சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 14, 2020

இல்லுமினாட்டி 49



கனுடைய திகைப்பைக் கவனித்த கர்னீலியஸின் தந்தை சொன்னார். “என் தந்தை இந்தத் தகவலைச் சொல்லி இந்த வெள்ளிப் பெட்டியைத் தந்த போது எனக்கும் திகைப்பாகத் தான் இருந்தது...”

கர்னீலியஸ் மெல்லக் கேட்டார். “இது நம்மிடம் இருப்பது இல்லுமினாட்டியில் எத்தனை பேருக்குத் தெரியும்?”

“இப்போதைக்கு உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் கர்னீலியஸ்.”
  
”குழப்பாமல் விளக்கமாகச் சொல்லுங்கள் அப்பா. இது எப்படி நம்மிடம் வந்தது. இதில் என்ன எழுதி இருக்கிறது?”

கர்னீலியஸின் தந்தை உடனடியாக எதையும் சொல்லவில்லை.  அவர் கைகள் அந்த வெள்ளிப்பெட்டியை வருட அவர் கண்கள் கர்னீலியஸையும் தாண்டி வெற்றிடத்தில் நிலைத்தன. அவருடைய தந்தை அவருக்கு விவரித்த அந்தச் சம்பவத்தை அவர் கர்னீலியஸிடம் சொல்ல ஆரம்பித்தார்.

“அன்றைக்கு இல்லுமினாட்டியின் தலைவர் ஆரகிளிடம் குறி கேட்கப் போன போது உன் தாத்தாவும் கூட இருந்தார் என்று சொன்னேனல்லவா? அவர்களிடம் இல்லுமினாட்டிக்கு அழிவை ஏற்படுத்த முடிந்த காலத்தை அடையாளம் காட்டிய ஆரகிள் அழிவிலிருந்து தப்பிக்க முடிந்த வழியையும் சொன்னது. “உயர்சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தேஜஸுடன் இமயமலைக்குத் தெற்கில் இருந்து வருவான். எல்லாம் பார்க்கும் விழி அவனை அடையாளம் காட்டி உணர்த்தும். எது சரியென்றும் எது வழியென்றும் உணர்த்தி அவன் வழி காட்டுவான். உய்யும் வழி அது ஒன்றே. அன்றேல் அழிவது உறுதி.” அந்தப் பதிலால் இருவரும் திருப்தி அடையவில்லை. காரணம், காலத்தைத் துல்லியமாகச் சொன்ன ஆரகிள் முடிவைத் தெளிவாகச் சொல்லவில்லை என்பது தான். மதில் மேலிருக்கும் பூனை எந்தப்பக்கமும் பாயலாம் என்பது போல் பதிலைச் சொல்ல ஆரகிள் தேவையா என்று நினைத்தார்கள்.   அவர்கள் நிச்சயமானதொரு பதிலைச் சொல்லும்படி ஆரகிளை வற்புறுத்தினார்கள்...’

”ஆரகிள் அவர்களிடம் சொன்னது. “எதிர்காலம் எல்லா விதங்களிலும் முன்கூட்டியே தீர்மானித்திருக்கப்படுவதில்லை. சில விஷயங்கள் முன்பே தீர்மானிக்கப்படுகின்றன. சில விஷயங்கள் காலப்போக்கில் மனிதர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து பின்னால் தீர்மானிக்கப்படுகின்றன. காலமே இன்னும் தீர்மானிக்காத விஷயத்தை நான் எப்படிச் சொல்ல முடியும்?”

“எதிர்காலத்தை எட்டிப் பார்க்க முடிந்த ஆரகிளிடம் முடிவான பதிலைப் பெற முடியாத அவர்கள், கூர்ந்து பார்த்து முடிந்த வரை கூடுதல் தகவல்கள் தரச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் பின்னால் வரும் சோதனைக்காலத்திற்கு உதவக்கூடும் என்று அவர்கள் நம்பினார்கள். நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு தான் ஆரகிளால் அந்தக் கூடுதல் தகவல்கள் பார்த்துச் சொல்ல முடிந்தது. ஆனால் சொன்ன கூடுதல் தகவல்கள் எளிமையான வார்த்தைகளில் இல்லாமல் ரகசிய சங்கேத வார்த்தைகளில் இருந்தன. சொன்னதை அப்படியே அப்போதைய இல்லுமினாட்டியின் தலைவர் எழுதி வைத்துக் கொண்டாலும் அதை அந்த இருவராலும் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக சங்கேத மொழியில் சொல்லப்பட்ட தகவல்களைப் புரிந்து கொண்டு சொல்லும் பொறுப்பு ரகசியக் கலைகளில் நிபுணரான உன் தாத்தாவுக்குத் தரப்பட்டது.  அப்படித்தான் இந்தச் சுவடி உன் தாத்தா வசம் வந்தது...”

சுவாரசியமாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்த கர்னீலியஸ் பதற்றத்துடன்  தந்தையிடம் கேட்டார். “அந்தச் சுவடியை தாத்தா திருப்பித் தரவில்லையா?”

