சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 24, 2020

சத்ரபதி 113


சிவாஜியின் அமைச்சர் ரகுநாத் பந்த் ஔரங்கசீப் சொன்னதைக் கேட்டு திகைத்தார். சிவாஜியைச் சொந்த பூமிக்கே திரும்ப அனுப்பச் சொன்னால் இவர் சிவாஜியை இங்கிருந்து மேலும் வடக்கே அனுப்பும் ஆலோசனையைச் சொல்கிறாரே முகலாயச் சக்கரவர்த்தி என்று நொந்து போய் ஔரங்கசீப்பிடம் சொன்னார்.

“சக்கரவர்த்தி. நீங்கள் உங்கள் கடிதத்தில் கொடுத்த வாக்கு எங்கள் அரசரை கந்தஹாருக்கு அனுப்புவதல்ல. அவர் விரும்பினால் திரும்பவும் தக்காணத்துக்கே திரும்பலாம் என்று தான் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்”

ஔரங்கசீப் கண்ணிமைக்காமல் சொன்னான். “உங்கள் அரசர் எங்களுக்கு முன்பு வாக்கு கொடுத்தபடி அவருடைய செயல்களும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் வாக்கை அளித்தோம். ஆனால் அவருடைய செயல்கள் எதிர்மாறாகவும், மரியாதைக் குறைவாகவும் இருக்கின்ற போது நாங்கள் மட்டும் முன்பு கொடுத்த வாக்கின்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது அமைச்சரே. ஆனாலும் பெருந்தன்மையுடன் கூறுகிறோம். உங்கள் அரசர் விரும்பியபடியே அவரைத் தக்காணத்திற்கு திரும்பி அனுப்ப நாங்கள் தயார். ஆனால் அவருடைய எதிர்கால அனுசரணை குறித்த சந்தேகம் எங்களுக்கு இருப்பதால் அவருடைய பிள்ளை சாம்பாஜியை இங்கு விட்டு விட்டு அவர் மட்டும் திரும்புவதாக இருந்தால் அவரை அனுப்புவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை…”

இதற்கு மேல் இனி ஒன்றும் பேசுவதற்கில்லை என்பது போல் ஔரங்கசீப் சைகை செய்ய ரகுநாத் பந்த் வணங்கி விட்டு வெளியேறினார்.

சிவாஜி. மிக நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாக உணர்ந்தான். ரகுநாத் பந்திடம் ஔரங்கசீப் சொன்ன ஆலோசனைகள் எதிலும் அவனுக்குச் சம்மதமில்லை. அவை அவனுக்கும், அவன் கனவுக்கும், அவன் எதிர்காலத்துக்கும் கண்டிப்பாக உதவப் போவதில்லை என்பதை அவன் அறிவான். வடக்கில் ஒரு பெரிய பதவி, தெற்கிலும் உங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்ற ஔரங்கசீப்பின் ஆலோசனை மேற்பார்வைக்கு இரட்டை இலாபம் போல் தோன்றினாலும் உண்மை நிலை அப்படி இலாபகரமாக இருக்கப் போவதில்லை என்பதை சிவாஜி அறிவான். வடக்கில் ஒரு மூலையில் சிவாஜியைத் தனிமைப்படுத்தி பலவீனமாக்கி, சிவாஜி இல்லாத தக்காணத்தில் தங்கள் வலிமையை அதிகரித்துக் கொள்வதே ஔரங்கசீப்பின் உத்தேசமாக இருக்க வேண்டும் என்பது அவனுக்குப் புரிந்தது. மகனைத் தனியே இங்கே விட்டு விட்டுத் திரும்புவதற்கும் அவன் மனம் கேட்கவில்லை. பிள்ளையை ஆபத்தில் விட்டு விட்டுப் போய் அவன் கண்டிப்பாக நிம்மதியாக இருக்க முடியாது.

ரகுநாத் பந்த் ஔரங்கசீப்பைச் சந்தித்து வந்த பின்னர் அவன் மாளிகைக் காவல் கூடி விட்டிருந்தது. அவனைச் சந்திக்க வந்த ராம்சிங் அவனுக்காக வருத்தப்பட்டான். சக்கரவர்த்தியின் இந்தச் செய்கைக்காக மன்னிப்பு கேட்டான். தந்தையிடம் ஆலோசனை கேட்டு கடிதம் அனுப்பியிருப்பதாகச் சொன்னான். சிவாஜிக்கு ராம்சிங் மீதோ, ராஜா ஜெய்சிங் மீதோ எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் நல்ல உத்தேசத்தில் அவனுக்குச் சந்தேகமும் இல்லை.

