என் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....

Thursday, October 27, 2016

புத்தம் சரணம் கச்சாமி! – 122

க்‌ஷய் கௌதமை கீழே வைத்து விட்டு பாறையின் பின் தெரிந்த காவலன் மீது பாய்ந்தான். கழுத்து திருகி அப்படியே கீழே விழுந்த அந்தக் காவலன் மலையில் இருந்து கீழே உருள ஆரம்பித்தான். அக்‌ஷய் கவலையோடு தூரத்தில் தெரிந்த ஆசானைப் பார்த்தான். ஆசான் முதுகில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் மூலிகைச் செடியை நெருங்கி விட்டிருந்தார். அந்த நிலையிலும் கஷ்டப்பட்டு அவர் மூலிகைச் செடியைப் பறிப்பதைப் பார்த்த அக்‌ஷய் மனமுருகி விட்டான். ”ஆசானே” என்று ஓடி வந்த அக்‌ஷயிடம் அந்த மூலிகையைத் திணித்து விட்டு கீழே சாய்ந்த ஆசான் சொன்னார். “இதை முதலில் கௌதம் வாயில் சாறு பிழிந்து விட்டு வா.”

அக்‌ஷய் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். அவர் அன்பு பொங்கச் சொன்னார். “சீக்கிரம் போ. நீ வரும் வரை சாக மாட்டேன்.....”

அக்‌ஷய் மூலிகையோடு மகனை நோக்கி ஓடினான். மூலிகையைத் தன் நாகமச்சத்தில் தொட்டு விட்டு இறைவனைப் பிரார்த்தித்தபடி தன் மகன் வாயில் அதன் சாறு பிழிந்தான். அப்போது தான் குகைக்கோயிலில் இருந்து தீப்பிழம்பு பிரம்மாண்டமாக வெளிப்பட்டது. அது ஏதோ எரிநட்சத்திரம் போல மிகத் தொலைவில் போய் விழுந்தது. குகைக் கோயிலுக்கு உள்ளேயும் நெருப்பு தெரிந்தது. மைத்ரேயன் குகையிலிருந்து ஓடி வந்தான். அவன் வெளியே வந்த மறுகணம் குகையே தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

கௌதம் தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்தான். நீல நிற திரவத்துடன் ரத்தமும் கலந்து வெளியே வந்தது. மைத்ரேயன் அருகே வந்து அக்‌ஷயிடம் சொன்னான். “விஷம் வெளியே வந்து விட்டது. இனி பயமில்லை.”

கௌதம் அரை மயக்கத்தில் கண்களைத் திறந்தான். அப்பாவையும் நண்பனையும் பார்த்து புன்னகைத்தபடியே களைப்புடன் மறுபடி கண்களை மூடினான்.

அக்‌ஷய் கண்கலங்கி மைத்ரேயனிடம் தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்த ஆசானைக் காண்பித்தான். கௌதமை அப்படியே ஒரு இடத்தில் படுக்க வைத்து விட்டு இருவரும் ஆசானை நோக்கி ஓடினார்கள்.

கண்கள் நிறைய மைத்ரேயனைத் தரிசித்த ஆசான் இரு கைகளை கூப்பி வணங்கினார். “வணங்குகிறேன் மைத்ரேயரே.....”

மைத்ரேயன் பெருங்கருணையுடன் அவரை நெருங்கி அமர்ந்து அவர் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டு புன்னகைத்தான். ஆசானின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பியது. “இப்படி உங்கள் மடியில் மரணிக்க நான் பெரும் புண்ணியம் செய்திருக்கிறேன் மைத்ரேயரே..... ஆனால் ஒரே ஒரு வருத்தம்...”

“என்ன?” என்று மைத்ரேயன் கேட்டான்.

“உங்களுடன் விளையாட எனக்கு கொடுத்து வைக்கவில்லையே மைத்ரேயரே....” என்று சொல்லி ஆசான் கண்ணடித்தார்.

அக்‌ஷய்க்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அக்‌ஷயை பேரன்போடு ஆசான் பார்த்தார். “நன்றி நண்பரே.....நன்றி” வார்த்தைகள் இதய ஆழத்திலிருந்து வந்தன. அதன் பின் ஆசானால் பேச முடியவில்லை. மைத்ரேயனைப் பார்த்தபடியே காலமானார். அவர் முகத்தில் பேரமைதி தெரிந்தது. உலகுக்கு வந்த வேலை நல்லபடியாக முடிந்து திரும்புபவனின் ஆத்மதிருப்தி அது என்று அக்‌ஷய்க்குத் தோன்றியது....வர்கள் திரும்பி வந்த போது கௌதம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மிகவும் பலவீனமாய்த் தெரிந்த மைத்ரேயன் அக்‌ஷயிடம் சொன்னான். “எனக்கும் மிகவும் களைப்பாக இருக்கிறது. இங்கேயே சிறிது இளைப்பாறலாமா?”

