சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 29, 2013

களை நீக்கும் கலை!




ரு தாவோ கதை....

ஒரு தாவோ குரு தன் மூன்று சீடர்களுடன் யாத்திரை செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய வயல்வெளி முழுவதும் களைகள் மண்டிக் கிடப்பதைக் கண்டார். தன் சீடர்களிடம் குரு கேட்டார். “இந்தக் களைகளை நீக்க சிறந்த வழி என்ன?

முதலாம் சீடன் சொன்னான். “கையால் ஒவ்வொரு களையாக வேரோடு பிடுங்குவது தான் சிறந்த வழி. அது மிக எளிமையான வழியும் கூட.

இரண்டாம் சீடன் சொன்னான். “இத்தனை பெரிய வயலில் ஒவ்வொரு களையாக கையால் பிடுங்கிக் கொண்டிருந்தால் எப்போது அத்தனை களைகளையும் பிடுங்கி முடிப்பது. களை பிடுங்கும் உபகரணங்களை உபயோகப்படுத்தி களை பிடுங்கினால் குறுகிற நேரத்தில் நிறைய களைகள் பிடுங்கி விடலாம்.

மூன்றாம் சீடன் சொன்னான். களைகளைத் தீயால் கொளுத்தினால் ஒரேயடியாக அத்தனை களைகளையும் அழித்து விடலாம். அது தான் விரைவான எளிமையான வழி

குரு சொன்னார். “இந்த வயல்வெளியே மனித மனம் என்றும், களைகள் அவனுக்குத் தேவையற்றதும், முன்னேற்றத்திற்கு உதவாததுமான தீய எண்ணங்கள் என்றும் எடுத்துக் கொண்டால் அப்போதும் நீங்கள் சொன்ன வழிகள் மிகப் பொருத்தமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

முதல் சீடன் சொன்னான். “ஆம் குருவே. ஒவ்வொரு தீய எண்ணத்தையும் தனித்தனியாக கவனத்தில் எடுத்து அதன் தீய தன்மையையும், பலனற்ற தன்மையையும் புரிந்து கொண்டு அதை மனதில் இருந்து நீக்கி விடுவதே எளிமையான சிறப்பான வழி என்று நினைக்கிறேன்.

இரண்டாம் சீடன் சொன்னான். “மனதில் உள்ள தீய எண்ணக் களைகளை விரைவாக நீக்க தியானம், ஜபம், மந்திரங்கள் போன்ற உபகரணங்கள் சிறப்பாகப் பயன்படும் என்று நினைக்கிறேன் குருவே”.

மூன்றாவது சீடன் சொன்னான். “புத்தர் அல்லது கடவுளர்களிடம் மனதை ஒப்படைத்தால் ஒரேயடியாக தீய எண்ணக் களைகள் கருகி விடும் என்று நான் நம்புகிறேன் குருவே

குரு சொன்னார். “மூன்றுமே நல்ல வழிகள் தான். சிந்திக்க வேண்டிய வழிகள் தான். ஆனால் அவை தாவோ கண்ணோட்டத்தில் மிகப் பொருத்தமானது தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது

அதற்குப் பின் அவர் அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சீடர்கள் தத்தம் வழியே சிறந்தது என்று நினைத்தாலும் குருவின் அங்கீகாரம் கிடைக்காததில் ஏமாற்றம் அடைந்தனர்.

சில மாதங்கள் சென்றன. குருவும் சீடர்களும் அதே பாதையில் இன்னொரு முறை வர நேர்ந்தது. களைகள் இருந்த வயல்வெளியில் விவசாயிகள் இப்போது நெற்பயிர் விளைவித்திருந்தார்கள்.

குரு அந்த நெற்பயிர் வயலைக் காட்டி சொன்னார். “இது தான் என் கேள்விக்குப் பதில். இது தான் தாவோ முறை

சீடர்களுக்குப் புரியவில்லை. குரு விளக்கினார். “நீங்கள் மூவர் சொன்ன வழிகளும் தற்காலிகமான வழிகள். களைகளைப் பிடுங்கிய அளவு, அழித்த அளவு அவை மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டே இருக்கும். அதை நிரந்தரமாக அழிக்க ஒரே வழி அந்த வயலை அப்படியே வெற்றிடமாக வைத்திராமல் அதில்  உபயோகமான பயிர்களை விதைப்பது தான்.

அதே போல் தீய எண்ணங்களை அழிப்பதற்கு நீங்கள் சொன்ன வழிகளும் தற்காலிகமானவை தான். எந்த வழியில் அழித்தாலும் காலி இடம் இருக்கும் வரை அவை திரும்பத் திரும்ப மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கும். அந்த தீய எண்ணங்கள் இருக்கும் இடத்தில் நல்ல உபயோகமான எண்ணங்களை விதைப்பது தான் தாவோ முறைப்படி புத்திசாலித்தனமான பொருத்தமான செயல். அப்படிச் செய்தால், நல்லெண்ணங்கள் நிரம்பிய மனதில் தீய எண்ணங்கள் மீண்டும் எழ இடமே இருக்காது. அப்படியும் ஓரிரண்டு அங்கொன்றும் இங்கொன்றும் எழலாம் என்றாலும் அவற்றை நீக்குவது பெரிய கஷ்டமான காரியம் அல்ல.

அந்த தாவோ குரு சொன்னது மனதில் பதியவைத்துக் கொள்ளது தக்கது. மனதில் தீயவற்றையும், பலவீனத்தையும் போக்க தினசரி போராட்டம் நடத்த அவசியம் இல்லை.  சிந்தனைகளில் நல்லதையும், பயனுள்ளதையும் கொண்டு வருவதில் நாம் எல்லா சமயங்களிலும் உறுதியாக இருந்தால் தீயதும், பலவீனமும் தங்க நம் மனதில் இடமே இருக்காது.

-       -    என்.கணேசன்


8 comments:

  1. அருமை!! மிக்க நன்றி.

    ReplyDelete
  2. தாவோ முறை - சிறப்பான முறை...

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Dindigul Dhanapalan sir. Ungalukku eppadi time kidaikkudhu..? Entha site ponalum unga comment illaama oru blog kooda ille...

      Delete
  3. மனதில் தீயவற்றையும், பலவீனத்தையும் போக்க தினசரி போராட்டம் நடத்த அவசியம் இல்லை. சிந்தனைகளில் நல்லதையும், பயனுள்ளதையும் கொண்டு வருவதில் நாம் எல்லா சமயங்களிலும் உறுதியாக இருந்தால் தீயதும், பலவீனமும் தங்க நம் மனதில் இடமே இருக்காது. அருமை.

    ReplyDelete
  4. Arumaiyana vilakkam... Thanks for sharing

    ReplyDelete