என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, December 7, 2017

இருவேறு உலகம் – 60


ன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் க்ரிஷை மாஸ்டர் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “இப்படி என்னைக் கேட்க உன் நண்பன் சொல்லி அனுப்பிச்சானா?”

அவர் பார்வையின் கூர்மையில் இருந்து விடுபட அவன் முயலவில்லை. நேராகவே அவர் பார்வையைச் சந்தித்தபடியே அவன் சொன்னான். “யாரும் எதையும் எனக்கு சொல்லி அனுப்பல. நான் இங்கே வந்து உங்களைப் பார்க்கற வரைக்கும் இப்படிக் கேட்கணும்னு நானே நினைச்சிருக்கல. உங்களைப் பார்த்தவுடன கேட்கணும்னு தோணுச்சு. கேட்டுட்டேன். அவ்வளவு தான்….”

அவரால் அவன் மனதை யோக சக்தி மூலம் அறிய முடியவில்லையே தவிர அவரது சாதாரண புரிதல்கள் தடைப்பட்டு விடவில்லை. அவனைப் போன்ற நல்லவனால் கூசாமல், கண்ணிமைக்காமல் பொய் பேச முடியாது….. அவன் பொய் சொல்லவில்லை என்பது தெரிந்தது.

ஆனாலும் அவர் முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கேட்டார். “நான் ஏன் உனக்கு எதையும் சொல்லித் தரணும்?”

“உங்க குரு உங்களுக்கு எதுக்காகச் சொல்லிக் கொடுத்தாரோ, அதே காரணத்துக்காகத் தான்” அவன் புன்னகையோடு சொன்னான். “வாங்கினதைத் திருப்பிக் கொடுக்கறதும், கத்துகிட்டதை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறதும் தானே நியாயம். அப்ப தானே கடன் தீரும்”

மாஸ்டரால் புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை. இவன் மட்டும் எதிரியின் ஆளாக இருந்திரா விட்டால் இன்னேரம் இவனைக் கட்டி அணைத்துக் கொண்டாடி இருப்பார்…..

இருவரும் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த சுரேஷ் திகைப்புடன் பார்த்தான். அவனுக்குத் தெரிந்து யாரும் மாஸ்டரிடம் இப்படி சரிசமமாய் இந்த வகையில் பேசியதில்லை. யாருக்கும் பேச தைரியம் வந்ததில்லை. இன்னும் க்ரிஷ் மண்டி போட்ட நிலையிலேயே இருந்தாலும், அவன் கைகள் மாஸ்டர் கால்களைப் பிடித்தபடியே இருந்தாலும் பேச்சில் பணிவு இல்லாமல் இருக்கிறதே என்று சுரேஷ் நினைத்தான். மாஸ்டர் கோபப்படுவதற்குப் பதிலாகப் புன்னகைத்தது அவனுக்குத் திகைப்பாய் இருந்தது.

மாஸ்டருக்கு முதல் முதலாய் குருவைச் சந்தித்த நினைவு வந்தது. குருவிடம் அவர் மரியாதைக் குறைவாகவும் ஏளனமாகவும் பேசியிருக்கிறார். துறவிகளையே தவறாகப் பேசி இருக்கிறார். அந்த வார்த்தைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் கட்டாயப்படுத்தி தன்னுடன் ரமணன் என்ற இளைஞனை குரு அழைத்துப் போகாமல் இருந்திருந்தால் இன்று மாஸ்டராக அவர் இருந்திருக்க முடியாது. வந்த சுவடே தெரியாமல் மறைந்து போகும் எத்தனையோ மனிதர்களில் ஒருவராக அவர் இருந்திருப்பார்….

”நான் நிறைய பேருக்குச் சொல்லிக் குடுத்து கடனை எப்பவோ தீர்த்துட்டேன்…..” என்று அவருடைய வாய் சொன்னாலும் அத்தனை பேரில் ஒருவன் கூட க்ரிஷ் உயரத்தை எட்டாதவன் என்பதை மனசாட்சி சத்தமாகவே அவரிடம் சொன்னது.

“அப்ப எனக்குச் சொல்லிக் குடுக்க மாட்டீங்களா?” அவன் அவரையே பார்த்து சின்ன வருத்தத்துடன் கேட்டான்.