கர்னீலியஸின் தந்தை கர்னீலியஸிற்குப் பின்னால் வெற்றிடத்தைப் பார்த்தபடியே சொன்னார். “அவருக்கு அந்தத் தகவல்களைப் புரிந்து கொள்ள பல ஆண்டுகள் தேவைப்பட்டன. அதற்கு முன் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன.  ஆரகிளிடம் கேட்டு வந்த ஒரு மாதத்திற்குள் அந்த இல்லுமினாட்டியின் தலைவர் இறந்து விட்டார்.  இல்லுமினாட்டியின் தலைமைக்குழுவிடம் ஆரகிள் தெளிவாக முதலில் சொன்னதை மட்டும் தெரிவித்த அவர் சங்கேத மொழியில் சொல்லப்பட்ட கூடுதல் தகவல்களை அவர்களிடம் சொல்லவில்லை. புரியாததை ஏன் சொல்ல வேண்டும் என்றோ, புரிந்த பின் சொல்லிக் கொள்ளலாம் என்றோ அவர் நினைத்திருக்கலாம். இல்லுமினாட்டிக்கு எதிரான கெடுபிடிகள் அதிகமாகி இல்லுமினாட்டியின் ரகசிய ஆவணங்கள் 1892ல் சிகாகோவில் கட்டப்பட்ட இல்லுமினாட்டி கோயில் அஸ்திவாரத்தில் வைக்கப்பட்ட போது இந்தச் சுவடியில் சொல்லப்பட்டிருப்பதை உன் தாத்தாவுக்கு முழுவதுமாகக் கண்டுபிடிக்க முடிந்திருக்கவில்லை. அதனால் வலிய இதைக்கொண்டு போய் கொடுத்து மற்ற ஆவணங்களுடன் புதைக்க அவர் விரும்பவில்லை. இது அவரிடமே தங்கி விட்டது...”

கர்னீலியஸ் கேட்டார். “தாத்தா எப்போது இதன் முழு அர்த்தத்தையும் கண்டுபிடித்தார்.?”

“அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தான் அவரால் கண்டுபிடிக்க முடிந்தது. இறக்கும் போது தான் இந்த விஷயத்தைச் சொல்லி இதை என்னிடம் கொடுத்து விட்டுப் போனார்.”    

கர்னீலியஸ் கேட்டார். “நீங்களாவது இதை இல்லுமினாட்டி தலைமையிடம் ஒப்படைத்திருக்கலாமே? 1939 ஆம் ஆண்டில் அந்த இல்லுமினாட்டி கோயில் இடிக்கப்பட்டு அஸ்திவாரத்தில் இருந்த  ரகசிய ஆவணங்கள் எல்லாம் வாஷிங்டனில் இல்லுமினாட்டி ஆவணக்காப்பகத்தில் மாற்றப்பட்ட போது இதையும் சேர்த்திருக்கலாமே”

கர்னீலியஸின் தந்தை சொன்னார். “செய்திருக்கலாம். இதில் எழுதி இருப்பதை நம்ப முடிந்திருந்தால். இதில் கூடுவிட்டு கூடு பாயும் ஆவி பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறது.  அதெல்லாம் அறிவுக்குப் பொருந்துகிற மாதிரி இல்லை. இக்காலத்தில் நடக்க முடிகிற மாதிரியும் இல்லை...”

கர்னீலியஸ் கேட்டார். “உங்களுக்கே நம்ப முடியாததை ஏன் இப்போது என்னிடம் தருகிறீர்கள்?”

“உன் தாத்தா இதை நம்பினார். இது இல்லுமினாட்டியின் ஆபத்து காலத்தில் உதவும் என்று நினைத்தார். அதனால் உன்னிடம் தருகிறேன்”

“இதை நான் என்ன செய்வது?”

“பத்திரமாக வைத்திரு. உன் காலத்தில் தான் ஆரகிள் சொன்ன அழிவுக்காலம் வருகிறது. அப்போது உன் தாத்தா நம்பிய மாதிரி இது இல்லுமினாட்டிக்கு உதவலாம். இல்லை நான் நினைக்கிற மாதிரி உதவாமலும் போகலாம். அப்படி உதவாமல் போனால் அழித்து விடு. உதவினால் பயன்படுத்திக் கொள்”

