சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 23, 2021

யாரோ ஒருவன்? 46


ஜெய்ராம் சந்தேகத்துடன் கேட்டான். ”சுவாமி முக்தானந்தாஜியும் இப்படி ஒரு தரிசனத்திற்கு ஐந்து லட்சம் வாங்குவதுண்டா?”

ஆசிரமத்தலைவர் புன்னகையுடன் சொன்னார். “அவர் அப்படிக் கறாராய் வாங்கியதில்லை. அவர் தன் சக்திகளை ஆன்மீகத்திற்கும், தர்மத்திற்குமல்லாமல் வேறெதற்கும் பயன்படுத்தியதும் இல்லை. உண்மையான ஆன்மீகத்தை அறிய மனிதர்கள் அவ்வளவாக சிரமப்படுவதில்லை. பத்தோடு பதினொன்றாவது விஷயமாகவே அது இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட லாபங்கள், ஆக வேண்டிய வேலைகள் எல்லாம் மக்களுக்கு அதி முக்கியமானதாகவல்லவா இருக்கிறது. அதனால் அது போன்ற வாக்குகளும், ஆசிர்வாதங்களும் வேண்டுமென்பதற்காக அவர்கள் என்ன செய்யவும் தயாராக இருக்கிறார்கள். ஆன்மீக ஞானத்திற்காக வருபவர்களிடம் அவர் ஒரு பைசாவும் கேட்டதில்லை. ஆனால் தனிப்பட்ட லாபத்திற்காக வரும் பணக்காரர்களிடம் அவர் பெரிய தொகை ஒன்றை வாங்கி தர்மகாரியங்கள் தொடரச் செலவு செய்வார். ஆனால் அது அபூர்வம் தான். அவர் மவுன விரதம் இருப்பதும், காட்டுக்குள் தவத்திற்குப் போவதும் அடிக்கடி நடக்கும். அந்த மாதிரி நேரங்களில் யாரும் அவரைச் சந்தித்துப் பேச முடியாது. இருந்தாலும் கூட ஆன்மீகத்திற்காக அல்லாமல், சொந்தப் பிரச்னைகள் தீர தினமும் ஆட்கள் வந்துக் காத்துக் கிடப்பார்கள்...” சொல்லும் போது அவர் முகம் சுளித்தார்.

பின் தொடர்ந்தார். ”சுவாமி சமாதியடைந்த பிறகு மகராஜிடம் மக்கள் கேட்க ஆரம்பித்தார்கள். மகராஜ் சொன்னதெல்லாம் பலித்தது. பலருக்கும் பல வேலைகள் ஆக ஆரம்பித்தன. கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனது. இப்போது இங்கேயே மகராஜ் இல்லாததால் கூட்டமில்லை. மகராஜ் இருந்தால் தூர தரிசனம் கிடைத்தாலும் அதுவே பெரிய பாக்கியமென்று வருகிறவர்கள் நிறைய பேர். சொல்லப்போனால் உங்களைப் போல் சுவாமிக்காகவும், ஆன்மீகத்திற்காகவும் வருபவர்கள் வெகு அபூர்வம். நீங்கள் வருவதற்கு முன் வந்து போன அமெரிக்கரும், சீக்கியரும் கூட மகராஜைப் பற்றி விசாரிக்கவும் அவரிடம் ஒரு அப்பாயின்மெண்ட் வாங்கவும் தான் வந்திருந்தார்கள்...”

ஜெய்ராம் கேட்டான். “மகராஜ் ஏன் சன்னியாசம் வாங்கிக் கொள்ளவில்லை?”

உலகவாழ்வில் அவருக்கு ஆக வேண்டிய காரியங்கள் இன்னும் சில இருக்கின்றன. அது முடியாமல் சன்னியாசம் வாங்குவது உடையளவிலேயே தான் இருக்கும். மனதளவில் இருக்காது. அதனால் தான் அவர் வாங்கவில்லை

என் நண்பர் மகராஜிடம் நாகசக்தி பரிபூரணமாய் குடிகொண்டிருக்கிறது என்று சொன்னார். அந்த நாகசக்தி மகராஜுக்கு எப்படிக் கிடைத்தது?”

நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல சக்தி மூலத்தையும் அடைந்தவர்கள் வெளியே சொல்வதில்லை...”

அந்தச் சக்தி அவருக்கு எப்போது கிடைத்தது என்றாவது சொல்ல முடியுமா?”

நீங்கள் சுவாமியைப் பற்றி நூல் எழுத வந்திருக்கிறீர்கள். அதனால் தயவுசெய்து அவரைப் பற்றியே கேளுங்கள். மகராஜைப் பற்றியே வருபவர்கள் அனைவரும் கேட்பது எனக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது.” என்று சற்று கடுமையாகவே ஆசிரமத்தலைவர் கூறினார்.

இனி இவரிடமிருந்து நாகராஜ் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காது என்று உறுதியாகத் தெரிந்து விட்டது. ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் ஜெய்ராம் சொன்னான். “மன்னிக்கவும். மகராஜைப் பற்றிக் கேள்விப்பட்டது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டதால் தான் கேட்டேன்....”

அவர் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தார். ஜெய்ராம் இன்னமும் நாகராஜைச் சந்தித்து முக்கியத் தகவல்கள் பெறத் தனக்கு வாய்ப்பு இருப்பதாக நம்பினான். நாகராஜ் குரு மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததாக அவன் கேள்விப்பட்டிருந்தான். அந்த அன்பின் காரணமாக குருவின் நூல் ஒன்றை எழுதும் ஆர்வமுள்ளவனுக்கு அவன் கண்டிப்பாக உதவக்கூடும் என்ற நப்பாசை மனதின் ஒரு மூலையில் இருந்தது. அதனால் தான் ஏற்ற வேடத்தை திறம்பட நடித்து விட்டுப் போகலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் அவரிடம் மிகுந்த பணிவுடன் கேட்டான். “சுவாமி முக்தானந்தாவின் உபதேசங்களில் மிக முக்கியமான அம்சம் என்று தயவுசெய்து விளக்க முடியுமா?”

ஆசிரமத் தலைவர் மறுபடி உற்சாகமானார். “அன்பே அவருடைய உபதேசங்களில் பிரதானம். மனிதன் தன்னையும் மற்றவர்களையும் நேசிப்பதே எல்லாப் பிரச்னைகளுக்குமான தீர்வு என்று அவர் எப்போதும் சொல்வார்.  அன்பில்லாத ஆன்மீகம் பொய் என்று கூடக் கூறுவார்.....”

அவர் சொல்லச் சொல்ல ஜெய்ராமின் பேனா காகிதங்களில் கிறுக்க ஆரம்பித்தது. ஜெய்ராம் மேலும் ஒரு மணி நேரம் அங்கிருந்தான். அவரிடம் சுவாமி முக்தானந்தாவைப் பற்றி மட்டும் பல கேள்விகள் கேட்டான். அவர் பொறுமையாகப் பதில் சொன்னார். கிளம்புகின்ற கணம் வரை ஒரு முறை கூட அவன் மறந்தும் நாகராஜ் பற்றிப் பேசவில்லை.    

கிளம்பும் போது மட்டும் அவன் தன் விசிட்டிங் கார்டை  அவரிடம் கொடுத்து விட்டுச் சொன்னான். “சுவாமிஜியுடன் மிக அதிக காலம் கூட இருந்தவர் என்பதால் எனக்கு மகராஜிடமும் சுவாமிஜி பற்றிக் கேட்டறிய வேண்டும் என்ற ஆவல் இன்னும் இருக்கிறது. அவர் உங்களிடம் பேசினால் தயவு செய்து என் கோரிக்கையை அவரிடம் தெரிவியுங்கள். ஒருவேளை அவர் சம்மதித்தால் என்னை இந்த எண்ணுக்கு அழையுங்கள். நன்றி.”