அந்த முகவாட்டத்தைப் பார்க்க அவரால் முடியவில்லை. அவன் முகத்தைப் பார்த்து உறுதியாக மறுக்க அவருக்கு மனம் வரவில்லை. அவன் ஏன் என்று அடுத்ததாய் ஒரு கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வார்? உன் ‘நண்பன்’ தான் என் குருவைக் கொன்றவன் என்றா? அது சரியான பதிலாகுமா? கண்டிப்பாக அவருடைய குரு மரணமடைந்த விதம் பற்றி இவன் அறிந்திருக்க மாட்டான்…. அறிந்திருந்தால் ‘அவனை’  ‘நண்பன்’ என்று சொல்லித் திரியவும் மாட்டான். இவனைப் பொருத்த வரை அவன் நல்லவன். உயிரைக் காப்பாற்றியவன். வேறென்ன பொய் எல்லாம் சொல்லி வைத்திருக்கிறானோ அந்தப் பொய்களின் படியே உயர்ந்தவன். அவன் கைப்பாவையாக இவனை எடுத்துக் கொண்டதற்கு இவன் என்ன செய்வான். அன்னிய சக்தி தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது  என்று, என்றோ விதி தீர்மானித்த பின் வேறு விதமாய் செயல்படத்தான் இவனால் முடியுமா?

மாஸ்டர் குரல் மென்மையாகியது. “அப்படின்னா ஐஐடி படிப்பை விட்டுடப் போறியா?”

க்ரிஷ் சொன்னான். “அதை எல்லாம் விட மாட்டேன். சிஷ்யன்னா அந்தக் கால குருகுல முறைப்படியான சிஷ்யனா மாற என்னால முடியாது. நான் காலேஜுக்குப் போய் படிக்கற மாதிரி உங்க கிட்டயும் வந்து படிப்பேன். ஆனா ஒழுங்கா  ஆர்வமா உண்மையா படிப்பேன். ஒரு நல்ல மாணவனா இருப்பேன்….”

மாஸ்டர் அவனையே சில வினாடிகள் பார்த்தார். அவனைப் போன்ற ஒரு மாணவனை மறுத்தால் அது அவர் கற்ற மெய்ஞானத்திற்கு அவர் ஏற்படுத்துகிற களங்கமாக இருக்கும். விதி வலிது. அவனை அவரிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. முழுமையாக அவன் எதிரி கையிலேயே சிக்கிக் கொள்ளாமல் அவருக்கும் சிறிது கிடைத்திருக்கிறான். நல்லதை அவனிடம் தக்க வைக்க அவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த விதத்தில் யோசிக்கையில் மனதின் குழப்பம் நீங்கியது.

அவனிடம் சொன்னார். “நீ படிக்க விரும்புகிற கலைக்கு நிறைய மனக்கட்டுப்பாடு வேணும்…. விளையாட்டு இல்லை…..”

‘அதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை’ என்று நினைத்து சம்மதிக்கப் போகும் தருணத்தில் ஹரிணி நினைவுக்கு வந்தாள். முதல் முறையாக அவன் முகத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. மெல்ல மாஸ்டரிடம் சொன்னான். “நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்…..”

உறுதியாகவும் தெளிவாகவும் பேசி வந்த க்ரிஷ் முதல் முறையாக தயக்கத்துடனும் வெட்கத்துடனும் சொன்ன விதம் மாஸ்டரைப் புன்னகைக்க வைத்தது. மென்மையாகச் சொன்னார். “காதல் முழு நேர உத்தியோகமாய் ஆகி விடாத வரைக்கும், பயிற்சி காலத்துல இடைஞ்சலாகவோ, கவனச்சிதறலுக்குக் காரணமாகவோ இல்லாத வரைக்கும் பிரச்னை இல்லை…. இந்தக் கலையில உச்சத்துக்குப் போன அந்தக்கால ரிஷிக்களே கல்யாணம் ஆகி மனைவி, குழந்தைகள்னு இருந்தவங்க தான்…..”

மனதில் திடீரென்று ஏற்பட்ட மிகப்பெரிய பாரம் உடனே விலக க்ரிஷ் மாஸ்டரை நன்றியுடன் பார்த்தான். பின் மெல்லக் கேட்டான். “எப்ப இருந்து ஆரம்பிக்கலாம் மாஸ்டர்?’

மாஸ்டர் சொன்னார். “இந்த மாதிரி கலைகளைப் படிக்க ஆரம்பிக்கறதுக்கு உகந்த சில முகூர்த்த காலங்கள் இருக்கு. அதைப் பாத்து நான் பிறகு சொல்றேன். இதெல்லாம் படிக்க பிரம்ம முகூர்த்தம் அதாவது சூர்யோதயத்துக்கு முன்னாடி காலம் தான் நல்லது….. அவ்வளவு சீக்கிரம் தினமும் வர முடியுமா?”

