சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 23, 2012

பரம(ன்) ரகசியம்! - 6




யார் போன்லகனகதுர்கா மகனிடம் கேட்டாள்.

“ராங் நம்பர்ம்மாஎன்று அலட்டிக் கொள்ளாமல் ஈஸ்வர் சொன்னான்.

மகன் பேசியதை எல்லாம் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்த கனகதுர்காவிற்கு அவன் யாரிடம் பேசி இருப்பான் என்பதை ஊகிக்க முடிந்தது. கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாக இருந்த மகனையே சிறிது நேரம் பார்த்தாள்.
பின் ராங் நம்பர் என்ற அவன் பதிலைப் பொருட்படுத்தாதவளாக மீண்டும் கேட்டாள். “என்ன விஷயமாம்?

கம்ப்யூட்டரில் இருந்து கண்களை எடுக்காமல் அவன் சொன்னான். “தெரியலை

என்ன சொல்ல வந்தாங்கன்னாவது நீ கேட்டிருக்கலாம்

“நமக்கு சம்பந்தமில்லாதவங்க பேச்சை நாம எதுக்கும்மா கேட்கணும்?

கனகதுர்கா மகனுக்கு பதில் சொல்ல முடியாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். அவள் தன் மாமனாரை இது வரையில் சந்தித்ததில்லை. என்றாலும் அவரைப் பற்றி அவள் கணவர் மூலம் நிறையவே அறிந்து வைத்திருந்தாள். கணவரின் மரணத்தை அவரிடம் தெரிவித்த போது அவர் பேசிய பேச்சில் அவரைப் பற்றி முழுமையாகவே புரிந்து விட்டிருந்தது. அவர் எந்த விதத்திலும் அவர்களோடு உறவு கொண்டாட விரும்பவில்லை என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் தெரிவித்திருந்தார். அப்படிப்பட்டவர் இப்போது அவராகவே ஏன் போன் செய்ய வேண்டும்?

ஈஸ்வர்... மறுபடி தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

“என்ன?

“உனக்கு ஈஸ்வர்னு உங்கப்பா ஏன் பேர் வச்சார்னு தெரியுமா?

“தெரியும்

“அந்த அளவுக்கு அவர் அவங்கப்பாவை நேசிச்சார்டா....

“அந்த அளவு நேசிச்ச மகனோட சாவுல கூட அந்த ஆள் கோபம் போகலைன்னா அந்த ஆள் என்ன மனுஷன்மா. நீ அந்த ஆள் பேசின பேச்சுல ரெண்டு நாள் அழுதது மறந்துடுச்சா?

மறக்கலைடா. அவர் அப்ப பேசினது தப்பு தான். ஆனா தப்பு செஞ்ச ஆள்கள் திருந்தவே மாட்டாங்களாடா? அதுக்கு நாம சந்தர்ப்பம் கொடுக்காட்டி அதுவே தப்பாயிடாதாடா?

முதல் முறையாக கம்ப்யூட்டரிலிருந்து பார்வையைத் தாயின் பக்கம் திருப்பிய ஈஸ்வர் புன்னகைத்தான். அந்த ஆள் அன்னைக்கு பேசினதுக்கு மன்னிப்பு கேட்கத்தான் போன் செய்யறாருன்னு நினைக்கிறியா. நல்ல கற்பனைம்மா உனக்கு. அதுக்கெல்லாம் அந்த ஆளோட ஈகோ விடாது. வேறெதுக்கோ போன் பண்ணியிருக்கார்

ஈஸ்வர் ஆணித்தரமாகச் சொன்னான். அவளுக்கு அவன் சொன்னதை சந்தேகிக்கத் தோன்றவில்லை. மனித மனத்தை அவன் ஆழமாக அறிந்தவன். இது வரை அவன் கணித்த மனிதர்களின் குணாதிசயங்கள் பொய்த்ததில்லை.  அவன் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கிறான். உளவியலில்  Parapsychology என்று சொல்லப்படும் அதீத உளவியல் மற்றும் அதீத புலனாற்றல் குறித்து அவன் எழுதிய சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக உளவியல் அறிஞர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தன....

மறுபடி போன் மணி அடித்தது. காலர் ஐடியில் தெரிந்த எண்ணைப் பார்த்து விட்டு ஈஸ்வர் சொன்னான். “அந்த ஆள் தான் மறுபடி கூப்பிடறார்....

கனகதுர்காவிற்கு அவர் முதல் தடவை போன் செய்து பேசியதே ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவன் பேசிய பேச்சுக்கு இரண்டாவது முறை அவர் கூப்பிடுவார் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. மிக முக்கியமாய் ஏதோ இருக்க வேண்டும்.... அவள் மகனைப் பார்த்தாள். அவன் போனை எடுப்பதாகத் தெரியவில்லை. மாறாக, தன் கம்ப்யூட்டரில் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர ஆரம்பித்தான்.

கனகதுர்கா கைகள் லேசாக நடுங்க போன் ரிசீவரை எடுத்து மகன் காதில் வைத்தாள். அவன் முறைத்த போது “ப்ளீஸ்என்று உதடுகளை அசைத்தாள். வேறு வழியில்லாமல் ஈஸ்வர் சொன்னான். “ஹலோ

“நான் பரமேஸ்வரன் பேசறேன். நான் மறுபடி தொந்திரவு செய்யறதுக்கு மன்னிக்கணும். எந்த உறவு முறையும் வச்சு நான் பேச வரலை. இறந்து போன ஒரு நல்ல மனுஷன் கடைசியா உனக்கு சொல்லச் சொன்ன ஒரு விஷயத்தைத் தெரிவிக்கிற ஒரு சாதாரண ஆளா என்னை நீ நினைச்சுகிட்டா போதும்...

இறந்த தந்தை மூலமாகக் கேட்ட தகவல்களை வைத்தே தாத்தாவை மிகத் துல்லியமாக அறிய முடிந்த ஈஸ்வருக்கு அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவது சாதாரண விஷயம் அல்ல என்பது புரிந்தது. தன் ஈகோவையும், சுய கௌரவத்தையும் ஒதுக்கி விட்டுத் தாழ்ந்து வருவது அவருக்கு முதல் முறையாகக் கூட இருக்கலாம். அமைதியாக அவன் சொன்னான். “சொல்லுங்க

பசுபதி கடைசியாகச் சந்தித்த போது சொன்னதை அப்படியே ஈஸ்வரிடம் பரமேஸ்வரன் ஒப்பித்து விட்டு சொன்னார். “எங்கண்ணா நேத்து இறந்துட்டார்.. அதனால தான் உன்னை நான் தொந்திரவு செய்ய வேண்டியதாய் போச்சு...

பசுபதி சொன்னதாக பரமேஸ்வரன் சொன்ன விஷயங்கள் ஈஸ்வருக்குத் திகைப்பைத் தான் ஏற்படுத்தின. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இயல்பாகக் கேட்டான். உங்கண்ணா எப்படி இறந்தார்?

“அவரைக் கொன்னுட்டாங்க... சொல்லும் போது பரமேஸ்வரன் குரல் கரகரத்தது.

“என்ன?...ஈஸ்வருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஆமா. அவரைக் கொன்னுட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துட்டு போயிட்டாங்க

ஈஸ்வருக்கு அதிர்ச்சி அதிகரித்தது. பெரிய தாத்தாவைப் பற்றியும், அந்த சிவலிங்கத்தையும் பற்றியும் அவன் தந்தை நிறையவே அவனிடம் சொல்லி இருக்கிறார். அந்த சிவலிங்கத்தைப் பற்றி சின்ன வயதில் கேள்விப்பட்ட சில தகவல்களை அப்போது அவனால் நம்பக்கூட முடிந்ததில்லை. ஆனால் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அவன் நடத்தின சில ஆராய்ச்சிகளிற்குப் பிறகு கேள்விப்பட்டதில் சிலதெல்லாம் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்று உறுதியானது. ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் பலமுறை எழுந்ததுண்டு. கேள்விப்பட்டதும், ஆராய்ச்சிகள் சொன்னதும் உண்மை தானா என்று நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததுண்டு.....

திகைப்புடன் ஈஸ்வர் பரமேஸ்வரனிடம் சொன்னான். “எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அந்த சிவலிங்கத்தை அப்படி சாதாரணப்பட்ட யாரும் தூக்கிட்டு போக முடியாதே. அதுவும் அவரைக் கொலை செய்தவன் அதைக் கண்டிப்பாக தூக்கிட்டு போக முடியாதே.