அக்‌ஷய் சம்மதித்தான். அவனும் பெருங்களைப்பில் இருந்தான். அவன் உட்கார்ந்து மகன் தலையை எடுத்து ஒரு மடியில் வைத்துக் கொள்ள மற்றொரு மடியில் மைத்ரேயன் தலை வைத்துப் படுத்துக் கொண்டு உறங்கியும் போனான். மகனைப் போலவே அவனும் உரிமை எடுத்துக் கொண்டு அப்படி உறங்கியது நெகிழ்ச்சியாக இருந்தது. அவனிடம் நிறைய கேட்பதற்கு இருந்தது. கண்விழித்த பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தான். தூரத்தில் குகை இப்போதும் எரிந்து கொண்டிருந்தது..... அதைப் பார்த்தபடியே அக்‌ஷயும் உறங்கிப் போனான். அவன் கண்விழித்த போது மைத்ரேயன் போயிருந்தான். அவன் சொல்லிக் கொள்ளாமலேயே போயிருந்தது அக்‌ஷய்க்கு மனதை என்னவோ செய்தது. ஒரு முறை மைத்ரேயன் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.

“நம் வாழ்க்கையில் யார் எத்தனை காலம் நம்முடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது விதி தான். அவ்வப்போது சில பேரைச் சேர்க்கும், சில பேரை விலக்கும். இதில் விதி நம் அபிப்பிராயங்களை லட்சியம் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் இப்படித் தான் என்று இருக்கையில் யார் நம் வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் இருக்கும் வரை அன்பாகவும், இணக்கமாகவும் இருந்து விட்டு, அவர்கள் போகும் போது புரிதலோடு விடை கொடுப்பது தானே புத்திசாலித்தனம்....”

ஆனால் அக்‌ஷய்க்கு இப்போதும் அந்த புத்திசாலித்தனம் வரவில்லை. இவ்வளவு அவனை நேசித்திருக்கக் கூடாது என்று தோன்றியது. ’இப்படித் தான் சலனமே இல்லாமல் போய் விடுவான் என்று முதலிலேயே தெரிந்தும் என் முட்டாள் மனம் ஏன் இப்படி துக்கப்படுகிறது’ என்று தன் மனதையே அவன் கடிந்து கொண்டான்.

”நீ சொல்லி விட்டுப் போயிருந்தால் நான் புரிதலோடு விடை கொடுத்திருப்பேன்...” என்று மனம் கனக்க அக்‌ஷய் வாய் விட்டுச் சொன்னான். அவன் தோளை பின்னாலிருந்து யாரோ தொட்டார்கள். தொடுதலிலேயே மைத்ரேயனை உணர்ந்து அக்‌ஷய் திரும்பினான்.

அக்‌ஷய் அப்படிச் சொல்வதற்கு வேண்டியே மறைந்து காத்திருந்தது போல் மைத்ரேயன் புன்னகையோடு சொன்னான். “சரி விடை கொடுங்கள்”

அக்‌ஷய் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறினான். பின் மெல்லக் கேட்டான். “எங்கே போவாய்?”

மைத்ரேயன் தூரத்தில் தெரிந்த பெரிய மலை முகடுகளைக் காட்டினான்.

“எப்போதாவது நாம் மறுபடி சந்திப்போமா?” கேட்கும் போது அக்‌ஷயின் குரல் உடைந்தது.

இல்லை என்று மைத்ரேயன் தலையசைத்தான். தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அக்‌ஷய் கௌதமை எழுப்பப் போனான். மைத்ரேயன் தடுத்தான். “ஏன் அவனிடமும் சொல்லி விட்டுப் போ” அக்‌ஷய் சொன்னான்.

“போகும் போது அவன் கண்ணீரைப் பார்க்க நான் விரும்பவில்லை. எப்போதும் சிரித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கும் கௌதமே என் மனதின் நினைவுகளில் தங்கி இருக்கட்டும்” என்று சொன்ன மைத்ரேயன் கையசைத்தான்.

அக்‌ஷயும் கையசைத்தான். மைத்ரேயன் போய் விட்டான். அவன் கண்களில் இருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அக்‌ஷய் ’சொல்லி விட்டுப் போனாலும் சில நேரங்களில் புரிதலோடு விடை கொடுப்பது சுலபம் இல்லை’ என்று நினைத்தவனாய் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

அவனுக்குச் சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமலேயே போய் விட்டது. மகாபோதி மரத்தின் அடியில் நடந்தது என்ன, குகைக்கோயிலின் உள்ளே நடந்தது என்ன, மாராவை மைத்ரேயன் எப்படி அழித்தான் என்பதெல்லாம் தெரியவில்லை. அதிக நேரம் இருந்தால் கேட்பேன் என்று நினைத்தே கேட்பதற்கு அவகாசம் கூடத் தராமல் போய் விட்டான். அதைக் கேட்டிருந்தாலும் அவன் பதில் சொல்லி இருக்க மாட்டான். தேவைக்கு அதிகமாகத் தெரிய வேண்டாம் என்று நினைப்பவன் அவன். கேட்டாலும் ஒன்றுமே புரியாதது போல் முழித்திருப்பான். அழுத்தக்காரன்....


ந்த கிராமத்து மக்கள் எரியும் அந்த மலையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அக்‌ஷய்க்கு ஆடுகளை விற்ற கிழவர் புகை மண்டலத்துக்கு நடுவே எரியும் அந்த நெருப்பையே பார்த்துக் கொண்டிருந்தார். சைத்தான் குகைக் கோயில் தான் பற்றி எரிந்திருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அருகே போய்ப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இருக்கவில்லை. சைத்தான் வேடிக்கை பார்க்கப் போகிறவர்களையும் அந்த நெருப்பில் இழுத்து விடும் என்று பயந்தார்கள். புகை மண்டலம் மிகப்பிரம்மாண்டமாய் வானத்தையே பாதி மறைத்தபடி இருந்தது. திடீரென புகைமண்டலத்தின் வலது புற ஓரத்தில் அவர் இறந்த மகன் மறுபடியும் நிழலாய் தெரிந்தான். அவன் அவரைப் பார்த்து புன்முறுவல் செய்து தலையசைத்தது போல் இருந்தது. அடுத்த கணம் அந்த புகை மண்டலத்தில் அவன் மறைந்து போனான். நீண்ட காலம் கழித்து கிழவர் இனம் புரியாத நிம்மதியை உணர்ந்தார்.


க்‌ஷய் தலாய் லாமாவுக்குப் போன் செய்து நடந்ததை எல்லாம் தெரிவித்தான். ஆசான் மரணத்தைப் பற்றி சொன்ன போது தலாய் லாமாவுக்குச் சிறிது நேரம் பேச முடியவில்லை. பின் நெகிழ்ந்த குரலில் சொன்னார். “ஆசான் எப்படிப்பட்ட தர்மாத்மா என்பது அவர் மரணத்தில் இருந்தே தெரிகிறது அன்பரே. மைத்ரேயர் மடியில் இருந்தபடி மரணத்தைச் சந்திக்கும் வாய்ப்பு யாருக்கு தான் கிடைக்கும்....”

கடைசியில் மைத்ரேயன் போய் விட்டதைச் சொன்ன போது தலாய் லாமா சொன்னார். “இனி அவர் தன் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்து விடுவார் அன்பரே. தர்மமும் அமைதியும் கண்டிப்பாக நிலை நிறுத்தப்படும். நீங்கள் அதற்கு பேருதவி செய்திருக்கிறீர்கள். மைத்ரேய புத்தரின் நண்பராகவும் இருந்திருக்கிறீர்கள். எல்லா நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு வேறு காரணம் தேட வேண்டியதில்லை. நன்றி, அன்பரே. எங்கள் மனதிலும் வரலாற்றிலும் உங்களுக்கு பூஜிக்கப்படும் இடம் என்றும் உண்டு.”


டோர்ஜே மேடையில் அமர்ந்தபடி அந்த அரங்கில் நிறைந்திருந்த நிருபர்கள், காமிராக்கள், அறிஞர்களை எல்லாம் பிரமிப்புடன் பார்த்தான். மேடையில் வேறொருவர் மைத்ரேயர் என்ற புத்தரின் மறு அவதாரம் பற்றி பத்மசாம்பவா ரகசிய ஓலைச்சுவடிகளில் முன்கூட்டியே சொல்லியிருந்ததை விவரித்து விட்டு மேடையில் இருக்கும் இந்தச் சிறுவன் தான் அந்த மைத்ரேயன் என்று எப்படிக் கண்டுபிடித்தோம் என்பதையும் விவரித்துக் கொண்டிருந்தார்.....

நேற்றிலிருந்தே அவன் பேசுகையில் என்ன சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்று சில ஆட்கள் அவனுக்குப் பாடம் நடத்தி இருந்தார்கள். மூன்று முறை ஒத்திகையும் பார்த்து விட்டுத் தான் திருப்தி அடைந்தார்கள். நல்ல வேளையாக ஆசிரியர் ஒற்றைக்கண் பிக்குவையும் அவர்கள் அவனுக்கு முன்பே அந்த தங்குமிடத்துக்கு அழைத்து வந்திருந்தார்கள். அவர் கூட இருந்ததால் அவனால் அந்த மன அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடிந்தது.

அவனை அழைத்து வந்தவர்கள் காலையில் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் கவலையுடன் கூடிக்கூடி அவர்களுக்குள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை நடத்தலாமா கைவிட்டு விடலாமா என்று கூட யோசித்த மாதிரி தெரிந்தது. ”எல்லாரையும் அழைத்து விட்டு என்ன சொல்லி இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வது?” என்று அவர்களில் ஒருவர் சிறிது சத்தமாகவே கேட்டது டோர்ஜே காதில் விழுந்தது. மாரா சைத்தான் மலையில் வெற்றி பெற்று விடவில்லை என்பதை மட்டும் அவர்கள் கவலையை வைத்து அவனால் அனுமானிக்க முடிந்தது. தொடர்ந்து அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்டான்.

“அப்படியானால் மைத்ரேயன்?”

“போய் விட்டான்”

டோர்ஜேக்கு சந்தோஷமாக இருந்தது. மாரா தோற்று விட்டான் மைத்ரேயன் வென்று விட்டான்.....

மேடையில் பேசிய ஆள் பேச்சை நிறுத்திய பிறகு மைக் டோர்ஜே கையில் தரப்பட்டது. அரங்கில் முன்னால் அமர்ந்திருந்த ஒரு நிருபர் எழுந்து அவனிடம் கேட்டார். “மைத்ரேயரே நீங்கள் தான் மைத்ரேயர் என்று உணர்ந்த கணத்தை எங்களுக்கு விவரிக்க முடியுமா?”

டோர்ஜே சில வினாடிகள் அரங்கையே படபடக்கும் இதயத்துடன் பார்த்தான். பின் மைக்கில் மெல்லச் சொன்னான். “நான் மைத்ரேயர் அல்ல?”

அடுத்த கணம் அரங்கே ஸ்தம்பித்து அமைதியாகியது. நேரடி ஒளிபரப்பு என்பதால், உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதால் வேறு வழியின்றி அந்த நிருபர் தொடர்ந்தார். “அப்படியானால் நீங்கள் யார்?”

“என் பெயர் டோர்ஜே....” மனம் படபடத்தாலும் டோர்ஜே தயங்காமல் உண்மையைச் சொன்னான்.

அரங்கிலிருந்து இன்னொரு பெண் எழுந்து கேட்டாள். “அப்படியானால் மைத்ரேயர்?”

டோர்ஜே உணர்ச்சிவசப்பட்டு ஒருவித பரவசத்துடன் சொன்னான். “அவர் வேறொருவர். நான் அவரை சந்தித்திருக்கிறேன். எனக்கு நல்ல உபதேசம் செய்திருக்கிறார்..... அவர் உலகமக்களுக்கு ஒரு செய்தி சொல்லி இருக்கிறார். அதை மட்டும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்...."

எல்லோரும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆர்வமாகப் பார்த்தார்கள். டோர்ஜே மனதில் மைத்ரேயனும், மாராவும் பேசிக் கொண்ட பகுதிகள் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்திருந்தன. அதில் மைத்ரேயன் சொன்ன ஒரு பகுதி உலகமக்களுக்குத் தெரிவித்த செய்தியாக அவனுக்குத் தோன்றியிருந்ததால் அதை அவன் அப்படியே சொன்னான்.

“யாரும் யாரையும் யாரிடமிருந்தும் காப்பாற்ற முடியாது. ஒருவன் தன்னிடமிருக்கும் தீமையிலிருந்து விலகி தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவான். தொடர்ந்து வரும் துன்பங்களை ஒருவன் எத்தனை காலம், எத்தனை பிறவிகள் தான் தாங்குவான். சலித்துப் போய் நிரந்தரமாய் துக்கத்திலிருந்து விடுபட ஆத்மார்த்தமாய் விரும்பும் இதயத்தில் நான் காலடி வைப்பேன். வழிகாட்டுவேன்” என்றார் அவர். இனியும் அறியாமையால் வழிதவறி நாம் கஷ்டப்பட வேண்டாம். நமக்கு வழிகாட்ட அவரைச் சரணடைவோம். புத்தம் சரணம் கச்சாமி!”

அரங்கில் ஒரு கண நேர அமைதிக்குப் பின் அமளி ஏற்பட்டது. டோர்ஜே நிம்மதியாக மேடையிலிருந்து இறங்கினான். ஒற்றைக்கண் பிக்கு அவனைப் பெருமிதத்துடன் பார்த்தார்.

நேரடி ஒளிபரப்பாக இருந்ததால் அது உலகமெங்கும் ஒளிபரப்பாகியது. பீஜிங்கில் அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த லீ க்யாங் பின் கண்களை மூடியபடி சிலை போல நிறைய நேரம் அசையாமல் அமர்ந்திருந்தான்.

க்‌ஷயும் லாஸா நகரில், காத்மண்டுக்கு விமான டிக்கெட் வாங்க ஒரு டிராவல் ஏஜெண்டிடம் போன போது, இந்த ஒளிபரப்பைப் பார்த்தான். தொலைக்காட்சியில் டோர்ஜேயைப் பார்த்ததும் ”அப்பா இது... “ என்று சொல்ல வந்த கௌதமை அக்‌ஷய் பார்வையாலேயே அடக்கினான்.

கௌதம் ”சரி அப்புறம் சொல்கிறேன்” என்று சொல்லி அந்த ஒளிபரப்பைப் பார்த்தான். மைத்ரேயன் விடுத்த செய்தியை பரவசத்துடன் டோர்ஜே சொன்ன போது அக்‌ஷய் தன்னுள் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். அந்தச் சிறுவனின் தைரியத்தை மனதிற்குள் பாராட்டினான். லீ க்யாங் கெடுபிடி இல்லாததால் விமானத்திலேயே போவது என்று அக்‌ஷய் முடிவெடுத்திருந்தான். எதற்கும் இருக்கட்டும் என்று போலி பாஸ்போர்டகளையும் அவன் எடுத்து வந்திருந்தது இப்போது பயன்படுகிறது...

டிக்கெட் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் கௌதம் சொன்னான். ”டிவியில் பேசினானே அவன் தான் டோர்ஜே. அவன் பாம்பு ஏணி ஆட்டத்தில் ஒரு தடவை மேலே வரை வந்து விட்டான். கடைசியில் பகடையில் மூன்று போட்டு பெரிய பாம்பில் சிக்கி கீழே வரை போய்விட்டான்.... ...” தொடர்ந்து தங்கள் விளையாட்டை விவரித்துக் கொண்டே வந்த மகனைப் பார்த்து அக்‌ஷய் புன்னகைத்தான்....

இன்று காலை உறக்கத்திலிருந்து எழுந்தவன் ”மைத்ரேயன் எங்கே?” என்று கேட்டான். அக்‌ஷய் மைத்ரேயனை அவன் தாய் வந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார் என்றும் இனி இரண்டு வருடங்கள் கழித்து மறுபடி இந்தியா வருவான் என்றும் சொன்னான். அப்போதைக்கு கௌதம் கண்ணில் நீர் கோர்த்தது. ஆனால் மீண்டும் நண்பன் வருவான் என்ற நம்பிக்கையில் சிறிது நேரத்தில் அவன் இயல்பாகி விட்டிருந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அவன் நினைவு வைத்துக் கேட்பானா என்று தெரியவில்லை. அப்படிக் கேட்டால் இன்னொரு கதை சொல்ல வேண்டும்....


லாஸா விமான நிலையத்தில் இயல்பான சோதனைகளே நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவன் சென்ற முறை வந்த போதிருந்த சோதனை அதிகாரிகளின் கும்பல் இருக்கவில்லை. அவன் பாஸ்போர்ட்டையும் கௌதமின் பாஸ்போர்ட்டையும் சோதித்த அதிகாரி அவனைக் கூர்ந்து பார்த்தார். அக்‌ஷய் ஆபத்தை உணர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் என்னேரமும் மகனைத் தூக்கிக் கொண்டு விமான நிலையத்திலிருந்து ஓடவும் தயார் நிலையில் தான் இருந்தான்.

“ஒரு நிமிடம்...” என்று சொல்லி விட்டு அந்த அதிகாரி தனக்குப் பின்னால் இருந்த அறைக்குப் போனார். அக்‌ஷய்க்கு ஓடித் தப்பிக்கலாமா என்ற யோசனை பலமாக எழுந்தது. அதிகாரி போன வேகத்திலேயே வந்தார். அவர் கையில் ஒரு பூங்கொத்தும் அதனுடன் ஒரு சீட்டும் இருந்தது.

“இதைத் தரச் சொன்னார்” என்று மட்டும் சொல்லி பூங்கொத்தையும் சீட்டையும் நீட்டினார். திகைப்புடன் வாங்கிய அக்‌ஷய் சீட்டைப் பிரித்துப் படித்தான்.

“வாழ்த்துக்கள். தங்கள் பயணம் இனியதாக அமையட்டும். எப்போதாவது சீனாவுக்கு வரும் சந்தர்ப்பம் அமைந்தால் என்னைக் கண்டிப்பாகச் சந்தியுங்கள். அதை ஒரு கௌரவமாக நான் நினைப்பேன். – லீ க்யாங்”

அக்‌ஷய் நெகிழ்ந்து போய் அந்த அதிகாரியைப் பார்த்தான். அவர் மெலிதாகப் புன்னகைத்து விட்டு அடுத்த பயணியின் பாஸ்போர்ட்டை சோதிக்க ஆரம்பித்தார். 


வர்களுடைய விமானம் திபெத்தின் மலைகளைக் கடக்கையில் அக்‌ஷயின் மனம் மைத்ரேயனை நினைத்தது. இதில் ஏதாவது ஒரு மலையில் மைத்ரேயன் தியானத்தில் அமர்ந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. இல்லை அங்கிருந்து அவன் இந்த விமானத்தைப் பார்த்துக் கொண்டும் கூட இருக்கலாம்....

மைத்ரேயனைச் சந்தித்த முதல் கணத்திலிருந்து கடைசியாய் அவன் விடை பெற்ற கணம் வரை அக்‌ஷய் மனதில் திரைக்காட்சிகளாக ஓடின. யோசிக்கையில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகத் தான் நடந்திருக்கிறது. ஆனால் எதையும் எந்திரத்தனமாக ஆக விடாமல் மைத்ரேயன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தியானங்களில் ஆழ்வதும், காரியங்கள் ஆவதும் மட்டுமல்லாமல் அவன் சைத்தான் மலையில் ஆடுகளுடன் விளையாடியதும், இந்தியாவில் கௌதமுடன் விளையாடியதும், தன்னுடன் நெருங்கிப் பழகியதையும் நினைக்கையில் அக்‌ஷயின் நினைவுகள் கனத்தன.

