சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 11, 2012

இன்றைய தேவை கருணைக் கோயில்கள்!



னித சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய் மகனே!என்று இறக்கும் வரை மகனிடம் அந்தத் தந்தை அடிக்கடி சொல்வார். அந்தத் தந்தை ஒரு சாதாரண லஸ்ஸிகடையை நடத்தி வந்தவர். ஆனால் மகன் தேர்ந்தெடுத்த தொழிலோ சூதாட்ட க்ளப். சூதாட்ட க்ளப்பில் ஏராளமான சொத்துக்கள் சேர்த்த மகனின் மனதில் தந்தை சொன்னது நீண்ட நாளுக்கு ஒரு உறுத்தலாக இருந்தது. மனித சமூகத்திற்கு நல்லது செய்வதற்குப் பதிலாக மனித சமூகத்தைப் படுகுழியில் தள்ளும் சூதாட்டம் மூலமாகப் பணம் சம்பாதிக்கிறோமே என்ற உறுத்தல் நாளாவட்டத்தில் அதிகமாகவே அந்தத் தொழிலிற்கு முழுக்குப் போட்ட மகன் சம்பாதித்த பணத்தை தந்தை சொன்னபடி மனித குலத்திற்கு நல்லது செய்யப் பயன்படுத்த தீர்மானித்தார். அவர் பெயர் பிக்காபாய் சாதியா. குஜராத்தில் பாவநகர் மாவட்டத்தில் உள்ள பாலிடானா நகரைச் சேர்ந்தவர்.

என்ன செய்வது என்று யோசித்த சாதியா ஒரு கோயில் கட்டத் தீர்மானித்து பாதி கட்டியும் முடித்து விட்டார். அந்த சமயத்தில், 2002ஆம் ஆண்டில், போலீசாரால் கற்பழிக்கப் பட்ட மனநிலை குன்றிய பெண் ஒருத்தியைப் பற்றி பத்திரிக்கைச் செய்தியில் படித்தார். வசிப்பிடம், ஆதரவு இல்லாமல் மனநிலையும் சரியில்லாமல் தெருக்களில் திரியும் மனிதர்களின் நிலைமை அவரை மனதைப் பெரிதும் பாதித்தது. கோயில் வேலையைப் பாதியில் நிறுத்திய சாதியா அதை இது போன்ற ஆதரவில்லாமல் மனநிலை குன்றியவர்களின் காப்பகமாகக் கட்டி முடித்தார். அதைத் தானே பராமரிக்கவும் முடிவு செய்தார்.

கைவிடப்பட்ட அத்தகைய மனநிலை குன்றிய நபர்களைக் காப்பகத்திற்கு அழைத்து வரும் ரிக்‌ஷாக்காரர்களுக்கு ஆரம்பத்தில் நூறு ரூபாய் ஊக்கப் பணமாகவும் கொடுத்தார். இன்று வரை அவரது காப்பகம் 180 நபர்களுக்கு அன்பும் ஆதரவும் கொடுத்திருக்கிறது.

மனநிலை குன்றியவர்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது மிக மிக கஷ்டமான காரியம். அதற்கு நிறைய பொறுமையும், அதீத அன்பும் தேவை. பிக்காபாய் சாதியாவிடம் பணத்தைப் போலவே அன்பும், பொறுமையும் கூட அதிகமாக இருந்தன.  அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் அவரது தினசரி வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. ஆனால் அனாதரவாக நின்ற மனநிலை குன்றிய மக்களைத் தன் பாதுகாப்பிற்குக் கொண்டு வந்து அவர்களில் பலரைக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குத் திரும்ப வைப்பதிலும், பலரை அவர்களது குடும்பத்தாருடன் சேர்த்து வைப்பதிலும் கிடைத்த நிறைவைப் பெரியதாக அவர் நினைத்தார். அவர் காப்பகத்திற்கு வந்த 180 பேரில் 60 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை அவர் பெருமையுடன் தெரிவிக்கிறார்.

பல வருடங்களுக்கு முன் சூரத்தில் நிர்க்கதியாகத் திரிந்த தாரா என்ற பெண்ணை அழைத்து வந்து அவருடைய காப்பகத்தில் சிகிச்சை செய்ததில் இரண்டு வருடம் கழித்து அந்தப் பெண் குணமானார். அவருக்கு மராத்தி மட்டுமே தெரியும். மராத்திய மொழி அறியாத சாதியா அம்மொழி அறிந்த வங்கி அதிகாரி ஒருவரை வரவழைத்து அந்தப் பெண்ணின் சொந்த கிராமம் பூனாவின் அருகில் இருந்த சதாரா என்ற கிராமம் என்பதை அறிந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணை அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்திருக்கிறார்.