பரமேஸ்வரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் மனதில் கற்பனை செய்திருந்த அந்த அமெரிக்கப் பேரன் அந்த சிவலிங்கத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்தவன் போல் கேட்பான் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. திகைப்பு நீங்காதவராகச் சொன்னார். அவரைக் கொலை செய்ததாக போலீசார் நினைக்கிற ஆள் வெளியே செத்துக் கிடந்தான். அவன் எப்படி செத்தான்னு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால் தான் தெரியும்....

ஈஸ்வர் தனக்குள் பேசிக் கொள்பவன் போல சொன்னான். “அப்படின்னா இந்தக் காரியத்தை செஞ்சவங்க அந்த சிவலிங்கத்தைப் பத்தி முழுசா தெரிஞ்சவங்களா தான் இருக்கணும். அதனால தான் அவரைக் கொலை செய்ய ஒரு ஆளையும், அந்த சிவலிங்கத்தை எடுத்துகிட்டு போக வேறு ஒரு ஆளையும் ஏற்பாடு செய்திருக்காங்க....

பரமேஸ்வரனுக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. அவரை விட அதிகமாக அவன் அந்த சிவலிங்கத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருந்ததாகத் தோன்றியது. அவர் சொன்னார். “எனக்கு ஒன்னுமே புரியலை. போலீஸ்காரங்க அந்த சிவலிங்கத்துக்குள்ளே ஏதாவது விலைமதிக்க முடியாத பொருளை  நான் ஒளிச்சு வச்சிருக்கேனான்னு கூட சந்தேகப்படற மாதிரி இருக்கு. அதைத் தெரிஞ்சுக்க பலவிதமா என்னைக் கேள்வி கேட்டாங்க

“அதுல ஒளிஞ்சிருக்கறது விலைமதிக்க முடியாத பொருளில்லை, விலை மதிக்க முடியாத சக்தின்னு சிலர் நம்பறாங்க...

பரமேஸ்வரனுக்கு லேசாக எரிச்சல் வந்தது. “நான் அந்த சிவலிங்கம் எங்க கிட்ட வந்த நாள்ல இருந்து பார்த்துட்டு வந்திருக்கேன். அதுல நான் ஒரு சக்தியையும் இதுவரைக்கும் பார்த்ததில்லை. நீ சொல்றத பார்த்தா அந்த வதந்திகளை நம்பிட்டு தான் யாரோ அந்த சிவலிங்கத்தைக் கடத்திட்டு போயிருக்காங்கன்னு தோணுது....

ஈஸ்வர் அவருக்கு விளக்கப் போகவில்லை. அவர் சொல்வதும் பொய்யில்லை. அவர் எந்த சக்தியையும் உணர்ந்ததில்லை தான். ஒரு மரக்கட்டை எத்தனை காலமானாலும் மின்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மின்சாரம் எதிலெல்லாம் ஊடுருவ முடியுமோ அதனால் மட்டுமே அதன் சக்தியைப் புரிந்து கொள்ள முடியும்....

அவன் ஏதாவது சொல்வான் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவன் பேச்சை முடிக்கும் விதமாக “வேறொண்ணும் இல்லையே? என்று கேட்டான்.

அவருக்கு வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை. இல்லை...என்றார்.

அவன் போனை வைத்து விட்டான்.
                            
                                    ***********

அந்த முதியவர் கண்களை மூடிக் கொண்டு வஜ்ராசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு எண்பதிற்கும் மேற்பட்ட வயதிருக்கும். அவர் வயது நரைத்த தலைமுடியிலும், தாடியிலும் தெரிந்ததே ஒழிய ஒடிசலான உறுதியான உடலில் தெரியவில்லை.  அவர் கண்களைத் திறக்கும் வரை அந்த மனிதன் மிகப் பொறுமையாகக் காத்திருந்தான். இந்த அரை மணி நேரத்தில் அவன் எட்டு தடவை உட்கார்ந்திருந்த நிலையை மாற்றிக் கொண்டு விட்டான். அவன் அங்கு வந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருந்தது. ஆனால் இந்த அரை மணி நேரத்தில் அவர் உட்கார்ந்த நிலையிலிருந்து கொஞ்சம் கூட அசையவில்லை என்பதைக் கவனித்த அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை ஒவ்வொரு முறை அவன் பார்க்கும் போதும் ஏதாவது ஒரு விஷயத்திற்காகவாவது அவனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிந்ததில்லை....

அவர் கண்களை மெல்லத் திறந்தார். அவனைப் பார்த்தவுடன் கேட்டார். “என்ன?