ஆனால் எதுவும் முடிவுக்கு வருகையில் மைத்ரேயன் வருத்தப்படவேயில்லை. ஏனென்றால் எல்லாமே முடிவுக்கு வரக்கூடியவையே என்கிற ஞானம் ஆரம்பத்தில் இருந்தே அவனிடம் இருந்திருக்கிறது. அதனால் ஒரு அவதார புருஷனான அவன் எல்லாவற்றையும் தாண்டிப் பக்குவமாகவே நகர்ந்திருக்கிறான். ஆனால் இருக்கும் போது முழுமையாக அனுபவித்து, முடியும் போது புரிதலுடன் புன்னகையுடனேயே அதிலிருந்து நகர்வது எல்லாருக்கும் முடிவதில்லை....


மைத்ரேயன் இருக்கும் இமயமலைத்தொடர் கண்களில் இருந்து மறைய ஆரம்பித்த போது மனதில் கனம் கூடினாலும், அதை அக்‌ஷய் ஒதுக்கி வைக்கப் பார்த்தான். ’அவதார புருஷர்களைத் தனிமனிதர்கள் தங்கள் அன்பால் கட்டிப்போட நினைக்கக்கூடாது. அவர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள். தலாய் லாமா சொன்னது போல அவன் தன் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்யட்டும். தர்மத்தையும் அமைதியையும் இந்த உலகத்தில் நிலை நாட்டுவது சுலபமல்ல. மாரா மடிந்து விட்டாலும் அவன் சேனை மிக வலிமையோடு இன்னும் இருக்கிறது. உலகம் அஞ்ஞானத்திலும் அக்கிரமத்திலும் ஆழமாகவே அழுந்திக் கிடக்கிறது. அனைத்தையும் மாற்ற, மிக நீண்ட பாதையில் தனியனாக மைத்ரேயன் ஒரு தவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துப் போயிருக்கிறான். அன்பால் கூட அதில் குறுக்கிடக்கூடாது.... குறுக்கிடுவது தர்மம் அல்ல..’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

அவன் மனம் ஓரளவு அமைதியடைய ஆரம்பித்தது.

அவன் உதடுகள் முணுமுணுத்தன. ”புத்தம் சரணம் கச்சாமி!”

(’நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்’)என்.கணேசன்

இந்த நாவலுடன் இரண்டு வருடங்களுக்கும் மேல் பயணித்து தொடர்ந்து பின்னூட்டங்கள் இட்டு என்னை ஊக்கப்படுத்திய என் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  - என்.கணேசன்

(பரபரப்பும், விறுவிறுப்பும் மட்டுமல்லாமல், எந்த சூழ்நிலையிலும் அமைதியிழக்காமல் நிறைவாய் வாழும் ஞானக்கலையும் பின்னிப் பிணைந்துள்ள இந்த சுவாரசிய நாவல் இப்போது அச்சில் புத்தகமாக வெளி வந்துள்ளது. புத்தகம் வாங்கவும், தங்கள் பகுதிகளில் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை அறியவும் பதிப்பாளரை 9600123146 அலைபேசியிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.)

37 comments:

 1. Great Story.. If I could self-actualise some of the principles, exhibited by Maithreyan - I would be less-affected by worldly events. Appreciate the author's point of views. ALl the Best for the next novel.

  ReplyDelete
 2. Ganeshan Sir, Thanks a lot for this beautiful and meaningful Novel.
  Waiting for your next Novel to roll-out.
  Once again thanks...........

  ReplyDelete
 3. 122 வாரங்கள் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாசித்தேன். அவை மிக நல்ல அனுபவமாக அமைந்தது. தங்கள் படைப்பிற்கு மிக்க நன்றி !!!

  அடுத்த நாவலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  தொடக்கம் தீபாவளியன்று தானே?

  ReplyDelete
 4. Excellent. I have been following since the first episode. Never missed a single Thursday. Good work sir. Very eager to read your new novel. All the best sir.

  ReplyDelete
 5. Tears in my eyes.. i loved this novel very much.. thanks for the wonderful path i have experienced through this novel.

  ReplyDelete
 6. அமானுஷ்யனை வைத்து மற்றுமொரு தொடரை ஆரம்பிக்க இருக்கிறீர்களா?
  அவன் கௌதமுடன் வீட்டுக்கு வந்து குடும்பத்துடன் சேர்வது,வருணின் திருமணம் அதையெல்லாம் கூறாது முடித்து விட்டீர்களே!ஏன்? நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய விதத்தில் கடைசி அத்தியாயத்தை எழுதியுள்ளீர்கள்.அருமைதான்.ஆனால் முதலில் நான் சொன்னதையும் சேர்த்து முடித்திருந்தால் படிப்பவர் மனம் நிறைவடைந்திருக்கும் அல்லவா?

  ReplyDelete
 7. புத்தம் சரணம் கச்சாமி - ஒவ்வொரு வியாழன் கிழமையும் ஆத்மார்த்தமாய் படிக்க வைத்த நாவல் . படித்தாலும் திரும்ப திரும்ப படிக்க வைக்கும் வசீகரிக்கும் எழுத்து, அருமை.

  வாழ்க வளமுடன் .