அதே போல இரண்டு வருடங்களுக்கு முன் தலாஜா என்ற நகரத்தில் நிர்வாணமாக, இடது கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு மனநிலை குன்றிய பெண் விழுந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்து விரைந்து சென்று அவளை தன் காப்பகத்திற்கு அழைத்து வந்து, அதிர்ச்சி மனநிலையில் இருந்த அப்பெண்ணிற்கு சிகிச்சை தந்து சில வாரங்களில் அவளைக் குணப்படுத்தி இருக்கிறார். பின் அந்தப் பெண்ணிடம் விலாசம் பெற்று குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். கணவருடன் ஷப்னம் என்ற அந்தப் பெண் நல்ல முறையில் டில்லியில் வாழ்கிறார். ஷப்னம் இப்போதும் அவருடன் போனில் பேசுவதுடன் காப்பகத்திற்கு வந்தும் போகிறாராம்.

(கடந்த 31-05-2012 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் பிக்காபாய் சாதியா பற்றிய கட்டுரை வந்துள்ளது.)

சாதாரண கோயில் கட்ட நினைத்து கருணைக் கோயில் கட்டி முடித்த பிக்காபாய் சாதியாவின் தந்தை இப்போது இருந்திருந்தால் மகனின் சேவையில் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 180 பேருக்கு அபயம் கொடுத்து அதில் 60 பேருக்கு மறுவாழ்வும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த நல்ல மனிதர் இன்றும் மனிதம் இங்கு மரித்து விடவில்லை என்பதைக் காட்டி இருக்கிறார்.

கோயில்கள் அவசியம் தான். ஆனால் ஒரே பகுதியில் ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட கோயில்களைக் கட்டிக் கொண்டே போவதைக் காட்டிலும் பிக்காபாய் சாதியா கட்டியது போல காப்பகங்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் அன்பு இல்லங்கள், ஏழை எளிய மாணவர்களுக்குக் கூடுதலாகக் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடங்கள் போன்ற கருணைக் கோயில்களைக் கட்டினால் கண்டிப்பாக கடவுளும் அந்த உன்னத இடங்களில் மனமுவந்து வந்து நிரந்தரமாகக் குடியிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

-          என்.கணேசன்


12 comments:

  1. மனிதன் பணம் பண்ணும் இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் மனிதநேயத்தை உற்பத்தி செய்யும் கோவிலை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்.
    நன்றி கணேசன்.

    ReplyDelete
  2. முன் வாழ்க்கை கறை படிந்தது என்றாலும் இன்று செய்வது நற்செயலே!

    ReplyDelete
  3. நல்ல செயலை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி

    ReplyDelete
  4. We think the Good lord will come and save people. He comes, but in the form of our own people.
    People need to have merci in their hearts and kindness in their minds.

    What is the use of making temples and wearing gold and silks to prostrate before the deity?

    Uplift the fellow traveller and God smiles.

    A nice thought provoking post sir.

    ReplyDelete
  5. super super anbaraeeee.......

    ReplyDelete
  6. சார்.. நல்ல விசயங்களுக்கு கூடும் கூட்டத்தை விட இப்படி சூதாடவும் சோம்பேறியாய் திரியவும்தான் கூட்டம் அதிகம்.. எங்கே போய் அழுவதென்றே தெரியவில்லை. சிறப்புற செயல் படுவோரை அடையாளப்படுத்துவது மிக முக்கியம்.. நமது ஊடகங்கள் அதை செய்வதாக நம்புகிறேன்..

    ReplyDelete
  7. கருணைக் கோயில்களைக் கட்டின அருமையான மனிதரை அறிமுகப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. கோவில்களுக்குள் கோடிகளை கொட்டுவோர் மத்தியில் நல்ல ஒரு முன் உதாரணம் ....மிக நல்ல பதிவு ....

    ReplyDelete
  9. ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோருக்கும் அன்பு இல்லங்கள், ஏழை எளிய மாணவர்களுக்குக் கூடுதலாகக் கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடங்கள் போன்ற கருணைக் கோயில்களைக் கட்டினால் கண்டிப்பாக கடவுளும் அந்த உன்னத இடங்களில் மனமுவந்து வந்து நிரந்தரமாகக் குடியிருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.//

    ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

    புது கோயில்கள் கட்டுவதை தடை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். அவர்கள் காசு சம்பாதிக்கதான் கட்டுகிறார்கள்.
    சாதியா மாதிரி அன்பு கோயில் கட்டி ஆதரவற்ற எல்லோருக்கும் உதவலாம்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete