்தர் அவனை மனதிற்குள் மெச்சினார்.
அந்தச் சிறுவன் காட்டிய கல்லைக் கையில் எடுத்துக் கொண்டு “அரசே உங்களுக்கு மங்களம்
உண்டாகட்டும்” என்று அவர் வாழ்த்தினார்.
சந்திரகுப்தன் தங்கள் விளையாட்டில் இணைந்து கொண்ட அந்த அந்தணரைப்
பார்த்து புன்னகைத்தபடி பாறையில் இருந்து மெள்ளக் கீழே இறங்கினான். இறங்கியவன் மிகுந்த மரியாதையுடன்
தலைதாழ்த்தி கைகூப்பி வணங்கினான். “வணக்கம் அந்தணரே”
“நலமுண்டாகட்டும் சிறுவனே உன் பெயரே சந்திரகுப்தன் தானா, இல்லை இது இந்த நாடகத்திற்காக நீ வைத்துக் கொண்ட பெயரா?”
“பெயரே சந்திரகுப்தன் தான் ஐயா”
அவனிடம் பேசிக் கொண்டிருந்ததில் அவனுக்குத் தந்தை இல்லையென்றும்
அவன் தாய் மற்றும் தாய்மாமனுடன் அருகில் இருக்கும் குடிசையில் வசித்துக் கொண்டிருப்பதும்
தெரிந்தது. அவனுக்கு
மாடு மேய்ப்பது தான் தொழில் என்றும் தெரிய வந்த போது விஷ்ணுகுப்தர் கேட்டார்.
“நீ கல்வி கற்கவில்லையா சந்திரகுப்தா?”
“எனக்கு கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனால் எங்கள்
குலத்துச் சிறுவர்களுக்கு யாரும் கல்வி கற்பிப்பதில்லை அந்தணரே. இருந்த போதிலும் நான் பாடசாலைகளுக்கு வெளியே அதிகம் பொழுதைப் போக்குவேன்.
அவர்கள் சொல்வது அரைகுறையாய் காதில் விழும்…” அந்தச்
சிறுவனின் முகத்தில் ஏக்கம் தெரிந்தது.
மனித இயல்பை எடைபோடுவதில் இணையற்றவரான விஷ்ணுகுப்தருக்கு இந்தச்
சிறுவனிடம் இருக்கும் சிறப்புகள் ஒரு அரசனுக்குத் தேவையானவை என்று தோன்றியது. சரியாக வழிநடத்தினால் இந்தச்
சிறுவனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அத்துடன் பாரதத்தின்
எதிர்காலமும் இணைந்திருக்கலாம் யார் கண்டது! சற்று நேரத்திற்கு
முன் அந்தராத்மாவிடம் கேட்ட கேள்விக்கு இப்போது விடை கிடைத்தது
போலிருந்தது. ’இவனைச் சந்திக்கத் தான் என்னை என் அந்தராத்மா இங்கே
வரவழைத்திருக்கிறதோ?”
இது போன்ற விஷயங்களில் உள்ளுணர்வுக்கு அதிக முக்கியத்துவம் தரும்
விஷ்ணுகுப்தர் மேலும் அந்தச் சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தார். நிறைய கனவுகளுடனும் துடிப்புடனும்
இருந்த சந்திரகுப்தன் அவரிடம் மனம் விட்டுப் பேசினான். அவன் பேசப்
பேச விஷ்ணுகுப்தருக்கு அவருடைய கணிப்பு சரியென்று மீண்டும் மீண்டும் உறுதியாகியது.
“நீ என்னுடன் தட்சசீலம் வருகிறாயா சந்திரகுப்தா. உனக்கு
நான் எல்லாமே கற்பிக்கிறேன். உன் கனவுகளின் படி உன்னை ஒரு அரசனாக்கவோ,
அல்லது அரசனுக்கு இணையானவனாகவோ ஆக்குவது என் கடமை.”
சந்திரகுப்தன் அவரை நம்ப முடியாத பிரமிப்புடன் பார்த்தான். விஷ்ணுகுப்தரின்
குரலில் தெரிந்த உறுதி அவனுடைய கனவுகளுக்குச் சிறகுகள் தருவது போலிருந்தது.
ஆனாலும் உறுதிப்படுத்திக் கொள்ள அவன் கேட்டான். “அந்தணரே. நீங்கள் விளையாட்டாகச் சொல்லவில்லையே”
“இல்லை சந்திரகுப்தா. எனக்கு விளையாட நேரமுமில்லை. உண்மையாகவே தான் கூறுகிறேன். நீ சம்மதித்தால் உன் தாயிடமும், தாய்மாமனிடமும் பேசி
சம்மதம் வாங்க வேண்டியது என் கடமை.”
சந்திரகுப்தன் அவரை நம்பினான். அவர் அவனுக்கு அந்த நேரத்தில்
கடவுளைப் போல் தோன்றினார். அவர் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்ட சந்திரகுப்தன் சொன்னான். “எனக்குச் சம்மதம் அந்தணரே”
“சரி. நான் இப்போது கங்கைக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.
திரும்பி வருகையில் நள்ளிரவாகி விடும். அதனால்
நான் நாளை வந்து உன் வீட்டாருடன் பேசுகிறேன். எது உன் வீடு”
சந்திரகுப்தன் சற்றுத் தள்ளித் தெரிந்த தன் குடிசையைக் கைகாட்டினான்.
“சரி நாளை சந்திப்போம் சந்திரகுப்தா.”
(தொடரும்)
என்.கணேசன்
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
Nice going sir. Their first meeting is super. I am eager to know how Chankayan transforms Chandragupta.
ReplyDeleteA good teacher has always the capabilities to mould his student better. A right teacher found a right student here. Bright future is guaranteed.
ReplyDeleteசந்திரகுப்தன் தான் விஷ்ணுவால் உருவாக்கப்படும் அரசன்...
ReplyDelete