என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, April 5, 2018

இருவேறு உலகம் – 77


புதன்கிழமை அதிகாலை எழுந்து குளித்து விட்டு க்ரிஷ் மாஸ்டர் வீட்டை அதிகாலை 3.45 க்குப் போன போது அவர் அவனுக்கு முன்பே தயாராகி, தியான அறையில் காத்துக் கொண்டிருந்தார். தியான அறையில் ஒரு பெரிய விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அவன் அவர் காலைத் தொட்டு வணங்கிய போது மௌனமாக ஆசிர்வதித்தார். எதிரே இருந்த மரப்பலகையில் உட்காரச் சொன்ன அவர் அவனை இறைவனையும், இதற்கு முன் யாரை எல்லாம் உயர்ந்த குருவாக நினைத்தானோ அவர்களனைவரையும் வணங்கி மானசீகமாகச் சில நிமிடங்கள் பிரார்த்திக்கச் சொன்னார்.

க்ரிஷுக்கு பகவத் கீதை படித்ததிலிருந்தே கிருஷ்ணர் மேல் அதீத ஈர்ப்பும் பக்தியும் ஏற்பட்டிருந்ததால் கிருஷ்ணரையும், தன் சில ஆசிரியர்களையும் வணங்கிய அவனுக்கு ஏனோ வேற்றுக்கிரகவாசியையும் வணங்கத் தோன்றியது. காப்பாற்றியதால் அவன் கடவுள் போலத்தான். பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததால் அவன் குரு போலவும் தான்….

அவன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் மாஸ்டரும் சிவனையும், தன் குருவையும் வணங்கிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். கற்றுத் தருவதில் கவனக்குறைவால் பிழை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதென்றும், சொல்லித் தருவதன் உண்மைப் பொருளையே அவன் மனதில் பதிய வைக்க வேண்டும் என்றும் மாறான, தவறான பொருள் அவன் மனதில் பதிந்து விடக்கூடாது என்றும் அப்படி இருபொருள் தரும் வார்த்தைகள் தன்னிடமிருந்து வந்து விடாமல் காக்க வேண்டும் என்றும் அவர் பிராத்தித்தார்.

சரியாக நான்கு மணிக்கு ஓம் என்ற ஓங்கார நாதத்தை மூன்று முறை உச்சரித்து விட்டு அவனிடம் சொன்னார்.

“எதைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு முன்பு நீ உன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அதை நீ அறியாத வரை வேறு நீ எதை அறிந்தும் முழுப்பயனைப் பெற முடியாது. ஆதியும் அந்தமும் இல்லாத சர்வ வல்லமை படைத்த இறைவனின் சக்தி அல்லது பிரபஞ்ச சக்தியில் நீ ஒரு துளி. உடல், மனம், அறிவு ஆகியவற்றை உன் முற்பிறவிகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொண்டு மனிதனாகப் பிறவி எடுத்து வந்திருக்கிறாய் என்றாலும் இந்த மூன்றுமே உன் கருவிகள் மட்டுமே. இவற்றை நீ என்று பாவித்துக் கொள்ளாதே. மூலத்தில் நீ எப்போதும் இறைவனின் ஒரு பகுதியே. எதையும் ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் முடிந்த இறைவனின் ஒரு பகுதியாகவே உன்னை நினைவில் வைத்துக் கொள்வது தான் எல்லா மகாசக்திகளைப் பெறுவதற்கும் முதல் படி. இதுவே நீ பெறும் முதல் கல்வி……”

மாஸ்டரின் அமைதியான ஆழமான குரலில் சொன்னது அவன் அந்தராத்மாவில் எதையோ தட்டி எழுப்பியது. க்ரிஷ் விவரிக்க முடியாத ஒரு சிலிர்ப்பை தன் இதய ஆழத்தில் உணர்ந்தான்…..


ர்ம மனிதன் அந்த நேரத்தில் மாஸ்டரையும், க்ரிஷையும் சிந்தித்தபடி தனிமையில் அமர்ந்திருந்தான். மாஸ்டர் இன்னேரம் பாடத்தை ஆரம்பித்திருப்பார்……. மாஸ்டர் க்ரிஷுக்குக் கற்றுத்தர ஒப்புக் கொண்டதற்குப் பின் நிறையவே மாறியிருப்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. ஏனோ தானோ என்று கற்றுத்தரும் கடைநிலை ஆசிரியர் அல்ல அவர். சரியாகக் கற்றுத்தர வேண்டும், முறையாகப் புரிய வைக்க வேண்டும் என்று உறுதியாக நினைக்கும் மனிதர் அவர். அதனாலேயே அவர் தன் தவ வலிமையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார். க்ரிஷும் மிகுந்த அறிவுக்கூர்மை படைத்தவன். அவர் கற்றுத்தருவதை அவனும் சரியாகவே உள்வாங்கக் கூடியவன். ஆனால் பாவம் காலம் அவர்கள் பக்கம் இல்லை. நீண்ட காலம் கற்று, மிக நீண்ட காலம் பயிற்சி செய்து படித்துத் தேற வேண்டிய கலையில் க்ரிஷ் இப்போது தான் முதல் அடி வைத்து இருக்கிறான்…..