ராம்சிங்கிடம் சிவாஜி அன்பாகச் சொன்னான். “ராம்சிங் அவர்களே. காலம் நமக்கு எதிராக இருக்கும் போது நிகழ்வுகள் இப்படி மோசமாகவே இருக்கும். இந்த உலகில் பிறந்த யாரும் இந்தக் கால அலைகளின் அலைக்கழிப்பிலிருந்து எல்லா நேரங்களிலும் தப்பி விட முடியாது. இதற்காக வருத்தப்பட்டுப் பயனில்லை. எதற்கும் நீங்களும் எனக்காகச் சக்கரவர்த்தியிடம் சென்று பேசிப் பாருங்கள். சக்கரவர்த்தியின் முடிவான எண்ணம் என்னவென்று அறிந்து சொன்னால் அடுத்து நான் என்ன செய்வது என்று முடிவெடுக்க எனக்கு உதவியாக இருக்கும்.”

ராம்சிங் சம்மதித்து விட்டுச் சென்றான்.


ரங்கசீப் ராம்சிங்கிடம் கறாராகச் சொன்னான். “ராம்சிங் சிவாஜியைக் குறித்து நான் இனிப் புதிதாக எதையும் சொல்வதற்கில்லை. அவனுடைய அமைச்சரிடம் நான் சொல்லி அனுப்பிய வழிகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டே அவன் இதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாக வேண்டும். ஒரு அமைதி ஒப்பந்தம் அவனுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் எம் சார்பில் உன் தந்தை கையெழுத்திட்டு இருக்கிறார் என்ற ஒரே காரணத்தினால் தான் சிவாஜியின் ஆணவத்திற்குப் பிறகும் மரண தண்டனை வழங்காமல் அமைதி காத்திருக்கிறோம். இல்லா விட்டால் இன்னேரம் அவன் தலை அவன் உடம்பில் தங்கி இருந்திருக்காது”

ராம்சிங் வருத்தத்துடன் சொன்னான். “அவர் மரண தண்டனைக்கு உள்ளாகி இருந்தால் அதற்கு முன் நான் என் உயிரை விட்டிருக்க வேண்டி இருந்திருக்கும் சக்கரவர்த்தி. ராஜபுதனத்து அரசர் மகனான நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் தீராப்பழியுடன் வாழ விரும்பியிருக்க மாட்டேன்”

ஔரங்கசீப் முகத்தில் கடுமை குடியேறியது. சிவாஜிக்கு முன் நீங்கள் என்னைக் கொல்ல வேண்டியிருக்கும் என்று பயமுறுத்தும் இந்த ராஜபுதனத்து இளவரசனின் பேச்சை அவன் ரசிக்கவில்லை. ஜஹானாரா அவனிடம் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. சிவாஜியின் மரணத்தில் ராஜபுதன அரசர்கள் அவனுக்கு எதிராகத் திரளும் வாய்ப்பு உண்மையில் அவனைப் பயமுறுத்தியது.

சிவாஜியை அழிக்க யாராராலும் மறுக்கவோ, எதிர்க்கவோ முடியாத வழியையே  சமயோசிதமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவன் ராம்சிங்கிடம் கடுமையாகவே சொன்னான். “உன்னால் முடிந்தால் எம்மை அனுசரித்துப் போக வேண்டிய அவசியத்தை சிவாஜிக்கு எடுத்துரைத்து அவனை மாற்ற முயற்சி செய். அதைத் தவிர நீ வேறு எதுவும் செய்வதற்கில்லை. சிவாஜியின் நடவடிக்கைகள் குறித்து உன் தந்தைக்கு ஏற்கெனவே நான் விரிவாகக் கடிதம் எழுதி இருக்கிறேன் ராம்சிங். அவரிடமிருந்து பதில் வந்த பின் எது உசிதம், அதை எப்படிச் செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க எண்ணியுள்ளோம். அது வரை சிவாஜி குறித்து யாரிடமும் பேசவோ, விவாதிக்கவோ விரும்பவில்லை. அதனால் இனி சிவாஜி குறித்துப் பேச நீ இங்கு வரவேண்டியதில்லை. ”

முடிவாகச் சொல்லி விட்டு இனி நீ செல்லலாம் என்று ஔரங்கசீப் சைகை செய்தான்.


ராம்சிங் சென்று பேசியும் பலனில்லை என்பதை அறிந்த பின் சிவாஜி ஔரங்கசீப்பிடம் இனி எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டான்.  எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து நின்றது போல் இருந்தது அப்போதைய நிலைமை.