”தினமும் காலைல நாலு மணிக்கு முன்னாடி வந்தா சரியாயிருக்குமா மாஸ்டர்….” க்ரிஷ் பேரார்வத்துடன் கேட்டான்.

அவர் கடன் தீர்த்ததாய்ச் சொன்ன எந்தச் சீடனுமே இது போன்ற அதிகாலை நேரத்தில் படிக்க வருவதற்கு இப்படிப்பட்ட ஆர்வத்துடன் கேட்டதில்லை…. அவர் தலையசைத்தார். அவன் வணங்கி விட்டு “நன்றி மாஸ்டர்” என்று ஆத்மார்த்தமாய் சொல்லியபடி எழுந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தான். இந்த க்ரிஷ் எவ்வளவு வேகமாய் முதல் சந்திப்பிலேயே மாஸ்டரைத் தன் வலைக்குள் சிக்க வைத்து விட்டான்…..

உதய் போன் பேசி விட்டு வேகமாக வந்தான். “மன்னிக்கணும் சுவாமி. ஒரு அரசியல் பிரச்னை….. சீக்கிரமா பேசிட்டு வர முடியலை…..”


ர்ம மனிதன் க்ரிஷ் வீட்டுக்குப் போகும் பாதையில் காத்திருந்து சலித்தான். இத்தனை நேரமாகியும் க்ரிஷ் மாஸ்டர் வீட்டில் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. மாஸ்டர் க்ரிஷை எதிரியின் ஆளாகவே பார்த்து வந்ததுடன் அவன் மனதை தன் யோகசக்தியால் அறிய முடியாமலும் போன போது அவன் மீதிருந்த சந்தேகமும், வெறுப்பும் அதிகமாகும். அதுவே அவர்கள் சந்திப்பின் நீளத்தைக் குறைக்கும் என்பது தான் அவன் கணிப்பாக இருந்தது. ஆனால் காலம் நிதானமாக நீள ஆரம்பித்த போது விபரீதமாக மனம் எதையோ உணர்ந்தது. மாஸ்டரால் அறிய முடியாத க்ரிஷ் மனதை, கூடுதல் சக்தி படைத்த அவனால் அறிய முடிந்தால் எதிரி பற்றிய முழுவிவரத்தையும் உடனே அறிந்து கொள்ளலாம். அடுத்த நடவடிக்கை என்னவென்பதையும் உடனுக்குடன் முடிவு செய்யலாம். அது முடியா விட்டால் தான் பிரச்னை…. க்ரிஷ் வராமல் எதையும் தீர்மானிக்க முடியாது….

ஒருவேளை க்ரிஷை அழைத்துக் கொண்டு உதய் வேறெங்காவது போயிருப்பானோ என்ற சந்தேகம் மர்ம மனிதன் மனதில் எழ ஆரம்பித்த போது தூரத்தில் உதயின் கார் வருவது தெரிந்தது. நிம்மதி அடைந்த மர்ம மனிதன் தன் சகல சக்திகளையும் மானசீகமாய் குவித்து பைக்கில் சாய்ந்தபடி தயாராய் நின்றான்.

(தொடரும்)

என்.கணேசன்

4 comments:

 1. Beautiful interaction between Master and Krish. Very interestingly moving sir.

  ReplyDelete
 2. சுஜாதாDecember 7, 2017 at 8:43 PM

  இப்படி முக்கியமான இடத்துல எல்லாம் தொடரும் போட்டு ஒரு வாரம் காக்க வைக்கிறீங்களே சார். மர்ம மனிதன் மாதிரி நாங்களும் பரபரப்போடு காத்திருக்கிறோம். க்ரிஷ் மாஸ்டரை மாற்றும் விதம் செம.

  ReplyDelete
 3. மர்ம மனிதனின் மாஸ்டர்-கிரிஷ் சந்திப்பு பற்றிய யூகம், தவறாக போனது...
  இப்போதைக்கு அவனால் க்ரிஷ் மனதை படிக்க முடியாது...
  அதனால் ,மாஸ்டர். க்ரிஷ் தன் மாணவனாக ஏற்றுக் கொண்டதும் தெரியப் போவதில்லை...
  தெரிய வரும் போது......?????.
  க்ரிஷ், தன்னை மாணவனாக ,மாஸ்டரை ஏற்றுக் கொள்ள வைத்த விதம் அருமை...

  ReplyDelete
 4. மர்ம மனிதன் கஷ்டப்பட்டு போட்ட திட்டம்.... இப்படி....ஒரு சந்திப்பிலேயே ...தவிடு பொடியாடுச்சே.....

  ReplyDelete