யோசித்துப் பார்த்தால் காலம் தன் பக்கமும் முழு சாதகமாக இல்லை என்பதை அவனால் மறுக்க முடியவில்லை. இமயமலையில் பனிக்குக் கீழே இருக்கும் குகையும், அங்கே தியானத்தில் இருக்கும் மனிதனும் அவனை மனதில் நிறையவே தொந்திரவு செய்ததால் அவன் அந்தக் குகை இருக்கும் இடத்தை தோராயமாகவாவது கண்டுபிடிக்க முயற்சி செய்தான். அந்தக் குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிக்க அவன் சக்தி போதவில்லை. இமயமலையை வைத்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருந்த ஒரு பூகோளப் பேராசிரியரை அணுகினான். அவர் இமயமலையில் நீண்ட யாத்திரைகள் மேற்கொண்டவர். கிட்டத்தட்ட 23 வருடங்கள் இமயமலையின் பல பகுதிகளில் தங்கி ஆராய்ச்சி செய்தவர். அவரிடம் பத்தடிக்கும் மேல் பனி படர்ந்து கீழே குகை இருக்கும்படியான ஏதாவது பகுதியை அவர் ஆராய்ச்சியின் போது கண்டிருக்கிறாரா என்று கேட்டான்.

அவர் சொன்னார். “சின்னதும் பெருசுமா பல குகைகள் பார்த்திருக்கேன். ஆனால் அதெல்லாம் பனிக்காலத்துல ரெண்டடி மூணடி மூடியிருக்கும். கோடை காலத்துல உருகி தெளிவா தெரியும். நீங்க சொல்ற மாதிரி பத்தடிக்கும் மேல பனி மூடிக் கீழே குகைகள் பார்த்தது இல்லை….. ஆனால் நீங்கள் சொல்கிற மாதிரி பகுதிகள் கண்டிப்பாக இமயமலையில் இருக்கும்…… இமயமலையில் நான் ஆராய்ச்சி செய்தது 23 வருஷங்கள் தான்….. அந்த மலை இருக்கும் விஸ்தீரணத்திற்கு அந்தக் காலம் ரொம்பவே கம்மின்னு தான் சொல்லணும். நூறு வருஷமாவது ஆராய்ச்சி செய்தா தான் ஓரளவாவது இமயமலையைத் தெரிஞ்சுக்க முடியும்…..”

23 வருட காலத்தையே மிகவும் குறைவு என்று அந்த மனிதர் சொல்கிறார் என்றால் இமயத்தின் பரப்பளவு எவ்வளவு நீண்டிருக்க வேண்டும் என்று சிந்தித்தபடியே மர்ம மனிதன் கேட்டான். “சரி சுமாரா அந்த மாதிரி இடங்கள் இமயமலையில் எந்தப்பகுதியில் இருக்கும்னு உங்களால சொல்ல முடியுமா?”

“அதுவும் கஷ்டம் தான்….. இமயமலை எல்லையில் இந்தியா, சீனா, நேபாள், திபெத், பூடான், பாகிஸ்தான் நாடுகள் இருக்கு. இதுல இந்தியா, பாகிஸ்தான், சீனா பகுதிகள்ல எப்பவுமே பனி மூடிக்கிடக்கற இடங்கள் நிறைய இருக்கு. பூமி வெப்பமயமாகி பல பனிமலைகள் உருகினாலும் கூட இமயமலையில அப்படி உருகாத பகுதிகள் அதிகமா இந்த மூணு நாடுகள்ல இருக்கும். இந்த மூணிலேயும் அதிக வாய்ப்பை சீனா பகுதில தான் சொல்லணும்….. ஆயிரக்கணக்கான மைல் பரப்புல எங்கே வேணும்னாலும் அந்த மாதிரி குகை இருக்கலாம்… நீங்க ஏன் அந்த மாதிரி ஒரு குகையைக் கேட்கறீங்க?”

மர்ம மனிதன் கணநேரமும் யோசிக்காமல் இயல்பாய் பொய் சொன்னான். “அப்படி ஒரு குகைல சித்தர்கள் பூஜை செய்துட்டு வந்த ஒரு சிவலிங்கமும், திரிசூலமும் சேர்ந்தே இருக்குன்னு சொன்னாங்க. அதான் கேட்டேன்….”