அப்படி அன்று கொடுத்து விட்டு உறங்கப் போன அவருடைய தந்தை காலையில் எழுந்திருக்கவில்லை. அவர் அதிகாலையில் தூக்கத்திலேயே இறந்து போயிருந்தார். ஈமச்சடங்குகள் எல்லாம் முடிந்த பின் அந்த வெள்ளிப்பெட்டியில் இருக்கும் சுவடியை கர்னீலியஸ் படித்துப் பார்த்தார். பழைய கலப்பு மொழியில் சங்கேத சூட்சுமங்களுடன் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு கண்டுபிடித்த அர்த்தங்களை அவர் தாத்தா எழுதி வைத்திருக்கவில்லை. அதில் பாண்டித்தியம் பெற்றிருந்த அப்பாவும் எழுதி வைத்திருக்கவில்லை. என்றாலும் அதில் சிறப்பு நிபுணராக இருந்த கர்னீலியஸுக்கு அதில் எழுதி இருப்பதைக் கண்டுபிடிக்க கஷ்டமாக இருக்கவில்லை. கூடுவிட்டு கூடுபாயும் சம்பவம் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருந்ததை அவராலும் புரிந்து கொள்ள முடிந்தது. தந்தை நம்பாததாலோ என்னவோ அவருக்கும் நம்ப முடியவில்லை. தொடர்ந்து மேலோட்டமாகப் படித்ததில் எல்லாவற்றையும் தீர்மானிக்கக் கூடிய இரண்டு மனிதர்கள் பற்றியும், தீர்மானிக்கும் இடம் பற்றியும் எழுதியிருந்தது. அதைப் படித்து நினைவில் இருத்திக் கொள்ள கர்னீலியஸ் முயலவில்லை. அதை ஒரேயடியாக அலட்சியப்படுத்தி எங்கேயாவது வைக்கவும் மனம் வரவில்லை. தாத்தா தந்திருக்கும் முக்கியத்துவத்தை மனதில் வைத்து அதை வங்கி லாக்கரில் வைத்து விட்டு கர்னீலியஸ் மறந்தே போனார்.

திரும்பவும் அந்த வெள்ளிப் பெட்டியில் இருந்த சுவடி அவருக்கு நினைவுக்கு வந்தது இல்லுமினாட்டியில் விஸ்வம் நுழைந்த போது தான். இமயமலைக்குத் தெற்கில் இருந்து வருபவன் என்று ஆரகிள் சொல்லி இருந்தது அவன் தானோ என்று மற்றவர்களைப் போல அவரும் நினைத்தார். ஆனால் க்ரிஷ் வந்து பேசி இல்லுமினாட்டியின் சின்னம் இடைவிடாது ஒளிர்ந்த போது ஆரகிள் சொன்னது அவனைத் தான் என்பது தெளிவாகியது. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் இருந்த நேர்மை, தெளிவு எல்லாம் அவருடைய அந்தராத்மாவைத் தொட்டது. அவருடைய தந்தையும், தாத்தாவும் இருந்திருந்தால் அவனைக் கொண்டாடி இருப்பார்கள் என்று தோன்றியது.   ஆரகிள் சொன்னது உண்மையாகிறதே அப்படியானால் அது அடுத்ததாகச் சொல்லியிருப்பதும் உண்மையாகக்கூடுமோ என்ற சந்தேகம் அவர் மனதில் மெல்ல எழுந்தது.  விஸ்வம் இறந்து போன போது அந்தச் சந்தேகம் அர்த்தமில்லாததாகத் தோன்றியது.

ஆனால் ம்யூனிக் நகர மருத்துவமனையில் இறந்து கொண்டிருந்த ஒரு மனிதன் விஸ்வம் இறந்திருக்கும் அதே நேரத்தில் உயிர் பிழைத்திருப்பது தெரிந்த மறு கணம் ஆரகிள் சொல்லியிருக்கும் அந்த இரண்டாவது தகவல் சுவடியும் உண்மையாகப் போகிறது என்பது தெளிவாகியது. அந்தச் சுவடி இல்லுமினாட்டியின் ஆவணங்களுடன் இருந்திருந்தால் இன்னேரம் அவர்கள் தீர்மானம் எடுக்க மிக உதவியாக இருந்திருக்கும் என்று அவர் மனசாட்சி உறுத்தியது.

அதைப் படித்து அந்தத் தகவல்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க அவர் முடிவெடுத்தாலும் அதைச் செய்து முடிக்க விடாமல் தடுப்பது விஸ்வமாகத் தானிருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. வேறு யாராகவும் இருக்க வழியில்லை...

ஐம்பதாண்டுகளுக்கு முன் மேலோட்டமாகப் படித்ததில் கூடுதலாக எதாவது தகவல் நினைவுக்கு வருகிறதா என்று மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தார். தீர்மானிக்கும் இருவர், தீர்மானிக்கும் இடம் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது தவிர வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அது குறித்த கூடுதல் விவரிப்புகள் அந்தச் சுவடியில் இருந்ததென்னவோ நிச்சயம் தான். யாரந்த இருவர்? அந்த இடம் தான் என்ன?

(தொடரும்)
என்.கணேசன்

8 comments:

  1. Interesting. Who are the two? Akshay and Krish?

    ReplyDelete
  2. This novel available in Kindle?

    ReplyDelete
  3. Sir, ippa order panna kidaikuma?

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கும். பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

      Delete
  4. யாரு அந்த இருவர்? அக்ஷய் and alien??

    ReplyDelete
  5. அந்த இருவர்களில் ஒருவர் கிரிஷ்.... இன்னொருவர் யாராக இருக்கும்???

    ReplyDelete
    Replies
    1. அமானுஷ்யன்..

      Delete