  நன்றி,
  சிவக்குமார்

  ReplyDelete
 8. Sir, your words are so touching that I feel the same sadness what Akshay felt when leaving mythreyan. You have a long way to go sir. Expecting the next novel

  ReplyDelete
 9. Kangalil irunthu thodarnthu pathu nimidamgal kannir kotta, kannirundane than padithen, comment kuda aluthukittu than, Arputhamana ending, Gowtham kapatiyatharku nandri. Leekiyang bouquet wonderful and awesome thought, akshai oru miga nalla manithan.

  ReplyDelete
 10. இந்த கதையை படிக்கும்போது நாமும் உணர்ச்சி வசப்படாமல் வழ்க்கையை வாழ வேண்டும் என்ற உத்வேகம்
  ்மனதில் தோன்றியது ஆனால் நிஜத்தில் அத்தனை சுலபமாக இல்லை ஆனால் அதற்கு பழக்க படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் உருதி கொண்டிருக்கின்றேன் உண்மையில் தங்களின் கதை வேரு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்று விடுகின்றது தங்களின் எழத்துக்களுக்கு உள்ள உயிரோட்டம் வியக்க வைக்கின்றது அருமை தங்களின் பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. ராதாகுமார்October 27, 2016 at 7:25 PM

  ஒவ்வொரு கிழமையும் படிக்கும் போதும் மனதில் ஓர் இனம்புரியாத அமைதியை உணர்ந்தேன் அவதாரபுரிஷனுடன் கைகோர்த்து நடந்தேன் மைத்ரேயன் அக்ஷய் ஆசான் ஒவ்வொரு பாத்திரம்கள் உடாகவும் புதுவகையான அனுபவங்களை பெற்றுகொண்டோம் மிக்கநன்றி அன்பரே

  ReplyDelete
 12. அன்புடையீர்,

  அற்புதம். விறுவிறுப்பான கருவிலிருந்து பிறளாத நடை. ஆழமான மதம் சாராத ஆன்ம தத்துவங்களை (ஆம், புத்தரின் தத்துவங்கள் அனைத்தும் மதம் சார்ந்தவை அல்ல) தகுந்த இடத்தில் வாய்ப்பை நழுவாமல் பயன் படுத்தி உள்ளீர்கள். மாரா என்ற பெயரை வில்லனுக்கு தேர்ந்து எடுத்ததிலேயே நான் உங்களது சாமார்த்தியத்தை மனதார மெச்சினேன். There are no accidents என்ற தத்துவத்தையும் வெகு நேர்த்தியாக கையாண்டு உள்ளீர்கள்.ஆசானின் குழந்தைதனமான ஆனால் நிகழ் காலத்தில் எப்போதும் வாழும் குணத்தையும் சித்தரித்த விதம் அருமை. அனைத்து பாத்திரங்களையும் சித்தரித்த விதம் வாசகர்களுக்கு அவர்களுடன் நேரில் பழகிய அனுபவத்தை கொடுத்து விட்டீர்கள். மேலும் இந்த புதினத்தில் வரும் பாத்திரங்கள் வலுவான பாத்திரங்கள்: அக்ஷய் & லீ க்யாங்கை ஒரு தளத்திலும், மாரா & மைத்ரேயரை (மைத்ரேயன் என்று எழுத மனம் ஒப்பவில்லை) மற்றொரு தளத்திலும் கையாண்டு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை எனவும் அதே சமயத்தில் தர்மம் தான் இறுதியில் வெல்லும் என்பதை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள். மைத்ரேயரின் அனைத்து செயல்களும், சொற்களும் மனதை உருக்கும் தருணங்கள், மனதை நெகிழ வைத்து கண்ணீரை வரவழைக்கும் பொருள் பொதிந்த வார்த்தைகள். மொத்தத்தில் இந்த படைப்பு அனைத்து மக்களும் பிடித்துப் படித்து, சிறிதேனும் நல்லவிதமாக மனம் மாற முயற்ச்சிக்க உந்தும் விதமாக உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது என்பது நிதர்சனம். நீங்கள் இது போன்று மேலும் பல படைப்புக்களை உருவாக்க எனது வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  சரவணபாபு, பெங்களூரு

  ReplyDelete
  Replies
  1. டோர்ஐஜே வை விட்டுட்டீங்க. சாதரண மனிதர்களாகிய நாம் கடவுளை சந்தித்தப்பின் உண்மையின் (தர்மத்தின்) பக்கம் நிற்கின்றோம். உங்கள் விமர்சனம் அருமை. 😄😄

   Delete
 13. Sir
  I don't know to type in tamil. Also I cannot express as nicely as others have spelt. I feel the same. It is many years since I have read such a story with meaningful insights. We lived with Akshay. God bless you.