“இருக்கலாம். ஏன் இப்ப கூட ஏதாவது ஒரு சித்தரோ, யோகியோ ஒரு பனிக்குகைக்குள்ளே பூஜை பண்ணிட்டு இருக்கலாம் யார் கண்டது. மனுஷங்க தொந்தரவுல இருந்து தப்பிக்கணும்னா இப்படித் தான் மனுஷங்க வர முடியாத ஒரு இடத்துல அவங்க மறைவா இருந்தாக வேண்டிய கட்டாயம்…”

வேடிக்கையாய் பேசுவது போலப் பேசிய அந்த மனிதர் அவரையும் அறியாமல் அவனுடைய உண்மைக் கேள்வியைத் தொட்டு விட்டது போலத் தோன்றியது. மர்ம மனிதன் அவரிடம் நன்றி சொல்லி வந்து விட்டான். யோசிக்கையில் அந்த ரகசியக்குகையை விரிவாகத் தேட அவனிடமும் காலம் இல்லை. அந்த ரகசியக் குகைக்குள்ளே தியானம் செய்து கொண்டிருக்கும் அந்த மனிதன் தானாக எப்போதாவது வெளியே வருவானா? அதற்கு வாய்ப்பு உண்டா?....


வுண்ட் அபுவில் சதானந்தகிரி சுவாமிஜியைக் கண்டுபிடித்தது போல் தார்ப் பாலைவனத்தின் பக்கிரியைக் கண்டுபிடிப்பது செந்தில்நாதனுக்குச் சுலபமாக இருக்கவில்லை. கிட்டத்தட்ட 320000 கிலோமீட்டர் பரப்பில் இருக்கும் தார்ப்பாலைவனத்தில் 75 சதவீதம் இந்தியாவிலும் மீதம் 25 சதவீதம் பாகிஸ்தானிலும் இருந்தது. தார்ப்பாலைவனத்தில் இருக்கும் நகரங்களான பிகானீர், ஜெய்சால்மர் என்ற இரண்டு நகரங்களில் விசாரிக்கத் தீர்மானித்தார். பிகானீரில் பலரிடம் அமானுஷ்ய சக்திகள் படைத்த பக்கிரி பற்றி விசாரித்தார். ஒரு சக்தி வாய்ந்த பக்கிரி பற்றி அருகில் இருக்கும் மனிதர்கள் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று அவர் கணக்குப் போட்டது தவறாக இருந்தது. பலரும் தெரியாதெனக் கை விரித்தார்கள். சிலர் தவறான ஆட்களிடம் கொண்டு போய் விட்டார்கள். அனுபவம் வாய்ந்த திறமையுள்ள போலீஸ்காரரான அவருக்கு அந்தத் தவறான ஆட்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டு பிடிக்க முடிந்தது. ஏமாறாமல் திரும்பி வந்தார் என்றாலும் தேடி வந்த பக்கிரியை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது அவருக்கு உடனடியாகப் பிடிபடவில்லை. 

கடைசியில் சதானந்தகிரி சுவாமிஜிக்குப் போன் செய்து பக்கிரி இருக்கும் இடம் பற்றிச் சொல்ல முடியுமா என்று கேட்ட போது அவர் அந்தப் பக்கிரிக்குத் தங்க நிலையான இடம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவ்வப்போது இடம் மாறிக் கொண்டே இருப்பார் என்றும் சொன்னார். என்ன செய்வது என்று செந்தில்நாதன் யோசித்தார்.


(தொடரும்)
என்.கணேசன்

11 comments:

 1. This chapter is definitely very rich in different kind of informations. Thank you Sir.

  ReplyDelete
 2. Excellent episode sir. Master's commitment to truth and dharma is really amazing. We learn so much from your novels in very interesting way. Hats off to you!

  ReplyDelete
 3. மூன்று பகுதியிலுமே... சுவரஸ்யத்த கூட்டிட்டு.... கடைசியில... தொடரும் போட்டுட்டிங்களே..சார்
  ..
  மாஸ்டர் கிரிஷ் கற்றுக்கொடுக்கும்... பாடத்தை மேலும் அறிய காத்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 4. மிக அருமை. நன்றி!
  இந்த பாடம் கிரீஷ்க்கு மட்டுமல்ல, அனைவரும் அறிய வேண்டிய உண்மை. இதை விடுத்து நிரந்திரம் இல்லாத ஒன்றை தேடி அலைகிறோம் நாம் இந்த மாய உலகில்.

  ReplyDelete
 5. அதிகமான ஆவலை தூண்டும் பதிவு......
  க்ரீஷ்...........ஆன்மிக சக்தி தேடலில்....
  செந்தில் ......அதிக சக்தி வாய்ந்த குருகளின் தேடலில்....
  மர்மமனிதன்.......பனிப்பாறைகளின் கீழ் இருக்கும் குகை தேடலில்...
  மூன்று தேடல்களும் சந்திக்கும் புள்ளியை அறிய ஆவலுடன் .....

  ReplyDelete
 6. super G.......பாடம் படிக்கச் கிரிஷுடன் நானும் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 7. வணக்கம் நண்பரே.. !

  உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/

  வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  நன்றி
  http://gossiptamil.com/aggre/

  ReplyDelete
 8. Wonderful Sir....

  ReplyDelete