அவர் தலையசைத்தார். அவன் கிளம்பினான். திரும்பி வரும் வழியில் கிராமத்து ஆட்கள் சிலரிடம் பேச அவன் எண்ணியிருந்தான்.  அங்கேயே இருப்பவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும், அவர்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பார்கள் என்பதால் அந்தத் தகவல்கள் மிகவும் உபயோகமாய் இருக்கும்...

வழியில் பார்த்த ஒரு இளைஞன் அருகே காரை நிறுத்தி இறங்கித் தன்னை ஆன்மீக எழுத்தாளர் என்று ஜெய்ராம் அறிமுகப்படுத்திக் கொண்டான். சுவாமி முக்தானந்தா பற்றியும் அந்த ஆசிரமம் பற்றியும் ஒரு நூல் எழுதப் போவதாகவும்  அந்த ஆசிரமம் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்த யாராவது இருந்தால் அந்தத் தகவல்களுக்காகச் சன்மானம் வழங்கவும் தயாரென்றும் அவன் தெரிவித்தான். சன்மானம் என்றதும் அந்த இளைஞன் கண்கள் பிரகாசித்தன.

இளைஞன் சொன்னான். “என் தந்தை அந்த ஆசிரமம் ஆரம்பித்த காலத்தில் இருந்து போன வருஷம் பெரிய சுவாமிஜி சமாதியாகிற வரை அங்கே வேலை பார்த்தார். இப்போது வயதாகி விட்டதால் வேலைக்குப் போவதில்லை. அவருக்கு நிறைய தெரியும்

ஜெய்ராமுக்கு அது போன்ற ஒரு ஆள் பேசக்கிடைப்பது நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. “அவரிடம் பேசலாமா?” என்று அந்த இளைஞனிடம் கேட்டான்.

எவ்வளவு ரூபாய் தருவீர்கள்?” அந்த இளைஞன் கேட்டான்.

ஜெய்ராம் கவனமாகச் சொன்னான். “அது எனக்குக் கிடைக்கும் தகவல்களைப் பொருத்தது. என் புத்தகத்திற்கு வேண்டியபடி சுவாரசியமான, வெளியாள்களுக்கு அதிகம் தெரியாத தகவல்களாய் இருந்தால் நல்ல தொகை தருவேன். இப்போது நான் ஆசிரமத்தலைவர் சுவாமிஜியிடம் பேசி விட்டு வந்திருக்கிறேன். அவர் சொன்ன தகவல்களாகவே இருந்தால் அதிகம் தர முடியாது.... உபயோகம் என்று தோன்றினால் ஆயிரம் ரூபாய் வரை தருவேன்....”

அந்த இளைஞனுக்கு ஆயிரம் ரூபாய் அதிகத் தொகையாய் தெரியவில்லை என்பது அவன் முகபாவத்திலிருந்தே தெரிந்தது.

ஜெய்ராம் சொன்னான். “நான் வெளியிடும் புத்தகத்தில் உங்கள் போட்டோவும், உங்கள் அப்பா போட்டோவும் கூடப் போடுவேன்...”

ஆயிரம் ரூபாய் தருவதுடன், தங்கள் போட்டோ ஒரு புத்தகத்திலும் வருவது ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருந்ததால் அந்த இளைஞன் சம்மதித்தான். “வாருங்கள் போவோம். ஒரு பர்லாங் தூரத்தில் தான் என் வீடு இருக்கிறது



(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Eagerly waiting for the villager's information about Nagaraj Maharaj

    ReplyDelete
  2. அந்த இளைஞனின் தந்தை மூலம் சில கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என நினைக்கிறேன்.... நாங்களும் காத்திருக்கிறேன்...

    ReplyDelete