  ReplyDelete
 14. அர்ஜுன்October 27, 2016 at 8:24 PM

  தமிழில் இது போன்ற நாவலைத் தந்ததற்கு ஆயிரம் நன்றிகள் சார். வாரா வாரம் ஏதோ ஒன்றை தங்கள் நாவல் கற்றுத் தந்தது. சுவாரசியமாய் நல்லதை அழுத்தமாய் சொல்ல முடிவது எல்லோருக்கும் வராது. நீண்ட நாவல்களே அபூர்வமான காலக்கட்டத்தில் பல்சுவையோடு விருந்து படைத்துள்ளீர்கள். ஆங்கில நாவல்களுக்கு இணையான விருவிருப்புடன் அறிவுக்கும், ஆத்மாவுக்கும் நல்ல தீனி போட்டிருக்கிறீர்கள். அக்‌ஷயோடு, மைத்ரேயனும், ஆசானும், லீ க்யாங்கும் நீண்ட காலம் எங்கள் மனதில் தங்கியிருப்பார்கள். உங்கள் நாவல்கள் தரம் குறையாமல் திரைப்படமாகவோ, தொலைக்காட்சித் தொடராகவோ வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

  ReplyDelete
 15. sir superbbbbbbbbbbbbbbb
  may the almighty give you long life for many more novels

  ReplyDelete
 16. sir superbbbbbbbbbbbbbbbbb
  may the almighty give you and your family health
  wealth and prosperity to write many more novels
  all the best for next

  ReplyDelete
 17. சொல்ல வார்த்தை இல்ல ஜீ...

  ReplyDelete
 18. மிகவும் விறுவிறுப்பான கதை... திடீர் என்று ஏனோ அவசரமாக முடித்துவிட்டீர்கள்... மும்முனை போர்.. வலுவான மனிதர்கள்.. மாரா.. லீகியாங்..பாதுகாவலன்... இன்னும் நிரைய எதிர்பார்ப்பு... இந்த அவசரமான முடிவு சற்று ஏமாற்றமே... எனினும் ஒவ்வொரு வாரமும்..திகில் எதிர்பார்ப்பு..கருத்து என பரவசமடைய செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி... நன்றி...

  ReplyDelete
 19. little disappointed you made the story end quickly. I was expecting more ... thanks for the story

  ReplyDelete
 20. Happy Deepavali wishes!!! Excellent ending...We thoroughly enjoyed the story and writing...Readers will be uplifted with your writing...

  ReplyDelete
 21. Another excellent contribution from You to Tamil Literary World .God Bless You !

  ReplyDelete
 22. Sir,
  A very wonderful story.. Thank you very much...
  I couldn't find words to explain my feelings...
  Please keep on writing and make us feel good.
  Thank you...

  ReplyDelete
 23. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
 24. Thanks for the excellent story.awaiting for your "Iru veru ulagam".

  ReplyDelete
 25. I wish that this novel should be adjudged as the worlds best novel.

  ReplyDelete
 26. Happy Deepavali wishes to you and your family.

  ReplyDelete
 27. மைத்ரேயர்க்கு நாங்களும் விடை கொடுக்கிறோம் அண்ணா. . .

  122 வாரங்கள். ஜெட் வேகம்.

  உளி கொண்டு செதுக்கப்பட்டது போல் நேர்த்தியான படைப்பு..
  அரிதாரம் பூசாத எதார்த்தமான கருத்தாழமிக்க ஆன்மிக கருத்துக்களை ஆங்கங்கே கூறி கதையை கண் முண்ணே நடப்பது போல் கொண்டு சென்ற விதம் மிக அருமை.

  இது போன்ற படைப்பை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணா.

  "-புத்தம் சரணம் கச்சாமி-"

  ReplyDelete
 28. உயிரோட்டமான எழுத்து. அத்தனை கதாபாத்திரங்களும் வாழ்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உணர்வுபூர்வமாக வடித்துள்ள விதம் பிரமிக்க வைக்கிறது. மைத்ரேயன் அபரிமிதம். புத்தனின் அவதாரத்தை வர்ணிக்க வேண்டுமாயின் அந்த மன நிலை வேண்டும். உங்களின் மனநிலை என்னை வியக்கவைக்கிறது. ஆழமான சிந்தனை. உங்களின் பதிவுகளும், எழுத்துக்களும் வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறன. வாழ்த்துக்களும் நன்றிகளும்...

  ReplyDelete
 29. Thanks for your great lively story.

  ReplyDelete
 30. wonderful story sir...soooo thanks and Happy diwali.

  ReplyDelete
 31. விறுவிறுப்பான நாவல்
  ஆன்மீக கருத்துக்களுடன்
  உங்கள் எழுத்துக்களை படிக்கும் ோது ஒரு மனநிறைவு கிடக்கின்றது
  நன்றி

  ReplyDelete
 32. உங்கள் எழுத்துக்களை படிக்கும்பாெழுது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது
  நன்றி ஐயா

  ReplyDelete
 33. அருமையான விருவிருப்பனா novel. ஒவ்வொரு வாரமும் டென்ஷன் ஆக இருந்தது. அக்ஷய் அமானுஷனை மறுபடியும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.

  ReplyDelete
 34. " The Little Buddha ",the Great.....ஆழ்ந்த ஞானமுள்ளவனாக இறுதி அத்தியாயங்களில்
  அவனை(ரை) வெளிப்படுத்திய விதத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை....
  தன்னை உலகிற்கு வெளிப்படுத்திக் கொள்ளாமல், இறுதியில் ,தனிமை நாடி
  வனம் நோக்கி சென்றதாக முடித்த விதம் அருமை.....நன்றி.....வாழ்த்துகள்....

  ReplyDelete