அந்த மனிதன் தயங்கித் தயங்கி சொன்னான். “அந்தப் பையன் ஓடிட்டான்... சிவலிங்கத்தை நாம சொன்ன இடத்துல வச்ச பிறகும் அவன் ஜுரமும் குறையலை, மந்திரம் ஜபிக்கறதை அவன் விடவும் இல்லை... ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்னு நினைச்சு அவனைத் தனியா ரூம்ல விட்டோம். இன்னைக்கு காலைல பார்க்கறப்ப அவன் இல்லை....அவன் போகக் கூடிய இடம் எல்லாம் தேடிப் பார்த்துட்டோம். ஆனா அவனைக் கண்டுபிடிக்க முடியல

கண்களை மூடி சிறிது நேரம் இருந்த அவர் அமைதியாகச் சொன்னார். “அவனைப் பத்தி கவலைப்பட வேண்டியதில்லை. விட்டுடு

அவன் தலையசைத்து விட்டு அவனுக்கு இப்போதுள்ள பெரிய பிரச்சினையைச்  சொன்னான். .... அந்தக் கொலைகாரன் மர்மமா செத்ததாலயும், இவன் இப்படி ஆகி ஓடிட்டதாலயும் மத்தவங்க யாரும் அந்த சிவலிங்கம் பக்கம் போகவே பயப்படறாங்க. நித்ய பூஜை செய்யக்கூட முன்வர மாட்டேங்குறாங்க...

அந்த முதியவர் யோசிக்க ஆரம்பித்தார். அந்த சிவலிங்கத்தைப் பற்றி கேள்விப்பட்ட சில விஷயங்கள் கற்பனை இல்லை என்பதை நடக்கின்றது எல்லாம் உறுதிப்படுத்துவது போலத் தோன்றியது.... அவர் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை வந்து போனது.


(தொடரும்)

- என்.கணேசன்

19 comments:

  1. ஒரு மரக்கட்டை எத்தனை காலமானாலும் மின்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மின்சாரம் எதிலெல்லாம் ஊடுருவ முடியுமோ அதனால் மட்டுமே அதன் சக்தியைப் புரிந்து கொள்ள முடியும்....////////
    கத்தி போன்று கூர்மையான வார்த்தைகள்.......

    தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை அருமை. வாழ்த்துக்கள்.
    உங்கள் எழுத்துக்களில் உங்களுக்கே உரிய ஆழ்ந்த விளக்கும் திறனும் மனித மனங்களை எளிதாக ஆழ்ந்தறியும் திறனும் நிச்சயமாக வாசகர்களை பற்றி இழுக்கும். எப்போதும் போல இந்த பகுதியும் அருமை அருமை.

    ReplyDelete
  3. மர்மம் நீடிக்கிறது.....

    ReplyDelete
  4. Excellent as usual. Waiting for next episode.

    ReplyDelete
  5. ஸ்பீடு இன்னும் குறையலை! waiting for next Thursday! :)

    ReplyDelete
  6. தொடருங்கள்

    ReplyDelete
  7. //ஒரு மரக்கட்டை எத்தனை காலமானாலும் மின்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மின்சாரம் எதிலெல்லாம் ஊடுருவ முடியுமோ அதனால் மட்டுமே அதன் சக்தியைப் புரிந்து கொள்ள முடியும்.... //

    பட்டினத்தார் படத்திலும் இது போல ஒரு வசனம் வரும். "கடலில் வீழ்ந்த கட்டை மிதக்கிறது. கல் கடலில் (இறையனுபவத்தில்) மூழ்கி விடுகிறது. கர்மவினை எப்படியோ அப்படித்தான் பலனும் கிடைக்கும்."

    கதையின் நாயகன் ஈஸ்வர் மூலம் (உளவியல் ரீதியான) பரமனின் இரகசியம் அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
  8. அருமை

    ஒவ்வொரு வாரமும் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  9. அருமையாக, சுவையாக போய்க்கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  10. உங்கள் எழுத்துக்கள் மிகவும் அருமை.புத்தகமாக வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  11. மேலும் சுவாரஸ்யமாக செல்கிறது... நன்றி...

    ReplyDelete
  12. //. ஒரு மரக்கட்டை எத்தனை காலமானாலும் மின்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மின்சாரம் எதிலெல்லாம் ஊடுருவ முடியுமோ அதனால் மட்டுமே அதன் சக்தியைப் புரிந்து கொள்ள முடியும்.... //

    அற்புதம்!!