தனதறையில் அமைதியாக குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி ஆழ்ந்த ஆலோசனையில் இறங்கியிருந்த சிவாஜியைச் சாம்பாஜி பெருவியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.  மகன் தன்னையே பார்ப்பதைக் கவனித்த சிவாஜி கேட்டான். “என்ன பார்க்கிறாய் சாம்பாஜி”

“உங்களால் எப்படி அப்பா இந்த நிலைமையிலும் அமைதி இழக்காமல் இருக்க முடிகிறது?”

சிவாஜி மகனைப் பாசத்துடன் பார்த்துப் புன்னகைத்தான். ”இறைவன் நம்முடன் இருக்கிறான். அவன் ஏதாவது வழி காட்டுவான் என்று உறுதியாக நம்புகிறேன் மகனே. அந்த நம்பிக்கை தான் என்னை அமைதி இழக்காமல் காப்பாற்றுகிறது”

சாம்பாஜி கேட்டான். “இறைவன் நம்முடன் இருக்கிறான் என்றால் நாம் இங்கு சிக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லையே தந்தையே. நம்மைப் பிரச்னையில் இறைவன் ஏன் சிக்க வைக்க வேண்டும். பின் ஏன் நம்மைக் காப்பாற்ற வேண்டும்?’

சிவாஜி பொறுமையாக மகனுக்கு விளக்கினான். “பிரச்சினைகளில் சிக்கி மீளும் போது தான் மனிதன் வலிமை பெறுகிறான் சாம்பாஜி. பல சமயங்களில் அவன் பக்குவம் பெறுவதும் அப்படிப் பிரச்னைகளில் சிக்கி மீளும் போது தான். பிரச்சினைகளையே சந்திக்காத மனிதன் பலவீனமானவனாகவும், பக்குவ நிலையை எட்டாதவனாகவுமே இருந்து விடுகிறான். அதனால் தான் யாரும் பிரச்னைகளேயே தராதே இறைவனே என்று வேண்டக்கூடாது. பிரச்னைகளைத் தீர்க்கும் வலிமையையும், அறிவையும் கொடு இறைவா என்று தான் வேண்ட வேண்டும்….”


சிறுவன் சாம்பாஜிக்குப் பெரிதாய் விளங்கியது போல் தெரியவில்லை. ஆனால் தந்தை ஏதாவது வழி கண்டு பிடிப்பார் என்ற நம்பிக்கையை மட்டும் அவன் பெற்று நிம்மதியாக உறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. “இறைவன் நம்முடன் இருக்கிறான் என்றால் நாம் இங்கு சிக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லையே தந்தையே. நம்மைப் பிரச்னையில் இறைவன் ஏன் சிக்க வைக்க வேண்டும். பின் ஏன் நம்மைக் காப்பாற்ற வேண்டும்?’

    சிவாஜி பொறுமையாக மகனுக்கு விளக்கினான். “பிரச்சினைகளில் சிக்கி மீளும் போது தான் மனிதன் வலிமை பெறுகிறான் சாம்பாஜி. பல சமயங்களில் அவன் பக்குவம் பெறுவதும் அப்படிப் பிரச்னைகளில் சிக்கி மீளும் போது தான். பிரச்சினைகளையே சந்திக்காத மனிதன் பலவீனமானவனாகவும், பக்குவ நிலையை எட்டாதவனாகவுமே இருந்து விடுகிறான். அதனால் தான் யாரும் பிரச்னைகளேயே தராதே இறைவனே என்று வேண்டக்கூடாது. பிரச்னைகளைத் தீர்க்கும் வலிமையையும், அறிவையும் கொடு இறைவா என்று தான் வேண்ட வேண்டும்….”
    புராண இதிகாச கதைகள் அரிய பெரிய கருத்துக்களை கூறியுள்ள மாதிரியே தங்களின் எழுத்திலும் தாங்கள் அவ்விதமான கருத்துக்களை தரும் விதம் மிகவும் அருமை

    ReplyDelete
  2. Great writing. Even in historical novel you maintain the suspense end thriller element. And the dialogues are superb and teach so many truths to your readers. Hats off sir!

    ReplyDelete
  3. இந்த அத்தியாயத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கிறது. இது முதல் வருகை. தொடருங்கள், தொடர்வோம்....

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. யஅத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete
  4. " இறைவன் நம்முடன் இருக்கிறான். அவன் ஏதாவது வழி காட்டுவான் "

    " பிரச்சினைகளில் சிக்கி மீளும் போது தான் மனிதன் வலிமை பெறுகிறான் "

    இந்த இரண்டு வலிமையான வாக்கியங்களும் அருமை.‌‌

    சிவாஜி அடுத்து என்ன முடிவு எடுப்பான்...?

    ReplyDelete