    ReplyDelete
  13. Dear Mr.Ganesan,
    it is nice and interestingly started, now weaving esthern mytheology with western approach will bring or add more interesting.

    Ezhil from Toronto

    ReplyDelete
  14. " ஈஸ்வர் அவருக்கு விளக்கப் போகவில்லை. அவர் சொல்வதும் பொய்யில்லை. அவர் எந்த சக்தியையும் உணர்ந்ததில்லை தான். ஒரு மரக்கட்டை எத்தனை காலமானாலும் மின்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மின்சாரம் எதிலெல்லாம் ஊடுருவ முடியுமோ அதனால் மட்டுமே அதன் சக்தியைப் புரிந்து கொள்ள முடியும்...."

    இந்த இடத்தில்
    ""தன்னை ஒரு மரக்கட்டையாக நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அந்நினைப்பு மாறும் வரை மின்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது"
    இப்படி இருந்தால் சரியாக இருக்குமா அல்லது இதனால் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா ?
    ( or )
    மரக்கட்டை என்பது மின்சாரத்தை அறிந்துகொள்ளும் சாத்தியகூறு இல்லாமல் படைக்கப்பட்டதொ அதைபோல்தான் பரமேஸ்வரனும் என்று குறிப்பிடுகரீர்களா.

    இப்படிக்கு,
    உங்கள் விழிபுணர்வுள்ள எழுத்துக்களின் ரசிகன்,
    சரவணகுமார்.பா
    http://spiritualcbe.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. அதன் சக்தி மின்சாரம் என்றால் பரமேஸ்வரன் மரக்கட்டையாக இருந்திருக்கிறார். அவ்வளவு தான்.

      Delete
    2. thanks for your reply,
      i understood. After post my question i feel that " this question is unwanted when we see the aspect of story " and your example fully fitted with this story.

      Looking good in your new profile picture...


      Delete
  15. //ஒரு மரக்கட்டை எத்தனை காலமானாலும் மின்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மின்சாரம் எதிலெல்லாம் ஊடுருவ முடியுமோ அதனால் மட்டுமே அதன் சக்தியைப் புரிந்து கொள்ள முடியும்.... /

    மின்சாரமான வரிகள் !

    ReplyDelete
  16. என் எண்ண அலைகள் எல்லாம் பரமன் ரகசியம் சுற்றியே வளம் வரும் அளவுக்கு மனதை தொட்டு சென்று கொண்டிருகிறது.....பரம ரகசியம்.... ஜெய்மணி திருச்சி

    ReplyDelete
  17. மனித மனங்கள் தான் எத்தனை விசித்திரமானவை.. பெற்ற பிள்ளை மேல் பாசம் மறந்துவிடுகிறது மகன் வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால்.. வைராக்கியம் என்பது வேறு.. பாசத்தை மொத்தமாக அடிவேரோடு எரித்துக்கொள்வது வேறு. வைராக்கியம் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக தளரும்.. மகனின் இறந்த செய்தியை கேட்டதுமே இவர் மனம் வைராக்கியமாக இருந்திருந்தால் துடித்து இருந்திருக்கும். ஆனால் பாசத்தை விட இவருக்கு இவர் ஈகோ தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார். பேரனிடம் தான் தோற்றுப்போகவும் விரும்பவில்லை. அதே சமயம் அண்ணா மரணத்துக்கு முன் தன்னிடம் விட்டுச்சென்ற பொறுப்பையும் விட்டுவிட மனசில்லை.. ஆனால் ஒரு விஷயத்தை பரமேஸ்வரன் மறந்துவிட்டார். இவர் மகனை அடியோடு மறந்து போனாலும் வெறுத்தாலும் மகன் இவர் மேல் கொண்ட வாஞ்சை அலாதியாக இருக்கிறது. அது கனகதுர்கா தன் மகன் ஈஸ்வரிடம் சொல்லும் விதத்தில் அறியவும் முடிகிறது. இரண்டாம் முறை போன் செய்தப்ப கூட தான் உறவை புதுப்பித்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை அவர் வார்த்தைகளே உணர்த்திவிட்டது. ஈஸ்வரின் அபார சக்தி இனி இந்த கதையில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைப்பெற்று உணர்த்தும் என்று அறியமுடிகிறது... அதே சுவாரஸ்யத்துடன் அடுத்த பாகம் நோக்கி...

    ReplyDelete